தீப்தா
இந்த நிகழ்ச்சிகளை, கவனிக்கவும் கதையை இல்லை, நிகழ்ச்சிகளை. எனக்கு சொன்னவர் என் பெரியப்பா.
டெல்லியில் எப்போதுமே ஆஃபீசுக்கு கோட் சூட் போட்டுக்கொண்டு போகும் ஒரு உத்யோகஸ்தர். கேட்டால் ஷிப்பிங் டெவலப்மெண்ட் ஃபண்ட் கமிட்டீ, ரைல்வே போர்ட் மெம்பர் என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் எனக்கு தெரியும், அவர் இருப்பது நிழலான ஆசாமிகளை நோட்டம் பார்க்கும் ஒரு படு ரகஸ்ய டிபார்ட்மெண்ட். RAW வை விட சென்சிடிவ் என்று பராபரியாக காதில் விழுந்திருக்கிறது. எப்போவாவது திடீரென்று சென்னை வருவார். முன்பே செய்தியெல்லாம் வராது.
“அல்லி! இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு ஃப்ளைட். அஞ்சரைக்கு வர்ரேன். வெல்லாப்பாயசம் பண்ணிடேன்” என்பார். வந்தவுடனே, ”இந்த தரம் என்ன ராங்க் வாங்கினே” என்று கேட்பார். பதிலுக்கு காத்திராமல் “என்ன வேணாப்பண்ணு, இந்த சர்க்கார் உத்யோகம் மட்டும் வேண்டாம்” என்று பாயசத்தை கோட்டின் மேல் சிந்திக்கொண்டே குடிப்பார்.
”எப்போதும் போல பாயசம் டிவைன், தாங்க்ஸ் அல்லி” என்று அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுப்போய் விடுவார்.
ஏழு மணிக்கு அப்பா வந்து, “காந்தன் என்ன சொன்னான்” என்பார்.
”எப்போதும்போலத்தான்”
“பாவம், என்ன உத்யோகமோ”!
ஒரே ஒரு முறை சென்னையின் நவம்பர் புயல் காரணமாக அவர் கிளம்புமுன் ஃப்ளைட் கான்சல் என்று செய்தி வர அன்று இரவு பத்து மணிக்கு மேல் தனியாக தாம்பரத்திலிருந்து ஏர்ஃபோர்ஸ் ப்ளேன் ஒன்றில் புறப்பட்டுப்போன கதையை நான் என் ஸ்னேஹிதர்களுக்கு நூற்றிப்பத்து தடவை சொல்லி மாய்ந்திருப்பேன். அந்த முறை அவர் சொன்ன நிகழ்ச்சிதான் இப்போது சொல்ல விழைகிறேன்.
இனி கதை, சே, நிகழ்ச்சி.
டிசம்பர் 3, வெள்ளிக்கிழமை, 1971 பங்களாதேஷின் தாக்குதலுக்கு அடாவடியாக பாகிஸ்தான் இந்தியாவை தாக்க, யுத்தம் அறிவிக்கப்பட்ட தினத்தின் மாலை.
நார்த் ப்ளாக் எனப்படும் தலை நகரத்தின் முக்கிய அலுவலகங்களில் ஒரே பரபரப்பு.
ஜிப்பா வெஷ்டி அணீந்த பெரிய்ய்ய அரசியல்வாதிகளும் மந்திரிகளும் அபூர்வமாக ஓடியாடி வேலை செய்த மாலை.
வித விதமான அம்புக்குறியிட்ட போர்டு வைத்த அம்பாசடர் கார்கள் ராணுவப்பெரியார்களை அங்கும் இங்கும் அலைக்கழித்த மாலை.
கணக்கிலடங்கா தேனீர்ப்பைகளும், பிஸ்கட் பொட்டலங்களும், சமோசா கொடுத்த பேபர் தட்டுக்களும் கிழித்து, பிரித்து வீசி எறியப்பட்ட மாலை.
