Wednesday, 6 December 2017

மரமேற இயலாதபோது....!”

அந்தப்பாதை அப்படியே தான் இருந்தது. நீண்டு கொஞ்சம் மேடேறி, கண் மறைக்கும் மேடு இல்லை, கொஞ்சமே உயர்ந்திருந்த மேடு அவ்வளவுதான், அப்புறம் வலது பக்கமாக திரும்புவது போன்ற சாகசத்துடன் சற்றே சற்று வளைவு, மறுபடி நேர்க்கோடாய்ச்சென்று இப்போது கொஞ்சம் கோபத்துடன் இடது பக்கம் திரும்பி மறைந்தே விட்டிருந்தது. அப்போதும் அப்படித்தான். அதில் எதிர்பாரத கணத்தில் மூச்சிரைக்க சைக்கிளில் வரும் ஜான்சன் வாத்தியார், சில இரவுகளில் மட்டுமே வரும் அந்த டப்பா வைத்த சைக்கிள் வண்டி, அதில் கண்ணைக்கூசும் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் ஒன்றிரண்டு ஈக்களும் மொய்க்கும் சோன்பப்படி ராம்லால், மத்தபடி எப்போதும் காலியாகவே இருக்கும் பாதை. ராத்திரியில் கூட வருமா என்று அப்போதெல்லாம் இவனுக்கு சந்தேகம். ஆனால் யாரிடமும் கேட்டதில்லை.

ஜான்சன் வாத்தியார் மட்டும் சிரிக்காத முகத்துடன்என்னடே! வீட்டுக்கணக்கை முடிச்சியாஎன்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மேலும் மூச்சிரைக்க பெடல் பண்ணிக்கொண்டே போய்விடுவார். ஒவ்வொரு முறையும் இவன் விளையாடிக்கொண்டிருக்கும் பம்பரத்தையோ கோலியையோ நிறுத்திவிட்டு பதில் சொல்ல யோசிப்பது போல முகத்தை வைத்துக்கொள்வான். அதற்குள் ஜான்சனின் சைக்கிள் நூறடிக்கு மேல் போய்விட்டிருக்கும். ராம்லால் இவன் வீட்டு வாசலில் மட்டும் அதிகம் நேரம் நின்று பெல் அடித்துவிட்டு போவான். அந்தத்தெருவிலேயெ தாத்தா மட்டும்தான் எப்பவாவது சோன்பப்டி வாங்கி இவனுக்குத்தருவார்.

எனக்கு வேணாம் சக்கரை இருக்கேஎன்று சொல்லிவிட்டு இவன் கிண்ணத்தில் கொட்டின பேப்பரை ஒரு வாகாய் உருட்டி மிச்சமீதமிருக்கும் சோன்பப்டி துண்டுகளை வாயில் கவிழ்த்துக்கொள்வார்.

வீடு மட்டும் அப்படியே தான் இருந்தது. வாசலில் அந்த போகைன்வில்லா இன்னும் பழுப்பேறி கொம்புகள் உருண்டு திரண்டு இலைகள் மேலேறி ஆனால் அடர்த்தி குறைந்து நோஞ்சானாய் போயிருந்தது. காம்பௌண்டு சுவற்றில் இன்னும் அந்த ஸ்டம்ப் கீறின செங்கல் கோடுகள். கொஞ்சம் மங்கிப்போய்விட்டிருக்க, அந்தப்பக்க ஓரத்தில் கல் பெயர்ந்து அப்படியே குறைப்பாட்டுடன் தங்கிவிட்டது. வாசல் கேட் அதே சிகப்பு. வீடு இன்னும் பழையதாகி இருந்தது. வலது பக்க தோட்டத்தில் அந்த மாமரம் இன்னும் பெரிதாகி இன்னும் ஸ்திரமாகி இருந்தது.

எங்க அப்பா நட்ட மரம் என்று தாத்தா சொல்லுவார். மாடிக்கு வெகு அருகில் செல்லும் அந்தக்கிளை அப்படியே, ஆனால் இன்னும் தடித்திருந்தது. கிளை மரத்தில் சேரும் இடத்தில் அந்த பொந்து…..

