Ace of Spades
” நான் ராமனாதன். ரிடயர்ட் சிபிஐ. இது என் பெண் நீரஜா”
சுமலினி ராமனாதனைப்பார்க்காமல் நீரஜாவையே பார்த்தாள்.
என்னைவிட மூணு நாலு வயது கூட இருக்கும். ஆனால் எப்படி
வளப்பமாக இருக்கிறாள். நல்ல வேளை, இவள் சினிமாவுக்கு வரவில்லை.
“நீங்க எப்பிடி..?”
“அவினாஷ் அனுப்பினார்”
“ஓ! அவினாஷ்! அவன் ஏன் என்னைப்பாக்க வரலை?”
“அவன் வர்ரது இப்போ அவ்வளவு உசிதமில்ல. அதான் என்னை அனுப்பியிருக்கான்”.
அதோட அர்ஜண்ட் காண்ட்ராக்டாம், பாரீஸ் போயிருக்கான். அடுத்த வாரம் வந்துருவான்”
ஓ!
"நீ எந்தப்பட ஷூட்டிங்குக்காக வந்தே?”
”காதலேனும் தீவினிலே”
"இப்படியெல்லாம் கூட இப்பொ படத்துக்குப்பேர் வெக்கிறாங்களா?”
“அப்பா! நீங்க கடைசியாப்பார்த்த படம் என்ன?”
“எம்கேடின்னு யாரோ நடிச்ச சிவகவின்னு ஞாபகம்!”
எல்லோரும் சிரித்தார்கள்.
“சுமலினி யோசித்தாள். ”அவினாஷை “வந்து விடுவான்”? என்கிறார்
இந்தப்பெரியவர்.
“உங்களுக்கு எப்படி அவினாஷைத்தெரியும்?”
“ஓல்ட் ராஜிந்தர் நகர் டெல்லியில் அடுத்த வீடு. நீரஜாவின்
குழந்தைக்கால தோழன்”
ஓ! அதுதான் நீரஜா இத்தனை வளப்பமா? டெல்லி கோதுமையும் ஹர்யானா
பாலுமாய்ச்சாப்பிட்டு வளர்ந்திருக்கிறாள்.
”அவன் அப்பாவும் நானும் ப்ரிட்ஜ் சகாக்கள். இன்னிக்கு
வேணா அவினாஷ் ஹாட் ஷாட் பிசினஸ் டைக்கூனாக இருக்கலாம். எனக்கு அவன் brat அவினாஷ்தான்!
இன்னும் விவரம் வேணுமா?”
“சாரி சார்! நான் இருக்கற நிலையில எல்லாமே பயமாக, சந்தேகமாக
இருக்கு”
“எனக்கு சொந்த ஊர் தேரழுந்தூர். தமிழிலேயே பேசலாம். நீரஜாதான்
இன்னும் ”ஷ”வை விடாமல் இருக்கா!”
“டாட்! நீங்களே பேஷிண்டு இருந்தால்..? லெட் ஹர் டாக்”
சுமலினி சிரித்தாள். நீரஜா சிரித்தாள். ராமனாதன் சிரிக்கவில்லை.
“என்ன ஆச்சு? ஒண்ணு விடாமல் சொல்லும்மா”
”மண்டையில் அடிபடற போது பீங்கான் உடையற சத்தமா வரும்?
”ப்ளக்”குனு ரத்தம் தெறிச்சுது. அப்பா! அந்தப்பிச்சைக்காரனுக்கு மெல்லிசான உடம்பில்
எத்தனை பலம்! அந்த ஸ்பேடை எப்படி தூக்க முடிஞ்சது அவனால!” ராக்கேஷ் அப்பவே காலின்னு
தெரிஞ்சு போச்சு!”
’ய்யக்க்” என்று சுமலினி சிலிர்த்துக்கொண்டாள்.
”என்னது ஸ்பேடா?” – நீரஜா உரத்த குரலில் கேட்டாள். ராமனாதனும்
ஆச்சரியம் அடைந்தார்.
”அப்பா”? நீரஜா கேட்க, ‘எனக்கும் சர்ப்ரைஸ் தான்” – பதில்.
அவினாஷ் ஐஎஸ்டியில் சொன்னது இருவருக்கும் நினைவில் நிரடியது.
“ராம் அங்கிள்! நீங்க ரெண்டு பேரும் உடனே அந்த எஸ்டேட்டுக்குப்போய்
சுமலினியப்பாருங்கோ. யூ மஸ்ட் ஹெல்ப் ஹர். நான் அவளக்கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஆனால்
ந்யூஸ் வெளில வரவேண்டாம்.”
”கவலைப்படாதே அவினாஷ். அது சரி, யாரு இந்த சுமலினி?”
”அவ ஒரு தமிழ் சினிமா நடிகை. வீ லவ் ஈச் அதர்!”
ராமனாதனுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
”டேய் அவினாஷ்! சினிமா நடிகையோட….. எப்பிடிடா?”
“ஒரு ஃபேஷன் ஷோவுல பாத்தேன் நீரு!
”லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா? சினிமா நடிகை, ம்?” உங்க அப்பா
என்ன சொல்லப்போறா?”
“நீரு! ராம் அங்கிள்தான் ஹெல்ப் பண்ணனும், ஏன் நீ கூடத்தான்
என் அப்பாகிட்ட சொல்லணும்”
அதுக்கெல்லாம் ஒரு விலை உண்டு அவினாஷ் பையா!
”தரேன் தரேன், ராக்ஷஸி! எனக்கு கல்யாணம் ஆகட்டும். அப்புறம்
இன்னொரு விஷயம்.”
”சொல்லு”
”நீரு! சொன்னா நீ சிரிப்பே. போன வாரம் ஒரு நாள் வைத்தீஸ்வரன்
கோவிலுக்கு நானும் சுமலினியும் போயிருந்தோம்.
”நாடி ஜோஸ்யமா?” அவினாஷ்! யூ ஆர் அ நட்”
“இரு நீரு! கேளு! அவன் என்ன சொன்னான் தெரியுமா?
