இன்றைய கதையரங்கம் (3, ஜனவரி 2019)
எதேச்சையாக போன வாரம் வரதராஜனைப் பார்த்தேன். அடையார் ஆனந்த பவனில் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.
”உங்க ஃப்ரெண்ட்ன்னு சொல்றீங்க. நா சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.”
வரது சொல்லிக்கொண்டே போனார்.
வரது?
ஆம், தமிழ்நாடு இது வரைக்கும் இரண்டே தடவைதான் ரஞ்சி சாம்பியன்ஷிப் ஜெயித்திருக்கிறது. ஒன்று பாலு அழகண்ணன் தலைமையில். இன்னொன்று எஸ் வரதராஜன் காப்டனாக இருந்தபோது. அந்த வரதராஜன் தான் நான் மேலே சொன்ன என் நண்பர்.
“என்னது வரதராஜனா? இல்லியே அந்த வின்னிங் டீம் காப்டன்......ஆச்சே?” என்றெல்லாம் கேட்காமல் இருக்கும்படி பிரயாசையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
“டேய்! மாட்ச் போட்டுக்கலாமான்னு பைதா கேட்டு வரச்சொன்னான்!”
கோண்டு வந்து என்னவோ அந்நியன் போலக் கேட்டான்.
இந்த கோண்டு இருக்கிறானே, இவன் எட்டாம் க்ளாஸ் வரை எங்களோடு அதே ஸ்கூலில்தான் படித்தான். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எங்கள் ஸ்கூலில் படித்தால் ப்ரயோசனப்படாது என்று அவன் அம்மா……………
ஆம் அம்மாதான், அவனின் அப்பா, சரியான பிள்ளைப்பூச்சி, நாங்கள் கோண்டுக்குத்தெரியாமல் அவருக்கு ஓமப்பொடி என்று பெயர் வைத்து அழைப்போம்,
……..தீர்மானம் பண்ணி அவனை ஐஐடிக்குள் இருக்கும் சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்துவிட்டாள். கோண்டுவும் அந்த புது அந்தஸ்திற்க்கு ஏற்ப எங்களையெல்லாம் தீண்டத்தகாதவர்போல பார்ப்பான். அவனுக்குமே இன்னும் சரியாக வந்திராத இங்க்லீஷில் “வாட் வாட்” டா, டெல் ப்ராபர் நோ” என்று பேசி எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பான்.
எங்களுடைய தெரு கிரிக்கெட் பற்றி நெறய எழுதியாகி விட்டது.
கண்ணம்மா பால்காரியின் வீட்டுக்குப்பின் பக்கம் மொட்டை மைதானத்தில்தான் நடைபெறும். கஸ்தூரிபாய் நகர், நேரு நகர், பக்தவத்சலம் நகர் வட்டாரத்தில் இரண்டே டீம்தான் இங்கு விளையாடும் அந்தஸ்து பெற்றவை. ஒன்று எங்களுடையது, இன்னொன்று ப்ரேம் பைதா காப்டனாக இருக்கும் பக்தவத்சலம் நகர் டீம். அவர்கள் டீம் செண்ட்ரல் ஸ்கூல் மற்றும் பெசண்ட் ஸ்கூலில் படிக்கும் ஆங்கிலத்திலேயெ பேசும் பிள்ளைகளைக்கொண்ட டீம். எங்க டீம் ராணி மெய்யம்மை ஸ்கூலின் திராவிடரும் ஆரியரும் கலந்த மறத்தமிழர் டீம்.
இந்த மேற்சொன்ன ப்ரேம் பைதா, நல்ல ஆஜானுபாகுவாக இருப்பான். கன்னடம் பேசும் வீட்டிலிருந்து வருவான். பெசண்ட் ஸ்கூலுக்கு வெள்ளை பைஜாமா ஜிப்பாவில் போகும்போது ஏதோ சோன் பாப்டி விற்கும் ஆள் போல வயசானவனாகத் தெரிவான். ஆனால் படித்தது என்னமோ பத்தோ பதினொன்றோதான். பிரமாதமாக ஆடுவான். அப்பவே லெக் க்ளான்ஸெல்லாம் அடிப்பான். மரத்தை ரம்பம் கொண்டு சீவுகிறார்போல பந்தைச் சீய்த்துவிட்டு, “ இது லேட் கட்” என்று புருவத்தை தூக்கிக்காட்டி சொல்லுவான்.
