கதையரங்கம் 15 அக்டோபர் 2018
பேப்பரில் ஃபோட்டொ
வாசலில் மெதுவாக எட்டிப்பார்த்தேன்.
நல்ல வேளை ராமாமிர்தத்தைக்காணவிலை. சட்டென்று வர்கீஸை காரை எடுக்கச்சொல்லி கிளம்பிவிட்டேன்.
கடந்த இரண்டு நாட்களாக இப்படித்தான் ராமாமிர்தம் கண்ணில் படாமல் நழுவிக்கொண்டிருக்கிறேன்.
ராமாமிர்தத்துக்கும் அவர் மனைவிக்கும் போன வாரத்திலிருந்து பேச்சு வார்த்தை நின்று போய்விட்டது. அது என்னமோ ராமாமிர்ததுக்கு என் மேலும் லதா மேலும் கோவம் வந்துவிட்டது. அவர்கள் சண்டைக்கு நாங்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை.
இல்லை என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்!
ராமாமிர்தம் எனக்கு அடுத்த வீட்டு ஆசாமி. நண்பரெல்லாம் இல்லை. அவருக்கு இன்னைக்கிருந்தால் வயசு எழுவது இருக்கும். டை எல்லாம் அடித்துக்கொள்வார். முன் வழுக்கை பிரத்தியோகமாக இருந்தாலும் பின் தலை முடியை மாசத்துக்கொருதரம் போய் சீராக வெட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
ஆனால் மனைவி கொஞ்சம் அந்தக்காலத்து மனுஷி. இன்னமும் மடிசார் வைத்துக்காட்டிக்கொள்வார். தலை தும்பைப்பூ நரை. மூக்கில் பேசரி அசைப்பில் பளீரென்று மின்னும். சமையல் அபாரமாக இருக்கும். சில சமயங்களில் “இந்தா லதா! பொரிச்ச கூட்டு பண்ணினேன்! உனக்கு பிடிக்கும்னியே” என்று வட்ட வடிவ கிண்ணத்தில் கொண்டு தருவார். மாமி தஞ்சாவூர் பக்கம் மருத்துவக்குடி என்பார்.
“எங்க அப்பா அங்க சமையல் வேல. மாலி சமையல்னா அவ்வளவு பிரசித்தம்! நம்ம தேரெழுந்தூர் நீலவராயர் ஜமீனுக்கே அப்பாதான் விசேஷத்துக் கெல்லாம் போவா!”
ராமாமிர்தம் அம்பதுகளிலேயே சென்னை வந்துவிட்டாராம். போஸ்டல் ஆடிட்ல குமாஸ்தாவாச்சேர்ந்து ரிடயர் ஆயிட்டார். அம்பதுகள்ள இங்க அடையார்ல நாய் நரி ஓடிண்டு இருக்கும்போதே அரை கிரவுண்டு ப்ளாட் வாங்கிப்போட்டு வீட்டைக்கட்டிண்டார். அஞ்சு வருஷம் முன்னாடி அலக்ரிடி வந்து ப்ளாட்டை வாங்கி அவருக்கு ஜம்மென்று இரண்டு பெட்ரூம் அபார்மெண்ட்டைக்கொடுத்துட்டான்கள். ஆசாமியும் குஷியோடு செட்டில் ஆகிட்டார். ஒரே புள்ள அமெரிக்காவுக்குப்போனவந்தான். திரும்பிகூட பார்க்கலை. மனுஷனும் கவலை கிவலை பட்டா மாதிரி தெரியவே இல்லை. மாமிதான் அப்பாப்போ புலம்புவோ.
“ பாத்துப்பாத்து வளர்த்தேன்! இப்ப யாரோ வடக்கத்திகாரியைக்கல்யாணம் பண்ணிடுட்டானாம். அந்த பாகிரதி போன வருஷம் போனாளோல்லியோ, சொன்னா. எனக்குத்தான் கொடுத்து வெக்கல. என்னமோ எங்கியோ நன்னா இருந்தாச்சரித்தான்! இரு செத்த வரேன், அடைக்கு ஊறப்போட்டிருக்கேன்!”
மாமிக்கு படிப்பு ஒண்ணும் கிடையாது. ஆனா க்யூரியஸ்! எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ஆவல்.
“பத்து நிமிஷம் பேசினா எத்தன கேள்வி கேட்கறா?”
டீ லதா! நீ ரொம்ப சமத்து! சீ ஏ வரைக்கும் படிச்சுட்டே! அப்படித்தான் இருக்கணூம்! எனக்குதான் பாரேன் ஸ்கூலுக்கே போக ஒழியல!”
லதா ஆச்சரியப்படுவாள்.
“மாமிக்கு இங்லிஷ் கத்துக்கணூமாம். தினமும் சாயங்காலம் வந்துடறாள்!”
“கத்துக்குடுக்கறியா?”
“என்ன பண்றது! நல்ல விஷயமாச்சேன்னு கத்துக்கொடுக்க ஆரமிச்சிருக்கேன்!”
எது வரைக்கும்வந்திருக்கா?