”ஜாக்கிரதையா இருங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சங்கடம்
வரப்போறது. சீட்டுக்கட்டு ராணி ஏஸ் ஸ்பேடுனாலன்னு சொன்னான். ஒண்ணுமே புரியல. எங்களுக்கும்
ஏஸ் ஆஃப் ஸ்பேடுக்கும் என்ன சம்ம்மந்தம்? ஒரே வாரத்துல சுமலினி ஒரு கொலைக்கேசுல மாட்டிண்டு
இருக்கா. எனக்கு கவலையா இருக்கு அங்கிள்!”
”ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்” – நீரஜா அப்போது மறுபடியும் சிரித்தாள்.
ஆனால் இப்போது சிரிக்க முடியவில்லை.
வைத்தீஸ்வரன் கோவில் ஜோஸ்யன்…! ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்…! இங்க
கொலை நடந்தது ஒரு ஸ்பேடால….! நடுவுல சுமலினி!
ஸ்ட்ரேஞ்ச்!
ராமனாதன் சுமலினியிடம் திரும்பினார்.
“ம்ஹும் போறாதும்மா. கொஞ்சம் விவரமா சொல்லு”
லேசாக கதவு தட்டும் சப்தம்.
உள்ளே வந்தது நிர்மலா. தட்டில் மூன்று கப் காப்பி.
“சாரி! இதோ போயிண்டேஇருக்கேன். நீங்க பேசுங்க”
“பரவாயில்லை! நிர்மலா எவ்வ்ளோ ஹெல்ப் தெரியுமா, முன்னே
பின்னெ தெரியாத எனக்கு! சார்! நான் முதல்ல இவங்க வீட்டுக்குள்ள ஓடி வந்து விழுந்தவுடனே
பயந்து போய் நிர்மலாதான் கத்திவிட்டாள்.”
“அப்பா! இப்ப நெனச்சாக்கூட நடுங்கறது!” சிலிர்த்தாள் நிர்மலா.
சரி நீ சொல்லும்மா நிர்மலா, முதல்ல. சுமலினி சுதாரிச்சுக்கட்டும்”
“சார் அதுக்கு முன்னால ஒண்ணு கேக்கலாமா?”
“கேளும்மா நிர்மலா”
”பாம்பேல அந்த கிருஷ்ணன் மர்டர் கேஸ்….சுனந்தான்னு செத்துப்போனாளே..?
”டாட்! ஷீ காட் இட்” நீரஜா சொல்ல, ராமனாதன், “ஆமாம்மா!
உனக்கு எப்படி..?
“படிச்சேன் சார் சில வருஷங்களுக்கு முன்னே நைலான் கயிறுன்னு
அத கதையா போட்டிருந்தாங்க.”
“நீரஜா! பாத்தியா? தட் ப்ளோக் ரங்கா.!.என்ன வெச்சு எழுதிப்பிட்டான்.
இப்போ நான் பதில் சொல்ல வேண்டியிருக்கு”
அப்பா! அவர் எழுதினதாலதான் உங்களுக்கே பேர் கெடச்சுது.
நீங்களே சொல்லியிருக்கீங்க, அது பாபுலரானதாலதான் உங்க பிஎஃப் பேப்பர் கூட டெல்லில சீக்கிரமா
மூவ் ஆச்சுன்னு. கமான்.!”
“ஆமா, நீ ஏன் அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டே?” உனக்கு
அந்த உதவாக்கர வக்கீல் கணேஷை அறிமுகம் பண்ணி வெச்சவனாச்சே!”
நீரஜா டெல்லியில் வளர்ந்த பெண் போலவே லேசாக வெட்கப்பட்டு,
பின் பெருமூச்சு விட்டதை சுமலினியும் நிர்மலாவும் கவனிக்கத்தவறவில்லை.
ராமனாதன் ”ம்க்கும்” என்று கனைத்துக்கொண்டார்.
“சாரிம்மா, எங்களோட கதையைப்பேசிண்டு இருக்கொம்., நிர்மலா
நீ சொல்லு முதல்ல”
ராத்திரி பத்து மணி இருக்கும் இந்த ஃபார்ம் ஹவுஸ் ஹால்ல
நான், அம்மா, அப்பா, அண்ணா நாலு பேரும் சீட்டு விளையாடிண்டு இருந்தோம். போன ஒரு வாரமா
இதான் வேலை. சென்னைல இருந்தா அப்பா அண்ணாவை பார்க்கவே முடியாது. பிசினஸ் பிசினஸ் தான்.
ராத்திரி ரெண்டு பேரும் வர்ரதுக்கே பத்து பதினொண்ணு ஆய்டும். ஹாலிடேக்கு வந்த சந்தோஷம்.
எப்போதும் ஆஸ், அதான் கழுதை கேம்தான் ஆடுவோம்.
சீட்டாட்டம்!ஆஸ்! கழுதை! ஆனால் ஏஸ்! வைத்தீஸ்வரன் கோவில்
நாடி ஜோஸ்யன்! எஸ் ஆஃப் ஸ்பேட்!
நீரஜாவின் கண்கள் ஸாஸர் போல விரிந்ததை ராமனாதன் கவனித்து,
கண்களாலேயே அமைதி என்றார்.
”தெரியாதும்மா. நான் அந்தக்காலத்து ஆசாமி. எனக்கு பிரிட்ஜ்
தான்”
“நீரஜாவுக்கு தெரிந்திருக்கணுமே?”
“ப்ரிட்ஜுல அவ என்னை விட ஷார்ப்” – ராமனாதன் முகத்தில்
ஒரு க்ஷணப்பெருமை.
”எங்களுக்கு அதெல்லாம் தெரியாது சார். கழுதை ஆட்டம்தான்
ஜாஸ்தி யோசிக்க வேண்டாம். ஜாலியா இருக்கும். வெளையாடும்போதுதான் திடீர்னு ரூம் கதவை
’டமால்”னு தெறந்துண்டு சுமலினி ஓடி வந்தா, தொப்புன்னு விழுந்தா , ”கொலை கொலை” ன்னா,
அதோட மயங்கிட்டா”
”வாச கதவ தெறந்தா வெச்சுண்டு இருந்தீங்க?”
“அது அண்ணாவோட அவசரம். சீட்டு ஆட ஆரம்பிச்சுட்டோம். அம்மாதான்
சந்தேகமா ”வாச கதவு சாத்தியாச்சா”ன்னு கேட்டு அண்ணாவை ”போய் பார்ரா”ன்னு வெரட்டினா.