இவன் மெதுவாக வீட்டு வாசலில் போய் நின்றான். நடமாட்டம் தெரியவில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று தயங்கினான். இப்போது சட்டென்று ஜன்னலில் சலனம். கர்ட்டன் விலகி ஒரு அழகிய சின்னப்பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் முகத்தில் கெள்விக்குறி, பிறகு ஒரு ஆச்சர்யம். சில வினாடிகளில் வாசல் திறக்கப்பட்டு வெளியே வந்து கேட்டருகில் வந்தாள்.

என்ன வேணும்? யாரு?”

பன்னிரெண்டு வயதிருக்கலாம். தலை வாரப்படாமல் சற்றே அலட்சியமான ஸ்திதி. பொட்டில்லை. கழுத்தில் மெல்லிய செயின். எனக்கு மூளை இருக்கிறது. உங்களுக்கு…? என்று ஆங்கிலத்தில் கேட்ட டீ ஷர்ட். முழங்கால் வரை இருந்த டைட் லெக்கின். லட்சணமாக இருந்தாள்.

யாருன்னு கேட்டேனே? யார் வேணும்?”

இல்லை சும்மா…!”

என்னது?”

நான் இந்த வீட்டுல குடி இருந்தேன். இந்த ஊருக்கு வந்ததுனால பாத்துட்டு போலாம்னு வந்தேன்!”
இப்போது அவள் முகத்தில் தெளிவு. புன்னகை கூட.

இந்த வீட்டுலயா? எப்போ?”

அதாச்சு! நெறய வருஷத்துக்கு முன்ன?”

ஸ்கூலும்போதா?”

காலேஜ் வரைக்கும் இங்கதான் இருந்தேன்!”

நாங்க நாலு வருஷம் முன்னாலதான் வந்தோம்!”

தயங்கி நின்றான்.

வீட்டுல அப்பா அம்மா இல்லியா?”

இல்ல வெளில போயிருக்காங்க. ஒரு கல்யாணம்”.

அப்படியா? சரி நா கிளம்பறேன்

அவன் தயக்கத்தைப்பார்த்துவிட்டு அவள் கொஞ்சம் தைரியமாகப்பேசினாள்.

உள்ள வந்து பாக்கறீங்களா?”

இல்ல வாணாம். சும்மா தோட்டத்த மட்டும்….?”

வாங்க

சிகப்பு கேட்டைத்திறந்து விட்டாள்.மெதுவாக நடந்து மா மரத்தை அடைந்தான். அவளும் பின்னால் வந்தாள்.

இங்க தாத்தாவோட இருந்தேன். தாத்தா ரிடயர்ட் ஆர்மி!”

எங்க அப்பாகூட ஆர்மிதான். வெறும் கர்னல்தான்.”

அதென்ன வெறும் கர்னல்?”

இதுக்குள்ள ப்ரிகேடியர் ஆகியிருக்கணூம். ஆனால் ஆகலை.”

கர்னலும் பெரிய பதவிதானே!”

அவள் சுவாரஸயப்படவில்லை.

இங்கெல்லாம் விளையாடீருக்கீங்களா?”

நெறய! இந்த மாமரத்துக்கடியிலதான். சரி, சோன்பப்டி இப்பல்லாம் வருதோ?”

! ராம்லால்னு ஒரு தாத்தா வருவாரு!”

ராம்லால் தாத்தாவா?

இந்த மரத்து மேலதான் பாதி நேரம் இருப்பேன். மாடி வழியா அதோ அந்தக்கிளை மேல வந்து, அங்க பாரு, அந்த சீட்டு மாதிரி தண்டு, அங்கதான் உக்காந்துப்பேன்.

! என்னால மரத்துல ஏறமுடியாது. நா மரத்தடியிலதான் வெளையாடுவேன்!”

