Thursday, 3 May 2018

இன்றைய கதையரங்கத்தில் (4 மே 2018)....
இந்த ஈமெயில் எனக்கு வந்ததல்ல…
இந்த ஈமெயில் எனக்கு வந்ததல்ல. வெறுமனே அதை மொழி பெயர்த்து வெளியிடுவது மட்டுமே நான் செய்யப்போகிறேன். அதன் சுலபமான ஆங்கிலத்தை எளிதாக அப்படியே மொழி பெயர்த்துக்கொண்டே வரி வரியாய் வெளியிடுகிறேன்.
மொழிபெயர்த்தல் எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் முடிக்க இஅயலாமல் அரைகுறையாய் நிற்குமோ என்னும் பயம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் கடைசியில்….சரி, பின்னால் வரும்போது பார்த்துக்கொள்வோம்.
அன்புள்ள டாக்டர் ஸ்ரீவத்ஸன்:
என்னை உங்களுக்கு நினைவிருக்கலாம். நான் மானஸ்வினி. போன வருடம் எனக்கு பிரசவம் பார்த்து அர்ஜுன் என்னும் தங்கப்பொக்கிஷத்தை எடுத்துத்தந்த டாக்டர் நீங்கள்தான்.
இந்தியானாபோலீஸின் விறைக்கும் குளிர் நிறைந்த நவம்பர் மாத இரவில் என் கணவர், சீ என்ன இது, கணவன் மதுசூதன் வலியால் அலறிக்கொண்டிருந்த என்னைக்காரில் போட்டு அவசரத்துக்காய் கிரீன்வுட் கம்யூனிடி ஹாஸ்பிடலுக்கு ஓடிவந்தபோது நீங்கள்தான் அட்மிட் செய்து, என்னைக்கவனித்து டெலிவரியை சுமுகமாக முடித்தீர்கள்.
நான் ரெகுலராக ஃப்ரான்ஸிஸ்கன் ஹெல்த்தில்தான் செக் அப் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் அன்றைய அவசர வலிக்கு அவ்வளவு தூரம் போக முடியாமல் உங்கள் கம்யூனிட்டி செண்டருக்கு வந்து சேர வேண்டிய நிர்ப்பந்தம். எனினும் நான் கொடுத்து வைத்தவள். அதுதான் உங்களிடம் வந்து சேர்ந்தேன்.
அர்ஜுனின் ஒன்றரை வயது சிரிப்பில் உங்களைத்தான் நானும் மதுவும் தினமும் பார்க்கிறோம்.
இப்போது இந்த ஈமெயிலுக்கு என்ன காரணம் என்று உங்களுக்குத்தோன்றலாம்.
சொல்கிறேன்.
மூன்று நாட்களுக்கு முன்புதான் நான் சென்னையிலிருந்து சம்யுக்தா மற்றும் அர்ஜுனுடன் இங்கே வந்து சேர்ந்தேன். நாங்கள் இங்கே ஃப்ராங்க்ளினில் இருக்கிறோம். ஹாலிடேவுக்கு இந்தியா வந்திருந்த நாங்கள் செய்த முதல் தப்பு மது எனக்கு முன்பே கிளம்பி வந்துவிட்டதுதான். ஒன்றரை வயதுப்பிள்ளையுடனும் மூன்றரை வயது சுட்டிப்பெண்ணுடனும் தனியாக சென்னையிலிருந்து அமெரிக்கா வருவது மிகப்பெரிய ரிஸ்க் என்பது கண்கூடு.
சென்னையில் அகாலமாக காலை மூன்று மணிக்கு கிளம்பும் எமிரேட்ஸில் நான் ப்ளேன் ஏறின கதையே ரகளைதான்.
இம்மிகிரேஷனில் சம்யூவின் முகம் ஃபோட்டொவில் இருப்பதுபோல இல்லை என்று அந்த ரன்வீர் சிங் சாயல் ஆஃபீசர் சொன்னபோதே நான் பயந்தேன். பிடிவாதமாக அவன் என்னை மிரட்ட, நான் மறுபடியும் கவுண்டருக்கு ஓடி, கெஞ்சி கரூசலில் இருந்த என் பெட்டியைத்திரும்ப எடுத்து அவளின் ஃபோட்டோ ஐடி மற்றும் வேறு சில ஃபோட்டோக்களும் காண்பித்து ஒருவழியாக இம்மிகிரேஷனை விட்டு வந்த போதே அர்ஜுனின் வீறல் ஆரமித்துவிட்டது.
இந்தக்களேபரத்தில் அவனுக்கு நான் பாலூட்ட மறந்துவிட, வேறு வழியில்லாமல் ப்ளேனின் ஏறவேண்டிய நேரமின்மை. தூக்கம் கெட்ட சம்யுவும் சிணுங்கிக்கொண்டிருந்தவள் ப்ளேனின் விஸ்தாரத்தையும் பல புது முகங்களையும் பார்த்து மிரண்டு போய், அவளும் பெரிய அலறலாக ஆரம்பித்தாள்.
“ப்ளேன் வேண்டாம் ம்ம்மி! வா போய்டலாம்!”
ஒரு பக்கம் அர்ஜுன் பசி அழுகை, சம்யூவின் கதறல், ப்ளேனில் ஏறும் கூட்டத்தின் தள்ளு முள்ளு, ஏர்ஹோஸ்டஸின் கெடு பிடி…..திண்டாடித்தான் போனேன்.
சட்டென்று எனக்கு அடுத்த சீட் பெரியவர் சம்யூவின் கை பிடித்து அருகில் உட்கார வைத்து, சாக்லேட் கொடுத்து முன் சீட் டீவியை ஆன் செய்து அவளை முழுவதுமாக எங்கேஜ் பண்ணிக்கொண்டார். சில நிமிடங்களில் சம்யூ டீவியில் ஆழ்ந்து விட பெரியவர் என் ஹாண்ட்பாகை வாங்கிக்கொண்டுவிட, நான் சிரமமின்றி அர்ஜுனுக்கு பால் புகட்டினேன். அவனும் அப்படியே தூங்கிவிட, ப்ளேன்