சீட்டு ஆடற ஆர்வத்துல அவன் அரைகுறையா சாத்தியிருக்கான் போல. இவ ஓடி வந்து தெறந்துட்டா!”
சுமலினிதான்னு அடையாளம் தெரிஞ்சுதா?”
“இல்ல. ஓண்ணுமே புரியல. வாசக்கதவுக்கு நேர் எதிரே நான்
உட்கார்ந்துண்டு இருந்தேன். பக்கத்துல அம்மா. பாக்கறேன், இவ ஓடி வர்றா, மயங்கி விழறா,
கொலை கொலை ன்னு சொல்லிண்டே, பதற்றம் வேற. அடுத்த செகண்ட் நான் வீல்ன்னு கத்த, அம்மா
திரும்பி பார்த்து, இன்னொரு வீல்! பயத்துல நடுங்கிட்டோம். அப்பாவுக்கு சினிமான்னா ஒண்ணுமே
தெரியாது. அண்ணாதான் ”இது நடிகை சுமலினி”ன்னு அடையாளம் சொன்னான்”.
“சார்! நான் நேத்திலேர்ந்து இவங்க வீட்டுலதான் இருக்கேன்.
என்னை யாரோனு பாக்காம அவ்வளவு நல்லா பாத்துக்கறாங்க. நிர்மலா ரொம்ப ஸ்வீட்”
”பாவம் சுமலினி. கொலயப்பாத்துட்டு அதிர்ந்து போயிருக்கா.
இதுகூட செய்யல்லேனா எப்படி?”
சரி, நீங்க பேசுங்க” என்று கிளம்பின நிர்மலாவின் முகத்தை
கவனித்த ராமனாதன் “could that be?” என்கிற கேள்வியை கொஞ்சம் மனசுக்குள் பொருத்திக்கொண்டதை
நீரஜா கவனிக்க வில்லை.
“ஏம்மா சுமலினி! நீ ஃபாரெஸ்ட் ஹெவன் எஸ்டேட்டுக்கு ராத்திரில ஏன் போனே? நீ தங்கியிருந்தது
தாஜுலதானே?”
மவுனம்.
“சொல்ல முடியாத காரணமா?”
மெதுவாக “என்னோட இறந்தகால, வெளில சொல்ல முடியாத ரகஸ்யம்
ஒண்ணு ராகேஷ் கிட்ட மாட்டிடுத்து சார்!” அவினாஷுக்குத்தெரியக்கூடாது சார், ப்ளீஸ்”.
நாங்க சொல்லமாட்டோம்.
“ஸோ, அதுக்கு பேரம் பேச கூப்டானா?” – நீரஜா கேட்டாள்.
ஆமாம்.
இப்போ அவனோட கொலைப்பழி நேரா உம்மேல விழுமேம்மா!” உனக்கு
சரியான மோடிவ் இருக்கே!”
சார்! சத்தியமா நான் பண்ணலை. அந்ததைரியம் எனக்கு வரவே
வராது சார்”
”நம்பறேன் மா”
“என்ன நடந்ததுன்னு ஒண்ணு விடாம சொல்லு”
“அப்ப்பா! என்ன பயங்கரம்!” எவ்வளவு ரத்தம்! சார்! ராக்கேஷ்
என்னை ராத்திரி ஒன்பது மணிக்கு மேல வரச் சொல்லியிருந்தான். வேற வழி இல்லைன்னு நா பாட்டுக்குப்போயிட்டேன்.
அவன் என்னை பங்களாவின் வலது பக்கம் இருக்கற ஸ்பைரல் மாடிப்படி வழியா மேலே வரச்சொல்லியிருந்தான்.
அங்க கதவை தாழ்ப்பாள் போடாம் வெறும சாத்திவெச்சிருந்தான்.”
”ஹோட்டல்லேர்ந்து எப்படி போனே?”
ஒரு டாக்ஸில. முக்காடு போட்டுண்டு இருந்தேன். அடையாளம்
தெரியல. நானும் அப்படி ஒண்ணூம் நயனதாராபோல பாபுலர் இல்லியே!”
”அது யாரு நயனதாரா?”
”டாட்! நீங்க சிவகவி, எம்கேடி, டி ஆர் ராஜகுமாரி, தவமணி
தேவி காலப்ரஜை. நயனதாரா வெல்லாம் தெரிய சான்ஸே இல்ல!”
”தனியாவா போனே?”
கொஞ்சம் தயங்கி ”ஆமாம் சார்”
”சரி, நீ படியேறி உள்ளே போனியா?”
”ஆமாம் சார்!”
“என்ன ஆச்சு?”
”பேரம் பேசினான். அவன் கேட்ட பணம் எங்கிட்ட கிடையாது.
கெஞ்சினேன். மசியவேயில்லை”.
”அப்புறம்?”
“இன்னும் ரெண்டே நாள்ல நான் கேட்ட பணம் வராட்டா” ன்னு
மெரட்டிண்டே ஜன்னல் பக்கம் போய் நிக்கறான். திடீர்னு கர்ட்டன் தொறந்தது. பின்னாடி ஒரு
நீள ஸ்பேடு, அதான் மண்வெட்டி சார், அதக்கையில் வெச்சுண்டு, தாடியோட, அழுக்கு சட்டை,
ஒல்லியா பிச்சைக்காரன் போல…அந்த மூஞ்சி எனக்கு மறக்கவே மறக்காது”
”அவனை அடையாளம் காட்டுவியாம்மா?”
”எங்க வேணா சார்! அப்படிப்பதிஞ்சுபோன முகம் சார் அது!”
”வாட் ஹேப்பண்ட்” – நீரஜா கெட்டாள்.
“அயோக்கிய ராஸ்கல்”ன்னு கருவிண்டே அந்த ஸ்பேடால மண்டையல
ஒரே போடு போட்டான். ராக்கேஷுக்கு அதிர்ச்சியில சத்தம்போடக்கூட முடியல. அப்படியே சாய்ந்தான்.
இன்னொரு அடி மண்டையில. அந்த ஸ்பேடை கீழே எறிஞ்சான். அவன் ஒளிஞ்சுண்டு இருந்த ஃப்ரென்ச்
விண்டோ வழியா எகிறி குதிச்சான். நான் அதிர்ச்சியில ஒரு செகண்ட் ஸ்தம்பிச்சு நின்னுட்டேன்”
”மாடிலேர்ந்தா குதிச்சான்.?”
