Sunday, 3 March 2019

கதையரங்கம் (4, மார்ச், 2019)....
வேறொரு இடமானாலும்……
”க்ளிக்” என்று ஆட்டோமாட்டிக் கதவு ஒரு ஏப்பத்துடன் திறந்துகொண்டது.
“மணி என்ன?”
தூக்கக்கலக்கத்துடன் கேட்டாள் வேதம்.
“தூங்கு தூங்கு! மணி ரெண்டாய்டுத்து. அநிருத் வந்துட்டான்!”
“அப்பாடா! வந்துட்டானா? சரி, நா போய் ஏதானும் வேணுமான்னு கேட்கறேன்!”
“பேசாம இரு வேதம்! இது நம்ம மெட்ராஸ் வீடில்ல! சௌதாமினி பார்த்துப்போ!”
“என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ லேட்டுன்னு கேக்க வாண்டாமா? குழந்தைக்கு என்ன பிராப்ளமோ?”
“அதெல்லாம் காலம்பர கேட்டுக்கலாம்! இப்ப நீ தூங்கு!”
வெளியில் ஹாலில் மெல்லிய பேச்சுக்குரல் கேட்டது. சில கண்ணாடி பாத்திரங்கள் ஓசைக்குப்பிறகு லைட் அணைக்கப்பட்டு பின் ஏசியின் ஹம் மட்டும் ஒலிக்க வைகுண்டம் க்வில்ட்டை இழுத்துப்போர்த்திக் கொண்டு தூங்கிப்போனார்.
காலை வைகுண்டம் எழுந்தபோது அநிருத் டைனிங் டேபிளில் ஹாட் சாக்லேட் குடித்துக் கொண்டிருந்தான். சௌதாமினி உள்ளே ஏதோ கொடகொடவென்று உளப்பிக்கொண்டிருந்தாள். வேதம் இன்னும் பெட்ரூமிலிருந்து வெளியே வரவில்லை.
“அம்மா இன்னம் எழுந்திருக்கலையா டாட்?”
“அப்பவே எழுந்தாச்சு! சௌ கிச்சனை விட்டு வெளியே போறதுக்காக காத்திண்டு இருக்கா!”
அநிருத் சிரிக்க, சௌதாமினி குரல் வந்தது.
“இன்னும் ரெண்டே நிமிஷம். எக் பீட்டிங்கை முடிச்சு பாத்திரத்தை அலம்பிவெச்சுட்டு நா ஓடறேன். அம்மா கேன் தென் கம்!”
“என்னம்மா இன்னும் அதெல்லாம் பார்த்துண்டு இருக்கே? த்ருவுக்கு முட்டை இல்லாம ஒரு நா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடமுடியாது! ஸ்ரீரங்கம் வைகுண்டம் பேரன்தான்! என்ன பண்றது, இது சிக்காகொ ஆச்சே!”
”விடு விடு அநிருத்! அவள இதுக்கப்றம் மாத்த டிரை பண்ணாதே!”
சௌதாமினி த்ருவை அழைத்துக்கொண்டு, அநிருத் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு, “ஐம் ஆஃப் மா! யூ கேன் நௌ எஞ்சாய்” என்று கிறீசெனக்கத்தின கையோடு வைகுண்டத்தைப்பார்த்து ஒரு கண் அடித்துவிட்டு, ஆஸ்டின் மினி கூப்பரில் ஒரு கை ஸ்டியரிங்கிலும் இன்னொரு கையில் முட்டை சாண்ட்விச்சுடனும் அநாயாசமாக காரேஜை விட்டு வெளியேறின பின்னர்தான் வேதம் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“ஆமா நேத்து என்ன அவ்ளோ லேட்டா வந்தே? ஏதாவது காம்ப்ளெக்ஸ் கேசா? சொல்லேன்!”
அநிருத் சொல்லி முடித்தவுடன் வைகுண்டம் பரபரப்பானார்.
“கென் ஐ கம் டு யுவர் க்ளினிக் டு டே?”
“நோ ஹோப்! சொன்னேனே பதினாலு வாரம் ப்ரிமேச்சூர்! அப்பா! ஃபோர்டீன் வீக்ஸ்! கேன் யூ பிலீவ் இட்!”
“எவ்ளோ வெயிட்?”
”ட்வின்ஸ்ப்பா! ஒவ்வொரு குழந்தையும் வெறும் 900 கிராம்தான்!”
“இல்லை அநிருத்! நா வரேன்!”
