Thursday, 31 May 2018

இன்றாஇய கதையரங்கத்தில் (1, ஜூன் 2018)...

CS 118

“ வாங்க! அப்பா எப்படி இருக்கார்?”

“ பரவால்ல டாக்டர்! இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது!”

“குட்! சீனியரும் அதான் சொன்னார்!”

“இப்ப இன்னொரு ப்ராப்ளம் டாக்டர்!”

”என்ன ப்ராப்ளம்?”

“போன மாசம் வளர் ஹாஸ்பிடல்ல அப்பா அட்மிட் பண்ணியிருந்தோமே, ஆமா அதுக்கு ஆன செலவு மூண்ரை லட்ச ரூபாய். அதுல ரெண்டரை லட்சம் இன்ஷுரன்ஸ் குடுத்தாங்க!”

“தெரியுமே! நா சொல்லித்தானே அட்மிட் ஆனாரு அப்பா! அவங்க மட்டும் ஒழுங்கா பார்த்திருந்தா இப்ப இந்தக்கஷ்டம் வந்திருக்காது. இத்தனை வலி இல்லாம சரி பண்ணியிருக்கலாம்!”

“உங்க சீனியர் பாத்தவுடனே சொல்லிட்டாரே!”

“அவர் லேசுப்பட்ட ஆளில்ல! ஆமா, ஏதோ இன்ஷுரன்ஸ் ப்ராப்ளம்னீங்களே?”

“ஆமாம் டாக்டர்! இப்ப ஜெனெரல் ஆஸ்பிடல் சார்ஜுக்கும் அப்ளை பண்ணினோம்.! ஏன்னா கவரேஜ் இதுக்கும் சேர்த்துத்தானே இத்தனை வருஷம் ப்ரீமியம் வாங்கினாங்க!”

”கரெக்ட்!”

“இப்ப என்னடான்னா, அந்த வளர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் தப்பு. இப்ப ஜெனெரல் ஆஸ்பத்ரில பண்றதுதான் சரி, அதனால அந்த க்ளெயிம ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம். குடுத்த ரெண்டரை லட்ச ரூபாய இண்டரஸ்டோட திருப்பித்தரச்சோல்றாங்க!”

“வாட் நான்சென்ஸ்!” என்ன பண்ணினீங்க?”

“அதான் உங்ககிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு…!”

“கொஞ்சம் இருங்க என் சீனியர்ட்ட பேசிட்டு சொல்றேன்!”

“சொல்லு நரசிம்மா! என்ன சொல்றார் உன் பேஷண்ட் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் ரிடயர்ட்!”

“ஹீ ஈஸ் இம்ப்ரூவிங் சார்!”

“ஹீ மஸ்ட் பி! இனிமே அந்த வளர் ஹாஸ்பிடலுக்கு யாரையும் அனுப்பதப்பா நரசிம்மா! தே ஆர் ஜஸ்ட் எக்ஸ்டார்ஷனிஸ்ட்ஸ்!”

“இப்ப இன்ஷூரன்ஸ் கம்பெனியும் சேர்ந்துட்டாங்க சார்!”

”என்ன ஆச்சு?”

…………………………

“அட்ராஷியஸ்! அந்தப்பையன எங்கிட்ட அனுப்பு! நானே அஃப்ஃபிடவிட் தரேன்! இன்ஷூரன்ஸ் கம்பெனிய கோர்ட்ல பாத்துக்கறேன்னு சொல்லிடச்சொல்லு!” ப்ளடி க்ரூக்ஸ்!”

“கேஸ் நம்பர் CS 118! ராஜகோபாலன் versus மினிமம் காஸ்ட் இன்ஷூரன்ஸ் கம்பெனி!”

“என்னப்பா என்ன கேஸ்?”

“வில்ஃபுல் நெக்லெக்ட்! அப்புறம் ராங் க்ளெயிம் மை லார்ட்!”

”சுருக்கமா சொல்லுங்க! எனக்கு மூணு மணிக்கெல்லாம் போகணும்! கம்ப ராமாயணம் சொற்பொழிவு இருக்கு!”

“எஸ் மைலார்ட்!”

”ஓகே! டிஃபெண்டண்ட் ப்ளீ என்ன?”

”நாங்க வில்ஃபுல்லா பண்ணலை மைலார்ட்! டாக்டர் அட்வைஸ் படிதான் செஞ்சோம்.!”

”இன்ஷூரன்ஸ் என்ன கேட்கறாங்க!”

”செட்டில் பண்ணின க்ளெயிமும் அதுக்கான வட்டியும் அபராதமும்!”

“டாக்டரோட அஃப்ஃபிடவிட் இருக்கா?”

”சப்மிட் பண்ணியிருக்கோம் டாக்டர்!”

“ப்ளெயிண்டிஃப் என்ன சொல்றாங்க?”

“மை லார்ட்! இன்ஷூரன்ஸ் க்ளயிம் பண்றதுக்காக டாக்டரும் இவங்களோட ஒத்துழைச்சு அஃப்ஃபிடவிட் குடுத்திருக்காரு! நீங்க அத அட்மிட் பண்ணக்கூடாது!”

” அந்த அஃப்ஃபிடவிட் குடுங்க!”

ஜட்ஜ் படித்தல்.

”நா ப்ளெயிண்டிஃப் இன்ஷுரன்ஸ் கம்பெனிகிட்ட ஒருதரம் நேரடியா கேட்க விரும்பறேன்! நீங்க நேர்மையாத்தான் இந்த கேஸ் ஃபைல் பண்ணியிருக்கீங்களா?”

”மை லார்ட்!”

“கேட்ட கேள்விக்கு பதில், எஸ் ஆர் நோ?”

“எஸ் மைலார்ட்! எங்க கிட்ட முழு விவரங்களும் இருக்கு.!

“உங்களுக்கு தெரியுமா இந்த பேஷண்ட், அதான் அந்த ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் இப்ப ஜெனெரல் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்டுல இருக்கார். இந்த அஃப்ஃபிடவிட் கையெழுத்து போட்ட டாக்டர்தானே அவரை கவனிக்கிறார்?”

