Wednesday, 13 March 2019

ஹைமா - நீண்ட கதை
“சரி நன்றி வாசகரே! பொறுமையாக, என்னுடைய நாலு வருடக் கதையைக்கேட்டதற்காக. எனக்கும் லேட்டாகிறது, வீட்டில், மனைவியையும் குழந்தையையும் இன்று மாயாஜாலுக்கு அழைத்துப்போவதாக வாக்களித்து இருக்கிறேன்.
சரி, மீண்டும் சந்திப்போம்”
இப்படி முடியப்போகிறது இந்த கதை.
ஆனால் இந்தக்கடைசி வரிகளில் ஒரு மாற்றம் செய்யவேண்டும். அதை கடைசியில் செய்கிறேன்.
இப்பவே சொல்லிவிடுகிறேன், இது ஒரு குழப்படி கதை. காலப்பரிமாணங்கள், கதை மாந்தர்களின் பேச்சு, தன்மை ஒருமை என்று கொஞ்சம், கொஞ்சம் என்ன, நெறயவே குழப்பும். புரிந்து கொண்டு படிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நான் வேறு அடிக்கடி குறுக்கிடுவேன்.
இது "கதையா, நிஜம் இல்லையா" என்றால், அந்த கலவை என் அந்தரங்க ரகசியம், சொல்வதற்கில்லை. மன்னிக்கவும். இந்த வரிகள் கூட ஒரு ”கொச கொச”ப்பாக இருப்பதை நானே உணருகிறேன்.
என்னுடன் காலேஜில் படித்தவன் சாரங்கன். அந்தக் காலத்திலேயே காரில் காலேஜுக்கு வந்து படித்துக் கொண்டிருந்தான். வசதியான பையன். நன்றாக படிப்பவன், MBA படிக்கணும் என்ற குறிக்கோளுடன் இருந்தான்.
சீக்கிரம் சீனு பற்றி சொல்லிவிட வேண்டும்.
சீனுவும் எங்கள் செட்டுதான், ஆனால் ரொம்ப சாதாரண குடும்பம், அதனால் நிறைய தயக்கம், தன ஏழ்மையை காட்டிக்கொள்ளத வானிட்டி உண்டு. எப்படியோ மானேஜ் பண்ணி எங்களோடு சினிமாவுக்கெல்லாம் வருவான். பல சமயங்களில் சாரங்கன் கொடுப்பான் என்று பேசிக்கொள்வார்கள்.
நான் இப்போது சொல்லப்போகும் சமாசாரம் கிட்டத்தட்ட நாலு வருஷங்களுக்கு முந்தையது. டெல்லி போயிருந்தபோது ஏர்போர்ட்டில் சாரங்கனைப்பார்த்தேன். பெங்களூரில் உள்ள சாராய கம்பெனியில் வைஸ் பிரசிடெண்டாக இருப்பதாக சொன்னான். ப்ரீ பெய்ட் டாக்சி வரும் வரை ஏதோ பேசினோம்.
“சீனு இப்போ எங்கே இருக்கான்?”
“தெரியாதுடா!”
“ ஏண்டா?”
“அவனைப்பார்த்தே பல வருஷம் ஆச்சு, எந்த காண்டாக்டும் இல்லை!”
"என்ன ஆச்சு" ?
"நா MBA முடிச்ச வருஷம் வரை அடிக்கடி லெட்டர் போடுவான், நா லீவுக்கு வரும்போதெல்லாம் வீட்டுக்கு வருவான், என்னோடு நிறைய டைம் செலவழிப்பான். உனக்குதான் தெரியுமே, வசதி இல்லாததால் அவனால் மேலே படிக்க முடியவில்லை. அப்பவே அவனோட அப்பா அவனுக்கு போஸ்டல் ஆடிட்டில் கிளார்க் வேலை வாங்கிக் கொடுத்துட்டார். நா காம்பஸ் இன்டர்வுல செலெக்ட் ஆகி பாம்பே போயிட்டேன்.
”ஆமா நா கூட கேள்விப்பட்டேன்!”