எழுத்துக்கூட்டி வார்த்தைகள்லாம் படிச்சுடறா?
பரவாயில்லியே!
ராமாமிர்தமே சொல்லுவார்.
“தொணப்பி எடுத்துடுவா! தினோம் ஹிந்து பேப்பர் வந்து நா நாலு வரி படிக்கறதுக்குள்ள என் கழுத்துக்குப்பினாடி எட்டி பார்த்துண்டே கேள்வெ மேல கேள்வியா கேட்டு குடாய்வோ!”
“நல்ல விஷயம்தானே சார்!”
” என்ன நல்ல விஷயம் போங்க! நாம நிம்மதியா பேப்பர் படிக்க விட்டாத்தானே! அதும் ஃபோட்டோவப்பார்த்துட்டாளோ போச்சு!
"அட!அதென்ன ஃபோட்டொ மேலா மாமிக்கு இஷ்டம்?”
"இஷ்டமா? வறுத்துப்பிடுவோ!"
“ ஏன்னா இந்த ஃபோட்டொவப்பாருங்களேன், இவனப்பார்த்தா நாமாத்துக்கு வடு மாங்கா கொண்டு வந்து போடுவானே அவன மாதிரியே இருக்கு!”
“ஆமாண்டி! பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி உனக்கு வாசல்ல வடு மாங்கா போட்டானா?”
“இங்க பார்த்தேளா? இவனப்பார்த்தா அந்த ஏஆர்டி தங்க மாளிகை ஆச்சாரி மாதிரி இல்ல! என்னோட பேசரிக்குக்கூட பத்த வெச்சுத்தந்தானே!”
"சனியனே! வாய மூடு! அந்த ஃபோட்டோவுல இருக்கறது ந்யூஸ் பேப்பர் முதலாளி!”
இதைப்போலவே மாமியின் அத்தங்கா போல இருந்த சினிமா நடிகன், ராமமிர்தத்தின் ஒண்ணுவிட்ட சித்தி மாதிரியே இருந்த கொலைகாரி என்று லிஸ்ட் நீளமாகிக்கொண்டே இருந்ததாம்.
ராமாமிர்தம் சண்டை விஷயத்துக்கு தயங்கித்தயங்கி வந்தார்.
”பைசா பெறாத விஷயம் சார்! ஏழெட்டு வருஷத்துக்கு மின்னால ஒரு நா இதே மாதிரி நா ஹிந்து படிக்கும்போது ஃபோட்டொ பார்த்தாக்க என்னோட ஃபோட்டொ!
அட! உங்க மாதிரியே இருக்கே! நீங்களான்னா இது! அய்! என்ன போட்டிருக்கு!படிச்சு சொல்லுங்கோன்னா!”
“நேத்திக்கி எங்க ஆஃபீஸ் வாசல்ல தெருவைச்சுத்தப்படுத்தும் வேல நடந்தது! நா மேற்பார்வை பாத்துண்டு இருந்தத ஃபோட்டொ பிடிச்சிருக்கா போல! எனக்கே தெரியல பாரேன்!”
“கொண்டாங்கோ கொண்டாங்கோ! நா இத எடுத்து வெச்சுக்கறேன்!”
அடச்சீ! இத போய் எடுத்து வெச்சுப்பானே! விடுறீ!”
ராமிர்தம் பேப்பரை விசிறி எறிந்துவிட்டார். அதை மறந்தும் விட்டார். மாமி மறக்கவில்லை போலிருக்கிறது.
லதா மாமிக்கு இங்லிஷ் கத்துக்கொடுத்ததுதான் ராமாமிர்தத்துக்கு எங்கள் மேல் கோவம்.
எங்களுக்குமே ரெண்டு நாட்களுக்கு முன்னால்தான் தெரிந்தது.
“லதா! இங்க பாரு! எங்காத்து மனுஷர் பண்ணின பித்தலாட்டத்த!”
கோபம் கொப்பளிக்க மாமி கையில் அழுக்கான பேப்பருடன் லதாவிடம் காண்பித்திருக்கிறார். ராமாமிர்தத்தின் ஃபோட்டொ வந்திருந்த, மாமி ஜாக்கிரதையாக எடுத்து வைத்திருந்த ஏழெட்டு வருஷத்து ஹிந்து பேப்பர்.
ஃபோட்டோவில் நாலைந்து பேர் தெருவில் குப்பயை பெருக்கி சுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ராமாமிர்தம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓரளவுக்கு இங்லிஷ் கற்றுக்கொண்டுவிட்ட மாமி அடியில் எழுதியிருந்ததைப்படித்திருக்கிறார்.
“கல்லூரி இளைஞர்கள் தெருவைச்சுத்தப்படுத்தும் காட்சி. அருகில் வயதான சோம்பேறி ஒருவர் வெறுமனே வேடிக்கை பார்க்கும் அவலம்!”
ஆஃபீசிலிருந்து வரும்போதே எனக்கு கவலை. ஆசாமி வாசலில் இல்லாமல் இருக்கணும்.
(இந்த வ்யாசத்தின் இன்ஸ்பிரேஷன் “தேவன்” என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்
No comments:
Post a Comment