Thursday, 27 December 2018

இன்றைய கதையரங்கம் (28, டிசம்பர், 2018)

”உம்” விகுதி மிகும் ஒரு கதை

”நமக்குப்பொறக்கப்போகும் குழந்தைகளுக்கு அனு அப்புறம் அரவிந்த்ன்னு பேர் வெக்கலாமா?”

நூத்திப்பத்துக்கும் நூத்தி இருபதுக்கும் இடையே துடித்துக்கொண்டிருந்த வேக முள் ஒரு அழுத்தலில் சரேலென்று நூத்தி முப்பதுக்குச்சென்ற அந்த மைக்ரோ நொடியில் கண்ணுக்குத்தெரிந்த சின்ன திருப்பம் அவினாஷைத் திகைக்க வைத்த அதே தங்க கணத்தில்தான் வினுதாவும் கேட்டாள்.

இந்தக்கடைசி வரியில் இருக்கும் “உம்” விகுதி இந்தக்கதைக்கு முக்கியம்.

சரியாக ஏழு மணி நேரத்துக்குப்பிறகுதான், எல்லா வித முயற்சிகளும் எடுத்த பிற்பாடு, ஒரு தலைகாணி கொத்திய க்ரேனின் முனையிலிருந்து ரத்த விளாராக வினுதாவின் உடல் எடுத்துக்கிடத்தப்பட்டபோது அவினாஷுக்கு மயக்கம் தெளிந்து அலற ஆரம்பித்திருந்தான்.

” இன்னியோட மூணு மாசமாச்சு! இவன் இன்னும் திக் பிரமையோடவே இருக்கானே, எனக்கு பயமா இருக்குங்க!”

“ என்ன பண்றது சாந்தா! லேசுப்பட்ட ஷாக்கா? அவினாஷ் என்னமோ தானே வினுதாவைக்கொன்னுட்ட மாதிரி கில்ட்டியா இருக்கானே!”

“ சைக்கியாட்ரிஸ்ட் என்ன சொல்றார்?”

” அவர் என்னத்தச்சொல்லுவார்! இதுக்கெல்லாம் டைம் கிடையாது! தானா ஆறவேண்டிய மனக்காயம்ங்கறார்!”

அவினாஷுக்கு முதல் மாசம் பேச்சே இல்லை. பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தான். விப்ரோ வேலையை விட்டுவிட்டிருந்தான்

“ நாந்தான் வினுவைக்கொன்னுட்டேன்”! அவ மெதுவாப்போங்கன்னு சொன்னா, நாந்தான் கேக்காம அவளை என் கையாலேயே கொன்னுட்டேன்!”

ஸைக்கியாட்ரிஸ்ட் நடராஜனுடன் கிட்டத்தட்ட மூணு மாசம் பத்துப்பன்னிரெண்டு செஷனுக்குப்பிறகுதான் அவினாஷ் ஒரு மாதிரி சகஜ நிலைக்கு வந்தான். ஆனாலும் அந்தக்குற்ற உணர்ச்சி அவினாஷை விட்டுப்போக மறுத்தது.

“ இனிமே நான் பண்றதுக்கு ஒண்ணும் இல்லை அவினாஷ்! நீங்க ஏன் ஒரு மாறுதலுக்காக பெங்களூருக்கு போய் இருக்கக்கூடாது?”

”சரி டாக்டர்!”

“ அவினாஷ்! உங்களோட எக்ஸ்பீரியன்ஸுக்கு நீங்க இந்த நேரம் விப்ரோவுல சீனியர் பொசிஷனுக்கு வந்திருக்கணுமே?”

”நடுவுல ஒரு ஆறு மாசம் ப்ரேக் ஆயிடுத்து!”
“ப்ரேக்கா? ஏன்?”

………………………………

“ஓ வீ ஆர் வெரி சாரி அவினாஷ்! உங்களுக்கு நேர்ந்தது கொடுமையான அனுபவம். நீங்கள் மீண்டு வந்தது பற்றி சந்தோஷம். உங்களை ஜெனெரல் மானேஜராகத்தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு மகிழ்சியே! ஆனால் எங்க கம்பெனி டாக்டருடைய மெடிகல் செக் அப் செய்துகொள்ள வேண்டும்!”

”கங்கிராட்ஸ் அவினாஷ்! டாக்டர் ஓகே பண்ணிவிட்டார்! எப்ப ஜாயின் பண்றீங்க?”

