Thursday, 5 April 2018


மறுபடியும் அனுசூயா

இந்தக்கதையை எழுதுகிற நான், இந்தக்கதையில் வரும் நான் இல்லை. குழப்புகிறோனோ? இந்த வாக்கியத்தை வேறு மாதிரி எழுதியிருக்கலாமோ? பரவாயில்லை, உங்களுக்குப் புரிந்திருக்கும். நண்பன் அருண் சொன்னதைத்தான் நான் எழுதுகிறேன்.

இனிமேல் அருண். நடு நடுவில் நான்.

போன வாரம் சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு டிடிகே ரோடுல பேயாய் கார் ஓட்டிண்டு போனேன். அங்க ரெஸ்டாரண்ட்டுல அந்த சூபர்வைசர் கிட்டத்தட்ட அம்பது கிலோவரைக்கும் ஸ்வீட்ச எடுத்து வித்துண்டு இருந்திருக்கான். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தீத்துடறதுன்னு போனேன். நாரதா கான சபாவுக்கு முன்னாடி ட்ராஃபிக் கொஞ்சம் சிங்கி அடிச்சது. கேட்டுக்குள்ள ஒரு டயோட்டா இன்னொவா, மஞ்சள் போர்டு மாட்டின பிரைவேட் டாக்சி, உள்ள நுழைய தடுமாறிண்டு இருந்தது. ”என்ன எழவுக்குடா டாக்சி ஓட்ட வந்தேன்னு டிரைவரைத் திட்டிண்டே இருந்தவன், அப்படியே ஸ்தம்பிச்சுட்டேண்டா!”

என்ன ஆச்சு? காருல ஏதானும் சினிமா ஆக்டரா?”

நீயும் உன் ரசனையும்! நீயெல்லாம் என்னத்த எழுதறேன்னு நெனச்சிண்டு இருக்கே! பின் சீட்டுல பொண்ணு. மஹா அழகி!

!

என்ன ஓ! நீ நெனக்கற மாதிரி பொண்ணுல்லடா! அழகுன்னா அதுதான் அழகு! என்ன கலர்! என்ன லக்ஷணம்! அந்த மாதிரி அழகெல்லாம் இப்ப இந்த உலகத்திலேயெ ஜாஸ்தி கெடையாது, அப்பேர்ப்பட்ட அபூர்வ அழகுடா! இன்னோவா நாரதா கான சபாவுக்குள்ள நுழஞ்சபோதே பின்னடியே நானும் நுழஞ்சுட்டேன்!

அப்போ ஹோட்டல் ப்ராப்ளம்?

அதப்பத்தி ஒனக்கென்ன, கதையைக்கேளுடா!

நா என் காரை நிறுத்தறத்துக்குள்ள அவ இறங்கிட்டா. அப்படியே ஸ்டன்னாயிட்டேன்! என்ன ஒரு க்ரேஸ்! டேய்! G போடணும் நீ பாட்டுக்கு க்ரேஸ்னு C யப்போட்டு எழுதிடப்போறே!”

ம் சரி சொல்லு

நிச்சயம் அஞ்சடி பத்தங்குல உயரம் இருப்பொ. உடம்புல பட்டும் படாம ஷிஃபான் புடவை மழ பெஞ்சு நின்னப்றம் ஒரு மாதிரி மேகமூட்டமா இருக்கும்போது வானத்துல ஒரு கரு நீலம் வருமே, அந்தக்கலர்! மேட்சிங்க்கா டிசைனர் ப்ளௌஸ்.

முதுகுல அப்படியே பாதாளமா சரியுமே!”

அதெல்லாம் நீ எழுதற வெத்துக்கதையிலதான். அப்டிலாம் ஒண்ணும் சரியல. அவ்வளவு டிக்னிஃபைடா, கச்சிதமா இருந்தது. சில்க்கா கூந்தலான்னு தெரியாத ஸ்மூத் ஹேர் ஸ்டைல். அப்படியே தோள் பட்டை சரிவு இருக்கே……”

இதெல்லாம் எழுத முடியாதுடா! மரியாதைப்பட்டவங்கல்லாம் படிக்கணுமே!”

சரி விடு! பார்க்கிங் எல்லாம் பாக்கவே இல்லை. கார அப்படியே கோணாமாணான்னு நிறுத்திட்டு, சட்டுனு இறங்கி பின்னாடியே போனேன். அவ அப்படியே கனவுல மழைபெய்யப்போற மேகம் மாதிரி நழுவலா நடந்து, படியேறி, டிக்கட் குடுக்கற ஆசாமிகிட்ட போனா. மட மடவென கிட்டத்துல போய் கண்ணுல படாம நின்னுட்டேன். பேசறது கேட்டுச்சு.