அரைமணியில் வேதம் கொடுத்த உப்புமாவை அள்ளிப்போட்டுக்கொண்டு இருவரும் ஹ்யூரான் ஸ்ட்ரீட்டில் நார்த் வெஸ்டெர்ன் மெமோரியல் ஹாஸ்பிடலுக்கு விரைந்தார்கள்.
“ப்யூலா! அவினாஷ வரச்சொன்னேனே? என்ன பண்றான்?”
“சேதுராமன் சாரப்பார்த்துண்டிருக்கார் புரஃபசர்!
“ஓ சேதுராமனா? அரை மணி விடாம கேள்வி கேட்பாரே! பரவால்ல. அவரைப்பொறுமையா அனுப்பிட்டு வந்து பக்கச்சொல்லு! எனி மெயில்?”
“எஸ் புரொஃபசர்! டாக்டர் அநிருத்கிட்டேர்ந்து!”
“சில்லி !நாட் பர்சனல் ம்ெயில் ப்யூலா! அஃபிஷியல்?”
“இல்ல! ஆனா ஃபோட்டோஅனுப்பியிருக்கார்!”
“ஃபோட்டொவா?”
”ஆமாம் புரஃபசர்! நீங்களும் மிட்செல், மாஷாவும் இருக்கற ஃபோட்டொ!”
”ஓ அதுவா? எங்க அனுப்பு! நானும் பாக்கறேன்!”
”அனுப்பியாச்சு!”
டாக்டரின் பெரிய மானிட்டரில் ஓட்டைப்பல்லுடன் மாஷா அவரின் மடியில். அந்தப்பக்கம் மிட்செல் முகத்தில் சிரிப்புடன் ஒரு கையால் மாஷாவின் விரல்களைப்பிடித்தபடி முகத்தை நிமிர்த்தி டாக்டரைப்பெருமையோடு பார்த்தபடி.
டாக்டருக்கு ஒரு கணம் முகத்தில் ஒரு குதூகலம் உண்டாகி உடனே சீரியஸானதை ப்யூலா கவனிக்கத்தவறவில்லை.
“ப்யூலா! என்ன பராக்கு பாத்துண்டு இருக்கே? திஸ் ஈஸ் ட்யூட்டி டைம்! ப்ரோண்டோ! கெட் கோயிங்! என்னோட பையிலேர்ந்து கொரோனரி கதீடரைசேஷன் ரிப்போர்ட் ஃபைலை எடு! எனக்கு பதினோரு மணிக்கு மீட்டிங் இருக்கு!”
அவர் கிளம்பிப்போன பின்னும் மானிட்டரில் அந்த ஃபோட்டோ அப்படியே இருந்தது.
அவினாஷ் வந்தபோது புரொஃபசர் சீட்டில் இல்லை. பரபரப்பானான்.
”ப்யூலா! கத்தினாரா? அப்பவே வரச்சொன்னா்்?”
“இல்லை அவினாஷ்! அவர்ட்ட சொல்லிட்டேன் நீ சேதுராமனைப் பார்த்துண்டிருக்கேன்னு!”
“அப்பாடா?”
நிர்மலாவும் உள்ளே வந்தாள்.
“வாம்மா மின்னல்! எப்ப வரச்சொன்னா எப்ப வரே? இருக்கு இன்னிக்கு உனக்கு!”
“அய்யயோ! ப்யூலா! அந்த 76 பெட் நேத்து ராத்திரி ஒரே ரகளையாம்! வயத்த வலி. ஜி ஐ பண்ணினேன். ட்யுடெனம் வரைக்கும் பார்த்தாச்சு. மெஸ்! என்னடான்னு கேட்டா நேத்து வீட்ல விசேஷம்னு கோளா உருண்டை சாப்ட்டானாம்!”
“பெரியவருக்குத்தெரிஞ்சா சாவுடான்னு விட்டுட்டு போயிடுவாரு!”
ப்யூலா சிரித்தாள். அவினாஷ் மானிட்டரைப் பார்த்தான்.
“ஹை! என்ன ஃபோட்டோ இது?”
“நம்ம புரஃபசர் வித் மிட்செல் அண்ட் மாஷா?”
”ஓ இதானா அந்த ரெண்டு குட்டிங்களும்! நாலு வருஷம் ஆச்சுல்ல?”
”எல்லா கேஸையும் விலாவரியா நம்ம கிட்ட டிஸ்கஸ் பண்ணுவார். ஆனா இந்தக்கெஸ் பத்தி மட்டும் அதிகமா பேசறதே இல்ல!”
”கரெக்ட் அவினாஷ்! புரொஃபசர் இந்தகேஸை அதிகமா எங்கேயும் சொல்ல மாட்டார். அவருக்கென்னவோ இது டாக்டரோட திறமைனால நடக்கலங்கறதுதான் பிலீஃப்!”