கிளம்புவதுகூடத்தெரியாமல் நானும் தூங்கிவிட்டேன்.
ஒரு சின்ன அதிர்ச்சியில் முழித்துப்பார்த்தால் ப்ளேன் துபாயில் தரை தொட்டிருந்தது. அருகில் சம்யூ பெரியவரின் தோளின் மேல் எச்சல் வழிய தூங்கிக்கொண்டிருந்தாள். அவர் மேலே பார்த்து யோசித்துக்கொண்டிருப்பது போலத்தெரிந்தது. பதற்றத்துடன் நான் சாரி சொல்ல, அவர் சம்யூவை அணைத்துக்கொண்டபடியே நோ ஒர்ரி” என்று ஆறுதலாய்ச்சொன்னார்.
துபாயில் இறங்கி, கேட் மாறி இன்னொரு மாபெரும் எமிரேட் ப்ளேனில் ஏறும் வரை பெரியவர் என்னுடனேயே இருந்து சம்யூவைக்கவனித்துக்கொண்டார். தூங்கும் அர்ஜுனை அவரிடம் கொடுத்துவிட்டு நானும் பாத்ரூம் கூடப்போக முடிந்தது. அவரும் இண்டியானாபோலிஸ்தான் வருகிறார் என்பது சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருந்த்து.
இந்தப்பெரிய ப்ளேனில் அவருக்கு வேறெங்கோ சீட் போட்டிருந்ததை எனக்கு அடுத்த பெண்ணிடம் பேசி மாற்றிக்கொண்டு என் அருகிலேயே அமர்ந்து வந்தார். ஃப்ளைட் முழுவதும், சில தூங்கும் நேரங்கள் தவிர, சம்யூவுடனேயே அவர் பேசி விளையாடிக்கொண்டு வந்தார். அவர் எப்போது தூங்கினார் என்பது கூட எனக்குத்தெரியாது.
ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சம்யூவுக்கு ஜன்னல் வழியாக ஏதோ காட்டிச்சொன்னபோது சம்யூ அவரின் தோள்பட்டையில் முத்தம் கொடுத்தது கூட அவருக்குத்தெரியுமோ என்னவோ!
இந்தியானாபோலீஸில் இறங்கும்போதும் கூடவே நின்று உதவி செய்த பெரியவரிடம் மாய்ந்து மாய்ந்து நன்றி சொன்னேன். அவர் கூச்சத்துடன் என்னை மறுத்தார்.
“இங்கே உங்கள் காண்டாக்டைக்கொடுங்கள்! நானும் மதுவும் நேரில் வந்துபார்க்கிறோம்” என்றபோது ப்ளேனின் பேப்பர் நாப்கினில் எழுதிக்கொடுத்த பேப்பரை நேற்றுத்தான் என் ஹாண்ட்பாகைக்காலி செய்த போது கண்டெடுத்தேன். பார்த்தால் என்ன ஆச்சரியம்! அது டாக்டர் ஸ்ரீவத்ஸன், உங்களின் ஈமெயில்!
கடவுளின் இந்த உதவியை என்னவென்று சொல்வது!
மதுவிடம் காண்பித்தபோது அவனுமே ஆச்சரியப்பட்டான். நான் முழுக்க முழுக்க பெங்களூரில் பிறந்து படித்து வளர்ந்த பெண். எனக்குத்தான் தெரியவில்லை. மதுவுக்கு சென்னைதான். அவன் சொன்ன பிறகுதான் எனக்கும் புரிந்தது.
உங்களின் தந்தை, அதான் அந்தப்பெரியவரும் டாக்டராமே? டாக்டர் வைகுண்டம் என்றால் தெரியாத பேரே சென்னையில் இருக்க முடியாது என்று மது சிலாகித்தான்….”
இந்த ஈமெயிலில் இன்னும் ஓரிரு வரிகள் இருந்தாலும் மொழி பெயர்க்க முடியாமல் கண்கள் பனிக்கின்றன.

1 comment:

  1. What a beautiful story!

    Having read so many of Dr. Vaikundam's stories, I was under the impression that his son's name was Anirudh (perhaps because that's my son's name too! 😊), and not Srivatsan. Or is his full name Anirudh Srivatsan?

    I've read this story several times, and every single time it leaves me with a smile. The contrast between the formidable, no-nonsense Dr. Vaikundam at the hospital and the gentle, affectionate way he interacts with a little child is so heartwarming.

    Love your writing, Sir. Thank you for giving us such memorable characters and stories that never lose their charm, no matter how many times we read them. - Nithya. K

    ReplyDelete