Thursday, 22 February 2018

நியாயம் ஒரே நிறம்

தஞ்சாவூர் ஜில்லா மன்னர்குடியிலிருந்து 13 கிமி தொலைவில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தின் கிட்டத்தட்ட பண்ணையாராக இருந்த சுப்புக்குட்டி அய்யரின் பேரன் சின்ன சுப்புக்குட்டி இப்போது ஜாகை இருப்பது சென்னையில். தொழில் சாஸ்திரி நகருக்கு பெசண்ட் நகருக்கும் இடைப்பட்ட வண்ணாந்துறையில் சின்ன சைஸ் மளிகைக்கடை.
பெரிய சுப்புக்குட்டி தாத்தா சொத்து பத்தையெல்லாம் சப்ஜாடாக சுப்புக்குட்டியின் தகப்பனார் அப்பய்யரிடம் ஒப்படைத்திருந்தாலும், அப்பய்யர் அந்த சொத்தை தன் தலைமுறைக்குள் அழித்தே விடுவது என்று கங்கணம் கட்டினார்போல ஆடியும் ஓடியும் அழித்தார்.
“கும்மோணம் வைத்தா வரான், நம்ம பழமாநேரி சாமா, சிங்கபுரம் சீமாச்சு, கூடவே திருக்காட்டுப்பள்ளி அத்தானும்”
”போடு சக்கைன்னானாம்! இஞ்ச மாதிரி ஜமா சேர்ரதே அபூர்வம். நா உண்டோல்லியோடா?”
“என்ன ஓய்! நீர் இல்லாமயா? இன்னொண்ணு கேளூம்” அரையபுரம் ரஞ்சிதமும் வரா!”
”ட்டேயப்பா! இந்த தரம் ஜோர்தான்னு சொல்லு!. இன்னிக்கு இருவது கவுளி வெத்தல பறிச்சுண்டு வரச்சொல்லிட்டேன். கொண்டு வந்துர்ரேன்”. சாமா பொயல கொண்டுவரான்னோல்லியோ?”
”பொயல இல்லாமயா?”
”டேய்! நான் நாளக்காலம்பரயே இறங்கிடறேன்னு வைத்தாட்ட சொல்லிப்புடு”
”ஆஹா! பேஷாச்சொல்லிர்ரேண்ணா”
இந்த ரீதியில் அழித்தார் என்று சொன்னாலே போதும், பொழிப்புரை, சொல்விளக்கம் ஒன்றும் தேவையிருக்காது!
ஐம்பத்து நாலு வயதுக்கே தள்ளாமை வந்து போறாததற்குக்கூடவே ரோகமும் வந்துவிட, சின்ன சுப்புக்குட்டி இனிமேல் கிராமத்தில் இருந்தால் உள்ளதும் போய்விடும் என்று தெரிந்து கொண்டான். மனைவி மங்களத்தைக்கூட்டிக்கொண்டு இருக்கும் நிலபுலன்களை விற்று, அப்பாவின் பேரில் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் டெபாசிட்டைபோட்டு காரியஸ்தர் விச்சுவை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்னைக்கு குடி பெயர்ந்தான்.
இப்போதே ஒன்றைச்சொல்லிவிடுகிறேன்.
மேற்படி வரும் பாத்திரங்கள் எவருமே கதையில் வரப்போவதில்லை. சின்ன சுப்புக்குட்டி கூட ஓரிரு இடங்களில் வந்துவிட்டுபோய்விடுவான்.
சனிக்கிழமை
மாலை ஆறரை மணி அளவில் சின்ன சுப்புக்குட்டி கொட்டாவி விட்டு கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வாடிக்கை யாரும் இல்லை. கடைப்பையன் சன்னாசி கூட எதோ வேலை என்று நாலு மணிக்கே போய்விட்டான். வயறு கொஞ்சம் ”நமநம”வென்று குடையவே சின்ன சுப்புக்குட்டி கைப்பிடி முந்திரியை எடுத்து தின்ன ஆரம்பித்த அந்த வேளையில்தான் அவன் கடைக்கு நேர் எதிரே தெருவில் ஒரு வயதான ஆசாமியை இரண்டு முரடர்கள் அடி அடி என்று அடித்து, ரத்த விளாராய் போட்டுவிட்டு அவனுடைய பர்சைக்கவர்ந்து கொண்டு வேகமின்றி அசால்ட்டாக நடந்து சென்றதைப்பார்க்க நேர்ந்தது.
சுப்புக்குட்டிக்கு விலவிலத்துப்போய்விட்டது. கையிலிருந்த முந்திரி நழுவ, தப தபவென்று ரோடுக்கு ஓடிவந்தான். பயத்தில் மறுபடி கடைக்கு ஓடினான். இரண்டு தடியர்களும் தெருத்திருப்பத்தில் மறைய சுப்புக்குட்டி கொஞ்சம் தைரியம் பெற்று மறுபடி ரோடுக்கு ஓடி வந்தான். அடிபட்ட ஆசாமி முனகல் கூட இல்லாமல் கிடந்தார். முகம் ரத்தக்காடு. காது அறுந்து தொங்க, கர்ப்பத்தினுள் இருக்கும் சிசுவைப்போல கிடந்தார். வயிற்றுப்பகுதியில் சட்டை கிழிந்து உதைபட்ட இடத்திலும் ரத்தம். கண்கள் மூடி இருந்ததால் அவனுக்கு உயிர் இருக்கும் என் சுப்புக்குட்டி தீர்மானித்தான்
.
“அய்யோ! யாராவது வாங்களேன்!“ என்று கத்தியவாறு ரோடில் அங்கேயும் இங்கேயும் கார் வரும் சமயத்தில் கடக்கும் கோழிக்குஞ்சுமாதிரி அலை பாய்ந்து, கொஞ்சம் சுதாரித்து, நினைவு வந்தவனாய் அவன் கடையிலேயே இருந்த ஒரு ரூபாய் ஃபோனில் 100 ஐ டயல் செய்தான்.
”கயாங் கயாங்” என்ற சத்தத்தோடு ஆம்புலன்ஸ் போய்விட, சற்றெ நடுங்கியவாறே உட்கார்ந்திருந்த சுப்புக்குட்டிய்யை அணுகினர் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு, கூடவே கான்ஸ்டபிள் ஜோசப்.
”ரொம்ப நல்ல காரியம் பண்ணினீங்க அய்யரே! உங்க மாதிரி தையிரியமான ஆளூங்க இப்ப ரொம்ப குறைவு!”
”ஆளு பொழச்சுப்பானா சார்! பாவம் சார் அந்த அடி அடிச்சானுங்க!”
”ச்சு! தெரியல அய்யரே! சரி ஆளுங்கள நீங்க பாத்தீங்தானே?”
“பாத்தேன் சார் – தயங்கியாவாறே.
“இனிமே ஏது யாவாரம்? கடையப்பூட்டிட்டு பக்கத்துல ஸ்டேஷனுக்கு வாங்க. ஃபோட்டொ ஆல்பம் காட்டறேன். அடையாளம் சொல்லிடுங்க!”
“சார்! எனக்கு ஒண்ணூம் ஆபத்து வராதே? ஆத்துல மாமி தனியா வேற இருக்கா?”
“ஒண்ணும் ஆவாது அய்யரே! நீ அடையாளம் சொல்லு, ஒரே வாரத்துல பிடிச்சி போட்டுர்ரேன். ஆளுக்கு பத்து வருஷம் நிச்சயம். கிழவன் செத்தா, ஆயுள்தான்.
