Tuesday, 23 October 2018

எங்கோ இருந்தாலும்……

“அப்பாடி! இப்பவாவது ஒனக்கு புத்தி வந்துதே! எப்பப்பாரு வேல வேலன்னு..!”

“சும்மா இரும்மா! இப்பவும் நா முதல் வாரம் செமினாருக்குத்தான் போறேன்! அடுத்த வாரந்தான் பத்ரியும் சுதர்சனும் வர்ராங்க!”

“நெனச்சேன்! போறுண்டி இந்த டாக்டர், மருந்து ஹாஸ்பிடல்லாம்! ரெண்டு வாரத்துக்கு குடும்பத்தோட போய்ட்டுதான் வாயேன்!”

“அம்மா! உனக்குத்தெரியாதா! அப்ப ஏன் என்னை டாக்டருக்குப்படிக்க வெச்சே?”

”நானா படிக்க வெச்சேன்? நீயும் உங்கப்பாவுமா சேர்ந்து என்ன அழிச்சாட்டியம் பண்ணி மெடிக்கல் காலேஜுல சேர்ந்தே நீ?”

“சரி அதெல்ல இப்ப இண்டர்நேஷனல் கால்லயே வாக்கு வாதம் பண்ணணுமா! ஒண்ணும் கவலைப்படாத. நான் வர்ர சண்டே கிளம்பி ஜெனீவா போறேன். செமினார் வெள்ளிக்கிழமை வரைக்குந்தான்! அன்னிக்கு ராத்திரியே இவா ரெண்டு பேரும் வந்துடுவா. அடுத்த ஒன் வீக் லூஸெர்ன், டிட்லிஸ், பிலாட்டஸ்னு சுத்தப்போறோம்!” பத்து நாளைக்கப்றந்தான் லண்டன் திரும்பறோம்! ஓகேவா?”

“சரிடி! பாரு சுதர்சனுக்கு அஞ்சு வயசாய்டுத்து! அடுத்த கொழந்தைக்கு லேட்டாகாம ஏற்பாடு பண்ணிக்கோ இந்த டிரிப்புல!”

“அடச்சீ! யூ ஆர் வல்கர் அம்மா! வெய் ஃபோன!”

டாக்டர் வத்சலா ஜெனீவாவுக்குக்கிளம்பிப்போக பத்ரி வீட்டில் சுதர்சனைப்பார்த்துக்கொண்ட வாரம், லண்டனில் மழை, லார்ட்ஸில் கிரிக்கெட் லோக்கல் ஃபுட்பால், சோஹோவில் ரகளை என்று சம்பிரதாயமாக எல்லாம் நடந்தேறியது.

“சுதர்சன்! ரெடியா இரு! இன்னிக்கு ஃப்ளைட் நமக்கு!”

“ஐ நோ டாட்! வில் மாம்மா கம் டு த ஏர்போர்ட்?”

”ஷ்யூர் ஷி வில் கம்! மாம்மா வில் பி மிஸ்ஸிங் யூ!”

ஆனால் அன்று மாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஜெனீவாவின் காயிண்ட்ரின் ஏர்போர்ட்டில் தரையிறங்கினபோது டாக்டர் வத்சலா அவர்களை வரவேற்க வரவில்லை.

டைஜெஸ்டிவ் டிஸார்டர் செமினாரில் கலந்துகொண்ட மருத்துவ மாணவியரில் உல்யானா பெட்ரொவ்ஸ்கி என்னும் உக்ரெயின் பெண் ரகளை செய்துவிட்டாள்.