”அடிக்கடி சென்னை வர முடியல. அப்போகூட மாசத்துக்கு ரெண்டு லெட்டராவது எழுதிடுவான். முதல் வருஷம் லீவே கிடைக்கலை. செகண்ட் இயரில் தீபாவளிக்கு ஒரு வாரம் வந்தபோது வீட்டுக்கு வந்திருந்தான். In fact, தீபாவளி அன்னிக்கு சினிமா போறதா இருந்தோம். வந்து பேசிண்டு இருந்தவன் , திடீர்னு கெளம்பிட்டான்.
”ஏன் என்ன ஆச்சு?”
எனக்கும் புரியலைடா! அடுத்த மூணு நாளும் காண்டாக்ட் பண்ணவே இல்லை. அதோட சரிதான். லெட்டர் போட்டேன், பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணினபோதும் அவன் வந்து பேசவே இல்லை. அப்புறம் no contact at all". கஷ்டமா இருந்தது, கோவமாகவும் வந்தது. அதோட நானும் பிசி ஆயிட்டேன், விட்டுப்போச்சுடா ".
”ஸ்ட்ரேஞ்ச்!”
”அதை விடு, அப்புறம் நீ எப்படி இருக்கே? உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு, உன் இன்விடஷன் வந்ததா நினைவே இல்லையே, மறந்துட்டே என்னை!"
“ச்சே ச்சே, ஏதோ பிசினெஸ் அப்படி இப்படின்னு நானும் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலைப்பா".
"என் தங்கை ஹைமா உனக்கு தெரியுமா'
அதற்குப்பின் நானும் சாரங்கனும் அடுத்த பதினைந்து நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தோம், மிக முக்கியமான சில நிகழ்வுகளை சாரங்கன் சொன்னான்.
(அன்பர்களே! இதை எழுதுகிறவன் என்கிற உரிமையில் இங்கே சற்று குறுக்கிட வேண்டும். நாங்கள் பேசியதை இப்பவே சொல்வது சரியா அல்லது பின்னால் சொல்லலாமா என்று யோசித்துப்பார்த்ததில், அப்புறம் சொல்வதே சரி என்று படுகிறது. )
உங்களுக்கு நேரக்குழப்பம் வராமல் இருப்பதற்காக மறுபடியும் நினைவு படுத்துகிறேன், நான் இன்னும் நாலு வருஷத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.)
அடுத்த வாரமே எனக்கு எக்மோரில் ஒரு டின்னர் மீட்டிங் இருந்தது. பார்க்கிங் கிடைக்காமல் போஸ்டல் ஆடிட் ஆபீஸ் வாசலில் கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு நடந்தபோது, சீனுவைப்பார்தேன்.
தலை முடி குறைந்து, தடித்த கண்ணாடியுடன், உடம்பு வற்றிப்போய், ஒருவித ஆயாசத்துடனும் மெதுவாக நடந்தவனை தடுத்து நிறுத்தி " ஹலோ சீனு" என்றபோது, அவன் என்னை யாரென்று சில நிமிஷங்கள் தன ஞாபக சக்தியில் நிரடித்தான் தெரிந்து கொண்டான். என்னுடைய அப்பாயின்ட்மேண்டுக்கு இன்னும் நாற்பது நிமிடம் இருந்ததால், " வா, சீனு, காப்பி சாப்பிடலாம், எவ்வளவு நாள் ஆயிடுத்து" என்று அசோகாவுக்கு இழுத்துசென்றேன்.
சூடான காபி வந்தவுடனே பொறுக்காமல்,
“ஏண்டா, நீ சாரங்கானுடன் டச்சில் இல்லையாமே" என்று கேட்டு விட்டேன்.
" சாரங்கனுக்கு ஹைமா ன்னு ஒரு தங்கை இருக்கா தெரியுமா"?
"சொல்லு" என்றேன் என் ஆவலைக்கட்டுப்படுத்திக் கொண்டு. தெரியும் என்று சொல்லவில்லை!