சில சமயம் நாங்கள் ரோடில் சுற்றி விட்டு வரும்போது…………,
இதை அம்மா ,”என்ன இன்னிக்கு ரோடு பொறுக்கியாச்சா? போடா! பாழாப்பொற வெய்யில் எல்லாத்தையும் தலைல போட்டுண்டு வர்ரான் பாரு……….வனாட்டமா” என்று வெய்வாள்,
……..எதிரே சைக்கிளில் பைதா தாண்டிப்போனால், அவன் சற்று தூரம் போனவுடன், “ப்ரேம் பைதா, எனக்கு அரைக்கிலோ மைதா” என்று சன்னக்குரலில் கத்துவதற்கு எங்கள் குழுவில் வீரம் என்று பெயர்.
ஒரு முறை அவன் காதில் விழுந்து, அவன் சைக்கிளை நாங்கள் எதிரே பார்க்காத வேகத்தில் திருப்பி வந்து, அவன் கையில் ஆம்ப்ட்ட சம்பத்தை பின்னி எடுத்துவிட, பின்னாளில் உடல் ஆரோக்கியம் கருதி இந்த சாகசங்களைக்குறைத்துக்கொண்டு விட்டோம்.
கோண்டு கிரிக்கெட் மாட்ச்சிற்கு விட்ட சவாலை எப்படி எதிர்கொள்ளூவது என்ற ஆலோசனையில் ஹரீஷ் நம்ம டீமில் ஆடினால் ஒத்துக்கொள்ளலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். இருப்பதிலேயே சின்னவனான பாபுவை அனுப்பி ஹரீஷ் எங்க டீமுல விளையாடுவானா என்று கேட்டறிந்து ரகசியமாக சொல்லப்பணித்தபின், கோண்டுவிடம் இர்றா!, ஒரு பத்து நிமிஷத்துல சொல்றோம்” என்று நேரம் கடத்தினோம்.
“டெல் க்விக்! வாட் ஒக்கேவா?”
கோண்டு மறுபடியும் ஷேக்ஸ்பியர் போல கேட்க, அனந்தராமன் கடுப்பானான்.
“என்னடா வாட் வாட்டுன்னு இங்கீஷை வாட்டற!, இரு”
ஹரீஷ் பச்சை சிக்னல் கொடுக்க, வரும் சனிக்கிழமை 3 மணிக்கு மாட்ச்சுக்கு ஒப்புக்கொண்டோம்.
“த பாரு 25 ஓவர். சிங்கிள் பாட்ஸ்மன் உண்டு, வின் அடிச்சாலும் மொத்த ஓவரையும் போடணும்! நீங்க பாட்டு, ஸ்டம்பு, நாங்க பால் , விக்கெட் கீப்பிங் க்ளௌஸ் கொண்டாந்துருவோம்!”
விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த ஹரீஷ் பற்றி சொல்லவேண்டும்.
எங்கள் தெருவிலேயெ கடைசியில் அவன் வீடு, குடும்பமே கிரிக்கெட் ஆர்வலர்கள். அவன் அப்பா அப்பவே தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷனில் மெம்பர். எல்லா டெஸ்ட் மாட்ச்சுக்கும் போவான். அபாரமாக விளையாடுவான். டான் பாஸ்கோவில் கிரிக்கெட்டுக்காவே அவனைச்சேர்த்திருந்தார்கள். அவன் பின்னாளில் ரஞ்சியெல்லாம் ஆடியிருக்கிறான் என்பதால் இங்கே அவன் பெயரை மாற்றியிருக்கிறேன்.
ஹரீஷ் வந்துவிட்டான் என்றால் கவலை இல்லை. ஒப்பனிங் போக மாட்டான். ஒன் டௌனில் போய் விளாசுவான்.