”அது மாடியெல்லாம் இல்ல சார்! ஒரு பத்து பன்னிரெண்டு அடி
உயர்த்தி கட்டி அதுக்கு ஸ்பைரல் படி வெச்சிருந்தாங்க. அதனால குதிச்சா, அடி கிடி படர
அளவுக்கு உயரம் இல்லை”
”ஒ! அப்புறம்?”
”சுதாரிச்சிண்டேன். உடம்பெல்லாம் பட படன்னு நடுங்கித்து.
ரூமுக்கு அந்தப்பக்கம் யாரோ வர சத்தம் கேட்டுது. வந்த வழியிலேயே ஓடி ஸ்பைரல் படில வேகமா
எறங்கி தலை தெறிக்க ஒடினேன். இந்த ஃபார்ம் ஹவுஸ்ல லைட் எரியறது தெரியவே நேரே ஒடிவந்து,
கதவைத்தள்ளினேன். இவங்கள்ளாம் சீட்டு ஆடிண்டு இருந்ததப்பாத்தேன். மயங்கிட்டேன்”
”சரிம்மா. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. எப்போ உன் ஹோட்டலுக்கு
போகப்போறே?”
“இன்னிக்கே போயிடலாம்னு பாக்கறேன். நிர்மலாவும் அவ அம்மாவும்
இரு, இன்னும் ரெண்டு நாளுக்கப்புறம் போலாம்னு சொல்றாங்க. வெரி நைஸ் பீபிள்”
”நீரஜா! உனக்கு ஏதாவது கேக்கணுமா?”
”சுமலினி! இந்த சப்பல் உங்களுடையதா?ரொம்ப அழகாக இருக்கிறது”
”ஆமாம். க்ளீன் பண்ணி வெச்சிருக்காங்க. நேத்து நான் ஓடி
வந்ததுல புழுதியும் அழுக்குமாய் இருந்திருக்க வேண்டும்.”
”ஓகே! ஸீ யூ”
டாட்! நிர்மலாவோட அம்மாவை மீட் பண்ணிட்டு போலாமே!”
நிச்சயமா!”
ஹாலில் காத்திருந்தபோது ராமனாதன் அங்கே இருந்த போட்டோக்களைப்
பார்த்துக்கொண்டிருந்தார்.
கனவன் மனைவி கல்யாண போஸ். அப்புறம் ஒரு எட்டு வயது சிறுவனுடன்
அப்பா அம்மா. அப்புறம் இன்னொரு போட்டோவில் அப்பா, அம்மா, பதினைந்து வயது பையன், போனி
டெயிலுடன் ஒரு பெண், க்ராப்புத்தலையுடன் ஒரு பெண்.
நிர்மலா!
ராமனாதன் கொஞ்சமே ஏக்கத்துடன் நீரஜாவைப்பார்த்தார்.
இந்தப்பெண்ணுக்கு இதெல்லாம் வாய்க்கவேயில்லை. மனைவி இருந்தவரை,
அவர் பாதி நேரம் பம்பாய், சென்னை கல்கத்தா என்று அந்தப்பாழாய்ப்போன போலீஸ் உத்யோகத்துக்காக
அலைந்து கொண்டிருந்தார். நீரஜாவும் அவள் அம்மாவும் டெல்லியில் தனியாக. இவர் யாரையெல்லாமோ
கெஞ்சி, சிபிஐலிருந்து டெல்லி போலீஸுக்கு மாற்றம் வாங்குவதற்க்குள் அவள் போய்ச்சேர்ந்து
விட்டாள். இவருக்கும் மாற்றம் கிடைக்கவேயில்லை. நீரஜா முழுக்க முழுக்க ஹாஸ்டல்.அவளின்
ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இவர் காஷ்மீர், கோடிக்கரை, காண்ட்லா, சூரத் என்று ஏதானும்
ஒரு கள்ளக்கடத்தல் ஆசாமி, தீவிரவாதி, பாகிஸ்தான் உளவாளி என்று சுற்றிக்கொண்டிருப்பார்,
நீரஜா மை கலைந்த கண்களுடன் ஹாஸ்டல் படுக்கையில் சாப்பிடாமல் தூங்கி விட்டிருப்பாள்.
அப்பாவையும் மகளையும் பாடாய்ப்படுத்தின வருடாந்திர இரவுகள்.
“மன்னிக்கவேண்டும், காக்க வைத்துவிட்டேன்”
வந்த பெண்ணுக்கு நிச்சயம் ஐம்பது வயது சொல்லலாம். ஆனால்
இந்தப்பெண்மணியின் முகம் பரிச்சயமாக இருந்தாற்போல தோன்றியது ராமனாதனுக்கு,
எங்கே பார்த்திருக்கிறேன்?
அந்த மூளைக்குள் ”டிக்” அவருக்கு இப்போது கேட்கவில்லை!
அந்த வீட்டின் ஆண்கள் இருவரும் அடுத்த அறையில் பேசிக்கொண்டு
இருக்க, ராமநாதனையோ நீரஜாவையோ கண்டு கொள்ளவே இல்லை.
“ரொம்ப சாரி! என் கணவருக்கும் பையனுக்கும் நடக்கிற விஷயங்கள்
பிடிக்கவே இல்லை. சுமலினியை வீட்டில் வைத்துக்கொள்வது சரி இல்லை. நமக்குத்தான் பின்னால்
தொந்தரவு என்று என் மீது கோபம்”
“வாஸ்தவம் தானே அம்மா! இப்பல்லாம் போலீஸ் விஷயங்களில்
மாட்டிண்டா தொந்தரவுதானே!”
”அதனாலதான் உங்களோடும் பேசாமல உள்ளேயே இருக்காங்க. ப்ளீஸ்,
தப்பா நினைச்சுக்க வேண்டாம்”
”உங்களைப்பாராட்ட வேண்டும். சுமலினியை கவனிச்சுக்கறதுக்காக.
அவினாஷ் எங்க கிட்ட ஸ்பெஷலா சொல்லி அனுப்பினான்.”
