கதையரங்கம் இந்த வாரம் (27 ஏப்ரல் 2018) ஒரு நாள் முன்னதாகவே.......
ஏறக்குறைய நியாயம்
பெரியவர் கையை சோப்பால் கழுவிக்கொண்டார். மறுபடியும் படுக்கைக்கு அருகில் வந்து சற்று முன் ஆபரேட் பண்ணின ஆசாமியின் மானிட்டரை உற்றுக்கவனித்தார்.
“அவினாஷ்! கீப் ய வாட்ச்! ஹார்ட் பீட்டை க்ளோசா கவனி! நோ செஸ்ட் வூண்ட் இன்ஃபெக்ஷன்! மைண்ட் யூ, ஹி ஈஸ் ய சிஏபிஜி கேஸ்!”
“எஸ் டாக்டர்!”
டாக் டாக்கென்று நடந்து காரிடார் வந்தார். ஒரு நிமிஷம் லிஃப்ட் முன்னால் தயங்கி நின்றுவிட்டு மீண்டு எதிர்த்திசையில் நடந்தார்.
“ப்யூலா! லெட்ஸ் வாக் டௌன்!”
தன் பாரியான உடலைத்தூக்கிகொண்டு ப்யூலா பின்னாடியே ஓடினாள்.
“ப்ரீ நேடல் கேர்ல சுமதி வந்தாச்சா?”
“வந்துட்டாங்க புரொஃபஸர்!”
“அவங்க அம்மாவுக்கு எப்படி இருக்காம்?”
“தெரியல டாக்டர்!”
“ஆஸ்க் ஹர் ப்யூலா! அடுத்த வாரம் என்னை வந்து பாக்கச்சொல்லு!”
”ஓகே டாக்டர்”
”ப்ளட் பாங்க் ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் வந்தாச்சா?”
“இன்னும் இல்ல!”
“கால் லக்ஷ்மண்! என்ன வெட்டி முறிக்கற வேலை இதைவிட அவனுக்கு!”
”ஓகே டாக்டர்!”
“ ந்யூரோசயன்ஸ்ல பிராஜக்ட் ரிப்பொர்ட் ரெடியாமா?”
“இன்னிக்கு ஈவினிங் உங்க கிட்ட அப்பாயிண்ட் மெண்ட் இருக்குன்னு நிர்மலா காலையில சொன்னாங்க டாக்டர்!
“யெஸ்! லெட் ஹர் கம் அட் ஃபோர் ஓ க்ளாக் டுடே!”
முதல் மாடி மெஸ்ஸனைனில் எமர்ஜென்ஸி வார்டில் கூட்டம் அம்மியது. மாடிப்படிக்கு அருகே இரண்டு மூன்று போலீஸ்காரர்கள்.
“என்ன இங்க? ஏது போலீஸ்?”
“இதோ கேக்கறேன் சார்!”
இரண்டே நிமிடங்களில் ப்யூலா வந்து மூச்சிரைக்க நின்றாள்.
“கிராப் குமார அட்மிட் பண்ணியிருக்காங்க டாக்டர்!”
“என்ன பேரு இது? கிராப் குமாரா? யார் அவன்?”
டாக்டர்! போன மாசம் அந்த எட்டு வயசுப்பொண்ண ரேப் பண்ணி கொலை பண்ணினதா பிடிச்சாங்களே அவந்தான்!”
“ஓ தட் புரூட்! என்ன ஆச்சாம் அவனுக்கு? வெயிட், நானே வரேன்!”
“இன்ஸ்பெக்டர்! இதோ டீனே வ்ர்ராரு!”
“சார்! நான் இன்ஸ்பெக்டர் கதிரவன்! கிராப் குமார அட்மிட் பண்ணியிருக்கோம். நானே உங்கள வந்து பாக்கணூமின்னு இருந்தேன். ஐ ஜி உங்க கிட்ட சொல்லச்சொன்னாரு!
“என்ன ஆச்சு இன்ஸ்பெக்டர்? கஸ்டடியில் அடிச்சீங்களா?”
“மிருகம் சார் இவன்! எட்டு வயசுப்பொண்ண..ச்ச்ச்ச்! நீங்க பாத்திருக்கணூம் அந்தக்குழந்தைய சாக்குப்பைக்குள்ளார போட்டு……”
“அடிச்சீங்களா?