மரத்தடியில கோடு போட்டு கில்லி தாண்டு ஆடுவோம். அப்புறம் கோலி.”

நா பாண்டி கோகோதான்.”

அந்த பொந்து அப்படியே இருக்கு”.

எது அந்த மரத்து மேல ஓட்டையா இருக்கே அதுவா?”

ஆமாம். அதுல தான் என்னோட வெளையாட்டு சாமானெல்லாம் ரகசசியமாவெச்சுப்பேன்!”

வெளையாட்டு சாமானா?”

ஆமாம் கோலி, பம்பரம் அப்புறம் ஸ்கூல்ல திருடற பென்சில்..!”

அய்யயோ! பென்சில்லாம் திருடுவீங்களா?”

சிரித்தான்.

இன்னும் அதெல்லாம் அங்கயேதான் இருக்குமா?”

இருக்கணும்! உனக்கு முன்னால இந்த வீட்டுல இருந்த பசங்க யாரானும் எடுத்திருக்கலாமே!”

இப்ப ஏறிப்பாக்கப்போறீங்களா?”

இல்ல என்னால இப்ப ஏறவே முடியாது!”.

நா வேணா ஏறிப்பாக்கட்டுமா?”

உன்னால ஏற முடியாதுன்னியே!”

கொஞ்சம் டிரை பண்ணினா ஏறிடுவேன். இருங்க.”

படபடவென உள்ளே ஓடினாள். சில நிமிஷங்களில் மாடிக்கு வந்து மெதுவாகத்தவ்வி கிளையைப்பற்றிக்கொண்டு நகர்ந்து நகர்ந்து கிளை மேல் தவழ்ந்து பொந்துக்கு அருகில் வந்து விட்டாள்.

ஜாக்கிரதை! பூச்சி கீச்சி இருக்கப்போறது!”

கிறீச்சிட்டாள்.

இருக்கு இருக்கு!”

இப்போது அவள் கையில் குழப்பமாக சில பொருட்கள். இன்னும் துழாவினாள்.

இருங்க எடுத்துண்டு வரேன்.”

அவன் கழுத்து வலிக்க ஆவலோடு பார்த்தான். மெதுவாக மீண்டு தவழ்ந்து கிளை மேல் நகர்ந்து மாடிக்குள் குதித்து கீழே வந்து விட்டாள். கையில் இருந்த பொருட்களை அவன் கைகளில் போட்டாள்.

கறுப்படைந்திருந்த கோலி குண்டுகள், அந்த சிகப்பு டாணா கோலி, ஆணி உடைந்த தலையாறி அடி வாங்கியிருந்த பம்பரம், நைந்து போன கறுப்பு ஜாட்டி, அப்புறம் அந்தக்கவர். வெளியில் டிசைன் கோடுகள் ஜரிகையில் போட்டு ஒரு ஆணும் பெண்ணும் நிற்கும் கல்யாணகோலம் கார்ட்டூனில் போட்டிருந்த கவர்.

கவர் இங்கேயா இருக்கு?

சரி! நான் கிளம்பட்டுமா? நாழியாகிடுச்சே!”

இந்தாங்க உங்க பொருளெல்லாம் எடுத்துக்குங்க!”

வாண்டாம் எல்லாத்தையும் நீயே வெச்சுக்கொ. எனக்கு இந்தக்கவர் மட்டும் போறும்!”

அவள் தனக்குக்கிடைத்த திடீர் புதையலில் ஆழ்ந்திருக்க, இவன் நகர்ந்தான்.

ரொம்ப தாங்க்ஸ் உனக்குத்தான்!”

இவன் குரல் தழுதழுத்ததோ?

அவள் தலையாட்டிவிட்டு உள்ளே போனாள்.

இவன் அந்த வளைந்த பாதையில் நடந்து போய் ஜான்சன் சைக்கிள் வரும் மேட்டில் இறங்கினவுடன் சற்று நின்று கவரைப்பிரித்தான்.

