இந்த வாரக்கதையரங்கத்தில் (20 ஏப்ரல், 2018)...
சந்திரிகா என்னும் கிருஷ்ணம்மாள்
---------------------------------------------------------
தீபாவளி லீவுக்கு அடுத்த நாள் எல்லோரும் கலர் டிரெஸ்சில் வந்திருந்தபோதுதான் அந்தப்பரபரப்பு ஏற்பட்டது.
"மனோகர் கிருஷ்ணம்மாளுக்கு லவ் லெட்டர் கொடுத்துவிட்டான்".
அதிர்ச்சியைவிட எங்களுக்கு சிரிப்பும் ஆச்சரியமுமே உண்டானது.
மனோகரா, அதுவும் கிருஷ்ணம்மாளுக்கா?
எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் எஸ் எஸ் எல் சி வகுப்புகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் அப்பாக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றாலும், நான் ஒரு கோடி காட்டிவிடுகிறேன்.
எங்களுடையது கோ எஜுகேஷன். ஆங்கில மீடியத்தில் நாங்கள் மொத்தம் முப்பது பேர்தான், அதிலும் பெண்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. காந்தி நகரில் மூலையில் இரண்டு அழுக்கு குட்டைகளின் மத்தியில் கூரை வேய்ந்த அரைச்சுவர் கட்டிடங்களைக்கொண்ட பள்ளிக்கூடம். பத்தாவதில்தான் டேபிள் சேர், அதற்கு முன்பெல்லாம் குமாஸ்தா பெஞ்சுதான். கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுமே தமிழில்தான் பாடம் எடுப்பார்கள். ஹெட்மாஸ்டர் எஸ்வி டி சார் எப்பவாவது கிளாஸ் எடுத்தால் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் பேசிக்கொல்லுவார்!
சரி, இப்போது லவ் லெட்டர் பற்றி.
மனோகர் ஒரு வேடிக்கையான சாதாரணன். பார்க்க ரொம்ப சின்னவனாக இருப்பான். அவன் முகம் சற்றே சூம்பினாற்போல் இருக்கும். ஆனாலும் ஒரு துரு துரு களை உண்டு. எஸ் எஸ் எல் சியிலும் கூட அரை டிராயர்தான் போட்டுக்கொண்டு வருவான். அப்படி ஒன்றும் படிப்பில் சூடிகை இல்லை என்றாலும், நிறைய ஞாபக சக்தி உண்டு. கிரிக்கெட் வெறியன். அதிலும் ஸ்கோர் விவரம், யார் எவ்வளவு ரன், விக்கெட் மட்டுமில்லாது, ஓவர் ரேட், மெய்டென் ஓவர், போன்ற சில்லறை விவரங்களும் அவனுக்கு அத்துப்படி.
"நைன்டீன் சிக்ஸ்டியில் மெல்பேர்னில் பிரசன்னா ஆறு விக்கெட் எடுத்தார், வித் ஒன்லி 28 ரன்ஸ்" என்பான்.
அவனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடைய நடக்கும் ஸ்கோர் விவரம் பற்றிய விவாதங்கள் ரொம்பவுமே வேடிக்கையானவை. வெங்கடராகவன் ஆறு ஓவர்தான் போட்டார், இல்லை, ஏழு ஓவர் என்று அரை மணி நேரம் சண்டை போடுவார்கள். பிறகு லைப்ரரிக்கு ஓடி அந்த நாள் பேப்பரைப்பார்த்த பிறகே விவாதம் முடிவுக்கு வரும்!
மனோகருடைய உலகம் ரொம்ப சின்னது, அதில் பெண்கள், லவ் போன்றவைக்கு இடம் இல்லை என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.
கொஞ்சம் கிருஷ்ணம்மாள் பற்றியும் சொல்லலாம்.