ஆதி காலத்துக்கம்ப்யூட்டரில் பூச்சி பூச்சியாகப்பறந்த ஃபோட்டோக்கள். எல்லாம் தேர்ந்த ரவுடிகள் என்று பார்வையிலேயெ தெரிந்தது.
”இவனா? போன வருஷம் நாலு வயசுப்பொண்ணை கற்பழிச்சுக்கொன்னிருக்கான் அய்யரே! சாட்சி கவுத்துட்டதால வெளியே வந்துட்டான்.”
”இல்லை இல்லை” என்றான் சுப்புக்குட்டி அவசரமாக.
நாற்பத்தி ஆறாவது ஃபோட்டொவில் தெரிந்து விட்டது இவன்தான் ஒரு ஆள் என்று.
சுப்புகுட்டியின் கேனத்தனமான தயக்கப்பார்வையில் சாமிக்கண்ணு புரிந்து கொண்டு விட்டார்.
”இவனா?”
”ஆமாம், இல்ல அது மாதிரி….!”
”அய்யரே! பாத்தீங்க இல்ல, எப்படி அடிச்சுப்போட்டிருக்கானுவ. உயிரே கூட போனாலும் போய்டும். வுட்டுள்ளாமா அந்தக்….ளை?”
”ஆமாம் இன்ஸ்பெக்டர். இவந்தான்!”.
இன்னொரு ஆள் சரியாக நாப்பத்தொன்பதாவது ஃபோட்டோவில் அகப்பட்டுவிட்டான்”.
”அய்யரே! கவலைப்படாம போ. உனுக்கு ஒண்ணியும் ஆவாது. நாங்க பாத்துக்கறோம். ஒரு காஸ்டபிள உங்க வூட்டுப்பக்கம் நடமாட வுடறேன். பயப்படாம போ. ரொம்ப தாங்க்ஸ்!”
சரியாக இரண்டெ நாளில் க்ராப்பு குமாரும் மதிவாணனும் அகப்பட்டுவிட்டனர்.
மலர் ஆஸ்பத்திரியில் எமர்ஜென்ஸி வார்டில் அந்த வயதானவர் மருத்துவ சாகசங்களினால் மூச்சு விட்டு அமைதியாகப்படுத்துக்கொண்டிருந்தார்.
பல்மனரி இடீமா செட் ஆயிருக்கு. இண்டென்ஸ் கன்கஷன். மண்டையில் பலமான அடியினால் ரத்தப்போக்குவரத்து தடைபட்டு மூளைப்பகுதி வீங்கி இருந்தது. ரத்தகசிவு இருக்கும் போல. ஆசாமி கோமாவில் இருக்கிறான்.
“ஹலோ! சாமிக்கண்ணு! போன மாசம் அந்த செல்லாயி கேசுல வந்தீங்க இல்ல? உங்களுக்குன்னு ஆப்டுது பாருங்க கேஸ்!”
”என்ன பண்றது டாக்டர்! ஆசாமி பொழப்பானா?”
”என் பேர் சுகவனம் தான். பரமேஸ்வரனோ ஜீஸஸோ இல்லை!”
”இல்ல டாக்டர், நெலம எப்படின்னு…..?”
”சீரியஸ்தான் சாமிக்கண்ணு. திங்கள் வரை பாக்கப்போரேன். இம்ப்ரூவ்மெண்ட் இல்லேன்னா ஆபரேஷன் பண்ணியாகணூம். ஆமா, யாருன்னு தெரிஞ்சுதா?”
”இல்லை டாக்டர்!”.
”அதக்கண்டு பிடிங்க முதல்ல. மனுஷன் பாக்கெட்டுல ஒரு த்ரிப்சம் கூட எதுவும் இல்ல.”
”பர்சை எடுக்க இந்த அடி!”
”சே! என்ன சமூகத்துல வாழறோம்!”
ஒரு சனிக்கிழமை மாலை யாருமில்லா தெருவில் ஏதொ இரண்டு முரடர்களிடம் நாயடி பட்ட அந்தப்பெரியவர் கண் முழிக்காமலேயெ மரிக்கப்போகிறார் என்பது இதை எழுதும் எனக்கு மட்டும்தான் தெரியும்
ஞாயிற்றுக்கிழமை
சிந்தாதிரிப்பேட்டையின் நிழல் சந்துகளில் விஜாரித்து, டூமிங் குப்பத்தின் ப்ரோக்கர்களை அதட்டி, அஜீஸ் ஸ்ட்ரீட்டின் ட்ரான்ஸ்ஜெண்டர்களில் ஒருவர் சுட்டிக்காட்டிய ஆல்காட் குப்பத்தின் இருளான அறையில் க்ராப் குமார் சிக்கினான். சாமிக்கண்ணுவின் லத்தி அவன் ஆசன வாயின் துவாரத்தின் விட்டத்தை அரை இன்ச் அகலப்படுத்திய அலறலில் மதிவாணன் வால்மீகி நகரின் ஆளரவமற்ற கடற்கரையில் ஒரு கூரை பெயர்ந்த குடிசையில் குப்பை பெருக்கும் மனம் பிரழ்ந்த ஒருத்தியை சுகித்துவிட்டு "பே" என்று கிடந்த அதிகாலையில் மடக்கப்பட்டான்.
இருவரும் அத்தனை அடிக்குப்பின்னும் அந்தப்பெரியவரை தாங்கள் அடிக்கவேயில்லை என்று சாதித்தனர். அதே நேரத்தில் இருவரும் ஆல்காட் குப்பத்தின் சிக்கலான ஒரு சந்தில் டீக்கடையில் இருந்ததாக துண்டு போட்டு தாண்டினர்.
சாமிக்கண்ணு என்னவெல்லாமோ மிரட்டியும் இருவரும் பேச மறுத்து சாந்தோம் சர்ச் எதிரில் இருந்த ரேஷன் கடைக்குப்பின்னால் சின்ன ஆஃபீஸ் வைத்திருந்த வக்கீல் குணசேகரன் வந்தால்தான் வாயைத்திறப்போம் என்றதால் குணசேகரன் வரவழைக்கப்பட்டார்.
மாஜிஸ்ட்ரேட் ராமாமிர்தம் அப்போதுதான் முட்டைக்கோஸ் பொரியலும் முள்ளங்கி சாம்பாரும் சாப்பிட்ட கோபத்தில் இருந்தார். அவர் மனைவி அவரைப்போலவே குண்டாக, வாயில் நாற்றம் அடிக்கும் காவியேறிய பற்களூடன் இருந்தாள். இருவருக்கும் ஒரே சமயத்தில்தான் பசி, கோபம், அபான வாயு வெளியேற்றும் உந்துதல் எல்லாம் வரும் அளவுக்கு எல்லாப்பொருத்தமும் இருந்தாலும் எப்போதும் வாக்கு வாதம்தான்.
சாமிக்கண்ணு அப்போதுதான் க்ராப் குமாரையும் மதிவாணனையும் அழைத்து வந்து ஒரு வார ரிமாண்ட் கேட்டார்.
”லீவு நாள், பண்டிகை நாள்ன்னு இல்லாம தொந்தரவுய்யா உங்களோட!”
”மன்னிக்கணும். அவசரம்!”
”எப்ப அவசரம் இல்ல? கேஸ் என்னய்யா?”
“வழிபறி, அசால்ட். அடிபட்ட ஆள் கோமாவில் இருக்கிறார்!”
குணசேகரன் ஏன் ரிமாண்ட் தரக்கூடாது என்று சட்ட நுணுக்கஙளை எடுத்துப்பேச ஆரம்பிக்குமுன், மாஜிஸ்ட்ரேட் ராமாமிர்தம், “அட! போய்யா”, இப்பவே ஒப்பனிங் ஸ்டேட்மெண்ட் குடுக்கறியா?” என்று ஒரு வாரம் ரிமாண்ட் அளித்துக்கையெழுத்திட்டார்.
இந்த குணசேகரன் வக்கீலானதே ஒரு வித்தியாசமான கதைதான்.
