இன்றைய கதையரங்கத்தில் (13 ஏப்ரல் 2018)...
மறுபடியும் வசுந்தரா
நான் பாஸ்டனில் இறங்கின அன்று எதுவுமே சரியில்லை. எங்கள் காமராஜ் அவென்யூவில் எண்ணெய், மோர், உப்பு, வைக்கோல், எலும்பு, புல், சாம்பல், பஞ்சு, விறகு, வெற்று பாத்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எனக்கு எதிரில் வந்த ஆசாமியை நான் கிளம்பும்போது கவனிக்க வில்லை போலும்.
சரியான அபசகுனம்!
பங்கர் ஹில் மெமோரியல் பாலம் ஏதோ ஒரு ஓரமாக உடைந்து போய் அந்த பிரிட்ஜின் வழியில் டிராஃபிக்கை மூடி வைத்துவிட நான் ஏர்போர்ட்டிலேயே திண்டாடினேன்.
சட்டென்று சுந்தரின் நினைவு வர என் மொபைலில் அவன் நம்பரைத்தேடி, கிடைக்காமல் நடு இரவில் லதாவை எழுப்பி என் அரதப்பழைய டைரியிலிருந்து பார்த்து சொல்லச்சொல்லி ஃபோன் செய்தேன்.
“ அடே பழி! இங்க எங்கடா வந்தே?”
வடுவூர் அய்யங்கார் கதைகளீல் போல சினேகிதமாகப்பேசினான்.
“ஒரு ஹோட்டலுக்கும் போவேண்டாம்! இரு! நானே ஏர்போர்ர்டுக்கு வரேன்!”
மூணரை இஞ்ச் பெருத்து இடுப்பில் ஜீன்ஸ் நெகிழ நிஸ்ஸானில் வந்த சுந்தருக்கும் காந்தி நகர் பள்ளியில் நான் பார்த்த சுந்தருக்கும் மூன்று தலை முறை வித்தியாசம் இருந்தது.
“அட! பாண்ட்டெல்லாம் டைட்டா போட்டுக்க ஆரமிச்சுட்டியா? எனக்கு இன்னும் உன்னோட ஸ்கூல் பாண்ட்டின் தொள தொள மறக்கவே இல்லைடா!”
என்னைச்சத்தாய்த்த அவனை ஒன்றும் சொல்லாமல் மையமாக, மய்யமாக இல்லை, மையமாக சிரித்து வைத்தேன். இன்னும் மூணு நாளைக்கு அவந்தான் அன்னதாதா!
மகா பெரிய அந்த வீட்டில் என்னை விட்டுவிட்டுக்கிளம்பினான்.
“ஒய்ஃப் குழந்தைங்க இப்ப இந்தியாவுக்கு போயிருக்காங்க! நீ ரிலாக்ஸா இருடா! ஃபிரிஜ்ஜுல எல்லாம் இருக்கு. சுடப்பண்ணி சாப்பிடு. நா ஒரு மீட்டிங் போய்ட்டு ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம்னு பம்மாத்து பண்ணிட்டு வந்துர்ரேன்!”
அவன் சொன்ன மாதிரி குளித்து ஏதோ சாப்பிட்டேன். ஜெட் லாகில் ஒன்றும் பிடிக்க வில்லை. தூக்கம் வரா மாதிரி இருக்கவே அறையில் போய்ப்படுத்த நான் சுவற்றில் பார்த்த ஃபோட்டொவில்………
இல்லை இன்னும் இல்லை! இவ்வளவு அவசரம் வேண்டாம். உங்களுக்கு போன மாசம் நான் சென்னையில் வசுந்தராவை சந்தித்த கதை சொல்ல வேண்டும்.
கம்பெனியின் போர்ட் மீடிங்குக்காக கிரௌன் பிளாசா வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். கர்னாடக சங்கீதம் வழியும் பிரம்மாண்ட லௌஞ்சில் ரிசப்ஷனை நெருங்கும்போது அந்த கறுப்புப்பாண்ட்டும் வெள்ளை ஷர்ட்டும் மேலே போட்டிருந்த கோட்டும் என்னதான் மறைத்தாலும் வசுந்தராவை அவளின் மின்னும் கண்கள் அடையாளம் காட்டிவிட்டன.
யோசித்துப்பாருங்கள்!