“புரொஃபசர் ஒரு சம்பிரதாயமான டாக்டர்!”
“இருக்கலாம். ஆனால் அவர் மெடிசனையும் பக்தியையும் குழப்பிக்கிட்டதே கிடையாது!”
”அவினாஷ்! உனக்கு சாய் சுதாவோட கேஸ் ஞாபகம் இருக்கா?”
”2004! ஹெப்டோ செல்லூலர் கார்சினோமா! நா அப்ப இண்டர்ன்!”
“நம்ம புரொஃபசர் AFP டெஸ்ட் பண்ணனும்னு சொன்ன பிறகுதானே டையக்னோஸெ பண்ண முடிஞ்சது!”
”நாம டிடெக்ட் பண்னபோதே ஸ்டேஜ் ஃபோர்! இட் ஹேட் ஆல்ரெடி மெடஸைஸ்ட்!”
”புரொஃபசரே பேல்லியேடிவ் ட்ரீட்மெண்ட்டுன்னுதானே அவளை வீட்டுக்கு அனுப்பினார்! அவருக்கே ஹோப் இல்லை!”
“ஆனா என்ன ஆச்சு? இதோ இன்னிக்கும் சாய்சுதா அமர்க்களமா கச்சேரி பண்ணிண்டு இருக்கா!”
“சாய் பாபாவோட அருள்னு அவளும் அவ அம்மாவும் இங்க வந்து புரொஃபசர்ட்டயே சொன்னாளே! அவளுக்கு க்யூர் ஆயிருந்துதே! அதை நாம யாருமே மறுக்க முடியாதுல்ல?”
”அவினாஷ்! இன்னி வரைக்கும் புரொஃபசர் ஒத்துக்கலை. நம்ம க்ளினிக்கல் டெஸ்டுலதான் ஏதோ தப்பாயிருக்கு. எங்க பிராக்னோஸிஸ் ஈஸ் அட் ஃபால்ட்ன்னாரே! மத்தபடி சாய் பாபாவினால குணமாச்சுன்னு நீ நம்பு! உனக்கு நல்லது! ஆனா ஐயாம் ய டாக்டர். ஐ வில் ரிமெயின் ய டாக்டர்ன்னு சொல்லி அனுப்பினார்!”
”அப்ப நம்ம புரொஃபசருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னா சொல்றே?”
“ அதெப்படி சொல்லமுடியும்? “பட் ஹி ஈஸ் ய ஸ்டான்ச் ஸ்ரீரங்கம் டிவோடீ டூ!”
“மிட்செல் கேஸும் sஆய்சுதா மாதிரியா நிர்மலா?”
“எனக்கும் முழுசா தெரியாது. ஒரு நாள் நா இங்க வெயிட் பண்ணபோது ஃபோனில அவர் சன் அநிருத்தோட பேசினதைக்கேட்டதுதான். பிட்ஸ் அண்ட் பீஸெஸைக்கொலாஜ் பண்ணினேன்!”
“என்னதான் ஆச்சு?”
நார்த்வெஸ்டெர்ன் மெமோரியல் ஹாஸ்பிடல் எப்போதும்போல அதிகாலயிலேயே வலி, ரத்தம், சாவு, மருந்து, விசும்பல் என அதகளப்பட்டுக்கொண்டிருக்க, காலிருந்து இறங்கின வைகுண்டம் அநிருத்துடன் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தார்.
எமர்ஜென்ஸி வார்டில் வில்லியமும் பார்பராவும் சாம்பல் முகமாய் நின்று கொண்டிருந்தனர். அருகில் இரட்டைக்குழந்தைகள் க்ளினிகல் பாஸ்ஸினெட்டில். ஒன்று கண் மூடிப்படுத்திருக்க இன்னொன்று இண்ட்யூபேட்டரில் போட்டிருந்தார்கள்.
இருபத்தி ஆறாவது வாரத்திலேயே வலியெடுத்து ஹாஸ்பிட்டலுக்கு வந்தபோது பார்பராவுக்கு அப்டமி்னல் க்ராம்ப்ஸ் மற்றும் டயோரியா. டெஸ்டின் போது மென்ஸ்ட்ருவல் டிஸ்சார்ஜ். உடனே டெலிவரிக்கு ரெடியாகிவிட்டாள் என்று ஸி சக்‌ஷன் செய்து வெளியே எடுத்துவிட்டார்கள். ஒரு பெண், ஒரு ஆண், இரண்டு நிமிட வித்தியாசத்தில் வெளி வந்தன.
