Wednesday, 2 September 2026

 வசுந்தரா

இயற்கை
“ஏன்னா! கொழந்த வர்ரதே லீவுக்கு ரெண்டு வாரந்தான். அதுலயும் ரெண்டு மூணு நாள் மணச்சநல்லூர் அழச்சிண்டு போறேங்கறேளே? கோமளிக்காதான் இங்கயே வர்ரேன்னிருக்காளே?”
“இருக்கட்டும்மா! வசுவுக்கும் திருவெள்ளரை பெருமாளப்பாக்க வாண்டாமா? அப்படியே ரெண்டு நாள் கிராமத்து வாழ்கையும் அனுபவிக்கட்டுமே! அங்கெ மெட்ராஸ்ல மன்னி போன தரமே சொன்னா! நம்ம ஊரைச்சுத்தி நாலு கோவிலை வசுவுக்கு காமியேண்டான்னு! நீயும் வாயேன்!”
“இல்லேன்னா! நீங்க போய்ட்டு வாங்கோ! மன்னிக்கு அனுப்ப கருடாமெல்லாம் போடணூம்!”
வசுவின் மாமா அரவாமுதனுடன் மணச்சநல்லூருக்கு பஸ் ஏறினாள் வசுந்தரா.
“மாமா! அத்திம்பேர் என்னதான் வேல பண்றார்? வெறுமன மிராஸுதார்தானா?”
“இல்ல வசு! அவர் அதைத்தவிர கோஆப்பரேட்டில காரியஸ்தராவும் இருக்கார்.!”
“கோஆப்பரேட்டின்னா என்ன மாமா?
சொஸையிட்டியா”
”அதாம்மா எல்லா வெவசாயிகளும் சேர்ந்து ஒரு அஸோஸியேஷன் மாதிரி! அரசாங்கத்தோட இன்னும் மத்த வெளியாட்களோட பேசி வியாபாரம் பண்ண ஒரு குரூப்புன்னு வெச்சுக்கோயேன்!”
”ஊருக்கு நல்லது பண்றாருங்கறேள்?”
”ஆமாமா! நல்ல மனுஷன்! ஊருக்குன்னா உசுர விடுவார் அத்திம்பேர்! அக்காவையும், அதான் உன் அத்தையையும் என்னமா பாத்துக்கறார் தெரியுமோ?”
”ஏன் தெரியாம? அத்தை கிழங்கு கிழங்கா மூக்கிலயும் காதுலயும் வைரத்தோடு மூக்குத்தின்னு மின்னறாளே!”
“அடி வசுக்குட்டி! வந்தியா வா வா!”
அத்தை கட்டிக்கொண்டாள்.
”வாடா அராமுது! ஆனந்தவல்லி சௌக்கியமா?”
இருக்கா அக்கா! அப்பப்ப முட்டி வலி வந்துப்பிடறது!”
”ஆராமுது! இந்த தரம் நான் மஞ்சட்டி நன்னாரி கஷாயம் சேத்து அரச்ச பிண்ட தைலம் தர்ரேன் கொண்டு போ! சூடு பண்ணி முழங்கால்ல தேச்சு குளிக்கச்சொல்லு! வந்தேனான்னு வலி ஓடிப்பிடும், என்ன?”
மதியம் அத்திம்பேர் வந்து குளித்து சாப்பிட்டார்.
“என்ன அத்திம்பேர் கவலையா இருக்காப்ல தோணறதே!”
”ஆமா அரவாமுது! இங்க மணச்சநல்லூர்ல யாரோ தென்காசி பாயாம் பெரிய சூப்பர் மார்க்கெட் தொறக்கறார்!”
அடி சக்கை! மணச்சநல்லூருக்கு சூப்பர் மார்கெட்டா?”
”பாய் எல்லா பொருளும் தென்காசி தின்னவேலின்னு இறக்கப்போறாராம். அங்க அவருக்கு பெரிய ஓல்சேல் யாவாரமாம்!”
“ஆதுல என்ன சிக்கல் அத்திம்பேர்?”
”வீட்டு சாமானெல்லாம் பரவாயில்ல. அவர் காய்கறி பழங்கூட வெக்கப்போறாராம்! அதுவுமே தினோம் குத்தாலம் ஆரல்வாய் மொழின்னு அங்கேர்ந்து வருமாம். அவரோட தோட்டமே இருக்காம்.!”
”இந்த ஊர் விளைச்சல் வீணாப்போகுமே!”
”அதான் சிக்கல்! இங்க எல்லாம் சின்ன சின்ன வெவசாயிங்க! அரை செண்ட் முக்கால் செண்ட்டுனு கோமண சைஸ் நெலத்த வெச்சிண்டு நாள ஓட்டிண்டு இருக்கானுங்க! அவங்க பொழப்பு போயிடுமேங்கறது தான். இன்னி காலம்பர கோவாப்பரேட்டி ஆஃபிஸ்ல அதப்பத்தித்தான் பேசி மாஞ்சுட்டு வர்ரேன்! அத்த விடு! வசுந்தரா! படிப்பெல்லாம் எப்படி இருக்கு? இந்த வருஷம் ஸ்கூல் கடைசி வருஷமாச்சே?”
“நன்னா இருக்கு அத்திம்பேர்! காமர்ஸ் எடுத்துண்டு பிகாம் படிக்கலாம்னு அப்பாட்ட சொல்லியிருக்கேன்!”
“குட்! அப்புறமா ஆடிட்டருக்கு படியேன்! இங்க வந்து ஆஃபீஸத்தொறந்தேன்னா நூறு ஃபைல் தேறும்! என்ன அரவாமூது சொல்றே?”
“இல்லியா பின்னே? அண்ணாவும் ஊரோட வந்துறலாம்!”
“இல்ல அத்திம்பேர்! நா எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன். அஹமதாபாதுல!”
”ட்டேயப்பா! பெரிய படிப்புன்னா அது! அப்புறம் பாம்பே டெல்லின்னு வடக்குலதான் வேல பாக்கணூம், இல்லியா?”
”நாள் இருக்கு பாக்கலாம் அத்திம்பேர்! சொல்லுங்கோ என்ன சிக்கல் வரும்னு எதிர்பாக்கறேள்?”
அத்தை உள்ளே வந்துகொண்டே கேட்டாள்.
”உனக்கேண்டி அந்த விசாரம்? அவாள்ளாம் ஆம்பளைகள் பார்த்துப்பா! நீ வா தலயப்பின்னி விடறேன். திருவெள்ளரை தோட்டத்துலேர்ந்து நல்ல ஜாதி ரெண்டு படி கொண்டு வரச்சொல்லியிருக்கேன். தொடுத்து வெச்சு விடறேன்!”
“இருங்கோ அத்தை! நீங்க சொல்லுங்கோ!”
”த பாரு வசு! நம்ம கிராமத்துல மட்டுமே எம்ப்ளத்தி சொச்சம் பேர் தோட்டம் போட்டு காய்கறி பழம்னு உற்பத்தி பண்றா! அவாளோட வியாபாரமெல்லாம் இங்க சுத்து வட்டாரத்துல மட்டுந்தான்! இவாளுக்கு அதெயெல்லாம் வண்டில வெச்சு எடுத்துண்டு போய் இன்னொரு ஊர்ல விக்கற அளவுக்கு விளைச்சலும் இல்ல. ஐவேஜியும் கிடையாது! இப்ப சூப்பர் ஸ்டோர்னு பாய் சல்லீசா வித்தான்னு வெச்சுக்கோ, இவாளோட விளைச்சல் வீணான்னா போய்டும்! எல்லா காய்கறியும் பழமும். ரெண்டாம் நாளே அழுகி நாறிடாதா?”
“என்ன பண்ணப்போறதா இருக்கேள் அத்திம்பேர்?”
“எல்லாரும் கோவமா இருக்கா! கடையை வெக்க விடப்படாதுன்னு மறிக்கறா? பாய்க்கு நல்ல செல்வாக்கு இருக்கு! கவர்னமெண்ட்ல இந்தப்பக்கம் பெரிய ஆளெல்லாம் இவா மனுஷாளாம்! ஆனதப் பாத்துக்குங்கன்னு சொல்லிப்ட்டான்!”
அரவாமுது குறுக்கிட்டார்.
“கெடக்கறது கெடக்க, கிழவியத்தூக்கி மணையில வைடாங்கறா மாதிரி அதென்ன பாய்க்கு மணச்சநல்லூர் மேல ஒரு பிடிப்பு? இதென்ன மெட்ராசா மதுரையா?”
“பாயோட சம்மந்தி ஊராம் இது! சனமங்கலம் பக்கத்துல மசூதி இருக்கில்ல அதுங்கூட பாயோட சம்மந்தி கட்டினதுதானாம்! பொண்ணு கொடுத்த ஊராச்சே! அதான் இங்க மாப்பிள்ளைக்கு பெரிய கடை போட்டுத்தராராம்!”
“பாய்! இப்ப இந்த ஊருக்கு வந்துருக்காரா?”
“ஆமா சம்மந்தி வீட்லதான் இருக்காரு. கடை வேலையெல்லாம் மாப்பிள்ளையோட சேர்ந்து மேப்பார்வை!”
”அத்திம்பேர்! இன்னிக்கு சாயங்காலம் சனமங்கலம் பாயப்பார்க்க போலாமா?”
அத்தை கிறீச்சிட்டாள்.
“கிரகசாரம்! ஏண்டி உனக்கு இந்த வேல! இதெல்லாம் வம்பு தும்புல முடியும், ஆமா சொல்லிப்ட்டேன்!”
“வசு! வாண்டாம்டி! அண்ணாக்கு ஆரு பதில் சொல்றது!”
“ப்ளீஸ் அத்திம்பேர்! நா எந்த குழப்பமும் பண்ண மாட்டேன்!”
“நா வரேன்னா என்னை பாக்க மாட்டான் அந்த பாய்! அவனுக்கு தெரியும் நாந்தான் கோஆப்பரேட்டி காரியஸ்த்ர்னு! நா எப்போதுமே வெவசாயிங்க பக்கமச்சே!”
“அப்ப என்னை அழச்சிண்டு போங்கோ. நா போய் பாயைப்பாக்கறேன்!”
“என்னதான் பேசப்போறே? நாங்களாம் பேசி அலுத்துப்போயாச்சு! பாய் கடை யோசனையை விடறதா இல்ல!”
“அத்திம்பேர் ப்ளீஸ்!”