இத்தனை வருஷ பொந்து வாசத்தில்கூட கவரில் மணப்பெண்ணின் பெயர் அழியாமல் இருந்தது.


இப்போது மெல்லியதாகத்தொடங்கிய தூறல் வலுப்பெற்று மழை பெய்ய ஆரம்பித்தது.

Tuesday, 28 November 2017

இன்னும் பெயர் வைக்காத கதை

அந்தப்பொம்மை ஒருக்களித்துப்படுத்துக்கிடந்தது. கைகளை என்னமோ ராயசமாக மடக்கி ஒரு சிறிய கூட்டத்தில் முக்கியப்பிரமுகர் போல தோள்களை உயர்த்தி கொஞ்சம்இங்கே நாந்தான் தலைவிஎன்கிற ஹோதா. கொட்டைக்கண்கள். அதில் தெரியும் லேசான குறும்பு. ரொம்ப முக்கியமானது அந்த ஓரவாய் சிரிப்பு. அது முழு சிரிப்பு இல்லை. புன்னகையும் இல்லை. ஆனால் சிரிப்பு. வாயின் கடைசி ஓரத்தில் ஒரு மைக்ரோ செண்டிமீட்டர் மட்டுமெ விரிந்த சிரிப்பு போல ஒன்று. அதில் எத்தனை அலக்ஷ்யம்

சோபாவில் சாய்ந்த நிலையில் அமர்த்தப்பட்டிருந்த அந்த பொம்மையை வீடு மற்றும் ஆஃபீசுக்கு சொந்தக்காரியான ஷோபா, தான் அங்கே வைக்கவில்லை என்கிறாள்

ஷோபாவின் உதவியாளி வினோஎப்படி இங்கே வந்துதுன்னு எனக்கும் தெரியவில்லைஎன்று சாதிக்கிறாள்

இருவருக்குமே அந்தபொம்மையை சுத்தமாகப்பிடிக்கவில்லை!

ஷோபா! உங்களுக்கே தெரியாதா இந்த பொம்மை எப்படி இங்க வந்துதுன்னு?”

யோசிச்சுப்பார்த்தால் நினைவே வரல வினோ”!

சரி, அத விடலாம். ஷோபா! இப்போ அனுசூயா வர்ரேன்னிருக்காங்க

என்னது அனுசூயாவா? நாளைக்குதான் ட்யூ டேட்

அதென்னமோ தெரியாது. கொஞ்சம் முன்னாடி போன் பண்ணி இன்னும்அரை மணில வருவேன். மாடல் எனக்கு பாக்கணும்னா!”

இன்னும் ரெடியாகவே இல்லையே வினோ. நாளைக்குதானெ அவ வரணும்?’

அனுசூயா பத்தி தெரியாதா உங்களுக்கு? புடிச்ச முயலுக்கு ஆறே கால்னா ஆறு கால்தான்! என்ன பண்ணறது, புருஷன்காரன் ஏடிவி க்ரூப்போட சேர்மனாச்சே! அவாளோட வசந்த மாளிகைக்குன்னா நாம இண்டீரியர் டெகோரேஷன் பண்ணப்போறோம். மாடிலேர்ந்து குதின்னாலும் குதிக்கணும்”!

சரி சரி, நீ போய் நம்ம கேர்ள்ஸ் கிட்ட அந்த வீட்டு மாடலை எதையாவது தேத்தி ரெடி பண்ணச்சொல்லு. நா ரூம சரி பண்ணறேன்”.

அடச்சே! இது வேற!”

ஷோபா அந்த பொம்மையை எடுத்து அலமாரிக்கு மேலே எறிய, அதுதொபக்கென்று போய் விழுந்த வாக்கில் அலமாரியின் கதவுக்கு மேல் வாகாக சாய்ந்து நின்றது.

அந்தப்புன்னகை அப்படியே நக்கல்!

ஷோபி டார்லிங்! என்கிற குரலோடு அரை கிலோ பர்ஃப்யூம் மணத்துடன் அனுசூயா உள்ளே வந்தாள்.