லஞ்ச் முடிந்த அடுத்த செஷன் என்பதால் கொஞ்சம் டல்லாகத்தான் பேச்சு இருந்தது. அப்போது பின் வரிசையில் மெடிக்கல் மாணவர்கள் பக்கத்தில் பெரிய கூச்சல். உல்யானா எழுந்து டேபிள் மேல் நின்று கொண்டு ஆடிப்பாடி கூச்சலிட ஆரம்பிக்க ரகளையாகியது. பேச்சு நிறுத்தப்பட்டு, செமினாரின் அலுவலர்கள் ஓடி வர உல்யானா குடித்திருப்பது போல ஆட்டம்போட, ஆர்கனைசர்கள் கலங்கி, கோபமுற்று, அவளை அப்புறப்படுத்த முயலும்போது அவளுக்கு வலிப்பு வந்து விலுக் விலுக்கென்று உதறல் எடுத்து கீழ விழ, அவளை எதேச்சையாகத்தாங்கிக்கொண்டவள் டாக்டர் வத்ஸலா.

“என்ன ஒரு ஒழுங்கீனம்! செமினாருக்கு மத்தியானம் குடித்து விட்டா வருவது?”

“இந்த கம்யூ…(குரலைத்தாத்திக்கொண்டு) இந்த ஊரே இப்படித்தான்!”

“முதலில் கொண்டு போய் குளிப்பாட்டி அடுத்த ப்ளேனில் ஊருக்கு அனுப்பி வையுங்கள்!”

“அவளின் காலேஜுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்!”

ஆனால் வத்ஸலாவுக்கு முதலில் அவளைச்சரிப்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றியது.

“நோ நோ! முதலில் இவளை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். நான் கூடப்போகிறேன்!”

“நீங்கள்?”

“செமினார் டெலிகேட் தான். டாக்டர் வத்சலா. எண்டோக்ரினாலஜிஸ்ட்! ராயல் இங்லாண்ட் ஹாஸ்பிடல்!”

“டாக்டர்! நீங்களே ஒரு எக்ஸ்பர்ட்! என்ன ட்ரீட்மெண்ட்?”

“முதல்ல ஷுகர் இண்ட்ராவீனஸ் தரணூம்! எத்னால் இன் பிளட் அவளோட ஷுகரைக்கீழே தள்ளியிருக்கும்!”

”செக்!”

“வைடமின் தியாமைன் டு ஸ்டாப் சீஷர்!”

”செக்!”

”ப்ளட் கான்சண்ட்ரேஷன் எவ்வளவு?”

“400க்கு கீழேதான் டாக்டர் வத்சலா!”

“குட்! அப்ப ஹெமோடையாலிஸிஸ் வேண்டாம். ஆக்ஸிஜன் தெராபிக்கு ஏற்பாடு பண்ணுங்க!”

“அண்ட் டாக்டர் வத்சலா! இந்தப்பெண்ணுடன் யாரும் வரவில்லை. இரவு எப்படி தனியாக…..?”

“நான் இருக்கிறேன்! இப்ப டைம் என்ன? ஓஹ்! மை காட்! என் கணவரும் குழந்தையும்…!”

“பத்ரி! வந்தாச்சா! சாரி சாரி சாரி!”

“ய டாக்டர் ஈஸ் ஆல்வேஸ் ய டாக்டர்!

”சாரி பத்ரி! வெரி சாரி!”

”கம் ஆன் வத்ஸு! நா சும்மா ஜோக் பண்ணினேன்! உனக்கு ஒண்ணும் இல்லியே? நான் செமினார் டைரகடர்ட்ட பேசினேன். அவர்தன் ரகளையைச்சொன்னார்! எப்படி இருக்கா உன்னோட உக்ரெயின் பேஷண்ட்?”

”பத்ரி?! யூ ஆர் ய டார்லிங்! நா ராத்திரி வர முடியாது! சுதர்சன சாமாளிச்சுப்பியா? குழ்ழந்தை ரொம்ப டிஸப்பாயிண்ட் ஆயிருப்பான்!”

”நான் பாத்துக்கறேன்! நீ பேஷண்ட்ட கவனிச்சுட்டு வா!”

உல்யானா தூங்கும்போது வத்சலாவும் லேசாகக்கண் அயர்ந்தாள்.