அது என்ன சந்திரிகா என்றால், அந்தப்பெண்ணுக்கு கிருஷ்ணம்மாள் என்றுதான் ஸ்கூல் ரிகார்டில் பெயர். பாவம், ஏதோ ஆந்திராவில் ஒரு மூலையில் இருந்த கிராமத்தில் உள்ள அதன் பாட்டி பெயரை வைத்துவிட்டார்கள் போல. அது ஆறாவதிலேயே எங்கள் ஸ்கூலுக்கு வந்து விட்டது. வந்த அன்னிக்கே, வத்சலா டீச்சர் அவள் பெயரைச்சொன்னவுடன் சிரித்துவிட, அதற்கு கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது. உடனே, " எனக்கு வீட்டில் சந்திரிகா என்று பெயர்" என்று அவசரமாக சொன்னது. ஆனாலும் நாங்கள் "கிருஷ்ணம்மாள்" என்றுதான் எங்களுக்குள் விளித்துக்கொள்வோம்.
அப்போதெல்லாம் நேருக்கு நேர் பெண்களுடன் பேச்சு வார்த்தை கிடையாது. ஓரக்கண் பார்வைதான், அதுவும், ஒன்றிரண்டு பேர் மட்டும்தான்.
இந்த கிருஷ்ணம்மாள் இருக்கிறதே, அதுவே கிட்டத்தட்ட மனோகர் போலதான், ரொம்ப சின்ன சைஸ் ஏரியல் யூனிகோட் ஃபாண்ட் மாதிரி இருக்கும். உயரம் என்ன, மிஞ்சினால் நாலரை அடிக்கு மேல் தாண்டாது. மரப்பாச்சி போல கொஞ்சம் மாநிறமாக இருக்கும். எஸ் எஸ் எல் சியிலும் பாவாடை சட்டைதான், தாவணி போடும் அளவுக்குக்கூட பெரியவளாக இருக்காது. ஹீரோயினுக்கு பர்மனண்ட் தோழி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! எப்போதும் ராஜியுடனே இருக்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த ராஜி நல்ல வளர்த்தியாக உயரமாக இருப்பாள். ”ஜிங் ஜிங்”குவேன்று ஒரு ராயசமாக நடந்து வருவாள். தமிழ் மீடியம் பையன்கள் கொஞ்சம் துரத்துவார்கள்.
துரத்துவது என்றால் இப்போது போலெல்லாம் இல்லை. இந்திரா நகரிலிருந்து அது வரும் பஸ்சுக்காக காத்திருந்து, ஒரு பத்தடி இடைவெளி விட்டு நடந்து வருவது, ஸ்கூல் பிரேயரில் அவள் பாடி முடித்தவுடன் கை தட்டுவது போன்ற சாகசமற்ற செய்கைகள்தான். அதற்கே அது ரொம்ப பிகு பண்ணிக்கொள்ளும். ஒரு பின்னலை முன்னாலும் ஒன்றை பின்னாலும் போட்டுக்கொண்டு சரோஜா தேவி நடை நடக்கும். ஜாகரஃபி கிளாசில் நிச்சயமாக தூங்கும். இரண்டு முறை எச்சில் வழிய எழுப்பிவிடப்பட்டு " போ! மூஞ்சி கழுவிக்கொண்டு வா" என்று டிகே சார் விரட்டியிருக்கிறார்.
கிருஷ்ணம்மாள் கொஞ்சம் துடுக்கு அதிகம். சுமாரான பெண்களுக்கே உரிய தைரியம், கொஞ்சம் அலட்சியம் என்று எகிறும். ராஜியை ஏதாவது கேட்டால், இது முந்திக்கொண்டு பதில் சொல்லும். ஒரு முறை சுந்தர் ராஜியைப்பார்த்து. "உங்க வீட்டில் அரிசி எங்க வாங்கறாங்க" என்று கேட்டதற்கு, இந்த கிருஷ்ணம்மாள் பழி சண்டை போட்டு அவனை சாரி கேட்க வைத்துவிட்டது!
