Friday, 26 January 2018

உன் எதிர்காலம்..உன் கையில்...

அந்தக்குழந்தை முகம் மிகப்பரிச்சயமானதாக இருந்த்து. நிச்சயம் எனக்குத்தெரிந்த ஆசாமி. ஆனால் போட்டிருந்த உடை….
வெள்ளை வெளேர் அரைக்கை சட்டை, நேர்த்தியாக டக்-இன் பண்ணின கருநீலப்பாண்ட். சட்டையின் காலரில் அந்த நீல நிற கோடுகள்…
ஓ..! நான் போகவிருக்கும் ஏர்லைன்ஸின் பைலட்!
அட! சஞ்சு இல்லியோ? ஆண்ட்டனியின் கடைசிப்பிள்ளை!
அவனும் என்னைப்பார்த்த்தும் லேசான அரைப்புன்னகையுடன் அருகில் வந்துவிட்டான்.
“ரகு அங்கிள்?”
“எஸ்! சஞ்சு?”
எஸ்! இப்ப சந்தீப்!”
அஃப் கோர்ஸ்! சாரி! எப்படி இருக்கே? டில்லு, சாரி திலிப் எங்க இருக்கான்? அனிதா?”
எல்லோரும் நல்லா இருக்காங்க! நீங்க இன்னும் காமராஜ் அவென்யூ தானா?
ஆமாம் அதே வீடுதான்! அம்மா எப்படி இருக்காங்க!”
ஓ ஷி ஈஸ் ஃபைன் அங்கிள்! பை த வே, மீட் ராமானுஜம்! மை சீனியர் பைலட்!
“ஹலோ ராமானுஜம்!”
”நீங்க எந்த ஃப்ளைட்ல போறீங்க அங்கிள்?”
சொன்னேன்1
“ஓ! ராமாஞ்ச்! யுவர் ஃப்ளைட்!”
”இவர்தான் இன்னிக்கு ஃப்ளையிங்கா?”
“இல்லை! நான் பாம்பேலேர்ந்து அட்டிஸபாபா! ஆனா இந்த ஃப்ளைட்டில்தான் வர்ரேன்! சந்தீப் தான் காப்டன்!”
என்னையும் ராமானுஜத்தையும் உட்கார வைத்துவிட்டு சந்தீப் கிளம்பினான்.
டேக் ஆஃப் ஆகி, ஃப்ளாப் அமைத்து க்ரூயிஸ் ஆல்டிட்யூட் வந்தவுடன் பேச ஆரமித்தோம். ராமானுஜம்தான் ஆரம்பித்தார்.
“நீங்க சந்தீப் வீட்டுக்கு பக்கமா?
”அவனோட அப்பா ஆண்ட்டனி எங்கப்பாவுக்கு ஃப்ரெண்ட்! நாங்க எதிர் எதிர் வீடு! ஆமா நீங்க ?”
”நானும் சென்னைதான்! டீ நகர்!”
”படிப்பெல்லாம்?”
”எல்லாம் சென்னைதான்! …………………. ஸ்கூல்.!”
”ஓ! பெரிய ஸ்கூலாச்சே! எப்படி ஃப்ளையிங்கில் ஆர்வம்?
”சின்ன வயசுலேர்ந்தே ப்ளேன் மேல ஒரு ஈர்ப்பு! வயசாக ஆக ஒரு வெறியே வந்துடுத்து!”
”எங்க டிரெயினிங் பண்ணினீங்க?
“ஃப்ளொரிடா ஃப்ளையிங் அகாடெமி, மையாமி!”
வீட்ல ஒத்துக்கிட்டாங்களா சுலபமா?
“அது ஒரு பெரிய சேலஞ்ச் சார்! வீட்ல ஒத்துக்கவே இல்லை! இத்தனைக்கும் நான் அகாடெமிக்கில் படு சுட்டி! டாப் ராங்க் ஆல் தெ டைம்!
“அப்ப நிச்சயம் ஃபோர்ஸ் பண்ணி எஞ்சினீயரிங் மெடிக்கல்னு பிரெஷர் போடுவாங்கல்ல?”
“எஸ் எஸ்!
“எப்படி அதெல்லாம் தாண்டி ஃப்ளையிங்?
”ஐ வாஸ் வெரி லக்கி!
குட்டைப்பாவாடை கன்னி தட்டில் ஸ்பெஷலான ஐட்டங்களுடன் ராமானுஜத்துக்குத்தந்தாள். அதில் ஒரு மெது வடைகூடப்பார்த்தேன்! எனக்காக வைத்திருந்த தட்டில் வேறு இலை, தழை சமாச்சாரங்கள்.
“கெட் ஹிம் ய சிமிலர் பாலெட்!”
யெஸ் காப்டன் என்று ஓடியது அந்த நடுவானத்தாரகை. கொஞ்ச நேர மௌனமான உணவுக்குப்பிறகு கறுப்புக் காப்பியுடன் சீட்டில் சாய்ந்தோம்.
முட்டைக்கண்ணாடிக்கு வெளியில் தீற்றலாக சிர்ரோக்யுமுலஸ் மேகங்கள் சோம்ப்பேறித்தனமாக உலாவிக்கொண்டிருக்க, அந்த 118 அடி நீளமுள்ள போயிங் 737 மாக்ஸ் தன் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சினின் அபார ஆர் பி எம் உபயத்தில் நடு வானத்தில் தொங்கியபடி பறந்துகொண்டிருக்க, நாங்கள் பேச்சைத்தொடர்ந்தோம்.