சீனு கண்ணாடியைக்கழட்டி முகத்தைத்துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"உனக்கு தெரியுமா, நானும் சாரங்கனும் எலிமெண்டரி ஸ்கூலேர்ந்து ஒண்ணா படிச்சோம்.பாதி நாள் அவன் வீட்லதான் இருப்பேன். லீவுன்னா கேக்கவே வேண்டாம். அவனோட அப்பா, அம்மா அவ்ளோ நல்லவங்க. என்னை வித்தியாசமா பார்த்ததே இல்லை. ஒரு சில தீபாவளிக்கு எனக்கும் சாரங்கனுக்கு போலவே டிரெஸ் வாங்கிக்கொடுத்து இருக்காங்க. அவங்க வீட்டு விசேஷம்னா நா எப்போதும் உண்டு.”
”அரசல் புரசலா தெரியுண்டா”
”நாங்க ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போது ஹைமா பிறந்தாள். அந்த தேதி கூட எனக்கு மறக்காது, ஜூலை பதினொண்ணு, ஒரு வெள்ளிக்கிழமை. அன்னிக்கு ஸ்கூலில் ஏதோ மாஜிக் ஷோன்னு வீட்டுக்கு வரும்போது அஞ்சு மணி ஆய்டுத்து. சாரங்கன் வீடு எங்க ஸ்கூலுக்கு பக்கம். நா எப்போதும் நேரே அங்கே போய் விளையாடிட்டு ஆறு மணிக்கு மேலதான் வீட்டுக்கே போவேன். தினோம் டிஃபன் அவன் வீட்டுலதான். அன்னிக்கும் சாரங்கன் வீட்டுக்கு போனபோது, சமையற்கார பாட்டி , " சின்னத்தம்பி, உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு " என்றவுடன், சாரங்கன் பையைத்தூக்கி எறிந்துவிட்டு, "வாடா", என்று அதே தெருவில் இருந்த நர்சிங் ஹோமுக்கு ஓட, நானும் ஓடினேன்.”
”இப்பவும் மறக்ககாதுடா, குட்டி பாப்பாவை சாரங்கன் கையில் கொடுத்து அந்த நர்ஸ் ' மோனே, இனி நீதான் கவனிக்கணும்" என்றாள்.
”ஹைமா வளருவதை ஒவ்வொரு நாளும் பார்த்து வந்திருக்கிறேன், அடுத்த பதினாறு வருஷங்களில். எங்களோடு காரம், டிரம்ப் சீட்டு பரமபதம், லூடோ என்று சேர்ந்தே விளையாடுவாள் , சில சமயம் நாங்கள் அவளோடு பாண்டி கூட விளையாடி இருக்கோம். நான் போகும்போதெல்லாம் 'அண்ணா, சீனு வந்திருக்கான்" என்று குரல் கொடுத்துவிட்டு ஓடுவாள்.
ஹைமாவை சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். அவள் அந்த நீல ஸ்கர்ட்டில் தேவதை மாதிரி இருப்பா. ரகசியமாக பார்த்திருக்கேன். குற்ற உணர்வே தோணவில்லை, அவளை எனக்குதான் கல்யாணம் செய்து தருவாங்கன்னு கன்ஃபர்மா இருந்துட்டேன். அவங்க குடும்ப நெலமை என்ன, நா என்ன நிலமைலேர்ந்து வறேன்னெல்லாம் யோசிக்கவே செய்யாத வயசு. ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் படிச்சு நல்ல வேலையில சேர்ந்தவுடன் என் அப்பா அம்மாவை பெண் கேட்டு அனுப்பிவிடவேண்டும்,, அதுக்கு ஒரு நாள் முன்னால சாரங்கன் கிட்ட சொல்லிடணும் ன்னு நானாவே முடிவு பண்ணிண்டேன்.