“பரதம்” என்னும் வார்த்தையே நாட்டியத்துக்கென உண்டான பிரயோகம். அதுதான் தமிழின் மேன்மை. இந்த நான்கு சொற்களிலேயே நிகழும் ரசமாற்றத்தைப்பாருங்கள். பதம் என்பது பரதத்தில் இன்றியமையாதது. ரதம் போல ஆடவேண்டும். தம் இல்லாமல் நீளப்பதங்களை ஆடிவிட முடியுமா..” என்கிற ரீதியில் தமிழில் ஜல்லியடித்தே மந்திரி வரை ஆகிவிட்ட நலங்கிள்ளி என்னும் பக்கிரிசாமியிடம் பிஏ வாகத்தான் இருந்தான் குணசேகரன்.
அவர் மந்திரியாக இருந்த மூன்று வருடங்களில் அந்த கணக்கு வழக்குகளில் தேர்ந்து தானும் அரசியலில் குதிக்க முடிவு பண்ணினான். அதற்கு சட்டப்படிப்பு உதவும் என்ற எழுதா விதிப்படி மாலைக்கல்லூரியில் இடம் பிடித்து, கல்லூரிக்குப் போகாமலேயே எதோ தகிடுதத்தம் பண்ணி சட்ட டிகிரி வாங்கிவிட்டான்.
நலங்கிள்ளி ஒரு தமிழ் மாநாட்டின் கலை விழா சம்மந்தமாக “பேசப்போன” சமயத்தில், விஷயம் புரியாமல் மாவட்டச்செயலாளரின் அந்தரங்கத்துக்குப்பாத்திரமான ஒரு பெண் சமாசாரத்தில் குழப்பிவிட, ஆறே மாதத்தில் நலங்கிள்ளி அரசியல் அனாதை ஆனார்.
கூடவே குணசேகரனும் ஒரு கை ஃப்ராக்சர், முட்டி பெயர்தலுடன் ஒதுக்கிவிடப்பட்டுவிட, பழைய அரசியல் சகவாசத்தின் மிச்சம் மீதியாக நிழல் ஆசாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது கை கொடுத்தது.
எங்கெல்லாம் க்ராப் குமர் போன்ற கைதிகள் மாட்டுகிறார்களோ அங்கெல்லாம் குணசேகரன் ஆஜராவான். கண்ணுக்குத் தெரியாத மேல் தட்டு ஆசாமிகள்தான் இந்த க்ராப் குமர், மதிவாணன் போன்றோரை பயன்படுத்தி படி அளந்து கொண்டிருந்தனர். மாட்டும்போதெல்லாம் குணசேகரன் வெளியே கொண்டு வருவான். ஃபீஸ் மட்டும் கணிசமாக வந்துகொண்டிருந்தது. யார் கொடுப்பார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியவேண்டாம்.
ஒரு ஹ்யூண்டாய் ஐ20 வைத்துகோண்டு, மலர்விழி என்னும் தன் மனைவியை வாரவாரம் தலப்பாகட்டிக்குப்போய் பிரியாணியும் ரத்தப்பொறியலும் வாங்கிக்கொடுத்து குஷிப்படுத்தும் அளவுக்கு சம்பாத்தியம் குணசேகரனுக்குப் போதுமானதாக இருந்தது!
திங்கள் கிழமை
இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு பரபரப்பானார். மலர் ஆஸ்பத்திரியிலிருந்து ஃபோன்.
“இன்ஸ்பெக்டர்! உடனே வர்ரீங்களா?”
“ஏன்ன ஆச்சு?”
“உங்க பேஷண்ட் க்ளோஸ்! இறந்துட்டார்!
சாமிக்கண்ணூ மேல் சட்டை பட்டன் கூடப்போட மறந்து மோட்டார் பைக் எடுத்து ஓடினார்.
“எனா ஆச்சு டாகடர்?”
”ஹார்ட் குட் நாட் டேக் இட்!”
டாக்டர்!”
”மூச்சுகூட சீராகிண்டு வந்துது. ப்ரைன் காண்ட்ரக்ஷன் நேராச்சு. நான் ரொம்ப ஹோப்ஃபுல்லா இருந்தேன். திடீர்னு கார்டியக் அர்ரெஸ்ட். ஹி சாங்க் ஸ்லோலி. ஒண்ணூமே பண்ண முடியல”. சாரி இன்ஸ்பெக்டர்!”
டாக்டர் சுகவனம் உண்மையாகவே வருத்தப்பட்டார்.
”யாருன்னு கண்டுபிடிச்சீங்களா?”
”இன்னும் இல்லை டாக்டர்!”
”வீ வில் ஸ்யூ ஹிம் நைஸ்லி அண்ட் ஹாண்ட் ஓவர்!”
சாமிக்கண்ணுவுக்கு கொஞ்ச நேரம் என்ன பண்ணுவது என்று புரியவில்லை.
யாரைய்யா நீங்கள்? இப்படி அடையாளம் தெரியாமல் அடிபட்டு அனாதைப்பொணமாக சாகவா அன்று அங்கே போனீர்கள்!
குணசேகரனுக்கு ஃபோன் பண்ணினார்
”யோவ்! வக்கீல்! ஆளூ செத்துட்டானயா! உங்க ஆளுங்க இத்தோட காலி. தூக்குதான்!”
”இன்ஸ்பெக்டர்! முதல்ல நிரூபிங்க! சும்மா கையில கிடச்ச ஆளுங்கள பிடிச்சி கேஸ் புக் பண்றத முதல்ல நிறுத்துங்க!”
“இருய்யா இந்த முறை உனக்கே வெக்கறேன் ஆப்பு!”
“என்ன இன்ஸ்பெக்டர் என்னையே மெரட்டறீங்களா? கோர்ட்டுல பாத்துக்கலாம்!”
ஃபோனை வைத்து விட்டு சாமிக்கண்ணு ”போடாங்க…”.என்று ஒரு மான நஷ்ட வழக்கு போடுவதற்குத்தகுதியுள்ள சொல்லை ப்ரயோகித்தார்!
செவ்வாய்க்கிழமை
அடுத்த நாளே இந்து, தினமனி, தினகரன், தினத்தந்தி பத்திரிகைகளில் ஃபோட்டோவுடன் விளமபரம் கொடுத்தார்.
“சார் நான் பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப்பார்த்தான்” என்று ஒரு அறுபது வயதுப்பெண் அடுத்த வீட்டு விடலை மீது கொடுத்த கேஸ் வந்து அவரை வெறுப்பேற்றியது.
“யோவ்! ஜோசஃப்! இதெல்லாம் எங்கிட்ட ஏன்யா அனுப்பறே? பாத்து பேசி அனுப்புய்யா!”
”கான்ஸ்டபிள்! நீங்க அவனை முட்டிக்கு முட்டி தட்டணும். எம் புருஷன் என்னைப்பத்தி என்ன நெனப்பார்! அழகா இருந்தாலே பாவமா?”
ஜோசஃப் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “வாங்கம்மா! எல்லாம் சரி பண்ணிப்பிடலாம்” என்று சமாதானம் பேச, சாமிக்கண்ணு ஒருவித இயலாமை, அவஸ்தை என்று வதைபட்டார்.
புதன் இல்லை, வியாழக்கிழமை அந்த ஃபோன் வந்தது.
வியாழக்கிழமை
“இன்ஸ்பெக்டர்! ஃபோட்டொவில் இருப்பவரை எனக்குத்தெரியும்!”
சாமிக்கண்ணு பரபரப்பானார்.
“சார்! நீங்க யாரு?”
”என் பேர் கர்னல் டாக்டர் கோபால். இறந்தவர் தினகரன். இந்திய ராணுவத்தில் கார்ப்பொரலாகப் பணி புரிந்தவர். ஃபோட்டொவில் இருப்பவரை எனக்குத்தெரியும்!” என்ன ஆச்சு?”