ஃபோன்!

“என்னடி! செமினாரெல்லாம் முடிஞ்சதா? அவா ரெண்டு பேரும் லண்டன்லேர்ந்து வந்துட்டாளா? குழந்த ஏங்கிப்போய் இருப்பான் இந்த ஒரு வாரத்துல. அவனோட நெறைய டைம் ஸ்பெண்ட் பண்ணு, என்ன?”

“அம்மா! அம்மா! வென் வில் யூ ஸ்டாப்! சரி, அப்பா இருக்காளா? குடேன்!”

”ஹவ் ஈஸ் யுவர் வெகேஷன் வத்ஸு?”

”நாட் யெட் பிகன் டாட்!”

”என்ன ஆச்சு?”

”………………!”

“வத்சு! லிஸன் டு மீ! இது வெறும் ஆல்கஹால் சமாச்சாரம் இல்லன்னு தோணறது! செமினாருக்கு வந்த மெடிக்கல் ஸ்டூடெண்ட் மத்தியான வேளையில் குடிக்கறதா? பிஸாயர்! நீ அவகிட்ட பேசினயா?”

”பேசினேன் டாட்!”

”ஜஸ்ட் டெல் மீ! அவளுக்கு கான்சண்ட்ரேஷன் கஷ்டமா இருந்ததா? வயத்த வலி, அடிக்கடி கேஸ் டிரபிள், கோணாமாணானு மோஷன் போகறது, சைனஸைட்டிஸ், அடிக்கடி சோர்வு அப்பறம், மயக்கம்? எல்லாத்துக்கும் எனக்கு பதில் சொல்லு!”

”கூல் டாட்! இது வெறும் ஆல்கஹாலிக் சமாச்சாரம்ப்பா! ஒய் ஆர் யூ எக்ஸைட்டட்?”

“வத்ஸு! ஜஸ்ட் டூ வாட் ஐ சே! நான் சொன்னத எல்லாம் செக் பண்ணு! கால் மி இன் ஒன் ஹவர்!”

” இப்பவே அங்க நடு ராத்திரியாச்சேப்பா!”

”நோ நோ! நான் முழிச்சுண்டுதான் இருப்பேன்! கால் மி அகெயின்!”

…………………………………….

“டாட்! யூ ஆர் ஸ்பாட் ஆன்! நீங்க கேட்ட எல்லாத்துகும் பதில் பாஸிடிவ்!”

”பெருமாளே! வத்ஸு! அந்தப்பொண்ணு குடிக்கல வத்ஸு! அவளுக்கு இருக்கறது ஆண்டி ப்ரூவரி சிண்ட்ரோம்!

”டாட்! வாட் ஆர் யூ சேயிங்?”

”எஸ் மை டியர் டாட்டர்! ”அவளுக்கு வந்திருக்கறது அபூர்வமான கண்டிஷன்! அவ ஒரு பொட்டு கூட ஆல்கஹால் குடிக்கல. அவளோட உடம்பே ஆல்கஹாலைத்தயார் பண்ணறது!

”என்ன டாட் இது?”

”ஆமாண்டா! 1940லதான் இதயே கண்டு பிடிச்சா. Abnormal Gut Fermentation!

“என்ன ட்ரீட்மெண்ட்ப்பா?

“வெரி சிம்பிள் வத்ஸு! எல்லா ஷுகர் சமாச்சாரங்களை ஒழி! கார்போஹைட்ரேட்கூட குறைச்சுடு. மினெரல் வைட்டமின் சப்ளிமெண்ட் குடு. அவளோட உடம்புல இருக்கற ஃபங்கையையும் பாக்டீரியாவையும் துரத்தணும்! நெறைய புரோபியாடிக் ஃபுட் குடுக்கணும்! கொஞ்ச நாள்ள சரியாய்டுவா! ஆனா இன்னமே அவளோட லைஃப் ரொம்பக்கஷ்டம் வத்ஸு! சின்ன வயசு வேற! ஐ பிட்டி ஹர்!”