இருவரும் சனமங்கலம் போனபோது மணி நாலு ஆகிவிட்டிருந்தது. திருப்பத்திலிருந்த மசூதியை அடுத்து எதற்கோ காலியாக இருந்த மனையைத்தாண்டி பெரிய பங்களா. சுற்றிலும் ஆளுயர காம்பவுண்டுச்சுவர். பச்சைபெயிண்ட் அடித்து ஆங்காங்கே ரோஸ் கலரில் டிசைன். வாசலில் சவுக்கு கம்பம் நட்டு பெரிய ஷாமியானா. அடியில் தாறுமாறாக சில பிளாஸ்டிக் நாற்காலிகள்.
வாசலில் ஆள் நடமாட்டம் இல்லை. உள்ளே நுழைந்தபோது வெராண்டா இருட்டிலிருந்து “ஆரது?” என்ற கட்டைக்குரல். இப்போது பின் பக்கத்துலேர்ந்து லுங்கியும் பனியனுமாய் ஆள் ஓடி வந்தான்.
“பாய் இருக்காரா? பாக்கணும்?”
“எந்த பாய்? பெரியவரா?”
”தென்காசி பாய்!”
ஆள் உள்ளே ஓடினான்.
மே” என்று எங்கோ பின்பக்கம் கட்டின ஆட்டின் குரல்.
ஆஜானுபாகுவாய் பாய் வெளியில் வந்தார். அத்திம்பேரைப்பார்த்துவிட்டு முகத்தில் கடுப்புடன் கேள்விக்குறி. அடுத்து இருந்த சின்னப்பெண்ணை ஆச்சரியப்பார்ர்வை.
“வணக்கம்! என்ன, மறுபடி சூப்பர் ஸ்டோர் விவகாரமா?”
“என் மருமவ உங்களைப்பாக்கணும்னு சொன்னா?”
பாயின் குரல் கனிவானது.
“என்னையா? இந்தப்பொண்ணா?”
வசுந்தரா புன்னகைத்தாள்.
“உள்ள வரலாமா அங்கிள்?”
“அடேடே! வாம்மா! நீங்களூம் வாங்க!”
“இல்லை பரவாயில்ல. நான் இங்கயே உக்காந்துக்கறேன்!”
“வாம்மா உள்ற! எங்க வீட்லல்லாம் சாப்பிடுவியா?”
“ஏன் சாப்பிடாம?”
”யேய் ஆரு உன்ள? டீ கொண்டா பாப்பாக்கு!”
இரட்டைநாடியான பெண்மணி டிரேயியில் வைத்து டீ கொண்டு வந்தாள்.
“பாப்பா! காரியஸ்தரோட மருமவளாம்! என்னாண்ட பேச வந்திருக்கு!”
பாயின் மனைவி ஆச்சரியத்துடன் வசுந்தராவைப்பார்த்தாள். டீயைக்குடித்த வசுந்தரா
“பிரமாதம் ஆண்ட்டி! ஏலக்கா இஞ்சியெல்லாம் போட்டு ரொம்ப நல்லா போட்ருக்கீங்க!”
பீவிக்கு வெட்கங்கலந்த புன்னகை. ஆச்சரியத்தில் காலி கப்புடன் அங்கயே நின்றாள்.
“சொல்லும்மா!”
“அங்கிள்! நீங்க தெறக்கப்போற சூப்பர் ஸ்டோர்ல காய்கறி பழமெல்லாங்கூட விப்பீங்க தானே?”
“ஆமாம்மா!”
“எங்கேர்ந்து கொள்முதல் பண்ணுவீங்க?”
“என்ன கொள்முதல்மா! உங்க மாமா சொல்லியிருப்பாரே! தென்காசி ஆரல்வாய்மொழியில எங்க தோட்டமே பெருசா இருக்கு. அங்கனேர்ந்து வர வெப்போம்!”
“வண்டி சார்ஜு ஆகிடாதா?”
“ஆவாதும்மா! தெனிக்கும் கொண்டு வந்தா ரயில்வேல சார்ஜு கம்மியாச்சே! அத்தோட இங்க அல்லாரும் வாங்கற வெலைக்கு விக்கணுமில்ல? பெரிய முதல் போட்ட தொழிலாச்சே!”
“அங்கிள்! நீங்க ஏன் இந்தூர் வெவசாயிங்க கிட்டவே கொள்முதல் பண்ணக்கூடாது?”
பாய் ஒரு கணம் ஆடிப்போனார்.
“என்னம்மா சொல்றே?”
”ஆமாம் அங்கிள்! இவங்க வெளைவிக்கற காய்கறி பழத்த நீங்களே கொள்முதல் பண்ணிடுங்களேன்! அவங்களுக்கும் வித்தா மாதிரி ஆச்சு. உங்களுக்கும் சரக்கு ஃப்ரெஷா கிடைக்குதே!”
“அவங்கதான் என்னைக்கண்டாலே எதிர்க்கறாங்களே! அடிப்பேன் உடைப்பேன் மறியல் பண்ணுவேன்னு! உங்க மாமா….!”
“அத்திம்பேர்!”
“ஆங் அவருதான், அவரே முன்ன நிக்கறாரே!”
“இல்ல அங்கிள்! இந்த மாதிரி செஞ்சா ரெண்டு பேருக்குமே நல்லதுதானே!”
“சரிம்மா! நா செய்ய தயாரா இருக்கேன்! அவங்க ஒப்புக்கணூமே!”
”நா பேசறேன் அங்கிள்!”
“பார்ய்யா இத! இதனூண்டு இருந்துகிட்டு எம்மாம் பெரிய பேச்செல்லாம் பேசுது!”
“என்ன அங்கிள்! செய்வீங்களா? என்ன விலைக்கு விக்கப்போறீங்களோ அதுக்கு பத்து பர்சண்ட் கம்மி பண்ணி வெல போட்டுக்கொடுத்து கொள்முதல் பண்ணிக்குங்க! போதலைன்னா இருக்கவே இருக்கு உங்க தோட்டம்!”
வெளியே ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அத்திம்பேர் “எனக்கு சம்மதந்தான் பாய்!” என்று குரல் கொடுத்தார்.
மலர்ந்த முகத்துடன் வெளியே வந்த பாய்! கையைப் பிடித்துக்கொண்டு வசுந்தரா!
“அய்யா! நா எதுனா கோவமா பேசியிருந்தா மனசுல வெச்சிக்க வாண்டாம்! நீங்க கோஆப்பரேட்டில பேசிட்டு சொல்லுங்க! எனக்கும் நஷ்டம் வராத படி வெவசாயிங்களுக்கும் சேதாரம் இல்லாத வெலைக்கி கொள்முதல் பண்ணிக்கறேன்!”
உள்ளிருந்து “என்ன! கொஞ்சம் உள்ள வரட்டும்” என சன்னக்குரல் கேட்டது.
“வாம்மா! உன்னைத்தாம்மா பீவி கூப்பிடுது! அய்யா! நீங்களும் வாங்களேன்!”
பீவியின் கையில் திருவனந்தபுரம் சில்க் துணி.
“இந்தா வாங்கிக்க கண்ணு!”
வசுந்தரா சட்டென்று பிவியின் கையைப்பிடித்துக் கொண்டு “வாங்க ஆண்ட்டி!அங்கிள் பக்கத்துல நில்லுங்க!”
யாருமே எதிர்பாராமல் அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பாய் பதறிவிட்டார்.
“என்னம்மா என்னம்மா இது..!”
”நீங்க பெரியவங்க அங்கிள்!ஆசிர்வாதம் பண்ணுங்க!”
“நெனச்சதெல்லாம் கிடைக்க அல்லாவின் அருள் உனக்கு உண்டும்மா! நல்லா இரு!”
”சோமேஷ்! ஐ லைக் யுவர் புரோபோஸல். ரிடர்ன்ஸ் பத்திதான் எனக்கு சந்தேகம்!”
“என்ன டவுட் வசுந்தரா? நாந்தான் சப்ளை செயின் காஸ்டிங் முழுக்க கணக்குல எடுத்திருக்கேனே!”
“அதுதான் எனக்கு சம்மதமில்லை சோமேஷ்!”
“பட் ஒய் வசுந்தரா?”
“சோமேஷ்! நாம கெச்சப் ஜாம் ஃபாக்டரி போடப்போறது கர்நூல் காகனூர்ல! நீ சோர்ஸ் பண்றது ரங்காரெட்டி டிஸ்ட்ரிக்ட்லேர்ந்து! என்ன லாஜிக்?”
“நம்தாரி வரைட்டி தக்காளி ரங்கரெட்டியிலதான் பெஸ்ட்!”
“அப்படியெல்லாம் இல்ல சோமேஷ்! நாம டொமேட்டோவை கர்நூல்லேர்ந்து சோர்ஸ் பண்றதுதான் லாஜிக். நம்ம சப்ளை செயின் சஸ்டெயினபிளா இருக்கணூம்னா, அதுவும் நீண்ட கால சஸ்டெயினபிலிடி வேணூம்னா லோக்கல் சப்ளையர்ஸ் தான் சரி. அதத்தான் நாம டெவலப் பண்ணூம். இன்க்ளூஸிவ் டெவலப்மெண்ட்டுன்னு கேள்விப் பட்டதில்லையா சோமேஷ்? அண்ட் பை திவே, அதுதான் எதிக்ஸ் கூட!
”வசுந்தரா! ஆனா….”
”ப்ளீஸ் சோமேஷ்! நீ பிராஜக்ட் ரிப்பொர்ட்ட மாத்தி லோக்கல் சப்ளை செயின் காஸ்டிங் போட்டு கொண்டுவா. ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் 25%க்கு மேல வந்தாலே எனக்கு போறும்!, ஐ வில் அப்ரூவ் தி பிராஜக்ட்! காட் இட்?”
“வசு! நீங்க ஃபுட் டிவிஷனுக்கு வந்தே ரெண்டு மாசம் தான் ஆகுது. இதுக்கு மிந்தி சோப்ஸ் அண்ட் டிட்டர்ஜெண்ட் டிவிஷன்ல இருந்திருக்கீங்க! ஃபுட் பிஸினஸ்ல உங்களுக்கு அனுபவமே கிடையாது. எப்படி இவ்வளவு ஷார்ப்பா அனலைஸ் பண்றீங்க!”
“எனக்கு ஃபுட் பிஸினஸ்ல அனுபவமே கிடையாதுன்னு யாரு சொன்னாங்க சோமேஷ்?”
பாம்பேயின் நாரிமன் பாயிண்ட்டில் யு அண்ட் டியின் எட்டு மாடிக்கட்டிடத்தில் கூட வசுந்தராவுக்கு இஞ்சி ஏலக்காய் போட்ட மணச்சநல்லூர் டீயும் சரசரக்கும் திருவனந்தபுரம் சில்கின் வாசமும் நிரடின.

