Friday, 30 March 2018

இன்றைய கதையரங்கம் (30 மார்ச், 2018)
வெத்தக்குழம்பும் சுட்ட அப்பளாமும்
“ நான் ரெடியா இருக்கேன்! எப்ப வரப்போறீங்க?”
“தோ இன்னும் அரை மணியில நம்ம கார்ல இருப்பேன்!”
“அப்பாடா! ஒரு வழியா உங்களக்கிளப்பியாச்சு! இன்னம் ரெண்டு நாளைக்கு ஒண்ணும் பேசப்படாது!”
“ஆஹா! நீ சொன்னா மறுப்பேது?”
“ம்க்கும்!”
கார் மெயின் ரோடு திரும்பி ராஜ் பவன் வருவதற்குள் மொபைலை எடுத்து பேச முற்பட்டார். வேதவல்லி அதைப்பிடுங்கிக்கொண்டாள்.
“இப்பத்தானே சொன்னேன்! பேசப்படாது! எனக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேள்!”
“ஓகே ஒகே! நீதான் பாஸ்!”
ரிலாக்ஸாகச்சாய்ந்து கொண்டு அமைதியானார். கார் செங்கல்பட்டைத்தாண்டும்போது “இங்கதான் ஒரு கிராமத்துல நான் ஸ்டூடண்ட்டா இருக்கும்போது..” என்று ஆரம்பித்தார்.
“நெறைய தரம் சொல்லியாச்சு! அந்தக்கிழவனும் அவன் ஊமைப்பெண்ணும்தானே!”
”ஓகே யூ வின்!”
மறுபடி அமைதியானார். வேதவல்லிக்கு அவரைப்பார்க்க பாவமாக இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டாள்.
“இந்த ரெண்டு நாள் அமைதி அவருக்குத்தேவை!”
வழியில் சிதம்பரத்தில் மேற்குத்தேரடி வீதியில் பலகாரம் டாட் காம் என்னும் ரெஸ்டாரண்ட்டில் தோசையும் காபியும் சாப்பிட்டார்கள்.
“இப்பல்லாம் என்ன! டேஸ்டே இல்ல பாரு! அப்ப மாயவரத்துல காளையாக்குடி….!”
“சொல்லியாச்சு! தோசைக்கு எள்ளுப்பொடியும் நல்லெண்ணையும்தானே!”
“சரி சரி, இன்னமே வாயைத்திறந்தேன்னா கேளு!”
வேதவல்லி சிரித்துக்கொண்டே அவர் கையைப்பற்றினதில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது.
வைத்தீஸ்வரன் கோவில் தாண்டினதும் அழகான கிராமங்கள் தென்பட, ஏஸியை அணைக்கச்சொல்லி, கார் கண்ணாடியைத்திறந்து வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல். நடு நடுவே சல சல சிற்றாறுகள், இல்லை சிற்றோடைகள். கோவிலுக்கு அருகிலேயெ தெரியும் காத்த வீரியன் சிலைகள். தெருவில் கொஞ்சம் நடமாட்டம். கூட்டமாய் ஆடுகளை ஓட்டிப்போகும் அந்த பெரிய முண்டாசு அணிந்த சிறுவன், சுகுணா என்ற பெயருடன் காரியரில் கட்டி வைத்த டப்பாவில் முட்டை வியாபரத்துக்கு சைக்கிளில் போகும் ஆசாமி, கையில் குடங்களுடன் ஒன்றிரண்டு விடலைப்பெண்கள், முணு முணுப்புடன் சில கிழவிகள். தூரத்தில் வரிசையாக ஊருக்குக்காவல் போல பனை மரங்கள்.
”கிராமம்னா நன்னாத்தான் இருக்கு!”
“அதுக்குத்தான்ரெண்டு வருஷமா நானும் என் தம்பியும் உங்களக்கெஞ்சிக்கூப்டுண்டு இருந்தோம்!”
“ஆமா இப்ப என்ன உன் தம்பிக்கு திடீர்னு தெய்வ பக்தி! நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம்னு அமர்க்களம் பண்றானே?”
”அவனோட விவசாய நெலத்துக்கு அவார்டு கொடுத்தாளே போன மாசம்! அதுக்கு பிரீதியா ஏதோ தெய்வ காரியம் பண்றான்!”
“யாரு அவனா? சும்மா இது ஒரு சாக்கு! தன்னோட பந்தாவைக்காட்டிக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கறான்! மந்திரி வர்ராரோன்னோ?”
“ஆமா உங்களுக்கு அவனக்கண்டா எப்பவுமே கரிப்புதான்! மந்திரி வராருன்னா அவனோட செல்வாக்கு அப்படி! எவ்வளவு நெலம்! அத்தனையிலும் இப்பவும் பயிர் பண்ணி, எரநூறு பேருக்கு மேல வேல கொடுத்து, ரைஸ் மில்லுல வேலைன்னு அவனால எத்தன பேர் பொழைக்கிறா!”
“சரி இன்னைக்கு என்ன புரோகிராம்?”
“புரோகிராம் என்ன புரோகிராம்! நாம போய்ச்சேர நாலாயிடும்! டிஃபன் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டா அஞ்சரைக்கு திருநாள்ளாறுல அபிஷேகம் பண்றான்! முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூக்கம். நாளைக்கு காலம்பர ஆறு மணிக்கே ஆத்துல பூஜை ஹோமமெல்லாம் ஆரம்பிச்சுடறாளாம்.!”
”ஆமா உன்னோட சித்தி பொண்ணு ஒருத்தி இங்க எங்கயோதான் இருப்பாளே?”
“ஆமா சுகந்திதானே! இங்கதான் செம்பனார்கோவில்ல இருக்கா!”
”வருவாளா? அவ ஹஸ்பண்ட் கூட சாஸ்திரிகள்ம்பியே?”
”தெரியல! என் தம்பிக்கும் அவாளுக்கும் ஒத்துப்போகாது!”
”நெனச்சேன்! உன் தம்பிக்கு ஒத்துப்போணும்னா அவாளுக்கு சொத்து இருக்கணூமே! இல்லேன்னா இவன் கிட்டத்துல சேர்க்க மாட்டானே!”
”என்ன பண்றது, பண்ணையாராவே வளர்ந்துட்டான்! அந்த மிதப்பு அப்படியே ஒட்டினுடுத்து! நாம போய் அவாள பாத்துட்டு வந்துடலாம்!
“நிச்சயமா! நானும் வரேன்!”
திருநள்ளாறு போய் அபிஷேகம் ஆராதனையெல்லாம் பார்த்து வீடு வந்தபோது சின்ன உறவுக்கார கூட்டம். கழுத்து காதுவென்று நகைகள் அணிந்த செயலான உறவுக்காரகள் மட்டும்!
“வா வேதவல்லி! இந்த தரம் எப்படியோ ஆத்துக்காரர அழைச்சிண்டு வந்துட்டே! பேஷ்!”
”ஆமா சுகந்திய பாத்தியோ?”
”எப்படி இருக்கா மாமி?
”அவ ஆம்டையானுக்குதான் உடம்பு சரியில்லைன்னா. நானுமே காதால கேட்டதுதான்! அவரும் இப்ப வைதீகத்துக்கெல்லாம் வர்ரதில்லை!”