“தாங்க் யூப்பா! ஒரு நிமிஷம் அம்மாட்ட குடுங்கோ!”

”சொல்லுடி! அங்கயும் போய் ஹாஸ்பிடல் மெடிசன்னு இங்கேர்ந்து அப்பாவும் உன்னோட கூட்டுச்சதியா?”

“மை டியர் வேதம்! உம்பொண்ணு இங்க பெரிய விஷயம் பண்ணியிருக்கா! ஆச்சு இதோ ஹாஸ்பிடலுக்கு எல்லா அட்வைஸும் குடுத்துட்டு நேர ஹோட்டலுக்குப்போய் பத்ரியோட ஜாயின் பண்ணிக்கப்போறேன்!”

“யேய் வத்ஸு! பிலாட்டஸ் அவ்வளவு நன்னா பனி படர்ந்து இருக்குமாமே! ஃபோட்டோ எடுத்து அனுப்புடி!”

“பிலாட்டஸுக்கெல்லாம் யாரு போப்போறா?”

“அப்ப எங்க?”

“உனக்கு அடுத்த பேரனோ பேத்திக்கோ ஏற்பாடு பண்ணப்போறோம்!”

“வெட்கங்கெட்டவளே! சீ! வெய்டி ஃபோனை!”

“வேதம் நீ என்ன இவ்ளோ வெட்கப்படறே? என்ன சொன்னா வத்ஸு?”

கேட்ட டாக்டர் வைகுண்டத்துக்கு பதில் சொல்லாமல் உள்ளே ஓடினாள் வேதவல்லி!