வாங்க மேடம்

அவள் கையில் அவளின் பாதி பர்ஃப்யூம் அணிந்த அவளின் பிகினீஸ் பூனை.

ரூபி! சமத்தா இருக்கணூம்.“ ஷோபி! என் வீட்டு மாடல் எந்த அளவுக்கு ரெடி?’

இதோ கொண்டு வரச்சொல்றேன். காஃபி சாப்பிடறீங்களா?”

வாட் காஃபியா? அலறினாள்.

யூ நோ சம்திங்? ப்ரேசிலேர்ந்து ரங்கு ஃப்ரெஷ்லி க்ரவுண்ட் காஃபி வாங்கிண்டு வந்திருக்கு. ஒரு த்ரிப்சம் தொடலை இதுவரைக்கும்

வேற கூல் ட்ரிங்க் ஏதானும்..?”

ஒண்ணும் வேண்டாம் ஷோபா டார்லிங்! சீக்கிரம் கொண்டு வா. கீழெ ரங்கு கார்ல வெய்ட் பண்ணிண்டு இருக்கார். பத்து நிமிஷத்துக்கு மேல பொறுமை கிடையாது”. எல்லாத்துலயும் அவசரம் ரங்குவுக்கு, ஒண்ணே ஒண்ணுத்தத்தவிரஎன்று ஆபாசமாக சிரித்தாள்.

ஷோபா பல்லைக்கடித்துக்கொண்டு, ”இதோ! வினோ! கொண்டு வரியா?”

இப்பொது அந்த ரூபி என்னும் பிகினீஸ் பூனை சோபாவில் ஏறி, ஜன்னல் கதவில் தொத்தி அலமாரியின் மேல் உள்ள அந்த பொம்மையை பார்த்துமியாவ்என்றது.

அடுத்த பத்து நிமிடத்தில் மாடலில் நூற்றிப்பதினாறு மாற்றங்கள் சொல்லிவிட்டுநாளன்னிக்கு வருவேன், ரெடியா இருக்கணும்என்று புரப்பட்டாள்.

ரூபிஎன்று ஒரு க்ரீச்.

ரூபி பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தது. பொம்மையின் பார்வை இப்பொது பூனையின் பக்கமாக இருப்பதுபோல தோன்றியது. இப்போது என்னமோ அந்தப்புன்னகயில் நக்கல் தனத்தைக்காணோம். ஒருவேளை ப்ரமையா? கொஞம் கருணையோடு ரூபியைப்பார்ப்பது போல தோற்றம். ரூபியும் வாத்சல்யத்தோடு பொம்மையை பார்த்துக்கொண்டிருந்தது. ரூபியின் மில்லிமீட்டர் மூச்சு கூட கேட்டது.

ரூபிக்குட்டிஎன்று மேலே பார்த்த அனுஸூயா மறுபடி ஒரு எட்டு டெசிபல் க்ரீச்!

வாட் ஹேவ் யூ காட் ஹியர்”?

அது ஏதோ பொம்மை மேடம்

சீ! நன்னாவே இல்ல. முகத்துல என்ன கேலி பாரு! என்னை பாத்து பண்ணறாமாதிரி இருக்கு. இது நெஜம்மா இல்ல பொம்மையா?”

ஐய்யோ! வெறும் பொம்மைதான் மேடம்

எனக்கு பிடிக்கவேயில்லை! தூக்கி எறி! திமிறப்பாரு

கீழே குதித்த ரூபியை எடுத்துக்கொண்டுஅடுத்த முறை நா வரும்போது அந்த பொம்மை இங்க இருக்கக்கூடாது

ரூபி திரும்பி திரும்பி பார்த்து மெல்லிய மியாவ்.

போய்ச்சேர்ந்தாள்.

ஷோபா! மாடலில போன தரம் சொன்னதை இந்த தரம் மாத்திடறாள். இந்த ரேஞ்சில் போனால் என்னிக்கு அவள திருப்திப்படுத்தறது?”