“நானே பாத்தேண்டா! எங்க ஸ்கூலுக்கும் டான் பாஸ்கோவுக்கும் மாட்ச். இவன் எறங்கினவுடனே அடிச்சான் பாரு… ஒரே ஆளா அடிச்சு ஜெய்ச்சாண்டா!”
சேத்துப்பட்டு ஸ்கூலில் படிக்கும் அனந்தராமன் ஸ்லாகிப்பான்.
சரித்திரப்ரசித்தி பெற்ற அந்த சனிக்கிழமை மாட்ச்சும் வந்தது.
டாஸ் போடும் வரை ஹரிஷைக்கண்ணிலேயே காணும். எங்களுக்கு ஒரே பதைபதைப்பு,
“ பாபு! என்னடா வர்ரேன்னானா? ஒழுங்க கேட்டியா?”
நிச்சயம் வரேன்னாண்டா!
“ என்னடா! டாஸுக்கு வரீங்களா?”
சின்னம்பி என்னும் முரளி நா போய்ப்போடறேண்டா என்று கிளம்பினான்.
” டேய்! ஜெயிச்சா பாட்டிங் எடு. டாஸ் தோத்துட்டாக்க்கூட நமக்கு பாட்டிங் தரச்சொல்லிக்கேளு! அங்க பார்! ஒரே மேகமூட்டமா இருக்கு! மழை வரதுக்குள்ள செமத்தியா காஜி அடிச்சிட்டு ஓடிடலாம்!”
மழை வருவதில் பி ஹெச் டி வாங்கினவன் மாதிரி சம்பத் ஐடியா கொடுத்தான்.
நல்ல வேளையாக அப்போது ஸ்டைலாக சைக்கிளில் வந்து இறங்கினான் ஹரீஷ். ரப்பார் செருப்பு, நாய் காது போல வார் அறுந்து தொங்கும் லெதர் செருப்பு என்று நாங்களெல்லாம் இருக்க, அவன் வெள்ளை வெளேரென்று கான்வாஸ் ஷூவுடன் வந்தான். அவனைப்பார்த்த்தும் எதிரணியில் சலசலப்பு. கோண்டு ஆகாகான் போல எங்களிடம் வந்தான்.
“ லீக் ஆடறவங்கள்லாம் இங்க வெளையாடக்கூடாது!”
“ எப்ப அந்த ரூல் வெச்சாங்க! போடா! டீம் ஷீட்ல ஹரிஷ் பேரு இருக்கு பாரு”
“எங்களுக்கு முன்னமே தெரிஞ்சால் நாங்களும் எஸ்கேஆரை எங்க டீமுல கொண்டாந்திருப்போம்.”
மேற்சொன்ன ஏஸ்கே ஆர் என்பவர் அப்போதே 30 வயதுக்கு மேற்பட்டவர். ஏதோ லொடக்காணி நாலாவது டிவிஷன் டீமில் விளையாடிக் கொண்டிருந்தார். ஓரிரு முறை எங்களின் ஞாயிற்றுக்கிழமை சுற்றலில் காந்தி நகர் கிரௌண்டில் இவர் ஆடும் மாட்சைப் பார்த்திருக்கிறோம்.
ஒரு தரம் இவர் ஒப்பனிங் போய் மூன்றாம் பாலிலேயெ ஸ்டம்புகள் தகர்க்கப்பாட்டு உள்ளே வந்துவிட்டார். வரும்போது அடுத்து விளையாடப் போய்க்கொண்டிருக்கும் ஆசாமியிடம், “போலிங்குல ஒண்ணுமே இல்லம்மா! நீ சும்மா அடிச்சு விளையாடு” என்றதற்கு, இவர் டீம் காப்டன் சொன்ன வார்த்தைகளை மரியாதைப்பட்டவர்கள் படிப்பதால் இங்கே எழுத முடியாது!
”அடப்போடா கோண்டு!” என்று அவனை விரட்டி விட, பேச்சு தோல்வியில் முடிய கோண்டு ஜகா வங்கினான்.
”என்ன பெரிய ஹரீஷு! நா அவன அவுட் ஆக்கறேண்டா!”
ஏதோ ஒரு சில்லறைப்பையன் வீரமாகப்பேசினது கேட்டது.
