நாளைய (22, ஜூன் 2018) கதையரங்கம்.....
மேன்மக்கள்….மேன்மக்களே
”ஆல் இந்தியா ரைட்ஸ் வாங்கிட்டேன் ரங்கா! நீ என்ன பண்றே, உடனே நூறு பிரிண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிடு!”
“நூறு பிரிண்ட்டா சார்?”
“ஏம்ப்பா அதிர்ச்சி ரியாக்ஷன் தர்ரே! ஆமாம் நூறுதான். படத்த பாரு, புரிஞ்சுப்ப! என்னமா ஆக்ட் பண்ணியிருக்கான் அந்தபடுபாவி குரு தத்! கதை யாருதுன்னு நெனச்சே! ஒவ்வொரு சீனும் போட்டு தாக்கறது தெரியுமா?”
”ஆனாலும் நூறு பிரிண்டுங்கறது….! அந்த அளவுக்கு சீரியஸ் இந்தி படங்கள ரசிப்பாங்களான்னு..?”
”நீ அஸ்து கொட்டாத இப்பவே! முதல்ல போய் புரொஜக்ஷன்ல படத்த பாரு. மாணிக்கத்துக்கிட்ட சொல்லிருக்கேன். அவன் ரெடியா இருக்கான். கூடவே மாதிரிமங்கலத்தையும் அழச்சிண்டு போ!”
”சரி சார்!”
”இன்னிக்கு நாலு மணிக்குள்ள பப்ளிசிட்டிக்கு பட்ஜெட் போட்டுரு! சாரி கிட்ட சொல்லு. நா ஒரு தரம் பார்த்துட்டு அப்ரூவ் பண்ணிடறேன்! நீ டிஸ்டிரிப்யூஷன் வேலய ஆரமிச்சுடலாம்!”
அவர் டேபிளில் இண்டர்காம் அடித்தது. வெத்தலை போட்ட காரத்தை ஒரு தரம் தொண்டையக்கனைத்து சரி பண்ணிக்கொண்டார். பளீரென்று மின்னிய வெள்ளி டம்ளரில் காபியை ஒரு மடக்கு குடித்தார். இண்டர்காமை எடுத்தார்.
”ந்தாப்பா! நா சர்மா பேசறேன்! ரெண்டு ப்ளேட் போண்டாவும் ரெண்டு காபி ஸ்ட்ராங்காவும் குடுத்தனுப்பு!”
எதிர்முனையில் பேசின சர்மாவின் குரல் பெரியவரின் இண்டர்காம் வழியா எதிரே நின்று கொண்டிருந்த ரங்காவுக்குத்தெளிவாகக்கேட்டது.
சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது அவருக்கு. சர்மா இத்தோட காலி என்று தோன்றியது. இண்டர்காமை எடுத்த யார் பேசுவது என்று முதலில் கேட்காமலா பேசுவது?
சர்மா எம்டியிடம் ரெண்டு போண்டாவும் காபியும் ஆர்டர் பண்ணியிருக்கிறார்!
ரங்கா எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் எம்டியயே பார்த்துக்கொண்டிருந்தார். அவர்
இண்டர்காமை வைத்தார். ஒன்றுமே பேசவில்லை. ஒரு முறை தொண்டைய கனைத்துக்கொண்டார். மறுபடி இண்டர்காமை எடுத்தார். மூன்று நம்பர்களை அழுத்தினார்
இண்டர்காமை வைத்தார். ஒன்றுமே பேசவில்லை. ஒரு முறை தொண்டைய கனைத்துக்கொண்டார். மறுபடி இண்டர்காமை எடுத்தார். மூன்று நம்பர்களை அழுத்தினார்
பெல் சத்தம் பெரியவரின் இண்டர்காம் வழியாக ரங்காவுக்கு கேட்டது.
” ம்ம்……காண்டீனா?”
”………”
“சர்மா ரூமுக்கு ரெண்டு ப்ளேட் போண்டாவும் ரெண்டு ஸ்டிராங் காபியும் அனுப்பிடு, உடனே!”
இண்டர்காமை வைத்துவிட்டு ரங்காவைப்பார்த்தார்.
“நீ இன்னும் போலையா?”
ரங்கா நாலு மணிக்கு மறுபடி அவர் ரூமுக்கு போனார்.
“கொண்டா, பப்ளிசிட்டி பட்ஜெட் எவ்வளவு?”
“நாலு லட்சத்தி எழுபதாயிரம்!”
“என்ன உளர்ரே? நூறு பிரிண்ட்டுப்பா! சம்மந்தமே இல்லாம இருக்கே?”
“இல்ல சார்! நா பதனஞ்சு பிரிட்ண்ட்டுக்குத்தான் இந்த பட்ஜெட் போட்டிருக்கேன்!”
“என்னது பதினஞ்சா? ஏன்?”
“மன்னிக்கணும் சார்! நானும் படம் பாத்தேன்! அவ்வளவெல்லாம் மக்களுக்கு பிடிக்காது சார்!”
“என்ன சொல்றே? நா நேத்திக்கு பாம்பேல பார்த்தேன். கூடவே தாராசந்தும் பாட்லிவாலாவும்! என்னமா ரசிச்சாங்க தெரியுமா?”
“சார் அவங்கள்லாம் மேல் தட்டு சார்! சாதாரண ஜனங்க ரசிக்க மாட்டாங்க சார்! குரு தத் பிரமாதமா நடிச்சிருக்கார். கதையுமே பிரமாதம். உசந்த ரசனை வேணும் சார். அதனால என்னொட அபிப்பிராயம் முதல்ல பதினஞ்சு பிரிண்ட் போடுவோம். கல்கத்தா அப்புறம் சுத்து வட்டரத்துல ரிலீஸ் பண்ணுவோம். ஒருவாரம் பாத்துட்டு மீதியைப்பத்தி டிசைட் பண்ணலாம் சார்!”
ரங்கா அவரின் கோவத்துக்கு தயராய் இருந்தார். தஞ்சாவூர் வெசவா வெய்வார்! கேட்டுத்தான் ஆகணும்.
கோல்டன் டிப் பார்க்கர் பேனாவால் நெற்றியில் தேய்த்துக்கொண்டே யோசித்தார். முகத்தில் கடுகடுப்பு குறையவில்லை. அவர் டேபிளில் வைத்திருந்த பதினைந்து பிரிண்ட் பட்ஜெட் பேப்பரில் பச்சை இங்கில் கையெழுத்துப்போட்டு, அதை ரங்காவின் பக்கமாகத்தள்ளிவிட்டார்.
“ம்!”
மறுபடி ஃபைலைப்பார்க்க ஆரமித்து விட்டார்.
ரங்கா வெளியே வந்தார். வேர்த்துக்கொட்டியிருந்தது. நல்ல நேரம் போல இருக்கு, தப்பித்தார். உடனே சூடா காப்பி சாபிடணும்போல இருந்தது. காண்டீனுக்குப்போனார்.
காண்டீன் மானேஜர் உரக்க புலம்பிக் கொண்டிருந்தார்.
“யாருக்குப்பா தெரியும்! இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு இன்னொண்ணு! படியளக்கிறவர் என்ன வேணா பண்ணலாமே, நாம யார் கேள்வி கேட்கறது?”
காக்கி யூனிஃபார்ம் போட்ட எலக்ட்ரீஷியன் ஒருவன் இண்டர்காமைப்பிடுங்கி எடுத்து,க்கொண்டிருந்தான்.
ரங்காவுக்கு ஏனோ படபடப்பு அடங்கி மனசில் ஒரு நிம்மதி மலர்ந்தது.
No comments:
Post a Comment