”கர்னல்! டாக்டர்! உங்கள எப்படி அழைக்கணும்! நீங்க பெசண்ட் நகர் போலிஸ் ஸ்டேஷன் வரமுடியுமா?”
நாற்பதாவது நிமிடம் வந்து விட்டார்.
.
”சொல்லுங்க டாக்டர், இல்லை கர்னல்!”
“டாக்டர்ன்னே சொல்லுங்க!”
“ஓகே டாக்டர்!
“இன்ஸ்பெக்டர்! நான் இந்திய தரைப்படை மெடிகல் கார்ப்ஸில் ஏடி எம் எஸ் ஆக இருந்தவன்.
”ஏடி எம் எஸ் ன்னா..? மன்னிக்கவும் டாக்டர் எனக்கு தெரியாததால் கேட்டேன்”
”பரவாயில்லை. பலபேருக்கு தெரியாது! அஸிஸ்டண்ட் டைரெக்டர் மெடிகல் சர்வீஸெஸ். நாலு வருஷத்துக்கு முன் ரிடயர் ஆகி சென்னை வந்தேன்.
”இறந்தவரை உங்களுக்கு தெரியுமா?”
“நல்லா தெரியும். பங்களாதேஷ் சண்டையில் சாகசம் புரிந்த ஆசாமி. இவர் உடம்பிலிருந்து ஆறு பெல்லட்டுகளை எடுத்தது நாந்தான். வீர் சக்ரா விருது வாங்கினவர். என்ன ஆச்சு?”
”வழிப்பறி! அசால்ட்! வீர் சக்ரா விருது வாங்கின சோல்ஜர் ஒருவரின் நிலமை பாத்தீங்களா?”
“பிட்டி! பிடிச்சுட்டீங்களா கல்ப்ரிட்ஸை?”
”ரெண்டு பேரு மாட்டியிருக்கானுங்க. இல்லவே இல்லைன்னு சாதிக்கறாங்க. பாத்த சாட்சி ஸ்திரமா இருந்தா போறும்.”
”ச்ச்ச்! டெர்ரிபிள்!”
”சரி, டாக்டர்! இவருக்கு உறவு, வீடுன்னு..?”
”ஒண்ணூம் கிடையாது இன்ஸ்பெக்டர். தனியாத்தான் இருந்தான். வருஷா வருஷம் என்கிட்ட லைஃப் சர்டிஃபிகேட் வாங்கிக்க வருவான்”
”லைஃப் சர்ட்டிஃபிகேட்?”
“நம்ம நாட்டு ப்ரொசீஜர்! ராணுவ பென்ஷன் வாங்கறபோது.ஒவ்வொரு வருஷமும் நான் உயிரோடத்தான் இருக்கேன்னு சான்றிதழ்!”
”மூணு மாசம் முந்திதான் குடுத்தேன். ஒரு பத்து நாள் டெல்லி போயிருந்தேன். நேத்துதான் வந்தேன். என் க்ளினிக் நர்ஸ் கோகிலாவுக்கு இவனைத்தெரியும். ஒரு முறை கோகிலாவின் மாமனாருக்காக ரத்தம் கொடுத்திருக்கிறான். அவள்தான் பேப்பர் எடுத்து வைத்து என்னிடம் காட்டினாள். அதான் உடனே ஃபோன் பண்ணினேன்!”
”தாங்க் யூ டாக்டர்! இது இந்த கேஸ்ல ஒரு பெரிய ப்ரேக்.”
”தினகரன் ஒரு நல்ல சோல்ஜர். நாட்டுக்காக உயிரையே கொடுத்து சண்டை போட்டான். ஏதோ ஒரு தேச விடுதலைக்காக நம்மவர்கள் ரத்தம் சிந்திய அபத்த போர் அது. இந்த மாதிரி வழிப்பறியில் அடிபட்டு சாவது ஞாயமேயில்லை. அந்த ரெண்டு பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தராம விடாதீங்க!
சாமிக்கண்ணு இயலாமையில் சிரித்தார்.
“முடியாதே சார், இந்த பாழாய்ப்போன ஜன நாயகத்துல!
வெள்ளிக்கிழமை
குணசேகரனுக்கு சந்தேகமின்றி அந்தப்பெரியவரை அடித்தது இவர்கள்தான் என்பது தெரிந்திருந்தது. எப்படி பெயிலிலாவது வெளியே கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருந்த அந்த மாலை ஆறு மணிக்கு ஃபோன் அடித்தது.
அந்தப்பக்கம் பேசியது இந்தியாவிலேயே மிகச்சிறந்த கிரிமினல் வக்கீல் என்ற போற்றப்பட்ட ரங்கதுரை என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
ரங்கதுரை லேசுப்பட்ட ஆளில்லை. ராவ்பஹதூர் ரங்கதுரை, இந்த ரங்கதுரையின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆர்சியாளர்களுக்கு மிகத்தோதான வக்கீலாக இருந்து Queen’s Counsel என்கிற பட்டயத்தை இங்கே ஆண்டு கொண்டிருந்த ஒரு சில்லறைப்பிரபு, மேதகு ஜார்ஜ் மஹாராஜா பிறந்த நாளின்போது தங்கதட்டில் வைத்து அளிக்க, இவர் கூழைக்கும்பிடு போட்டு அதை வாங்கி, பெருமிதத்தோடு தன் ப்ருஷ்ட பாகம் லோகல் துரைக்கு காண்பிக்கா வண்ணம் பின் நடை நடந்து நாற்காலி சேர்ந்தார்.
அந்தப்பெருமையை, தன் விஸ்தார கச்சேரி ரோடு பங்களா வாசலில் பித்தளை போர்டு எழுதி பறையறிவித்துக்கொண்டார்.
சுதந்திரத்துக்குப்பிறகு அடக்க ஒடுக்கமாக ரிடயர் ஆகி கொடைக்கானலில் போய் செட்டில் ஆகிவிட, அவர் பிள்ளை ராமதுரை ஐ சி எஸ் முடித்த சாகசத்தில் இந்தியாவின் எதோ ஒரு வட இந்திய மாகாணத்தில் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட்டாகப்பணி புரிந்து ஓய்வு பெற்றார்.
சின்ன ரங்கதுரை படிப்பில் படு சுட்டி. மளமளவென காலேஜ் முடித்து சட்டம் படித்து பின்னர் லண்டனில் பார் அட் லாவையும் முடித்து சென்னையில் தாத்தா வரிசையில் கிரிமினல் ப்ராக்டீஸ் ஆரம்பித்தார். அதீத புத்தி கூர்மை, அபார பேச்சு வன்மை, என்பதோடு தேசப்பற்றும் மிக்கவராக இருந்தார்,
1971இல் பங்களா தேஷ் சண்டையின் போது தன் ஜூனியர்களிடம் ப்ராக்டீசை விட்டுவிட்டு அப்பாவின் தில்லி தொடர்புகளைப்பயன்படுத்தி தரை வழிப்படையில் லாஜிஸ்டிக்ஸ் combat பிரிவில் ஒரு வருடம் பணி புரிந்து சிட்டகாங்கில் சண்டையை நேரில் பார்த்தவர் ஆனார். சாம் மானெக்ஷாவிடம் பாராட்டுப்பெற்ற ஃபோட்டொவை ஆஃபீஸ் ரிஸப்ஷன் ஹாலில் மாடியிருந்தார்.