வினோ! இந்த பிஸாத்து வேலைக்கு மூணு லட்சம் தாளிக்கப்போறோம், கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்

வினோ! அப்பறம், என்ன பண்ணறது அந்த பொம்மையை?’

கெடக்கட்டும் ஷோபா. இப்போ டைம் ஆயிடுத்து, நாளைக்கு எடுத்து போட்டுடலாம்

நேற்றைய கவலைகள், ஆசாபாசங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லவற்றையும் அடித்துப்போட்டுவிட்ட அடுத்த நாள் காலை.

ஷோபா வரும்பொதே ரகளையாக இருந்தது. வினோவுக்கும் மற்ற பெண்டுகளுக்கும் ஒரே வார்த்தையாடல். கூடவே வேலைக்காரி அழுக்குத்தண்ணீர் சொட்டும் நீண்ட ப்ரஷ்ஷுடன்.

த பாரும்மா! நா இனிமே அந்த ரூம்புக்குள்ற போய் பெருக்கி துடைக்க மாட்டேன்

என்ன ரமேலா! இப்படி பிடிவாதம் பிடிக்கற? அந்த பொம்ம ஒன்னை என்ன பண்ணித்து?”

நீ போய் பாரு! அது சோபாவுல குந்திக்குனு இருக்கற ஜோரை?

ஷோபாவும் வினோவும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு, கோரஸ்ஸாகஎன்னது சோபாவுலயா இருக்கு அந்த பொம்மை?

இன்னா பார்வை பாக்குது! பொம்மைக்குக்கூட என்னப்பார்த்தா எளகாரமா?

சோபாவுலயா?

பின்னில்லாதிக்கி? நா என்ன பொய்யா சொல்றேன், நீயே போய்ப்பாரு. வினோம்மா! அன்னிக்கு நான் ஒன்னோட சண்ட பிடிச்சிச்சேன்னு நீதான் என்ன நக்கல் பண்றதுக்காக பாத்து பாத்து வாங்கியாந்தியா அந்த பொம்மையை?”

பட படவென மாடியேறி ரூமில் பார்த்தால் பொம்மை நேற்று போலவே சோபாவில் ராயசமாக சாய்ந்து கொண்டு நக்கலாக சிரித்துக்கொண்டு இருந்தது

வினோ! நேத்திக்கு அப்படியே சாத்திண்டு போய்ட்டொம் இல்ல? அப்போ அது அலமாரி மேலதானே இருந்தது. இப்ப சோபாவுல எப்படி.?”

நானும் உங்களோட வந்துட்டேனே! யேய்! பொண்ணூங்களா! நீங்க யாராவது அந்த பொம்மையை எடுத்து வெச்சீங்களா?”

மதுரா, ப்யூலா மற்றூம் ராஜி என்னும் இளம் தேவதைகளை மற்றொரு சந்தர்ப்பமாக இருந்தால் வர்ணிக்கலாம். ஆனால் இப்போது இந்தகதையில் வேண்டாம்.

நாங்கயாரும் மாடிக்கே வரலயே மேடம்

பூட்டியது பூட்டியபடி கிடந்த அறையில் அந்தப்பொம்மை மறுபடி சோபாவில் ராயசமாக அமர்ந்துகொண்டு அதே நக்கல் சிரிப்பை காட்டிக்கொண்டு இருந்தது

ஷோபாவுக்கும் வினோவுக்கும் லேசாக பய வேர்வை. அட்ரினாலினின் எக்ஸ்ட்ரா சுரப்பு. ஈஸிஜி எடுத்தால் ஆஞ்ஜியொக்ராம் பண்ணச்சொல்லும் பல்ஸ் எகிறல்.

வினோ! என்ன இது, ஒனக்கு புரியுதா?”

இல்ல ஷோபா. ஒரு வேளை காத்தடிச்சு இங்க வந்து விழுந்திட்ருக்குமோ?” 