”அது சின்னப்பெண் சார்! எங்க நிர்மலா போலதானே? அப்பா அம்மா
யாரும் இல்லையாம். தனி ஆள். பயந்து போயிருக்கிறாள். ஏதோ விதி வந்துட்டா. ரெண்டு நாள்தான்
இருந்துட்டு கொஞ்சம் நிதானத்துக்கு வந்தப்பறம் போட்டுமே”
”வாங்க! இந்த வாசல் ஹாலில்தான், சீட்டு விளையாடிண்டுருந்தோம்.
இவ பதறிப்பதறி ஓடி வந்து கொலை கொலைன்னு அலறி மயங்கிட்டா. நான் இங்க உட்கார்ந்திண்டு
இருக்கேன் வாசல் கதவுக்கு நேரே இவள் முகத்தைப்பார்த்ததும் அலறிட்டேன்.எனக்குப்பக்கத்துல
இருந்த நிர்மலாவும் அதிர்ச்சியில கத்திட்டா. எம்பையன் தான் முதல்ல உள்ளே ஓடிப்போய்
தண்ணி கொண்டு வந்தான். நேத்து விளையாடிட்டுப் போட்ட சீட்டுக்கட்டு எடுத்து வெக்காம
அப்படியே இருக்கு பாருங்கோ”
ராமநாதன் மெள்ள நடந்து அந்த சீட்டாட்ட டேபிளைச்சுற்றி
வந்தார். கலைந்து கிடந்த சீட்டுக்கட்டை எடுத்து அடுக்கினார்.
“ஒரு நிமிஷம், இதோ வர்றேன்” என்று அந்தப்பெண்மணி உள்ளே
போக, ராமனாதன், “நீரஜா, இந்தக்கட்டில் ஒரு சீட்டு மிஸ்ஸிங்”
“நீரஜா ஆச்சரியத்தில், “”டாட்! டோண்ட் டெல் மீ இட் ஈஸ்
ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்”
”எஸ், மை டியர் கேர்ள்! அது ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ் தான். இங்க
இல்லை பார்!”
”அவினாஷ்! கிவ் மீ ய
ப்ரேக்” – நீரஜா க்ரீச்சிட்டுவிட்டு, ”நாங்க பாத்துக்கறோம் உன் சுமனிலினிய. நீ கவலைப்படாதே.
மவுனம்.
”நாட்
இன் திஸ் செஞ்ச்சுரி அப்பா!. என்னால நிச்சயம் நம்ப முடியல”
”எதுவுமே
நிச்சயமா சொல்றதுக்கிலை அம்மா. அதும் இந்த நாடி ஜோஸ்யமெல்லாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டெர்ரஸ்ட்ரியல்”
”அப்பா!
உங்களுக்குதான் இதிலெல்லால் நம்பிக்கையே கிடையாதே!”
வெல்!
யூ நெவர் நோ! – குறும்பாகச்சிரித்தார்.
“மன்னிக்கணும்.
எதானும் சாப்பிட்டேளா? – பரக்க பரக்க அந்தப்பெண்மணி வந்தார்.
ஓ1
ஆச்சும்மா! நிர்மலா காபி குடுத்தா. சரி, நாங்க கெளம்பறோம்’
”ஏதாவது
வேணும்னா கூப்பிடுங்கோ. யூ ஆர் மோஸ்ட் வெல்கம் ஹியர். சுமலினிக்கு உங்க ஹெல்ப் தேவை”
”நமது
இந்தியக்குடும்பங்களின் கட்டுக்கோப்பு பெரிய விஷயம் அம்மா.”
என்ன
சொல்கிறீர்கள்?
”இல்லை
வருஷா வருஷம் நீங்க இப்படி குடும்பத்தோட வெகேஷனுக்கு வந்து குடும்ப உறவை பலப்படுத்திக்கொள்வதைச்சொன்னேன்.
நானே நீரஜாவை முதல்ல ஊருக்கு அழைச்சிண்டு வந்தது என் ரிடயர்மெண்ட்டுக்கு அப்புறம் தான்,
அதான் உங்களைப்பாராட்டத்தோணித்து.”
”ரொம்ப
தாங்க்ஸ். போய்ட்டு வரோம்”.
வாசலை
நெருங்கியபோது எதிரே அந்த வீட்டில் வேலைக்காரி நடந்து வர, நீரஜா, ஏம்மா! நீ இங்க வேலை
செய்யறியா?
அவள்
தயங்கி, ஆமாம்”
நீதான்
அந்த நடிகையோட செருப்பை தொடச்சு வெச்சியா?”
இல்லீங்களே.
அது சுத்தமாத்தானே இருந்துது,என்று வேலைக்காரி சொன்னது ஆச்சரியம் கொடுத்த து.
காரில்
ஏறினவுடன் நீரஜா கேட்டாள் “ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ், எப்படிப்பா?”
ராமனாதன்
தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். லேசாக தலையை ஆட்டிக்கொண்டார். தப்பு பண்ணிவிட்டேன்
என்பது போல.
“டாட்!
என்ன ஆச்சு? மண்டைக்குள் க்ளிக் கேட்டுதா?”
இன்னும்
இல்லையம்மா!” பட், நீரஜா! கொலை நடந்த எஸ்டேட் ஹவுசுக்குப்போகணுமே உடனே?.
”அப்பா!
நாம எந்த அத்தாரிடியில போறது?”
”சும்மா
ஏதாவது அடிச்சு விட வேண்டியதுதான்”
இதோ
கொஞ்சதூரம்தானே, நடந்து போய்டலாமா?”
வேண்டாம்ம்மா.
பந்தாவா கார்ல போய் இறங்கினா கொஞ்சம் மரியாதை கிடைக்கலாம்!”
ஃபாரெஸ்ட்
ஹெவன் எஸ்டேட் பங்களா அமைதியாக இருந்தது. அதன் மானேஜர் நேற்று கொலை செய்யப்பட்ட விஷயம்
முதலாளிக்குத் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. அவர் அமெரிக்காவின் ஈஸ்ட் கோஸ்ட்டில்
மையாமி பீச்சில் பூப்போட்ட அரை டிராயருடன் தன் அமெரிக்க மனைவியின்…….சரி சரி, விவரணை
வேண்டாம்.
”நரகல்”
என்று அலுத்துக்கொண்டே சென்னையில் உள்ள லாயருக்குத் தெரியப்படுத்த, அந்த பஞ்சகச்ச அய்யங்கார்
வக்கீல் தன் ஜூனியரை எஸ்டேட்டுக்கு அனுப்ப, அந்த ஜூனியர் யாரோ செலவில் ரெண்டு நாள்
குளிர் ப்ரதேச வாழ்வு என்கிற ரீதியில் அடுத்த நாள்தான் வர இருந்தான்.