Monday, 15 October 2018

கதையரங்கம் 15 அக்டோபர் 2018
பேப்பரில் ஃபோட்டொ
வாசலில் மெதுவாக எட்டிப்பார்த்தேன்.
நல்ல வேளை ராமாமிர்தத்தைக்காணவிலை. சட்டென்று வர்கீஸை காரை எடுக்கச்சொல்லி கிளம்பிவிட்டேன்.
கடந்த இரண்டு நாட்களாக இப்படித்தான் ராமாமிர்தம் கண்ணில் படாமல் நழுவிக்கொண்டிருக்கிறேன்.
ராமாமிர்தத்துக்கும் அவர் மனைவிக்கும் போன வாரத்திலிருந்து பேச்சு வார்த்தை நின்று போய்விட்டது. அது என்னமோ ராமாமிர்ததுக்கு என் மேலும் லதா மேலும் கோவம் வந்துவிட்டது. அவர்கள் சண்டைக்கு நாங்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை.
இல்லை என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்!
ராமாமிர்தம் எனக்கு அடுத்த வீட்டு ஆசாமி. நண்பரெல்லாம் இல்லை. அவருக்கு இன்னைக்கிருந்தால் வயசு எழுவது இருக்கும். டை எல்லாம் அடித்துக்கொள்வார். முன் வழுக்கை பிரத்தியோகமாக இருந்தாலும் பின் தலை முடியை மாசத்துக்கொருதரம் போய் சீராக வெட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
ஆனால் மனைவி கொஞ்சம் அந்தக்காலத்து மனுஷி. இன்னமும் மடிசார் வைத்துக்காட்டிக்கொள்வார். தலை தும்பைப்பூ நரை. மூக்கில் பேசரி அசைப்பில் பளீரென்று மின்னும். சமையல் அபாரமாக இருக்கும். சில சமயங்களில் “இந்தா லதா! பொரிச்ச கூட்டு பண்ணினேன்! உனக்கு பிடிக்கும்னியே” என்று வட்ட வடிவ கிண்ணத்தில் கொண்டு தருவார். மாமி தஞ்சாவூர் பக்கம் மருத்துவக்குடி என்பார்.
“எங்க அப்பா அங்க சமையல் வேல. மாலி சமையல்னா அவ்வளவு பிரசித்தம்! நம்ம தேரெழுந்தூர் நீலவராயர் ஜமீனுக்கே அப்பாதான் விசேஷத்துக் கெல்லாம் போவா!”
ராமாமிர்தம் அம்பதுகளிலேயே சென்னை வந்துவிட்டாராம். போஸ்டல் ஆடிட்ல குமாஸ்தாவாச்சேர்ந்து ரிடயர் ஆயிட்டார். அம்பதுகள்ள இங்க அடையார்ல நாய் நரி ஓடிண்டு இருக்கும்போதே அரை கிரவுண்டு ப்ளாட் வாங்கிப்போட்டு வீட்டைக்கட்டிண்டார். அஞ்சு வருஷம் முன்னாடி அலக்ரிடி வந்து ப்ளாட்டை வாங்கி அவருக்கு ஜம்மென்று இரண்டு பெட்ரூம் அபார்மெண்ட்டைக்கொடுத்துட்டான்கள். ஆசாமியும் குஷியோடு செட்டில் ஆகிட்டார். ஒரே புள்ள அமெரிக்காவுக்குப்போனவந்தான். திரும்பிகூட பார்க்கலை. மனுஷனும் கவலை கிவலை பட்டா மாதிரி தெரியவே இல்லை. மாமிதான் அப்பாப்போ புலம்புவோ.
“ பாத்துப்பாத்து வளர்த்தேன்! இப்ப யாரோ வடக்கத்திகாரியைக்கல்யாணம் பண்ணிடுட்டானாம். அந்த பாகிரதி போன வருஷம் போனாளோல்லியோ, சொன்னா. எனக்குத்தான் கொடுத்து வெக்கல. என்னமோ எங்கியோ நன்னா இருந்தாச்சரித்தான்! இரு செத்த வரேன், அடைக்கு ஊறப்போட்டிருக்கேன்!”
மாமிக்கு படிப்பு ஒண்ணும் கிடையாது. ஆனா க்யூரியஸ்! எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ஆவல்.
“பத்து நிமிஷம் பேசினா எத்தன கேள்வி கேட்கறா?”
டீ லதா! நீ ரொம்ப சமத்து! சீ ஏ வரைக்கும் படிச்சுட்டே! அப்படித்தான் இருக்கணூம்! எனக்குதான் பாரேன் ஸ்கூலுக்கே போக ஒழியல!”
லதா ஆச்சரியப்படுவாள்.
“மாமிக்கு இங்லிஷ் கத்துக்கணூமாம். தினமும் சாயங்காலம் வந்துடறாள்!”
“கத்துக்குடுக்கறியா?”
“என்ன பண்றது! நல்ல விஷயமாச்சேன்னு கத்துக்கொடுக்க ஆரமிச்சிருக்கேன்!”