அவினாஷின் முதல் நாளே கோலாகலாமக இருந்தது. மிகப்பெரிய வரவேற்பு பானர் கட்டி அவனை அந்த ஆஃபீசில் உள்ள முப்பத்திச்சொச்ச பேரும் வரவேற்று வாழ்த்தினது அவினாஷுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. விப்ரோ போல பெரிய கம்பெனி இல்லைதான். ஆனாலும் இருக்கும் முப்பத்தி ஐந்து பேரும் வாத்சல்யமாக இருந்து வேலை செய்யும் அபார டெக்னிகல் கம்பெனி. இரண்டே கஸ்டமர்கள் தான் அமெரிக்காவில், ஆனாலும் படு சந்தோஷமான கஸ்டமர்கள். ஆர்டர்கள் பாட்டுக்கு குவிந்த வண்ணம் இருக்க, வேலை கடுமையானதாக இருந்தாலும் நிறைவான வேலையாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் பெங்களூருக்கு வந்து விட அவினாஷ் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பழைய உற்சாக நிலைக்குத்திரும்பினான்.

“ சாந்தா! கவனிச்சியா அவினாஷை? சந்தோஷமா இருக்கான்.! இன்னிக்கு நம்மள சினிமாக்கு அழச்சிண்டு போறான்னிருக்கான்!”

” ஆமாங்க! இப்ப கொஞ்ச நாளாத்தான் எனக்குமே உயிர் வந்தது. எங்க அவன் அப்படியே நொந்து போய்டுவானான்னூ பயந்துட்டே இருந்தேன்!”

“ ஆமாண்டி! அடுத்த வாரம் ஒரு நாள் ஜெயநகர் சாய்பாபா கோவிலுக்குப் போய்ட்டு வந்துடணும்!”

“அவினாஷ் ! இன்னிக்கு அலெக்ஸோட கான் கால் இருக்கு எட்டு மணிக்கு!”

தெரியும் மாலா! நீயும் இருக்கணுமே! எட்டு மணின்னா உனக்கு முடியும்போது லேட் ஆயிடுமே!”

“பரவாயில்ல அவினாஷ்! அமெரிக்கன் கஸ்டமர்ன்னா இதெல்லாம் பாக்க முடியுமா?”

“ வேணும்னா வீட்லேர்ந்து யாரையானும் வரச்சொல்லிடறீங்களா?”

“வீட்லேர்ந்தா? நா லேடீஸ் ஹாஸ்டல்லேர்ந்து வாட்ச்மேனைத்தான் கூப்பிடணும்! அவன் அவர மாட்டான்!”

“ஓ நீங்க பெங்களூர் இல்லியா? உங்க பேரண்ட்ஸ் எந்த ஊர்ல இருக்காங்க?”

“ எந்த ஊர்ன்னு தெரியல. ஆனா சொர்க்கம்ங்கற நாட்டுல!”

“ஓ ஐயாம் சாரி மாலா!”

“ தட்ஸ் ஆல் ரைட் அவினாஷ்! எனக்கு நாலு வயசுலேயே அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல…நான் முழுக்க ஹாஸ்டல் தான்!”

“ டோண்ட் ஒர்ரி! நானே ட்ராப் பண்ணிடறேன்!”

“ தாங்க் யூ சார்!”

”மாலா! என்னோட சாப்பிடறீங்களா? அம்மா அவியலும் பொங்கலும் பண்ணியிருக்காக்க!”

“ அவினாஷ்! இந்த அவியலிலும் பொங்கலிலும் டேஸ்ட் தவிர ஒரு அம்மா இருக்கங்க!”

“ சே சே மாலா! இமோஷன்ல ஆகாதீங்க! ப்ளீஸ்!”

“அம்மாங்கறதே மறந்து போச்சு அவினாஷ்! “ இன்னும் கொஞ்சம் போட்டுக்கோடீ” ங்கற வார்த்தைகளைக்கேட்டதே இல்லை. ”இன்னுமா எழுந்திருக்கல! சீக்கிரம்மா, எனக்கு தட்டெடுத்து க்ளீன் பண்ணனும்”தான்! வேலைக்காரிகளின் விரட்டல்ல தான் நான் வளர்ந்தேன்!”

“ பாவம்மா மாலா!”

“டேய் அவினாஷ்! அவள ஒரு நாள் வீட்டுக்கு அழச்சிண்டு வாயேன்! நம்ம வீட்டுல சாப்பிடட்டும்!”

தமிழ் சினிமா மாதிரி “ எப்ப வேணா நீ வீட்டுக்கு வாம்மா! இத உன் வீடாவே நெனச்சுக்கோ” டையலாக் சொன்னாள் சாந்தா.

வ வே சு அய்யர் கதைபோல நாட்கள் உருண்டோடின.