க்ரெக்டா சோபாவுல முன்ன வெச்சிருந்தா மாதிரியே அப்படியேவா?”
.
இல்லை, ஷோபா…”

வினோ பயமா இருக்கு எனக்கு!”

ஷோபா ஆஃப்டர் ஆல் இது ஒரு பொம்மை

அதோட முகத்தைப்பாரேன்!”

இப்போது நக்கல் கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது.

என்னமோ கேட்கறாமாதிரி படரது எனக்கு ஷோபா!”

பொம்மை சலனமே இல்லாமல் அதே சாய்மானத்தில். புன்னகையில் ஒரு கெஞ்சல்.

வினோ! லெட் அஸ் நாட் பானிக். நீ நல்லா பாரு. நான் இந்த பொம்மையை எடுத்து மறுபடி ஜன்னலுக்கு மேலெ பாரப்பெட் சுவற்றில் வைக்கிறேன். வா, கதவைச்சாத்திண்டு நாம கீழ போய் வெலை செய்யலாம். இனி நாளைக்கு பாக்கலாம்

மறு நாள் காலை ஷோபா வந்த போது அமைதி. வினோ, மதுரா, ப்யூலா மற்றூம்.ராஜி பேயறைந்தார்போல் நின்று கொண்டிருக்க வேலைக்காரி ரமலா ஒரு அதிர்ச்சியில். மன்னிக்கவும், இப்பவும் சந்தர்ப்பம் சரியில்லை அவர்களை வர்ணிப்பதற்கு.

வினோ மாடியைக்காண்பித்தாள்.

ஷோபா கொஞ்சம் நடுக்கத்துடன் மேலே போய் கதவு திறந்து பார்த்தாள்.

சோபா காலியாக இருந்தது. “அப்பாடாஎன்று ஜன்னலைப்பார்த்தபோது, அங்கும் அந்த பொம்மை இல்லை. ஆனால் கீழே..

ஷோபா வழக்கமாக உட்காரும் மேஜைக்கு முன் நாற்காலியில் ஏதோ மும்முரமாக படிப்பது போன்ற பாவனையில் அந்த பொம்மை. அதன் முன் ஷோபா பேப்பரில் வரைந்த அனுசூயாவின் வீட்டு மாடலின் வரைபடம்.

படபடவென கீழெ இறங்கி வந்தாள்.

 ”பொண்ணுங்களா! இது விளையாடற விஷயம் இல்லை. நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, இந்த ப்ராக்டிகல் ஜோக்கெல்லாம் இப்போ வேண்டாம். ப்ளீஸ், யாரானு பண்ணியிருந்தா சொல்லிடுங்க. இதோட விட்டுட்டு வேலையைக்கவனிக்கலாம்

ஷோபா மேம்! ப்ளீஸ்! நாங்க யாரும் பண்ணல. எங்களுக்கெ பயமா இருக்கு. நாளைக்கு வேலைக்கு வரணுமான்னு யோசிக்கறோம்!”

அம்மா! சம்பள பாக்கிகூட வாணாம். நா இத்தோட நின்னுக்கறேன்

ஷோபா ஒரு கணம் மூச்சை இழுத்து விட்டாள்.

வினோ! நீ வா என்னோட

விறு விறுவென்று மாடியேறினாள். மேஜைக்கருகே போய் அந்தப்பொம்மையை கண்கொட்டாமல் பார்த்தாள்.

வினோ கதவருகே தயங்கி நிற்க, அடுத்த கணம் ஷோபா சட்டென்று அந்த பொம்மையை எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்து விட்டாள்.

ஷோபா!” வினோ வீறிட்டாள்.

ஏன் அதப்போட்டீங்க. ஏதானும் சங்கடம் வந்துட்டா!?”

ஷோபாவும் சற்றெ நடுங்கிய குரலில் ஒழிந்தது சனியன். விடு வினோ

ஷோபா எனக்கு பயமா இருக்கு!”

இருவரும் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ப்ளாட்ஃபாரத்தில் அந்த பொம்மை எசகேடான கோணத்தில் கிடந்தது. இவர்கள் வீட்டையே உற்றுப்பார்ப்பது போல ஒரு பார்வை.