எப்போவாவது ஸ்கூலில் உங்களுடன் படித்த பெண்ணை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப்பின்னர் பார்க்கும்போது சுலபமாக அடையாளம் கண்டு பிடித்திருக்கிறீர்களா?
அழுத்தி வாரின ரெட்டைப்பின்னல், மஜெந்தா கலர் பாவாடை, வெள்ளை தாவணியில் பார்த்த வசுந்தராவை இந்த கார்ப்பரேட் உடையில் கண்டு பிடிப்பது எனக்கு ஈசியாக இல்லை! ஆனாலும் அவளின் மேல் எனக்கு எதேச்சையாக ஏற்பட்ட பிரமிப்பின் மிச்சத்தால் சட்டென்று பொறி தெறித்தார்போல் பிடித்துவிட்டேன்.
"ஹலோ, நீ வசுந்தராதானே?"
”எஸ்! ஹாய்! நீ ரகு தானே ...?"
”ஆமாம்! எவ்வளவு வருஷங்கள் !"
”கிட்டத்தட்ட முப்பது, ரகு! கொஞ்சம் இரு, செக் இன் முடிச்சுட்டு வரேன், நிறைய பேசணும், ஓகே?"
"நிச்சயமா, எனக்கும் பேசணும்!"
காபி ஷாப்பில் "one Frappe" என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
”எங்கே இருக்கே இப்போ?"
”துபாய்ல!"
என் கண்ணில் கேள்விகுறி.
"ஸ்டாண்டர்ட் பாங்கில் HR வைஸ் பிரசிடென்ட். இப்ப கூட மானேஜர் இன்டர்வயுவுக்குத்தான் வந்தேன்!"
எனக்கு நம்பத்தான் முடியவில்லை. வசுந்தராவா..?
அடக்கமுடியாமல் கேட்டுவிட்டேன்.
"ஹஸ்பேண்ட் , குடும்பம்..?"
"ச்ச் நோ,"
மறுபடியும் கேளிவிக்குறி என் கண்களில்!
மெதுவாக வார்த்தை வார்த்தை ஆக சொன்னாள்,
"சுந்தரை மறக்க முடியலை"!
தூக்கி வாரிப்போட்டது எனக்கு. சுந்தரையா ? என்ன வேடிக்கை இது?
"வசுந்தரா, சுந்தர் இப்போ பாஸ்டன்ல இருக்கான், ஒரு பெண், ஒரு பிள்ளை, தெரியுமா?"
"தெரியும்"
"தொடர்பில் இருக்கியா?"
"இல்லை, ஸ்கூல் டேஸுக்கப்றம் பாக்கவோ பேசவோ இல்லை!"
"அப்பறம்..?”
"I keep my tabs on him" என்றாள் கண்கொட்டாமல்.
இருந்தும் அந்தக்கண்களில் ஒரு சின்ன சோகம் அல்லது கோபம் தெரிந்ததா?
அப்போது நாங்கள் எஸ் எஸ் எல் சி இல் இருந்தோம். எழுபதுகளில் சாதாரண கவர்ன்மென்ட் ஸ்கூல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? எங்களுடையது இங்க்லீஷ் மீடியம். ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று தமிழ் மீடியம்களுக்கு ஒரு இங்க்லீஷ் மீடியம் இருக்கும். எங்கள் கிளாசில் மொத்தமே 30 பேர்தான், 18 பையன்கள் ,12 பெண்கள். அம்பிகா டெப்போவுக்கு நேர் எதிர்புறம் உள்ளே செல்லும் காந்தி நகரில் எங்கள் ஸ்கூல் இருந்தது. இங்க்லீஷ் மீடியம் என்றாலும் எல்லாவற்றையும் தமிழிலேயே சொல்லித்தருவார்கள்.
விவேகானந்தன் சார் மட்டும் விதிவிலக்கு.
"நீங்க எல்லாரும் கோனார் நோட்ஸ்தானே படிக்கப்போறீங்க, அப்புறம் எதுக்கு நா வேற டைமை வேஸ்ட் பண்ணனும் " என்று சொல்லிவிட்டு அடுத்த அரைமணி நேரம் உலக விஷயங்களிப்பற்றி சொல்லித்தருவார். அப்போதே நாங்கள் NATO, Hitler, அமெரிக்காவில் எலக்ஷன் என்று பேசுவதற்கான உரம் போட்டவர். சில சமயங்களில் சினிமா கதையும் பேசுவார். To Sir with Love படம் பற்றி கண்கள் பனிக்க எங்களுக்கு சொல்லியிருக்கிறார். தானே காசு போட்டு எங்களை Sound of Music அழைத்துக்கொண்டு போய் இருக்கிறார் . ரொம்ப சீக்கிரமாகவே இவர் எங்களின் ஆதர்ச டீச்சராக மாறிவிட்டார். நன்றாக படிக்காதவர்களிடம் அதிக நேரம் செலவிடுவார்.