முதலில் சொன்ன தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூலில் எப்போதும்போல ஈயம்தான் இந்த விஷயத்தை உடைத்தான். பெல் அடித்து பிரேயர் முடிந்தவுடன், அரட்டை அடித்துக்கொண்டே கிளாசுக்கு திரும்பும்போது, எங்களில் சில பேரை இழுத்து ரகசியமாக காதைக்கடித்தான்.
“டேய்! நம்ம மனோகர் கிருஷ்ணம்மாளுக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டான்! அவ ஹெட்மாஸ்டர்ட்ட கம்ப்ளைன் பண்ணிட்டா, கண்ணாயிரம் இப்போதான் சொல்லிட்டு போறாண்டா!".
எங்களால் நம்ப முடியவில்லை. கிளாசில் மனோகர் வழக்கம் போல கிருஷ்ணமூர்த்தியிடம் ஏதோ வாதம் பண்ணிக்கொண்டு இருந்தான்.
"நட்கர்னி 50 மெய்டன் ஓவர் போட்டது நம்ம மெட்ராசில், நேரு ஸ்டேடியத்தில்தான், என்ன பெட்டு!" .
எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு கீழ்ப்பார்வை பார்த்துக்கொண்டே போய் உட்கார்ந்து விட்டோம். முதல் பீரியட் எடுக்கும் எதற்கோ "ஒக்காரை" என்று பெயர் கொண்ட ரங்கராவும் வந்து அட்டன்டன்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். கிருஷ்ணம்மாள் கடைசியில் தலை குனிந்து உடக்கர்ந்து கொண்டிருக்க, ராஜி அவளிடம் ஏதோ குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தாள்.
கண்ணாயிரம் வந்து "சார், மனோகரை ஹெட்மாஸ்டர் கூப்பிடறார்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டான். ரங்காராவ் சார் பாடம் ஆரம்பித்து விட்டாலும், எங்களுக்கு பரபரப்பாக இருந்தது. முக்கியமாக எனக்கு, ஏனென்றால், நான் கிளாஸ் லீடர். பத்தே நிமிடங்களில் எனக்கும் அழைப்பு வந்து விட்டது.
ஹெட்மாஸ்டர் ரூமில் மனோகர் அழுதுகொண்டிருந்தான். எஸ் வி டி சார் கொதித்துக்கொண்டிருந்தார்,
"உங்க கிளாசில்தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இவனுக்கு இருக்கிற பர்சனாலிடிக்கு லவ் லெட்டர் கேட்கிறதா!"
“சத்தியமா நா எழுதலை சார்” என்று மனோகர் விசும்பினான். எஸ் வி டி கையில் அந்த சரித்திரப்ரசித்தி பெற்ற லவ் லெட்டர். என்னிடம் நீட்டி இன்னும் கொஞ்சம் உயர டெசிபலில் சொன்னார்.
"இந்தா, நீதானே லீடர்? உனக்கும் தெரியணும், உங்கள் கிளாஸ் பசங்களின் லீலைகள்!. பெரிய பெருமை வேற இதுல, இங்க்லீஷ் மீடியம்னு, போக்கத்த பசங்க!"
அந்த லெட்டரை வாங்கிப்படித்தேன்.
"அன்புள்ள சந்திரி, உன் மேல் எனக்கு எப்போதுமே ஒரு இது உண்டு. உனக்கும் என்மேல உண்டா? அன்னிக்கு நீ ராஜியுடன் வரும்போது என்னையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்கும் புரிந்தது. இந்தியா டீம் பாம்பே டெஸ்டில ஜெயிச்சபோது இருந்த சந்தோஷத்தைவிட அதிகமா இருந்தது. பதில் போடறியா?"
இவ்வளவுதான்.
எனக்கு குழப்பமாக இருந்தது. மனோகரா? இத்தனை வருடங்களில், அவனுக்கு கிருஷ்ணம்மாள் மேல் ஏதும் இருப்பதற்கான அடையாளமே தென்பட்டதில்லையே?