”ஆமாம் மைலார்ட்! அவர்மேல்தான் எங்கள் கம்பெனிக்கு நம்பிக்கை இல்லை. அவர் ஒத்துழைப்போடுதான் பேஷண்ட் குடும்பம் தப்பான க்ளெயிம் போட்டு எங்ககிட்ட பணத்த வாங்கிட்டாங்க!”

“சரி உங்களுக்கு ஒரு முறை சரி செய்து கொள்ள வாய்ப்பு கொடுத்தும் நீங்க அதைப்பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதோ என் தீர்ப்பு.

“கேஸ் டிஸ்மிஸ்!”

கோர்ட்டில் அசௌகரிய அமைதி.

“இன்ஷுரன்ஸ் கம்பெனி பேஷண்டின் குடும்பத்துக்கு இந்த கேஸ் செலவு முழுதும் கொடுத்து அபராதமாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும். அடுத்த முறை இந்த கம்பெனி என் கவனத்துக்கு வருமானால் நான் ஒரு கோர்ட் இன்வெஸ்டிகேஷன் ஆர்டர் பண்ணிவிடுவேன்!”

“மைலார்ட்! இன்னும் கேசை ஆரம்பிக்க வேயில்லை.அதுக்குள்ள…!”

“ஆரம்பிக்க என்ன இருக்கு? இன்ஷுரன்ஸ் கம்பெனி வக்கீலுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்! ஒரு கேசை எடுத்துக்கறதுக்கு முன்ன பேசிக்கா நெஜம் இருக்கானு பாத்துட்டு எடுங்க! இல்லேனா உங்க எதிர்காலம் காலியாகிடும்! அஃபிடவிட்ல யார் டாக்டர் கையெழுத்துன்னு பார்த்தீங்களா? டாக்டர் வைகுண்டம் குடுத்த அஃபிடவிட்! aவர் மேல நம்பிக்கை இல்லேன்னா சொல்றீங்க! ஆகவே, கேஸ் டிஸ்மிஸ்! மிஸ்டர் க்ளார்க்! கோர்ட்டை க்ளியர் பண்ணுங்க! CS 124 நாளைக்கு பத்து மணிக்கு போடுங்க!

கோர்ட் கலைகிறது.