“நீங்கள்ளாம் தொண்ணூறு வாங்கறது பெரிய விஷயம் இல்லைப்பா. அவன் அறுபது வாங்கறானே அதுதான் பெரிசு!”
அப்பா இல்லாத, அம்மா வீட்டு வேலை செய்து படிக்க வைக்கும் கணபதியைப்பற்றிச் சொல்லுவார்.
அந்த விவேகானந்தன் சாரைத்தான் சக்திதாசன் என்ற மாணவன் அடித்துவிட்டான்.
சக்திதாசன் எங்கள் வளர்ப்பிலிருந்து வேறுபட்டவன் என்று அவன் எஸ் எஸ் எல் சியில் எங்கள் கிளாசில் சேர்ந்தபோதே புரிந்தது. " டீச்சிங் சரியில்லை" என்று மாறி வந்துவிட்டதாக சொன்னதை யாரும் நம்பவில்லை.
அவனுடைய அப்பா அன்றைய ஆளும் கட்சியின் எம் எல் எ. ஸ்கூலுக்கு காரில்தான் வருவான். நல்ல நல்ல டிரெஸ் போட்டுகொள்வான். நாங்கள் எல்லாம் காக்கி ஒயிட் என்று மந்தமாக வரும்போது இவன் மட்டும் கலர் கலராக போட்டுக்கொண்டு வருவான். யாரும் கேட்க மாட்டார்கள். வந்த ஒரே மாதத்தில் தனக்கென ஒரு சின்ன செட்டை சேர்த்துக்கொண்டான். அவர்கள் அடிக்கடி கூடிப்பெசிக்கொள்வார்கள்.
சக்தி எங்களின் ஜூனியர் ஹேமாவை சைட் அடிக்கிறான் என்று செய்திகள் வரும். அவ்வப்போது அவனுடைய அல்லக்கைகள் பரப்புரை செய்வார்கள்.
“டேய், இன்னிக்கு சக்தி ஹேமாவோட வாணி விலாஸில சாப்ட்டான்!"
"நேத்து ஸ்கூல் விட்டு போவும்போது சக்தியோட கையப்பிடிச்சு குலுக்கிட்டுப்போனா ஹேமா, தெரியுமா!"
இதெல்லாம் எங்களுடைய ரேஞ்சுக்கு மிக அதிகம் என்பதால் வாயடைத்து கேட்டுக்கொண்டிருப்போம்.
ஒரு நாள் இன்டர்வெல் முடிந்து கிளாஸ் ஆரம்பிக்கு முன்னர், ஒரு டேபிள்மேல் ஏறி நின்று ஸ்பஷ்டமாக,
"இதப்பாருங்க, நான் டென்த் படிக்கற ஹேமாவை லவ் பண்றேன். எவனாவது அவ கிட்ட வெச்சுக்கிடீங்கன்னா, தொலைஞ்சீங்க" என்று வீர வசனம் பேசிவிட்டு கட்டபொம்மன் சிவாஜி மாதிரி நடந்து போனான். எங்களைவிட கிளாஸ் பெண்கள் மிரண்டு போனார்கள். ஆனால் வசுந்தரா மட்டும் உரக்க, "ரொம்ப முக்கியம், எங்களுக்கு" என்று ஏகத்தாளமாக சொன்னாள்.
வசுந்தரா காந்தி நகர் ரெண்டாவது மெயின் ரோடிலிருந்து வருவாள். சுந்தரின் அடுத்த வீடு என்று எல்லாருக்கும் தெரியும். பல வருடங்களாகவே இரண்டு குடும்பங்களுக்கும் நட்பு உண்டு.