நான் எஸ் வி டியிடம். “சார், நா வேணா மனோகரிடம் கொஞ்சம் பேசிப்பார்க்கிறேனே ?”
"என்ன வேணா பண்ணு. ஆனா அவனை இனிமே இந்த ஸ்கூலில் வெச்சுக்கறது கஷ்டம்!"
இதைக்கேட்டு மனோகர் ஒ வென அழ ஆரமித்தான்
"சார், ப்ளீஸ் கொஞ்சம் தயவு பண்ணுங்க, பாவம் சார், மனோகர்!"
"பண்ணறதையும் பண்ணிட்டு என்ன பாவம். இந்த மாதிரி விஷயத்தைஎல்லாம் முளையிலேயே கிள்ளணும்!"
"சார், ப்ளீஸ், நான் பேசிப்பார்க்கிறேன். அவனை சாரி லெட்டர் கொடுக்கசொல்றேன், டிஸ்மிசெல்லாம் வாணாம் சார்!"
“சரி, போ, அவனோட பேசு. அப்பறம் இங்க வா!"
விசும்பிக்கொண்டிருந்த மனோகரை அழைத்துக்கொண்டு தனியே வந்து ஸ்டாப் ரூமுக்குள் உட்கார்ந்தோம்.
கிளாசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ராதா டீச்சர் , "என்ன மனோகர், இப்படி பண்ணிட்டே?" என்றவுடன், "ஐயோ, நா இல்லை டீச்சர்" என்று மறுபடி அலறினான்.
அடுத்த இருபது நிமிஷமும் அவனோடு பேசினதில், நா சத்தியமா எழுதலைடா" என்றுதான் மனோகர் சொன்னான். அவன் பொய் சொல்லுவது போல் இல்லை.
ஆனால் எப்படி நிரூபிப்பது?
“சரி, இன்னிக்கு நீ வீட்டுக்கு போடா! அமைதியா இரு. வீட்ல ஒண்ணும் சொல்லாத. நா மறுபடி ஹெட்மாஸ்டர்கிட்ட பேசறேன். பயப்படாம போடா!"
அவனை அனுப்பிவைத்தேன். கிளாசுக்கு வந்தும் என்னால் பாடங்களைக்கவனிக்க முடியவில்லை.
லஞ்சின்போது, கிருஷ்ணம்மாளைப்பார்த்து, கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டதில், கண்ணைக்கசக்கிகொண்டு ராஜியுடன் வந்தது.
"இதப்பாரு, நெசமாத்தான் மனோகர் குடுத்தானா?"
"ஆமா!"
”எப்போ, எப்பிடி குடுத்தான்?"
“என்னோட டெஸ்ட் நோட்டுல வெச்சு குடுத்தான்!"
கிளாஸ் டெஸ்ட் திருத்தியபின், டீச்சர்கள், யாரையாவது ஸ்டாஃப் ரூமுக்கு அனுப்பி டெஸ்ட் நோட்டுக்களை கொண்டு வரச்சொல்லுவார்கள். மனோகரை கொண்டு வரச்சொன்னபோது அதில் வைத்திருக்கிறான் என்று கிருஷ்ணம்மாள் சந்தேகப்பட்டது.
மறுபடி ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போய் அந்த லெட்டரையும் மனோகரின் டெஸ்ட் நோட்டில் உள்ள கை எழுத்தையும் பார்த்ததில் குழப்பம் அதிகமாகத்தான் ஆயிற்று. கையெழுத்து ஒரேமாதிரி போலவும் இல்லாததுபோலவும் இருந்தது.
ஹெட்மாஸ்டரிடம் போய், " எனக்கு ஒண்ணும் புரியலை சார்" கையெழுத்து பார்த்தாலும் நிச்சயமா தெரியலை. ஆனா, மனோகர் நல்ல பையன் சார், இதுதான் முதல் தடவை, வார்னிங் குடுத்து விட்டுடலாம் சார்" என்று கெஞ்சினேன்.