வைகுண்டம் ஆண் குழந்தையை உன்னிப்பாகக் கவனித்தார்.
“அநி! காஸ்ப் பண்றானா?”
“இல்ல டாட்! இப்ப இருவது நிமிஷம் டிரய் பண்ணியிருக்காங்க! நோ யூஸ்! எனி டைம் ப்ரீத்திங் வில் ஸ்டாப்!”
பார்பரா குபுக்கென்று அழுதாள். வில்லியம் அவளைத்தாங்கிப் பிடித்துக் கொண்டான். இருவருக்குமான முதல் பிரசவம். நிரம்ப எதிர்பார்த்திருக்கிறார்கள்.
வைகுண்டம் விடவில்லை.
“அநி! கேன் டேக் சார்ஜ் நௌ?”
“ டாட்! திஸ் ஈஸ் நாட் இண்டியா!”
வில்லியம் இவரிடம் எதையோ கண்டிருக்க வேண்டும்.
“ப்ளீஸ், ஒய் டோண்ட் யூ லெட் ஹிம்?”
வைகுண்டத்துக்கு அது போதுமானதாய் இருந்தது. பார்பராவிடம் பேசினார்.
“உன் மேலாடையை எடுத்துவிடு. குழந்தைக்குப்பக்கத்தில் படுத்துக்கொள். அவனை நைசாக எடுத்து மார்போடு அணைத்துக்கொள். வில்லியம், நீயும் சட்டையைக்கழற்று! அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டு அசையாமல் இரு! அநி! ஏஸியை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு! பி சைலெண்ட் ஆல் ஆஃப் யூ! பார்பரா! மூச்சை இழுத்து விடு. உன் மூச்சுக்காற்று குழந்தையின்மேல் படவேண்டும். வில்லியம் நீயும்தான்! உன் உடம்புச்சூடு பார்பரா மேல் விழ வேண்டும். ஜாக்கிரதையாக குழந்தையை மார்போடு சேர்த்துக்கொள்! தட்ஸ் இட்! தட்ஸ் இட்!”
மீண்டும் வைகுண்டம் சொன்னார்.
“ம்..ம்.. குழந்தையுடன் பேசுங்கள். மெல்லிய குரலில் பேசுங்கள்! அவனுக்குப்பிறந்திருக்கும் அக்காவைப்பற்றிச்சொல்லு்ங்கள். அவன் எப்படி சந்தோஷமாக அவளுடன் விளையாடி வளரப்போகிறான் என்பது பற்றி பேசுங்கள். ம்.. யெஸ் யெஸ்!”
கடந்தது யுகமா இல்லை வினாடியா?
சட்டென்று பார்பரா கிசுகிசுப்பான குரலில் கண்ணில் நீர் வழிய ரகசியமாக வீறிட்டாள்.
”மூச்சு விடுகிறான்! மூச்சு வந்துவிட்டது!”
அதற்குப்பிறகு நிகழ்ந்தவை வெறு்ம் மருத்துவ டெக்னிக்கல் விவரங்கள் மட்டுமே!
போன மாத வெக்கேஷனுக்கு வைகுண்டம் சிக்காகோ போயிருந்தபோது பார்பராவும் வில்லியமும் மிட்செல், மாஷாவை அழைத்துக்கொண்டு வந்து வைகுண்டத்துடன் ஃபோட்டொ எடுத்து…
அதான் உங்களுக்குத்தெரியுமே!
கதவு வெடித்துத்திறந்தது.
“வாட் தெ ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்? என்னுடைய புத்தி பிசகில்லையென்றால் நீங்கள் இருவரும் டாக்டர்கள் இல்லையா?”
“அது வந்து புரொஃபசர்......?”
“இங்க என்ன வெட்டிப்பேச்சு? அவுட்! அவினாஷ்! நா கேட்டது கொண்டு வந்தியா? நிர்மலா! பெட் நம்பர் 76! கோளா உருண்டையா? அவன அப்படியே மூணாவது மாடி ஜன்னல்லேர்ந்து தள்ளிவிடு!” இன்காரிஜிபிள் பேஷண்ட்ஸ்! இன்காரிஜிபிள் டாக்டர்ஸ்!”
அவினாஷும் நிர்மலாவும் சிரித்துக்கொண்டேதான் வெளியே போனார்கள்
பி.கு.
இரட்டையில் ஆண் குழந்தை பிழைத்த விவரங்கள் முழுக்க முழுக்க உண்மையாக நடந்தவை!

No comments:

Post a Comment