எது வரைக்கும்வந்திருக்கா?
எழுத்துக்கூட்டி வார்த்தைகள்லாம் படிச்சுடறா?
பரவாயில்லியே!
ராமாமிர்தமே சொல்லுவார்.
“தொணப்பி எடுத்துடுவா! தினோம் ஹிந்து பேப்பர் வந்து நா நாலு வரி படிக்கறதுக்குள்ள என் கழுத்துக்குப்பினாடி எட்டி பார்த்துண்டே கேள்வெ மேல கேள்வியா கேட்டு குடாய்வோ!”
“நல்ல விஷயம்தானே சார்!”
” என்ன நல்ல விஷயம் போங்க! நாம நிம்மதியா பேப்பர் படிக்க விட்டாத்தானே! அதும் ஃபோட்டோவப்பார்த்துட்டாளோ போச்சு!
"அட!அதென்ன ஃபோட்டொ மேலா மாமிக்கு இஷ்டம்?”
"இஷ்டமா? வறுத்துப்பிடுவோ!"
“ ஏன்னா இந்த ஃபோட்டொவப்பாருங்களேன், இவனப்பார்த்தா நாமாத்துக்கு வடு மாங்கா கொண்டு வந்து போடுவானே அவன மாதிரியே இருக்கு!”
“ஆமாண்டி! பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி உனக்கு வாசல்ல வடு மாங்கா போட்டானா?”
“இங்க பார்த்தேளா? இவனப்பார்த்தா அந்த ஏஆர்டி தங்க மாளிகை ஆச்சாரி மாதிரி இல்ல! என்னோட பேசரிக்குக்கூட பத்த வெச்சுத்தந்தானே!”
"சனியனே! வாய மூடு! அந்த ஃபோட்டோவுல இருக்கறது ந்யூஸ் பேப்பர் முதலாளி!”
இதைப்போலவே மாமியின் அத்தங்கா போல இருந்த சினிமா நடிகன், ராமமிர்தத்தின் ஒண்ணுவிட்ட சித்தி மாதிரியே இருந்த கொலைகாரி என்று லிஸ்ட் நீளமாகிக்கொண்டே இருந்ததாம்.
ராமாமிர்தம் சண்டை விஷயத்துக்கு தயங்கித்தயங்கி வந்தார்.
”பைசா பெறாத விஷயம் சார்! ஏழெட்டு வருஷத்துக்கு மின்னால ஒரு நா இதே மாதிரி நா ஹிந்து படிக்கும்போது ஃபோட்டொ பார்த்தாக்க என்னோட ஃபோட்டொ!
அட! உங்க மாதிரியே இருக்கே! நீங்களான்னா இது! அய்! என்ன போட்டிருக்கு!படிச்சு சொல்லுங்கோன்னா!”
“நேத்திக்கி எங்க ஆஃபீஸ் வாசல்ல தெருவைச்சுத்தப்படுத்தும் வேல நடந்தது! நா மேற்பார்வை பாத்துண்டு இருந்தத ஃபோட்டொ பிடிச்சிருக்கா போல! எனக்கே தெரியல பாரேன்!”
“கொண்டாங்கோ கொண்டாங்கோ! நா இத எடுத்து வெச்சுக்கறேன்!”
அடச்சீ! இத போய் எடுத்து வெச்சுப்பானே! விடுறீ!”
ராமிர்தம் பேப்பரை விசிறி எறிந்துவிட்டார். அதை மறந்தும் விட்டார். மாமி மறக்கவில்லை போலிருக்கிறது.
லதா மாமிக்கு இங்லிஷ் கத்துக்கொடுத்ததுதான் ராமாமிர்தத்துக்கு எங்கள் மேல் கோவம்.
எங்களுக்குமே ரெண்டு நாட்களுக்கு முன்னால்தான் தெரிந்தது.
“லதா! இங்க பாரு! எங்காத்து மனுஷர் பண்ணின பித்தலாட்டத்த!”
கோபம் கொப்பளிக்க மாமி கையில் அழுக்கான பேப்பருடன் லதாவிடம் காண்பித்திருக்கிறார். ராமாமிர்தத்தின் ஃபோட்டொ வந்திருந்த, மாமி ஜாக்கிரதையாக எடுத்து வைத்திருந்த ஏழெட்டு வருஷத்து ஹிந்து பேப்பர்.
ஃபோட்டோவில் நாலைந்து பேர் தெருவில் குப்பயை பெருக்கி சுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ராமாமிர்தம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓரளவுக்கு இங்லிஷ் கற்றுக்கொண்டுவிட்ட மாமி அடியில் எழுதியிருந்ததைப்படித்திருக்கிறார்.
“கல்லூரி இளைஞர்கள் தெருவைச்சுத்தப்படுத்தும் காட்சி. அருகில் வயதான சோம்பேறி ஒருவர் வெறுமனே வேடிக்கை பார்க்கும் அவலம்!”
ஆஃபீசிலிருந்து வரும்போதே எனக்கு கவலை. ஆசாமி வாசலில் இல்லாமல் இருக்கணும்.
(இந்த வ்யாசத்தின் இன்ஸ்பிரேஷன் “தேவன்” என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்