எப்போதும் கனவுதான். சில சமயம் சாரங்கன் வீட்டில் நானும் அவனும் பேசிண்டிருக்கும்போது, காபி அல்லது பக்ஷணம் கொண்டு வருவாள். மடத்தனமாக "அவள் என்னை ரகசியப்பார்வை பார்க்கிறாளோ" என்றெல்லாம் தேடியிருக்கிறேன். சில ஞாயிற்றுக்கிழமைகளில் ஹைமாவின் அம்மா, " ஏய், இன்னிக்காவது எண்ணை தேச்சுக்கோடி, ரெண்டு மாசம் ஆறது" என்று கேட்கும்போது, ஹைமாவை தூக்கிக்கட்டிய பாவாடையுடன் யோசிச்சிருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி நானே அவளுக்கு எண்ணை தேய்ச்சு விடணும் ன்னெல்லாம் கற்பனையை ஒடும் எனக்கு.
”தப்புதாண்டா! என்ன பண்றது? அப்படி நெனப்பு”
”புரியரது. சொல்லு?”
”சில சமயங்களில் நா அவங்க வீட்டுக்கு போகும்போது, சாரங்கன், அம்மா, ஹைமா வாசல்ல உக்கார்ந்து பேசிண்டிருப்பாங்க. ஒரு நா சாரங்கன் ஏதோ சொன்னதுக்கு ஹைமா கல கல வெனச்சிரிச்ச அழகில மயங்கி அந்த காட்சியை அப்படியே freeze செய்து மனசுல பொத்தி வெச்சுருக்கேன். கேட்டா அப்படியெ டிஸ்க்ரைப் பண்ணமுடியுண்டா!
ஒரு தரம் ஸ்கூல் கல்சுரல்ஸில அவ ஆடறான்னு சாரங்கனுடன் நானும் போய் பாத்தேன். அன்னி முழுக்க நான் நானாகவே இல்லை. "இப்படி ஒரு லக்ஷணமா, இப்படி ஒரு பதவிசா" பிரமிப்பிலேயே பல நாள் கிடந்தேன்.
"........I AGREE, IT WAS FOOLISH ON MY PART.." ஆனாலும் காதலோ இல்ல வேற ஏதோ, என்னோட கண்ணும் மனசும் ஒரே ட்ராக்கில் போய்ண்டிருந்தது.”
சிறிது நேரம் கண் கொட்டாமல் காபி தம்ளரையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, "அது ஒரு மறக்க முடியாத தீபாவளி டா. முட்டாளாக இருந்த நான் அன்னிக்கு முழு முட்டாளா போனேன்."
"சொல்லு சீனு "
கார்த்தால எழுந்து குளிச்சு ஸ்வீட்டெல்லாம் சாப்பிட்டு சாரங்கன் வீட்டுக்கு கெளம்பினேன்.
"இன்னிக்கு சாரங்க வீட்டுல லஞ்ச்ம்மா"
ஏண்டா, தீபாவளியும அதுவுமா, நம்ம வீட்டுல சாப்பிடேண்டா?
இல்லைம்மா, சாரங்கன் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறான். ஆசையா கூப்பிட்டான்.
சரி, எப்போ வருவே?
லேட்டாகும்மா, சினிமாக்கு வேற போறோம்
ரொம்ப லேட்டாக்காதே?
சரி, வரேம்மா
சீனு மெதுவாக நடந்து பஸ் ஸ்டாப் வந்தான் ( நடை மாறுவதை கவனிக்கவும், சில உணர்வுகளை வெளிப்படுத்த சொல்ப நிமிடங்கள் கதை சொல்லியாக மாறவேண்டியதிருக்கிறது, ப்ளீஸ் !).
ரோட்டில் அதிக நடமாட்டம் இல்லை. ஆங்காங்கே சில சிறுவர்கள் விடிந்த பின்னும் மத்தாப்பு கொளுத்திக்கொண்டும், வெடி வேடித்துக்கொண்டும் இருக்க, எப்போதாவது ஒரு பஸ் கடந்தது. ரெண்டு ஸ்டாப்தான் என்றாலும் இன்று நடக்க விரும்பவில்லை. பஸ் வந்துவிட்டால் சட்டென்று போய் இறங்கி விடலாம். ”ஹைமா இன்று என்ன டிரெஸ்” என்று யோசித்தான். சாரங்கன் ஊரில் இல்லாததால் அவன் வீட்டிற்கும் போகவில்லை.