Thursday, 24 May 2018

இன்றைய கதையரங்கத்தில் (25 மே, 2018)....
கிளிப்பேச்சு!”
”ரமணா! வா வா! வத்ஸு! யாரு வந்திருக்கா பாரு!”
“ரமணனா வா வா! சௌக்கியமா இருக்கியா?”
”மன்னி! நீங்க சௌக்கியமா? சங்கரா! எப்படி இருக்கே?”
”என்ன கேள்விடா இது! 84 வயசுக்கு ஏதோ நாளை ஓட்டிண்டு இருக்கோம்! ஆமா, உனக்கே 81 ஆயிடுத்தே!”
”போன தை மாசந்தானே சதாபிஷேகம் பண்ணிண்டான் ரமணன்! சௌம்யா சௌக்கியமா இருக்காளா?”
இருக்கா மன்னி! இந்த முட்டி வலிதான் அப்பப்போ படுக்கையில போட்டுடறது!”
”ஆமா எப்படி இருக்கு நம்ம ராக்கியப்ப முதலி ஸ்ட்ரீட்?”
”அப்படியேதான் இருக்கு! அட சொல்ல மறந்துட்டேன், சங்கரா! அந்த பைத்தியம் போன வாரம் செத்துப்போய்ட்டாண்டா!”
”அடேடே! தெருவுலேயே சுத்திண்டு இருந்தானே அவனா? போய்ட்டானா? அவனுக்குமே 75 வயசு இருக்குண்டா!”
”ஆமா, ஆறேழு வயசு இருக்கும்போது நம்ம தெருவுக்கு வந்தான் அனாதையா!”
”இத்தனை வருஷம் தெருவுலேயேதான் இருந்தான் இல்ல?”
”ஆமா, அடிக்கொரு தரம் “எங்கப்பா அம்மா ஊருக்குப்போய்ட்டாங்க” ன்னு சொல்லிண்டே இருப்பான். அவன் ஒரு மாதிரி ராக்கியப்ப முதலி தெருவுக்கு செல்லமாயிட்டான்!”
”எனக்கு ஞாபகம் இருக்குடா ரமணா! நானும் இவளூம் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு முதமுதல்ல சாப்பிட வந்த போது, உங்கம்மா அவனுக்கும் கிணத்தடில உக்கார வெச்சு சாப்பாடு போட்டா!”
”எங்கம்மா மட்டும் இல்ல, தெருவுல எல்லார் வீட்டிலயும் அவனுக்கு ஒரு நா சாப்பாடு உண்டு. விசேஷத்துக்கு சம்மந்தி இல்லாட்டாலுங்கூட இவனுக்கு சாப்பாடு இல்லாம இருக்காது!”
”பாவம் நல்லவண்டா! அவம்பாட்டுக்கு போட்டதைச்சாப்பிட்டுண்டு தெருவுல நடமாடிண்டு, சாதுவா புழங்கிண்டு இருந்தான்!”
”சங்கரா! உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தீபாவளி சமயம், தொள்ளாயிரத்து நாப்பத்தி மூணோ நாலோ, நாம அந்த பிஎஸ் ஹை ஸ்கூல் க்ரௌண்டுல வாண வேடிக்கை பாக்கப்போனோமே, அன்னிக்குதான் இவன் ராக்கியப்ப முதலி தெருவுக்கு நம்ம பின்னாடியே வந்துட்டான்!”
”இருக்கு இருக்கு! பெரிய ராஜகோபாலந்தான் வாண வேடிக்கைன்னு நம்ம எல்லோரையும் கூப்டுண்டு போனான்!”
’மணி கூட நொண்டிண்டே வந்தான், கால்ல அடி பட்டுண்டு!”
”என்னா ஆச்சுடா அவனுக்கு? எப்படி செத்துப்போனான்?’
’ராத்திரி சௌம்யாதான் சாப்பாடு போட்ருக்கா. சாப்டுட்டு வழக்கம் போல தெருவுக்குப்போய் வாசத்திண்ணையில் படுத்துண்டுட்டான். கார்த்தால எழுந்திருக்கல. குமார்தான் போய் டாக்டர் நாராயணனைக்க்கூப்பிட்டு காமிச்சான். ராத்திரியே உசிர் போய்டுத்துன்னுட்டார். எல்லோருமா காசு போட்டு காரியத்தப்பண்ணிட்டோம்”.
’என்ன மாதிரி ஜென்மமாப்போயிட்டாண்டா!”
1943 அக்டோபர் மாதம்......
”என்ன துரை! கொஞ்ச நாளா ஆள கண்லயே காணுமே!”
”ரொம்ப வேல ஜாஸ்தியாய்டுச்சுங்க! இப்பா ஜப்பான்காரன் குண்டு போடபோறான்னு பீதி வேற. வர்ர கப்பல்ல சாமாங்களை எறக்கி கோடௌன்ல கொண்டு சேர்க்கறதுக்குள தாவு தீந்துடுதுங்க! ரெண்டு மடங்கு கூலி குட்த்தாலும் ஆளே இல்லை. ஜனமெல்லாம் தெற்க்குப்பக்கம் போய்ட்டாங்க!”
“ஹார்பர்ல என்ன பேசிக்கிறாங்க? ஜப்பான்காரன் வந்துடுவானா?”
”பயம் இருக்குதுங்க! ராணுவக்காரங்க நடமாட்டம் ஜாஸ்திதான். ஆனா ஒருத்தரும் வாயத்தொறக்க மாட்றாங்க!”
”உன் கம்பெனிக்கு யோகம்தாம்ப்பா! கொழிக்கறாரே செட்டியாரு!”
”இப்ப தானுங்களே யுத்த சமயம்! இப்ப பிஸினஸ் பண்ணினாத்தானே லாபம் பாக்கமுடியும்!”
”நீதான் ஹார்பர் பக்கம் சிப்பாயிங்களோட ஸ்னேஹமாயிருக்க! என்னதாம்ப்பா ஆச்சு விசாகபட்ணத்துல!”
”நிச்சயமா ஒண்ணூம் தெரியாதுங்க! ஆனா ஜப்பான் ப்ளேன் வந்து குண்டு போட்டதென்னவோ நெஜம்தான். ஏப்ரல்ல கார்த்தால ஏழு மணிக்கு காக்கிநாடா ஹார்பர்ல ஒத்தையா வந்து ஜப்பான்காரன் குண்டு போட்ருக்கான். ரெண்டு சரக்குக்கப்பல் சேதமாயிடுச்சி! ஒண்ணு ரெண்டு பேர் செத்துப்போய்ட்டானுங்கன்னு வேற பேச்சு. எதுவும் நிச்சயமா சொல்றதுக்கில்ல!”