ப்ரதான அலுவலர்கள் இரவு வீடுகளுக்கு செல்ல முடியாமல் மனைவிகளிடம் திட்டு வாங்கிய மாலை.
சொட்டு சொட்டாக பனி பெய்த அந்த பாழும் தில்லி இரவில் ஒரு தேசத்தையே சுதந்திரமாக்கப்போகும் முடிவுகள் எடுக்கப்பட்ட மாலை
விழித்த கண்களும், புகைத்த உதடுகளும் முறித்த சோம்பலும் நிறைந்த இரவுமாய்க்கழிந்தது.
ஏர்ஃஃபோர்ஸின் ”பப்பரப்பே” என்று விரிந்த, ப்ரிட்டிஷ் காலத்து அலங்காரங்கள் கொண்ட அந்த ஸஃப்தர்ஜங் மெஸ்ஸில் ஆஷிஷ் சாவந்த் சர்க்கார்- ASS - என்று செல்லமாக அழைக்கப்படும் விங் கமாண்டர் ஆஷிஷ், ”சூரியப்பகுதி மேலே” என்கிற ஸ்திதியில் இருந்த தனது ஆறாவது பொரித்த முட்டையின் மஞ்சள் த்ரவத்தை, அகலமான ப்ரெட் ஸ்லைஸின் மேல் பாகத்தில் கவிழ்த்து, சுதந்திரமாக மிளகுப்பொடியைத்தூவி, அரை கிலோ தக்காளி ஸாசைக்கவிழ்த்து வாயில் அதக்கித்தின்று கொண்டிருந்த ஏழேகால் மணிக்கு க்ரூப் காப்டனால் அழைக்கப்பட்டான்.
நீங்கள் ஆஷிஷ் போல ஆசாமிகளை அதிகம் சந்தித்திருக்க முடியாது.
ஆறடி இரண்டங்குல உயரம். 90 கிலொ எடை. முழுவதும் முறுக்கேறிய தசை உடம்பு. சிவந்த முகத்தில் அமுல் பேபி போன்ற சிரிப்பு. தில்லியின் ஸெய்ன்ட் ஸ்டீஃபன்ஸ் காலேஜில் ஆஷிஷ் ஃபுட்பால் மாட்சில் இறுக்கிப்பிடித்த அரை டிராயருடன் பந்தை எக்கித்தட்டிக்கொண்டே ஓட்டமாக ஓடி, போட்டி டீம் ஆட்டக்காரர்களை லாவகமாக சமாளித்து, எதிர் முகாமில் அனாயசமாக நுழைந்து ஒரு அரைவட்ட ஸ்பின்னில் பந்தை கோல் கீப்பரிடம் அடித்துவிட்டு வானத்தைப்பார்த்து வெற்றிக்களிப்பில் எம்பிக்குதிக்கும்போது, பார்த்துக்கொண்டிருக்கும் மிராண்டா காலேஜ் இளம் பெண்கள் அடி மடியில் கை வைத்துக்கொண்டு சப்திப்பார்கள் என்று ஒரு காற்றுவாக்கு செய்தி உண்டு.
பள்ளி நாட்களிலிருந்தே என் சி சி, ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால் என்று வர்ஜ்யாவர்ஜ்யமில்லாமல் எல்லா வற்றிலும் ஆஷிஷ்தான் முதல் இடம்.
படிப்பு பற்றி அதிகம் சொல்ல இயலாது!