”அக்கா! அத்திம்பேர சாப்பிட வரச்சொல்லலாம்! உங்க ரெண்டு பேருக்கும் மாடில ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கேன், ஏஸிய ஆன் பண்ணி வெக்கச்சொல்லிட்டேன். சீக்கிரமா போய்த்தூங்கிடுங்கோ! காலம்பர சுருக்க எழுந்திருக்கணூமே!”
”அப்புறம் அத்திம்பேர்…..?”
“என்ன சொல்லு?”
“இங்க என்னோட ஃப்ரெண்ட்! கடலங்குடி மிராஸ்தார்!. பெரிய எடம்! மயிலாடுதுறை எம் எல்லேக்கு ரொம்ப ஆப்தர். அவர்ட்ட எனக்கு சில சகாயம் ஆக வேண்டியிருக்கு! உடம்பு சரியில்லாம அவஸ்தைப்படறார். நாளைக்கு வருவர். கொஞ்சம் நீங்க அவர செக் பண்ணனும்! மாடில ஏஸி ரூம்லதான் அவர் உக்காத்தி வெக்கப்போறேன். நீங்களே இங்க வந்தபோது அவரப்பார்த்தேள்னா அவருக்குப்பெருமை. எனக்கும் மரியாதையா இருக்கும்!”
“த பாரு நீ என் மச்சினந்தான்! அதுக்காக உன்னோட பிஸினஸுக்காக என் தொழில யூஸ் பண்ண முடியாது. நா இங்க லீவுல வந்திருக்கேன். அதனால ..சாரி! அவர மெட்ராஸுக்கு வரச்சொல்லு. பேஷாப்பாக்கறேன். இப்ப மறுபடி சாரி!
“என்னக்கா இப்படி சொல்றார் அத்திம்பேர்!”
“விடுடா! அவரப்பத்தி இத்தன வருஷத்துல ஒனக்குத்தெரியாதா?”
காலை விடிந்தபோது முன்பின் கேட்டே அறியாத பட்சிகள் சப்தித்துக்கொண்டிருந்தன. பல் தேய்த்துக்குளித்தார். டிஃபன் சாப்பிட்டார். கீழே வேத மந்திரங்கள் தொடங்கின ஓசை கேட்டது.
“அத்திம்பேர்! நீங்க பாட்டுக்கு மாடியில ரெஸ்டா இருங்கோ! பதினோரு மணிக்கெல்லாம் எல போட்டுடலாம்னு சாஸ்திரிகள் சொல்லியிருக்கார். வேணும்னா நம்ம ஊர் கோவிலுக்குப்போட்டு வரேளா?”
“இல்ல வாண்டாம்! செம்பனார்கோவிலுக்கு ஒரு நடை போய்ட்டு வரேன்!”
“ஆரு, அந்த சாஸ்திரிகளாத்துக்கா?”
“உன் ஒண்ணு விட்ட தங்கைன்னு சொல்ல மாட்டியா?”
“அடப்போங்கோ அத்திம்பேர்! அவாள்ளாம் நம்ம ஸ்டேட்டஸுக்கு ஒத்து வருவாளா? இங்க வந்தாள்னா, அதான் பாத்தேளே, இத்தன பேரோட நகை நட்டெல்லாம் பாத்து பிரமிச்சுண்டு அலமந்து நிப்போ! அசட்டு பிசட்டுன்னு பேசுவோ! எனக்கு அதெல்லாம் சரிப்படாது அத்திம்பேர்!”
“நான் சாதாரண ஆசாமிதானேப்பா! நா போய் பார்த்துட்டு வந்துர்ரேன்! வேதம்! நீ வரயா?”
“அத்திம்பேர்! ப்ளீஸ்! அக்காவையாவது இஞ்ச வெச்சுக்கறேனே! அவளையும் இழுத்துண்டு போணுமா அந்தாத்துக்கெல்லாம்?”
”சரி சரி! வேதம் நா போய்ட்டு ஒன்னவர்ல வந்துடறேன்!”
”கன்னியப்பா! ஒனக்கு வழி தெரியுமா?”
“இங்கல்லாம் அவ்வளவு பளக்கமில்லீங்கய்யா!”
“அத்திம்பேர்! நம்ம மாடசாமியைக்கூட்டிண்டு போங்கோ! டேய்! மாடசாமி! அய்யாவோட செம்பனார்கோவிலுக்கு போய்ட்டு கூட்டிண்டு வா! சுருக்க வரணும், என்னடா?”
எழுபதுக்கு மேல் வயதான மாடசாமி தன்னைவிட இருவது வயது குறைந்த மிராஸ்தார் ”டா” போட்டுப்பேசியதை பொருட்படுத்தாமல் கிளம்பினார்.
“சுகந்தி! வாசல்ல கார் நிக்கறதே! நம்மாத்துக்கா? யார்னு போய்ப்பாரு?”
”தோ போறேம்மா! இவருக்கு கஞ்சி கொடுத்துட்டு வந்தேன்!”
அடேடே! வேதத்தண்ணாவா! வாங்கோ வாங்கோ! வேதவல்லி வரலியா? மிராஸ்தார் ஆத்துய்க்கு வந்தேளா? ஹோமம்னு கேள்விப்பட்டேன்!”
“ஆமாமா! நீ எப்படி இருக்கே? அவர் சௌக்கியமா? உடம்பு சரியில்லைன்னு சொன்னாளே!”
விசும்பல்.
“ஒரு மாசமா போட்டுப்படுத்தறதுண்ணா! வயத்த வலி வலின்னு துடிக்கறார்! மாயவரம் டாக்டர்ட்ட காட்டினேன். வயத்துல அல்சர்ங்கறார். உப்பு காரமில்லாம சாப்பிடச்சொன்னார்! ஆச்சு இதோ ஒரு மாசத்துக்கு மேல! ஒரு மருந்தும் கேக்கலேண்ணா!”
“ஏம்மா எனக்கு ஒரு ஃபோன் பண்ணப்படாது? என்ன பொண்ணு நீ?” சரி வா! நான் பக்காறேன்!”
”வாங்கோ சார்!”
“ஏந்துக்க வாண்டாம்! அப்படியே ஈஸியா இருங்கோ! என்ன பண்றது! யோஜனை பண்ணி சரியாச்சொல்லுங்கோ!”
“போன மாசம் ஒரு நா தெவசத்துக்குப்போய் சாப்டுட்டு வந்தேன்! அன்னிலேர்ந்தே வயத்துல ஒரு அசக்தம். வலின்னு சொல்ல முடியாது. வெளிக்கி சரியா போகல. ரெண்டு நா பாத்துட்டு மாயரம் டாக்டர்ட்ட காட்டினேன். அவரும் ஏதோ மருந்து குடுத்தார்”.
“வலி குறைஞ்சுதா?
“இல்லை! ஜாஸ்தியாச்சு! சில சமயம் பின் பக்கத்துலேர்ந்து ரத்தம்! சில நாள் பேதி! சில சமயம் ரெண்டு மூணு நாளைக்கி ஒண்ணுமே போகவே போகாது! வெறுமனே குசுவா........கேஸாப்போகும்!”
மறுபடி டாக்டர்ட்ட போலியா?”
”இல்ல! அம்மா கை மருந்தா ஏதோவெல்லாம் குடுத்தா. ஒண்ணொண்ணா பார்த்துண்டு இருக்கேன்!”
சுகந்தி! இவருக்கு வெயிட் குறைஞ்சிருக்கா?”
“ஆமாண்ணா! ஆள் பாதியாய்ப்போயிட்டார்!”
”சரி இவர இன்னமே இங்க வெச்சு ட்ரீட்மெண்ட் பண்ணினா போறாது. இன்னிக்கே என்னோட மெட்ராசுக்கு கிளம்புங்கோ!”
“அண்ணா என்ன சொல்றேள்? ஏதாவது அபாயமா…?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏற்கனவே நாள் கடத்திட்டேளே! அதான்!”