Friday, 5 October 2018

கதையரங்கம் (5, அக்டோபர், 2018)
” கொலை கொலையாய் மனிதாபிமானம்.....!”
” பியூலா! பேஷண்ட் ரெடியா?”
“ஆச்சு டாக்டர்!”
“கால் மி புரொஃபசர்!”
“ஓகே டாக்..சாரி புரொஃபசர்!”
“ ஓஆர் ரூம் ரெடியா?
“யெஸ்!
”கதீட்ரா எடுத்து வெச்சாச்சா?
“செக்!
“ லாப்ஸ்டர் க்ளாவ்ஸ்?”
செக்!
“ஐ வி போல்?”
செக்
“அன்ஸ்திஸிஸ்?”
உள்ள போயாச்சு!
” டாக்டர் செந்தில் வந்தாச்சா?”
“அவர்தான் எல்லாத்தையுமே ரெடி பண்ணினார் புரொஃபசர்!”
ஓ அப்ப நான் செக் பண்ன வேண்டாமே! நானும் ரெடி! வந்துர்ரேன்!”
“மார்னிங் செந்தில்!”
“மார்னிங் ப்ரொஃபசர்! ஆல் செட் புரொஃபசர்!”
”எனக்கு தெரியும்! நீ இருக்கேன்னவுடனே இனிமே நான் எதையுமே செக் பண்ணலியே!”
“தாங்க் யூ புரொஃபசர்! யூ ஆர் ஆல்வேஸ் கைண்ட் டு மீ!”
”லெட் அஸ் கெட் கோயிங்! என்னய்யா பேஷன்ட்? பயப்படறியா? இங்க பாத்தியா டாக்டர் செந்தில்! உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டார்! யூ ஆர் சேஃப்! ஓகே, மூச்சுக்காட்டாம படு! கால் அவினாஷ்! கோ வித் த அனஸ்தீஸியா அவினாஷ்!”
“சாவித்திரி! இந்தா இதையும் தேய்க்க எடுத்துக்கோ!”
“………………….”
“சாவித்திரி! எங்க கனவு லோகத்துல இருக்கே?”
“ ம்ம்..இன்னாம்மா சொன்னீங்க?”
“ நா சொன்னது கேக்கவே இல்லியா?”
“இல்லம்மா கிறு கிறுன்னு வந்துது! அதான் அப்படியே உக்காந்துட்டேன்!”
“ என்னடி இது? இரு ஒரு வாய் காபி தரேன்! காலையில எதானும் சாப்பிட்டியா?”
“ இல்லம்மா. குடிச்சா காபி கூட வாந்தி எட்துட்டேன்!”
“சரி நீ கெளம்பு! வீட்ல போய் படு! முடிஞ்சா நாளைக்கி வா?”
“ஒண்ணியும் இல்லம்மா கொஞ்சம் இப்படிக்கா உக்காந்தேன்னா ரெண்டே நிமிஷத்துல சரியாய்டும்!”
“அதெல்லாம் வாணாம்டி! நீ கெளம்பு சொல்றேன்! நா பாத்துக்கறேன்!”
“இல்லம்மா, பெரிய அய்யா வந்துடுவாரு! நா முடிச்ச்சுட்டே போறேன்!”
“சரி இந்தா காபி! கூடவே இந்த மாத்திரையும் போட்டுக்கோ!”
அரை மணி நேரம் கழித்து வேதவல்லி வந்து பார்த்தபோது சாவித்திரி கிணற்றடியிலேயே மயங்கிக்கிடந்தாள். வேதம் பரபரத்து டிரைவரை அழைத்து சாவித்திரியைத்தூக்கி காரில் போட்டு, இவரோட கிளினிக்குக்கு அனுப்பினாள்.
“அப்படியே சாவித்திரிய அவ வீட்ல டிராப் பண்ணிட்டு வந்தா போறும் டிரைவர்!”