இதனாலேயே நாங்கள் சுந்தரை ஜாடை மாடையாக கிண்டல் அடிப்போம். வசுந்தராவுக்கு மார்க் குறைந்தால், " என்ன இன்னிக்கு சுந்தர் சோகமாக இருக்கானே" என்ற ரேஞ்சில் மட்டுமே இருக்கும் கிண்டல்கள் டென்த், எஸ் எஸ் எல் சி வந்தவுடன் அன்றைய எங்கள் பாஷையில் சைட்டு டாவு என்றெல்லாம் முன்னேறியது.
"இன்னிக்கு காலங்காத்தால வசு வீட்டுக்கு வந்திருந்தாடா. அந்த மஞ்சள் தாவணில என்னமா இருந்தா தெரியுமா ?
"நேத்து பொங்கல் ஆனவுடன் வீட்டுக்கு வந்துட்டு போகும்போது ரகசியமா என் கையில ஒரு ஸ்வீட்டை அழுத்திட்டு போனாடா!"
“வீட்டுல எல்லாரும் ஊருக்கு போனாங்க இல்ல, அப்போ வசுவே, " நானே சமைச்சேன் " ன்னு சாப்பாடு கொடுத்தா!"
இந்த ரேஞ்சில் போனாலும் எங்களுக்கும் நன்றாகவே தெரிந்தது வசுவுக்கு சுந்தர் மேல் இருக்கும் தனி அன்பு.
சுந்தர் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் என்பதாலேயே விவேகானந்த சார் அவனை இந்த வருஷம் கிளாஸ் லீடராக போட்டிருந்தார். அடுத்த வருஷம் காலேஜுக்கு போகணும், நீ லீடரா இருந்தா உன்னோட பர்சனாலிடிக்கு ரொம்ப நல்லது என்று அவனை லீடராக்கி இருந்தார்.
நவம்பர் மாதம் என்று நினைக்கிறேன். இடையில் தீபாவளிக்காக மூன்று நாள் லீவு வந்தது. அது முடிந்த முதல் நாள் கொஞ்சம் ரிலாக்சாக புது துணிகளுடனும் பட்டாசு சாகசங்களையும் பேசித்தீர்க்க ஆவலோடு ஸ்கூலுக்கு வந்தபோதுதான் சக்திதாசன் விவேகானந்தன் சாரை அடித்த விஷயம் தெரிந்தது.
அந்த நாளில் இந்த சம்பவம் ஒரு அசாதாரண நிகழ்வு.
சக்தி ஹேமாவை வழியில் மடக்கி என்னோடு சினிமாவுக்கு வா என்று மிரட்டி இருக்கிறான். அது பயந்துபோய் வீட்டில் சொல்லிவிட, ரகளை ஆகிவிட்டது. டீச்சர்கள் மீடிங்கில் அவனை டிஸ்மிஸ் செய்து விடவேண்டும் என்று விவேகானந்தன் சார்தான் வலிமையாக வற்புறுத்தினார் என்று செய்தி லீக் ஆகவே, சக்தி அவரை ரெண்டாவது மெயின் ரோடில் மடக்கி கையை ஓங்கிவிட்டான்.
எங்களுக்கு உண்டானது கோவமா வருத்தமா, இயலாமையா என்று தெரியாத கலவையாக இருந்தது. சக்திதாசனை டிஸ்மிஸ் பண்ணிவிடுவார்கள், பண்ண வேண்டும் என்ற விருப்பமே பலபேருக்கு இருந்தது. ஆனாலும் அவன் எப்போதும்போல கிளாசுக்கு வந்தது எங்களை அதிர்ச்சியாக்கியது. அவனுடைய அல்லக்கைகளே அவனை நெருங்கவில்லை.
முதல் பீரியட் தமிழ், விவேகானந்தனுடைய கிளாஸ். அவர் வருவாரா என்பது தெரியவில்லை. ஹெட்மாஸ்டர் ரூமில் இருப்பதாக பேச்சு ஓடியது.
யாரும் எதிர்பார்க்காமல் வசுந்தராதான் பேசினாள்.
"சுந்தர், சக்திதாசனை டிஸ்மிஸ் பண்ணணும்ன்னு நாம எல்லோரும் ஹெட்மாஸ்ட்ட சொல்லலாம். நீதானே லீடர், எங்களை அழைசிண்டு போ!”
நாங்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். சுந்தர் ரொம்பவே தடுமாறிப்போனான்.
"வசுந்தரா, ப்ளீஸ் பேசாமல் இரு. இதுலல்லாம் நாம தலையிட வாண்டாம்!"