அண்ணா….?”
“நம்மாத்துல தங்கிக்கலாம். அம்மாவையும் கூப்டுக்கோ! சட்டுனு பொட்டி எடுத்துண்டு கெளம்புங்கோ! என் கார்லயே போய்டலாம். நா வேதத்துக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்!”
“மாடசாமி! நீங்க கெளம்புங்க! எனக்கு லேட்டாவும்! இந்தாங்க பஸ்ஸுக்கு காசு. போறப்போ காபி சாப்ட்டுட்டு போங்க!”
“அய்யா கோவிச்சுக்குவாரே…?”
“நா இப்ப ஃபோன்ல சொல்லிர்ரேன்! நீங்க கவலைப்படாம போங்க!”
“வேதம்! நாந்தான்!”
“என்ன ஆச்சு?”
நான் சொல்றத மூழுசாக்கேளு!”
“ம், சொல்லுங்கோ!”
”………………………………………………..”
“அடப்பாவமே! அவாள அழச்சிண்டு உடனே நீங்க கெளம்புங்கோ! நான் மெட்ராசுக்கு ஃபோன் பண்ணி அலமேலுவ வரச்சொல்லிடறேன்! சமையக் காரியத்தெல்லாம் அவ பாத்துப்போ! நானுமே நாளைக்கி டிரெயின்ல கெளம்பி வந்துடறேன்!”
“ஒந்தம்பி..?”
“அவங்கெடக்கான்! நா சமாளிச்சுக்கறேன்!”
தாங்க் யூ வேதவல்லி! ஐ லவ் யூ!”
“அய்யே போறுமே! வழிஞ்சாறது! கெளம்புங்கோ! கெளம்புங்கோ!”
”ப்யூலா? நம்ம ஆஸ்பத்திரியில ஸ்பெஷல் ரூம் ரெடி பண்ணு! இன்னிக்கு ஈவினிங் நா வந்துருவேன்! அவினாஷக்கூப்பிட்டு கோலோனோஸ்கோபிக்கு தயார் பண்ணிக்கச்சொல்லு! கால் டாக்டர் நிர்மலா!”
”நிர்மலா ஹியர் புரொஃபசர்!”
”எஸ் நிர்மல்! கார்சினோ எம்ப்ரையோனிக் ஆண்டிஜென் டெஸ்ட் இருக்கா நம்மகிட்ட? ஓ குட்! அத ரெடி பண்ணு!”
”எஸ் புரொஃபசர்!”
”எனக்கு கான்ஸர் ஸ்டேஜிங் டெஸ்ட் பண்ணனும் ஒரு பேஷண்ட்டுக்கு! ஐ சஸ்பெக்ட் இன்வேஷன் இண்ட்டு லிம்ஃப் நோட்ஸ். ஆஸ்க் ப்யூலா டு கெட் தி ஆபரேஷன் தியேட்டர். மினிமல் இன்வேஸிவ் சர்ஜரி டுமாரோ! ஓகே?”
“எஸ் டாக்டர்! வி வில் பி ரெடி ஃபார் யூ!”
“அண்ணா! என்னென்னமோ சொல்றேளே! இவர் பொழப்பாரா?”
“சேச்சே! சுகந்தி! நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்! அப்படி உயிர் போக விட்ருவோமா? எனக்கு இப்ப பசி உயிர் போறது! இன்னிக்கு என்ன சமையல்?”
“வெத்தக்குழம்பு சுட்ட அப்பளாம்! அண்ணா! நீங்க மிராஸ்தார் ஆத்துல ஹோம்ம் முடிஞ்சு சாப்பிடணும்னு…?”
“என்னது வெத்தக்குழம்பு சுட்ட அப்பளாமா? அதுக்கு என் வலது கையையே தருவேனே! நீ என்ன பண்றே, முதல்ல அதப்போடற. அப்புறம், அரை மணியில சாப்ட்டுட்டு எல்லோருமா மெட்ராசுக்கு கெளம்பறோம்!
சுண்டைக்காய் வெத்தக்குழம்பை வெக்கமில்லாமல் வழித்துச்சாப்பிட்டுவிட்டுத்தான் எழுந்தார் டாக்டர் வைகுண்டம்.