“பின்னிட்டோம் சார்! எனக்குத்தெரிஞ்சு முதுகெலும்ப பேத்துட்டோம்னு நெனைக்கிறேன்!”
“அப்புறம் இங்க கொண்டு வந்து போட்டு நான் ட்ரீட்மெண்ட் குடுக்கணூமா? உங்களுக்கு யாரு இதுக்கெல்லாம் பர்மிஷன் தர்ராங்க!”
”ஐ ஜியே முடிஞ்சா தீத்துருங்க இவனன்னு சொல்லிட்டாருங்க! அந்த அளவுக்கு சேதம் பண்ணியிருக்கான் அந்த பாப்பாவ!”
” அதுக்கெல்லாம் நமக்கு உரிமை கிடையாது இன்ஸ்பெக்டர்! ப்யூலா! அட்மிட் ஹிம் இன் எமர்ஜென்ஸி ஐ சி யூ! கால் நரசிம்மன்! யாரு இன்னிக்கு ஆர்த்தொல ட்யூட்டி?
“பட்டாபிராமன் டாக்டர்!”
“குட்! உடனே வரச்சொல்லு! ந்யூரோலேர்ந்து நிர்மலாவையும் கூப்பிடு! ஐ வாண்ட் ப்ரோக்நோஸிஸ் இன் ஆல் டைரக்ஷன்ஸ்!”
டாக்டர்கள் கூட்டம் கூடுதல், எல்லா டெஸ்டுக்கான சாமக்கிரியைகள் வந்து சேர அவற்றை பொருத்தி ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்டும் ஒரு டெஸ்டைச்செய்ய கிராப் குமார் வலி தாங்காமல் முனகினான்.
“மை காட்! என்ன அடி அடிச்சிருக்காங்க! இன்ஹ்யூமன்! பிரைமரி ட்ரௌமா தாண்டி பையோகெமிக்கல் காஸ்கேடுனால டிஷ்யூ டாமேஜ் ஆகியிருக்கே!”
அடுத்த ஒரு வாரம் பெரியவரே நேரில் மேற்பார்வை பார்த்தார். ஒவ்வொரு டாக்டரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்.
“நிர்மலா! பார்த்தியா? டெர்மடோமை விட மையோடோம் டாமேஜ் அதிகம்!”
“ஆமாம் புரொஃபசர்! அவன செடேஷன்லேர்ந்து இன்னமும் எடுக்க முடியல! வலி தாங்காம கதறரான்!”
நோ நோ! கீப் ஹிம் செடேட்டெட்! பாவம் வலி கொன்னுடும்!”
“பட்டாபி! போன் கண்டிஷன் எப்படி இருக்கு?”
“டிபியா ஃபிபுலா ஃப்ராக்சர் டாக்டர்!”
”கண்டிஷன்?
”கொயட் சிவியர்!”
”ஃபெமூரே அடி வாங்கியிருக்கு! செமத்தியா அடிச்சிருக்காங்க!”
இரண்டு வாரங்களுக்குப்பிறகுதான் கிராப் குமார் சுய நினைவுக்கு வந்தான்.
“டாக்டர்! கேஸ் ரொம்ப ஹை புரொஃபைலாயிடுத்து! பேப்பர்லயும் டீவிலயும் கிழி கிழின்னு கிழிக்கறாங்க! அடுத்த வாரமே ஹைகோர்ட்டுல வந்துடும்! இவன டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா?’
“அவனுக்கு நல்ல ரோபஸ்ட் ஹெல்த்! உங்க அடியையும் மீறி பொழச்சிட்டான்!”
“அவன அப்படியே கொன்னிருக்கணூம் டாக்டர்! இவனுக்கெல்லாம் பாவமே பாக்கக்கூடாது!
”நோ இஸ்பெக்டர்! சட்டம்னு ஒண்ணு எதுக்கு இருக்கு? நாமளே கையில் எடுத்தா அனார்க்கிதான்! எனி வே, அடுத்த வியாழந்தானே கேஸ்? புதன் சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்!”
ஓகே டாக்டர்!