மத்தியானம் பெரியவர் வந்து அமைதியாக சாப்பிட்டார். கை அலம்பினார். வேதம் பேச ஆரம்பித்தபோது, கையை அமர்த்தி அமைதியானார். வெந்நீர் குடித்து ஹால் சோஃபாவில் அமர்ந்தார்.
“வேதவல்லி! சாப்டியா?”
“இல்ல! சாவித்திரி காலம்பர அனுப்பிச்சேனே….?”
போய் முதல்ல சாப்பிடு!”
“இல்ல…..?”
சாப்பிடுங்கறேனோ? போ!”
“ஆச்சு! சாப்டாச்சு! இப்ப சொல்லுங்கோ? சாவித்திரிக்கு என்ன உடம்பு?”
“இங்க வா!”
“ என்ன?”
“ வேலைக்கு வேற ஆள் பாரு! இன்னமே சாவித்திரியால முடியாது!”
“ அதான் பதைபதைச்சுண்டு இருக்கேன்! என்ன்ன அவளுக்கு?”
”அவகிட்ட பேசினேன். அவளுக்கு ரெண்டு மூணு மாசமாவே பசியே இல்லியாம், அடி வயத்துல வலி, வாந்தி வேற!”
“போன வாரமெல்லாம் முகமெல்லாம் மஞ்சள் பூசினா மாதிரி இருந்த்து! நா கூட மஞ்சக்காமாலையோன்னு பயந்தேன்! ஆனா ரெண்டு நாள்ள சரியாய்டுத்து!”
“அதான்! வெயிட் பார்த்தேன்! 48 கிலோகூட இல்ல!” உடனே டெஸ்டுக்கு அனுப்பி, இப்ப சாப்பிட வர்ரத்துக்கு மிந்திதான் ர்ரிப்பொர்ட் வந்தது!”
“ என்னன்னு?”
”ஹைபெர் கல்சிமியா அண்ட் எரித்ரொசைடோஸிஸ்!”
“பெருமாளே! என்ன கண்றாவி இதெல்லாம்? சரியாத்தான் சொல்லுங்களேன்?”
“ கான்சர் வேதம்! லிவர்ல கான்சர்!”
“அய்யோ! கான்சரா? சரி பண்ணிடுவேளா? பாவன்னா அவோ?”
“இல்ல வேதம்! ரொம்ப முத்திப்போச்சு! இன்னும் ஒண்ணோ ஒண்ணரை மாசமோதான்!”
“கண்றாவியே! பத்தாங்கிளாஸ் படிக்கற புள்ள இருக்கே! நாதியத்துப்போய்டுமே! புருஷனும் கூட இல்ல!”
“என்ன பண்ணச்சொல்றே? இந்த ஒரு வியாதிதான் ஏழை பணகாரா வித்தியாசமில்லாம வந்துர்ரது. ஆளைக்கொண்டும் போயிடறது!”
அடுத்த ரெண்டே மாதத்தில் சாவித்திரி முனகி முனகி வலியில் துடித்து உயிரை விட்டதும் அவளின் பதினைந்து வயதுப்பையன் அரக்கப்பரக்க தவித்ததும், வேதவல்லி கூடவே இருந்து அவனுக்கு ஆறுதல் சொல்லி தன் வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டதும் வெறும் விவரங்கள்.
“ தம்பி! இங்கயே இருந்து படிக்கிறியா?”
”படிக்கறேங்க!”
“உனக்கு என்னவா ஆகணும்னு ஆசை?”
“உங்கள மாதிரி டாக்டராவணும்னு அம்மாகிட்ட சொல்லுவேனுங்க!”
”வெரி குட்! உம்பேர் என்ன சொன்னே?”
செந்திலுங்க! செந்தில் குமார்!