”மறுபடி அஞ்சு மணிக்கு அன்னிக்கே குண்டு போட்டானாமே! எம்மாம்தைரியமப்பா அவனுக்கு! இதோ, இங்க மெட்ராஸ் வரதுக்கு எம்மாம் நேரம் ஆவபோவுது!”
”அதெல்லாம் கஷ்டம்! ஆனா கவர்மெண்ட் எல்லாத்தையும் ரகசியமா வெச்சிருக்காங்க! வெளியே இதப்பேசிடாதீங்க, சங்கடமாய்டும்! சரி, நா போறேன், புள்ளாண்டான் என்னைத்தேடிக்கினு இருப்பான்!”
“ வாங்க! ஏங்க இம்மாம் நேரம்?”
”வழில நம்ம ராமசாமி பேச்சுக்கொடுத்தாரு!”
”டேய்! முருகேசு! என்ன பண்றே?”
”அப்பா! இன்னிக்கு கோலில செல்வத்தோட டாணா கோலிய உடைச்சுட்டேம்ப்பா!”
”போடு சக்கைன்னானாம்! சரி வா சாப்டலாம்!”
”என்னங்க! எங்கனா வெளில கூப்டுப்போங்க ! பையன் ஏங்கிப்பொயிட்ருக்கான்!”
”இப்ப எங்கடி வெளில போறது? ஊரே பயந்துங்கிடக்கு!”
”நாலு நாள் செட்டியரண்ட சொல்லி லீவு எடுங்க! உத்திரமேரூர் போய் எங்கக்காவப்பாத்துட்டு வரலாம். ”
”லீவா? செட்டியார் அதோட போயிடு! வராத திரும்பின்னுடுவாரு! இன்னும் ரெண்டு சரக்குக்கப்பல் வரணும் அடுத்த பத்து நாளுல! நா வூட்டுக்கு வரதே சிரமம்! அத்தோட தீபாவளி வருது! புள்ளைக்கு உனக்கு புடவத்துணிமணி எடுக்கணும்னா துட்டு வாணாம்? இந்த ரெண்டு கப்பல் வேல முடிஞ்சா காசு புரளும். நல்லபடியா தீபாவளி கொண்டாடலாம்! மே மாசம் போலாம் உத்திரமேரூருக்கு!”
“ஏங்க அப்படியே நம்ம வூட்டுக்கும் ஓடைச்சரிபண்ணிடணும்! போனமாச மழைக்கு பிச்சிக்கிச்சு! என்னா மழ என்னா மழ!”
”செய்வோம்! செய்வோம்! பசிக்குதுடி! சோத்தைப்போடு! முருகேசு! வா சாப்பிட!”
”துரை! செட்டியார் கூப்பிடறாரு உன்னை”
”என்னங்க?”
”வா துரை! அடுத்த வாரம், அதான் பதினொண்னாம் தேதியன்னிக்கு சரக்கு கப்பல் டாக் ஆவுதாம். நம்ம சரக்கு பதினேழு லோடாம்! அத அன்னிக்கு ராவே எறக்கி, கோவிந்தப்பநாய்க்கன் கோடவுன்ல போட்டு வெச்சிரு. நீ ஹார்பர்ல பாத்துக்க! மேஸ்திரி நடேசன கோடவுன்ல இருக்கச்சொல்லி லோடெல்லாம் எண்ணி பாத்து எறக்க சொல்லிடு!”
”செஞ்சுடலாம் முதலாளி!”
”அடுத்த நாள் காலையில வீட்டுப்பக்கம் வா! போன கப்பலுக்கே குடுக்க வேண்டிய அம்பது ரூபாயும் சேத்து எண்பது ரூபாய் கொடுத்துடறேன். உனக்கும் தீபாவளிக்கு ஆச்சு! ஆமா பையன் எப்படி இருக்கான். நல்லா படிக்கிறானா?”
”ரொம்ப சந்தோஷங்க! நல்ல படிக்கிறான்!”
”நல்லது! பாத்து செய்யி! ஹார்பர்ல ஆர்மிக்காரங்க நடமாட்டம் இருக்கு. வம்பு பண்ணுவானுங்க!ஒதுங்கிப்போயிடு! நமக்கு காரியம் முக்கியம்!”
“செல்லி! இன்னிக்கி சாயங்காலம் சீக்கிரமா சாப்பாடு போட்டுடு! ஏழுமணிக்கெல்லாம் கிளம்பணும்! கப்பல் வருதுன்னு சொன்னேனே! ராத்திரி பன்னண்டாய்டும் வர்ரதுக்கு!”
”நாளைக்கி வூட்லதான இருப்பீங்க! சினிமா போலாமா? மங்கம்மா சபதம்னு ரொம்ப நல்லா இருக்குன்னு அந்த வூட்டம்மா சொன்னாங்க!”
”போலாமே!”
”யப்போவ்! இன்னாப்பா ராத்திரிக்கி ஆபீஸ் போற?”
”ஆமாண்டா இன்னிக்கி கப்பல் வருது! சரக்கெல்லாம் எறாக்குவானுங்க அதை பாத்துக்கணுமுல்ல?”
”என்னையும் அழச்சிட்டுபோயேம்ப்பா! நானும் கப்பல் பாக்கறேன்!”
”டேய்! இது வேல நேரண்டா! உன்ன எப்படி அழச்சிட்டுப்போறது?”
”என்னங்க! இதோ இருக்குது ஹார்பர்! நாங்களும் வரோமே! அப்படி ஓரமா உக்காந்து பாக்கறோம்! நீங்க பாட்டுக்கு உங்க வேலய முடிங்க! எல்லாமா திரும்பு வூட்டுக்கு வந்துடலாம்!”
”ஹார்பருக்குள்ள உன்னல்லாம் வுட மாட்டாங்க செல்லி!அதும் இப்ப பதட்ட காலமா இருக்கு!”
”அட என்னங்க நீங்க! அதான் ஹார்பர்ல எல்லா கேட் கீப்பருங்களையும் உங்களுக்கு நல்லாத்தெரியுமே! வேடிக்கை பாக்கறோம்ன வாணான்னா சொல்லுவாங்க! கூட்டுட்டு போங்க!”
”சரி வாங்க!”
”இனா தொர! குடும்பத்தோட வண்ட்ட? இன்னிக்கு கப்பல் வருதுன்னாங்க?”