ஹைமாவைப்பார்த்து ஒன்றிரண்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. ஒரு முறை எக்மோரில் பிரின்ஸ் பிளாசா வாசலில் தோழிகளுடன் எதிர்ப்பட்டபோதும் கண்களில் ஒரு சின்ன சிரிப்புடன் நகர்ந்து விட்டது இவனுக்கு சந்தோஷமாகவும் துக்கமாகவும் இருந்தது. தைரியமாகப்போய் "வாயேன், ஒரு காபி சாப்பிடலாம்" என்று கூப்பிட தனக்கு தைரியம் இல்லாது போய்விட்டது வேதனையாக இருந்தது. கூப்பிட்டிருந்தால் கூட யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள் என்றபோதும் ஏன் தனக்கு துணிச்சல் இல்லை என்று பல ராத்திரிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறான். பஸ் ஸ்டாப்பில் எதிர் வெயில் சுள்ளேன்று அடித்தது.
தீபாவளி குதூகலங்கள் லேசாக மங்க ஆரம்பிக்க, இவனுக்கு பரபரப்பு அதிகமாகியது. ஹைமா படிப்படியாக மாறி இவனிடமிருந்து தூர விலகியது நினைவில் நிரடியது. சேர்ந்து காரம்போர்டெல்லாம் விளையாடிய ஹைமா ஒன்பதாவது வந்தவுடன் விளையாடுவதை நிறுத்திக்கொண்டாள். கான்வென்ட் ஹைமா, அப்புறம், டான்ஸ் ஆடிய ஹைமா, திங்கள் வெள்ளி தினங்களில் வெள்ளை உடை ஹைமா, சற்று நேரத்துக்கெல்லாம் பாவாடை தாவணியில் வீணை கிளாசுக்கு போகும் ஹைமா, என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரசித்த ஹைமா .....
பஸ் வந்துவிடவே, ஏறி டிக்கட் வாங்கிக்கொண்டான்." என்ன சார், ஹாப்பி தீவாளியா" என்று கேட்ட கண்டக்டரை பதிலுக்கு விசாரித்தான். ரெண்டாவது ஸ்டாப்பில் இறங்கி சாரங்கன் வீட்டுக்கு நடந்தான்.
"வாடா, ஹாப்பி தீபாவளி" சாரங்கன் வரவேற்றான். "என்னப்பா ரொம்ப நாள் ஆச்சே,தீவாளி எல்லாம் ஆச்சா" என்று அவன் அம்மாவும் விசாரித்தார்கள். அப்பா "how is work" என்றார். ஹைமாவைக் காணவில்லை. கண்கள்தேடுவதைத்தடுக்க முடியவில்லை.
"ஹைமா பக்கத்து வீட்டுக்கு போய் இருக்கிறாள்" என்று சாரங்கன் சொன்னவுடன், "ஒ அப்படியா என்றான் குறுகுறுப்புடன்!
அம்மா கொடுத்த பக்ஷ்ணத்துடன் இருவரும் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டார்கள்.
" பத்ரி வரானோல்லியோ"
“சாப்டுட்டு வரேன்னான்”.
“ராஜப்பா?”
“அவன் நேர தியட்டருக்கு வந்து விடுகிறேன்னான்”
“அப்பறம் ஆபீஸ் எப்படி இருக்கு சீனு?”
“ப்ச்! ஏதோ இருக்கு”
“எக்ஸாமெல்லாம் பாஸ் பண்ணினா மேல வந்துடலாமே”
“அதெல்லாம் சும்மா சாரங்கா. படிப்படியா ஏறி ஆகணும். அது ஆகும் முப்பது வருஷம்”
வாசலில் சலனம் ஏற்பட இவன் தன்னிச்சையாக திரும்பிப்பார்த்தான்.
அதிர்ந்துதான் போனான்.
இப்படி ஒரு அழகா? மஞ்சள் பட்டு பாவாடை, பச்சை தாவணியில் அள்ளிக்கொண்டு போனாள். நெற்றியில் லேசாக குங்குமம் தீற்றல் கலைந்து முக அழகை ரகளை பண்ணி இருந்தது. சீனுவைப்பார்ததும் புன்னகை மாதிரி ஏதோ ஒன்று தெரிந்ததுபோல் இவனுக்குப்பட்டது. லேசான வெட்கமும் கூட இருந்ததோ?