புதன் கிழமை மாலை டிஸ்சார்ஜ் ஆகும்போது கிராப் குமாரைப்பார்க்க பெரிய டாக்டர் வரவில்லை. ப்யூலா வந்து சொன்னாள்
“டிஸ்சார்ஜ் ஆகிப்போய்ட்டான் புரொஃபசர்! இன்னம் நிமிர முடியல! கூனி மாதிரிதான் நடத்தி கூட்டுட்டு போறாங்க! ”
“ஓகே! மருதநாயகம் கேஸ் என்ன ஆச்சு? யூரோடைனமிக்ஸ் ரிஸல்ட் வந்தாச்சா?”
“இதோ பாக்கறேன் புரொஃபஸர்! இன்ஸ்பெக்டர் கதிரவன் வந்திருக்காரு! ஒரு நிமிஷம் உங்களப்பாக்கணுமாம்!”
“யெஸ் இன்ஸ்பெக்டர்?”
”கிராப் குமார டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம் சார்! ஐ ஜி உங்களுக்கு தாங்க்ஸ் சொன்னாரு! நான் தான் சொல்லப்போறதில்ல! இவனுக்கெல்லாம் நல்ல சாவு வரக்கூடாது டாக்டர்!”
”அத நீங்களும் நானும் முடிவு பண்ணக்கூடாது இன்ஸ்பெக்டர்! சட்டம் தான் முடிவு பண்ணனும்!”
“என்ன சட்டம் டாக்டர்! எத்தன ஓட்டை இருக்கு அதுல! நாளைக்கி கேஸ்! தண்டனை கிடைக்குமோ இல்ல இவனும் மத்தவங்க மாதிரி சாமர்த்திய வக்கீலோட பேச்சால சாட்சியம் போறலைன்னு வெளியே வந்துடுவானோ! இந்த ஹ்யூமன் ரைட்டுன்னு ஒரு கயவாளிக்கூட்டம் வருவாங்க! தொல்லை டாக்டர்! நீங்க ட்ரீட் பண்ணாம அவன இங்கியே முடிச்சிருக்கணூம்!”
”ஓ நோ இன்ஸ்பெக்டர்!”
”சாரி டாக்டர்! அவ்வளவு கோவமா வருது! நீங்க அந்தக்குழந்தையோட பாடியப்பார்த்திருக்கணும்! எட்டு வயசு! அதப்போய்…? எப்படி மனசு வரும்! பாஸ்டர்ட்! சாரி டாக்டர்!”
“ஓகே! உங்க வெறுப்பு புரியறது! ஆனா நான் டாக்டர்! என் வேல உயிரைக்காப்பாத்தறதுதான்! மீதியெல்லாம் அந்த ஸ்ரீரங்கத்துக்காரன் பார்த்துப்பான்!”
“என்ன கடவுளோ டாக்டர்! இருந்திருந்தா அந்தக்குழந்தைக்கு இப்படி ஒரு கதி வந்திருக்குமா?”
“சரி, இன்ஸ்பெக்டர்! வில் யூ நௌ லிஸன் டு மீ கேர்ஃபுல்லி!”
“எஸ் டாக்டர்?”
“ நாளைக்கு வரப்போற கிராப் குமார் கேஸுல நீங்கதானே ட்யூடி ஆஃபிஸர்?”
“எஸ் டாக்டர்!”
“இந்தக்கேஸுல அவனுக்கு தூக்கு தண்டனைக்கு கம்மியா கெடைக்கக்கூடாது! ஒரு ஓட்டை கூட விடாம கேஸ நடத்தி முடிக்கணும் நீங்க! டோண்ட் லீவ் எனி லூப் ஹோல்! ஐ ஜிகிட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க! கெட் தெ காபிடல் பனிஷ்மெண்ட் ஃபார் திஸ் ப்ரூட்!”
டாக்டர் வைகுண்டத்தின் குரலில் இருந்த ரௌத்திரமும் வார்த்தைகளின் தடித்த ஒலியும் அவர் பல் கடித்த முறுக்கும் இன்ஸ்பெக்டர் கதிரவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ”காபிடல் பனிஷ்மெண்ட்” என்று உச்சரித்த வார்த்தையும் அவர் ஃபோனை வைத்த சத்தமும் வெடி போலக்கேட்டது.