அன்று
காலைதான் போலீஸ், அது இதுவென்று அமர்க்களப்பட்டு கொஞ்சம் ஓய்ந்து இருந்தது. ஒன்றிரண்டு
வேலைக்காரர்கள் பயத்துடன் நடமாடிக் கொண்டு இருந்தனர்.
ராமனாதனும்
நீரஜாவும் காலிங் பெல் அடித்தபோது திறந்தவன் வீட்டின் சமையற்காரன். பல வருஷங்களாக அங்கே
வேலை செய்பவன்.
கமிஷ்னர்
ராஜேந்திரன் அனுப்பினார். ”சிபிஐ” என்று எப்பவோ காலாவதியாயிருந்த தன் அழுக்கு அடையாள
அட்டையைக்காட்டினார். சமையல் காரன் தன் சகல அங்கங்களையும் சுருட்டிக்கொண்டு ”வாங்க
ஐயா” இன்ஸ்பெக்டர் சொன்னாருங்களே” என்று தன் பங்கிற்கு புளுகினான். கொலைக்கேஸுக்கு
ஏன் சிபிஐ என்கிற கேள்வியெல்லாம் கேட்கத்தெரிந்தால் அவன் ஏன் அந்த எஸ்டேட்டில் இத்தனை
வருஷமாகக் குப்பை கொட்டப்போகிறான்.
”இது
என் அஸிஸ்டண்ட்”
”வாங்கம்மா”
“ராக்கேஷ்
ஐயா செத்துக்கிடந்த ரூமைப்பாக்கணும்”
பெரிய
அறை. நட்ட நடுவில் ராக்கேஷ் என்னும் ஒத்தை ஆளுக்கு டபிள் காட். எதிர்பக்கம் இன்னொரு கதவு. இரண்டு பெரிய ஜன்னல்கள்.
இரண்டிலும் கர்ட்டன் திறந்து இருந்தது. கதவைத்திறந்தால் சின்ன லேண்டிங். அதிலிருந்து
ஒரு பத்து பன்னிரெண்டு அடி கீழே இறங்கும் ஸ்பைரல் படிகள்.
ஏதானும்
கலைஞ்சிருக்கா?”
இல்லீங்க,
போலீஸ் கூட அப்படியே வெச்சிருக்கணும்னு சொல்லிட்டாங்க
கட்டிலுக்கு
அருகே தரையில் ஒரு சின்ன கோலமாக ரத்தக்கறை காய்ந்து இருந்தது.
’ராக்கேஷ்
அய்யா உடம்பு இங்கதான் கிடந்ததுங்க”
அவன்
காட்டிய இடம் கட்டிலுக்கு வெகு அருகே, ஜன்னலிலுருந்து சற்று தூரத்தில்! நாலு அடி இருக்கலாம்.
”இங்கேயா
கிடந்தது” – ராமனாதன் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
நேத்து
ராத்திரி என்ன ஆச்சு?”
எட்டு
மணிக்கெல்லாம் அய்யா சாப்ட்டுட்டு யாரும் என்னை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ரூமுக்குள்ற
போய்ட்டாருங்க.
”நீங்க
எப்ப தூங்கப்போனீங்க?”
”ஒம்பதரைக்கு
பின்னாடி என் ரூமுக்குப்போனேங்க, அரைமணிக்கெல்லம் அதான் ரகளையாகிப்போச்சுங்களே!”
”ரூக்குள்ள
யாராவது வந்தாங்களா?”
தயக்கமாக
நின்றான்.
”சொல்லுப்பா”
– கடுமையானார்.
”ஆமாங்க!
பொம்பளை குரல் கேட்டுச்சு”
”அடிக்கடி
நடக்குமா?”
”ஆமாங்க.
சகஜமா வருவாங்க. அதனாலதான் அந்த ரூமை அவர் எடுத்திக்கிட்டாருங்க. அந்தப்படி வழியா வந்துட்டு
அப்படியே போய்டுவாங்க”!
”சண்டை
போடறாமாதிரி இருந்துதா?”
”கவனிக்கலீங்க”
”பொய்
சொல்லாகூடாது உடம்புக்கு ஆகாது”!
”இல்லிங்க.
எப்பவும் நடக்கிறதுதாங்க. ஏதானும் சொல்லியிருப்பாருங்க. வேலை முடிஞ்சதும் ஏமாத்திடுவாருபோல.
சண்டை போட்டு, காசு வாங்கி மிரட்டின்னு…. விவகாரமாத்தான் இருந்தாருங்க ராக்கேஷ் அய்யா!”
”அடிச்ச
மண் வெட்டி எங்கேப்பா?”
”போலீஸ்
எடுத்துட்டுப்போய்ட்டாங்க அய்யா!”
”சாவு
எப்பிடின்னு பேசிக்கிட்டாங்க?”
”மண்டை
பொளந்துடிச்சிங்க.! செம அடிங்க!”
”ஒரு
பொண்ணா அப்படி அடிச்சிருக்கும்?”
”ஆச்சரியம்தானுங்க.
பாத்தா பொம்பள அடி மாதிரி இல்லிங்க, பலசாலியா யாரோ அடிச்சிருக்கணுமுங்க.”
”இத
நீ போலீஸ்ல சொன்னியா?”
”நமக்கெதுக்குங்க
பொல்லாப்பு”
”அந்த
நடிகை வந்ததைக்கூட நீ பாக்கலியா?”
”இல்லிங்க.
போலீஸும் டாக்டரும் பேசிக்கிட்டாங்க, அடுத்த எஸ்டேட்டு விட்டுக்கு ஒட்டிட்டாங்கன்னு”
”அது
கொன்னிருக்குமா?”
”அது
சின்ன பொண்ணா இருக்குங்க. இந்த அடி அடிக்கமுடியுமான்னு தெரிலைங்க. போலீஸும் அப்ப்டித்தான்
பேசிக்கிட்டாங்க.”
”முதல்ல
நீ பாத்தபோது இந்த ஜன்னல் திரை தொறந்து இருந்ததா இல்ல, மூடி இருந்ததா?”