எக்ஸ்க்யூஸ் மி! என்னோட வர இருந்தவர் இன்னிக்கு வர முடியல. இந்த டிக்கட்ட விக்க முடிஞ்சா வித்துடுங்க. இல்லென்னாலும் இட்ஸ் ஓகே

வாயெல்லாம் பல்லா அந்த ஆசாமி சரி மேடம்! நா நிச்சயமா வித்துடறேன், திரும்பிப் போகும்போது காசு வாங்கிக்கோங்கன்னு அசடு வழிஞ்சது

அவ ஹாலுக்குள நுழையறத பாத்துட்டு நா ஓடிப்போய் அந்த ஆள் கிட்ட பேசினேன்.

சார்! என் ஒய்ஃப் டிக்கட் கொடுத்துட்டு போறேன்னாங்களே?

யாரு சார், யாரோட ஒய்ஃப்?”

என் ஒய்ஃப்தான்! உசரமா நீலக்கலர் ஷிஃபான். வாசல்ல வெயிட்ல்லாம் பண்ண மாட்டேன். டிக்கட் கௌண்டர்ல உங்க டிக்கட் கொடுத்துட்டு போறேன், நீங்க உள்ள வந்துடுங்கன்னாளே!”

ஓ அவங்களா? டிக்கட்ட விக்க சொன்னாங்களே!”

ஓ கோவம் வந்துடுத்தா அவளுக்கு! நா லேட் பண்ணிட்டேன் சார்! அதான் கோவத்துல…”

அசட்டு சிரிப்புடன் என்னிடம் அந்த டிக்கட்டை குடுத்துட்டார் மாமா!

அரக்கப்பரக்க உள்ளெ போய் அவ பக்கத்து சீட்ல உக்காந்துட்டேன்.

கொஞ்சம் பலாப்பழம், பன்னீர் மிண்ட், கொஞ்சூண்டு அமிர்தாஞ்சனம் அப்புறம் குல்கந்து எல்லாம் சேர்ந்தாப்ல ஒரு வாசனைடா அவகிட்ட!

இந்தாங்க 500 ரூபாய்! டிக்கட் உங்களுதாமே!”

ஓ தாங்க் யூ!”

தேன்ல ரோஜா இதழை முழுக்கி எடுத்து வாய்ல போடும்போது நாக்குல முதல் கணத்துல சிலிர்க்குமே அது மாதிரி இருந்தது அவ குரல்!

உங்களுக்கும் தேட்டர் மரீனா ப்ளேன்னா பிடிக்குமா?

ஓயெஸ்!

இன்னிக்கு ஜெயராமன் ரகுய்நாதனோட ப்ளே!” ஐம் எக்சைட்டெட்!” அவ முகத்துல சந்தோஷத்தப்பாக்கணுமே!

ஆமா, நீதான் இந்த தமிழெல்லாம் படிப்பியே, யாரு இந்த ஜெயராமன் ரகுநாதன்?”

யாரா? ஏண்டா நா யாரப்பத்தி சொல்லிண்டு இருக்கேன்! நீ என்னடான்னா ரகுநாதன் அவன் இவன்னு! அது யாரா இருந்தா என்னடா? நீ என் கதயக்கேட்டு எழுது!”

விடு! உன்னை அஜீரண புலிதான் திங்கணூம்! மேல சொல்லு!

இன்னும் பேச்சுக்கொடுக்கலாம்னா லைட்ட அணச்சுப்டான். யரோ டிராமா பத்தி சபா பத்தில்லாம் பேசினா!

ஒரு இளைஞன், அழகான பொண்ணு போட்ல கூட்டிண்டு போறான்னு டிராமா போச்சு!

ஓ அபயரங்கதிலகாவா?

ஒண்ணரை மணில முடிஞ்சுடுத்து! எனக்கு பக்குனு ஆய்டுத்து! இப்பல்லாம் நாடகத்த ஒண்ணர்ரை மணில முடிச்சுடறாளான்னு கேட்டேன்!

ஓ ஸில்லி! வாவ்! வாட் அ ப்ளே! ப்ரமாதம்னா  அவ.

யெஸ் யெஸ்னு பம்மினேன்.


டிராமா முடிஞ்சவுடனே எழுந்தா. நானும் பின்னாடியே நடந்தேன். அவ இடுப்பு..அசஞ்சுதே அந்த அழகுக்கு…..அப்ப்ப்ப்பா!

வாசல்ல வந்தவுடனே நின்னா.

ஸோ..?

ஸோ?

களுக்குன்னு சிரிச்சா.

என்னமோ பொட்டை தைரியத்துல இஃப் யூ டோண்ட் மைன்ட், என்னோட டின்னர் சாப்பிடுவீங்களான்னு கேட்டுட்டேன்!