Saturday, 15 August 2026

 டாக்டர் வைகுண்டம் & விஸ்மயா

யார் யார் வாய்க்கேட்பினும்……



தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் பைலட்டுகளுக்கு டிரெய்னிங் அளித்து அவர்களை ரெடி பண்ணும் ஸ்தலம் என்பதுதான் பொதுவாக அறியப்பட்ட சமாச்சாரம். ஆனால் அந்த ஸ்டேஷனில் முழுமையாக ரெடி செய்யப்பட்ட ஒரு அறை மட்டும் யாருக்கும் அனுமதி இல்லாத பிரதேசம். அங்கே வரும் ஆஃபீசர்கள் ஜீன்ஸ் கூலர்ஸ் சகிதம்தான் வருவார்கள். அவர்கள் இந்திய உளவுத்துறை ஆசாமிகளும் ஏர் ஃபொர்ர்ஸ் இண்டெலிஜென்ஸ் எனப்படும் விசேஷ உலவு ஆசாமிகள்.

அன்று காலையிலேயே அந்த அறை பரபரப்பாக இயங்கியது. வழக்கமாக டீ கொண்டு போகும் சந்திரன் நிறுத்தப்பட்டான்.

“இந்தப்பக்கமே வரக்கூடாது!”

அன்று காலை டெல்லியிலிருது அமைதியாக வந்திறங்கிய ஏர் ஹெட்குவார்ட்டர்ஸ் ஸ்க்வாட்ரனின் எம்ப்ராயர் லெகஸி ஜெட் விமானத்தில் நால்வர் வந்திருந்தனர். ஏர் கமாடோர் ராத்தோர், விங் கமாண்டர் அபிமன்யு, ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா மற்றும் எம்ப்ராயரை செலுத்திய பைலட் ஆஃபீசர்.

டேபிளின் முன் விரித்த படத்தின் முன் இவர்கள் மூவர் மற்றும் தாம்பரத்தின் சீஃப் சுக்பிர் ஆவானா குனிந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“ஆர் யூ ஷ்யூர் ராத்தோர்? ரா இந்த மாதிரி அப்பப்போ பொரளி கிளப்புவாங்களே?”

”இல்லை ஆவானா! தெ வேர் வெரி ஷ்யூர் திஸ் டைம்!”

“ருஹுணு குமனா ஒரு டென்ஸ் வனப்பகுதியாச்சே?”

“ரிமெம்பர், அது ஹம்பன்தோட்டா ஹார்பருக்கு அருகில்!”

“ருஹுனு குமனா ஒரு பாதுகாக்கப்பட்ட சைட். நேஷனல் பார்க் வேற. அங்கியேவா? ஹவ் டேரிங்!”

ஆமாம். அந்த ஆபத்தான மலைச்சரிவுலதான் சைனா ந்யூக்ளியர் ரியாக்டர் செட் அப் பண்றாங்களாம்!”

“என்னது ந்யூக்ளியர் ரியாக்டரா? அங்க முடியுமா?”

“ஸ்மால் மாட்யுலர் ரியாக்டர் தான்! ஆனாலும் நமக்கு ஆபத்துதான்!”

அபிமன்யு குறுக்கிட்டான்.

“ரெகான் பண்ணிடலாமா?”

“இம்பாஸிபிள்!”

மறுத்தார் ஆவானா.

”அங்கே காத்து மைக்ரொ பர்ஸ்ட்ஸா வீசும். டென்ஸ் ஏரோசோல் கிளவுட் ப்ளேன் ரேடார் வேவ்ஸை முழுமையாக முடக்கிடும்! யு வில் ஹேவ் நோ கைடன்ஸ்!”

”அது மட்டுமில்ல ராத்தோர். அங்க பறக்கணும்னா முன்னூறு அடிக்குள்ள காண்ட்டூர் ஃப்ளையிங்ல பறக்கணூம். ஆனா அந்த ருஹுனு ஹில்ஸோட பள்ளத்தாக்குல 300 அடி கூட உயரம் கிடைக்காது..ஓ நோ! ஸ்யூஸைடல்!”

”அண்ட் சுக்கோய் 1200 மைல்ஸ் வேகத்துல…. டைரக்ட் ரெஸிப்பி ஃபார் கிராஷ்!”

விங் கமாண்டர் அபிமன்யு இடைமறித்தான்.

”ஐ வில் ஃப்ளை ரிகான்!”

ஏர் கமாடோர் ராத்தோர் கிட்த்தட்ட சப்தம் போட்டார்.

“அபி! விளையாடாதே! உன்னை இழக்க முடியாது. நாம கிரவுண்ட் ரிகான் பண்ணிக்கலாம். ஐ வில் டாக் டு தி மினிஸ்டர்!”

“நோ கமாடோர். ஐ கேன் டு இட்!. விஸ்மயா! ஆர் யூ ரெடி?”

“எனி டைம் வித் யூ, பார்ட்னர்!”

விஸ்மயா சிரிப்போடு சொல்ல, இருவரையும் வியப்புடன் பார்த்தார் ஆவானா.

“வாட் கைண்ட் ஆஃப் க்ரீச்சர்ஸ் யூ டூ!”

“சுக்கோய் இருக்கா?”

டிரெயினிங்குக்காக ஒண்ணு வந்திருக்கு. எஸ் யூ 30 2MKI போதுமா? அத தயார் பண்ணிடலாம்! ஓகே லெட் மி கெட் மை டீம்! ரெடியாகறோம்!”

அடுத்து நாள் அதிகாலை சுக்கோய் விமானம் அபிமன்யூவின் கமாண்டிலும் விஸ்மயா விங்-வுமனாகவும் பறந்தது. கடல் மட்டத்திலிருந்து வெறும் 250 அடி உயரத்தில், சுக்கோய் காக்பிட்டில் விங் கமாண்டர் அபிமன்யூவின் மூச்சு ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்குள் சீராக இயங்கிக் கொண்டிருந்தது.

அந்தச் செங்குத்தான பள்ளத்தாக்கிற்குள் ரேடார் சிக்னல்கள் கட் ஆகியிருந்த நிலையில், ஹை ரிஸல்யூஷன் தெர்மல் இமேஜிங் கேமரா மூலம் அணு உலையின் 'நியூக்ளியர் சிக்னேச்சரை' வெற்றிகரமாக டிஜிட்டல் ஃபைலாகப் பதிவு செய்தார் அபிமன்யூ.

மிஷன் முடிந்தது!

ஆனால், மலை இடுக்கிலிருந்து வெளியேறி 32,000 அடி உயரத்திற்குச் செங்குத்தாக ஏறும் போது, அல்டிமீட்டர் முள் கிறுகிறுவெனச் சுழன்றது. காக்பிட் டிஸ்ப்ளேயில் ஹைட்ராலிக் ஃபெய்லியூர் மெயின் பஸ்' என்ற சிவப்பு எச்சரிக்கை மின்னியது.

"விஸ்மயா... சிஸ்டம் கெட்டிங் லாக்ட்," அபிமன்யூவின் குரலில் லேசான நடுக்கம்.

அவருக்குச் சற்றுப் பின்னால், சர்வதேச எல்லைக்கு வெளியே தன் விமானத்தில் காவலுக்குப் பறந்து கொண்டிருந்த ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா உடனே ரேடியோவில் அலறினாள், "ஈகிள்-1! பேக்-அப் ஃப்ளைட் கன்ட்ரோலுக்கு மாறுங்க! யூ ஆர் லூசிங் ஆல்டிடியூட் ஃபாஸ்ட்!"

அபிமன்யூ 'ஜாய்ஸ்டிக்'-கை பின்னோக்கி இழுக்க முயன்றார். ஆனால், அவரது வலது கை விரல்கள் தன்னிச்சையாக விறைத்துப்போயின. கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தன. 5... 4... 3... ஜி-ஃபோர்ஸ் அவரது உடலை இருக்கையோடு அழுத்த, விமானம் தலைகீழாக சுழன்றது.

"எஜெக்ட், அபி! எஜெக்ட் பண்ணுங்க!" விஸ்மயா கத்தினாள்.

கடைசி வினாடியில், அபிமன்யூவின் இடது கை எஜெக்ஷன் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தது. 'கேனோபி' வெடித்துச் சிதற, ராக்கெட் சீட் அவரை வான்வெளியில் தூக்கி எறிந்தது. இந்தியப் பெருங்கடலின் எல்லைக்கு அருகில் அவர் பாராசூட்டில் இறங்கினாலும், காற்றின் கோர வேகத்தில் அவரது உடல் ஃப்யூஸ்லேஜ் பகுதியில் பலமாக மோதியது.

சென்னை ஜெனரல் ஹாஸ்பிட்டலின் தீவிர சிகிச்சைப் பிரிவு.

டாக்டர் வைகுண்டம் தனது தடிமனான பிரேம் போட்ட கண்ணாடியைக் கழற்றி, மேஜை மீது வைத்தார். அவரது கண்கள் ஸ்கேனிங் ஃபிலிம்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன.

"செரிப்ரல் லேசரேஷன், மல்டிபிள் ரிப் ஃபிராக்சர்ஸ், அப்புறம் லேசான நியூமோதொராக்ஸ்" என்றார்.

அருகில் அவினாஷ், "புரொஃபசர், சர்ஜரி முடிஞ்சு சர்குலேட்டரி சிஸ்டம் ஸ்டேபிள் ஆயிடுச்சு. ஆனா..."

"ஆனா, அவரோட பிளட் டாக்சிகாலஜி ரிப்போர்ட்ல
'பிராமிபெக்சோல்' 0.5 மில்லிகிராம் இருக்கு, அதானே?"

பெரியவரின் குரலில் ஊசி முனை கூர்மை.

அவினாஷ் தடுமாற்றத்தோடு பேசினான்.

"அது... அது பார்கின்சனுக்கான இனிஷியல் ஸ்டேஜ் டிரக் புரொஃபசர்! அப்படீன்னா….!"

"எக்ஸாக்ட்லி!" வைகுண்டம் எழுந்து நின்றார்.

"ஒரு பைட்டர் பைலட், தன் கைகள் நடுங்குறதை மறைக்க, இந்திய விமானப்படைக்குத் தெரியாம இந்த மாத்திரையைத் திருட்டுத்தனமா சாப்பிட்டிருக்கான்! இதனாலதான் காக்பிட்ல அவனுக்கு மோட்டார் ஃப்ரீஸ் ஆகி ஆக்ஸிடெண்ட். இது நேர்மையில்லாத செயல். கிரிமினல் நெக்லிஜென்ஸ்!"

அப்போது, அறையின் கதவு பலமாகத் திறக்கப்பட்டது. ஏர் கமாடோர் ரத்தோர், முழு ஆர்மி யூனிஃபார்மில் உள்ளே வந்தார்.

"டாக்டர் வைகுண்டம்! விங் கமாண்டர் அபிமன்யூவோட மெடிக்கல் க்ளியரன்ஸ் சர்ட்டிஃபிக்கேட்ல நீங்க கையெழுத்துப் போடணும். இது ஒரு சாதாரண மெக்கானிக்கல் ஃபெய்ல்யூர்ன்னால நடந்த ஆக்ஸிடெண்ட்டுனு மெடிக்கல் போர்ட்டலுக்கு ரிப்போர்ட் அனுப்பிடுங்க. ஐ வில் டேக் கேர் ஆஃப் தி ரெஸ்ட்!"

பெரியவரின் சிரிப்பில் உறைபனி குளிர்ச்சி.

"கமாடோர், உங்க அதிகாரம் உங்க ஏர்பேஸ்ோட முடியுது. இது என் ஹாஸ்பிட்டல். என் பேனா உண்மைக்கு மட்டுமே கட்டுப்படும். அபிமன்யூ தன்னோட நோயை மறைச்சுப் பறந்திருக்காரு. நான் உண்மையான ரிப்போர்ட்டை கோர்ட்-மார்ஷியல் போர்டுக்கு அனுப்புவேன்."

"டாக்டர்! அவரோட 15 வருஷ சேவையை யோசிச்சுப் பாருங்க! அவர் மேல் நடவடிக்கை எடுத்தா, அவரோட மானம், ரேங்க் எல்லாம் போயிடும்!"

ரத்தோர் கர்ஜித்தார்.

"என் ஸ்டெதாஸ்கோப் யூனிஃபார்மைப் பார்த்து இரக்கப்படாது, கமாடோர். தப்பு தப்புதான்!"

"தப்பு இல்லை சார், அது தியாகம்!"

அறை வாசலில் ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா நின்றுகொண்டிருந்தாள். அவளது முகத்தில் லேசான காயங்கள், ஆனால் கண்களில் தீப்பொறி.

பெரியவர் நிதானமாகத் திரும்பி, "அண்ட் ஹூ ஆர் யூ?"
"ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா, சார்.
அபிமன்யூவோட விங்-மேன்,"

அவள் உள்ளே வந்து வைகுண்டத்தின் டேபிள் முன் கம்பீரமாக நின்றாள்.

"டாக்டர் சர், நீங்க பிராமிபெக்சோல் மாத்திரையைப் பார்த்தீங்க. ஆனா, அந்த மாத்திரைக்குப் பின்னாடி இருக்குற 'ஃப்ளைட் டெலிமெட்ரி டேட்டா'வை பார்க்கல!"

வைகுண்டம் புருவத்தை உயர்த்தினார்.

"மேக் மி அண்டர்ஸ்டாண்ட், யங் லேடி?"

"ஷ்யூர் சர்!"

விஸ்மயா ஒரு ஐ பேடை மேஜை மீது வைத்தாள்.

"அபிமன்யூ சாருக்கு எஸ்ஸென்ஷியல் ட்ரெமூர் இருந்தது உண்மைதான். ஆனா, அவர் அந்த மாத்திரையைத் தானா சாப்பிடல. ஸ்ரீலங்காவோட ருஹுணு குமனா கான்யன்ல சைனா கட்டிக்கிட்டு இருக்குற ரகசிய ந்யூக்ளியர் ரியாக்டரை மேப் பண்ணுற ரெகான்னஸைன்ஸ்-க்காகப் பறக்க துணிஞ்ச ஒரே ஆள் அவர்தான். அந்த டெர்ரைன்' எவ்வளவு கொடூரமானதுனு உங்களுக்குத் தெரியுமா டாக்?"

"என்னது, சீக்ரெட் ந்யுளியர் ரியாக்டரா?"

வைகுண்டம் திடுக்கிட்டார்.

"ஆமா சார்! 250 அடி உயரத்துல, ரேடார் பிளைண்ட் ஸ்பாட்ல, பாறைகளுக்கு நடுவுல சுக்கோயைக் கொண்டுபோய் அந்த டேட்டாவை எடுத்துட்டாரு. சர், இது ஹ்யூமன்லி இம்பாஸிபிள் அட்வென்ச்சர், யூ நோ?”

’பட் லேடி, ஹிஸ் கண்டிஷன்… ஹிஸ் ட்ரக் இண்டேக்…அன் எதிகல் இல்லியா? உங்க ஏர்ஃபொர்ர்ஸுல ரூல்ஸ் கிடையாதா? நீங்க அதையெல்லாம் மதிக்க பண்ண மாட்டீங்களா?”

”ஈஸி டாக்டர், ஈஸி! நீங்க டாக்சிகாலஜி ரிப்போர்ட்ல பார்த்த அந்த கெமிக்கல் ஸ்பைக்... அது ஃப்ளைட்டுக்கு முன்னாடி எடுத்துண்ட டாப்லெட்டுனால இல்ல! எஜக்ட் ஆகி, இண்டியன் ஓஷன்ல விழுந்த அவரை ஸெர்ச் அண்ட் ரெஸ்க்யூ டீம் மீட்டப்போ, அவருக்குக் கொடுத்த அவசரக் கால கோம்பாட் ஸ்டிம்யுலண்ட் இஞக்‌ஷனால உண்டான கெமிக்கல் ரியாக்‌ஷன்! ப்ளீஸ் லுக் அட் திஸ் ஃபீல்ட் மெடிக்கல் ரிப்போர்ட்!"

பெரியவர் ஒரு கணம் ஸ்டன் ஆகி நின்ற இடத்தில் உறைந்துபோனார். வேகமாக அந்த ஐபேட் தரவுகளைத் தன் கையால் ஸ்க்ரோல் செய்தார்.

அவரது மூளை கணக்குப் போட்டது.

Mass Spectrometry... Plasma Half-life... Interaction with Adrenaline...

"மை காட்..." பெரியவர் மெல்ல முணுமுணுத்தார்.

"மருந்தோட சைட் எஃபக்ட் இல்லை... அது அவசர சிகிச்சையின் இம்பாக்ட்!"

"எஸ் டாக்டர் சர்!"

விஸ்மயா தொடர்ந்தாள்.

"அபிமன்யூவுக்கு சிறிய நடுக்கம் இருந்தது உண்மைதான். ஆனா, இந்த விபத்துக்குக் காரணம் அது இல்லை ! நம்ம நாட்டோட பாதுகாப்புக்காகத் உயிரைப் பணயம் வச்சு அந்த மிஷனை முடிச்சவர் அவர். இப்போ நீங்க கொடுக்குற ஒரு தவறான ரிப்போர்ட், ஒரு ஹீரோவை தேசத்துரோகியா மாத்திடும்! ப்ளீஸ் டாக்டர்!"

அறையில் சில வினாடிகள் மயான அமைதி நிலவியது. ஏர் கமாடோர் ரத்தோர் பெரியவரின்ன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வைகுண்டம் மெதுவாகத் தன் பேனாவை எடுத்தார்.

"கமாடோர் ரத்தோர், லெட் மி மேக் இட் க்ளியர். அபிமன்யூ இனி எந்தப் போர் விமானத்தையும் இயக்க முடியாது. பர்மனெண்ட் கிரவுண்டிங் ஃபார் ஆக்டிவ் ஃப்ளையிங். அதை என் ரிப்போர்ட்ல தெளிவா எழுதிடுவேன்."

ரத்தோர் ஏதோ பேச வர, பெரியவர் கையை உயர்த்தினார்.

"ஆனா, இந்த விபத்துக்குக் காரணம் அவரோட அலட்சியம் இல்லை. எமர்ஜென்ஸி மெடிக்கல் ரியாக்‌ஷன். அதனால் அவர் மீது கோர்ட் மார்ஷல் வேண்டாம். அவர் இனி ஃப்ளைட் இன்ஸ்ட்ரக்டரா இளம் பைலட்களுக்குப் டிரெய்னிங் குடுக்கட்டும்."

ரத்தோர் பெருமூச்சுடன், "தேங்க் யூ, டாக்டர்," என்றார்.

வைகுண்டம் விஸ்மயாவைப் பார்த்தார். அவளது முகத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது.

"ஃப்ளைட் லெஃப்டினெண்ட் விஸ்மயா... நீ ஒரு நல்ல டாக்டரா இருந்திருக்கலாம்!"

விஸ்மயா ஆச்சரியத்துடன், "ஏன் சார்?" என்றாள்.

"ஏன்னா, நீ ரொம்ப துல்லியமா டேட்டாவை அனலைஸ் பண்ற!".

"ஆனா டாக்டர் சர், நீங்க ஒரு மோசமான ஆர்மி மேனாக இருந்திருப்பீங்க1”

”ஒய்?

‘... ஏன்னா, நீங்க ஆர்டர்ஸுக்குக் கீழ்ப்படியாம, உண்மையை மட்டும்தான் கவனிக்கறீங்க!"

விஸ்மயா கம்பீரமாக நிமிர்ந்து நின்று, வைகுண்டத்திற்கு ஒரு ‘ஸ்மார்ட் சல்யூட்’ அடித்தாள்

Thursday, 13 August 2026

 விபா ஐ ஏ எஸ் 1.14

அன்பும் அறிவும் உடைத்தாயின்…




யூ பியின் ஈட்டா மாவட்ட எல்லை. தட்பவெப்பநிலை: -2°C. ஈரப்பதம்: 94%. பனி டென்ஸிட்டி பார்வைத் திறனை வெறும் ஐந்து மீட்டராகக் குறைத்திருந்தது.

அந்த ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் கதவு பூட்டப்பட்ட ஒரு சதுர வடிவ செங்கல் கட்டிடம். கையால் தொட்டாலே காரை உதிரும், மேற்கூரையின் உடல் நிலை கவலைக்கிடம். குளிருக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் வழி விட்டிருந்த மூன்றாந்தர சுவர்கள்.
உள்ளே 23 இளம் பெண்கள் மற்றும் ஒரு வயதான, அடிக்கடி அபான வாயுவை சப்தத்தோடு வெளியேற்றிய படி அரைத்தூக்கக்கலக்கத்தில் பாரியான பெண் மேட்ரன்.

வெளியே, இருட்டின் மறைவில் 12 பேர் கொண்ட ஒரு ஆயுதக்குழு நகர்ந்தது.

குழுவின் தலைவன் கட்டார் சிங். அவனது இடுப்பில் சமீபத்தில் யு பி அரசாங்கம் ஆர்டர் செய்து வாங்கின .38 ஸ்பெஷல் ரிவால்வர். அவனுக்கு எப்படி என்று கேட்டால் அந்த தொடர்பு நீண்டு ஒரு வழியாக காஸ்கஞ்ச் எம் எல் ஏ சுபேதார் சிங்கிடம் முடியும். அவனது ஆட்களிடம் இந்திய ராணுவத்தின் பழைய 7.62 மிமீ எஸ்.எல்.ஆர் (SLR) ரக துப்பாக்கிகளும், சில எஃகு கடப்பாரைகளும் இருந்தன.

300 வினாடிகளுக்குள் கட்டடத்தை ஊடுருவி, 23 பெண்களையும் பக்கத்திலிருக்கும் இரண்டு திறந்தவெளி மூடப்பட்ட ஃப்ளாட்பெட் லாரிகளில் அடைப்பது. அடுத்த நான்கு மணி நேரத்தில் 340 கி.மீ தூரத்திலுள்ள ஒடிசா எல்லை செக்போஸ்ட். அங்கிருந்து பரதீப் துறைமுகம். பனாமா நாட்டின் கொடி ஏந்திய ‘எம்.வி. அக்வா’ சரக்குக் கப்பல் மூலம் ஃபிலிப்பைன்ஸ்.
எம்.எல்.ஏ-வின் சுவிஸ் கணக்கிற்கு 'டெஸ்கோ எக்ஸ்போர்ட்ஸ்' என்ற போலி கம்பெனி மூலமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கைமாறியிருந்தது.

ஆனால், கட்டார் சிங்கிற்கு ஒரு தெரியாத ஒரு சமாச்சாரம் அன்றிரவு அவன் வேட்டைக்காரன் அல்ல, அவன் தான் டார்கெட்டே!

நேரம்: 01:18:30

காப்பகத்தைச் சுற்றி 15 மீட்டர் சுற்றளவில், புதர்களின் மறைவில் ஆறு கறுப்பு உடை ஆசாமிகள் ‘ஃபயர் அண்ட் மூவ்மென்ட்’ வியூகத்தில் நிலைகொண்டிருந்தன. ஈட்டா மாவட்ட எஸ்பி ராபின் முகர்ஜி ஐ பி எஸ் ‘ஏ-டீம்’.

அவர்கள் கைகளில் 9 மிமீ சப்-மெஷின் துப்பாக்கிகள். ஒவ்வொன்றிலும் 30 ரவைகள் கொண்ட கபிள்ட் மேகசீன்கள் மற்றும் ‘வெட்-கேன்’ சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தன.

கண்களில் ஜென் 3 நைட்-விஷன் உடலை இறுகப் பற்றிய கறுப்பு நிற கேவ்லார்-4 தோட்டா ஊடுருவாத உடைகள் மற்றும் இஃப்ரா ரெட் கதிர்களை பிரதிபலிக்காத சிறப்பு முகமூடிகள்.

ராபின் தன் கைகடிகாரத்தின் டிஜிட்டல் ஸ்டாப்வாட்சைப் பார்த்தான்.

ராபினினின் தாக்குதல் பாடம் - எதிரி சட்டத்தின் எல்லையைத் தாண்டும் முதல் 'அதிர்ச்சியை' நிகழ்த்தும் வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றத்தில்செல்ஃப் டிஃபன்ஸ் மற்றும் டாக்ட்ரின் ஆஃப் நெஸெஸ்ஸிடி சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

கடக்... பட்!

கட்டார் சிங்கின் ஆளொருவன் எஃகு கடப்பாரையால் மரக்கதவின் பூட்டைத் தகர்த்தான். மரக்கதவு பிளந்து தொங்கியது. சட்டம் மீறப்பட்டது.

ராபின் தன் தொண்டைக்குள் இருந்த போன் கண்டக்‌ஷன் மைக் மூலம் முணுமுணுத்தான்: " ஆல்பா, எக்ஸிகியூட்... எக்ஸிகியூட்... எக்ஸிகியூட்!"

நேரம்: 01:21:00

கூரை ஜன்னலின் கண்ணாடி டமார் என உடைந்து சிதறியது. இரண்டு M84 ஃப்ளாஷ்பேங் வெடிகுண்டுகள் உள்ளே விழுந்தன. வெடித்த கணத்தில்: பளிச்சென ஒளிக்கற்றை மற்றும் 170 டெசிபல் இரைச்சல். கட்டார் சிங்கின் ஆட்களின் விழித்திரை தற்காலிகக் குருடானது; உள்செவியின் சமநிலை தப்பியதில் அனைவரும் நிலைகுலைந்து தரையில் விழுந்தனர்.

அடுத்த 0.8 வினாடியில், ஏ-டீமின் நான்கு வீரர்கள் கூரை மற்றும் கதவு வழியாக ‘ரூம் என்ட்ரி டிரில்’ முறையில் உள்ளே பாய்ந்தனர்.

தப்... தப்... தப்... தப்!

சைலன்சர் பொருத்தப்பட்ட MP5-கள் 9மிமீ ஹாலோ-பாயிண்ட் ரவைகளை வெளிப்படுத்தின. அதிவேகமாக வந்த ரவைகள், ஆயுதம் ஏந்தியிருந்த நான்கு கூலிப்படையினரின் நெஞ்சுக் கூட்டுப் பகுதியையும் துல்லியமாகத் துளைத்தன.

ரத்தம் 37°C வெப்பநிலையில் உறைபனித் தரையில் தெறித்து, மெல்லிய ஆவியாக எழும்பியது.

சுதாரித்த கட்டார் சிங் தன் ரிவால்வரை இடுப்பிலிருந்து உருவ முயன்றான்.

ராபின் பாய்ந்து, அவனது மணிக்கட்டைப் பற்றி முரட்டுத்தனமாகத்திருப்பினான். மடாக்! ரேடியஸ் எலும்பு முறிந்த சத்தம் கேட்டது. ரிவால்வர் தரையில் விழுந்தது.

அடுத்த கணமே, ராபினின் ஸ்டீல்-பொருத்திய பூட்ஸின் நுனி கட்டார் சிங்கின் கீழ் தாடையில் பலமாக இறங்கியது. மாண்டிபிள் எலும்பு நொறுங்கி, அவன் சுயநினைவை இழந்தான்.

மீதமிருந்த மூவரும் தங்களின் ஆயுதங்களை எறிந்துவிட்டு, தலைக்கு பின்னால் கைகளைக் கட்டி மண்டியிட்டனர்.

முழு ஆபரேஷனும் முடிந்த நேரம்: 210 வினாடிகள்
நேரம்: 01:24:30

அதிர்ச்சியில் இருந்த 23 பெண்களையும், ஏ-டீம் வீரர்கள் தங்களின் ‘தெர்மல் போர்வைகள்’ கொண்டு போர்த்தி, வெளியே நிறுத்தியிருந்த இரண்டு அடையாளங்களற்ற கவச வாகனங்களுக்குள் மிக அமைதியாக மாற்றினர்.
இந்த வாகனங்களில் ‘ஜிபிஎஸ் ஜாமர்கள்’ பொருத்தப்பட்டிருந்ததால், எந்த செயற்கைக்கோள் அல்லது உள்ளூர் சிக்னலாலும் இவற்றைக் கண்காணிக்க முடியாது.

ராபின் தன் கைகளிலிருந்த டேக்டிகல் கையுறைகளைக் கழற்றிவிட்டு, காயமடைந்த குற்றவாளிகளுக்கு விலங்குகளைப் பூட்டினான்.

தன் சாட்டலைட் டெலிஃபோனில் பிரத்யேக ‘256-பிட் என்கிரிப்டட்’ அலைவரிசையை இயக்கினான்.
மறுமுனையில் ……

"விபா! இன்னிக்கு நைட் சச்சின் கா தாபா! ஐ பிக் யூ!”

“ராபின்! என்ன ஆச்சு?ஐயாம் நர்வஸ்?”

“எது என்ன ஆச்சு?”

“விளையாடாத ராபின்! அந்த பெண்கள்..?”

ஓ அதா? ஆபரேஷன் கோட் ரெட் முறியடிக்கப்பட்டது. இலக்குகள் மீட்டெடுக்கப்பட்டன. எதிரிகள் வீழ்த்தப்பட்டனர், டி எம் மேடம்,!

"ராபினின் குரலில் எந்த உணர்ச்சியுமில்லை. ஒரு இயந்திரத்தின் துல்லியம் மட்டுமே இருந்தது.

"அந்த . எம்.எல்.ஏ-வின் தரப்பிலேர்ந்து…………….?"

"மே பி இன் அனதர் டென் மினிட்ஸ்! ஆனால், அவனது ஆட்கள் காணாமல் போன இடம் ஒரு ப்ளாக் ஹோலாக மட்டுமே இருக்கும்."

“வாவ்! யூ ஆர் கிரேட் ராபின்!”

“விபா! அந்தப்பெண்களை என்ன செய்வது?”

“என்ன செய்வதா? அதே ஹோமில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும். நான் போலீஸ் ஃபோர்ஸ் அனுப்புகிறேன்!”

“வாட் நான்சென்ஸ்!”

“ராபின்?”

“அப்ப அந்த ஆபரேஷனுக்கு என்ன அவசியம்? முன்னமேயே நீங்க போலீஸ் ஃபோர்ஸ் அனுப்பியிருக்கலாமே?”

“ராபின்?

விபா! உன் போலீஸ் ஃபோர்ஸ் ஏன், என் போலீஸ் ஃபோர்ஸ் யாரையும் நம்ப முடியாது. எல்லாரும் எம் எல் ஏ சுபேதார் சிங்கின் பே ரோலில் இருப்பவர்கள்! இன்னொரு குண்டார் கூட்டம் வந்து அவங்களை அள்ளிட்டு போய்டுவாங்க!”

“ஓ மை காட்! இப்ப என்ன செய்யலாம்? அவங்களை எங்க கொண்டு போய் வெக்கறது? அண்ட் எவ்வளவு நாள்?”

"விபா! டி எம்ல தொடங்கி யாரையும் டிபெண்ட் பண்ணாதே! லக்னோவுல உன் காண்டாக்ட் யாராவது…?”

“ராபின்! நோ! நீதான் ஹெல்ப் பண்ணணும்? உன்னோட முந்தின பாஸ்! அந்த மந்திரி..?”

“ம்ஹும்! நா ஏற்கனவே யோசிச்சுட்டேன். ஹி ஈஸ் நாட் இன் தி கண்ட்ரி!”

“இப்ப அந்த பொண்ணுங்க..?”

“லாரியில ஏத்தியாச்சு! தே ஆர் சேஃப் நவ். பட் நாட் ஃபார் லாங்!”

”ராபின்!கேன் யூ கிவ் மெ டென் மினிட்ஸ்! ஐ வில் கால் யூ பேக்!”

”பாய்ஸ்! ஹேவ் ய பஃப்! மேடம் பாஸ் வில் கால் மி!”

விபா மணி பார்த்தாள். இரண்டு மணி. கொஞ்சம் தயக்கம். பிறகு ஃபோனை எடுத்தாள்.

“அண்ட் ஹூ ஈஸ் திஸ்?”

அதிகாரக்குரலில் தூக்க கலக்கம்.

“விபா? யூ? அட் திஸ் ஹவர்? சொல்லு?”

உடனே யதார்த்த்துக்கு திரும்பின வேகம்.
விபா விவரித்தாள்.

“கேன் யூ ஹெல்ப் மி?”

ஏழே ஏழு வினாடிகள் வெறும் மூச்சு சப்தம் மும்பைக்கும் ஈட்டாவுக்கும் நடுவே.

“எவ்வளவு பெண்கள் சொன்னாய்? இருவத்தி மூணு பேரா? மை காட்! ஓகே! கிவ் மி ஃபிஃப்டீன் மினிட்ஸ். ஸ்டே பை தி ஃபோன்!”

விபா முன்னும் பின்னும் நடந்தாள். டேபிளை கலைத்தாள். ஒழுங்கு படுத்தினாள். டீ போட்டுக்கலாமா என்று சமையல் ரூம் வரை போய்விட்டு திரும்பினாள். மாடி ஜன்னல் வழியே பனிபடர்ந்த பின்னிரவுத்தெரு ரம்மியமாக தெரிந்தது. ஒரே ஒரு நாய் குளிர் தாங்காமல் உடலை சிலிர்த்துக்கொண்டு எதிர்ப்புறம் ஓடியது.

ஃபோன்!

“விபா! காஸ்கஞ்ச் டெல்லி பாசேஜுல இருக்கும் எல்லா செக் போஸ்டுக்கும் ஆர்டர் குடு. வரும் ஆறு லாரிகளை நிறுத்தக்கூடாது. நோ எண்ட்ரி ரிகார்ட்.!”

லாரியா? என்ன வரப்போகிறது?

“கண்டெய்னர்ஸ்! டெல்லியில என் கம்பெனியோட ஆறு ஷிப்பிங் கண்டெய்னர்ஸ் இருக்கு. மாடுலர் டைப். உள்ளே ஹீட்டர், பெட் எல்லாம் இன்-பில்ட். சப் ஏசி-ஹீட்டர் செட்டிங் ஹை. ஆனா, அங்கிருந்து ஈட்டாவுக்கு லாரி வர குறைஞ்சது ஆறு மணி நேரம் ஆகும்."

"ஆறு மணி நேரமா?..."

"கிரீன் காரிடார் கொடுத்தா நாலு மணி நேரம். செக் போஸ்ட்ல என் லாரிங்க நிக்கக் கூடாது."

"நான் நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறேன். ஒரு டோல் கேட்லயும் உன் லாரி நிக்காது. ராபினோட எஸ்கார்ட் வரும்."

ராபின்?

விபா முகம் சிவக்கவெல்லாம் இல்லை. ஆனால் லேசான ஒரு கீற்றுப்புன்னகை.

“பின்னால் சொல்கிறேன்!”

“டோன்’ட்ஃபர்கெட் டு இன்வைட் மி ஃபார் தி என்கேஜ்மெண்ட்!”

பளீரென பதில் அந்தப்பக்கம்.

“ஓகே! நானும் இதோ புறப்பட்டு காஸ்கஞ்ச் மெயின் செக் போஸ்டுக்கு வந்துடறேன்.

மணி 6.00.

தேசிய நெடுஞ்சாலை 91.

சீறிப் பாய்ந்தன பிரம்மாண்டமான ஆறு லாரிகள். சிவப்பு விளக்குச் சுழல, முன்னே ராபினின் ஜீப்.
பனி மூட்டத்தில் லாரிகளின் ஹெட்லைட் வெளிச்சம் மஞ்சள் பட்டைகளாக விழுந்தது.

விபா ரோட்டோரத்தில் நின்றுகொண்டிருந்தாள். கையில் சுடச்சுட காபி. அவளது மூச்சுக்காற்று புகையாக வெளியேறியது.

சுக்லா பயந்து போய் அருகில் வந்தார். "மேடம்ஜி... யே கியா ஹை? கவர்ன்மெண்ட் ஆர்டர் இல்லாம பிரைவேட் லாரியை உள்ள விடறீங்களே? உங்களுக்குப் பிரச்சனை வரும்ஜி..."

விபா காபியை ஒரு மடக்கு குடித்தாள்.

"பிரச்சனை வந்தா வரட்டும் சுக்லாஜி.ஆப் சப் கம்ப்ளீட் கரோ!"

மணி 700.

டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் ஆஃபீஸின் பின்னால் இருக்கும் காலி இடம்.

லாரியில் வந்த ஆறு ஆசாமிகளும் பனிக்கு நடுவே வேலை செய்தனர். டங்... டங்... இரும்புச் சட்டங்கள் இணையும் சத்தம். லேசர் லைட்கள் இருளைப் பிளந்தன.
லாரிகளில் இருந்து தயாராக வந்த வீடுகள், அடுத்தடுத்த நிமிடங்களில் பூமிக்குள் இறங்கின.

"சுக்லாஜி.. ஹீட்டர் கனெக்ஷன் ஓகேவா?"

சுக்லா ஒரு கண்டெய்னருக்குள் எட்டிப் பார்த்தாள். கதவைத் திறந்ததும் வெதுவெதுப்பான காற்று முகத்தில் அடித்தது.

"சூப்பர் மேடம்ஜி. பஹுத் படியா! "

"பொண்களை உள்ளே மாத்து."

நவீன, பாதுகாப்பான, கதகதப்பான மாடுலர் வீடுகள். முள்வேலி பாதுகாப்பு. உள்ளே 23 சிறுமிகள் கதகதப்பான மெத்தையில் நிம்மதியாக படுத்துக் கொண்டிருந்தார்கள்.

விபா ஃபோன் அதிர்ந்தது.

"டெலிவரி கம்ப்ளீட், ஹோகயா க்யா, மேடம் கலெக்டர்.?”

விபா லேசாகச் சிரித்தாள். கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர்.

"தேங்க்ஸ் தீதி. தும்னே கமால் கர் தியா!"

"ஓகே. பேக் டு பிஸினஸ்! அந்தப்பொண்ணுங்களை என்ன செய்யப்போகிறாய்?”

“இப்போதைக்கு கண்டெய்னர்லயே! ஐ ஹேவ் டு திங்க் ஆஃப் ய பிளான்!”

“நான் சொல்லட்டுமா?”

“யெஸ் அஃப் கோர்ஸ்!”

“அவர்களை நான் அழைத்துக்கொள்கிறேன்.
மும்பையில எங்க ஆஷா சதன் ஹோமுல அட்மிட் பண்ணிடறேன். ஆனா எனக்கு ஒரு வாரம் டைம் வேணும்! பர்மிஷன், கிளியரன்ஸ் அண்ட் ஆல் தட்!”

வாவ்! யூ ஆர் ய டார்லிங்!”

அதெல்லாம் உன் ராபின் கிட்ட வெச்சுக்கோ! ஆனா ஒரு கண்டிஷன். கோயி மீடியா நஹி, கோயி பப்ளிசிட்டி நஹி. என் போர்டு ஆஃப்டைரக்டர்ஸ்க்கு தெரிஞ்சா நான் காலி! உன் வீட்டுக்கு சமையல் உதவிக்குதான் நான் வரவேண்டும்!”

“வாவ்! வசுந்தரா என் வீட்டு சமையலுக்கா? வாட் ய ஹானர்!”

“அண்ட் மை டியர் விபா! ஐ நோ யூ வில் செலிப்ரேட் வித் ராபின் டுநைட்! பட் கீப் ய டிஸ்டன்ஸ்!”

அந்தப்பக்கம் ராயசமான குறும்பில் ஒலித்தது வசுந்தராவின் குரல்.

Wednesday, 12 August 2026

 வெள்ளி...இல்லை இல்லை..விலாஸினி...!




