Thursday, 14 June 2018

இன்றைய (ஜூன் 15, 2018) கதையரங்கத்தில்

பெயரில்லாத மெமோரியல் ஹால்

சீலிங் என்னவோ கொஞ்சம் குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக்காலத்திய பர்மா தேக்கு ரீப்பர் அடித்த உத்தரம். எட்டடிக்கு ஒரு நீள சீலிங் ஃபேன் இருக்கும். ஒன்றிரண்டு அழுக்காகவும், சில புதுஸு பெயிண்ட் அடித்தும், சில நீளமாகவும் சில உத்தரத்துக்கு வெகு அருகிலும், ஒருவித இமேஜ் அட்மிக்சர்த்தனமாக இருக்கும். சுவற்றில் வரிசையாக அடுத்தடுத்து ஜன்னல்கள் வைத்திருக்கும். ”சிமெண்ட்டை மிச்சப்படுத்த ஜன்னலா வெச்சுட்டான்யா” என்று சிலர் பேசிக்கேட்டிருக்கிறேன். நான் சொல்லுவது மெமோரியல் ஹால் என்னும் சின்ன ஆடிட்டோரியம்.

எங்கே?

என் ஸ்கூலில்தான்!

மறுபடி ஸ்கூலா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஆக்டன் நாஷ் எழுதிய நொஸ்டால்ஜியா பற்றிய கவிதையை சிபாரிசு செய்கிறேன். இப்ப மறுபடி மெமோரிய ஹால்.

இந்த மெமோரியல் ஹாலில்தான் தமிழ் மன்றக்கூட்டநடக்கும். வருஷத்திற்கு ஒரு முறைதான் அதுவும்! மற்ற நேரங்களில் காலியாகவே இருக்கும். நவம்பர் மாதங்களில் அடிக்கும் காற்றில் சில சமயம் ஒன்றிரண்டு கிளாஸ் ரூம்களின் கூரை டாப் எகிறிப்போய் வானம் பார்க்கும் நாட்களில் அந்த வகுப்புகள் மெமோரிய ஹாலுக்கு குடி பெயரும்.

“போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் நம்ம கிளாசும் ஒன்பதாவதும் கூரை அடி வாங்கினா ஜாலிடா!”

தேவராஜின் எதிர்பார்ப்புக்கு காரணம் ஒன்பதாவதில்தான் சாந்தா படித்தாள். போன வருஷ நவம்பர் மழையில் எங்கள் இரண்டு கிளாசும் மெமொரியல் ஹாலின் ஒவ்வொரு மூலையில் நடக்க, தேவராஜன் நாள் முழுசும் சாந்தாவையே பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்துகொண்டிருந்தான்.

“என்னமா எழுதறாபார்!”

“ என்னமா உக்காந்திருக்கா பார்!

சாந்தாவின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு “என்னமா” சேர்த்து எங்களை கடுப்பேற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு அடுத்த சீட் பாளையம் “டேய்! இந்த தரம் என் பக்கத்துல உட்கார்ந்தே, சொங்கிடுவேன், ஜாக்கிரதை!” என்று பயமுறுத்திவிட்டான். அவனுக்கு அத்தனை கடுப்பு.

இந்த சாந்தா பற்றி பராபரியாகக்காதில் விழும். லட்சணமான பென். அதனுடன் கூடவே வரும் சந்திரிகா பின்னலை முன்னாலும் பின்னாலும் ஸடைல அடித்தபடி வர, இது ரெட்டைப்பின்னலை ஒழுங்காக மடித்துக்காட்டிக்கொண்டு பதவிசாக வரும். முகத்தில் பயம் கலந்திருக்கும். கண்களில் பரபரப்பு தெரியும். பேச்சில் அதிகம் சத்தமே இருக்காது. பிருந்தா டீச்சர் கூட ஒரு தரம் “எனக்கு காது மந்தம்! சத்தமா சொல்லு” என்று டபாய்த்திருக்கிறார்.

அவள் அப்பா வசதியானவர் ஏதோ பெரிய மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைசெம்புதாஸ் தெருவில் வைத்திருக்கிறார் என்பார்கள். சில சமயம், அதுவும் மழை தூறினால், சந்தாவை காரில் கொண்டு விட்டுப்போவார்கள். ஒரு மாதிரியான அழுக்குப்பச்சை கலரில் இருக்கும் ஸ்டாண்டர்ட் பென்னெண்ட் கார்.

மெமோரியல் ஹால் தரை ஒன்றும் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. அங்கங்கே பெயர்ந்து மேடு பள்ளமாக இருக்கும். டும்மி சீனிவாசன் இலக்கண கிளாசில் தன் ஹெச் பி பென்சிலால் கோண்டு கிட்டத்தட்ட அரையடிக்கு தோண்டிவிட்டான். எதேச்சையாகப்பார்த்துவிட்ட டும்மி வாத்தியார் கோண்டுவை சரியாக விளாசிவிட்டார்.