”நான் பத்தாவது படிக்கும்போதே சயன்ஸில் ஆல் இந்தியா முதல் ராங்க்.!”
”வாவ்!”
“அதான் சங்கடமாப்போச்சு! எனக்கு அப்பல்லாம் ஏரோநாட்டிக்கல் படிக்க ஆசை. ஆனால் ஸ்கூல்ல படுத்தி என்னை நாச்சுரல் சயன்ஸ் எடுக்க வெச்சுட்டாங்க! பிரின்சிபால், கரஸ்பாண்டண்ட் எல்லோரும் “நம்ம ஸ்கூல்ல நாச்சுரல் சயன்ஸில் இது வரை ஆல் இந்தியா ராங்கே வந்த்தில்ல. நீ நிச்சயம் எடுப்பே. அப்படியே உங்க ஃபாமிலி மாதிரி மெடிக்கல் சீட் ஈஸியா கெடச்சு நீயும் டாக்டராய்டலாம்”னு சொல்லி நாச்சுரல் சயன்ஸ் குருப்புல சேர்த்துட்டாங்க!”
”இண்டரஸ்டிங்!”
“நானும் ஆல் இந்தியா ஃபர்ஸ்டுதான் ப்ளஸ் டூவுல!”
”அடேயப்பா!”
”எம் எம் சியில டைரெக்ட் அட்மிஷன் வேற தந்துட்டாங்க! ஸ்கூல்ல ஃபுல் ஸ்காலர்ஷிப் அஞ்சு வருஷத்துக்கும்னு சாங்க்ஷன்!”
”மை காட்! நீங்க எக்ஸப்ஷனல் ராமானுஜம்! எப்படி பின்ன டாக்டராகாம இப்படி பைலட்? சாரி! ஐயாம் வெரி க்யூரியஸ்!”
“ஓ தட்ஸ் ஆல் ரைட்! எங்க ஃபாமிலில பல டாக்டர்கள். அதனால எதிர்பார்ப்பே நானும் டாக்டராகணும்னுதான்! எனக்குத்தான் இந்த ஃப்ளையிங் பைத்தியம்!”
”என்ன ஆச்சு அப்புறம்?”
”நான் மெடிக்கல் சேர மாட்டேனுட்டேன்! ஸ்கூல எல்லாரும் ரொம்ப அப்ஸெட்! முதல்ல வைஸ் பிரின்சிபல், அப்புறம் பிரின்சிபல்னு எல்லோரு வேப்பில அடிச்சாங்க!”
”பெரிய பிரஷரா இருந்திருக்குமே!”
”ரொம்ப டென்ஷன் அப்ப! நான் பிடிவாதமா முடியாதுன்னுட்டேன்! ஸ்கூல்ல அவ்வளவு சுலபமா ஒத்துக்கவே இல்ல. இப்படி ஒரு சான்ஸ் யாருக்குமே வராது! உனக்கு இதெல்லாம் டிசைட் பண்ண வயசு பத்தாது. உங்கப்பாவ ஸ்கூலுக்கு அழச்சிண்டு வான்னுட்டாங்க!”
”அப்பாவ எப்படி சமாளிச்சீங்க? அவர் வேற டாகடராச்சே?”
”அப்பா ஸ்கூலுக்கு வந்து பிரினிசிபால் கரஸ்பாண்டண்ட் எல்லாரையும் மீட் பண்ணினார்”.
”சொல்லுங்க சுவாரஸ்யமா இருக்கே!”
”பிரின்சி ரூம்ல பெரிட இண்டர்வ்யூ மாதிரி டேபிளுக்கு அந்தப்பக்கம் வைஸ் பிரின்சிபால், பிரின்சிபால், கரஸ்பாண்டண்ட் அப்புறம் இன்னொருத்தர்..எல்லோரும் அப்பாவப்பார்த்து ஒரே முட்டா என்னை மெடிக்கல்ல சேர வெக்கணும்னு வற்புறுத்தினாங்க!”
”அப்பா என்ன சொன்னார்? நீங்க எப்படி அவர சமாளிச்சீங்க?”
“எல்லார் சொல்றதையும் அப்பா பொறுமையாக்கேட்டார். அப்புறம் பேசினார்”.
“இவன் எனக்கு ஒரே பையன்! அவனுக்கு நல்லது பண்றதுதான் என்னோட கடமை. ஆனா அதைவிட அவனுக்கு வேணுங்கறதை செஞ்சு குடுக்கறச்து அதைவிட முக்கியமாச்சே! அவனுக்கு பைலட்டாகணும்னு ஆசை. சோ ஹி வில் பிகம் ய பைலட்!”
”அடேயப்பா!”
“என் பையன் மேல நீங்க காட்டற அக்கறைக்கு உங்க எல்லோருக்கும் ரொம்ப தாங்க்ஸ்! விஷ் ஹிம் குட் லக்!”
”சொல்லிட்டு என் கையை ஆதுரமாப்பிடிச்சிண்டு நடந்து வெளியே வந்துட்டார்”
“எக்சப்ஷனல் ஃபாதர்! வாவ்! ”அவரும் டாகடர்னு சொன்னீங்கல்ல? எங்க இருக்கார் இப்ப?”
”ரிடயர்ட் டீன் ஆஃப் ஜெனெரல் ஹாஸ்பிடல். பேரு டாக்டர் வைகுண்டம்!”
இப்போது ராமானுஜம் சீட்டில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொள்ள ”நாம் மும்பையை நோக்கி டிஸண்ட் தொடங்கிவிட்டோம்” என்று ஸ்பீக்கரில் சந்தீப்பின் குரல்.