”தொறந்துதாங்க
இருந்தது”
”ராத்திரி
முழுக்க தொறந்துதான் இருக்குமா?”
”சாயங்காலம்
ஆறு ஏழு மணிக்கு நாந்தான் தொறந்து வெப்பேனுங்க. அய்யா படுக்கப்போகறதுக்கு முன்னே மூடிக்குவாருங்க.”
”சரி
நீ வெளில இரு. நாங்க ரூம கொஞ்சம் பாத்துட்டு பொறப்படறோம்”.
”காபி
டீ எதுனா..?”
”வேண்டாம்ப்பா!”
”நீரு!
கவனிச்சியா? சுமலினி சொன்ன ஜன்னல் இதுவாக இருக்குமா? அப்படீன்னா பாடி எப்படி கட்டில்
பக்கம் விழும்? ஜன்னல் பக்கமான்னா இருக்கணும்?”
”ஒரு
வேளை அடிபட்டு தவழ்ந்து. இங்க வந்து விழுந்திருக்கலாமோ?”
”இல்ல
நீரு! ஜன்னல் பக்கத்துல ரத்தக்கறையே இல்லியே!”
கதவைத்திறந்து
அந்த லேண்டிங்குக்கு வந்தார். ஸ்பைரல் படிகளில் இறங்கினார். தரையைப்பார்த்தார். கொஞ்ச
தூரம் நடந்தார். மரங்கள் நிறைந்து இருந்த தோட்டம். சற்றுத்தொலைவில் ஒரு விக்கெட் கேட்.
அது வழியாகத்தான் சுமலினி ஒடி வந்திருக்கவேண்டும். மறுபடி முன்னும் பின்னும் நடந்து
பார்த்தார்.
முகம்
ப்ரகாசமாகியது.
”அப்பா!
என்ன க்ளிக் சத்தமா? கேட்டுடுத்தா?”
”ஆல்மோஸ்ட்
மை டியர் நீரஜா!”
”டெல்
மீ டெல் மீ!”
”கொஞ்சம்
பொறு”.
”நாம
மறுபடியும் நிர்மலா வீட்டுக்குப்போகணும்.!”
கதவைத்திறந்தது
அந்த வேலைக்காரிதான்.
”எல்லோரும்
சாப்பிடறாங்க அய்யா!. உஙளுக்கு சுமலினி அம்மாவைப்பாக்கணுமா, அவங்க மேலே ரூம்புக்குள்ற
ரெஸ்ட் எடுக்கறாங்க”
”அவசரம்
ஒண்ணுமில்ல. எனக்கு கொஞ்சம் நிர்மலாவோட அம்மாட்ட பேசணும்.”
”உக்காருங்க”.
ஹாலின் அந்தகோடியில் அடுத்த அறையின் கதவு வழியாக நால்வரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பெரியவர் மெல்லிசாக வழுக்கைத்தலையுடன் இருந்தார். நிர்மலாவின் அண்ணன் காத்திரமாக பரந்த முதுகுடன்.
நிர்மலாவின் அம்மா வந்து கொண்டே ”வாங்க, என்ன விஷயம்?” ஏதானும் மறந்துட்டீங்களா?”
ஒரே ஒரு சின்ன விஷயம். இனிமே தொந்தரவு செய்யமாட்டோம்.
”அடேடே!பரவாயிலீங்க! சொல்லுங்க?”
”நான் அப்பவே சொன்னேனே, நம் இந்தியக்குடும்பங்களின் கட்டுக்கோப்பான தன்மை ஒரு சிறந்த விஷயம். நான் அதை மிகவும் மதிப்பவன்.”
அந்த அம்மாளுக்கு குழப்பமாக இருந்தது. ராமனாதன் நிதானமாக சொன்னார்.
”நா இப்போ வந்தது ஒரு அம்மாவின் பயத்தை போக்குவதற்க்காக. ராக்கேஷின் கொலைகாரன் கண்டுபிடிக்கப்படமாட்டான் அம்மா. நீங்க விசனப்படவேண்டாம். நான் சமாதானம் செய்வது ஒரு அம்மாவையா இல்ல ஒரு மனைவியையா??”
அவளின் கண்களில் கொஞ்சம் ஆச்சரியம், பயம், குழப்பம். பின் தெளிவு.
”நான் சொன்னது சரிதானே அம்மா”
”சரிதான் சார், நீங்கள் சொல்வது சரிதான்” – மெல்லிய குரலில் சொன்னாள்.
கவலைப்படாதீர்கள். இந்த ஊர் போலீசால சுலபமா கண்டுபிடிக்க முடியாது. இன்னும் ஒரு விஷயம். உங்களுக்கு இன்னொரு மகள் உண்டில்லையா?
தயக்கத்துக்குப்பிறகு, ”ஆமாம்”
”அவ்வளவுதான் அம்மா. ஓ! மறந்துவிட்டேன். இந்த ஏஸ் ஆஃப் ஸ்பேடை உங்களின் அனுமதி இல்லாமல் எடுத்தேன். சீட்டுகட்டு பாக்சிலேயே இருந்தது. இந்தாருங்கள். இனி ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ் இல்லாமல் கழுதை ஆட்டம் ஆடவேண்டாம். ஆடவும் முடியாது. வருகிறோம்.”
”ஸார்! உங்களுக்கு நா நன்றி எப்படி சொல்றது?” தழு தழுத்தாள்.
”உங்களப்பாக்கும்போது நீரஜாவின் அம்மா இப்போது இல்லையே என்று வருத்தப்படுகிறேன், பாவம் சின்ன வயதிலேயே அம்மாவை இழந்து விட்டாள். பாத்துக்கொள்ளுங்கள். வருகிறோம். கம் ஆன் நீரஜா!”
ராமனாதன் சரேலென்று வெளியே நடந்தார்.
”அப்பா! எனக்கு ஒண்ணுமே புரியல. ராக்கெஷைக்கொன்னது யாரு?”
ராமனாதன் ஆங்கிலத்துக்குத்தாவினார்.
”நான் முதலிலேயெ சந்தேகித்தேன். நிர்மலாவின் அண்ணனோ அல்லது அப்பாவோ! அடித்த வீரியத்தைப்பார்த்தபோது அண்ணனாகத்தான் இருக்க வேண்டும்.”
”ஏன்”?
சுமலினிக்காக.