பிஏ சேர்ந்த மூன்றே மாதத்தில் எகனாமிக் அனாலிசிஸ் எடுக்கும், அந்த மூக்கின் கீழ்ப்பகுதியில் கண்ணாடியுடன், முக்கால் முதுகு தெரியும் ப்ளவுஸ் அணீந்த சுசித்ரா பானர்ஜீ என்னும் வங்கள ப்ரொபசர், க்ளாஸ் டெஸ்ட் மார்க் கொடுக்கும்போது, “ஆஷிஷ்! வெட்கமாக இல்லை, இரண்டு மார்க் வாங்கியிருக்கிறாய்” என்று ஏசினவள், அடுத்த மாதமே “வெல் டன் ஆஷிஷ்! என்று பேப்பர் கொடுக்கும்போது ஆஷிஷின் முகத்தைப்பார்க்காமல் லேசான வெட்கத்துடன் கொடுத்த விவரம் ஒன்றிரண்டு சூக்ஷுமமான பசங்களைத்தவிர வேரு யாரும் கவனிக்க வில்லை.
எப்படியோ பிஏ பாஸ் பண்ணின ஆஷிஷ், ஏர்ஃபோர்ஸ் பரிட்சையில் முதலில் தேறி இடம் பிடித்தமைக்கு அவனின் அதீத ப்ளேன் ஆர்வம்தான் முழு முதல் காரணம். எல்லா ட்ரைனிங்கிலும் அசத்தலாய்த்தேறி, முக்கியமாக ”குட்டி டைனமோ என்றும், Sabre Slayer என்றும் அழைக்கப்பட்ட Folland GNAT வகை ப்ளேன் களை இயக்குவதில் மன்னனாக பரிணமித்தான்.
சென்ற வருடம் ரிபப்ளிக் தின பரேடில் நடந்த ஏர் ஷோவில் ஆஷிஷ் பண்ணின சாகசம் ஒரு மத்திய மந்திரிக்கு மார் வலி ஏற்படுத்தி, இவனின் ஜி ஓ சிக்கு ஹார்ட் வாய்க்கு வந்துவிட்டது. பன்னிரண்டாயிரம் அடி உயரத்திலிரிந்து ஃப்ரீ ஃபால் என்னும் நேர்க்கீழ் இறங்கலில் விதிக்கப்பட்ட உயரத்துக்கும் கீழே ஒரு கணத்தில் சில நூறு அடிகள் வந்து, அடுத்த நொடி க்ராஷ் என்று பார்வையாளர்கள் கண்களை மூடிக்கொண்ட அந்த மைக்ரோ செகண்டில் ஜிவ்வென்று மேலேறி Gnatஇன் பின் பாகத்திலிருந்து மூவர்ணப்புகையை பம்ப் செய்து ஒரு சோமர்சால்டின் மூலம் தன் நன்ற்யைத்தெரிவித்துப்புகை மூட்டம் கலந்த அந்த கரு நீல வானத்தில் காணாமல் போனான்.
அடுத்த நாள் கன்ன பின்னா வென்று திட்டப்பட்டாலும் அந்த வருட சுதந்திர தினத்தில் ஆஷிஷுக்கு விங் கமாண்டர் பதவி கிடைத்தது.
ஆஷிஷ் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சஃப்தர்ஜங் மெஸ்ஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம்.
க்ரூப் காப்டன் அறையில் அவசர மீட்டிங்.
“எப்போது வேணும் என்றாலும் நமக்கு க்ளியரன்ஸ் வரலாம். ஆகவே, பாய்ஸ்! உங்களின் பொம்மைகள் தயாராக இருக்கிறதா?”
“பாஸ்! நிஜமாகவே நாமும் இறங்கப்போகிறோமா? இது தரை வழி சண்டை மட்டுமே என்று பேசிக்கொண்டார்களே?”
“இல்லை நாமும் உண்டு. அப்படித்தான் மந்திரி சொன்னார்”
யேய்! என்ற கூக்குரல்.
”ஷட் அப் பாய்ஸ்! இது சண்டை, விளையாட்டில்லை”
“சர்! வீ ஆர் இட்ச்சிங் டு டேக் ஆஃப்”
சரி, கொஞ்சம் ப்ளான் பண்ணுவோமா?”
அடுத்த நாளே வெள்ளி முளைத்த விடியல் மூன்றரை மணிக்கு எஸ் ஓ எஸ் பறக்க ஆஷிஷ் தன்னுடைய Fonton Gnatஇல் அபார டேக் ஆஃப் செய்து, கூட வந்த ஃப்ளைட் லெஃப்டினண்ட் செந்திலுடன் பறக்க நேர்ந்தது.
அவர்கள் கல்கட்டாவின் மேல் பறந்த போது நிச்சலனம் இன்றி இருந்த அந்த பாழும் உலகம் சில ஆயிர மைல்கள் தூரத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆஷிஷுக்கு வலது புறம் செந்தில். வட்ட வடிவ ஸ்க்ரீனை உற்றுப்பார்த்து கீழே உள்ள எதிரியின் ராடர்களின் சுழலும் நாக்குக்கு அகப்படாமல் இருப்பதைக்கண்காணித்துக்கொண்டிருந்தான். இலக்கை நெருங்க நெருங்க அந்த மேல் வானம் ஒரு தீபாவளி போன்ற வெளிச்ச சிதறல்களை வாரி இறைத்துக்கொண்டிருந்தது.
“இலக்கை நெருங்குகிறோம்”
“ரோஜர்”
அந்த Fonton Gnat 400 நாட்ஸ் என்னும் ஸ்பீடில் சீய்த்துக்கொண்டு பறக்க, 300 பவுண்ட் பாம் 12 இருந்தும் அந்த கனத்தில் வேகத்தை இழக்காமல் சென்றது.
“ரேடியோ கொப்பளித்தது, “நான்கு மணி உயரத்தில் உங்களுக்கு ஒரு நண்பன்”. கேர்ஃபுல்”!
கீழ் வானில் சூரிய உதயத்தினிலிருந்து எழுந்தது அந்த பாகிஸ்தனிய சேபர் ஜெட். ஆஷிஷ் கவனிக்கும்போதெ தன் வயிற்றிலிருந்து ஒரு குண்டை செலுத்த, அது Fonton Gnatஐ நெருங்கி வர.ஆரம்பித்தது. இதோ,.ஆயிரம்…..அறுனூறு…….நானூறு அடிகள்..
“ஆஷிஷ்!” செந்தில் பதட்டத்தில் குரல் கொடுக்க ஆஷிஷ் காத்திருந்தான்.
அந்தக்கடைசி கணத்தில் சில இரும்புத்துண்டங்களை கொட்டினான். சென்சர் மூலம் ஏவப்பட்ட அந்த பாகிஸ்தானிய பாம் வெற்று இரும்புத்துண்டங்களை மோப்பம் பிடித்து ஓட, அதே மைக்ரோ செகண்டில் விமானத்தை சடாரென்று கீழிறக்கி ஒரு சக்கர வட்டம் அடித்து அந்த சேபரின் பின் பக்கம் போய் பட்டனை அழுத்த. Fonton Gnatஇலிருந்து புறப்பட்ட ஒரு சைட்வைண்டர் மிஸ்ஸைல் அந்த சேபரின் வால் பக்கம் நெருங்கி முத்தமிட, அடுத்த க்ஷணத்தில் பாகிஸ்தான் சேபர் ஜெட் ஒரு ஆரஞ்சுப்பந்தாய் எழும்பி கரும்புகையை கக்கியவாறே அந்த விடியற்காலை துல்லிய காற்றின் உதவியோடு, பங்களாதேஷின் மண்ணில் விழுந்தது.
வாவ்! – செந்தில் ஆச்சரியத்துடன் பெருமூச்சு விட்ட அந்த நிமிடம் விமானம் ஒரு ஆட்டம் ஆடி குலுங்கியது.
“ஆஷிஷ் அடி பட்டுக்கொண்டோம்” செந்தில் கத்தினான்.
விமானம் சட்டென்று சொம்பேறித்தனமாய் இழுக்க ஆரம்பித்தது. வேகம் நழுவ, உயரம் தள்ளாடியது.
கண்ட்ரோல் ரூமிலிருந்து “ஷல் வீ செண்ட் கவர்?” என்று கேட்க, ஆஷிஷ், ”தேவையில்லை. வில் ரிடர்ன் டு பேஸ்” பதில் சொன்னான்.
விமானத்தை சமாளிப்பது கடுமையாகிக்கொண்டே போனது,
“சீக்கிரம் ஆஷிஷ், நமக்கு ப்ரேக்ஃபாஸ்டுக்கு நேரமாகிறது!”
“கவலைப்படாதே செந்தில். இன்று சுட சுட உனக்கு ஆம்லெட் உண்டு”
எவ்வளவு நேரம் ஆஷிஷ்?”
”ஏழு நிமிடம்”
”இதோ திஸ் ஈஸ் அவர் ட்ராப்”
ஆஷிஷ் முடிக்குமுன் எங்கிருந்தோ இரண்டு பாகிஸ்தனிய சேபர் ஜெட் விமானங்கள் தோன்றி இரு பக்கமும் குண்டு மழை.
“செந்தில்! பெயில் அவுட்” என்று கத்திய ஆஷிஷ் திரும்பிப்பார்த்தபோது செந்தில் சீட்டிலேயே சரிந்திருந்தான். அவனின் மார்புக்கருகில் பல சல்லடைத்துளைகளின் வழியாக புது ரத்தம்.
”நோ”! கத்திய ஆஷிஷின் மார்பில் ஒரு மரண இடி. சொல்லொணாத வலி. ரத்தம்.
எப்படி இஜெக்ட் செய்து வெளியே வந்தான் என்பது தெரியாமலேயே மயங்கினான்.
கல்கத்தாவின் ராணுவ ஆஸ்பத்திரியில் அவனை பரிசோதித்த பெரிய டாக்டர்,, இவனை கொண்டு வந்தது வேஸ்ட். பிழைக்க பத்து சதவீதம் சான்ஸ் கூட இல்லை.”
அந்த மரண மயக்கத்திலும் குழந்தைப்புன்னகை மறையாத ஆஷிஷின் முகத்தைப்பார்த்த நர்ஸ் தீப்தா, “வீரனே! உன்னை சாக விடமாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டதை அங்கு வேறு யாரும் கேட்கும் நிலையில் இல்லை.
மார்ஃபைன் ஊசி போடப்பட்டிருந்ததால் வலி மறந்த ஆஷிஷ் அவ்வப்போது கண் முழித்து, பிதற்றுவான்.
“செந்தில் அந்த மூணு பின்னையும் விடுவித்துவிடு. அப்போதுதான் சீட் எஜக்ட் ஆகும்”
”டி ஓ டி சொல்வது சரியில்லை. அந்த ஆங்கிளில் போனால் ஆற்றில் விழ வேண்டியதுதான்,“
தீப்தா டாக்டரிடம் கிட்டதட்ட கெஞ்சினாள்.
“எனக்கென்னமோ இவன் பிழைத்துக்கொள்வான் என்று தோன்றுகிறது. ப்ளீஸ்!, ஆபரேட் செய்யுங்கள்”
“எதற்க்காக இப்படிப்போராடுகிறாய், இவன் இன்னொரு அடிபட்ட வீரன் அவ்வளவுதான்.”
”இல்லை டாக்டர், ப்ளீஸ்”
”உண்மையைச்சொல், இவன் உனக்கு உறவா அல்லது தெரிந்தவனா?”
”உறவுதான் டாக்டர்”.
”வருங்காலக்கணவன்” – தீப்தா தீர்மானம் செய்துவிட்டதைச்சொல்லவில்லை!
மூன்று ஆபரேஷன் செய்து, நான்கு ஐவி கொடுத்து ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இரண்டு நாள் கழித்து, ”தீப்தா! சாரி, இவன் பிழைக்கப்போவதில்லை” என்று பொது வார்டில் கொண்டு வந்து போட்டார்கள்
டாக்டருக்கு ஆஷிஷைத்தெரிந்திருக்கவில்லை. தீப்தாவையும்தான்.
அடுத்த ஆறு நாட்கள் தீப்தா ட்யூடி முடிந்தால் உடனெ ஆஷிஷின் படுக்கைக்கு வந்து விடுவாள். ஆஷிஷ் அவ்வப்போது கண்களைத்திறப்பான்.
“பாய்ஸ்! Combat என்றால் ஒரே முடிவுதான். எதிரியின் உயிர் போய்விடவெண்டும்”
“சரியான கணம் என்பது நாம் முடிவு செய்வது இல்லை. லிமிட் உயரம் தாண்டின பிறகும் எனக்கு மூளைக்குள் அந்த க்ளிக் சத்தம் கேட்டால் தான், ஜாய் ஸ்டிக்கைத்தொடுவேன்”
”சுசித்ரா! மூணு மார்க்கா குடுத்தே? இப்போது முப்பது நிமிடம் கதற வைக்கிறேன் பார்”
“பந்தை என்கிட்ட பாஸ் பண்ணிட்டா, நீ நேரே ஃபுல் ஃபார்வார்டுக்கு போய்விடு. டி வட்டத்தில் உனக்குத்தருவேன். சொதப்பினே சாலா, உனக்கு சமாதிதான்”
அவன் பேசின எதுவுமே தீப்தாவுக்குப்புரியவில்லை. இந்த சுசித்ரா சமாசாரம் மட்டும் எதோ புரிந்தாற்பொல் இருக்க கொஞ்சம் வேதனையாக இருந்தது.
“எனக்கு க்ளியரன்ஸ் குடுக்கச்சொல்லு. அப்புறம் பார்”
“சரி சொல்கிறேன், இப்போ நீ தூங்கு”
“செந்தில்! உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஹிந்தி பேச கத்துக்கோ. அது இங்கே ரொம்ப முக்கியம்”
ஏழாவது நாள் ஆஷிஷ் தொபக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த உட்கார்ந்து கொண்டு, “கனவில்லையே, நீ நிஜம்” என்றான்.
”ஆம், நிஜம்தான்”.
”செத்துப்போய் சொர்க்கத்தில் விஷ்ணு பகவான் உன்னை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்தேன்.”
தீப்தா வெட்கத்துடன் சிரிக்க,
”எப்படிப்பிழைத்தேன்?” உன் அழகால்தான் என்று சொல்லிவிடாதே!”
”சோல்ஜர்! உன்னை சாக விட்டிருக்கமாட்டேன்.
”நான் சொல்ஜரில்லை. விங் கமாண்டர்” நான் செத்துப்பொயிருந்தால்?”
நீ மட்டும் செத்திருந்தால் உன்னைக்கொலையே பண்ணீருப்பேன் – தீப்தா சிரித்தாள், கண்ணீருடன்.
“என்ன மேன்! இங்க படுக்கைய்ல ஜல்சா பண்ணறியா? போ போ, நாளைக்கே உன்னை டெல்லிக்கு அனுப்பிடப்போறேன் – பெரிய டாக்டர் சந்தோஷத்துடன் சொன்னபோது தீப்தாவுக்கு என்னமோ போலிருந்தது.
“ரொம்ப தாங்க்ஸ் தீப்தா. எப்படி நன்றி சொல்றதுன்னே..”
“என்ன, ஃபேர்வெல் ஸ்பீச்சா? இந்த விங் கமாண்டரை இன்னொரு பெண் நர்ஸ் தொடவிடுவேனா?”
எப்போது காதலாயிற்று?
சரியாக இருபத்தேழாம் நாள் ஆஷிஷ் ஆஸ்பிடலைவிட்டு வெளியே வந்த தினமே திருமணம்.
தேன், இனிப்பான ஜாங்கிரியுடன் நாக்கைப்பொரிய வைக்கும் மலாய் பால், பனி படர்ந்த திராட்ச்சை நுனி, நேற்றுப்பிறந்த குழந்தை வாசனை, ஜய்ப்பூர் பாட்டி பண்ணூம் மேதி சிக்கன் கோஃப்தா, அம்மா தேய்த்துவிடும் ஞாயிற்றுக்கிழமை எண்ணைக்குளியல், உப்புக்கரித்த அந்த முதல் முத்தம், அத்தனையும் அடிபட்டுப்போய் விட்ட தீப்தாவின் அண்மை.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் ஆஷிஷ் முழுவதும் தேறினான்.
இது போன்ற அரவணைப்பு ஆஷிஷுக்கு புதுஸு. சிரித்தாலும், கோவப்பட்டாலும், சிணுங்கினாலும், முரண்டாலும்,தீப்தாவின் அரவணைப்பு வளைந்தும், நெளிந்தும், குழைந்தும், மெத்தென்றும், திண்ணென்றும், அவளின் வனப்பு போலவே ஆஷிஷை எதிர்கொண்டது.
”எப்போ மறுபடி பறக்கட்டும்” என்று துடித்தவனை, ”கிடடா கீழேயே” என்று க்ரவுண்ட் ட்யூடியில் போட்டார்கள்.
தினமும் கையில் டிஃபன் டப்பா எடுத்துக்கொண்டு போகும் சிவில் சப்ளைஸ் அண்டர் செக்ரடரி மாதிரி ஐந்தேமுக்காலுக்கு வீடு வந்து, அவன் – தீப்தா – அவன் என்கிற ஈக்வெஷனில் திளைத்தார்கள்.
ஃபுட்பால், ரக்பி, க்ரிக்கெட் நண்பர்கள் ஆஷிஷை கண்ணாலேயே காணவில்லை. காலை ஜாக்கிங்கும், ஜிம்மில் சில நேரங்களும் மட்டுமே நண்பர்களுக்கு காட்சி தந்தான். மற்றபடி அவனை முழுவதுமாக தீப்தா ஆட்கொண்டாள்.
ஆஷிஷின் பாட்ச் ரோஹித்தின் திருமண ரிசப்ஷன். ஆஃபீசிலிருந்து வீடு வந்து ஆஷிஷ் டீவீ பார்த்துக்கொண்டிருக்க, “ஹேய்! ஆஷிஷ்! இன்னுமா ரெடியாகல?” என்று வந்த தீப்தாவை பார்த்து அதிர்ச்சி.
என்னமா இருக்கிறாள்?
”ஆஷிஷ்! மணி ஆறரை.. ஜஸ்ட் கெட் ரெடி, மை டியர் ஸ்டட்”
”வாவ்! தீப்! கார்ஜியஸ்”
அவன் கண்களில் வழிந்த அந்தக்காதல்.
அடுத்த நாள் ரோஹித் திட்டிய திட்டுக்களுக்கு அளவே இல்லை.
”சாலா! நான் உன்னுடைய பெஸ்ட் மேனாக இருந்தேன். நீ என்னடாவென்றால் கல்யாணத்துக்கே வரவில்லை. அப்படி என்ன உயிர் போற வேலை”
பதில் சொல்லாமல் நமுட்டுசிரிப்பு சிரித்து சமாளிக்க வேண்டியிருந்தது.
ஆஷிஷுக்கு என்ன வேண்டும்?
அவன் கேட்பதற்க்கு ஒரு கணம் முன்பே தீப்தா அதை செய்திருப்பாள்.