"அதெல்லாம் முடியாது. அப்பறம் உன் க்ளாசிலேர்ந்து ஒத்தொத்தனாய் கிளம்புவீங்க!"
சக மாணவர்களிடம் பேசினேன். எல்லோரும் மனோகர் பண்ணி இருக்க மாட்டான் என்றுதான் நம்பினாலும் ஒண்ணும் பண்ண இயலாது என்பது தெரிந்துவிட்டது.
அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறி கிளப்பினான்.
“டேய்! நீ ராஜியோட கையெழுத்தை செக் பண்ணினியா?”
மத்தியான கிளாசில் ராமசாமி சார் என்னை அனுப்பி டெஸ்ட் நோட் எடுத்து வரச்சொன்னார். ஸ்டாப் ரூமில் இருந்த பிருந்தா மீனாக்ஷி, சுதந்திரா டீச்சர்கள் பேச்சில் மனோகர்தான். என்னைக்கண்டதும் நிறுத்தி வேறு ஏதோ பேசறமாதிரி பாவ்லா பண்ணினார்கள் .
டெஸ்ட் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு வரும்போது ராஜியின் டெஸ்ட் நோட்டில் கை எழுத்தை செக் பண்ணலாமென்று பார்த்தேன். அதற்குள்ளிருந்து ஒரு காகிதம் வெளியே விழ, எடுத்துப்பார்த்ததில் இன்னொரு லவ் லெட்டர், அதே வாசகங்களுடன், ஆனா வேறு ஒரு கையெழுத்தில்! சட்டென்று அவளுடைய டெஸ்ட் நோட்டைப்புரட்டினதில், அப்படியே ராஜியின் கை எழுத்து!
உடனே நான் ஹெட்மாஸ்டரிடம் போய் விஷயத்தை உடைத்தது, ராஜியும் கிருஷ்ணம்மாளும் முதலில் ஆங்காரமாக மறுத்து பின்னர், வேறு வழியில்லாமல் தானேதான் எழுதி அதை மனோகர் மேல் பழியாகப்போட்டதையும் ஒப்புக்கொண்டு விட்டதும் சம்பவங்கள்.
இதோடு கதை முடியவில்லை. நாங்கள் அன்று சாயங்காலமே மனோகர் வீட்டுக்குப்போய் அவனிடம் விஷயத்தைச்சொன்னோம். அவன் கிருஷ்ணமூர்த்தியைக்கட்டிக்கொண்டு புலம்பினான்.
“ரொம்ப தாங்க்ஸ் டா, உன்னாலதான் எனக்கு லைஃபே திரும்ப கிடைச்சது!"
ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ "எனக்கு அப்பவே தெரியும் அந்த லெட்டரை நீ எழுதலைன்னு" என்றது எங்களுகே ஆச்சரியம்தான்.
" எப்படிடா?"
"அந்த லவ் லெட்டர்ல பாம்பே டெஸ்ட்ல இந்தியா ஜெயித்ததுபோலன்னு எழுதியிருந்துதே!”
”ஆமா அதுல என்னடா இருக்கு?”
”அடச்சீ! கேளு! அந்த டெஸ்டில் இந்தியா எங்கடா ஜெயிச்சுது? கிளைவ் லாயிட் டபிள் செஞ்சரி அடிச்சு நாம தோத்துதானே போனோம். இந்த விஷயத்துல மனோகர் போய் எங்கியாவது இந்த மாதிரி தப்பா எழுதுவானா?"
சமீபத்தில் கிருஷ்ணமூர்த்தியைப்பார்தேன்.
மனோகரும் ராஜியும் இப்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டார்களாம். ஒரே பையன் குவீன்ஸ்லாந்து யுனிவர்சிட்டி கிரிக்கெட் டீமில் பெரிய பிளேயராம்"!
சந்திரிகா என்னும் கிருஷ்ணம்மாள் பற்றி விவரம் ஏதுமில்லை.
No comments:
Post a Comment