சாரங்கன் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தான், பாம்பே லைப் பற்றி, கிரிக்கெட் மாட்ச், ஜனவரி மாசம் சிங்கப்பூர் போவது என்று, இவனுக்கு முழுமையாக ஈடுபாடு ஏற்படவில்லை. ஹைமா உள் புகுந்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். அரைகுறையாக கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தான்.
"சாப்பிடலாமா" என்று அம்மா கேட்க இருவரும் உள்ளே போய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். ஹைமா பரிமாற வருவாளோ என்றும் இவன் மனசு எதிர்பார்த்தது போலவே அவள் பாயசம் கொண்டு வந்தாள். இவனுக்கு விடும்போது கை வழுக்கி கொஞ்சம் சிந்தவே, அம்மா,
“என்னடி இது? ரெண்டு மாசத்தில இன்னொருத்தர் வீட்டுக்கு போகப்போறே , ஜாக்கிரதையாக வேலை செய்ய வேண்டாமா" என்று சொல்ல, இவன் சட்டென்று சாரங்கனைப்பார்த்தான்.
"ஒ, உன்கிட்ட சொல்லலை இல்ல? ஹைமாவுக்கு நிச்சயம் ஆகும்போல இருக்கு. கோவில்ல பார்த்துட்டு அவாளே வந்து கேட்டா. பையன் அமெரிக்காவுல டாக்டரா இருக்கான். யார் தெரியுமோ, நம்ம ஹைமா டெலிவரி பார்த்தாளே அந்த லேடி டாக்டரோட பிள்ளைதான், என்ன ஒரு கோ இன்சிடேன்ஸ் பாரேன், அவ பொறந்த அன்னிக்கு நாம ரெண்டு பெரும் போய் பார்த்தோமே, நினைவு இருக்கா?"
இதை சொன்னபிறகு சீனுவின் முகம் கோணியதை நான், அதாவது நான், கவனித்தேன். சிரமப்பட்டு அந்த அழுகையைக்கட்டுப்படுதிக்கொண்டு பேசினான்.
"என்ன ஆச்சுன்னு தெரியலைடா அன்னிக்கு. எப்படி சாப்பிட்டேன், என்ன பேசினேன் ஒண்ணும் புரியல.
“வீட்டுக்கு போகணும். அப்பா யாரோ ஒரு ஜோசியரை வரச்சொல்லியிருக்கார்: என்று அவசரமாக ஓடி வந்துவிட்டேன். அதோட சாரங்கன் கனெக்ஷன் விட்டுப்போயிடுத்து. பாவம், அவன் நிறைய டிரை பண்ணினான், நாந்தான் ரெஸ்பாண்டே பண்ணலை.
”சாரங்கன் உன்ன தப்பா நினச்சிருப்பானேடா?”
”நிச்சயமா? அதுதாண்டா எனக்கு பெரிய கில்ட் இது நாள் வரைக்கும்”
”அப்புறம் என்ன ஆச்சு?”
”ஹைமா கல்யாணப்பத்திரிகை வந்தது. நா போகலை. அந்த வாரம் லீவு போட்டுவிட்டு கும்பகோணம் கிளம்பிட்டேன். அன்னிக்கு செத்துப் போயிட்டேண்டா , இன்னி வரைக்கும் உசிர் வரலை. முழுக்க முழுக்க என்னோட முட்டாள்தனம் ன்னு தெரிஞ்சாலும், மனசுதானே, ஆரலை, முடியலைடா.
சீனுவின் தோளைத் தட்டிக்கொடுத்தேன். லேசாக அவன் உடல் குலுங்கியது.
”ஈஸி டா, ப்ளீஸ்”
”இன்னும் அந்த நெனப்பு மாறல. அதான் நா இன்னும் தனிதான்”.
சீனுவின் கண்களில் நிறைய கண்ணீர். சட்டென்று எழுந்து, "தாங்க்ஸ் பார் தி காபி, நா வரேண்டா. நைஸ் மீட்டிங் யு ஆப்டர் யா லாங் டைம்" .