“ எனக்கு ஏண்டா இங்க சமாதி தோண்டற! நா கிருஷ்ணாம்பேட்டைக்கெ போய்க்கிறேன்! படவா! எங்க, தலையாலே தான் தருதலால் செய்யுளைச்சொல்லு பார்ப்போம்!”

சுவர்களிலும் காரை வெளிவந்து புள்ளிபுள்ளியாக அசிங்கமாகத்தான் இருக்கும். போறாத்துக்கு பையன்கள் பென்சிலாலும் பேனாவாலும் தத்தம் இலக்கிய படைப்புக்களை அதில் பொறித்து வைத்திருப்பார்கள்.

நான் பத்தாவது படிக்கும்போதுதான் அது நிகழ்ந்தது.

ஒரு நாள் பிரேயரின் போது “ராணி மெய்யம்மை பள்ளியில் நாங்கள்” என்று ஸ்கூல் பாட்டுப்பாடி முடித்தவுடன் கலையத்தயரான்போது ஹெட்மாஸ்டர் எஸ் வி டி ம்க்கும் என்று தொண்டையக்கனைத்துக் கொண்டு பேசினார்.

”உங்களுக்கே தெரியும், நம்ம மெமோரியல் ஹால் இருக்கும் நிலமை. நாம எதுனா கூட்டம் நடத்தி பெரிய மனுஷர்களைக்கூப்பிடணும்னா இந்த ஹாலோட ஸ்திதி மோசமா இருக்கு. அவங்க வந்து பார்த்தா நம்ம ஸ்கூல் பேர் கெடும். அதை சரியா கட்டணும்னா கிட்டத்தட்ட மூவாயிரம் ரூவா தேவைப்படுது. நீங்கள்ளாம் வீட்ல சொல்லி கொஞ்சம் பண உதவி செய்யலாமே! வசதியான பசங்க இன்னும் நெறயச்செய்யலாம்!”

இந்தக்கால ஸ்கூல்களின் உரிமைகள் ஏதும் அறியாத அப்பாவியாய்க்கெஞ்சினார் ஹெட்மாஸ்டர். அடுத்த ஒரு வாரத்தில் டொனேஷன் குமிந்து மொத்தமாக நூத்தி ஏழு ரூபாய் கிடைத்ததாக கிருஷ்ணாயில் என்று பேர் பெற்ற டீகே சார் சொன்னார். அடுத்த மூன்று மாதங்களில் அப்படி ஒன்றும் டொனேஷன் கொட்டிவிடவில்லை.

முழுப்பரிட்சை முடிந்து லீவு விட்டுவிட, நாங்கள் பிரிந்து வீடு வந்தோம்..

இரண்டு மாசம் லீவுக்குப்பிறகு ஏதோ ஜென்ம ஜென்மமாய்ப்பிரிந்த காதலர்கள் போல ஜூன் மூன்றாம் தேதி முதல் நாள் ஸ்கூலுக்குப்போனால் பெரிய ஆச்சரியம்!

மெமோரிய ஹால் புத்தம் புதிசாகக்கட்டப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு, புது ஃபேன்கள் மாட்டப்பட்டு, தரையெல்லாம் நாங்கள் அப்பொதெல்லாம் அதிகம் பார்த்திராத மொசேக் என்னும் கற்களினால் இழைக்கப்பட்டு மிளிர்ந்தது. ஹாலைச்சுற்றி எப்போதும் அழுக்கு தண்ணீர் தேங்கிக்கிடக்கும் இடங்களில் இப்போது பிரம்புக்கட்டைகளால் வேலி மாதிரி போடப்பட்டு, அதில் செம்பருத்தி, கல் வாழை என்று கலர் கலர் ரகச்செடிகள் அசைந்தாடின.

அந்த வருடம் ஏனோ சாந்தா ஸ்கூலுக்கு வரவே இல்லை. தேவராஜ் இப்போதெல்லாம் பத்தாம் கிளாஸ் தமிழ் மீடியம் புனிதாவின் அசைவுகளுக்கெல்லாம் “என்னமா” சேர்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.

மெமோரியல் ஹாலின் முன் பக்கம், புதுசாக மாட்டப்பட்ட கதவுக்கு வெகு அருகில் வலப்பக்கத்தில் இரண்டடிக்கு ஒரு அடி அளவில் புதுசாக ஒரு செவ்வக கல்வெட்டு மாதிரி வைத்து ”சாந்தா மெமோரியல் ஹால் “ என்னும் பெயர் பளபளக்கிறது.

No comments:

Post a Comment