Friday, 19 January 2018

மறந்ததே எந்தன் நெஞ்சமோ…..



கிராமத்தில் நான் வாழ்ந்ததே இல்லை. படித்துத்தெரிந்து கொண்டதுதான்.
திஜா கிராமம், கிரா கிராமம், அசோகமித்ரன் கிராமம், கிருத்திகா கிராமம், நாபா கிராமம், கல்கியின் தியாகபூமி கிராமம், கோமல் ஸ்வாமினாதனின் கிராமம், இன்றும் வரிக்கு வரி பிசகாமல் என்னால் மனனமாகச்சொல்லக்கூடிய திருநிலம் கிராமம்,ஆம் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ கிராமம்..என்று என் கிராம அறிவு படிப்பின்பால் பட்டதே. அதைவைத்து எழுதலாமே என்று முயன்ற கதை இது...

மறந்ததே எந்தன் நெஞ்சமோ…..

அவன் சரவணபவ ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதுதான் பார்த்தான். அதோ அந்த மூலை டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதுநரசிம்மன் போல இருந்தது. பில் கொடுத்தாகிவிட்டாலும் சொந்த ஊர் ஞாபகம் இழுத்தது.

மலையன் குளம்!

சங்கரன்கோவிலுக்கு கிழக்கே நீண்டு போகுமே கழுகு மலை ரோடு, அதில் ரொம்ப தூரம்போன பிறகு, புளியங்குடி வரையெல்லாம் போகக்கூடாது, அதற்கு முன்பே தெற்குப்பக்கம் திரும்பினால் சில கிலோமீட்டர்களிலேயே வந்துவிடும் அழகான கிராமம், மலையன் குளம். நினைத்தவுடன் மனக்கண்ணில் தெரிவது படாகலிங்கஸ்வாமி கோவிலும் வண்டல் ஓடை அணைக்கட்டும்தான்.

வீரப்ப மிடில் ஸ்கூலில் படித்த, படிக்காத சாகச வருடங்கள்.

ஒன்பதாம் வகுப்பு வாத்யார் இசக்கிமுத்துவை பின்பக்கமாக குட்டையில் தள்ளிவிட்டு ஓடின முத்துவேலனைக்காட்டிக்கொடுத்ததற்காக மூன்று நாட்களுக்கு முப்பிடாத்திஅம்மன் கோவிலைச்சுற்றிக்கொண்டு போன பயந்த தினங்கள்.

தாளாளர் தெரு முனையில், கூம்பாக இருக்கும் கட்டிடத்தின் முனை ஒடிந்து கருங்கற்கள் தெரியுமே, அந்த சர்ச்சில் ஒரு ஞாயிற்றுக்கிழமை கேக் இலவசமாகத்தருகிறார்கள் என்றூ யாரோ சொல்ல, அந்த க்யூவில் நிற்கும்போது செவிட்டு சாமா பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்துவிட, அப்பா துரத்தி துரத்தி அடித்த, அழுகையிலேயெ கரைந்த அந்த ஞாயிறு.