”ஆமா சார்! கப்பல் பாக்கணும்னு ஒரே தொணதொணப்பு! அதான்....!”
“சரி அப்படி ஓரமா நடந்து போய் நம்ம காபின் கிட்ட இவங்கள உக்காரச்சொல்லிட்டு நீ வேலயக்கவனி! அங்க இங்க நடமாடக்கூடாது! மேலதிகாரி பாத்தா எனக்கு வேல போய்டும், என்னா?”
”அதெல்லாம் நா ஜாக்கிரதையாப்பாத்துக்கறனுங்க!” வா செல்லி! வாடா முருகேசு! சாருக்கு சல்யூட் வை!”
”கமான் க்விக்! அந்த ஃபையர் யூனிட்டா அனுப்பு! மூவ் மூவ்!”
”காப்டன்! இதெல்லாம் இன்ஃப்ளெம்மபிள்! உடனே நகர்த்தியாகணும்!”
”பாஸ்! அங்க ஆயில் லீக் ஆகுது! எனக்கு இன்னொரு ஃபையர் யூனிட் வேணூம்!”
”ரோட்ரிக்ஸ்! சிவிலியன் காஷுயாலிடி இருக்கா?”
சார்..!
”கம் ஔட் மேன்! ஜஸ்ட் ஸ்பில் இட்!”
”இருக்கு சார்!”
”யாரு லேபரா? ஐடிண்டிஃபய் பண்ணியாச்சா?”
”இல்ல சார்! ஒரு ஆளும் பெண்ணும்!”
”பெண்ணா? வாட் இஸ் ஹேப்பெனிங் சோல்ஜர்!”
”ஒண்ணுமே புரியலை சார்!”
”என்ன புரியல? கால் தட் கேட் கீப்பர் இடியட்!”
”என்ன மன்னிசிடுங்க சார்! செட்டியார் கம்பெனி சூப்பரைசர் துரையும் அவனோட சம்சாரம், புள்ளயும் வந்தாங்க! சும்மா கப்பல் பாக்கணும்னாங்கன்னு நாந்தான் .....”
”புல் ஷிட்! புள்ளயா? பாடி கெடுச்சுடுத்தா?”
”இல்ல சார்! தேடு தேடு க்விக்! என்ன ஒரு மெஸ்! மேஜர் என்னுடைய பின் பக்கத்தைக்காவு வாங்கப்போகிறார்!”
”சார்! புள்ள கெடுச்சுட்டான் சார்! ”
”தாங்க் காட்! என்ன பண்ணப்போறோம் மூணூ பாடியையும்!”
”மூணு இல்ல சார்! ரெண்டுதான்! பையன் உயிரோடதான் இருக்கான்!”
”வாட்! அடக்கடவுளே! இப்ப என்ன பண்றதுய்யா?””
”சார்! ஐ ஹேவ் அன் ஐடியா?””
”சொல்லித்தொலை!”
”ரெண்டு பாடியையும் இங்கேயே புதைச்சுடலாம் சார்! பையனை எங்கியாவது கொண்டு விட்டுடலாம்!”
”யோவ்! அவன் பேசிட்டான்னா நா, நீயெல்லாம் ராணுவ வேலயை விட்டு தோட்டம் கொத்தப்போக வேண்டியதுதான்!”
”அவன் பேசாம நா பாத்துக்கறேன் சார்!”
”என்ன பண்ணப்போற?”
”டெர்ர்ரைஸ் தான் சார்! அஸால்ட் ஆன் ஐடெண்டிடி!”
”பாத்துப்பண்ணூய்யா! I don’t want any comebacks!”
“தம்பி! உம்பேரென்ன?”
”முருகேசு! எங்கப்பா அம்மா வேணூம்!’
’த பாரு! உங்கப்பாம்மா ஊருக்குப்போய்ட்டாங்க! சொல்லு?”
இல்ல அங்க இருந்தாங்க நேத்து ராத்திரி! வெடி வெடிச்சது!
’பளார்! சொல்லுடா! எங்கப்பாம்மா ஊருக்குப்போய்ட்டாங்க!”
’இல்ல,,அங்க...........”
”பளார்! சொல்லுடான்னா.....”
”எங்கப்பாம்மாஊருக்குப்போய்ட்டாங்க”
”எங்கப்பாம்மா ஊருக்க்குப்போய்ட்டாங்க”
”உம்பேரு என்ன?”
”எங்கப்பாம்மா ஊருக்க்குப்போய்ட்டாங்க”
”உங்க வீடு எங்க?”
”எங்கப்பாம்மா ஊருக்க்குப்போய்ட்டாங்க”
”நீ இங்க என்ன பாத்த?”
”எங்கப்பாம்மா ஊருக்க்குப்போய்ட்டாங்க”
”சார்லஸ்! சாயங்கால ஆறு மண்ணிக்கு, கொஞ்ச இருட்டினப்றம் ஜீப்புல இவன அழச்சிட்டுபோய் நல்ல நடமாட்டம் இருக்கற எடமா........தப்பாரு, ஹார்பர்லேர்ந்து தள்ளி..மைலாப்பூர் பக்கம் போ! அங்க கமுக்கமா கூட்டத்துல எறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு திரும்பிப்பாக்காம் வந்துடணும்!”
”எங்க இறக்கி விட்டெ?”
”பிஎஸ் ஹைஸ்கூல்ல வாண வேடிக்கை காட்டிட்டு இருந்தாங்க. ஒரு ஏழெட்டு சின்னப்பசங்க பின்னாடி வுட்டுட்டு நழுவி வந்துட்டேனுங்க!”
”என்ன ரோட்ரிக்ஸ்? பையன்..?”
”மிஷன் கம்ப்ளீடெட் சார்!”
ரமணா! அந்தப்பைத்தியத்தை தேடிண்டு யாருமே வரலியா இத்தனை வருஷமா?
“எங்கேடா! அவன் வாயிலேர்ந்து இத்தனை வருஷத்துல “எங்கப்பாம்மா ஊருக்குப்போய்ட்டாங்கறதத்தவிர வேற வார்த்தை வந்தே யாரும் கேட்டது இல்லியே!
“பாவம் என்ன படைப்போ! கடவுளோட டிசைனே புரியமாட்டேங்கறதே ரமணா!”
ரோட்ரிக்ஸின் பெண் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து அடிபட்டுச்செத்துப்போனதும் சார்ல்ஸின் மனைவி சுபேதார் ஒருவனுடன் ஓடிப்போனதும்............
அது வேறு கதை!