நிதானமா என்னைப்பார்த்தா. சிரிச்சா.

எந்த பெண்னைப்பார்த்தாலும் இப்படி டின்னருக்கு கூப்பிடுவீங்களா?”

ஓ நோ! நீங்க எக்சப்ஷன்!”

நம்பறேன்! ஒகே, போலாம்!”

சொன்னா நம்பமாட்டெ, நா எப்படி குதிக்காம இருந்தேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு தெரியுமோ?

காரில போகும்போது கொஞ்ச நாழி பேசவே இல்லை.

உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

அனுசூயா! டாக்டர் அனுசூயா?”

ஓ டாக்டரா நீங்க?”

ஏன் இருக்கக்கூடாதா?”

இல்ல இல்ல! சும்மா…”

என் உருவத்தோட டாக்டர் பிம்பம் ஒட்டல இல்ல?”

உங்களுக்கெல்லாம் ஈவினிங் ட்யூட்டி இருக்குமே?”

சுதர்ஷண் பாலி க்ளினிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த ஆஸ்பத்ரியே எங்களோடதுதான்? ரகுநாதன் எழுத்துன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அவரோட நாடகம் இன்னிக்குன்னு படிச்சேன். அதான் கிளம்பி வந்துட்டேன்!”

ஐ யம் லக்கி!”

சட்டுனு திரும்பினாள். கொஞ்சம் சிரித்தாள். ”யூ ஆர் போல்ட்”!

வெல் உண்மையா பேசணும்னா நா ரொம்ப அடிபட்டிருக்கேன், யுவர் லுக்ஸ் !  உங்களோட பார்வை, உங்கஎன்னன்னு சொல்லத்தெரியல. யூ நோ, நா முக்கியமா ஒரு இடத்துக்குஅவசரமாகப்போக வேண்டியவன். உங்களப்பாத்ததுனால இப்படி டிராமா, டின்னர்..”

இஸிட்! ஐயம் இம்ப்ரஸ்ஸ்ட்! இந்த மாதிரியான் விக்டோரியா காலத்து ரொமான்ஸுக்கெல்லாம் ஜனங்களுக்கு நேரம் இருக்கா இப்பல்லாம்? அது இருக்கட்டும், இந்த மாதிரி தனியா வரும் மத்திம வயதுபெண்களைப்பின் தொடராத சமயத்தில், நீங்க என்ன பண்ணுவீங்க?

கொஞ்சம் லேட்டாகத்தான் எனக்கு அவ கிண்டல் புரிந்தது.

சிரித்தேன்

சிரித்தாள்

சட்டுனு கை நீட்டி அவ கை மேல என் கையை வெச்சு ஐ லைக் யூன்னு சொல்லிட்டேன்!

அசட்டுத்துணிச்சல்.

கொஞ்சம் மௌனம். யோசிக்கிறாளோ? தப்பானவனோட காருல ஏறிட்டமோன்னு பயம் வந்திருக்குமோன்னு எனக்கு குழப்பமான சில நிமிஷங்கள். அப்புறம்தான் சொன்னா….

மீ டூ!”

எனக்கு தைரியம் வந்துடுத்து.

என்னோட கெஸ்ட் ஹௌசுக்குப்போகலாமா?”

மை காட்! யூ ஆர் டூ ஃபாஸ்ட்!”

பேசாம இருந்தேன்.

எனக்கும் உங்களின் குறும்பு அடாலசண்ட் தைரியம், அப்புறம் அந்த சுருள் முடி, கன்னக்குழி எல்லாம் பிடிச்சிருக்கு”.

அப்போ..டின்னர்….?”

கெஸ்ட் ஹௌஸ் எங்க இருக்கு?”

கார் எப்ப கெஸ்ட் ஹௌசுக்கு போச்சு, கதவ எப்போ திறந்தேன், லைட்ட போட்டேனா, ரூமுக்குள்ல நுழஞ்சது, லைட்ட அணைச்சது..எதுவுமே ஞாபகம் இல்லடா?

டேய்! இதெல்லாம் எழுதணுமா?”

கேளுடா! இப்ப ஒரு ப்ராப்ளம் எனக்கு?”

ஷ்யாமளாவுக்கு தெரிஞ்சுடுத்தா?”

இல்ல இல்ல

அனுசூயாவோட ஹஸ்பண்ட்,,,,”

அதெல்லாம் இல்ல

அப்ப என்ன ப்ராப்ளம்?”

சொல்றேன்.”

அன்னிக்கு ராத்திரி திடீர்னு முழிப்பு வந்தது. மணி பாத்தேன். பன்னிரெண்டரை!