Thursday, 22 March 2018

இன்றைய கதையரங்கம் (23 மர்ர்ச், 2018)....
தேன்… கெட்ட தேன்?
“ப்யூலா! என்ன சத்தம் அங்க?”
“இதோ பாக்கறேன் புரொஃபசர்!”
”யாருய்யா அது? டீன் ரூம் வாசல்ல வந்து தகறாரு பண்ணிக்கினு இருக்கீங்க? என்னா வோணும்?”
“ நர்சம்மா! இத்த கேளுங்க!”
“யோவ்! நான் நர்ஸு இல்லைய்யா! சொல்லு!”
“புள்ள சாகக்கெடக்குது! பெரிய டாக்டர இட்டாந்து பாக்க சொல்லுன்னா, முடியாதுன்றாரு! அதான் பெரிய டாக்டரண்டவே வந்துட்டம்!”
“அவினாஷ்! டீன் சத்தம் போடறாரு! என்ன ஆச்சு?”
ப்யூலா! நானே டீனப்பாக்கத்தான் வர்ரேன்!
இந்தாளுங்க தொல்ல தாங்க முடியல!
“யாய்! ஆரப்பாத்து…!”
“த சும்மாருய்யா! இதென்ன உங்க பேட்டைன்னு நெனச்சியா? செக்யூரிட்டிய கூப்பிட்டு வெளில தெர்த்திடுவேன்! கம்முனு இரு! விஜாரிக்கலாம்!”
டீன் வெளியே வந்து விட்டார்.
” ப்யூலா! வாட்ஸ் ஹேப்பனிங்? அவினாஷ்! நீயும் இங்கதான் இருக்கியா?”
“அய்யா பெரிய டாக்டரய்யா! நீங்களே வந்து பாருங்கய்யா!”
“வரேன் வரேன்! என்ன அவினாஷ்! என்ன நடக்குது?”
“எட்டு வயசுப்பொண்ணு டாக்டர்! ஸ்கின் அலர்ஜி! எங்கியோ ஆயுர்வேதிக் ட்ரீட்மெண்ட் பாத்துருக்காங்க! அதுல ஃப்ளேர் அப் ஆகியிருக்கு. பார்த்தா , ய பிட் சீரியஸ் புரொஃபசர்!”
“என்ன பண்ணினே?”
லம்பார் பங்க்சருக்கு குடுத்திருக்கேன்.”
வெல்! யு டிட் ரைட்! அப்ப என்ன கூச்சல்?”
“நீங்கதான் பாக்கணுமாம்! பொண்ணு சீரியஸ் கேஸுன்னு ரகளை!”
“இங்க வாங்க! இந்தாங்கம்மா, நீங்க பொண்ணோட அம்மாவா ? டெஸ்டுக்கு போயிருக்கு. ரிசல்ட் வந்தவுடனே நா வரேன்! ஏன்மா லேட்டா வர்ரீங்க! இங்கல்லாம் இலவசம் தானே! உடனே வந்துட வாண்டாம்! நீங்க லேட் பண்ணிட்டு இங்க வந்து சத்தம் போட்டா எப்படி?”
“இல்லீங்க! அவரு சின்னப்பையனா இருக்காரு! அதான் நீங்க பாக்கணுமின்னு விருப்பப்பட்டோம்! ஒரே பொண்ணுங்கய்யா இந்தம்மாவுக்கு!”
”இவரும் நல்ல டாக்டருதான்யா! சரி சரி காத்திருங்க! நானே வந்து பாக்கறேன்!”
”அவினாஷ்! ப்யூலா! லெட்ஸ் கோ!”
”அவினாஷ்! ப்ளீஸ் நோட் த ராஷெஸ்? மெனிஞ்செடிஸ்! காட் ஃபர்பிட்! செப்டிகேமியா! கிளாஸ் டெஸ்ட் பண்ணினியா?”
“இல்ல டாக்டர்!”
”டூ இட் ! ரைட் நௌ!”
”நாட் கிளியர் டாக்டர்!
”ஐ தாட் ஸொ! லம்பார் ரிஸல்ட் கொடு!”
“ஒப்பனிங் ப்ரெஷர் அதிகமில்லையே! மெனிஞ்கோ கோகல் வைரஸ் னு நிச்சயமா சொல்ல முடியாது! ஹோப் இட் ஈஸ் நாட்! ! அட்மினிஸ்டர் கார்டிகொ ஸ்டிராய்ட்ஸ்! வேற வழி இல்லை!” அப்சர்வ் ஹர் ! பிளட் ப்ரெஷர் எப்படி இருக்கு? ஷாக் இருக்கா?
” பிரஷர் லோ தான் டாக்டர்! மைல்ட் ஷாக் இருக்கு!”
ஓகே! நீ உடனே இண்ட்ராவீனஸ் ஃப்ளுயிடுக்கு ஏற்பாடு பண்ணு! ரொம்ப குளோஸா வாட்ச் பண்னு அவினாஷ்! சாரி! இன்னிக்கு உனக்கு 24 மணி ட்யூட்டி! எனக்கும்தான்!”
”ஓகே டாக்டர்!”
ப்யூலா! அவங்களக்கூப்பிடு!”
“எப்பலேர்ந்தும்மா இந்த மாதிரி இருந்தது?”
“ஒரு வாரமா டாக்டர்!”
“ஒரு வாரம் என்னம்மா பண்ணினீங்க?”
“ஆயுர்வேத டாக்டராண்ட காட்னேங்க! அவ்ரு பவுடர் குடுத்து தேன்ல கலந்து உடம்புல தேக்கச்சொன்னாருங்க! அது தேச்சப்பிற்பாடுதான் பெரிசாயிடுச்சுங்க!”
“ஆமாங்கய்யா! அவனப்பிடிச்சு கட்டிப்போட்ருக்கமில்ல! கொழந்தைக்கு எதுனா ஆச்சுன்னா அவன பொலி போட்றுவம்!”
”யோவ் அதெல்லாம் கூடாதுய்யா! அவனும் படிச்சவன் தானே? அந்த டாக்டரக்கூப்பிட்டு வாங்க! நான் பேசறேன்!”
“இதோ இவந்தான் அந்த வைத்தியன்! ! டாய்! வாடா இங்க!”
“இந்தாய்யா! விடு அவர! நீங்க உள்ள வாங்க! ப்யூலா! கீப் தெம் அவே!”
“கொழந்த பொழச்சுப்பா! ஆமா, நீங்க என்ன மருந்து குடுத்தீங்க?”
”சார்! டாக்டர்!”
”டாக்டர்னே கூப்பிடுங்க!”
”டாக்டர்! கொழந்தைக்கு கப உடம்பு! சட்டுன்னு தோலைப்பாதிக்கற விஷயங்கள் நெறைய இருக்கு. நா பார்த்த வரைக்கும் அவளுக்கு இருந்தது தத்ருன்னு ஆயுர்வேதத்துல சொல்வோம். அதனால சரசபரில்லான்னு மூலிகை…
“நன்னாரி இல்ல நறு நேட்டிம்போமே, அதுவா?”
அட! அதேதாங்க! அத தேனுல குழைச்சு தடவச்சொன்னேன். தப்பே ஆவாதுங்க! இவங்க என்ன பண்ணினாங்களோ என்னமோ என்னையப்போட்டு அடிக்க வர்ரானுங்க! காப்பாத்துங்க டாக்டர்!”
”பயப்படாதீங்க! ஆமா தேன் நீங்களே குடுத்தீங்களா?
”இல்ல டாக்டர்! கடையில வாங்கிக்கச்சொன்னேன்!”
“அதான் அங்கதான் பிராப்ளம் இருந்திருக்கணூம்!
ப்யூலா? அந்தம்மாவ மட்டும் கூப்பிடு!”
”ஏம்மா இவரு குடுத்த மருந்த தேன்லதானே கொழைச்சு தடவினீங்க?”
”ஆமாங்கய்யா!”
”தேன் எங்க வாங்கினீங்க?”
”போன மாசம் ஒரு பொண்ணு வாசல்ல வந்து வித்திச்சு! அத வாங்கிவெச்சேன்!!”
“அந்த பாட்டில் எடுத்துட்டு வாங்க! நான் டெஸ்ட் பண்ணச்சொல்றேன்!”
“குழந்த பொழச்சுக்குமா அய்யா?”
பார்ப்போம்மா! சுலபமா விட்றுவோமா? நாங்கல்லாம் டாக்டருக்கு படிச்சுட்டு எதுக்கு இருக்கோம்?”
”ப்யூலா! செக் வித் அவினாஷ்!
”ஸ்டேபிள் டாக்டர்!”
”வாட்ச் தி ரேஷஸ்!”
”ஷ்ரிங்கிங்!”
”தாங்க் காட்! மெனிஞ்சோகோக்கல் இல்லை! தப்பிச்சா கொழந்த! நாளைக்கு எதுக்கும் வாக்ஸினைப்போட்டுடு! ACW135 ஸ்டாக் இருக்கா? இல்லேன்ன கெட் இட் ஃப்ரம் ராயப்பெட்டா!”
புரொஃபசர்! பேஷண்ட் ஸ்டேபிள்! ராஷஸ் டௌன்! ப்ரெஷர் நார்மல்!”
”குட்! அவினாஷ்! இந்தம்மா பாட்டில் தேன் தருவாங்க! லாப்க்கு அனுப்பிடு! ஐயாம் அல்மோஸ்ட் ஷ்யூர்!
ப்யூலா! எல்லோரையும் கூப்பிடு!
“த பாருங்கய்யா! இந்த டாக்டர் குடுத்த மருந்து சரியான மருந்துதான்! அந்தம்மா ஏதோ கெட்டுப்போன தேன்ல குழச்சதால பொண்ணுக்கு அலர்ஜியாப்போயிடுச்சி! இப்ப ஒண்ணும் கவலை இல்ல!”
“அடங்கொன்னியா! தேனா கெட்டுப்போச்சி! தேன் கெடாதுன்னுவாங்களே!”
”அதெல்லாம் நல்ல தேனு! இது என்ன கலப்படமோ! நீங்க தப்பு பண்ணிட்டு இவர மெரட்டறீங்களே?
”மன்னிச்சுக்கங்க வைத்தியரய்யா!”
”அடப்போய்யா! நா ஊர விட்டே போறன்!”
”பெரிய டாக்டரய்யா! ரொம்ப நன்றிங்க!”
”இந்தாம்மா! கொழந்த இன்னிகு இங்கவே இருக்கட்டும்! நாளைக்கு அழச்சிட்டு போங்க! அவினாஷ்! அந்த பெட் நம்பர் 14 எப்படி இருக்காங்க?”
”ஏம்மா! பைலாம்மா?”
”யோவ்! எம்பேர் ப்யூலாய்யா!”
”சரிங்க! பெரிய டாக்டர் தெய்வம்மா! ஒரே நாளுல பொண்ன பொழைக்க வெச்சுட்டாரூ! இன்னைக்கே அவர் பேருல முப்பாத்தி அம்மன் கோவில்ல அர்ச்சன ஒண்ணும் பண்ணிடறேன்! ஆமா அவர் பேரு என்னம்மா!”
” அவர் பேரு வைகுண்டம்! டாக்டர் வைகுண்டம்!”