அம்மா சுகுணா அரவை மில்லில் அரிசி, மிளகாய்த்தூள் அரைக்கப்போகும்போது கூடவே சாமான் தூக்கிவரப்போனால் வரும்போது அம்மா வாங்கித்தரும் வெள்ளையாக சொர சொரவென்று நாக்கில் பரவும் க்ரீம் வைத்த பன் தரும் இனிமை.

ஊரின் கீழ்க்கோடியில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலினுள் லீவு நாளில் போக அனுமதிக்க மாட்டார்கள். அப்படியும் சுவரேறிக்குதித்து சல சல வென்று எப்போதும் காற்றடித்துக்கொண்டிருக்கும் அரச மரத்தின் அடீக்கிளையில் தாம்புகயிறு கட்டி ஆடின ஊஞ்சல். ஒரு முறை கயிறு அறுந்து விழுந்த காளியப்பன் செங்குத்தாக மண்டையில் அடிபட்டு பைத்தியமாகிப்போன சோகம்.  

பேண்ட் வாத்யமெல்லாம் வைத்து தாசில்தார் தயாநிதி வீட்டு கிருஷ்ணக்கா கல்யாணம். மூன்றூ நாள் அல்லோலகல்லோலப்பட்டது. ஊருக்கே சாப்பாடு அங்குதான். அவர் ஆளூம் கட்சியில் ஏதோ வட்டமோ ஒன்றீயமோ அதுக்கு செயலாளராக இருந்து சம்பாதித்தார் என்று அப்பா, பக்கத்து தெரு குருராஜ நாய்க்கர், கோவில் சாமிநாத சாஸ்திரி எல்லோரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவரை நேரில் பார்த்தால், .ங்க, .ங்க என்று பம்மி அசட்டு சிரிப்புடன் நகருவார்கள்.

நாராயண ஸ்வாமி கோவில் இருக்குமே அதுக்கு நேரே எதிர் பக்கம் ஒரு முட்டுச்சந்து தமிழ்பானா  மாதிரி நேராகத்திரும்பி திரும்பி ஒரு சின்ன வளைவில் முடியும். அந்தத்தெருவின் கடைசி வீட்டு பெண்ணை, இல்லை இல்லை கொஞ்சம் வயதான பெண்மணியை, ஊர் மேஞ்சி என்பார்கள், ஊரில் யாரும், முக்கியமாக மற்ற பெண்கள் மதிக்க மாட்டார்கள். அவள் கோவிலுக்கு வரும்போது விலுக் விலுக்கென்று கழுத்துக்கள் ஒடிக்கப்பட்டு திரும்பி, வாய்கள் கோணி அழகு காண்பிக்கும். அவள் கண்டுக்கவே மாட்டாள். பார்க்கும் ஒவொருவரையும் சத்தமாக விஜாரிப்பாள்

என்ன அன்னம்மாக்கா! வூட்ல தேவலையா? தொடையில சுளுக்குன்னு சொல்லிகிண்டிருந்தாரே”,

மங்களாக்கா! உங்களுக்கு பின் பக்கம் கட்டின்னாரே, நான் கூட மஞ்சள் அரச்சு தடவச்சொன்னேனே, இப்பம் சொஸ்தமாயிட்டா

என்ன சேர்வையாரே! வர்ரீரா இன்னிக்கு, ஒரு ஆட்டம் போடலாம், புது சீட்டுகட்டு வாங்கி வெச்சிருக்கேன்!

பதினொண்ணாம் வகுப்பும்போது ஊருக்கு தார் ரோடு வருது வருதுன்னு ஒரே பேச்சு. கடைசில வந்துது. பெரிய ரோடு இஞ்சின், அப்புறம் லாரி நெறய ஜல்லி, மண்ணு எல்லாம் தயாநிதி வீட்டு வாசலில் குவித்திருந்தார்கள். அந்த மூணு நாலு வாரம் இவன் கூட்டளிகள் விளையாட்டு அங்குதான். கடைசியில் தயாநிதி வீட்டுத்தெரு திருப்பம் வரைக்கும் போட்டுவிட்டு போயே போய் விட்டார்கள்.

தயாநிதியே அவர் தம்பி பேரில் காண்ட்ராக்ட் எடுத்து எதோ பாவ்லா பண்ணி விட்டு காசை ஒதுக்கிகொண்டு விட்டார் என்று பேச்சும் இருந்தது..    