Thursday, 10 May 2018

இன்றைய கதையரங்கத்தில் (மே 11, 2018)
நாமவிவர்ஜிதா
-------------------------
வைகாசிப்பதினேழு, பரிதாபி வருஷம் – 13, மே, 1371:
” நாமகரணம் ஆய்டுத்தாம் ஓய்!”
”ஓ! ஷேமம் ஷேமம்!”
”ஆச்சாரியாரே அனுக்ரஹம் பண்ணியிருக்காராம் சுவாமி! இன்னிக்கு அழகிய மணவாளர் ஸ்தாபிதம் வேற!”
ஆனாலும் கோவிந்தன் க்ருஹத்துக்கு வந்து “குழந்தைய” ஆசிர்வதிச்சுட்டுத்தானே கோவிலுக்குப் போனார் தேசிகர் சுவாமிகள், தெரியுமோ!”
”இந்த நூறு பிராயத்துக்கப்புறமும் அவாளுக்கு கோவிந்தன் மேல வாத்சல்யம் போகலைன்னா!”
”எப்பிடிப்போகுங்காணும்! அவராண்ட வந்து சேர்ரச்செ அவனுக்கு ஏழொ எட்டோ தான் பிராயம்!”
”கோவிலுக்குப்போனேளா?”
இன்னிக்குப்போகாம எப்பிடிங்காணும்! நாப்பத்திசொச்சம் வருஷத்துக்கு அப்புறம் அழகிய மணவாளர் திரும்ப வந்துட்டாரே! ஸ்தாபிதம் தரிசனம்பண்ணினீரா?”
ஆஹா! நம்ம வேதாந்த தேசிகரே மறு ஸ்தாபிதம் பண்ணற திருக்கோலத்தப்பாக்காமயா?
அழகிய மணவாளரோட போன அம்பது பேருல ரெண்டே பேருதாம் உசுரோட வந்தா! பிள்ளை லோகாச்சாரும் சுதர்சன பட்டரும் வைகுண்ட பதவி அடஞ்சுட்டாரே!
“இந்த ஸ்தாபிதத்தப்பாக்கறதுக்கு ஏதோ ஜென்மாந்தரப்புண்ணியம் பண்ணிருக்கோம் நாம!”
”ஆனாலும் கோவிந்தனுக்கு என்ன நெஞ்சுரம் பாத்தேளா! சாதிச்சுட்டாம்யா!”
”அதனாலதான் தேசிகர் கோவிந்தனாத்து நாமகரணத்துக்குப்பறம்தான் ஸ்வாமிக்கே மறு ஸ்தாபிதம்னுட்டாரே!!”
சரி !வாரும் போஜனம் ஆயிண்டு இருக்கு! நாமும் நாலு வா அள்ளிப்போட்டுண்டு வந்துடலாம்!
நாலு வாயா! கோவிந்தனையும் நப்பின்னையும் உம்ம விட மாட்டா ஓய்! இன்னிக்கு இந்த ஒரு போதே மூணு நாளைக்குத்தாங்கறாப்பில உபசரிப்பான் கோவிந்தன்!
”குழந்தைக்கு” என்ன பேரு வெச்சிருக்கான் கோவிந்தன்?
48 வருஷத்துக்கு முந்தின 1323 இல் அந்தச்சிவப்பு தினம்:
அக்கா அம்மங்கை கோவிந்தனின் எட்டு வயதுக்கைகளில் உயிரைவிட்ட ஒரு சிவப்பு தினம்.
சிவப்பென்றால் அதிகாலை சூரியன் எழும்போது தோன்றும் சிவப்பு இல்லை. கணவன் முதன் முதலில் காதலுடன் தொடும்போது இளம் பெண்ணின் கன்னங்களில் தோன்றுமே அந்தச்சிவப்பும் இல்லை. மர உருளையில் விளையாடும் உடையணியாக்குழந்தை தவறிக்கீழே விழுந்து பிருஷ்டத்தில் உண்டாகுமே அந்த கன்னிச்சிவப்பும் இல்லை. இது கறுஞ்சிவப்பு. முதலில் தோன்றும் பொட்டுச்சிவப்பு. பிறகு பீறிடும் வெள்ளச்சிவப்பு. தரையில் வழியும் திரவத்தில் ஏற்படும் குமிழிகளின் இடையில் தெறிக்கும் துளிகளின் சிவப்பு. எழுந்த சில நொடிகளிலேயெ கறுப்பாக மற்றும் ரசயானக்குருதிச்சிவப்பு.
பிற்காலத்தில் பயந்தும் கேலியுமாகப்பேசப்பட்ட சுல்தான் முஹம்மது பின் துக்ளக் என்னும் உலுக் கானின் அரக்க விளையாட்டில் ஸ்ரீரங்கம் பலியான தினத்தின் சிவப்பு.
அங்கும் இங்கும் பாய்ந்த குதிரைகள், தழும்பும் தாடியுமாய் மேலிருந்த மனித அசுரர்களின் பாஷை புரியாத கூச்சல். காற்றையே வெட்டிச்சாய்க்கும் வாட்களின் வீச்சு, ஆரோஹணித்திருந்த ஆசாமிகளின் உதைக்குப்பயந்து அரபுக்குதிரைகள் காலைத்தூக்கி உதறின வேகத்தில் அடிபட்ட பூஞ்சை வைஷ்ணவர்களின் தலைகள், கச்சம் அவிழ ஓடிய மத்யமர்களின் பயம், சிதறின குழந்தைகளின் ஓலம், அலறின பெண்களின் கண்ணீர்…….
திருவரங்கத்தின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கர தினம். மாலிக் காஃபூர் காலத்தில் இதை அனுபவித்த பெரியவர்கள் கண்ணீரால் கழுவின திருவரங்கம்.
“ரங்கா! இன்னும் எத்தனை முறை!”
வைரமும் வைடூரியமும் தங்கமும் மாலைகளும் நகைகளும் அள்ளிகொண்டு ஒடப்பட்ட தினங்களில் இழந்த உயிர்கள் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேலே!
அக்காவின் தலையை மடியில் வைத்துக்கொண்டான் கோவிந்தன். வாயிலிருந்து ரத்த நூல் ஒழுக, கழுத்து ஒரு பக்கம் சிதைக்கப்பட்டு, குதிரையின் குளம்படிகளால் மிதித்து சகதியான துடைகளோடு கத்தக்கூட திராணியில்லாது சத்தமின்றி ஒரு கையால் கோவிந்தனின் முகத்தைத்தடவியவாறே சாய்ந்த உயிர். பத்தடி தள்ளி மார்பெலும்பு சதையை மீறி வெளி வந்து உடைந்து இதயக்குழாய்கள் சின்னாபின்னமாக அறுபட்டு அத்திம்பேர் வேஷ்டி அவிழ்ந்து, பூணுல் அறுந்து வாய் பிளந்து, வானம் பார்த்த அகோர மரணம்.