Friday, 16 March 2018

பெயரில்லாத கதை

அந்தப்பொம்மை ஒருக்களித்துப்படுத்துக்கிடந்தது. கைகளை என்னமோ ராயசமாக மடக்கி ஒரு சிறிய கூட்டத்தில் முக்கியப்பிரமுகர் போல தோள்களை உயர்த்தி கொஞ்சம் ”இங்கே நாந்தான் தலைவி” என்கிற ஹோதா. கொட்டைக்கண்கள். அதில் தெரியும் லேசான குறும்பு. ரொம்ப முக்கியமானது அந்த ஓரவாய் சிரிப்பு. அது முழு சிரிப்பு இல்லை. புன்னகையும் இல்லை. ஆனால் சிரிப்பு. வாயின் கடைசி ஓரத்தில் ஒரு மைக்ரோ செண்டிமீட்டர் மட்டுமெ விரிந்த சிரிப்பு போல ஒன்று. அதில் எத்தனை அலக்ஷ்யம்!
சோபாவில் சாய்ந்த நிலையில் அமர்த்தப்பட்டிருந்த அந்த பொம்மையை வீடு மற்றும் ஆஃபீசுக்கு சொந்தக்காரியான ஷோபா, தான் அங்கே வைக்கவில்லை என்கிறாள்.
ஷோபாவின் உதவியாளி வினோ “எப்படி இங்கே வந்துதுன்னு எனக்கும் தெரியவில்லை” என்று சாதிக்கிறாள்.
இருவருக்குமே அந்தபொம்மையை சுத்தமாகப் ்பிடிக்கவில்லை!
“ஷோபா! உங்களுக்கே தெரியாதா இந்த பொம்மை எப்படி இங்க வந்துதுன்னு?”
“யோசிச்சுப்பார்த்தால் நினைவே வரல வினோ”!
“சரி, அத விடலாம். ஷோபா! இப்போ அனுசூயா வர்ரேன்னிருக்காங்க”
“என்னது அனுசூயாவா? நாளைக்குதான் ட்யூ டேட்”
“அதென்னமோ தெரியாது. கொஞ்சம் முன்னாடி போன் பண்ணி இன்னும்அரை மணில வருவேன். மாடல் எனக்கு பாக்கணும்னா!”
“இன்னும் ரெடியாகவே இல்லையே வினோ. நாளைக்குதானெ அவ வரணும்?’
“அனுசூயா பத்தி தெரியாதா உங்களுக்கு? புடிச்ச முயலுக்கு ஆறே கால்னா ஆறு கால்தான்! என்ன பண்ணறது, புருஷன்காரன் ஏடிவி க்ரூப்போட சேர்மனாச்சே! அவாளோட வசந்த மாளிகைக்குன்னா நாம இண்டீரியர் டெகோரேஷன் பண்ணப்போறோம். மாடிலேர்ந்து குதின்னாலும் குதிக்கணும்”!
”சரி சரி, நீ போய் நம்ம கேர்ள்ஸ் கிட்ட அந்த வீட்டு மாடலை எதையாவது தேத்தி ரெடி பண்ணச்சொல்லு. நா ரூம சரி பண்ணறேன்”.
”அடச்சே! இது வேற!”
ஷோபா அந்த பொம்மையை எடுத்து அலமாரிக்கு மேலே எறிய, அது ”தொபக்”கென்று போய் விழுந்த வாக்கில் அலமாரியின் கதவுக்கு மேல் வாகாக சாய்ந்து நின்றது.
அந்தப்புன்னகை அப்படியே நக்கல்!
“ஷோபி டார்லிங்! என்கிற குரலோடு அரை கிலோ பர்ஃப்யூம் மணத்துடன் அனுசூயா உள்ளே வந்தாள்.
“வாங்க மேடம்”
அவள் கையில் அவளின் பாதி பர்ஃப்யூம் அணிந்த அவளின் பிகினீஸ் பூனை.
”ரூபி! சமத்தா இருக்கணூம்.“ ஷோபி! என் வீட்டு மாடல் எந்த அளவுக்கு ரெடி?’
”இதோ கொண்டு வரச்சொல்றேன். காஃபி சாப்பிடறீங்களா?”
“வாட் காஃபியா? அலறினாள்.
”யூ நோ சம்திங்? ப்ரேசிலேர்ந்து ரங்கு ஃப்ரெஷ்லி க்ரவுண்ட் காஃபி வாங்கிண்டு வந்திருக்கு. ஒரு த்ரிப்சம் தொடலை இதுவரைக்கும்”
“வேற கூல் ட்ரிங்க் ஏதானும்..?”
”ஒண்ணும் வேண்டாம் ஷோபா டார்லிங்! சீக்கிரம் கொண்டு வா. கீழெ ரங்கு கார்ல வெய்ட் பண்ணிண்டு இருக்கார். பத்து நிமிஷத்துக்கு மேல பொறுமை கிடையாது”. எல்லாத்துலயும் அவசரம் ரங்குவுக்கு, ஒண்ணே ஒண்ணுத்தத்தவிர” என்று ஆபாசமாக சிரித்தாள்.
ஷோபா பல்லைக்கடித்துக்கொண்டு, ”இதோ! வினோ! கொண்டு வரியா?”
இப்பொது அந்த ரூபி என்னும் பிகினீஸ் பூனை சோபாவில் ஏறி, ஜன்னல் கதவில் தொத்தி அலமாரியின் மேல் உள்ள அந்த பொம்மையை பார்த்து ”மியாவ்” என்றது.
அடுத்த பத்து நிமிடத்தில் மாடலில் நூற்றிப்பதினாறு மாற்றங்கள் சொல்லிவிட்டு “நாளன்னிக்கு வருவேன், ரெடியா இருக்கணும்” என்று புரப்பட்டாள்.
”ரூபி” என்று ஒரு க்ரீச்.
ரூபி பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தது. பொம்மையின் பார்வை இப்பொது பூனையின் பக்கமாக இருப்பதுபோல தோன்றியது. இப்போது என்னமோ அந்தப்புன்னகயில் நக்கல் தனத்தைக்காணோம்.
ஒருவேளை ப்ரமையா?
கொஞ்சம் கருணையோடு ரூபியைப்பார்ப்பது போல தோற்றம். ரூபியும் வாத்சல்யத்தோடு பொம்மையை பார்த்துக்கொண்டிருந்தது. ரூபியின் மில்லிமீட்டர் மூச்சு கூட கேட்டது.
”ரூபிக்குட்டி” என்று மேலே பார்த்த அனுஸூயா மறுபடி ஒரு எட்டு டெசிபல் க்ரீச்!
“வாட் ஹேவ் யூ காட் ஹியர்”?
”அது ஏதோ பொம்மை மேடம்”
”சீ! நன்னாவே இல்ல. முகத்துல என்ன கேலி பாரு! என்னை பாத்து பண்ணறாமாதிரி இருக்கு. இது நெஜம்மா இல்ல பொம்மையா?”
”ஐய்யோ! வெறும் பொம்மைதான் மேடம்”
”எனக்கு பிடிக்கவேயில்லை! தூக்கி எறி! திமிறப்பாரு”
கீழே குதித்த ரூபியை எடுத்துக்கொண்டு “அடுத்த முறை நா வரும்போது அந்த பொம்மை இங்க இருக்கக்கூடாது”
ரூபி திரும்பி திரும்பி பார்த்து மெல்லிய மியாவ்.
போய்ச்சேர்ந்தாள்.
”ஷோபா! மாடலில போன தரம் சொன்னதை இந்த தரம் மாத்திடறாள். இந்த ரேஞ்சில் போனால் என்னிக்கு அவள திருப்திப்படுத்தறது?”
”வினோ! இந்த பிஸாத்து வேலைக்கு மூணு லட்சம் தாளிக்கப்போறோம், கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்”
”வினோ! அப்பறம், என்ன பண்ணறது அந்த பொம்மையை?’
”கெடக்கட்டும் ஷோபா. இப்போ டைம் ஆயிடுத்து, நாளைக்கு எடுத்து போட்டுடலாம்”
நேற்றைய கவலைகள், ஆசாபாசங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லவற்றையும் அடித்துப்போட்டுவிட்ட அடுத்த நாள் காலை.
ஷோபா வரும்பொதே ரகளையாக இருந்தது. வினோவுக்கும் மற்ற பெண்டுகளுக்கும் ஒரே வார்த்தையாடல். கூடவே வேலைக்காரி அழுக்குத்தண்ணீர் சொட்டும் நீண்ட ப்ரஷ்ஷுடன்.
“த பாரும்மா! நா இனிமே அந்த ரூம்புக்குள்ற போய் பெருக்கி துடைக்க மாட்டேன்”
“என்ன ரமேலா! இப்படி பிடிவாதம் பிடிக்கற? அந்த பொம்ம ஒன்னை என்ன பண்ணித்து?”
”நீ போய் பாரு! அது சோபாவுல குந்திக்குனு இருக்கற ஜோரை?
ஷோபாவும் வினோவும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு, கோரஸ்ஸாக “ என்னது சோபாவுலயா இருக்கு அந்த பொம்மை?
”இன்னா பார்வை பாக்குது! பொம்மைக்குக்கூட என்னப்பார்த்தா எளகாரமா?
”சோபாவுலயா?
“பின்னில்லாதிக்கி? நா என்ன பொய்யா சொல்றேன், நீயே போய்ப்பாரு. வினோம்மா! அன்னிக்கு நான் ஒன்னோட சண்ட பிடிச்சிச்சேன்னு நீதான் என்ன நக்கல் பண்றதுக்காக பாத்து பாத்து வாங்கியாந்தியா அந்த பொம்மையை?”
பட படவென மாடியேறி ரூமில் பார்த்தால் பொம்மை நேற்று போலவே சோபாவில் ராயசமாக சாய்ந்து கொண்டு நக்கலாக சிரித்துக்கொண்டு இருந்தது.