1973இல் மறுபடி விட்ட இடத்திலிருந்து தொடங்கின கிரிமினல் ப்ராக்டீஸ் வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பெருகியது. முப்பத்தி மூணு ஜூனியர்கள் உண்டு அவருக்கு என்று ஹை கோர்ட் வட்டரத்தில் வதந்தி உலவியது. குறுக்கு விசாரனையில் மனுஷர் படு கெட்டி என்பார்கள்.
ஏழைகளுக்கு ஃபீஸே வாங்கமாட்டார், தர்ம சிந்தனை உள்ளவர், நெறய உதவிகள் செய்கிறார், நெஜமாலுமெ தப்பு பண்ணிவிட்டு சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பிக்க முயலும் பணக்காரர்களிடம் கறந்து விடுவார், போலீஸின் மேல் ஒரு வித வெறுப்பு கொண்டிருந்தார் என்றெல்லாமும் அவரைப்பற்றி கிசுகிசுக்கள் உலாவின.
அந்த ரங்கதுரையின் ஆஃபீஸிலிருந்து குணசேகரனுக்கு ஃபோனா?
“சார்!சொல்லுங்க” – குணசேகரன் குழைந்தான்.
“நான் லாயரின் ஜூனியர் ரகோத்தமன் பேசறேன்”. நாளைக்கு நீங்க சாரைப்பாக்க எங்க ஆஃபீசுக்கு வரமுடியுமா?”
“சார்! எப்ப வேணா வரேன்! டைம் சொல்லுங்க போறும்”
“ஞாயித்துக்கிழமை சரியா பத்து மணிக்கு வந்துடுங்க. ரகோத்தமன்னு கெளுங்க”
“நிச்சயமா வந்துர்ரேன். என்ன விஷயம்….”
டொக்கென்று ஃபோன் வைக்கப்பட்டது.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை
ரங்கதுரை வீட்டிலிருந்து நேராக குணசேகரன் சைதாப்பேட்டை ஜெயிலுக்குதான் போனார். க்ராப் குமாரையும் மதிவாணனையும் பார்த்த குணசேகரன் முகம் முழுக்க சிரிப்பு.
“என்னய்யா வக்கீல், பெயில் கிடைக்குமா?
”பெயிலா? வுடுதலையே கிடைக்குண்டா!”
”என்னது விடுதலையா?”
”ஆமாடா! மச்சமடா உங்களுக்கு. உங்க கேஸுல யார் ஆஜராகப்பொறது தெரியுமா?”
”யோவ்! நீ இல்லையா? யார் கிட்ட எங்கள மாட்டிவுடறே?”
”போங்கடா! பொசும்பங்களா! ரங்கதுரையே உங்களுக்காக ஆஜராவுரார்!”
” யோவ் வக்கீலு!, என்னய்யா சொல்றே? அவுரு எம்மாம்பெரிய ஆளு! அவர எப்டி நீ புட்ச்சே? எவ்ளோ துட்டு?”
”துட்டா? ஃப்ரீ கண்ணூங்களா ஃப்ரீ!”
”வக்கீல்! காலங்காத்தால எதுனா போட்டுக்கினு வந்துட்டியா? புரியறா மாரி சொல்றியா கொஞ்சம்?”
“சொல்றேன்”
குணசேகரன் ரங்கதுரை ஆஃபீஸ் வரவேற்பரையில் காத்திருந்தார். விஸ்தாரமான ரூம். சோபாக்கள் மட்டுமே லட்சத்துக்கு மேல் இருக்கும். ஏஸி உறுத்தாமல் ஒடியது. ஏழெட்டு பேர் காத்திருந்தார்கள். எதிர் பக்கத்தில் பன்னிரெண்டு அடி அலமாரியில் ப்ரவுன் கலர் முதுகு அணிந்த சட்டப்புத்தகங்கள். குணசேகரன் வாழ்நாளில் அதில் எதையும் படித்ததில்லை. படிக்கவும் போவதில்லை.ரிசப்ஷன் டேபிளுக்கு நேர் மேலெ ஒரு ஃபோட்டொ. அதில் ரங்கதுரை சாம் மானெக் ஷாவிடம் விருது வாங்கும் காட்சி.
கையிலிருந்த கேஸ் பேப்பர்களைமறுபடி படித்தார். பெரியவர் கேட்கும்போது பயத்தில் உளறிவிடக்கூடாதே!
பரபரப்பாக ரகோத்தமன் வந்தான்.
“நீங்க குணசேகரன் தானே? கேஸ் விவரங்கள் இருக்கா? பெரியவர் கேட்டா ”பேபே”ன்னு முழிக்கக்கூடாது.”
”இருக்குங்க! ஆமாம் சார் எப்படி இந்த கேஸை பெரியவர் எடுத்தார்!….எனக்கு ஆச்சரியமா இருக்குங்க”!
”அதான்யா எங்களுக்கே ஆச்சரியம்! கேட்டப்போ அப்பப்போ இந்த மாதிரி ஏதானும் காம்ப்ளிகேட்டட் கேஸை எடுத்து வாதாடினாத்தான் இன்னொரு பக்கமும் தெரிஞ்சுக்க முடியும்னார். பெரியவர் சான்ஸே இல்ல, உஸ்தாத். உங்க ஆளுங்களுக்கு அடிச்சது யோகம். போன ஜென்மத்துல ராகவேந்திரருக்கு அபிஷேகம் பண்ணியிருப்பானுங்க!”
“ஏங்க, ஃபீஸ் எதுனா கேப்பாரா? இவுரு ரேஞ்சுக்கு கிட்ட கூட போவ முடியாதுங்க!”
”ஃபீஸா? உள்ள போய் எதுனா கேட்டுடாதய்யா! ”போடா நீயும் உன் கேஸும்”னு தூக்கி கடாசிடப்போறாரு! அதான் சொன்னேனே, இந்த கேஸுல இருக்கற சவால் அவருக்கு பிடிச்சிருக்கணும். அதான் இறங்கிட்டாரு இப்பிடித்தான் போன வருஷம் அந்த ரேப் கேஸு……ப்ராஸிக்யூஷன் படு ஸ்ட்ராங்க். அவங்க முதுகெலும்பயே ஒடச்சுட்டாரே! ஒரே வாரம், அக்யூஸ்ட் வெளியே வந்துட்டான்.”
”யாரு அந்த மந்திரி புள்ளதானே?”
”ஆமாம், அதேதான்!”
”நம்ம ஆளூங்க ரவுடிங்கதான், ஆனா இந்த குத்தம் செய்யலைங்க!”
“புளுகாதய்யா! பெரியவர் கிட்ட உண்மையப்பேசு!”
ரங்கதுரை அமைதியாகப்பேசினார்.
”குணசேகரன்! முழு உண்மையையும் என் கிட்ட சொல்லிடுங்க.”
சொன்னார்.
”கண்ணால பாத்த சாட்சி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே!”
குணசேகரன் மவுனம்.
”சரி, நா பாத்துக்கறேன். நாளைக்கு அவங்க ரெண்டு பேரையும் நான் சைதாப்பேட்டை ஜெயிலில பாக்க ஏற்பாடு பண்ணுங்க!”
”சார்! நீங்க போய், அங்கல்லாம் வந்து….”
”குணசேகரன்! சரியா பதினோரு மணிக்கு ஏற்பாடு பண்ணுங்க. இப்ப நீங்க போகலாம்.!”
க்ராப் குமாரும் மதிவாணனும் குணசேகரன் கையைப்பிடித்து குலுக்கி ஆனந்தித்தார்கள்
திங்கக்கிழமை
பத்து மணி அடித்தபோது ரங்கதுரையின் கார் சைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் நுழைந்தது.
”நீங்க பதினோரு மணிக்கு வர்ரீங்கன்னு சொன்னாங்களே? இன்னம் குணசேகரன் வரல்லியெ சார்!”