“ஹரீஷ்! டாஸுல ஜெயிச்சா பாட்டீங் தானே?”
”வேணாண்டா! போலிங் எடு! பத்து பன்னண்டு ஓவர்ல ஆல் அவுட்டாக்கிட்டு அடிச்சு ஜெயிச்சுட்டு போயிண்டே இருக்கலாம்! எனக்கு இன்னிக்கு ஈவினிங் ஷோ ஈராஸ் போணும்!”
டாஸில் தோற்று ப்ரேம் பைதா பாட்டிங் எடுத்துவிட்டான்.
“ நானே ஒபனிங் போலிங் போடறேன்!”
ஹரீஷின் நாலு ஓவரிலும் காட்டடி அடித்தார்கள். ப்ரேம் பைதா மட்டுமே அம்பது அடித்துவிட்டான். நானே என்னுடைய லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னில் மூணு விக்கெட் எடுக்க, ஒரு வழியாக 25 ஓவரில் 96 ரன் எடுத்து எங்களிடம் பாட்டிங் கொடுத்தார்கள்.
“எனக்கு ஹாம்ஸ்ட்ரிங் அடிடா! அதான் கையை சரியா ரோல் பண்ண முடியல. ஒண்ணும் கவலைப்படாத! பாட்டிங்குல பாத்துக்கலாம்!”
இரண்டாவது ஓவரிலேயெ சின்னம்பி முரளி லொத்தையாக காட்ச் கொடுத்துவிட்டு வந்துவிட ஹரீஷ் இறங்கினான்.
“ நமக்கெல்லாம் பாட்டிங்கே வராதுடா. ஹரீஷே அடிச்சு தீத்துப்பிடுவான்!”
அவர்களும் ஹரீஷுக்கு மரியாதையாய் எல்லா ஃபீல்டர்களையும் பரத்தி நிற்க வைத்து முதல் பால் ப்ரேம் பைதா வந்து போட்டான். அது பிட்சின் நடுவில் பட்டு ஜிவ்வென்று எழும்பி ஆஃப் சைடில் எகிறியதில் இரண்டு பை ரன் கிடைத்தது. அடுத்த பால் எங்கே பிட்ச்ச் ஆச்சு, எப்படி எழும்பியது என்றெல்லாம் பார்ப்பதற்குள் ஹரீஷின் இரண்டு ஸ்டம்ப்புகளும் சிதறின!
எங்கள் பக்கம் மயான அமைதி.
”பிட்ச் தண்டம்டா! இங்கல்லாம் வெளையாட என்ன கூப்பிடாதீங்க இனிமே! மத்தபடி போலிங்கில ஒண்ணும் இல்லை. ஈஸியா அடிச்சு ஜெயிங்கடா! நான் வரேன்!”
சைக்கிளீல் ஏறி வந்த வழியே போய்விட்டான்.
அவர்கள் குதித்துக்கூத்தாடிக்கொண்டெ இன்னும் உற்சாகத்துடன் போலிங் போட்டனர். முப்பத்தேழு ரன்னில் ஆல் அவுட் ஆகி, அவர்கள் ஸ்கோர் பேப்பரில் கையெழுத்துப்போட்டு தலை குனிய வீடு திரும்பினோம்.
இதோ இன்றுவரை தமிழனின் புறமுதுக்குக்கு ஈடான அந்த அவமானம் என்னில் களையப்படாமலே இருந்தது.
காபிஐ உறிஞ்சினபடியே வரது சொன்னார்.
“அடப்பாவி! அவன் அப்பவே இந்த மாதிரிதானா!” நீ என்ன ஆட்டம் ஆடினாலும் என்னொட லெவென்ல உன்ன தொட மாட்டேன்னு ஹரீஷ் கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேனே! அதனாலயே எங்களால ரஞ்சி சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடிஞ்சது அந்த வருஷம்!”
வரதராஜன் சொன்ன அன்றுதான் அந்தக்ஷணத்தில்தான் பல வருடங்களாக என் மனதில் உரமேறிப்போயிருந்த ஒரு பழி, செமத்தியாக வாங்கப்பட்டதை உணர்ந்தேன்.
No comments:
Post a Comment