”வினோ! நேத்திக்கு அப்படியே சாத்திண்டு போய்ட்டொம் இல்ல? அப்போ அது அலமாரி மேலதானே இருந்தது. இப்ப சோபாவுல எப்படி.?”
”நானும் உங்களோட வந்துட்டேனே! யேய்! பொண்ணூங்களா! நீங்க யாராவது அந்த பொம்மையை எடுத்து வெச்சீங்களா?”
மதுரா, ப்யூலா மற்றூம் ராஜி என்னும் இளம் தேவதைகளை மற்றொரு சந்தர்ப்பமாக இருந்தால் வர்ணிக்கலாம். ஆனால் இப்போது இந்தகதையில் வேண்டாம்.
“நாங்கயாரும் மாடிக்கே வரலயே மேடம்”
பூட்டியது பூட்டியபடி கிடந்த அறையில் அந்தப்பொம்மை மறுபடி சோபாவில் ராயசமாக அமர்ந்துகொண்டு அதே நக்கல் சிரிப்பை காட்டிக்கொண்டு இருந்தது
ஷோபாவுக்கும் வினோவுக்கும் லேசாக பய வேர்வை. அட்ரினாலினின் எக்ஸ்ட்ரா சுரப்பு. ஈஸிஜி எடுத்தால் ஆஞ்ஜியொக்ராம் பண்ணச்சொல்லும் பல்ஸ் எகிறல்.
“வினோ! என்ன இது, ஒனக்கு புரியுதா?”
“இல்ல ஷோபா. ஒரு வேளை காத்தடிச்சு இங்க வந்து விழுந்திட்ருக்குமோ?”
“க்ரெக்டா சோபாவுல முன்ன வெச்சிருந்தா மாதிரியே அப்படியேவா?”
.
“இல்லை, ஷோபா…”
”வினோ பயமா இருக்கு எனக்கு!”
“ஷோபா ஆஃப்டர் ஆல் இது ஒரு பொம்மை”
”அதோட முகத்தைப்பாரேன்!”
இப்போது நக்கல் கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது.
”என்னமோ கேட்கறாமாதிரி படரது எனக்கு ஷோபா!”
பொம்மை சலனமே இல்லாமல் அதே சாய்மானத்தில். புன்னகையில் ஒரு கெஞ்சல்.
“வினோ! லெட் அஸ் நாட் பானிக். நீ நல்லா பாரு. நான் இந்த பொம்மையை எடுத்து மறுபடி ஜன்னலுக்கு மேலெ பாரப்பெட் சுவற்றில் வைக்கிறேன். வா, கதவைச்சாத்திண்டு நாம கீழ போய் வெலை செய்யலாம். இனி நாளைக்கு பாக்கலாம்”
மறு நாள் காலை ஷோபா வந்த போது அமைதி. வினோ, மதுரா, ப்யூலா மற்றூம்.ராஜி பேயறைந்தார்போல் நின்று கொண்டிருக்க வேலைக்காரி ரமலா ஒரு அதிர்ச்சியில். மன்னிக்கவும், இப்பவும் சந்தர்ப்பம் சரியில்லை அவர்களை வர்ணிப்பதற்கு.
வினோ மாடியைக்காண்பித்தாள்.
ஷோபா கொஞ்சம் நடுக்கத்துடன் மேலே போய் கதவு திறந்து பார்த்தாள்.
சோபா காலியாக இருந்தது. “அப்பாடா” என்று ஜன்னலைப்பார்த்தபோது, அங்கும் அந்த பொம்மை இல்லை. ஆனால் கீழே........
ஷோபா வழக்கமாக உட்காரும் மேஜைக்கு முன் நாற்காலியில் ஏதோ மும்முரமாக படிப்பது போன்ற பாவனையில் அந்த பொம்மை. அதன் முன் ஷோபா பேப்பரில் வரைந்த அனுசூயாவின் வீட்டு மாடலின் வரைபடம்.
படபடவென கீழெ இறங்கி வந்தாள்.
”பொண்ணுங்களா! இது விளையாடற விஷயம் இல்லை. நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, இந்த ப்ராக்டிகல் ஜோக்கெல்லாம் இப்போ வேண்டாம். ப்ளீஸ், யாரானு பண்ணியிருந்தா சொல்லிடுங்க. இதோட விட்டுட்டு வேலையைக்கவனிக்கலாம்”
“ஷோபா மேம்! ப்ளீஸ்! நாங்க யாரும் பண்ணல. எங்களுக்கெ பயமா இருக்கு. நாளைக்கு வேலைக்கு வரணுமான்னு யோசிக்கறோம்!”
“அம்மா! சம்பள பாக்கிகூட வாணாம். நா இத்தோட நின்னுக்கறேன்”
ஷோபா ஒரு கணம் மூச்சை இழுத்து விட்டாள்.
”வினோ! நீ வா என்னோட”
விறு விறுவென்று மாடியேறினாள். மேஜைக்கருகே போய் அந்தப்பொம்மையை கண்கொட்டாமல் பார்த்தாள்.
வினோ கதவருகே தயங்கி நிற்க, அடுத்த கணம் ஷோபா சட்டென்று அந்த பொம்மையை எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்து விட்டாள்.
”ஷோபா!” வினோ வீறிட்டாள்.
“ஏன் அதப்போட்டீங்க. ஏதானும் சங்கடம் வந்துட்டா!?”
”ஷோபாவும் சற்றெ நடுங்கிய குரலில் “ஒழிந்தது சனியன். விடு வினோ”
”ஷோபா எனக்கு பயமா இருக்கு!”
இருவரும் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ப்ளாட்ஃபாரத்தில் அந்த பொம்மை எசகேடான கோணத்தில் கிடந்தது. இவர்கள் வீட்டையே உற்றுப்பார்ப்பது போல ஒரு பார்வை.
“ஷோபா! வா திருப்பி எடுத்துண்டு வந்துடலாம். ஏதாவது விபரீதம் வருமோன்னு எனக்கு பயமா இருக்கு.”
”வேண்டாம் வினோ. ஒழியட்டும்”
”இல்லை ஷோபா எடுத்துண்டு வந்துட்டு யோசிக்கலாம். எதுக்கு நாம ரிஸ்க் எடுக்கணும். இத கொண்டு போய் எதானும் கோவில்ல குடுத்துடலாம்.
”வினோ! நீ நம்பறியா இந்த விஷயதையெல்லாம்?’
“ஷோபா! அதெல்லாம் தெரியல. ஆனா பயமா இருக்கு” நீ தூக்கிப்போட்டது தப்போன்னு”
“வினோ என்ன சொல்றே? எனக்கு ஏதானும் கெடுதல் வந்துடுமா?”
”ஷோபா எதுக்கு வேண்டாத வேலை நமக்கு.”
”என்ன பண்ணலாம்?”
இருவரும் மாடியிலிருந்து இறங்கி, கதவைத்திறந்து வாசலுக்குப்போய் அந்த பொம்மை கிடந்த ப்ளாட்ஃபாரத்தை அடையும்போது ஒரு சின்னப்பெண் – அழுக்குப்பாவாடை, மேல் சட்டை, அறுந்த பித்தான், பரட்டைத்தலை - அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு எதிர்ப்பக்கம் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
“யேய் சின்னப்பொண்ணு! இங்க வா. அந்த பொம்மையைக்கொடு”
அந்தப்பெண் திரும்பிப்பார்த்து விட்டு தயங்கி அங்கேயே நின்றது.
”இந்தாம்மா! அது நல்ல பொம்மை இல்லை. குடுத்திடு. உனக்கு வேற வாங்கித்தரேன்”
“முடியாது, இந்த பொம்மைதான் வேணும்”
”சொன்னா கேளும்மா. அது நல்லது இல்ல. கொண்டா இந்தா காசு”
“உன் காசு எனக்கு வேணாம். இந்த பொம்மைதான் வேணும்
”இதோட பெரிய பொம்மை நான் வாங்கித்தரேன். இதக்கொடுத்துடு!” – கிட்டத்தட்ட கத்தினாள் ஷோபா.
”முடியாது முடியாது. வேணாம்னுதானே தூக்கிப்போட்டீங்க. இப்ப மட்டும் என்ன? அந்த பொம்மை என்ன கேட்டுது? கொஞ்ஜூண்டு அன்புதானே கேட்டுது. கொடுத்தீங்களா? பொம்மை எவ்வளவு அழுதிருக்கும்? எத்தனை மனஸு கஷ்டப்பட்டிருக்கும். தூக்கிப்போட்டுட்டு இப்போ ஓடி வந்து கேக்கறீங்களே? இனிமே இந்த பொம்மை என்னோடது. நா அதுக்கு என்னோட முழு அன்பையும் கொடுப்பேன். என்னொடவே வெச்சுப்பேன்.”
அந்தப்பெண் ட்ராஃபிக்கில் புகுந்து , எதிர் தெருவில் நுழைந்து கை பம்புக்குப்பின்னால் இருந்த பழக்கடையின் ஓரத்து சந்தில் திரும்பி மறைந்தே போனாள்.
“அவ போய்ட்டா ஷோபா”
“என்ன சொன்னா கேட்டியா வினோ! பொம்மை அன்புதானே கேட்டுதுன்னா!
ஆமாம் அன்புதானே! அப்படித்தான் இருக்கும் இல்லியா ஷோபா!
ஆழ்வார்ப்பெட்டையின் ட்ராஃபிக் நிறைந்த தெருவில் அந்த இரண்டு ஆர்க்கிடெக்ட் பெண்களும் லேசான கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் ்கொண்டிருந்த கணத்தில் இந்தப்பெயரில்லாத கதை முடிகிறது.