அந்த மறக்க முடியாத ஞாபகங்களை சுமந்து கொண்டு கடைசி டேபிளுக்குப்போய் நின்றான். தோசையில் மும்முரமாக இருந்த அவன் நிமிர்ந்து பார்க்க, இவன் நீ.. நீங்க ….என்று இழுக்க, அதற்குள் அவன் நீங்க தியாகரஜன் பிள்ளை ராஜகோபால் தானே?” என்று கேட்டுவிட, இவன் சந்தோஷமாக தலை ஆட்டினான்.

உக்காருங்க, எவ்வளவு நாளாச்சு? என்ன சாப்பிடறீங்க?”

இல்ல நான் இப்பம்தான் சாப்பிட்டு வாசலுக்கு போம் வழியில பார்த்தேன். தெரிஞ்ச முகம்மாயிட்டேன்னு, வந்தேன்

பரவால்ல. இன்னொரு காபி சாப்டலாம்”.

நீ இன்னும் அங்ஙனதானே?”

நமக்கு வேறெங்க போக்கிடம்

ரொம்ப சந்தோஷம்!. அப்பறம், ஊரு எப்பிடி இருக்கு?”

ஊருக்கென்ன, நெறய மாறிடிச்சி

சொல்லு கேப்பம்! எனக்கு ஒண்ணூம் மறக்கல தெரியுமா?”

தயாநிதி போய்ட்டாரு ரெண்டாம் வருஷம்!”

எம் எல் ஆய்ட்டாரு இல்ல?”

இல்ல, நின்னாப்ல, ஆனா தோத்துட்டாரு. கிருஷ்ணக்கா புருஷன் தான் இப்பம் அவரோட எல்லா நிலபுலங்கள பாத்துக்கிடறாப்பல. அவரும் வட்டச்செயலாளராய்ட்டாரே!” 

அவன் சொல்லிக்கொண்டே போனான்.

முப்ப்பிடாத்தியம்மன் கோவிலுக்கு பெரிய கோபுரம் கட்டிட்டாங்களாம்.

சுகுணா அரவை மில் மூடியாச்சாம்.

காளியப்பன் கடைசி வரைக்கும் பைத்தியமாவே திரிஞ்சானாம். போன மாசம்தான் வண்டல் ஓடை டேமில் விழுந்து பாடியே கிடைக்கலியாம்.

பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல வாகைக்குளத்துக்கு மாத்திட்டாங்களாம்.

வசந்தா டீச்சரின் புருஷன் செத்துப்போய்ட்டானாம்.

அந்த ஊர் மேஞ்சி கிணற்றடியில் வழுக்கி விழுந்து இப்போ படுத்த படுக்கையாம். கவனிக்க ஒருத்தரும் இல்லியாம்.

சுவாமிநாத குருக்கள் தன் பையனோட மதுரைக்குப் போய்ட்டாராம்.

நெறய வீடுங்க இடிச்சி அடுக்கு மாடி குடியிருப்பாய்ட்டதாம்.

அக்ரஹாரத்துல முக்காவாசிப்பேர் துபாய்லேர்ந்து வந்த இஸ்லாமியருக்கு நெலத்த வித்துட்டு மெட்ராஸ் பக்கம் வந்துட்டாங்களாம்.

அப்பா! அவ்ளோ மாறிட்டா! எனக்கு எதுவுமே மறக்கலை. எல்லாம் அப்படியே நெனப்புல நெறம்பி இருக்குப்பா. ஒன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் நரசிம்மா. உன் தம்பி ஒர்த்தன் இருப்பானே, ராமசாமிதானே அவன் பேரு, எனக்கு மறக்கவேயில்ல, அவன் இப்போ எங்கே இருக்கான்?”

தோசையை முடித்து சாம்பாரை கிண்ணத்தோடு வாயில் கவிழ்த்த அவன் கொஞ்சம் நிதானமாக இவனைப்பார்த்தான். கிளாஸிலிருந்து தண்ணிரைக்குடித்தான். சின்ன ஏப்பம் விட்டு அழுக்கு கர்ச்சீப்பால் வாயைத்துடைத்துகொண்டு சொன்னான்.

அவந்தான் ராமசாமியாம். அவனோட அண்ணன் நரசிம்மன் இப்போ டெல்லில ஏதோ மினிஸ்ட்ரியில் க்ளார்க்கா இருக்கானாம்.

இவன் காபிக்கு நன்றி சொல்லிவிட்டு விடு விடுவென புறப்பட்டான்.

சென்னையில் வழக்கம்போல வெக்கை வேர்த்துவிட்டது.