”எப்படி?”
”இருவரும் ராக்கெஷைப்பார்க்க போயிருக்கிறார்கள். பேரம் நடந்திருக்கிறது. ராகேஷ் சுமலினியை கேவலமாகப்பேச, அண்ணனுக்குத்தாங்கவில்லை. போட்டுதள்ளிவிட்டான். சுமலினி நிச்சயம் மயங்கியிருப்பாள். அதுதான் அவளைத் தூக்கிக்கொண்டே வீட்டுக்குபோயிருக்கிறான்”.
”அழுக்குப்படாத செருப்பு!.துடைத்து வைக்காத வேலைக்காரி! – நீரஜா தனக்குள் முணுமுணுத்தாள்.
”அதுதான் ஸ்பைரல் படிக்குப்பின்னால் நடையாய் நடந்தீர்களா?”
ஆமாம் நீரு! ஒரே ஒரு ஜோடிக்கால். சீரான நடைதான்! ஒட்டமில்லை!
அது சரி, அப்ப ஏன் சீட்டாட்டம் என்று நம்மிடம் சொல்லவேண்டும்? அதுவும் கழுதை ஆட்டம்!
அந்த ஆட்டத்திற்க்கு நாலு பேர் வேண்டும் அன்னிக்கு ராத்திரி மூணு பேர்தான் இங்கே இருந்தார்கள் எனகிற சந்தேகமே வராது!
அதெல்லாம் சரி, சுமலினிக்காக ஏன் நிர்மலாவின் அண்ணன் கொலை செய்யும் அளவுக்குப்போகணும்.?”
அட என்ன அம்மா! நீ கூட கவனிக்கலையா?
”என்ன டாட்!”
”அந்த ஃபோட்டொவை நீ என்னை விட அதிக நேரம் உத்துப்பாத்தியே! இரண்டு சகோதரிகளுக்குள்ள சாயலைப்பாக்கலியா?
”சகோதரி?”
”யோசி அம்மா! நீ என் மகள்!”
”லாயர் கணேஷின் முன்னாள் காதலி” – நீரஜா சொல்லவில்லை!
”எஸ்! எஸ்! போனி டெயில் நிர்மலா! க்ராப்புத்தலை சுமலினி ! நான் எப்படி மிஸ் பண்ணினேன்!”
”சின்னப்பெண் தானே நீ, என்னைப்போல நாலு டீகேட் கொலைகாரர்களுடன் பழகவில்லையே!”
”டாட்! நான் ரெண்டு பேருக்கும் உள்ள வித்யாசத்தைத்தான் பார்த்தேன். நிர்மலா எப்படி சாதாரணமாக இருக்கிறாள். சுமலினி முகத்தில் எவ்வளவு செயற்க்கைத்தனம். அலங்காரம் இல்லாம இவ லக்ஷணமாக இருந்தாள். சுமலினிகிட்ட ஒரு க்ளாமர் மட்டுமே தெரிஞ்சுது. சகோதரி என்கிற ஆங்கிள் எனக்குத்தோணவே இல்லை. ஆனால் எனக்கு சுமலினியைப்பிடிக்கலைப்பா!”
”சுமலினி பாவம் நீரு! அவள் சினிமாவுக்குப்போய்விட்டாள் என்பதால் வீட்டில் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். அவளும் ஒரு வீம்பில் போய்விட்டாள். ஒரு அவசியம் வந்தபோது தன் அண்ணனிடம் வந்திருக்கிறாள். அதுதான் சொன்னேனே, குடும்பப்பிணைப்புகள்!”
”உங்களின் ட்ரிக்கர் என்ன டாட்?”
”நிர்மலாவும் அம்மாவும் அவங்க உக்கார்ந்திருந்த இடம் பத்தி முரணா சொன்னது என்னை யோசிக்க வெச்சுது. அப்புறம் செருப்பு க்ளீன் பண்ணாததை அந்த வேலைக்காரி போட்டுக்கொடுத்ததும் தான்!”
”சரி அவினாஷிடம் என்ன சொல்லப்போறோம்?”
சுமலினிக்கும் கொலைக்கும் சம்மந்தமே இல்லை. அந்த கற்பனைப் பிச்சைக்காரனை யார் கண்டுபிடிக்கப்போறா?
”அப்பா! அந்த சுமலினி பழைய ரகசியம்!”
”அது அவினாஷின் கவலை. தனிப்பட்ட சமாச்சாரம் நமக்கென்ன அம்மா?”
ஆனால் நீங்களும் நாடி ஜோசியத்தை நம்ப ஆரமிச்சுட்டீங்களே அப்பா!
நாடி ஜோசியமா! அதெல்லாம் சுத்தப்பேத்தல்மா!
”அப்போ அந்த வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோஸ்யன் சொன்ன ஏஸ் ஆஃப் ஸ்பேட்?”
”ஷியர் கோஇன்ஸிடென்ஸ்!”
”டாட்!”
”ஏஸ் ஆஃப் ஸ்பேட் சீட்டு அட்டைப்பெட்டிக்குள்ளயே இருந்தது. அது இல்லாமல் எப்படி கழுதை ஆட்டம் ஆடமுடியும்! அதிலேயே எனக்கு மூளைக்குள் அந்த க்ளிக்கின் ஆரம்பம் கேட்டுவிட்டது!”
குறும்பாகச் சிரித்தார்.
”யூ ஆர் ரியல்லி ப்ரில்லியண்ட் டாட்!”
கார் வேகமாக மேக மூட்டம் படிந்த அந்த மலைச்சாலையில் ஒட, அப்பாவை நினைத்துப்பெருமையோடு மலர்ந்த முகத்துடனிருந்த நீரஜாவை ராமனாதன் கவலையுடன் பார்த்தார்.
அவினாஷை மாப்பிள்ளையாக்கிக்கொள்ளலாம் என்கிற தன் மூளையின் திட்டத்தை காலி பண்ணிய அந்தக்கடவுள்களில் ஒருவர் சாலையின் ஓர சின்ன கோவிலொன்றில் தன் பக்தனின் சூடத்தை அசையாமல் ஏற்றுக்கொண்டிருந்த காட்சி ராமனாதனின் கண்களில் ஒரு கணம் பட்டது.
லேசாக தூர ஆரம்பித்தது.
No comments:
Post a Comment