Thursday, 8 March 2018

”புகை மூட்டம்.....!”

“That which happened inside us, no one can take away from us again, not even ourselves"!

- André Brink’s novel, An Instant in the Wind

”வா ராகவா! ஜர்னி நல்லா இருந்ததா?”

”ஓயெஸ்! பாவம் உன் டிரைவரத்தான் ஸ்டேஷன்ல ஒரு மணி நேரம் காக்க வெச்சுட்டேன்!”

”ஆமாண்டா! சொன்னான், என்ன ஆச்சு?”

”நாந்தான் கொஞ்சம் ஸ்டேஷன்ல அப்படியே உக்காந்துட்டேன்!”

“ஏன் என்ன ஆச்சு! உடம்பு கிடம்பு சரியாயில்லியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல! எனக்குதான் பழைய நினைவு! நோஸ்டால்ஜிக்!!”

”அதென்ன எனக்குத்தெரியாத உன்னோட கடந்த காலம்! சொல்லுப்பா!சொல்லுப்பா!”

”சரி, இந்தா காஃபி சாப்பிடு!”

”மதுரைல டிகிரி முடிச்சவுடனே எனக்கு திண்டுக்கல்லு காலேஜுலதான் முதல் வேல. கெமிஸ்டிரி லாபுல அஸிஸ்டண்ட். அங்க ஹாஸ்டல்ல தங்கினேன். வாராவாரம் சனிக்கிழமை காலையில திண்டுக்கல்லுக்கு வரும் பாசஞ்சர் ஒண்ணு அஞ்சரைக்கெல்லம் புறப்படும். அதுல ஏறிட்டேன்னா ரெண்டு மணி நேரத்துல மதுரைக்குப்போய்டும். எவ்வளவோ டிரெயின் இருந்தாலும் எனக்கென்னவோ இந்த பாசஞ்சர்தான் மனசுக்கு பிடிச்ச வண்டி.”

”ஏண்டா அதுல அப்படி என்ன?”

”என்னமோ தெரியலடா. அந்த விடியற்காலத்துல சில்லுனு காத்து, ஒவ்வொரு ஊரும் முழிச்சுக்கற நேரம். சூரியன் இன்னும் எழும்பியிருக்காது. அவசரமே இல்லாத நிலமையில ஊர்கள் ஒரு வித மெத்தனமா இருக்கும் அழகே தனி. ஜன்னல் சீட்ல உக்காந்துண்டு இதையெல்லாம் பாத்துண்டே ரசிச்சிண்டு போவேன். பாசஞ்சர் வேறயா நின்னு நிதானமா ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரெண்டு நிமிஷம் நிறுத்தி ஆர அமரப்போகும். எனக்கென்னமோ தூக்கமே வராம படு சுறுசுறுப்பா இருக்கும் நேரம் அது!”

”சரி அதுக்கும் கோடைரோடு ஸ்டெஷனுக்கும் என்ன சம்மந்தம்?”

”சொல்றேன். காலேஜுல சேர்ந்த ரெண்டாம் மாசம்னு நினைவு. இந்த மாதிரி வேடிக்கை பார்த்துண்டு போயிண்டிருந்தேன். கோடை ரோடு ஸ்டேஷன் வந்தா நெறய கூட்டம் இறங்கும். ஆனா எல்லாரும் கோடைக்கானலுக்குப்பொற அவசரத்துல இறங்கி ஓடுவாங்க. போறாததுக்கு டாக்ஸிக்காரங்க வேற கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்ட்டா எட்டிப்பார்த்து கோடை கோடைன்னு கூவி சவாரி கேப்பானுங்க. சில நிமிஷங்கள்ளயே காலியாகிடும். ஆனாலும் டிரெயின் கிளம்பாது. எதிர்க்க வரும் எக்ஸ்பிரஸ்சுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து இதக்கோடை ரோடுலயே பத்துப்பதினஞ்சு நிமிஷம் போட்டுடுவாங்க. நானும் திடீர்னு அனாதையான ஸ்டேஷன் பிளாட்பாரத்தை ரசிச்சிண்டு இருப்பேன்!”