"இன்னும் என்ன வேணும், நம்ம விவேகானந்தன் சாரை அடிக்கறதுன்னா எப்பேர்ப்பட்ட கேவலம். அவனைச்சும்மா விட்டுறலாமா? அப்புறம் நமக்கென்னடா மதிப்பு. ஒரு வாத்தியாரை ஸ்டூடன்ட் அடிக்கறான்! என்ன அராஜகம் இது! Let us all go to the Head master , வா சுந்தர்! வாங்க எல்லாரும்! "
அதற்கப்புறம் நடந்த பேச்சுக்களில் வசுந்தராவின் நேர்முகமும், தார்மீகக்கொபமும், சுந்தரின் பயமும், இயலாமையும், எங்களின் ஆட்டு மந்தைக் குணமும்தான் வெளிப்பட்டன.
“வசுந்தரா! இதெல்லாம் வேண்டாம். நாளைக்கு நமக்கு ப்ராப்ளம் வரும்!”
”அவ்ளோ செல்ஃபிஷா நீ ? சுந்தர், நீ எங்களை லீட் பண்றயா , இல்லை நானே பண்ணட்டுமா”?
"கமான் எவ்வேரிபடி, சக்திதாசனுக்கு இந்த ஸ்கூல்ல இடம் இருக்ககூடாது!"
வசுந்தரா இயல்பான தலைமையுடனும் கம்பீரத்துடனும் எங்களை லீட் செய்து, ஹெட்மாஸ்டரிடம் போராடி, மிரட்டல்களுக்கு பணியாமல், உறுதியுடன் அவனை டிஸ்மிஸ் செய்ய வைத்தது எங்கள் ஸ்கூலில் ஒரு சரித்திர சம்பவம்.
இதில் முழுமையாக அடி பட்டது சுந்தர்தான்.
அதோடு சுந்தர் வசுந்தராவுடன் பேசுவதை நிறுத்திவிட்டதும், வசு எவ்வளவோ முயற்சி செய்தும் பிடிவாதமாகப் பிரிந்து விட்டான். ரிசல்ட் வந்தவுடன் அவனுக்கு திருச்சியில் சீட் கிடைக்க கிளம்பிப்போனான்.
நாங்களும் பிரிந்தோம். சிலர் சிறந்தோம் சிலரை மறந்தோம்.
பல வருஷங்களுக்கு அப்புறம், எதேச்சையாக ஏர்போர்ட்டில் பார்த்து பேசி, ஈமெயில் அட்ரெஸ் வாங்கி சுந்தருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன். வசுந்தராவுடன் தொடர்பே விட்டுப்போய், இதோ இன்றுதான் கிரௌன் பிளாசாவில் மறுபடியும் பார்கிறேன்.
"எப்படியெல்லாம் லைஃப் போறது இல்லையா ரகு ?"
“ஆமா வசு. நீ ஏன் இன்னும் தனியா..?"
”முடியலை. Sundar was too internal in my system. அவன் மேல எனக்கு கோவமும் இல்லை. நா பண்ணினது அவனோட ஈகோவுக்கு ரொம்ப பலமான அடின்னு இப்போ புரியறது. ஆனா நா வேற எப்படியும் நடந்துண்டு இருக்க முடியாது. அதனால அவனோட பிரிவை அக்செப்ட் பண்ண முடிஞ்ச எனக்கு மறந்துட்டு வேற ஒரு துணையை தேட முடியலை. No regrets ன்னு சொல்ல மாட்டேன், ஆனா இந்த தனிமை பழகிப்போச்சு!".
எனக்கென்னமோ அப்போது சுந்தரின் மேல் கோவமாக வந்தது. "லெட் அ ஸ் கீப் இன் டச்" என்று பிரிந்தோம்.
இதோ பாஸ்டனில் சுந்தரின் வீட்டில் சுவற்றில் அந்த ஃபோட்டொ!
பொன்னிற வாசகங்கள் பொறித்த அந்த செர்ரி அண்ட் வால்நட் ஃப்ரேமில் சுந்தரின் பெண்ணின் பிறந்த நாள் படம்.
”ஹாப்பி பர்த்டே, டியர் வசுந்தரா!”
அப்போது மட்டுமில்லை, அன்று இரவும் என்னால் தூங்க முடியவில்லை.
No comments:
Post a Comment