”நான் 12 மணிக்கு டெல்லி ஃப்ளைட் பிடிக்கனும். அதனால சீக்கிரம் வரவேண்டியதாயிடுத்து. க்ராப் குமரையும் மதிவாணனையும் ஒரு பத்து நிமிஷம் பாத்துட்டுப்போய்டறேன்! குணசேகரன் இல்லேன்னா பரவாயில்ல!”
”நிச்சயம் சார். நீங்க இங்க உக்காந்திருங்க. அழைச்சிட்டு வரச்சொல்றேன்”
”இரண்டு ரவுடிகளும் கேனத்தனமாக வணக்கம் வைத்தார்கள்
”உங்க நிஜத்தப்பத்தி எனக்கு அக்கரை இல்லை. கோர்ட்டுல நான் சொல்லித்தராமாதிரி சொல்லணும்”
”சரிங்க மொதலாளி!”
இரண்டு வாரம் கடந்த ஒரு திங்கக்கிழமை
கோர்ட் ஆஜராகி இருந்தது.
கூண்டில் அருகருகில் க்ராப் குமாரும் மதிவாணனும். ப்ராஸிக்யூட்டர் சகாயம் கோபமாக, அதோடு பயந்தும் இருந்தார்.
ரங்கதுரைக்கு எதிராகவா? என்னவாக இருக்கும் அவருடைய ப்ளீ?!”
ஜஸ்டிஸ் ஆராமுது இருமிவிட்டு ஒரு முறை தண்ணிர் குடித்துக்கொண்டார்.
.
“ரங்கா! ஐயம் சர்ப்ரைஸ்ட்! இவனுங்களுக்கு நீங்களா? ரிபீட் ஆஃப் லாஸ்ட் மந்த் ரேப் கேஸ்?”
”மை லார்ட்! நீங்கள் ப்ரீ ஜட்ஜ் செய்கிறீர்கள்!”
”கம்மான் ரங்கா! ஐ நோ யூ நோ! ஓகே, லெட் அஸ் பிகின்!”
”சகாயம்! என்ன உங்களுடைய லைன்?”
”அஸால்ட், இண்டென்ஷனல் மர்டர் ஃபார் கெயின், மை லார்ட்!”
307ஆ? அண்ட், ”ரங்கா! நீங்க?”
மே பீ! ஆனால் என் கட்சிக்காரர்கள் மீது ப்ரைமா ஃபேஸி கேஸே இல்ல”
“நேரில பாத்த சாட்சி இருக்கு. அன் அஸைலபிள்!”
”பார்ப்போம்!”
சட்ட வார்த்தைகளும் கிண்டல்களும் கோபங்களும், ஜோக்குகளும் சிதறிய கேஸ். சகாயம் ரங்கதுரைக்கு ஈடே இல்லை.
கட்டாத சைடு!
க்ராப் குமாரும் மதிவாணனும் ஸ்தலத்திலேயெ இல்லை என்று வாதாடினார். சுப்புக்குட்டி ரங்கதுரயைப்பார்த்து குழறி, உளறினான். முன்னுக்குப்பின் முரணாக பேசி குழப்பினான். அவனை ரங்கதுரை போட்டுக்குடாய்ந்தார்.
சனிக்கிழமை அன்று மதியம் மூணு மணிக்கு இருவரும் கடைக்கு வந்து பெப்ஸி குடித்ததனால் முகக்குழப்பம் ஏற்பட்டு அவர்கள் தான் என்று தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டார் என்று சுப்புக்குட்டியே ஒத்துக்குமளவுக்கு பேசினார். மேலும் சீக்கிரம் அரஸ்ட் செய்யவேண்டும் என்கிற டென்ஷனில் சாமிக்கண்ணுவும் சுப்புக்குட்டியை கட்டாயப்படுத்தியதாக ஜோடித்தார்.
இந்த பதட்டத்தில் சுப்புக்குட்டி ஒரு மாதிரி காமாசோமாவெனப்பிறழ, அதையே சாக்காக வைத்துக்கேசை உடைத்து விட்டார்.
மிகுந்த அலுப்புடன் ஜஸ்டிஸ் ஆராமுது, “ரங்கா யூ ஆர் அட் இட் அகயின்” என்று கேசைத்தள்ளுபடி செய்து விட்டு சாப்பிடப்போய்விட்டார். அன்னிக்கு சாயங்காலம் அவர் ஒரு தமிழ்ச்சங்கத்தில் ஆழ்வார்கள் பற்றிப்பேசவேண்டும்.
சாமிக்கண்ணுவிற்க்கு ஏமாற்றம், இயலாமை.
அங்கே ரங்கதுரை தன் ஜூனியர் புடை சூழ வெற்றி நாயகனாக வர, சாமிக்கண்ணுவுக்கு தாங்க முடியவில்லை.
ரங்க துரையை ஜூனியர்களுக்கு நடுவில் நிறுத்தி, “ஏன் சார்!. இறந்தவர் ஒரு ராணூவ வீரர் என்பது தெரியுமா? சட்டத்தை காப்பற்றத்தான் உங்களுக்கு மனசில்ல. இந்த மாதிரி ரவுடிகளை விடுவித்து மறுபடி மறுபடி சமூகத்துக்கு கேடு செய்கிறீர்களே!”
”இன்ஸ்பெக்டர்! ஜாக்கிரதையாகப்பேசுங்க! யார் கிட்ட” என்று அவரின் ஜூனியர்கள் மிரட்ட, ஒரு சின்ன கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.
சாமிக்கண்ணு விடாமல் ரங்கதுரையிடம் ”ஒரே ஒரு காரணம் சொல்லுங்க சார்! நீங்க ஏன் இந்த கழிசடைகளைக்காப்பாத்தினீங்க?”
ரங்கதுரை புன்னகைக்க மறக்காமல், “நீதி ஜெயிப்பதற்க்காக, சாமிக்கண்ணு” என்று கண்ணடித்தார்.
சாமிக்கண்ணு, “யூ ஸ்டிங்க்!” என்று கத்த, ஜூனியர்கள் கொந்தளிக்க, கான்ஸ்டபிள் ஜோசஃப் அவரை அணைத்து நகர்த்தி ஜீப்புக்கு அழைத்துக்கொண்டு போனார்.
இத்துடன் கதை முடிகிறது. ஆனால் ஒன்றிரண்டு சம்பவங்களைச்சொல்லியாக வேண்டும்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளச்சேரி ஸ்டேஷனுக்குப்பின்புறம் வரண்டு குப்பையும் கூளமுமாய்க்கிடந்த பழைய பக்கிங்ஹாம் கால்வாயின் ஓரத்தில் இரண்டு உடல்கள் குரூரமாக சிதைக்கப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டன. சாமிக்கண்ணு பார்த்தவுடன் அவை க்ராப் குமாரும் மதிவாணணும் என்று சொல்லிவிட்டார்.
அன்று ஆஃபீஸில் நுழைந்த ரங்கதுரை தான் மானெக்க்ஷாவிடம் விருது வாங்கும் ஃபோட்டொவை எடுத்து தன் கையாலேயே துடைத்தார். தனக்கு முன் விருது வாங்கி, சிரிப்புடனும் மரியாதையுடனும் பின்னால் நின்று கொண்டிருக்கும்கார்ப்பொரல் தினகரன் முகத்தை ஒன்றிரண்டு வினாடிகள் பார்த்துவிட்டு மாட்டினார்.
புதனன்று மதியம் கார்ப்போரல் தினகரன் சின்ன ராணுவ மரியாதையுடன் எரிக்கப்பட்டார். ராணுவ உதவியாளர்கள் தவிர வந்திருந்த இருவரில் ஒருவர் டாக்டர், மற்றவர் வக்கீல்.
முடிகிறது

Thursday, 15 February 2018

இன்றைய கதையரங்கம் (1 ஃபிப்ரவரி, 2018)

“கணேசன் சார்! மானேஜர் கூப்பிடறார்!”

“இரப்பா! இப்பத்தான் காஷ் டாலி ஆச்சு! இன்னிக்கு என்ன கூட்டம் என் கௌண்டர்ல, பார்த்தயில்ல?! சாப்பிட்டுட்டு வரேன்னு சொல்லு!”

“இல்ல சார்! மருதண்ணன் வந்திருக்கார்! மானேஜர் ரூம்புல இருக்கார்! அவர் விஷயமா ஏதோ பேசணுமாம்! உடனே வாங்க!”

“ம்..வரேன் வரேன்! நேஷலைஸ்டு பாங்குன்னுதான் பேரு! ஆனா மானேஜர்தான் ராஜா! நாமெல்லாம் அடிமைதானே!”

“சொல்லுங்க சார்! கூப்ட்டேளாமே?”

“சார் யாருன்னு தெரியுதில்ல? நம்ம மருதண்ணன்! அவர் லாரி காண்ட்ராக்டோட முழு அக்கவுண்டு நாம் பிராஞ்சுலதான்!”

“ஓ சாரைத்தெரியாதா? தினம் நாந்தானே மாரிமுத்துகிட்ட கேஷ் குடுத்தனுப்பறேன்!”

“ஓ நீங்கதான் காஷியர் கணேசனா? மாரி ரொம்பச்சொல்லுவான்! நீங்க நல்ல உதவின்னுட்டு!”

“உதவியெல்லாம் இல்ல சார்! என்னோட வேலையே அதானே!”

“கணேசன்! நம்ப மருதண்ணனுக்கு ஒரு புது கவர்மெண்ட் காண்டிராக்ட் கெடச்சிருக்கு! அதுக்கு தினம் ஆறு ஏழு லட்ச ரூவா வரைக்கும் கேஷ் புரளணூம்! காலையில குடுத்துட்டா சாங்காலம் நாலு மணிக்குள்ள மருதண்ணன் அதத்திருப்பிடுவாரு!”

“பண்ணலாமே! நீங்க இவாளுக்கு ஒரு ஓவர்டிராஃப்ட் சாங்க்ஷன் பண்ணிடுங்க! லிமிட்டுக்குள்ள கேஷ் எவ்வளவு வேணா டிரா பண்ணிக்கலாமே!”

”அதுலதான் சிக்கல் கணேசன்!”

“என்ன சார் சிக்கல்?”

“அண்ணனுக்கு லிமிட் இல்ல. நான் குடுத்த புரோபோசலை ஹெட் ஆஃபீஸ்ல ரிஜக்ட் பண்ணிட்டாங்க!”

”அடேடே! அப்ப நாம ஒண்ணும் பண்ண முடியாதே சார்!”

“அதுக்குதான் நம்ம உதவியக்கேட்கக வந்திருக்கார் அண்ணன்!”

”சொல்லுங்க சார்?”

“டெய்லி நாம் பிராஞ்ச் கேஷ் பன்னண்டு லட்சம் வரைக்கும் புரளுதே! காலையில ஒம்பதரைக்கு பிராஞ்ச் ஓப்பன் பண்ணும்போது மாரி வருவார். அவர்ட்ட ஏழோ எட்டோ லட்சம் கேஷ் குடுத்துடறது. சாயங்காலம் நாலு மணிக்கு கேஷ் குளோஸ் பண்றதுக்குள்ள திருப்பிடுவாரு! நீங்க தினம் கேஷ் ஓப்பன் பண்ணி குளோஸ் பண்றதுக்குள்ள புரண்டுடும்! இந்த சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக்க மருதண்ணன் நமக்கு மாசம் பத்தாயிரம் தந்துடறேங்கறாரு! என்ன சொல்றீங்க? சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்டுதானே?”

“சார்! தப்பு சார்! சர்ப்ரைஸ் செக்கிங் வந்தா நாம மாட்டிக்குவோம்!

“அடேடே! ஒண்ணுங்கவலைப்படாதீங்க கணேசன்! இங்க செக்கிங் வ்ர்ரதுக்குள்ள நா மருதண்ணனுக்கு ஃபோனப்போட்டேன்னா அவர் உடனே கேஷக்குடுத்து அனுப்பிடுவாரு! அதெல்லாம் ஒரு பிராப்ளமும் வராம நா பாத்துக்கறேன்! என்ன மருதண்ணே?”

ஆமா ஆமா! நீங்க உதவி பண்ணும்போது நா விட்டுக்கொடுத்துடுவேனா? உங்க செக்கிங் ஆசாமிங்க உள்ர வந்து உட்க்கார்ந்து காபி குடிக்கறதுக்குள்ள பணம் உங்க கேஷ் பெட்டிக்கு வந்துராது!?

“இல்ல மானேஜர் சார்! என்னால இத அனுமதிக்க முடியாது! இது துரோகம்! நா பண்ண மாட்டேன்! சாரி!

“கணேசன்! யோசிங்க! நாம் செய்யலேன்னா மருதண்ணன் இன்னொரு பிராஞ்சுக்கு போய் சாதிச்சுக்குவாரு! உங்களுக்கும் எனக்கும்தான் நஷ்டம்!”

“சார்! இந்த தப்பான பணம் எனக்கு வேண்டாம்! நா ஒப்புக்க மாட்டேன்! மறுபடி சாரி! என்ன விட்டுடுங்க! நா வரேன்!

”சரி விடுங்க! நா அஷோக் நகர் பிராஞ்சுல பாத்துக்கறேன்! இந்த காஷியர் இருந்தா நீங்க பொழக்க முடியாது மானேஜர் சார்! பாத்துக்குங்க! நான் வரேன்! வாடா மாரி!”

ப்யூலா! இன்னிக்கு கேஷ் வாங்கணும்னு சொன்னேனே!

“ஆமா புரொஃபசர்! செக் எங்கிட்டதான் இருக்கு! இன்னும் ஹாஃபனவர்ல நா பாங்குக்கு போய்ட்டு வந்துருவேன்!

“ஓகே! அவினாஷ வரச்சொல்லிட்டு நீ போ!”

”இந்தாங்க கேஷ்! பதினெட்டாயிரம்!”

”என்ன ப்யூலா இருவத்தி நாலாயிரம் இருக்கு!”

”என்னது? இருவத்தி நாலாயிரமா?”

”ஆமா, இதோ பார்!”

அய்ய்ய்யோ! ஐநூறு ரூவாய்னு நெனச்சு காஷியர் நாலு ரெண்டாயிர ரூவாய் நோட்ட தந்துட்டாரு!

“ப்யூலா! வாட் இர்ரெஸ்பான்ஸிபிளிடி! புவர் காஷியர்! உடனே கிளம்பு! நானும் வரேன்! அவன் பயந்து போயிருப்பான்! ஆறாயிரம் ரூபா ஷார்டேஜுனா சும்மாவா? “அவினாஷ்! யூ டேக் கேர் ஆஃப் எனி எமர்ஜென்ஸி! ஐ வில் பி பேக் இன் 20 மினிட்ஸ்!”

“ சார்! என்னைக்காப்பத்தினீங்க சார்! என் வேலயே போயிருக்கும்! ஆறாயிர ரூபா மிஸ்ஸிங்குன்னு பார்த்துட்டு செத்துட்டேன் சார்!” ரொம்ப தாங்க்ஸ் சார்! இதுக்காக நீங்களே வந்தீங்க! யு ஆர் கிரேட் சார்!”

”என்ன பிராப்ளம் கணேசன்? யாரு சார்?”

“ஒண்ணும் பிராப்ளம் இல்லை மானேஜர் சார்! கேஷ் அதிகமா குடுத்துட்டாரு! அதத்திருப்பிக்குடுக்க வந்தேன்!”

”என்னது கணேசன் ஆறாயிரம் ரூபா அதிகமா குடுத்துட்டாரா? மை காட்! என்ன கணேசன் இது மாதிரி கேர்லெஸ்ஸா இருக்கீங்க?”

“மானேஜர்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல! அதான் நா திருப்பி கொடுத்துட்டேனே! பரவாயில்ல. தப்பு ஏற்படறது சகஜம் தானே!”

“வாட் டு யூ மீன்? என்ன தெரியும் உங்களுக்கு எங்க பேங்க் ரூல்ஸ் பத்தி! நீங்க கெளம்புங்க! கணேசன்! என் ரூமுக்கு வாங்க!

”புரொஃபஸர்! அந்த காஷியர் கணேசன் உங்களப்பாக்கணூம்னு வந்திருக்காரு!”

”வரச்சொல்லு!”

”சார்!”

”என்ன கணேசன்! பதட்டமா இருக்கீங்க! என்ன ஆச்சு?”

”சார் என் வேலபோச்சு சார்!”

”வாட்? ஒய்? அதான் கேஷ சரி பண்ணியாச்சே?”

”இல்ல சார்! அந்த பாங்க் மானேஜருக்கு எம்பேர்ல வெறுப்பு சார்!......
…………..”

”மை காட்! பாங்குல்ல இப்படியெல்லாம் கூட நடக்குமா?”

“இத விட மோசமான ஃப்ராடெல்லாம் நடக்கறது சார்! நா பெரிய சம்சாரி சார்! வேல இல்லாம திண்டாடப்போறேன்! உங்களூக்குத்தெரிஞ்ச எடத்துல ஏதாவது, சின்ன வேலயா இருந்தாக்கூட பரவாயில்ல! நான் செய்யறேன் சார்! “

“ம்ம்ம்ம்! ஓகே! lலெட் மீ திங்க்! ப்யூலா!”

”இந்தாங்க ஸ்வீட்?”

“எதுக்கு?

“நீங்க என்ன இங்க சேர்த்துண்டு இன்னியோட மூணு வருஷம் ஆறது?”

“ஓ அப்படியா? குட்!குட்!”

“நீங்க மட்டும் அன்னிக்கு என் ஒதவிக்கு வரலைன்னா எம்பாடு ரொம்பத்திண்டாட்டமா போயிருக்கும்! என் குடும்பமே…!”

“நிறுத்துங்க கணேசன்! இதென்ன சும்மா சும்மா? ஏதோ ஒருவிதத்துல நா உங்க பாங்க் வேல போக நான் காரணமாயிட்டேன். அதுக்கு என்னாலான காம்பென்சேஷன்! விடுங்க! வேல பிடிச்சிருக்கா?”

“எவ்வளவு மரியாதையா நடத்தறேள்! இங்க எத்தன சேவை நடக்கறது! நா பாங்குல வாங்கின அதே சம்பளம் தரேள்! வேலைக்கு வேலை! மனசுக்கு திருப்தி! இதுக்கு மேல என்ன வேணும்! பாங்க் வேல போனதே நல்லதுதான்!”

“ஓகே ஓகே! நீங்க போங்க! ஆஸ்க் அவினாஷ் டு கம்!”

”அவினாஷ்! பெட் நம்பர் ஃபோர்ட்டீன்! அமினோடிரான்ஸ்ஃபெரேஸ் டெஸ்ட் ரிப்பொர்ட் ரெடியா? ப்ளட் பாங்க் ஸ்டாக் செக் பண்ணினியா? ப்யூலா! எண்டொக்ரினாலஜிஸ்ட் வந்தாச்சா? சவரி! எங்க போனே? இதென்ன ஹாஸ்பிடலா இல்ல ஹோட்டலா? சாம்பார் வாசனை அடிக்கறது! கிளீன் இட்! க்விக்!”

டாக்டர் வைகுண்டம் விறு விறுவென பெட் நம்பர் பதினாலுக்கு நடந்து போனார்.

வ வே சு அய்யர் மற்றும் வை மு கோதைநாயகி அம்மாள் கதைகளில் போல கணேசன் “விக்கித்துச்சிலையாக” நின்றார்!