ஷோபா! வா திருப்பி எடுத்துண்டு வந்துடலாம். ஏதாவது விபரீதம் வருமோன்னு எனக்கு பயமா இருக்கு.”

வேண்டாம் வினோ. ஒழியட்டும்

இல்லை ஷோபா எடுத்துண்டு வந்துட்டு யோசிக்கலாம். எதுக்கு நாம ரிஸ்க் எடுக்கணும். இத கொண்டு போய் எதானும் கோவில்ல குடுத்துடலாம்.

வினோ! நீ நம்பறியா இந்த விஷயதையெல்லாம்?’

ஷோபா! அதெல்லாம் தெரியல. ஆனா பயமா இருக்குநீ தூக்கிப்போட்டது தப்போன்னு

வினோ என்ன சொல்றே? எனக்கு ஏதானும் கெடுதல் வந்துடுமா?”

ஷோபா எதுக்கு வேண்டாத வேலை நமக்கு.”

என்ன பண்ணலாம்?”

இருவரும் மாடியிலிருந்து இறங்கி, கதவைத்திறந்து வாசலுக்குப்போய் அந்த பொம்மை கிடந்த ப்ளாட்ஃபாரத்தை அடையும்போது ஒரு சின்னப்பெண்அழுக்குப்பாவாடை, மேல் சட்டை, அறுந்த பித்தான், பரட்டைத்தலை -  அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு எதிர்ப்பக்கம் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

யேய் சின்னப்பொண்ணு! இங்க வா. அந்த பொம்மையைக்கொடு

அந்தப்பெண் திரும்பிப்பார்த்து விட்டு தயங்கி அங்கேயே நின்றது.

இந்தாம்மா! அது நல்ல பொம்மை இல்லை. குடுத்திடு. உனக்கு வேற வாங்கித்தரேன்

முடியாது, இந்த பொம்மைதான் வேணும்

சொன்னா கேளும்மா. அது நல்லது இல்ல. கொண்டா இந்தா காசு

உன் காசு எனக்கு வேணாம். இந்த பொம்மைதான் வேணும்

இதோட பெரிய பொம்மை நான் வாங்கித்தரேன். இதக்கொடுத்துடு!” – கிட்டத்தட்ட கத்தினாள் ஷோபா.

முடியாது முடியாது. வேணாம்னுதானே தூக்கிப்போட்டீங்க. இப்ப மட்டும் என்ன? அந்த பொம்மை என்ன கேட்டுது? கொஞ்ஜூண்டு அன்புதானே கேட்டுது. கொடுத்தீங்களா? பொம்மை எவ்வளவு அழுதிருக்கும்? எத்தனை மனஸு கஷ்டப்பட்டிருக்கும். தூக்கிப்போட்டுட்டு இப்போ ஓடி வந்து கேக்கறீங்களே? இனிமே இந்த பொம்மை என்னோடது. நா அதுக்கு என்னோட முழு அன்பையும் கொடுப்பேன். என்னொடவே வெச்சுப்பேன்.”

அந்தப்பெண் ட்ராஃபிக்கில் புகுந்து , எதிர் தெருவில் நுழைந்து கை பம்புக்குப்பின்னால் இருந்த பழக்கடையின் ஓரத்து சந்தில் திரும்பி மறைந்தே போனாள்.

அவ போய்ட்டா ஷோபா

என்ன சொன்னா கேட்டியா வினோ! பொம்மை அன்புதானே கேட்டுதுன்னா!

ஆமாம் அன்புதானே! அப்படித்தான் இருக்கும் இல்லியா ஷோபா!

ஆழ்வார்ப்பெட்டையின் ட்ராஃபிக் நிறைந்த தெருவில் அந்த இரண்டு ஆர்க்கிடெக்ட் பெண்களும் லேசான கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த கணத்தில் இந்தப்பெயரில்லாத கதை முடிகிறது.