கொஞ்சம் சுதாரிச்சவுடனே எல்லாம் ஞாபகம் வந்தது. அபார கணங்கள். ஒரு மாதிரி இன்பமா வலிச்சுது. என்னோட கன்னத்துக்கிட்ட இன்னம் சூடா இருந்தது! திரும்பிப்பாத்தா பக்கத்துல அவ இல்ல. எழுந்து போய் கிச்சன், டிராயிங் ரூமெல்லாம் தேடினேன். ம்ஹும்! ஒண்ணும் புரியல. கொஞ்சம் பயமாயிடுத்து! பாண்ட் பாக்கெட்டில் பார்த்தேன் பர்ஸ் அப்படியே இருந்தது. பைசா குறையல. வெளில பார்த்தேன். கார் இருந்தது.

எப்ப போனா, எப்படி போனா?

படுக்கை மேல என்னோட விசிட்டிங் கார்டு பின்னாடி கிறுக்கலா எழுதியிருந்தா.

மறக்க முடியாத, சந்தோஷமான அனுபவம்! மீண்டும் சந்திக்கிறேன்! அனு!”

ஒரு மாதிரி டிரெஸ் பண்ணிண்டு வீட்டுக்குப்போய் ஷ்யாமளாகிட்ட லேட்டானதுக்கு எப்போதும் போல பொய் சொல்லி சமாளிச்சு படுத்துண்டுட்டேன்.

சரி ஏதோ ப்ராப்ளம்னியே அது என்ன?”

நேத்திக்கி ரெஸ்டாரண்ட் போனவுடனே சுதர்ஷன் க்ளினிக் தேடினேன். புரசவாக்கத்துல ஒண்ணு, மந்தவெளில ஒண்ணு, ஆனா சுதரசனம் ஆஸ்பிடல்னு பேரு, இன்னொண்ணு ஈசிஆர் ரோடுல. மூணுத்துக்கும் ஃபோன் பண்ணிப்பேசினேன்.

மந்தவெளிலயும் சரி புரசவாக்கத்துலயும் சரி டாக்டர் அனுசூயான்னு யாருமே இல்லை.

அப்ப ஈசிஆரா?

இப்போது அருண் மௌனமாக இருந்தான். கை விரல்கள் லேசாக நடுங்கின.

என்னடா ஆச்சு சொல்லித்தொலையேன்!”

ஈசிஆர் தாண்டா!”

இருந்தாளா? பேசினயா?”

அடுத்த இரண்டு நிமிடங்கள் அவன் சொன்னதை அப்படியே எழுதிவிடுகிறேன்.

ஹலோ! சுதர்ஷன் க்ளினிக்கா?

ஆமாம்! வாட் கேன் வி டூ ஃபார் யூ சார்?”

டாக்டர் அனுசூயாவோட பேச முடியுமா?”

நிண்ட மௌனம். கிசுகிசுப்பு.

யாரு? டாக்டர் அனுசூயாவா? நீங்க…?”

நா அவங்களோட ஃப்ரெண்ட்!”

ஃப்ரெண்டா?”

 மறுபடி மௌனம்.

கொஞ்சம் இருங்க!”

சின்ன சின்னப்பேச்சுக்குரல்கள்.

இப்போது அதிகாரமான ஒரு கட்டைக்குரல்.

யெஸ்! நீங்க யாருன்னு சொன்னீங்க?”

டாக்டர் அனுசூயாவோட ஃப்ரெண்ட்! நேத்திக்கு அவங்களோட பேசினேன். அவங்கதான் இன்னிக்கு ஃபோன் பண்ணச்சொன்னாங்க!”

லுக்! இஃப் இட் ஈஸ் ய ஜோக், ப்ளீஸ் ஸ்டாப் இட்!”

இல்லை நா அவங்களோட நேத்து சாயங்காலம்…”

வாட் தெ ஹெல் மேன்! யூ நோ டீடீகே ரோட்? நாரதா கான சபாவுக்கு எதிரில க்ராஸ் பண்ணும்போது ஒரு ஹார்லி டேவிட்சன் கண்ணு மண்ணு தெரியாம மோதிபாழாய்ப்போன நாடக ஆசை. லேட்டாச்சுன்னு இவளும் கவனமில்லாம க்ராஸ் பண்ணியிருக்கா….மல்டிபிள் ஹெமொர்ரேஜ்! ஹையாய்டு போன் வெறகுச்சுள்ளி மாறி முறிஞ்சுபோய்டுத்து…..இன்னியோட மூணு வாரம் ஆச்சு!”

அருண் நிறுத்தி விட்டான். என்னைப்பார்த்தான்.

மறுபடி சந்திப்போம்னு அந்த விசிட்டிங் கார்டுல இருந்துதுடா!”

ஒரு வித கலக்கத்தோட அருண் கிளம்பிப்போனான்.

எனக்குத்தான் இப்ப என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment