Saturday, 23 June 2018

என்னமோ போன வாரக்கதையரங்கம் மீள் என்பதால் பலருக்கு அவ்வளவாக ருசிக்க வில்லை என்பது சோகையான லைக்கிலிருந்து தெரியவருகிறது.
எனவே அதை ஈடுகட்ட இன்னொரு கதை......
“ஓகே! ப்யூலா! அந்த பேஷண்ட் ராமசாமிய வரச்சொல்லு! கூட வந்திருக்கறது யாரு, அவன் ஒய்ஃபா?”
“எஸ் டாக்டர்!”
”வாப்பா ராமசாமி! உக்காரு! நீயும் உக்காரும்மா!”
வந்தவனுக்கு வயது நாற்பதுக்குக்கீழேதான். கண்கள் இருண்டு கிடந்தன. சோகையாக இருந்தான். முகத்தில் அவஸ்தையின் வலி மிச்சங்கள் தெரிந்த ஆயாசம். ஒல்லியாக இருந்தான். கொஞ்சம் சாதாரண பிளாட்ஃபார்ம் கடை சட்டை, பாண்ட்! கூட வந்த அவன் மனைவி வத்தக்காய்ச்சியாக இருந்தாள். நார்மலுக்குக் கீழான ஹிமாக்ளோபின் அளவு கண் சோர்வில் தெரிந்தது. சாதாரண புடவை, கசங்கின ப்ளவுஸ், கழுத்தில் மிக மெல்லிய சங்கிலி.
“வீடு எங்க உங்களுக்கு?”
“ராயப்பேட்டைங்க!”
“எங்க வேல பாக்கற?”
“துபாய்ல டிரைவரா இருக்கேன்!”
”என்னது துபாய்லயா?”
”ஆமா டாக்டர்!”
”ஏம்மா நீங்களும் துபாய்லயா இருக்கீங்க?”
”இல்லீங்க! இங்க இவங்க அண்ணன் அண்ணியோட இருக்கனுங்க!”
“வேலைக்கி போறீங்களா?
இல்லீங்க! வீட்டு வேல செய்யவே நேரம் சரியா இருக்குமுங்க. முதல்ல ஒரு டாக்டராண்ட எடுபிடி வேல செஞ்சேன்!”
“ஓ தட்ஸ் வெரி குட்! உங்க அண்ணன் என்ன செய்யறாரு?”
“அவருக்கு தனியா வேல ஒண்ணுமில்லங்க! நா அனுப்பற பணத்த வட்டிக்கு விட்டு பாத்துக்கறாருங்க!”
அவினாஷ் உள்ளே வந்தான்.
“அவினாஷ்! ரிப்போர்ட் பார்த்தியா?”
”பாத்தாச்சு புரொஃபசர்! நத்திங் மேஜர்………!”
“ஓகே அவினாஷ்! நான் பாத்துக்கறேன்! த பாருங்க ராமசாமி! நாளைக்கு காலையில உங்க அண்ணன் அண்ணியோட என்ன வந்து பாருங்க! உங்க உடம்பு பத்தி குடும்பத்துல பேசணும். அப்புறம்தான் ட்ரீட்மெண்ட்! என்ன?”
“ஏங்க இவருக்கு ஆபத்துங்களா? இவருக்கு ஒண்ணுன்னா நா நாதியத்துப்போய்டுவங்க!”
“த சும்மாரு! சரிங்க! நாளைக்கி அண்ணாத்தையோட வர்ரனுங்க!”
அவன் கையைப்பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியேறியவர்களைப்பர்த்தார்.
“புரொஃபசர்! நத்திங் மேஜர்! ஜஸ்ட் பெப்டிக் அல்சர்! அவ்வளவுதான்!”
“ஐ நோ அவினாஷ்! ட்ரீட்மெண்ட் ராமசாமிக்கு இல்லை. அவன் குடும்பத்துக்கு!”
அடுத்த நாள் ப்யூலாவுடன் தன் அறைக்குள் நுழைந்த ஆசாமி ராமசமியின் கண்களோடு அந்த மூக்கின் நுனியும் சேர்த்து இருந்த காப்பியாக இருந்தான். உயர்தர சட்டை பாண்ட். கழுத்தில் தடித்த செயின். கையில் ப்ரேஸ்லெட் வளையக மாதிரி கனத்தது. உற்றுக்கவனித்ததில் டிஸ்ஸார்ட் வாட்ச்!
அவன் மனைவி அலட்சிய யுவதியா இருந்தாள். முகத்தில் சீராக அப்பிய பவுடர். நெற்றியில் வட்டப்பொட்டுக்கு அடியில் ஒரு சந்திர வளையம், அதனடியில் பளபளக்கும் சில்வர் புள்ளிகள். கழுத்தில் தடித்த ரெட்டை வடம். உடலோடு ஒட்டிய ஷிஃபானில் அரேபியா மிளிர்ந்தது. உயர்தர செண்ட் வாசனை கூடவே வந்தது.
“வாங்க! நீங்கதான் ராமசாமியோட அண்ணன் அண்ணியா? வாங்க ராமசாமி! நீங்களும் உக்காருங்க!”
“வரச்சொன்னீங்களாமே!”
குரலில் லேசான அலட்சியமும் அலுப்பின் சாயல்.
”ஆமாம்! உங்க தம்பிக்கு உடம்பு மோசமா இருக்கு. அவரால இன்னமே வேலைக்கெல்லாம் போக முடியாது. இத்தனை வருஷம் அவர் சம்பாதிச்சுப்போட்டாருல்ல, இனிமே நீங்கதான் அவரப்பாத்துக்கணும். வேளா வேளைக்கி சத்தான சாப்பாடு சாப்பிடணூம். இன்னம் ஆறு மாசத்துக்கு முழு ரெஸ்ட் தேவைப்படும், என்ன செய்வீங்களா? அப்பத்தான் அவர் பிழைப்பார்!”
மனைவி இப்போது மளுக்கென்று அழுதாள். அண்ணன் முகத்தில் அதிர்ச்சி. அண்ணி இன்னும் அலட்சியம் விலகாமல் நெற்றிப்புருவத்தை மட்டும் சுருக்கினாள்.
” சரிங்க! நாங்க பாத்துக்கறம்! இப்ப எதுனா மருந்து குடுத்துடுங்க!”
“அப்படியெல்லாம் சட்டுனு குடுத்துட முடியாது! நாளன்னிக்கி அடுத்த நாள். அதான் வியாழக்கிழமை அழச்சிட்டு வாங்க! ஒண்ணும் கவலைப்படாதம்மா! அண்ணன் அண்ணி இருக்காங்க இல்ல? நல்லா பாத்துக்கிட்டா ரெண்டு வருஷத்துல சரியாய்டுவாரு!”
அண்ணனும் அண்ணியும் சடாரென விலக, ராமசாமியும் மனைவியும் தயங்கித்தயங்கி நடந்தார்கள்.
“ப்யூலா! கெட் மி டாக்டர் சுந்தர் ஃப்ரம் துபாய் அல் சாஹ்ரா ஹாஸ்பிடல்!”
வியாழனன்று ராமசாமியும் மனைவியும் மட்டும் வந்தார்கள். மனைவியி கண்களில் இரவு அழுத சாயல். ராமசாமி இன்னும் சோர்வாக இருந்தான்.
“ப்யூலா! ரெண்டு காபி சொல்லு! என்ன ராமசாமி! அண்ணன் வீட்டை விட்டுப்போய்ட்டாரா, இல்ல உங்கள தொரத்திட்டாரா?”
ராமசாமி ஆச்சரியத்தில் பார்க்க மனைவிதான் பேசினாள்
“எங்கள தெர்த்திட்டாருங்க! இவரு சம்பாரிச்சதல்லாம் போச்சு! இப்ப நாதியில்லாம நிக்கிறமுங்க!”
அடக்கமாட்டாமல் கேவினாள். ராமசாமியும் கண் கலங்கினான்.
“ஒண்ணும் கவலைப்படவேண்டாம். உனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்ல!”
“என்ன டாக்டர்? ஒண்ணுமில்லையா?”
ஆமாப்பா! வெறும் பெப்டிக் அல்ஸர்தான்! ரெண்டு மாசம் ஜாக்கிரதையா சாப்பிட்டு வந்தீன்னா சரியாய்டும். நான் மருந்து தரேன்!”
“அப்ப அன்னிக்கி..?”
“அட போய்யா! இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே! அது சரி, துபாய் வேலய விட்டுட்டியா இல்ல மறுபடி போனா வேல குடுப்பாங்களா?”
“உடம்புக்கு முடியலைன்னு விட்டுடேனுங்க!”
”சரி பாஸ்போர்ட்டெல்லாம் எடுத்து வெச்சிருக்கியா?”
”அதெல்லாம் கவனமா எடுத்தாந்துட்டேங்க!”
“அதக்குடு! என் ஸ்டூடெண்ட் ஒர்த்தான் துபாய் ஆஸ்பத்திரில பெரிய டாக்டரா இருக்கான். அவங்க ஆஸ்பத்திரிக்கு டிரைவர் வேணுமாம். உன்ன அனுப்பறேன்னு சொல்லிட்டேன்! இன்னம் ரெண்டு வாரத்துல விசா டிக்கட்டெல்லாம் ஏற்பாடு பண்ணிடலாம்!”
“ரொம்ப நன்றிங்கய்யா!”
“த பாரும்மா! ஒரு வருஷம் கழிச்சு நீயும் துபாய் போக ஏற்பாடு பண்றேன்? சரியா?
”அய்யா! இவள எங்க விட்டுட்டு போவேனுங்க? ஆருமே இல்லியே?”
”அதெல்லாம் நா பாத்துக்கறேன்! ஏம்மா ஒரு வருஷத்துக்கப்றம்தான் நீ துபாய்க்கு போக முடியும். நர்ஸிங் கோர்ஸ் அனுப்பறேன், படிச்சு பாஸ்பண்ணு. அதே ஆஸ்பிட்டல்ல வேலைக்கு அரேஞ்ச் பண்றேன், என்ன?”
”அய்யா! அய்யா!”
“சரி இப்ப தங்க எடம் ஏதாவது இருக்கா?”
“அதுங்களா, நாங்க சமாளிச்சுக்குவங்க!”
”எப்படி சமாளிப்பீங்க? அதான் எல்லாத்தையும் ஏமாந்து நிக்கறீங்களே! ப்யூலா! வீட்டுக்கு லைன் போடு!”
“வேதவல்லி! ஹவ் ஆர் யூ?”
“இப்ப மணி பத்தாறது! எட்டு மணிக்குதானே வீட்லேர்ந்து போனீங்க! ரெண்டு மணி நேரத்துல என்ன ஹவ் ஆர் யூ? என்ன காரியம் ஆகணும் எங்கிட்ட?”
“யூ ஆர் ய டார்லிங் வேதம்! சரி, அவுட் ஹவுஸை க்ளீன் பண்ணி வெக்கச்சொன்னேனே?”
’ஆச்சு! இப்பதான் மாரி காசு வாங்கிண்டு போறான்!”
“ரெண்டு பேரையும் அனுப்பறேன்! அதான் நேத்தி ராத்திரி சொன்னேனே!”
“அனுப்புங்கோ! மாமிய ரெண்டு கைப்பிடி கூட சாதம் வெக்கச்சொல்லியிருந்தேன். கரமது, சாத்துமது எல்லாம் இருக்கு! வந்து சாப்பிடட்டும்! அப்புறமா நானே பேசிக்கறேன்!”
“ஓ வேதம்! யூ ஆர் என் ஏஞ்சல்!”
”போறும் போறும்! அனுப்புங்கோ!”
“ப்யூலா! சரவணன வரச்சொல்லு! இவா ரெண்டு பேரையும் எங்க வீட்ல மாமிகிட்ட அனுப்பிடு! இந்தா ரெண்டாயிரம் ரூவா. சரவணண்ட்ட குடுத்து இவாளூக்கு வேணுங்கற தட்டு முட்டு சாமானெல்லாம் வாங்கிக்கச்சொல்லு!” ராமசாமி! இந்தாம்மா! நீயும் கெளம்பும்மா!”
“டாக்டர்! எப்பேர்ப்பட்ட மனிசன் நீங்க! நாங்க எப்படி..?”
“ப்யூலா! என் டயத்த வேஸ்ட் பண்ணினா எனக்குப்பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா? டேக் தெம் அவே! அண்ட் நிர்மலாவ வரச்சொல்லு!நேத்து பெட் நம்பர் பதிநாலுக்கு இண்ட்ராமஸ்குலர் இஞ்செக்ஷன் போடணும்! இவ சப்க்யூடேனியஸா போட்டிருக்கா! இன்கார்ரிஜிபிள் ஐஸே!”
நிர்மலாவைக்காய்ச்சுவதற்குத்தயாரானார் டாக்டர் வைகுண்டம்!

Thursday, 21 June 2018

நாளைய (22, ஜூன் 2018) கதையரங்கம்.....
மேன்மக்கள்….மேன்மக்களே
”ஆல் இந்தியா ரைட்ஸ் வாங்கிட்டேன் ரங்கா! நீ என்ன பண்றே, உடனே நூறு பிரிண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிடு!”
“நூறு பிரிண்ட்டா சார்?”
“ஏம்ப்பா அதிர்ச்சி ரியாக்ஷன் தர்ரே! ஆமாம் நூறுதான். படத்த பாரு, புரிஞ்சுப்ப! என்னமா ஆக்ட் பண்ணியிருக்கான் அந்தபடுபாவி குரு தத்! கதை யாருதுன்னு நெனச்சே! ஒவ்வொரு சீனும் போட்டு தாக்கறது தெரியுமா?”
”ஆனாலும் நூறு பிரிண்டுங்கறது….! அந்த அளவுக்கு சீரியஸ் இந்தி படங்கள ரசிப்பாங்களான்னு..?”
”நீ அஸ்து கொட்டாத இப்பவே! முதல்ல போய் புரொஜக்ஷன்ல படத்த பாரு. மாணிக்கத்துக்கிட்ட சொல்லிருக்கேன். அவன் ரெடியா இருக்கான். கூடவே மாதிரிமங்கலத்தையும் அழச்சிண்டு போ!”
”சரி சார்!”
”இன்னிக்கு நாலு மணிக்குள்ள பப்ளிசிட்டிக்கு பட்ஜெட் போட்டுரு! சாரி கிட்ட சொல்லு. நா ஒரு தரம் பார்த்துட்டு அப்ரூவ் பண்ணிடறேன்! நீ டிஸ்டிரிப்யூஷன் வேலய ஆரமிச்சுடலாம்!”
அவர் டேபிளில் இண்டர்காம் அடித்தது. வெத்தலை போட்ட காரத்தை ஒரு தரம் தொண்டையக்கனைத்து சரி பண்ணிக்கொண்டார். பளீரென்று மின்னிய வெள்ளி டம்ளரில் காபியை ஒரு மடக்கு குடித்தார். இண்டர்காமை எடுத்தார்.
”ந்தாப்பா! நா சர்மா பேசறேன்! ரெண்டு ப்ளேட் போண்டாவும் ரெண்டு காபி ஸ்ட்ராங்காவும் குடுத்தனுப்பு!”
எதிர்முனையில் பேசின சர்மாவின் குரல் பெரியவரின் இண்டர்காம் வழியா எதிரே நின்று கொண்டிருந்த ரங்காவுக்குத்தெளிவாகக்கேட்டது.
சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது அவருக்கு. சர்மா இத்தோட காலி என்று தோன்றியது. இண்டர்காமை எடுத்த யார் பேசுவது என்று முதலில் கேட்காமலா பேசுவது?
சர்மா எம்டியிடம் ரெண்டு போண்டாவும் காபியும் ஆர்டர் பண்ணியிருக்கிறார்!
ரங்கா எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் எம்டியயே பார்த்துக்கொண்டிருந்தார். அவர்
இண்டர்காமை வைத்தார். ஒன்றுமே பேசவில்லை. ஒரு முறை தொண்டைய கனைத்துக்கொண்டார். மறுபடி இண்டர்காமை எடுத்தார். மூன்று நம்பர்களை அழுத்தினார்
பெல் சத்தம் பெரியவரின் இண்டர்காம் வழியாக ரங்காவுக்கு கேட்டது.
” ம்ம்……காண்டீனா?”
”………”
“சர்மா ரூமுக்கு ரெண்டு ப்ளேட் போண்டாவும் ரெண்டு ஸ்டிராங் காபியும் அனுப்பிடு, உடனே!”
இண்டர்காமை வைத்துவிட்டு ரங்காவைப்பார்த்தார்.
“நீ இன்னும் போலையா?”
ரங்கா நாலு மணிக்கு மறுபடி அவர் ரூமுக்கு போனார்.
“கொண்டா, பப்ளிசிட்டி பட்ஜெட் எவ்வளவு?”
“நாலு லட்சத்தி எழுபதாயிரம்!”
“என்ன உளர்ரே? நூறு பிரிண்ட்டுப்பா! சம்மந்தமே இல்லாம இருக்கே?”
“இல்ல சார்! நா பதனஞ்சு பிரிட்ண்ட்டுக்குத்தான் இந்த பட்ஜெட் போட்டிருக்கேன்!”
“என்னது பதினஞ்சா? ஏன்?”
“மன்னிக்கணும் சார்! நானும் படம் பாத்தேன்! அவ்வளவெல்லாம் மக்களுக்கு பிடிக்காது சார்!”
“என்ன சொல்றே? நா நேத்திக்கு பாம்பேல பார்த்தேன். கூடவே தாராசந்தும் பாட்லிவாலாவும்! என்னமா ரசிச்சாங்க தெரியுமா?”
“சார் அவங்கள்லாம் மேல் தட்டு சார்! சாதாரண ஜனங்க ரசிக்க மாட்டாங்க சார்! குரு தத் பிரமாதமா நடிச்சிருக்கார். கதையுமே பிரமாதம். உசந்த ரசனை வேணும் சார். அதனால என்னொட அபிப்பிராயம் முதல்ல பதினஞ்சு பிரிண்ட் போடுவோம். கல்கத்தா அப்புறம் சுத்து வட்டரத்துல ரிலீஸ் பண்ணுவோம். ஒருவாரம் பாத்துட்டு மீதியைப்பத்தி டிசைட் பண்ணலாம் சார்!”
ரங்கா அவரின் கோவத்துக்கு தயராய் இருந்தார். தஞ்சாவூர் வெசவா வெய்வார்! கேட்டுத்தான் ஆகணும்.
கோல்டன் டிப் பார்க்கர் பேனாவால் நெற்றியில் தேய்த்துக்கொண்டே யோசித்தார். முகத்தில் கடுகடுப்பு குறையவில்லை. அவர் டேபிளில் வைத்திருந்த பதினைந்து பிரிண்ட் பட்ஜெட் பேப்பரில் பச்சை இங்கில் கையெழுத்துப்போட்டு, அதை ரங்காவின் பக்கமாகத்தள்ளிவிட்டார்.
“ம்!”
மறுபடி ஃபைலைப்பார்க்க ஆரமித்து விட்டார்.
ரங்கா வெளியே வந்தார். வேர்த்துக்கொட்டியிருந்தது. நல்ல நேரம் போல இருக்கு, தப்பித்தார். உடனே சூடா காப்பி சாபிடணும்போல இருந்தது. காண்டீனுக்குப்போனார்.
காண்டீன் மானேஜர் உரக்க புலம்பிக் கொண்டிருந்தார்.
“யாருக்குப்பா தெரியும்! இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு இன்னொண்ணு! படியளக்கிறவர் என்ன வேணா பண்ணலாமே, நாம யார் கேள்வி கேட்கறது?”
காக்கி யூனிஃபார்ம் போட்ட எலக்ட்ரீஷியன் ஒருவன் இண்டர்காமைப்பிடுங்கி எடுத்து,க்கொண்டிருந்தான்.
ரங்காவுக்கு ஏனோ படபடப்பு அடங்கி மனசில் ஒரு நிம்மதி மலர்ந்தது.

Thursday, 14 June 2018

இன்றைய (ஜூன் 15, 2018) கதையரங்கத்தில்

பெயரில்லாத மெமோரியல் ஹால்

சீலிங் என்னவோ கொஞ்சம் குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக்காலத்திய பர்மா தேக்கு ரீப்பர் அடித்த உத்தரம். எட்டடிக்கு ஒரு நீள சீலிங் ஃபேன் இருக்கும். ஒன்றிரண்டு அழுக்காகவும், சில புதுஸு பெயிண்ட் அடித்தும், சில நீளமாகவும் சில உத்தரத்துக்கு வெகு அருகிலும், ஒருவித இமேஜ் அட்மிக்சர்த்தனமாக இருக்கும். சுவற்றில் வரிசையாக அடுத்தடுத்து ஜன்னல்கள் வைத்திருக்கும். ”சிமெண்ட்டை மிச்சப்படுத்த ஜன்னலா வெச்சுட்டான்யா” என்று சிலர் பேசிக்கேட்டிருக்கிறேன். நான் சொல்லுவது மெமோரியல் ஹால் என்னும் சின்ன ஆடிட்டோரியம்.

எங்கே?

என் ஸ்கூலில்தான்!

மறுபடி ஸ்கூலா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஆக்டன் நாஷ் எழுதிய நொஸ்டால்ஜியா பற்றிய கவிதையை சிபாரிசு செய்கிறேன். இப்ப மறுபடி மெமோரிய ஹால்.

இந்த மெமோரியல் ஹாலில்தான் தமிழ் மன்றக்கூட்டநடக்கும். வருஷத்திற்கு ஒரு முறைதான் அதுவும்! மற்ற நேரங்களில் காலியாகவே இருக்கும். நவம்பர் மாதங்களில் அடிக்கும் காற்றில் சில சமயம் ஒன்றிரண்டு கிளாஸ் ரூம்களின் கூரை டாப் எகிறிப்போய் வானம் பார்க்கும் நாட்களில் அந்த வகுப்புகள் மெமோரிய ஹாலுக்கு குடி பெயரும்.

“போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் நம்ம கிளாசும் ஒன்பதாவதும் கூரை அடி வாங்கினா ஜாலிடா!”

தேவராஜின் எதிர்பார்ப்புக்கு காரணம் ஒன்பதாவதில்தான் சாந்தா படித்தாள். போன வருஷ நவம்பர் மழையில் எங்கள் இரண்டு கிளாசும் மெமொரியல் ஹாலின் ஒவ்வொரு மூலையில் நடக்க, தேவராஜன் நாள் முழுசும் சாந்தாவையே பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்துகொண்டிருந்தான்.

“என்னமா எழுதறாபார்!”

“ என்னமா உக்காந்திருக்கா பார்!

சாந்தாவின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு “என்னமா” சேர்த்து எங்களை கடுப்பேற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு அடுத்த சீட் பாளையம் “டேய்! இந்த தரம் என் பக்கத்துல உட்கார்ந்தே, சொங்கிடுவேன், ஜாக்கிரதை!” என்று பயமுறுத்திவிட்டான். அவனுக்கு அத்தனை கடுப்பு.

இந்த சாந்தா பற்றி பராபரியாகக்காதில் விழும். லட்சணமான பென். அதனுடன் கூடவே வரும் சந்திரிகா பின்னலை முன்னாலும் பின்னாலும் ஸடைல அடித்தபடி வர, இது ரெட்டைப்பின்னலை ஒழுங்காக மடித்துக்காட்டிக்கொண்டு பதவிசாக வரும். முகத்தில் பயம் கலந்திருக்கும். கண்களில் பரபரப்பு தெரியும். பேச்சில் அதிகம் சத்தமே இருக்காது. பிருந்தா டீச்சர் கூட ஒரு தரம் “எனக்கு காது மந்தம்! சத்தமா சொல்லு” என்று டபாய்த்திருக்கிறார்.

அவள் அப்பா வசதியானவர் ஏதோ பெரிய மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைசெம்புதாஸ் தெருவில் வைத்திருக்கிறார் என்பார்கள். சில சமயம், அதுவும் மழை தூறினால், சந்தாவை காரில் கொண்டு விட்டுப்போவார்கள். ஒரு மாதிரியான அழுக்குப்பச்சை கலரில் இருக்கும் ஸ்டாண்டர்ட் பென்னெண்ட் கார்.

மெமோரியல் ஹால் தரை ஒன்றும் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. அங்கங்கே பெயர்ந்து மேடு பள்ளமாக இருக்கும். டும்மி சீனிவாசன் இலக்கண கிளாசில் தன் ஹெச் பி பென்சிலால் கோண்டு கிட்டத்தட்ட அரையடிக்கு தோண்டிவிட்டான். எதேச்சையாகப்பார்த்துவிட்ட டும்மி வாத்தியார் கோண்டுவை சரியாக விளாசிவிட்டார்.

“ எனக்கு ஏண்டா இங்க சமாதி தோண்டற! நா கிருஷ்ணாம்பேட்டைக்கெ போய்க்கிறேன்! படவா! எங்க, தலையாலே தான் தருதலால் செய்யுளைச்சொல்லு பார்ப்போம்!”

சுவர்களிலும் காரை வெளிவந்து புள்ளிபுள்ளியாக அசிங்கமாகத்தான் இருக்கும். போறாத்துக்கு பையன்கள் பென்சிலாலும் பேனாவாலும் தத்தம் இலக்கிய படைப்புக்களை அதில் பொறித்து வைத்திருப்பார்கள்.

நான் பத்தாவது படிக்கும்போதுதான் அது நிகழ்ந்தது.

ஒரு நாள் பிரேயரின் போது “ராணி மெய்யம்மை பள்ளியில் நாங்கள்” என்று ஸ்கூல் பாட்டுப்பாடி முடித்தவுடன் கலையத்தயரான்போது ஹெட்மாஸ்டர் எஸ் வி டி ம்க்கும் என்று தொண்டையக்கனைத்துக் கொண்டு பேசினார்.

”உங்களுக்கே தெரியும், நம்ம மெமோரியல் ஹால் இருக்கும் நிலமை. நாம எதுனா கூட்டம் நடத்தி பெரிய மனுஷர்களைக்கூப்பிடணும்னா இந்த ஹாலோட ஸ்திதி மோசமா இருக்கு. அவங்க வந்து பார்த்தா நம்ம ஸ்கூல் பேர் கெடும். அதை சரியா கட்டணும்னா கிட்டத்தட்ட மூவாயிரம் ரூவா தேவைப்படுது. நீங்கள்ளாம் வீட்ல சொல்லி கொஞ்சம் பண உதவி செய்யலாமே! வசதியான பசங்க இன்னும் நெறயச்செய்யலாம்!”

இந்தக்கால ஸ்கூல்களின் உரிமைகள் ஏதும் அறியாத அப்பாவியாய்க்கெஞ்சினார் ஹெட்மாஸ்டர். அடுத்த ஒரு வாரத்தில் டொனேஷன் குமிந்து மொத்தமாக நூத்தி ஏழு ரூபாய் கிடைத்ததாக கிருஷ்ணாயில் என்று பேர் பெற்ற டீகே சார் சொன்னார். அடுத்த மூன்று மாதங்களில் அப்படி ஒன்றும் டொனேஷன் கொட்டிவிடவில்லை.

முழுப்பரிட்சை முடிந்து லீவு விட்டுவிட, நாங்கள் பிரிந்து வீடு வந்தோம்..

இரண்டு மாசம் லீவுக்குப்பிறகு ஏதோ ஜென்ம ஜென்மமாய்ப்பிரிந்த காதலர்கள் போல ஜூன் மூன்றாம் தேதி முதல் நாள் ஸ்கூலுக்குப்போனால் பெரிய ஆச்சரியம்!

மெமோரிய ஹால் புத்தம் புதிசாகக்கட்டப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு, புது ஃபேன்கள் மாட்டப்பட்டு, தரையெல்லாம் நாங்கள் அப்பொதெல்லாம் அதிகம் பார்த்திராத மொசேக் என்னும் கற்களினால் இழைக்கப்பட்டு மிளிர்ந்தது. ஹாலைச்சுற்றி எப்போதும் அழுக்கு தண்ணீர் தேங்கிக்கிடக்கும் இடங்களில் இப்போது பிரம்புக்கட்டைகளால் வேலி மாதிரி போடப்பட்டு, அதில் செம்பருத்தி, கல் வாழை என்று கலர் கலர் ரகச்செடிகள் அசைந்தாடின.

அந்த வருடம் ஏனோ சாந்தா ஸ்கூலுக்கு வரவே இல்லை. தேவராஜ் இப்போதெல்லாம் பத்தாம் கிளாஸ் தமிழ் மீடியம் புனிதாவின் அசைவுகளுக்கெல்லாம் “என்னமா” சேர்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.

மெமோரியல் ஹாலின் முன் பக்கம், புதுசாக மாட்டப்பட்ட கதவுக்கு வெகு அருகில் வலப்பக்கத்தில் இரண்டடிக்கு ஒரு அடி அளவில் புதுசாக ஒரு செவ்வக கல்வெட்டு மாதிரி வைத்து ”சாந்தா மெமோரியல் ஹால் “ என்னும் பெயர் பளபளக்கிறது.

Thursday, 7 June 2018

இன்றைய (8 ஜூன் 2018) கதையரங்கத்தில் .......
காலம் கடந்து…
எப்போதும் போல ஒரு காலை.
சூடேறும் வெயிலும் அரக்கப்பரக்க நடமாடும் மக்களும் கோணா மாணா டிராஃபிக்கும் யூனிஃபார்ம் குழந்தைகளும் நட்ட நடு ரோடில் வண்டியை நிறுத்தி அட்ரஸ் கேட்கும் ஓலா டாக்ஸி ஆசாமியும்…..
ஜெனெரல் ஆஸ்பத்திரியின் காலைகள் வேறு மாதிரியானவை.
எப்போதும் போல என்று சரியாக நாலு வரிகளூக்கு முன் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா நாட்களிலும் நிறைந்து இருப்பது வலி, ரத்தம், அழுகை, கெஞ்சல், அதட்டல், மருந்து நெடி, சள சள வென பேச்சுக்குரல், அழுக்குப்படிந்த நோயாளிகள், துல்லிய வெள்ளையில் டாக்டர்களூம் நர்ஸும்…
“அவினாஷ்! நோட்டீஸ் த பாராமீட்டர்ஸ்! வெரி க்ளியர்!”
“எஸ் சீஃப்!”
”யாரு பொஸிட்ரான் எமிஷன் பண்ணச்சொன்னது?”
“ம்.ம்….நாந்தான் டாக்டர்!”
“குட் டெஸிஷன் அவினாஷ்! சி டி யிலயோ எம் ஆர் ஐயிலயோ இவ்வளவு க்ளியராத்தெரிஞ்சிருக்காது!”
“தாங்க் யூ புரொஃபசர்!”
”இவரோட கூட யாரு வந்திருக்கா?”
“ஒய்ஃபும் பிள்ளையும் புரொஃபஸர்!”
”ப்யூலா! என் ரூமுக்கு அழச்சிண்டு வா!”
வாங்கம்மா! வாங்க! சிட் டௌன்! எப்பலேர்ந்து வலிக்கறதுன்னாரு?”
“போன மாசம் ஒரு நா இவர் குரல் கம்மியிருந்தது! சத்தமே வராம காத்தா வந்துது டாக்டர்!”
டாக்டர்ட்ட காமிச்சீங்களா?”
“அப்ப இல்ல டாக்டர்!”
ஏன்?”
”இவர்தான் ”வேற வேலையில்ல! நேத்து பன்னீர் பொகயல ஜாஸ்தியாடுத்து! அதான்! ரெண்டு தரம் கார்கிள் பண்ணாச்சரியாய்டும்ன்னுட்டாரு!”
“சரியாகல, இல்லியா?
”உடனே கும்மோணத்துல துக்காம்பாளையத்தெருவுல் டாக்டர் மாதவராவ்ட்ட காமிச்சோம்!”
“டாக்டர் மாதவராவ்? ஸ்பெஷலிஸ்டா?”
“இல்ல இல்ல! அவர் ஆயுர்வேத டாக்டர்!”
”என்னது ஆயுர்வேதமா? சூரணம் குடுத்தாரா?”
“சரியாச்சொல்றீங்க டாக்டர்! உடம்பு சூடு கண்டுருக்கு, இது ஆலோசக பித்தம்னு ஒரு சூர்ணம் குடுத்தார். அப்புறம் கீரை சேர்த்துக்க சொன்னார். தயிர் வாண்டாம்னுட்டார்.!
“சரி ஒண்ணும் குணம் தெரியலியா?
“இல்ல! அதான் நேரா இங்க வந்துட்டோம்!”
“அம்மா! அவரோட பழக்க வழக்கமெல்லாம் எப்படி?”
“ஜாலியான பேர்வழிங்க! நல்லா வக்கணையா சாப்பிடுவாரு! தினோம் வெத்தல சீவல் பன்னிர் பொகயலன்னு அதக்கிண்டே இருப்பாரு! இவருக்குனு முசிறிலேர்ந்து வரவழைச்சு போட்டுப்பாரு டாக்டர்!”
“இன்னிக்கு என்ன சாப்ட்டாரு?”
“ஒரு வாரமாவே ஒண்ணும் சாப்பிட முடியல டாக்டர்! தொண்டையில வலின்னாரு. முழுங்க முடியாம கஷ்டப்பட்டார். நீராகாரம்தான் குடுக்க முடிஞ்சது டாக்டர்! இருமி இருமி எச்ச துப்பிட்டே இருந்தாரு! அதான் டெஸ்டெல்லாம் முடிச்சுட்டு குடுக்கலாம்னு பொரிச்ச குழம்பும் கொட்டு ரசமும் பண்ணி எடுத்துண்டு வந்திருக்கேன் டாக்டர்! இப்ப அவருக்கு கொடுக்கலாமா?”
“என்னது கொட்டு ரசமா? அப்படீன்னா இன்னம்மா?”
“ப்யூலா! கீப் கொயட்! த பாருங்கம்மா அவரால முன்ன மாதிரி ஈஸியா சாப்பிட முடியாது! அவருக்கு தொண்டையில கான்சர் வந்திருக்கு!”
“அய்யோ! கான்சரா?”
“ஆமாம்மா! நீங்க கொஞ்சம் வெளில இருங்க! நான் எங்க டாக்டருங்கட்ட பேசிட்டு ட்ரீட்மெண்ட் சொல்றேன்!”
“டாக்டர்! அவர எப்படியாவது காப்பத்துங்க டாக்டர்! அடுத்த மாசம் அவரோட தங்கை பேரனுக்கு கல்யாணம். பட்டப்பாவத்தான் சமையலுக்கு ஏற்பாடு பண்ணனும். பால் பதிர் பேணி பண்ணச்சொல்லணும்னு பிளான் பண்ணிண்டு இருக்காரு! அவருக்கு கான்சர்ன்னா……?”
“ஒண்ணூம் பண்ண முடியாதும்மா! புகையிலய பல வருஷமா பழக்கம் பண்ணினா இப்படித்தான்! எதுக்கும் பாக்கறோம்மா ! நாங்களும் மனுஷங்கதானே!”
“ப்யூலா! கால் அவினாஷ், நிர்மலா அண்ட் ராகவன்!”
”வாட் டிட் யூ சீ அவினாஷ்?”
“ ஏழு செண்டிமீட்டருக்கு மேல இருக்கு புரொஃபசர்! அட்ஜாயினிங் டிஷ்யூல்லல்லாம் பரவியிருக்கு!”
“நிர்மலா?”
“ஸ்டேஜ் மூணு நிச்சயமா!”
“சான்ஸஸ் ராகவன்?”
“லெஸ் தேன் 10 பர்செண்ட் புரொஃபசர்!”
“ஓகே! ஐ அக்ரீ! ட்ரீட்மெண்ட்? நீ சொல்லு நிர்மலா?”
”சர்ஜரி உபயோகப்படாது புரொஃபசர்! இம்ப்ளாண்ட் ரேடியேஷன்! ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ரேடியேஷன் குடுத்துட்டு அப்புறமா கிமோவும் ஒண்ணு இல்ல ரெண்டு கோர்ஸ் புரொஃபசர்!”
“ ப்ராகியோவா இல்ல ரேடியோ-ஐஸொடாப்பா?”
“ ப்ராகியோ வில் பி டூ மச் புரொஃபசர்! ரேடியோ-ஐஸோடாப்தான்!”
” எவ்வளவு டோஸேஜ் குடுக்கப்போறே நிர்மலா?”
“ 45 – 60 Gy புரொஃபசர்!”
“அவினாஷ்? ரகவன்?”
“அக்ரீ டாக்டர்!”
”இன்னொரு விஷயம் புரொஃபசர்!”
“சொல்லு நிர்மலா!”
“ ரெண்டு மூணு நாள்ள மால் ந்யூட்ரிஷன் ஆய்டுமே ! அதனால சாப்பாட்டுக்கு நாஸோகாஸ்ட்ரல் பண்ணிடலாமா?”
“ நோ நோ நிர்மலா!”
“ஏன் ராகவன்?”
“ ரேடியேஷன் தரப்போறோம்! அதுவும் தொண்டையில! அதனால நாஸோகாஸ்ட்ரல் ஆபத்து! அப்டமினல் தான்!”
“அப்டமினலா? பாவம் ஆள் வண்ணமாச்சாப்பிடுவாராம்! அத்தனையும் போச்சு! ஓகே ஐ வில் கெட் ரெடி வித் அப்டமினல் இன்ஸிஷன்!”
“வெயிட் ராகவன்!”
“யெஸ் புரொஃபசர்!”
“இவருக்கு இன்ஸிசிவ் ஃபீடிங் வேண்டாம். முடிஞ்ச அளவு வாய் மூலமாவே குடுக்கட்டும்!”
“பட் புரொஃபசர்..?”
“இரு அவினாஷ்! எனக்குத்தெரிஞ்சு ஆசாமிக்கு லைஃப் இன்னும் ரெண்டு மாசம்தான்! நீ இன்ஸிசிவ் ஃபீடிங் போட்டா அவருக்கு ஒண்ணுமே இல்லைன்னு ஆயிடும். முழுங்க கஷ்டப்பட்டாலும் பிடிச்சத ருசிச்சு சாப்பிடட்டும். அப்டமினல் ஃபீடிங் கொடுமைய்யா! வெறுமனே ந்யூட்ரிஷன் மட்டுமேன்னா இருக்கற கொஞ்ச நஞ்ச வில் பவரையும் ஆசாமி விட்டுருவான்.!”
“ ஓகே புரொஃபசர்!
“ப்யூலா! சரவணனை வரச்சொல்லு!”
”கூப்டீங்களா டாக்டர்?”
“ஆமாம்! இந்தா சரவணா நூறு ரூபாய். நீ என்ன பண்றே, நேரா பாரிசுக்குப்போய் அகர்வால் பவன்னு நம்ம குறளகத்துக்கு எதிரே இருக்கற தெருவுல இருக்குமே?”
“தெரியும் டாக்டர்!”
“அங்க போய் பால் பதிர் பேணின்னு ஒண்ணு குடுப்பான். உடனே வாங்கிண்டு வா!”
“சரிங்க டாக்டர்!”
“ப்யூலா! பதிர்பேணி வந்தவுடனே அந்தம்மாட்ட குடுத்து அவருக்கு தரச்சொல்லு!”
ஓகே டாக்டர்!.
“அவினாஷ்! நிர்மலா! அவர் பதிர்பேணி சாப்பிடட்டும்! அதுக்கப்புறம் ஸ்டார்ட் யுவர் ட்ரீட்மெண்ட் !”
டாக்டர் வைகுண்டம் ஆயாசத்தோடு சுழல் நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு சுற்று சுற்றி எதிர் ஜன்னல் வழியே தெரிந்த, காலம் கடந்து கம்பீரமாக நிற்கும் அந்த சிவப்பு பிரிட்டிஷ் காலக்கட்டிடத்தைக் கண் கொட்டாமல் பார்த்தார்.