அவினாஷ் மாலாவின்பால் ஈர்க்கப்பட்டதும், மாலாவும் அவனுடைய முதல் கல்யாணம் பற்றித்தெரிந்து, வினுதாவின் ஃபோட்டோ பார்த்து “ ஷீ ஈஸ் ரியல்லி பியூட்டிஃபுல்” என்றதும், இருவரும் இரண்டு நாள் டெல்லி டிரிப் போனபோது இன்னும் நெருங்கினதும், கூடவே சேர்ந்து மலை மந்திர் போனபோது அர்ச்சகர் “வாங்கோ! புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து நமஸ்காரம் பண்ணுங்கோ” என்று மறுபடி தமிழ் சினிமா போல சொன்னதும்….

இதெல்லாம் எழுதினா, ”என்னடா திருப்பி திருப்பி அதே போரா எழுதறியே? ஒரு ட்விஸ்ட் கிடையாதா?” என்று கேட்பீர்கள்.

வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது? எல்லோருக்குமா அந்த ”ஒ ஹென்றி” கதை போன்ற எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது?

மொத்தமெ உலகத்துல முப்பத்தி ஏழு கதை நாட் தான் இருக்கு! எல்லார் வாழ்க்கையுமே யூரிபிடெஸ் எழுதிய க்ரீக் ட்ராஜெடி போல திரும்பத்திரும்ப அதே சுழற்சி தான். அவினாஷ் மாலா கதையிலும் என்ன டுவிஸ்ட் எதிர் பார்க்கிறீர்கள்?

அடுத்த மூன்றே மாதங்களில் அவினாஷும் மாலாவும் தங்களின் காதலை உணர்ந்து கொண்டதையா, அவினாஷின் பெற்றோர் அந்தக்காதலை ஒரு சேர ஆமோதித்து கல்யாணம் செய்து வைத்ததையா, இருவரும் ஹனிமூனுக்கு காரிலேயே மைசூருக்குச்சென்றதையா, போகும் வழியில் மாண்டியாவின் ஒரு திருப்பத்தில்……..இருங்கள் இருங்கள்..ஒன்றும் நிகழவில்லை.

தாசப்ரகாஷ் பாரடைஸில் அருமையான ஸ்யூட் ரூமில் தங்கினார்கள். பாலஸ் தெருவில் இருவரும் பான் குல்ஃபி சாப்பிட்டார்கள், ரவி வர்மா ம்யூசியத்தில் அந்த ஆற்றங்கரையோரப்பெண்ணின் அமைதியான அழகையும் நிலவின் ரேடியன்ஸையும் மெய்மறந்து ரசித்தார்கள். தோளோடு தோள் இடித்துக்கொண்டு பல்லவி சினிமாவில் பனி விழுந்த திரையில் தில்வாலே துல்ஹானியா பார்த்தார்கள்.மைசூர் சில்க் ஷோ ரூமில் மாலாவுக்கு எட்டாயிரம் ரூபாயில் புடவை வாங்கினார்கள். சாமுண்டி கோவிலில் எதிர்ப்பாராமல் பூசாரியே இருவருக்கும் மாலை போட்டுவிட்டார், திகட்டத்திகட்ட இருவரும்………ஆம்..ஆம்….. அபார தருணங்களைக்கழித்தனர்.

ஒரு வாரத்துக்குப்பிறகு புது மனிதர்களாய் பெங்களூருக்குக்கிளம்பினார்கள்.

வரும் வழியில்தான் அந்த சுரபி கல்யாண மண்டபம் தாண்டி பி ஜி எஸ் குளோபல் ஹாஸ்பிடலை நெருங்கும் ஷங்கரபுரம் திருப்பத்தில், மாலா”வும்” அவினாஷைக் கேட்டாள்:

”நிறுத்து! எப்படி முடிக்கப்போறேன்னு தெரியும்! எவ்ளோ கதை படிச்சிருக்கோம்! நமக்குப்பொறக்கப்போகும் குழந்தைகளுக்கு அனு அப்புறம் அரவிந்த்ன்னு பேர் வெக்கலாமா? – இதானே மாலா கேட்டாள்னு முடிக்கப்போறே?”

“இல்லை!”

இல்லியா? அப்ப மாலா என்ன கேட்டாள்?”

“நமக்குப்பொறக்கப்போகும் குழந்தைகளுக்கு வினு அப்புறம் வேதாந்த்ன்னு பேர் வெக்கலாமா?”

பி ஜி எஸ் குளோபல் ஹாஸ்பிடலில் அன்று வழக்கத்துக்கு மேல் நடமாட்டம் இருந்தது.