நான் நீடாமங்கலத்துக்கு வந்து ரெண்டு நாள்தான் ஆயிருந்தது.
ஒரே போர். இந்த ஊர் சரியான கிராமம். எங்க மாமா வீட்டுக்கு வந்திருக்கிறேன். அம்மாவோட தொணதொணப்பு தாங்காமத்தான் வந்தேன்.
”இதப்பாரு, இதுதான் உனக்கு கடைசி சான்ஸ்! ஆச்சு அடுத்து ஐ ஐ டி எஞ்சினீரிங் அது இதுன்னு நீ வெளி ஊருக்கெல்லாம் போய்ட்டேன்னா, இனிமே மெட்ராஸுக்கே நீ வருவியோ என்னமோ! நம்ம சொந்த ஊருடா நீடாமங்கலம். மாமா பெரிய பண்ணையார். எனக்குமே அங்க நிலமெல்லாம் இருக்கு. மாமாதானே பாத்துக்கறா. ரொம்ப ஆசைப்படறா. உனக்கேத்த வசதியெல்லம் பண்ணித்தருவா. ஆள் படையெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு உண்டு. உனக்கு தொந்திரவே இருக்காது. இப்ப ஒரு ரெண்டு மாசம் போய் இருந்துட்டு வந்துரு.”
அலுத்துக்கொண்டேதான் வந்தேன். மாமா எம்மேல ஆசையாத்தான் இருப்பார். மெட்ராஸ் மருமானுக்குக்காக மாடில தனி ரூம் கொடுத்து, அதுல ஃபேன் எல்லாம் மாட்டி, கட்டில் போட்டு வசதி பண்ணியிருந்தார்.
”நீ மெட்ராசுல சௌகரியமா வளர்ந்த பையன். நீ பாட்டுக்கு சுதந்திரமா மாடியில இரு. வெளில போணும்னா சொல்லு. முனியன வண்டி கட்டச்சொல்றேன். கும்மோணம் போய்ட்டு வா. ராத்திரி டெண்ட்டுல படம் போ. மாமிகிட்ட சொல்லி வேணுங்கறதப்பண்ணித்தரச்சொல்றேன்!”
எனக்கு ஒண்ணுமே பிடிக்கவில்லை. சரியான போரான ஊர். மாடில எனக்குக்கொடுத்திருந்த ரூமின் வலப்பக்கம் இருந்த சாளரத்தின் ஜன்னல் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பேன். நாள் முழுவதும் வேடிக்கைதான்.
வீட்டு வாசலில் ஏழேட்டு மாடுகள் கட்டி, ஒரே சாணி வாசனை. அழுக்கு குப்பை, எனக்கு அருவருப்பாக இருக்க, நான் மாடியிலேயெ ஒடுங்கினேன். சாப்பாடு கூட நேரத்துக்கு மாடிக்கே அத்தை அனுப்பிடுவா. சாப்பிட்டு மறுபடி மாடி ஜன்னல். முதல் இரண்டு நாட்கள் விட்டேத்தியாக சூன்யத்தைப்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மெதுவாக காட்சிகள் கண்ணில் விரிய சுவாரஸ்யம் தட்ட ஆரம்பித்தது.
ஜன்னல் வழியாகத்தெரியும் கிழக்குப்பக்க ஒத்தையடிப்பாதை புழுதி படிந்து இருக்கும். இங்கொன்றும் அங்கொன்றுமாய்க்குடிசைகள். அவற்றில் பறக்கும், நடக்கும் கோழி, குஞ்சுகள். ஒன்றிரண்டு முருங்கை மரங்கள். கூரைமேல் படந்த தர்பூசுக்கொடி. வாசலில் மஞ்சளாகப்பூத்திருக்கும் அரளி.
ஜன்னலுக்கு நேர் எதிரே இந்தப்பக்கம் மொட்டை மாடி. துப்புரவாக பெருக்கியிருக்கும். பகலில் நடக்கவே முடியாத படி சூடு பொரியும். இரவு குளிர்ந்து போயிருக்கும்.
வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய தூங்கு மூஞ்சி மரம். படர்ந்து கிளைகள் கொண்டு ஏதோ மாமா வீட்டை தானே காவல் காப்பது போல நிற்கும். அந்த மரம் எனக்கு ஒரு பெரிய பொழுது போக்கு. காலை வேளைகளில் இரண்டு அணில்கள் ஓடி ஓடி விளையாடும். ஒன்றிரண்டு காக்காய்கள் இங்கும் அங்குமாய்ப்பறக்கும். ஒரு மாதிரி கபம் கட்டின தொண்டையோடு கரையும். ஒரு மைனாவும் பார்த்தேன். விடியற்காலையில் காதைத்துளைக்கும் கூவல். சில கூவல்களுக்குப்பின் அமையாகி விடுகிறதோ இல்லை இரை தேடிப்போய்விடுகிறதோ. அப்புறம் அடுத்த நாள் காலையில்தான் மறுபடி கூவல்.
ஒத்தையடிப்பாதையில் நடமாட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.
பொழுது புலருவதற்குள்ளாகவே தலையில் முண்டாசு கட்டின ஆட்கள் வயல் வேலைக்கு கிளம்புவார்கள். அவர்கள் பினனால் வீட்டுப்பெண் பிள்ளைகள் தொடருவார்கள்.
கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன் ஒன்றிரண்டு சின்னப்பையன்கள் நீண்ட குச்சியுடன் ஏழெட்டு ஆடுகளை ஓடிக்கொண்டு போவார்கள்.
அவ்வப்போது டீவிஎஸ் 50 யில் சிலர். ஒரே ஒரு டிராக்டர் தட் தட்டென்ற சத்தத்துடன் போகும்.
பதினோரு மணி வாக்கில் ஒரு தபால்காரர் சைக்கிளில் வருவார். லெட்டர் இருக்கிறதோ இல்லியோ. மாமா வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி அத்தை கொடுக்கும் மோரை வாங்கிக்குடித்துவிட்டுப்போவார். சற்று தூரத்தில் அந்தச்சின்ன வீட்டின் வாசலில் ”போஸ்ட்” என்று அவர் கொடுக்கும் குரல் எனக்கு கேட்கும். தினமுமா லெட்டர் வரும்!
மாமா வீட்டு மாடிக்கு இரண்டு படிகள் உண்டு. ஒன்று வீட்டு வாசல் அறையிலிருந்து நேராக மாடிக்கு போகும். இன்னொன்று கடைசியில் மேற்குப்பக்கமாக இறங்கி அந்த ஒத்தையடிப்பாதையின் திசையில் போய் வீட்டுக்கு வெளியில் முடியும். அதற்குப்படியே கிடையாது. நாம் இப்போது சொல்லும் ராம்ப் ஸ்டைலில் இருக்கும். நெற்க்கதிர்களை அந்த விஸ்தார மாடியில் காயப்போட அப்படியே தள்ளு வண்டியில் ஏற்றி மாடிக்குத்தள்ளிக்கொண்டு வரா மாதிரி தாத்தா கட்டியிருந்தார். வேலயாட்களும் முன்பெல்லாம் அது வழியாகத்தான் ஏறி வருவார்களாம். இப்போதெல்லாம் வேலை செய்பவர்கள் சமையல் வரை புழங்குகிறார்கள் என்று மாமா சொல்லுவார்.
அன்னிக்கு காலையில் எப்போதும்போல டிராக்டர் போனவுடன் ஒரு மாட்டு வண்டி வந்தது. கிணிங் கிணிங் என்று மணிகள் சத்தம். சற்றுத்தள்ளியிருந்த குடிசை வீட்டு வாசலில் நிற்க ஒரு வயதான பெண் இறங்கினாள். அவளைத்தொடர்ந்து அந்த சின்னப்பெண். பன்னிரெண்டு பதிமூணு வயசு இருக்கலாம். ரெட்டைப்பின்னல். உருண்டை முகம். நிச்சயம் மெட்ராஸ் இல்லை.இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தது. நல்ல சிவப்பு. குண்டு கண்கள். ஜன்னலில் என் முகம் தெரிந்திருக்கும். கண்கள் சிரித்தன. நான் கையை ஆட்டினேன். பதில் கை ஆட்டல். பிறகு உள்ளே போய்விட்டது.
நான் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஜன்னலுக்கு வந்தேன். பொட்டை வெயில். ஒத்தையடிப்பாதையில் நடமாட்டம் குறைந்து விட்டிருந்தது. வெயிலின் உக்கிரத்தாலோ, சாப்பிட்ட பருப்புருண்டை மோர்க்குழம்பாலோ கண்ணயர்ந்தது.
சிலுங்கென்ற சத்தம். கொலுசா?
படக்கென்று முழித்துக்கொண்டேன்.
அவள்தான். தயங்கித்தயங்கி வந்தாள்.
வா!”
“ உன் வீடா?
ஆமாம்
நான் வரலாமா?
ஓ நிச்சயமா?
உன் பேர் என்ன?
சொன்னேன்.
உன் பேர்?
வெள்ளி! இல்ல இல்ல, விலாசினி!
வெள்ளி இல்ல இல்ல விலாசினின்னு ஒரு பேரா?
சிரித்தது.
போரடிச்சது! அதான் வந்தேன்!
எனக்கும் போர்தான்.
இப்படியே ஒரு பத்து நிமிஷம் பேசினோம்.
நா போறேன். அம்மா தேடுவாங்க.
ஓடி விட்டாள்.
மாலையில் மறுபடி வந்தாள்.
காரம்போர்டு விளையாடலாமா?
இரண்டு கேம் விளையாடினோம். போய்விட்டாள்.
என்ன படிக்கற?
பத்தாவது?
அடுத்து என்ன?
ப்ளஸ் டூதான்!
காமர்ஸா?
ஆமாம். எனக்கு கணக்கே வராது.
ரொம்ப ஈஸியாச்சே!
ம்ஹும் எனக்கு வாணாம்.
அன்று மாலை ஏனோ மழை பெய்தது. நனைந்துகொண்டே ஓடி வந்தாள். காரம் விளையாடினோம். ஜன்னல் வழியாக மழை பார்த்தோம். சட்டென்று மொட்டை மாடிக்குப்போய் நனைந்தாள்.
வா வா ஈரமாய்டும்
பரவாயில்ல. நனைந்துவிட்டு பாவாடையைப்பிழிந்து விட்டு மறுபடி காரம்.
தூரத்தில் “வெள்ளீ” குரல் கேட்க ஓடிவிட்டாள்.
ஒரு வாரம் எனக்கு மலர்ந்த நாட்கள். அவள் எப்போது வருவாள் என்று எதிர்பார்க்கவே ஆரம்பித்துவிட்டேன். மெட்ராஸ், எண்ட்ரன்ஸ் பரிட்சை, எல்லாம் மறந்துவிட்டேன். வெள்ளியுடனான் நேரங்கள் பறந்த வண்ணம் இருக்க, அவள் இல்லாத போது முன்னைவிட சூன்யமாக இருந்தது.
அன்று காலை மறுபடி வந்தாள்.
நா போறேன்.
இப்பவேவா?
இல்ல இன்னிக்கு சாயங்காலம் போறேன்
எங்க?
ஊருக்கு!
மாட்டு வண்டி வந்தது. ஏறும்போது என் ஜன்னலைப்பார்த்தாள். நான் கையை ஆட்டினேன். அவளும் கையை ஆட்டினாள். வண்டிக்குள் ஏறினாள். ஜல் ஜல் என்ற சத்தத்தோடு அந்த வண்டி அசைந்து அசைந்து போயிற்று.
அடுத்த நாலு நாளும் நான் ஜன்னலைத்திறக்கவே இல்லை. நாலாம் நாள் மெட்ராசிலிருந்து அம்மா வந்துவிட்டாள். அன்று இரவே நாங்களும் மெட்ராசுக்குப்புறப்பட்டு விட்டோம்.
ராகவ்! சாரி ஐயாம் லேட்! இன்னிக்கு ஜூடி கழுத்தறுத்துட்டா! அவளோட ப்ராஜக்ட் முடிக்காம, கஸ்டமர் கால் வேற. நானே அவ வேலயையும் முடிச்சு கஸ்டமர்ட்ட பேசி..வுஃப்! சாரி! நீ சாப்டியா?”
இல்ல இன்னும் இல்ல.
நாளைக்கு சான்ஃப்ரான்ஸிஸ்கோ போணும்! கார்த்தால ஆறு மணி ஃப்ளைட்! பார்பராவ எட்டு மணிக்கு வரச்சொல்லியிருக்கேன். அவ குக் பண்ணி வெச்சிடுவா! நா சாயங்காலம் வந்துடறேன்! சமாளிச்சிப்பியா?”
நோ ப்ராப்ளம்! நீ போய்ட்டு வா!
என்னதான் பண்ணிண்டு இருந்தே பால்கனில உட்கார்ந்துண்டு?
இல்ல சும்மாதான்..அப்படியே யோசிச்சுண்டு…....
என்ன நீடாமங்கலாமா? ம்..? அதென்ன அவ்வளவு அப்செஷன் நீடாமங்கலம் நாட்கள் மேல!”
ஒண்டர்ஃபுல் நாட்கள் ஆச்சே!
எனக்கு அந்த மாதிரி அந்த நாட்கள் மேல ஒரு பிரமிப்பே இல்லியே! பட் ஐ லவ் யூ ஸோ மச்! அதானே முக்கியம்!
எஸ் மை டியர் வெள்ளி இல்ல இல்ல விலாசினி!
அடச்சே! இன்னும் எத்தனை நாளுக்கு நீ அதச்சொல்லியே என்னை கலட்டா பண்ணப்போறே! ஓகே இட்ஸ் வெரி கோல்ட்! உள்ள போலாம்
ராகவனின் வீல் சேரைத்தள்ளிக்கொண்டே உள்ளே போனாள் விலாசினி இல்ல இல்ல வெள்ளி.