விடுவிடுவென்று காணாமல் போனான்.
"ஹலோ வாசகரே! சீனுவின் தீவரம் உங்களுக்கும் புரிந்து இருக்கும். ஆனாலும் என்னோட நிலைமை கொஞ்சம் காம்ப்ளிகேட் ஆகிவிட்டது. நான் இப்போ என்ன செய்வது?
இதுதான் சரியான சமயம், ஓகே, முதலில் என் கமிட்மெண்ட்டை முடித்துவிடுகிறேன்.
நானும் சாரங்கனும் டெல்லி ஏர்போர்ட்டில் பேசின அந்த 15 நிமிஷ சமாசாரத்தை சொல்லிவிடுகிறேன், பிறகு யோசிப்போம்.
சாரங்கன் கேட்டான், "என் தங்கை ஹைமா உனக்கு தெரியுமா'
:கேள்விப்பட்டு இருக்கிறேன் பட் பார்த்தது இல்லை”
“ஒரு அவசரத்தில் அவளுடைய கல்யாணம் நடந்தது. அமெரிக்க மாப்பிள்ளை, தெரிஞ்ச குடும்பம், லக்ஷணமான பையன், நல்ல டாக்டர் அதுவும் அமெரிக்கவுல. எல்லாம் இருந்தும் ரெண்டே வருஷத்தில் திரும்பி வந்துட்டா”.
“ஒ, ஏன் என்ன ஆச்சு”
“அவனுக்கு ஏற்கனவே ஒரு லவ் அங்கேயே, அப்பா அம்மாகிட்ட சொல்ல பயம். இங்க வந்து ஹைமாவைக்கல்யாணம் பண்ணிண்டு அங்கே போய், அந்த லவ்வரையும் வீட்டுல வெச்சுப்பேன்னு சொல்லி, ரகளை, அடிதடி, ச்சே ஹாரிபிள் ! என் beautiful சிஸ்டர் ரெண்டே வருஷத்தில் வாழ்கை அலுத்து சலித்து திரும்பி வந்து விட்டாள்.
“ஒ அயம் சாரி”
“உனக்கு ஒண்ணு தெரியுமா, அவளை சீனுவுக்கு கொடுக்கணும்னு எங்களுக்கு ஒரு ஐடியா இருந்தது. என்னமோ அமெரிக்க டாக்டர்ன்னு கோட்டை விட்டுட்டோம். சீனு சாதாரணமா இருந்தாலும் ரொம்ப நல்லவன், அவனோட பாரன்ட்ஸ் ரொம்ப நல்ல மாதிரி. ஹைமாவை ராணி மாதிரி பார்த்துண்டிருப்பான். அவ திரும்பி வந்தப்புறம் எப்படி போய் கேட்கறது. அதனாலேயே நானும் அவனை காண்டாக்ட் பண்ண முயற்சி எடுக்கலைடா".
“இப்போ ஹைமா.’. என்று இழுத்தேன்.
“வேற என்ன, வீட்டுலதான் இருக்கா, வீணை சொல்லித்தரா, but she is colorless. அதனாலேயே நானும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை".
(அன்புள்ள வாசகரே! நான் என்ன பண்ணட்டும், இதோ நாலு வருடங்களுக்குப்பிறகு உங்களைக்கேட்கிறேன், நான் என்ன செய்திருக்க வேண்டும்?)
அடுத்த நாளே நான் போஸ்டல் ஆடிட் ஆபீசில் சீனுவைப்பார்த்து, பேசி, ஹைமாவுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்க உறுதுணையாக இருந்திருக்க வேண்டுமா?
சரி நன்றி வாசகரே! பொறுமையாக, நாலு வருடக் கதையைக்கேட்டதற்காக. எனக்கும் லேட்டாகிறது, வீட்டில், மனைவியையும் குழந்தையையும், இல்லை இல்லை, ஹைமாவையும் தியாவையும் இன்று மாயாஜாலுக்கு அழைத்துப்போவதாக வாக்களித்து இருக்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment