Friday, 2 February 2018

” எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.!”
--------------------------------------------------------
”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.”
- திருப்பாவை பாடல் 29
ஈயத்தின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதுடன் இந்தக்கதை முடியப்போகிறது.
ஸி எல் ஆர் ஐ குவார்ட்டர்ஸில் பாக்யலட்சுமியின் அந்தப்பழைய வீட்டில் நானும் ஈயம் என்னும் செல்லப்பெயர் கொண்ட ராமநாதனும் இருந்தோம்.
நேற்று ஈயம் ஃபோன் பண்ணியிருந்தான்.
”ரகு! பாக்யலட்சுமி சென்னை வந்திருக்கா!”
”யாரு நம்ம க்ளாஸ் பாக்யாவா?”
”ஆமாண்டா!”
”இப்ப அவ இங்க இல்லியா?”
”இல்லடா! ரெண்டு பொண்ணும் அமெரிக்காவுல இருக்காங்க. இவளும் ஆறு மாசம்போல அங்க இருந்துட்டு வரா. இனிமேதான் என்னன்னு தெரியணூம்!”
”ஏன் இனிமே?”
”அவ ஹஸ்பண்ட் போன வாரம் அமெரிக்காவுல போய்ட்டானாம்!”
”அய்யோ பாவமே!”
”அதான் காரியத்துக்காக இங்க வந்திருக்கா! சரி, நீ எப்போ வர, நாம போய் துக்கம் விஜாரிக்கணுண்டா!”
”நாளைக்கு சண்டேதானே, போலாமா?”
”சரி! அவ அதே சிஎல் ஆர் ஐவீட்டுலதான் இருக்கா!”
”ஆமா, சலபதி விஷயம் சொல்லப்போறியா?”
”ஆமாண்டா, சொல்லிடணூம்”!
”இந்த சந்தர்ப்பத்துல ஏண்டா?”
”தெரியட்டுண்டா! என்ன பாடுபடுத்தியிருக்கா?”
”அவளே கஷ்டத்துல இருப்பா. இப்ப போய்,,”
”படட்டும் படட்டும்! அவளுக்கு சலபதியோட நெனவு கூட இருக்காதுடா! சலபதியா யாருன்னு கேக்கப்போறா! ராட்சஸிடா அவ!”
”சரி விடு! நாளைக்கு போவோம். நீ சி எல் ஆர் ஐ கேட் கிட்ட வந்துடு. நா வெயிட் பண்றேன்”
இங்கே நான் கொஞ்சம் குறுக்கிடுகிறேன். விஷயத்தின் தீவிரத்தை உங்களுக்குப்புரிய வைக்க வேண்டும். அதனால் கொஞ்சம் விலாவரியாகச் ்சொல்ல வேண்டும்.
மிகச்சமீபத்தில் பள்ளி நண்பர்கள் நாங்கள் நாலு பேர் சந்தித்து எங்களின் காந்தி நகர் ஸ்கூலுக்கு விஜயம் செய்து நெகிழ்ந்த சம்பவத்தின்போது சலபதி பற்றிப்பேச்சு வந்தது.
”அவன் லவ் என்னடா ஆச்சு?”
“ஒண்ணும் நடக்கலியே!”
”அவ்ளோ வருஷம் சுத்தினானே! அப்பகூடவா பாக்யலட்சுமி பிடி குடுக்கல?”
”பிடியா? திரும்பிக்கூட பாக்கல!”
”சே! ஆனா சலபதி சின்சியரா லவ் பண்ணினானாடா?”
நடராஜன் தான் பதில் சொன்னான்.
”கேக்காத! நாங்க ரெண்டு பேரும் ஒரே ஏரியாவாச்சே! ஒரு நாள் விடாம அவ கதான் ஓடும்! Freudian persistence of anachronistic sexual trait”!
“சரிடா! உன் சைக்காலஜிய இங்க அவுக்காத!”
“ஈயம்! நீ அப்டியே இருக்க!”
”அவனும் ஒன்ன மாதிரி பெசண்ட் நகர் இல்ல?”
”ஆனா அவன் நெறய நாள் ஐஐடிலேர்ந்து ஆர்கேவோட பஸ்ல வரத பாத்திருக்கேனே!”
”அதா, காலங்காத்தால ஐஐடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இறங்கி, பாக்யலட்சுமி கூட சிஎல் ஆரை பஸ் ஸ்டாப்பிலேந்து அவளுக்கு பத்து தப்படி பின்னால நடந்து ஸ்கூலுக்கு நடந்துவருவான்!”
”ஹௌ ரொமாண்டிக்!”
”ஒண்ணும் நடக்கலியேடா!”
பாக்யலட்சுமி அவ்ளோ திமிரா?
”திமிர் இல்லடா. அப்பல்லாம் பொண்கள் வீட்டுக்கு ரொம்பப்பயந்தாங்க”
”போடா! நம்ம ஹேமா இல்லியா? அவளும் சக்தி தாசனும் என்னமா ஓட்டினாங்க ரொமான்சை? ஹேமா என்ன பயந்தாளா? சலபதி பாக்யலட்சுமிய எவ்ளோ சின்ஸியரா நேசிச்சான் தெரியுமா!”
கொஞ்சம் பாக்யலட்சுமி பத்தி சொல்லவேண்டும்.
வெகு சாதாரணள். அமைதியாக வந்துவிட்டு போய்க்கொண்டிருக்கும். படிப்பிலும் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. உயரமாக ரெட்டைப்பின்னலுடன் விசுக் விசுக் என்று நடந்து வரும். அதிகம் பையன்களின் பார்வையில் பட்ட மாதிரி இல்லை. வருஷத்துக்கு ஒரு முறை நடக்கும் ஸ்போர்ட்ஸ் தினத்தில் த்ரோ பால் நன்றாக விளையாடும் அதனால் கொஞ்சம் கிராக்கியாக நடந்து கொள்ளும், மற்றபடி சாது தான். அப்பா சிஎல் ஆர் ஐயில் வேலை என்பதால் அங்கேயே குவார்ட்டர்ஸ் உண்டு. கோதா, பாக்யலட்சுமி மங்களா, சந்திரிகா எல்லாம் அந்தப்பக்கத்திலிருந்து வருபவர்கள் என்னும் உலகமஹா செய்தி ஏழாம் கிளாசிலேயெ ஈயத்தால் கண்டு பிடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுவிட்டது.
இந்த பாக்யலக்ஷிமியைத்தான் சலபதி காதலிக்க முயன்று கொண்டிருந்தான். ரெகுலராக பின் தொடருவான். தொடர்வது என்றால் இப்போது போலெல்லாம் இல்லை. சிஎல் ஆரைலிருந்து அவள் வரும் பஸ்சுக்காக காத்திருந்து, ஒரு பத்தடி இடைவெளி விட்டு நடந்து வருவது, ஸ்கூல் பிரேயரில் அவள் பாடி முடித்தவுடன் கை தட்டுவது, வெளி கிளாஸ் பையன்கள் அவளைப்பார்த்தால் “டாய்! இங்க எதுனா வெச்சுக்கிட்டா..” என்று சன்னமான குரலில் மிரட்டுவது போன்ற சாகசமற்ற செய்கைகள்தான்.
டென்த் எக்ஸ்கர்ஷன் கத ஞாபகம் இருக்கா?”
“எதுடா, சலபதி அடி வாங்கினதா?”
அதேதான்!
நீங்கள் முன் எழுபதுகளில் தமிழ் சினிமா பார்த்தவராக இருந்தால் மாடர்ன் தியெட்டர்ஸின் சில படங்களில் வந்த அந்த நகைச்சுவை நடிகை நினைவில் இருக்கலாம். பேர் எல்லாம் சொல்வது இங்க தகாது. அவளின் கணவர் எங்கள் ஸ்கூலில் வாத்யார். பி சந்திரன் என்று பேர், இவரை பிசி சார் என்போம். இவர் சீரியஸாகப்பாடம் எடுத்து யாருமே பார்த்தது இல்லை. ஸ்கூல் திறந்த புதுசில் ஸ்கூல் பீஸ், நோட்புக் விநியோகம் என்று இரண்டு மாதங்களுக்கு பிசியாக இருப்பார். அடுத்த இரண்டு மாதங்கள் எக்ஸ்கர்ஷன் அது இது என்று ஓடுவார். பிறகு ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன், அதற்கு அப்புறம் பப்ளிக் எக்சாம் என்று வருஷம் முழுவதும் ஒட்டி விடுவார்.
நல்ல பசையுள்ள ஆசாமி. அதான் மனைவி சம்பாத்யம் இருக்குமே! ஸ்கூலிலும் புறங்கையை நக்குவார் என்று ரம்யா டீச்சர் ஒரு முறை ஸ்டாப் ரூமில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன்.
பத்தாவதில் எக்ஸ்கர்ஷன் சமயம். க்ளாசுக்கு நோட்டீஸ் வந்ததுமே எங்களுக்கு குஷி. இந்தப் ்பெண்டுகள்தான் ஒவ்வொரு வருஷமும் பிகு பண்ணிக்கொள்ளும்.
“எங்கப்பா போப்பறாங்க?”
“எங்கியோ சாத்தனூர் அணைக்கட்டாம்!”
அய்ய்ய்யொ! எங்க வீட்ல விடமாட்டாங்க!”
எங்கப்பா கொன்னே போட்றுவார்!”
”எங்கண்ணன் கால ஒடைச்சுடுவேன்னான் போன வருஷமே!”
இப்படிச்சலம்புமே தவிர கிளம்பும் அன்று கலர் கலராக உடுத்திக்கொண்டு ரகளையாக எல்லாம் சிரித்த முகத்துடன் வந்துவிடும்!
அந்த முறை பாக்யலட்சுமி வரவில்லை என்று சொல்லிவிட்டது. சலபதியின் சோகத்தை அரை விநாடி நினைத்துப்பார்த்துவிட்டு நாங்கள் எக்ஸ்கர்ஷன் கனவுகளில் மூழ்கினோம்.
கிளம்புவதற்கு முதல் நாள் க்ளாசில் சுற்றுலாவுக்கு வருபவர்களின் பேர் படித்தார்கள்.
பாக்யலட்சுமி!
”சார்! நா வரலைன்னு சொல்லிட்டேனே!”
”பின்ன ஏம்மா பணம் கட்டின?”
”நானா?”
”பின்ன உம்பேருதான் இருக்கு ரசீதுல!”
”நான் கட்டலை சார்!”
”என்னம்மா இது தொந்தரவு! யோவ்! நாகேந்திரனைக்கூப்பிடு! தப்புத்தப்பா பேர் எழுதி தாலிய அறுக்கறான்!”
நாகெந்திரன் வந்தது, அவன் துண்டு போட்டுத்தாண்டி சொன்னது, பாக்யலட்சுமி விடாமல் மறுத்தது போன்ற எல்லா அக்கப்போர்களும் முடிந்தவுடன் சலபதி மாட்டிக்கொண்டான்.
“ஓஹோ! மாப்ள பொண்ணுக்கும் சேர்த்து பணம் கட்றாரா!”
சரியான அடி விழுந்தது.
“பிசி சார் அடிச்சது அவனுக்கு முழங்கையில ரெண்டு வாரம் கட்டு போடற அளவுக்கு ஆயிடுத்தே”
”எனக்குக்கூட ஞாபகம் இருக்குடா! அவனாலயும் எக்ஸ்கர்ஷனுக்கு வர முடியல!”
“பாக்யாவே வரல. அதனால நானும் வராதது ஓக்கேதாண்டான்னான் அப்போ அந்தப்பய!”
”அப்புறங்கூட பாக்யலட்சுமி அவனோட பேசவே இல்ல, இல்ல?”
”ம்ஹூம்! மசியவே இல்ல!”
”சி செக்ஷன் ரமணி சலபதி கிட்ட அடி வாங்கினது நெனவு இருக்கா உனக்கு?”
”அதெப்போடா?”
”என்ன இப்படி கேக்கற? லெவென்த்தும்போது, ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு!”
”ஆமா ஆமா, ரகளையாச்சே அன்னிக்கு!”
”செமி ஃபைனல்ஸ் ஆட்டத்தும்போது, த்ரோ பால் கோர்ட்லயும் நம்ம கேர்ள்ஸ்க்கும் டென்த்க்கும் மாட்ச். பாக்யாதான் நம்ம டீமுக்கு ஸ்டார் ப்ளேயெர்! சி செக்ஷன் ரமணி ஒரு ஸ்மாஷ் அடிக்க, அது எகிறி போய் அந்த த்ரோ பால் கோர்ட்ல பாக்யலட்சுமி மேல அடிச்சு அவ தொப்புனு விழுந்துட்டா!”
”சலபதி என்ன ஒத ஒதச்சாண்டா ரமணிய! பாவம் ரமணி! வேணூம்னெல்லாம் அடிக்கல. அதுக்கே அவனப்போட்டு வ்ளாசிட்டான் சலபதி!”
”ஓ இப்ப ஞாபகம் வர்ரது! ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்னிட்டார் ஏவிடி சார்!”
”இதுல கொடும என்ன தெரியுமா?”
”ஈயம்! இங்கியும் நீ எக்ஸ்க்ளூசிவ் வெச்சிருக்கயா?”
”இர்ரா! பாக்யலட்சுமி கோதா கிட்ட “இந்தச்சலபதி முட்டாள் முரடனா இருக்கானே! அடிபட்ட நானே ஒண்ணும் சொல்லல! இவனுக்கென்ன ரோஷம்”ன்னு சொன்னத சலபதியே கேட்டு நொந்துட்டாண்டா!”
“வருஷம் நாப்பது ஆனாலும் ஈயத்தோட மெமரி அட்மிரபிள்டா!”
”நடராஜா! ஸ்கூல் விட்டப்றம் என்ன ஆச்சுடா? சலபதி அப்புறமுமா பாக்யலட்சுமி பின்னால சுத்தினான்?”
”எனக்குத்தெரிஞ்சு டிகிரி முடிக்கற வரைக்கும் தொரத்திண்டு இருந்தான் சலபதி! நாங்க ரெண்டு பேருமே பியூசி குருநானக்லதானே படிச்சோம். அவ குவின் மேரீஸ். இவன் ஒரு நாளப்பாத்தா மாதிரி அவளோட பஸ்ஸிலேயே காந்தி சிலை பஸ் ஸ்டாண்டுக்குப்போய்ட்டு லேட்டாவே வருவான் காலேஜுக்கு!”
”நாலு வருஷமுமா?”
”ஆமா! ஆனா அவ திரும்பிக்கூடப்பாக்கலைடா! அப்படி என்னடா அவளுக்கு திமிரு!”
”நடராஜா! நீ அவன்கிட்ட சொல்லலியா?”
”நெறய தடவை சொல்லிருக்கேன்! அவளப்பத்தி சொன்னா கோவம் வந்து என்கிட்ட கத்துவாண்டா!”
”எப்படிதான் கத முடிஞ்சது?”
”டிகிரி முடிக்கறதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து. ஒடஞ்சு போய்ட்டாண்டா சலபதி!”
”அவ கூட பேச இவன் டிரை பண்ணலியா?”
”எக்கச்சக்கமா டிரை பண்ணினான். அவ பேசவே இல்லை.!”
”சே! சுத்த மோசண்டா! இவனுக்கு என்ன அப்படி ஒரு பைத்தியம்! விட்டுட்டு போய்த்தொலைக்க வேண்டியதுதானே!”
”நீ வேற! அவ கல்யாணத்தன்னிக்கு இவன் முதல்ல குடிக்க ஆரமிச்சான்!”
”தேவதாஸ் மாதிரியா?”
”ச்ச்! அதுமாதிரிதான் ஆயிடுத்து!”
”நடராஜா! சலபதி எங்க வேல பண்ணினான்? கல்யாணம் பண்ணிண்டானா?”
“ம்ஹும்! என்னமோ தெய்வீகக்காதல் மாதிரி தனியாவே இருந்துட்டான். செம்புதாஸ் தெருவுல அவங்கப்பா ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் உக்காந்துட்டான்!”
”இவ்ளோ வருஷத்துலயும் அவனுக்கு மனசு சமாதானப்படலியா? மறக்க முடியாமயா இருந்தான்?”
”என்னத்த மறக்கறது? தினம் ஆறு மணியாச்சுன்னா நேரே பாருக்கு போய்டுவான்!”
”என்ன ஸ்டுப்பிடிட்டி இது?”
”யார் சொல்றது? வீட்டுலயும் கெஞ்சி, மிரட்டின்னு பார்த்துட்டு விட்டுட்டாங்க.
நடராஜா! உன் பாஷையில இதுக்கு என்னடா பேர்?”
”Neuroticism extraversion and dimensionally rated obsessive-compulsive sydrome”
”போடா! பெரிய ஜல்லியா இருக்கே!!”
”நீதான கேட்டெ, சொன்னேன்!”
”அப்ப சலபதி தனியாவே இருந்தானா?”
”நானும் சைக்காலஜி படிப்புக்காக டெல்லி போய்ட்டேனே. டச் விட்டுப்போச்சு. அப்பப்ப ஏரியா பசங்க மூலமா ந்யூஸ் வரும். ஒண்ணும் நல்ல ந்யூஸா இருக்காது. குடிச்சிட்டு ரோடுல கிடந்தான், கலாட்டா பண்ணினான்னு! “
பாவம் சலபதி!
இன்னும் கொஞ்ச நேரம் ஸ்கூலில் இடங்களைப்பார்த்தோம். நெகிழ்ந்தோம், கொஞ்சம் வருந்தினோம், சிரித்தோம், லேசாக அழவும் செய்தோம். மொபைலில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். பிரிந்து அவரவர் கைதிக்கூண்டுகளுக்குத்திரும்பினோம்.
.
இதோ நேற்று ஈயத்தின் ஃபோன், பாக்யலட்சுமி பற்றி.
சொன்னபடி ஈயம் சி எல் ஆர் ஐ கேட்டில் நின்று கொண்டிருந்தான். குளுமையான மரங்களின் ஊடே இலைக்குப்பைகளை மிதித்து நடந்தோம். பழைய குவார்ட்டர்ஸ் வீடுகள். கிட்டத்தட்ட சிதில நிலையில். பெயிண்ட் கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும். இடையிடையே ஒரு சில அழகு மிளிரும் பங்களாக்கள். டைரக்டர்களுடையதாக இருக்கலாம்.
அந்தக்கடைசி வீடுதான்.
உள்ளே நுழைந்தோம்.
“நாங்க பாக்யலட்சுமியோட ஸ்கூல் நண்பர்கள்!”
”வாங்க அங்கிள்! ஐல் கால் மாம்!”
அமெரிக்க ஆங்கிலம்!
உள்ளே மந்திர சத்தம் சன்னமாக கேட்டது.
சின்ன ஹாலில் மோடாவில் உட்கார்ந்தோம்.
வந்த பாக்யலட்சுமி தளர்ந்து நரை படிந்து தடித்த மூக்குக்கண்ணாடியுடன் அறுபது வயசு சொல்லலாம் போல இருந்தாள். வாழ்க்கையின் ஆயாசம் தெரிந்த முகம், சுருக்கம், நெற்றி மேடு. ஜிங் ஜிங்கென்று நடக்கும் பாக்யா இருந்த இடத்தில் ஏனோ தானோ வென தளர்ந்த ஓய்வடைந்த பாக்யா. எங்களைப்பார்த்தவுடன் தன்னிச்சையாகத்தோன்றிய புன்சிரிப்பிலும் ஒரு தளர்வு. அன்றைய அந்திமக்காரியங்களுக்காக தலைக்கு குளித்து ஈரத்தலையுடன் வந்து உட்கார்ந்தாள்.
கணவரின் எதிர்பாராத ஹார்ட் அட்டாக் பற்றியும், அதிர்ச்சி பற்றியும் பேசினாள்.
”சாரி பாக்யலட்சுமி! கேள்விப்பட்டோம்! அதிர்ச்சியாக இருந்திருக்கும்!”
”ச்ச்! விதி முடியணும்னு இருக்கு. முடிஞ்சுடுத்து! ”
கொஞ்ச நேரம் சங்கட மௌனம்.
”நம்ம க்ளாஸ் மேட்ஸ் எல்லாம் எப்படி இருக்கா? தொடர்புல இருக்கீங்களா?”
சொன்னோம்.
”சங்கர் ஐ ஏ ஏஸ்ஸாமே?”
”ஆமாம்!”.
”ரகு! நீ தாத்தா ஆயிட்டியா? நம்பவே முடியல!”
மறுபடி சற்று நேர மௌனம். தயங்குகிறாள் என்பது தெரிந்தது. அப்போதுதான் அவளின் பெண் காப்பிக்காக உள்ளே போயிற்று. இன்னும் கொஞ்ச நேரம் மௌனம். அலை பாய்ந்த கண்கள். சுற்று முற்றும் பார்த்த குழந்தைப்பார்வை. பாக்யலட்சுமி சன்னமான குரலில் கேட்டாள்
”சலபதி எப்படி இருக்கார்?”
ர் விகுதி!
ஈயம் பட்டென்று சொல்லிவிட்டான். இத்தனைக்கும் ஒரு வரிதான் சொன்னான்.
“இப்ப கேளு! உன் நெனப்புலயே அவன் உசிர் விட்டான். அதாச்சு நாலு மாசம்!”
ஒரு கணம் அதிர்ச்சி! பாக்யலட்ச்சுமி முகத்தில் தாளாத வேதனை தெரிந்தது. கண்களில் அடிபட்ட பாவம். தீங்கிழைத்துவிட்டு வருந்தும் repentance.
நடராஜன் இருந்திருந்தால் “terrors smiting the conscience through the knowledge of sin என்று சொல்லியிருப்பான்!
கொஞ்சம் சங்கடமான அமைதி. சட்டென்று ஏதோ நினைத்துக்கொண்டவள் போல பாக்யலட்சுமி தடதடவென உள்ளே ஓடினாள். நானும் ஈயமும் ஒரு மாதிரி அசட்டுப்பயத்தில் உட்கார்ந்திருந்தோம். சில நிமிடங்களுக்குப்பின்னால் பாக்யலட்சுமி, திரும்பி வந்தபோது எங்களை அதிர வைத்தாள்.
உடல் முழுக்க நனைந்திருந்தாள். தலையில் சொட்டசொட்ட குளிர்ந்த நீர். கட்டுக்கடங்காமல் கேவல். உடம்பு தூக்கித்தூக்கிப்போட்டது.
“அம்மா! அம்மா! என்னம்மா இது? இப்ப எதுக்கும்மா மறுபடி முழுக்குப்போட்டே? பைத்தியமா உனக்கு? இந்த எட்டு நாளும் தைரியமா இருந்தே, இன்னிக்கு என்ன ஆச்சு? அப்பா, நம்ம கூடவே தான் இருப்பாம்மா! நீ மனசத்தேத்திக்கோம்மா!ப்ளீஸ்!”
”சலபதியின் ஆத்மா இன்னிக்கிதான் சாந்தி அடஞ்சிருக்கும், இல்ல?”
வெளியே வந்த பின்னர் ஈயம் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

No comments:

Post a Comment