“ நப்பின்னை! நப்பின்னை!”
”கோவிந்தா ! ஓடு ஒடு! அவா மறுபடி வரா! செத்துடுவே! ஓடு!”
அக்கா அத்திம்பேர் உடல்கள்! நப்பின்னை எங்கே!
கோவிந்தனின் உயிர் தானாகவே எழுந்து ஓடி கோவிலின் மூன்றாவது பிராகாரத்தின் தூணுக்கு இடையில் அந்தக்கல் பெயர்ந்த இடத்தின் அரையிருளின் பாதுகாப்பில், உடலெல்லாம் நடுங்க, மனம் நிரப்பிய சூனியத்துடன், விவரம் புரியாமல் ஒடுங்கியது!
“போய்ட்டாளா! நெஜம்மாவே போய்ட்டாளா?”
” எல்லாத்தையும்பிடுங்கி வாரிண்டு போய்ட்டா! ஆச்சாரியாரே! இனிமே நமக்கு என்ன கதி!”
“ எல்லா ரங்கனோட ஆக்ஞைப்படி! நாம என்ன செய்யமுடியும்! அனுபவிப்போம்!
எல்லாம் போச்சு! ஆம்டயா புள்ள எல்லாம் செத்துப்போய்ட்டா! நா மட்டும் இருந்து என்ன நானும் சாகரேன்!
”கூடாது பட்டரே! தினமும் ரங்கனைத்தொட்டு பூஜை பண்ற நீரே இப்படி மனம் உடஞ்சு போலாமா?”
”தேசிகர்வாள்! சொல்லுங்கோ நமக்கு ஏன் இந்த விதி விதிச்சிருக்கு?”
பதிலே இல்லாத கேள்வி !
”சரி! சட்டுன்னு போய் தாய் தோப்பனார இழந்த கொழந்தைகளைத்தேடுங்கோ! அவாள முதல்ல கூட்டணும்! ரட்சிக்கணும்! பயந்து போயிருக்குங்கள்!! போங்கோ போங்கோ!”
”மாமா! மாமா! அக்கா அத்திம்பேர் ரத்த ரத்தமா செத்துபோய்ட்டா! நப்பின்னயக்காணும்! எனக்கு பயமா இருக்கு!”
”ரங்கா! என்ன சோதனை!”
தேசிகர் கோவிந்தனைக்கூப்பிட்டு அணைத்துக்கொண்டார்.
”நா இருக்கேன் கொழந்த ஒனக்கு!”
எல்லாம் துறந்த தேசிகர் கண்ணில் நீர். ஏன் இந்த கோரம்!
அழைத்து வரப்பட்ட அனாதைக்குழந்தைகளின் நடுவில் விரல் சூப்பிக்கொண்டு நப்பின்னை!
அம்மங்கை பூ சாத்தாம ஒரு நாள்கூட அழகிய மணவாளர் பூஜைக்கு தயாரானதில்லை.
“கோவிந்தா! நா சொன்னா கேப்பியா?”
”சொல்லுங்கோ மாமா!”
”இனிமே நீதான் தினோம் இந்த இடத்துல பூ கொண்டு வெக்கணும்”
”மாமா !இங்க சாமியக்காணுமே! பெருமாள் இருப்பரே நா பாத்திருக்கேனே அக்காவோட பூ வெக்க வரும்போது?”
கூட்டத்தில் விசும்பலும் அழுகையுமடக்க முடியவில்லை.
”என்ன ஆச்சோ? பிள்ளை லோகாச்சார்யர் கிளம்பிப்போய்ட்டார்! வழில இந்த மிலேச்சன்கள் அவாள ஒண்ணும் பண்ணாம இருக்கணும்!”
”ஒண்ணும் ஆகாது! ராமனைப்போல அழகிய மணவாளருக்கும் இது வன வாசம்! எத்தனை நாளோ! ஆனா சுந்தரராஜப்பெருமாள் வருவார்! மறுபடியும் வருவார்! நானே மறுஸ்தாபிதம் பண்ணுவேன்!”
“நா சொல்றத நீங்கள்லாம் கேப்பேள்னு நம்பறேன். கிட்டத்தட்ட நூறுக்கு மேல குழந்தைகள் தாய்தோப்பனாரை இழந்துட்டு நிக்கறதுகள். அவாளுக்கு அந்தக்குறையே தெரியப்படாது. எல்லாரும் நம்ம குழந்தைகள்தான். முடிஞ்சவரை அவா ஒண்ணு ரெண்டு குழந்தைகளை தத்து எடுத்துக்கறாப்பல ஆத்துக்கு கூட்டிண்டு போய் சம்ரக்ஷியுங்கோ! எல்லாம் ரங்கனோட பிறப்புக்கள்தாம்!”
”மாமா! நானும் நப்பின்னையும் யாராத்துக்கு மாமா போணும்?”
”நீங்க ரெண்டு பேரும் என்னோடவே இருங்கோ, என்ன?”
”ஆஹா! தேசிகர் வாக்கு!”
கூட்டம் மிச்சமீதியிருந்த வீடுகளுக்குத்திரும்பியது. திரும்பினது மூட்டை முடிச்சுடன் புறப்பட்டது. ஸ்ரீரங்கம் காலியானது. மூலவர் அரங்கன் எழுப்பட்ட சுவற்றின் பின்னால் எப்போதும் போல அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க அவரின் புன்னகை மாறாமல் இருந்தது.
அடிபட்ட ஸ்ரீரங்கத்தில் ஞாயிறு எழுவதும் சாய்வதும் ஒன்றுமே நிகழாதது போல நடக்க வாழ்க்கையின் போக்கே மாறியது. தேசிகர் கோவிலோடு ஒடுங்கினார். மூட்டைமுடிச்சுக்கள் சொந்தக்காரர்களோடு சுற்றிலும் நகர்ந்தன.
”இந்தப்பூமியிலதான் என் உசிர விடுவேன்”
அரங்கனின் அதீத பக்தர் கூட்டம் மட்டும் சன்னக்குரலில், இல்லாத சுவாமிக்கு பூஜை புனஸ்காரங்களை நடத்தின.
”அவன விட்டுட்டுப்போயிருக்கானே! அவனும் நம்மை மறுபடி தாக்குவானோ?”
”இல்ல இல்ல! இவன் நம்மள கண்காணிக்கத்தான். சண்டையெல்லாம் இழுக்க மாட்டான்.”
”ஏன் கோவில்லேர்ந்து வெளில போய்ட்டான்?”
பயம்!