“காலி பிளாட்ஃபாரத்துல என்னடா ரசிப்பு?”

”உனக்குத்தெரியாதுடா! காலி பிளாட்ஃபாரம் ஒரு தனி கவிதை! கொஞ்சம் முன்னாடி வரைக்கும் சுறுசுறுப்பா இருந்துட்டு திடீர்னு ஒரு கணத்துல காலியாகிடும். அங்க நடமாடின மனுஷங்களுடைய சுகதுக்கமெல்லாம் அப்படியே காத்துல தொங்கும். நாம அப்படியே அதத்தொட்டு உணர முடியும்! சிரிப்பு, அழுகை, பிரிவு, சண்டை, துக்கம் எல்லாம் அங்கயே காத்துல ஒரு சஸ்பென்ஷன்ல இருக்கறா மாதிரி படும் எனக்கு!”

”சரி சரி நீதான் எழுத்தாளனாச்சே! சஸ்பென்ஸ சொல்லுடா எனக்கு தாங்கல!”

”அன்னிக்கும் அதுமாதிரி காலியான ஸ்டேஷன் பிளஃபாரத்தைப்பாத்து ரசிச்சிண்டு இருந்தேன். அப்பதான் அவளப்பாத்தேன்!”

“அதச்சொல்லு! பெண் பிள்ளை இல்லாம என்ன பழைய நினைவு வேண்டியிருக்கு!”

“இர்றா கேளு முழுசா! அவ கூடையில பூ வெச்சு வித்துண்டு இருந்தா. இந்த நேரத்துல பூவா? நா பாத்துண்டே இருந்தேன். நல்ல களையான முகம். நெத்தியில பெரிய பொட்டு. கொண்டையாமுடிஞ்ச முடி. கணுக்காலுக்கு மேல தூக்கிக்கட்டின புடவை. அந்த விடிகாலையிலயும் குளிச்சு லட்சணமா இருந்தா. ஒவ்வொரு ஜன்னலா வந்து சன்னமான குரல்ல பூ பூன்னுட்டு நகருவா! அப்ப யாரு அரைத்துக்கத்துலேர்ந்து எழுந்து பூ வாங்குவாங்கன்னு தோணும். சில நிமிஷங்கள்ல நகர்ந்துடுவா. எனக்குதான் அவ முகம் பளிச்சுனு மனசுல பதிஞ்சு போச்சு”.

”அட அவ்வளவுதானா?”

”இரு! அப்புறம் ஒவ்வொரு வாரமும் கோடை ரோடுல அவள பார்ப்பேன். ஒரே ருட்டீன்தான். சில நிமிஷங்கள். மெலிசான குரல்ல பூ. மெதுவா நடந்து அரை வெளிச்ச பிளாட்ஃபாரத்துல அமிழ்ந்து போய்டுவா”

”நீ அப்படியே ரொமாண்டிக்கா பூ வாங்கியிருப்பியே?”

”சே சே! நா பூ வாங்கினதே இல்ல, ஒரு தரம் தவிர!”

”அதச்சொல்லு! அதுலதான் மாட்டர் இருக்கு!”

”சம்மர் லீவு வந்த வாரம் அடுத்த ஒரு மாசம் லீவு. ரொம்ப ஆவலா கோடை ரோடுல அவளுக்காக காத்துண்டு இருந்தேன்.”

”வரலியா?”

”வந்தா! அன்னிக்கி என்னமோ என் ஜன்னல் கிட்ட கொஞ்ச நாழி நின்னா. எனக்குமே ஏதோ தோணித்து. லேசா சிரிச்சென். அவளும் சிரிச்சா. பூ வாங்கிக்கிங்களேன்னு சொன்னா. மெல்லிசான பூனைக்குரல். நானும் சட்டுனு பத்து ரூபாய் கொடுத்து எல்லா பூவையும் வாங்கிட்டேன். எனக்கு பேசணும்னு ஆசை. ஆனா தைரியம் வரல. அவளும் காசு வாங்கினப்புறமும் அப்படியே கொஞ்ச நேரம் நின்னுட்டுத்தான் போனாள். ஏதாவது சொல்ல விரும்பினாளோன்னு கூட எனக்குப்பட்டுது!”

”அதுக்கு அடுத்த வாரம் என்னாச்சு? பாத்தியா? பேசினயா?”

”இல்லியே, ஒரு மாசம் காலேஜு லீவு. ஜூலை மாசம் திறந்தப்புறம் முதல் சனிக்கிழமை கோடை ரோடு ஸ்டேஷன் வரும்போது எனக்கு அவ்வளவு படபடப்பு. ஆனா அவ வரலைடா!”

”ஓ!”

”அன்னிக்கு மட்டும் இல்லை. அதுக்கு அப்புறம் பல மாசம் கோடை ரோடுல அவளைப்பார்க்கவே இல்லை.”

”அதோட விட்டுட்டியா?”

”ரெண்டு மாசம் பொறுத்துப்பார்த்துட்டு ஒரு சனிக்கிழமை கோடை ரோடுல இறங்கிட்டேன். பிளாட்ஃபாரத்துல நடையா நடந்து பார்த்தேன். அவ இல்லை. அங்க இருந்த டீ கடை ஆள் கிட்ட விஜாரிச்சும் பார்த்தேன். அவனுக்கு அந்த மாதிரி ஒரு பொண்ணைப்பத்தின நினைவே இல்லை!”

”அப்புறம்?”

”அப்புறமென்ன? அடுத்த வருஷம் எனக்கு சென்னையில லெக்சரர் வேலை கிடைச்சுது. நாம் அப்பதானே சென்னையில மீட் பண்ணினோம்! அப்புறம்தான் உனக்குத்தெரியுமே!”

”என்னடா இது? அந்தப்பொண்ண மறந்துட்டியா? என்ன ஆயிருக்கும் அவளுக்குன்னு கண்டு பிடிக்கத்தோணவே இல்லியா ஒனக்கு?”

”இல்லைடா! அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம். இல்ல ஏதானும் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இல்ல அவளோட வயசான தாய் மாமனுக்கு ரெண்டாம் தாரமா போயிருக்கலாம். எத்தனயோ சாத்தியங்கள் இருக்கே!”

“எல்லாம் உன்னோட ஊகங்கள் தானே! நெஜம் எதுன்னு தெரிஞ்சுக்காம இருந்துட்டியே?”

”எதுக்கு தெரிஞ்சுக்கணும்? சொல்லு, எதுக்கு? இப்ப அது தெரியாமயே எனக்குள்ள ஒரு ரகசிய சந்தோஷமும் பிரத்தியோக வலியும் இருக்கே அது போயிருக்குமே! சில அனுபவங்கள்லாம் முடியவே கூடாதுடா.அப்படியே உறைஞ்சுடணும். மனசுக்குள்ள அந்த அனுபவம் ஒரு பாதியில நின்ன தொடர்கதை மாதிரி சின்ன ஏமாற்றத்தோடவே இருக்கணும். வாழ்க்கையில எல்லா கேள்விகளுக்கும் விடை கெடச்சுடக்கூடாதுடா! சுவாரஸ்யம் குறைஞ்சு போய்டும்!”

“எல்லாம் சரி ராகவா! ஒரே கேள்விக்கு பதில் சொல்லு?”

”கேளு!”

“நீ ஏன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை?”

முடிந்தது