எட்டு மணிக்கு அவன் கிளம்பியதும் இவள் குளித்துவிட்டு சல்வார் எடுத்தால் அதனுள்ளிலிருந்து விழும் ஒரு பர்ஃப்யூம் பாட்டில். சப்பாத்திக்கு மாவு பிசைய டப்பாவைத்திறந்தால் அதனுள் விலை உயர்ந்த காது ஜிமிக்கி. வெளியே கிளம்ப செருப்பு போட்டுக்கொளப்போனால் அதனுள் ”ஐ லவ் யூ பேபி” என்கிற க்யூட் ஆரஞ்சுக்கலர் லவ் கார்ட் இருக்கும்!
அந்தச்சிரிப்பு…..அபார சிரிப்பு….கண்களும் முகமும் புருவமும் கூட சிரிக்கும் சிரிப்பு.
பெரியப்பா கதையை இங்கே நிறுத்தினார்.
“அண்ணா! என்ன நிறுத்திட்டேள்”. அப்புறம் என்ன ஆச்சு? – ஆம்மா
“காந்தா! முடிச்சுடு, சஸ்பென்ஸ் தாங்கலை” - அப்பா
பெரிப்பா! ஆஷிஷ் மறுபடி சண்டைக்குப்போனானா?” – நான்.
ஜேராமா! சாப்டுடலாம். எனக்கு எப்ப வேணா போன் வரலாம்.”
பர பரவென்று சாப்பாட்டுகடை நிகழ்ந்தது. எதோ ஒரு எதிர்பார்ப்பில் யாரும் பேசவில்லை. அம்மா மள மளவென கைக்காரியங்களை முடித்து ஹாலுக்கு வந்து, “ம், சொல்லுங்கோ அண்ணா”!
“காந்தா! அப்புறம் என்ன ஆச்சு?”
”ரகு! நீ போய் தூங்கு! நாளைக்கு ஸ்கூல் உண்டோல்லியோ?”
“ப்ளீஸ்! பெரிப்பா, முழுஸா கேட்டுட்டு போறேன்”
”ஆமாம் காந்தா! இவ்வளவு சுவாரஸ்யமா சொல்லிட்டு பாதிலேயெ நிறுத்தினா? அதான் குழந்தையும் கேக்கறான்”
ஒரு டம்ளர் தண்ணியை விடாமல் குடித்து முடித்தார். முகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்டார். ”ம்க்கும்” என்று தொண்டையை கனைத்துக்கொண்டார்.
“என்ன சொல்லச்சொல்றேள்? ஆஷிஷின் திறமைக்கு அவனை என்னோட க்ரூப்பிலேயே ஸ்பெஷல் எஸ்பியொனேஜ் தலைவனாகப்போட்டதையா, அதனால் அவன் நிறய Covert ஆபரேஷன்களுக்காக பாகிஸ்தான், பங்களாதேஷ்,, சிலோன் என்று மாதக்கணக்கில் பயணம் செய்ததையா, தனிமை காரணமாக தீப்தா மறுபடி ஆர்மி ஹாஸ்பிடலில் நர்ஸ் வேலைக்கு போக ஆரம்பித்ததையா, நீண்ட பிரிவால் அவர்கள் இருவருக்கும் இடைவெளி விழுந்ததையா, ஒரு வித புறக்கணிப்பில் தீப்தா, தன்னுடன் வேலை செய்த டாக்டர் அர்விந்தை விரும்பியதையா, ஒரே வருடத்தில், ஆஷிஷை விவாகரத்து செய்ததையா, எதைச்சொல்லச்சொல்லுகிறாய்”
பெரியப்பாவின் கண்களில் லேசாக கோடு பொட்ட நீர். தொண்டை கமறியது.
”ஆஷிஷ் இப்போ எப்படி இருக்கிறான்?”
ஆல்கஹாலிக் ரீஹபிலிடேஷன் செண்டரில்.
இந்தகடைசி வரிக்கான அர்த்தத்தை அம்மா எனக்கு அடுத்த நாள் காலை அழுதுகொண்டே சொன்னாள்
No comments:
Post a Comment