யாருக்கு அவனுக்கா? என்ன உளர்ரீர் ஸ்வாமின்! அவன் உலுக் கானோட ரெண்டாம் தளபதி!”
”உளரல! பேசினதக்கேட்டேன்! நாமள்ளாம் மந்திரதந்திரம் தெரிஞ்சவான்னு அவனுக்கு யூகம். அதனால ஏதானும் பண்ணிப்பிடுவோம்னு பயப்படறான்!”
”கத்தி ஈட்டின்னா எதித்து சண்டை போட்டுடலாம். சூனியத்துக்கெல்லாம் என்ன பண்றதுன்னு பேசிண்டா!”
”அதான் வெளில போய்ட்டானா?”
”ஆமா ஆனா அங்கேர்ந்து பார்வய இங்கயே வெச்சுண்டிருப்பன்! ஏதானும்னா உடனே சுல்தானுக்கு சேதி போய்டும்!”
”தேசிகர் ஸ்வாமி இன்னிக்கு எல்லாரையும் கூட்டுருக்கார்”
”என்னவாம்! அழகிய மணவாளர் பத்தி ஏதானும் சேதியா?”
”சும்மாருங்காணூம்! உற்சவரப்பத்தி வாயே திறக்க வாண்டாம்னு சொல்லியிருக்கோல்லியோ?”
கோவிந்தனுயும் நப்பின்னையும் கோவிலில் தேசிகரின் கண்காணிப்பில் வளர்ந்தார்கள்.
வருடம் தைப்பன்னிரெண்டு1333:
வரதா! கோவிந்தனுக்கு பிராயம் பதினாறாய்டுத்தே! நப்பின்னைக்கும் அவனுக்கும் பாணிக்ரஹணம் பண்ணிடலாமா?
ஆஹா பேஷான்னா! அவனும்தான் அக்கா குழந்தய இப்பவே என்னமாப்பாத்துக்கறான்!
கோவிந்தா! நப்பின்னை! தீர்க்காயுஷ்மான் பவ! நன்னாருங்கோ! வம்சம் நன்னா வளரணும்!
கோவிந்தன் பூஜைக்குப்பூ கொடுத்து வர, நப்பின்னை அவனை கோவிந்தா வாடா போடாவென்றே அழைத்து வீட்டைக்கவனித்தாள்.
வருடம் கார்த்திகை இருபது,1336:
ஆச்சார்யாளுக்கு ஒரு நல்ல விக்ஞாபனம்!
என்ன?
கோவிந்தனுக்கும் நப்பின்னைக்கும் பெண் குழந்தை!
ஆஹா! ரங்கா! ஆயுசோட நன்னா இருக்கட்டும்!
கோவிந்தா! என்ன பேரு வெக்கப்போற?
கோவிந்தன் சோன்ன பதிலைக்கேட்ட வேதந்த தேசிகர் “ உன் விருப்பம் கோவிந்தா!” என்று புன்னகை புரிந்தார்.
மறுபடி வைகாசிப்பதினேழு, பரிதாபி வருஷம் – 13, மே, 1371:
கோவிலின் வாத்தியக்காரர்கள் இசையை ரசித்து அனுபவித்து வாசிக்க, வேத மந்திரங்கள் முழங்க அழகிய மணவாளர் கோவிலுக்கு வந்துவிட்டார். நூத்தியோரு பிராயம் கடந்த வேதந்த தேசிகர் மறுஸ்தாபிதத்துக்கு வேண்டிய எல்லா ஆகம விதிகளையும் பின்பற்றி சடங்குகள் செய்யச்சொல்லிவிட்டு கிளம்பினார்.
” விஜயநகர மன்னர் புக்க ராயருக்கு ஸ்ரீரங்கம் ஏழேழு ஜென்மத்துக்கும் நன்றி சொல்லணும் ஸ்வாமின்!”
“இல்லியா பின்னே! அவா தலையிட்டதாலத்தானெ இந்த மிலேச்சன்களை விரட்டி அடிக்க முடிஞ்சது!”
”சரி, எங்க தேசிகாச்சாரியார் கிளம்பிட்டார்?
கோவிந்தன் க்ருஹத்துக்கு!
அங்க என்னவாம்?
”என்னவா? ஓய்! இன்னிக்கு “குழந்தைக்கு” நாம கரணம் ஸ்வாமின்!”
”என்னது “குழந்தைக்கு” நாம கரணமா?”
”சிரிக்காதீயும் ஓய்! என்ன ஒரு வைராக்கியம் இருந்தா கோவிந்தன் இப்படிப்பண்ணியிருப்பான்! அதான் தேசிகரே போய் நடத்திக்கொடுத்துட்டு அப்புறமாத்தான் சுந்தர்ராஜப்பெருமாள் ஸ்தாபிதம்!”
இங்கே கோவிந்தனின் க்ருஹத்தில் நப்பின்னையோடு மணையில் அக்னி முன் அமர்ந்திருக்க “குழந்தையும்” அருகில் இருந்தாள். வைதீகர்கள் எல்லா சம்ஸ்காரங்களையும் செய்வித்து முடித்தனர். தேசிகர் உள்ளே வந்ததும் பரபரப்பு.
”கோவிந்தா! ம் சொல்லு!”
” த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. ………இப்போ சௌபாக்யன்னு பேரச்சொல்லு….”
கோவிந்தனினுக்கு வாயில் ரத்த நூலுடன் தன் கைகளில் மரித்த அக்கா அம்மங்கையின் சின்ன முகம் தெரிய, கண்ணில் நீர் வழிய வாய் குழற மந்திரம் சொன்னான்
த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. சொல்லி நெய் கலந்த தேனை ”குழந்தை”யின் நாக்கில் தடவினான்.
ஹரிஹி ஓம்! ஹரிஹி ஓம்! – வேதவிற்பன்னர்கள் ஏதோ தங்களின் குழந்தைக்கே நாமகரணம் செய்விப்பது போல குதூகலத்துடன் வாழ்த்தினர்.
வேதாந்த தேசிகர் கைகளில் பூவை எடுத்து “குழந்தையின்” பேரில் சொரிய, சற்றே தூரத்தில் ”குழந்தையின்” கணவனும் கோவிந்தனின் மாப்பிள்ளையுமான ரங்கனும், அவளின் பெண் கோமளியும் சிரித்தவாறே பார்த்துக்கொண்டிருக்க, கடந்த முப்பத்தைந்து வயது வரை பெயரிடப்படாமல் “குழந்தை” என்றே விளிக்கப்பட்ட கோவிந்தனின் பெண் கூச்சத்துடனும் அம்மங்கை என்னும் தன் அத்தையின் பெயர் தாங்கின நாள் கூட அவள் வெட்கத்துடன் சிவந்த ஒரு தினம்தான்!