Thursday, 30 July 2026

 டாக்டர் வைகுண்டம்

தந்தாய் இன்றும் தருகின்றாய்.. தருவாய் மேலும்”


சிகாகோ – இரவு 10:15

நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் ஹாஸ்பிடலின் ஆறாவது மாடி பிசிஷியன்ஸ் லவுஞ்ச் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், மிச்சிகன் ஏரி ஒரு பெரும் கருப்புப் பெருங்கடலாக அடர்ந்து அலைபாய்ந்தது. சாரல் மழையையும் கடந்து, தூரத்தில் பாய்ந்து செல்லும் அவசர கார்களின் சிவப்பு விளக்குகள் மட்டுமே அந்த ருளைக் கிழித்துக் கொண்டிருந்தன.

டாக்டர் அனிருத் தனது கண்கள் இரண்டும் வலிக்கும் வரை விரல்களால் அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

அவருக்கு முன்னால் இருந்த மூன்று கம்ப்யூட்டர் மானிட்டர்களும் ஒரே ஒரு ஆசாமியின் மெதுவான மரணத்தை லேசர் துல்லியத்தோடு படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன.

ஜூலியன் வேன்ஸ். வயது முப்பத்து நான்கு. இண்டர்நேஷனல் கன்சல்டிங் கம்பெனியின் இள வயது பார்ட்னர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை அரை-மராத்தான் ஓடிக்கொண்டிருந்த ஒரு மனிதன். இப்போது, ஐ ஸி யூவில், விவரிக்க முடியாத மஸில் பலவீனம், வயிற்றில் கிராம்ப்ஸ்,, மற்றும் உடலெங்கும் சாம்பல் பூசியது போன்ற விசித்திரமான தோல் நிறமாற்றத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான்.

"ஆர் யூ ஸ்டில் அப்சர்விங் 'ஜெனோம் சீக்வென்சிங்', அனிருத்?"

பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சீஃப் ந்யுராலஜிஸ்ட், டாக்டர் மார்கஸ் உள்ளே நுழைந்தார். இரண்டு ரிசர்ச் ரிப்போர்ட் அவர் கையில் இருந்தன.

"துல என்ன ஆர்க்யூமெண்ட், மார்கஸ்,"

அனிருத் திரையைக் சுட்டிக்காட்டினார்.

"எல்லா ஜினோம் பானல் டெஸ்டுகளிலும் எந்தவிதமான கோளாறும் இல்லை. லம்பார் பங்க்ச்சர் டெஸ்ட் பார்த்தாச்சு! 'கிலன்-பாரே சிம்ப்டம்ஸ்' இல்லை கன்ஃபர்ம் பண்ணிட்டோம். லூபஸ், வாஸ்குலிடிஸ் டெஸ்டும் 'நெகட்டிவ்'. ஆனா, அவனோட நர்வஸ் சிஸ்டம் ஈஸ் ஃபெய்லிங். ஐயாம் கன்ஃப்யூஸ்ட்!"

மார்கஸ் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"நம்ம டையக்நோஸ்டிக் குரூப் இது ரேர் 'ஆட்டோ இம்யூன்' நர்வஸ் பாதிப்புன்னு அடிச்சு சொல்றாங்க. ஆனா நம்ம வழக்கமான டெஸ்டுகள்ள அது பிடிபடவில்லை. இன்னிக்குள்ள பேஷண்ட்டுக்கு 'ஸ்டீராய்டு' அண்ட் 'பிளாஸ்மாபெரெசிஸ்' ட்ரீட்மெண்ட் ஆரமிக்கணூம்னு டாக்டர் கெல்லர் ஆர்டரே போட்ருக்கார்!"

அனிருத்தின் நெற்றி சுருங்கியது. வலது கை விரல்கள் மேஜை மீது ஒரு குறிப்பிட்ட தாள நயத்தில் தட்டத் தொடங்கின—அப்பாவிடமிருந்து அறியாமல் கற்றுக்கொண்ட அதே பழக்கம்.

"பேஷண்ட்டுக்கு நாம குடுக்கப்போற இந்த ஸ்ட்ராங் மெடிசன்ஸ் அவனோட இம்யூன் சிஸ்டத்தை அழிக்கப்போறது, மார்கஸ். ஒருவேளை, நமக்குத் தெரியாத ஏதோவொரு அக்யூட் இன்ஃபெக்‌ஷன் அவனுக்குள் இருந்தா... யூ நோ, திஸ் ட்ரீட்மெண்ட் வில் கில் ஹிம்!”

"அநிருத்! நாம் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் வேடிக்கை பார்த்தா, அவனது லங்ஸ் இம்பாக்ட் ஆகி, அவனை வெண்ட்டிலேட்டர்லதான் போடணூம், அண்ட் யூ நோ தட்!”

மார்கஸ் அமைதியாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

"நார்த் வெஸ்டெர்ன் மட்டுமில்லை, அமெரிக்காவோட பெஸ்ட் மெடிக்கல் டெக்னாலஜியை  யூஸ் பண்ணிட்டோம். பெட் ஸிட் ஸ்கேன் வரைக்கும் எல்லாம்  கிளியரா இருக்கு. சம்டைம்ஸ், நாம மாடர்ன் டெக்னாலஜியையும் அதோட நவீன சாத்தியக்கூறுகளை நம்பித்தானே ஆகவேண்டும்!"

"பட் மார்க்கஸ்! அந்த டெக்னாலஜி எதுவும் அவனது பாடில இருக்கற இந்த கலர் சேஞ்ச எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியலியே?”

அனிருத் திரையில் இருந்த ஹை ரிஸல்யூஷன் இமேஜைப் பெரிதாக்கினார்.

"அவன் உள்ளங்கையில இந்த சின்ன தடிமனான தழும்பு பத்தி என்ன சொல்றீங்க மார்க்கஸ்?"

"அநிருத்! இட் ஈஸ் வெரி சிம்பிள்! அவன் ரிகெட்டா சாம்பியன்! துடுப்புப் பிடிச்சதனால  உள்ளங்கையில் தழும்பு வர்ரது நார்மல்தானே!"

மார்கஸ் அதை எளிதாக நிராகரித்தார்.

“லுக் ஹியர் அநிருத்! ட்வெண்டி மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துக்கோ. தலையைத் தெளிவுபடுத்திக்கொள். இன்னிக்கு நைட் 11 மணிக்கு டையக்நோஸ்டிக் குரூப் மறுபடி மீட் பண்ணி பிளாஸ்மாபெரெசிஸ் ட்ரீர்மெண்ட்டை கன்ஃபர்ம் பண்ணட்டும்!."

மார்கஸ் கதவைத் திறந்து வெளியே போனார்.

சென்னை ஜெனனரல் ஹாஸ்பிடல் 'டீன்' ஆஃபீஸ் அறை, வழக்கம் போல அன்று காலையும் பரபரப்பாக இருந்தது. ஏஸியின் ஹம்மிங்கை மீறி, வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் முணுமுணுப்பு அறைக்குள்ளும் கேட்டது.

டாக்டர் வைகுண்டம் தனது மேஜையில் இருந்த ஃபைல்களை ஒதுக்கிவிட்டு, பித்தளை டம்ளரில் இருந்து சூடான ஃபில்டர் காபியை ஒரு மடக்கு பருகிய கணத்தில், அவரது மேஜை மீது இருந்த தனிப்பட்ட மொபைல் போன் அதிர்ந்தது.

திரையில்: அநிருத் என ஒளிர்ந்தது.

"சொல்லு அனிருத். என்ன இந்த நேரத்தில்? அங்க இப்ப மிட்நைட் இல்ல?"

பெரியவரின் குரலில் வழக்கமான நிதானமும், கனிவும் கலந்திருந்தது.

மறுமுனையில் அனிருத்தின் பெருமூச்சு தெளிவாகக் கேட்டது.

"டாட்... ஒரு கேஸ். கைநழுவிப் போறது. பெஸ்ட் 'டயக்னாஸ்டிக் போர்டு' கூடி யோசித்தும் ஒரு க்ளாரிட்டி வரலை. இன்னிக்கு ராத்திரி தப்பான ட்ரீட்மெண்ட் தறப்போறோம்னு எனக்கு உள்ளுக்குள்ள ப்ரிமானிஷன்! ஐயாம் வெரி ட்ரபிள்ட், அப்பா!”

"அமைதியா இரு அனிருத்,"

வைகுண்டம் காபி டம்ளரை கீழே வைத்தார்.

"லேப் ரிப்போர்ட்ஸை இக்னோர் பண்ணு! மானிட்டர் ஸ்க்ரீனைக்கூட கொஞ்ச நேரம் தள்ளிவை. அந்த மனுஷனைப் பத்தி சொல்லு. அவனுக்கு என்ன உடம்பு?"

"34 வயசுப்பா! பெரிய கார்ப்பரேட் கன்சல்டண்ட்! அக்யூட் மஸில் வீக்னெஸ்! வயிற்றுப் பிடிப்பு, உடம்பு முழுக்க சாம்பல் பூசினா மாதிரி தோல் கலர் மாறிக்கிடக்கு. 'கிலன்-பாரே' இல்லை. லூபஸ், வாஸ்குலிடிஸ் ஆட்டோ இம்யூன் டெஸ்டெல்லாம் 'நெகட்டிவ்'. Whole-Genome Sequencing தெளிவா இருக்கு. போர்டு இதை ஒரு ரேர் ந்யூரலாஜிக்கல் டிஸீஸ்னு முடிவெடுத்து ஸ்டீராய்டும், பிளாஸ்மாபெரெசிஸும் கொடுக்கப் போறோம்."

வைகுண்டம் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்.

"அனிருத், ங்க சிகாகோ ஹாஸ்பிடல் அவனுடைய பிளட், டிஎன் ஏ எல்லாத்தையும் ஸ்டடி பண்ணியிருக்கீங்க! ஆனால், வாட் அபவுட் ஹிஸ் லைஃப் ஸ்டைல்?  அவனுடைய டெய்லி பழக்கவழக்கமெல்லாம் என்ன, தொழில் என்ன?"

"சொன்னேனே, கார்ப்பரேட் கன்சல்டண்ட், அப்பா. அடிக்கடி இண்டர்நேஷனல் டிராவல் பண்ணுவான்! சமீபத்தில் கூட டிரடிஷனல் ஹேண்ட்லூம் ரிசர்ச்சுக்காக  ண்டியா, பங்களாதேஷ் பக்கம் போயிருந்தான். ஆனா, மலேரியா, டெங்கு, டைபாய்டு, ட்யூபர்கொலோஸிஸ் மாதிர் எல்லா 'டிராபிகல்' டெஸ்டும் பண்ணியாச்சு, 'நெகட்டிவ்' தான்."

"ம்..."

வைகுண்டம் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

"அவன் உடம்பை நீ சொந்தக் கண்ணால முழுசாப் பார்த்தியா? கேமரா இமேஜஸ் மட்டும் பார்க்காம, தொட்டுப் பார்த்தியா?"

"அப்பா, நாங்கள் 'ஹை-டெஃப்' படங்களை..."

"படமெல்லாம் நிழல்தானே, அனிருத்," வைகுண்டம் குறுக்கிட்டார். "என்னோட  கேள்விக்கு பதில் சொல்லு. அவனோட உள்ளங்கை, உள்ளங்காலெல்லாம் கவனிச்சியா? வாட் டு தே ஸே?"

அனிருத் அவசர அவசரமாகத் தன் மானிட்டரில் உள்ளங்கையின் க்ளோஸ் அப் இமேஜைப்பார்த்தான்.

”ஆர் யூ தேர், அனி?”

" சின்னதா ஹார்டா தழும்புகள்! கொப்புளம் மாதிரி 'ஹைப்பர்கேரடோடிக்' புள்ளி தெரியறதுப்பா. அவன் ரெகெட்டா சாம்பியங்கறதால என்பதால், துடுப்புப் போட்டு போட்டு வந்த தழும்புன்னு இங்க சொல்றாங்க!”

"ஸ்ட்யுப்பிடிட்டி!"

வைகுண்டத்தின் குரல் சட்டென்று உறுதியானது.

"அநிருத்! போட் ரோ பண்ணினா, துடுப்பு தழும்பு உள்ளங்கையோட நடுவுல மட்டுந்தான் வரும். விரல் நுனி, உள்ளங்காலோட ஓரத்திலயும் வரலாம்! அனிருத்! லிஸன் டு மி, உன் பேஷண்ட்டுக்கு எந்த ரேர் ஜீன்ஸ் பிராப்ளமும் இல்லை... அண்ட் நோ'ஆட்டோ-இம்யூன்' டிஸ் ஆர்டர்!"

அனிருத் டென்ஷன் ஆனான்

"அப்பா! அப்படின்னா…..?"

"அது 'ஆர்சனிக்' டாக்ஸிஸிட்டி! அதுவும் க்ரானிக்கா இருக்கும்!

"வைகுண்டம் தீர்க்கமாகச் சொன்னார்.

மறுமுனையில் அனிருத் உறைந்தான்.

"ஆர்சனிக்கா? அப்பா, அவன் அமெரிக்காவுல இருக்கான்! அவனுக்கு எப்படி ஆர்ஸனிக் அண்ட் ...?"

"அநிருத்! நீ தானே சொன்னே, அவன் இந்தியா அண்ட் பங்களாதேஷுக்கெல்லாம் வந்திருக்கான்னு! வில்லேஜ், எஸ்டேட்டுக்கெல்லாம் போயிருந்தா அங்கல்லாம் கிணத்து தண்ணிரைக்குடிச்சிருப்பான்!

 வைகுந்தத்தின் குரலில் பல தசாப்த கால அனுபவம் எதிரொலித்தது.

"நைண்டீஸ்ல தஞ்சாவூர் சுத்து வட்டாரப் பகுதிகளில, டீப் போர்வெல் கிணத்து  தண்ணிர் குடிச்சவங்களுக்கு இதே சிம்ப்டம்ஸ் இருந்ததை நானே  பார்த்திருக்கேன். 'ஆர்சனிக்' பாய்சன் உடம்புக்குள் சேரும்போது, அது நர்வஸ் ஸிஸ்டத்தை அட்டாக் பண்ணி 'கிலன்-பாரே' போல நடிக்கும். வயித்து வலி கொடுக்கும். ஸ்கின்ல 'மழைத்துளி' மாதிரி கருப்புப் புள்ளி, உள்ளங்கையில் கடினமான தழும்பு உண்டாக்கும்!"

அநிருத் வாய் மூடாமல் கேட்டான்.

"உங்க சிகாகோ ஹாஸ்பிடல்ல வழக்கமான 'டாக்ஸிகாலஜி' டெஸ்டுல ஆர்சனிக் பிடிபடாது. யூ நோ, அது பிளட்ல தங்காம, ஸ்கின் மற்றும் நகத்தோட புரோட்டின்ல செட்டில் ஆயிடும். நீங்கள் ஒன் இன் ய மில்லியன் ஜெனெடிக் டிஃபெக்டை தேடிண்டு இருக்கீங்க; ஆனால்  இதுக்கு பதில் அவனோட நகக் கண்கள்ள இருக்கு, மை டியர் சன்!"

அனிருத்தின் இதயத் துடிப்பு வேகமானது. அப்பாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஜிக்ஸா பஸில் பொருந்துவது போல உணர்ந்தான்.

"அப்பா... உடனே அவனோட ஹேர் அண்ட் நெயில் டிஷ்யூ பானல 'ஹெவி மெட்டல்' டெஸ்டுக்கு அனுப்பறேன்!"

அனிருத்தின் குரலில் புது நம்பிக்கை பிறந்தது.

"உடனே அனுப்பு,"

வைகுண்டம் கமாண்டிங்காக சொன்னார்

 "ஸ்டாப் தி ஸ்டீராய்டு ட்ரீட்மெண்ட். அவன் நர்வஸ் சிஸ்டத்தை காப்பாத்த  உனக்கு 'செலேஷன் தெரபி' தேவைப்படும். கெட் கோயிங் அனி! ஆல் தி பெஸ்ட்!”

“தாங்ஸ்ப்பா! உங்களுக்கு தெரியாத விஷயம்னு ஏதானும் இருக்கா?”

அநி! ஒரு சின்ன ஹெல்ப்?”

“சொல்லுங்கோப்பா?”

“துருவ் எப்படி இருக்கான்?”

“ஓ ஹி ஈஸ் வெரி ஃபைன்! டெக்னாலஜிய கைல வெச்சுண்டு என்னென்னமோ பண்ணிண்டு.. ஹி ஈஸ் பிஸி!”

“அதாண்டா! எனக்கு ஒரு, என்னது அது, வாட்ஸப் சானலாமே, அதை அனுப்பிச்சு உங்க ஃப்ரெண்ட்ஸ இதுக்கு சப்ஸ்கிரைப் பண்ணச்சொல்லுங்கன்னு கேட்டிருந்தான். அத எப்படி ஓபன் பண்றதுனே தெரியலைடா அநிருத். கொஞ்சம் கைட் பண்ணேன்?”

அநிருத் பலமாகச்சிரித்தது சென்னை வரை கேட்டிருக்கும்! 


Monday, 27 July 2026

 

நாளை வியாழக்கிழமை……வருகிறீர்களா…?

 


 “நாளைக்கு வியாழக்கிழமையாயிற்றே, வருகிறீர்களா?”

“எங்கே வர வேண்டும்?”

“இரான் ஆப்பிள் செண்டர் அருகே ஃபர்ஸ்ட் ஸ்கொயர் தாண்டி 148ஆவது ஸ்ட்ரீட்டில் ரெமாசானிக்கு! பர்வின் பொலீவார்டு வழியா க வந்து இடது புறம் திரும்ப வேண்டும்”

”அங்கென்ன விசேஷம்?”

”வந்து பாருங்களேன்!”

எனக்கு அரேபிய இரவுகளும் ஸ்ட்ராபெர்ரி ஹுக்காவும் அதன் ஆரஞ்சுப்புகையும், டேபிள்களுக்கு இடையே ஊடாடும், இடுப்பு தெரியும் சர்வர் நங்கைகளும் அவர்களின் தங்கத்தட்டின் மேல் பரப்பி வரும் ஷிஷ்லிக்கும், சிலோ கெபாபும் லிபிய மற்றும் அல்பெலா பொலொவும் கண்ணில் மின்ன சரி என்று தலையாட்டினேன்.

கொஞ்சம் கதை வசனம் உங்களுக்குச்சொல்ல வேண்டும்.

போன வாரம் வைஸ் ப்ரெசிடெண்ட் கூப்பிட்டனுப்பினார்.

” எதிர்பார்த்த மாதிரியே நாசர் அல் மஹ்ரூக்கி கவுத்துட்டான் ரகு!”

“அய்யோ! என்ன ஆச்சு, க்ரிஷ்?”

” அதான் இரான் கோட்ரோ கம்பெனி!”

“என்ன நம்ம ப்ரொபோசல் காலியா?”

“இல்லப்பா! நம்ம ப்ரொபோசல்தான் ஷார்ட் லிஸ்டட்!”

“அட ! அப்பறம் என்ன க்ரிஷ்?”

“நீ வேற! நாசர் அல் மஹ்ரூக்கி இப்ப காலை வார்ரான்! அவனால தனியா டெமோ பண்ண முடியாதாம்!”

“நாசமாப்போக! ஒரு வாரம் உயிர விட்டு ட்ரயினிங் குடுத்தோமே!”

“அவனுக்கு கான்ஃபிடென்ஸ் இல்லியாம்! உன்ன அனுப்பச்சொல்றான்!”

நானா? நேத்துதான் சிட்னிலேர்ந்து வந்திருக்கேன்!  நான் இப்ப மறுபடி கிளம்பினா, லதா ஹை கோர்ட்டுக்குப்போய்டுவா?”

“வேற வழியே இல்ல ரகு! ஒரு மில்லியன் டாலருக்கு மேல ரெவின்யூ! கிளம்பிடு! நா வேணா லதா கிட்ட பேசறேன்!”

நாசர் அல் மஹ்ருக்கியை கெட்ட வார்தையில் திட்டிக்கொண்டே அன்று இரவு டெஹ்ரானுக்குக்கிளம்பினேன்.

நாசர் இருக்கானே அவன் ஒரு ரசிக்கக்கூடிய ராஸ்கல். ஒமார் ஷ்ரீஃப் போன்ற வசீகர முகம். கச்சிதமாக திருத்தப்பட்ட ப்ரஷ் மீசை, ஒன்றிரண்டு நரை எட்டிப்பார்க்கும் ராயசம். தீபாவளி கம்பி மத்தாப்பு பத்த வைப்பது போல சிகரெட்டை ஒன்றை விட்டு ஒன்றைப்பற்ற வைத்து ஊதுவான். சுலபமாகச்சிரிப்பான். சாயங்காலம் சாப்பிட ஆரமித்தால் நடு இரவு வரை விடாமல் சாப்பிடுவான். இவன் புண்ணியத்தில் என் வெயிட் ஏறினதுதான் மிச்சம். நாசர்தான் எங்களின் இரானிய ஏஜண்ட். அட்சரம் சாஃப்ட்வேர் தெரியாது. என்னமோ இவந்தான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வேலை கத்துக்கொடுத்தா மாதிரி பேச்சு மட்டும். உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையானால் கை விரித்து விடுவான்.

“ழகு! உங்க ஆளுங்கள அனுப்பு! எல்லாம் துடியாக இருக்கானுவ! என்ன சாப்பிடுவீங்க மெட்ராஸுல?”

“ஒண்ணும் இல்லை! உடம்பு வளைஞ்சு சிரத்தையா வேலை செய்யணும், அவ்வளவுதான்!”

“ஓ! அவ்வளவு கஷ்டம் என்னால ஆகாது” என்று சிரிப்பான். உடனேயே, “ கம் ழகு! லெட்ஸ் க்ராப் ய ஃபிலாஃபெல்” என்று சடுதியில் அக்கம்பக்கத்து சாப்பாட்டு கிளப்பில் நுழைந்து விடுவான்.

ஒவ்வொரு நாளும் வீடு வீடு என்று முன்று வேற வேற இடத்துக்குபோகும் அவனைக்கேட்டேன்.

”என்னடா தகிடு தத்தம் இது? நேத்து வீடுன்னு கிழக்குப்பக்கம் போனே! இன்னிக்கு வடக்கால போறியே?”

சொன்னான்.

அவனுக்கு மூன்று மனைவிகள்!

எப்போதும் போல டெஹ்ரான் ஏர்போர்ட்டில் ஆரவாரமாக வரவேற்றான்.

“ஆருயிர் நண்பா ! ழகு! தெரியும் நீ வந்து விடுவாய் என்றூ!”

“ஒரூ  வாரம் இங்க வந்து ட்ரெயின் பண்ணினேனே! எதுக்குடா என் தாலிய அறுக்கற?”

பக பகவென சிரித்தான். “ கூல் ழகு!”

வளர்த்துவானேன்.

அடுத்த நாள் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை குடாய்ந்து குடாய்ந்து கேள்விகேட்டார்கள் இரான் கோட்ரோ ஆசாமிகள். ஒரு வழியாக திருப்தியானவுடன் காண்ட்ராக்ட் காசு பத்தி ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட கறிகாய் பேரத்துக்குப்பிறகு ஒரு வழியாக எதிர்பார்த்ததுக்கு மேல் கொஞ்சம் கொசுறு கேட்டு வாங்கி கையெழுத்திட்டார்கள். அந்த சந்தோஷத்தில் நாசர் அப்படியே சிகரெட், கண்றாவி செண்ட் மற்றும் வியர்வை நாத்தத்துடன் என்னைக்கட்டிக்கொண்டான்.

இரான் கோட்ரோவின் ஜெனெரல் மானேஜர் பெஹ்ரூஸ் என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

“நாம் இப்போது பிஸினஸ் பார்ட்னர்கள். இன்று என் வீட்டில் உனக்கு விருந்து. என் மனைவி லாலெஹ் அருமையாகச்சமைப்பாள்!”

“நான் கொஞ்சம் கஷ்டமான விருந்தினன்! வெஜெட்டெரியன் மட்டும்தான்!”

“கூல்! நாங்களும் முழுக்க முழுக்க வெஜிட்டேரியன்ஸ்!”

“என் மூன்றாவது மனைவிக்கு இரண்டு மாதமாக பீரியட் தள்ளிப்போகிறது.டாக்டரிடம் போக வேண்டும், என்னை மன்னித்துவிடுங்கள்!”

நாசர் விலகிக்கொள்ள பெஹ்ரூஸ் அவரே என்னைக்காரில் வீட்டுக்கு அழைத்துப்போவதாகச்சொன்னார்.

 அவர் வீட்டு ஹால் ஏதோ நம் பக்கத்து வீட்டின் ஹால் போல ரம்யமாக இருந்தது. உள்ளிருந்து ஊதுவத்தி மணம். சன்னமாக எங்கோ ஒரு பாடல் ஒலி. பேஹாக் ராகம் போல ஒரு குழைவும் இழைவும். பெஹ்ரூஸின் மனைவி லாலெஹ் சின்னதாக வெளிர் முகத்துடன் தாராள சிரிப்புடன் இருந்தார்.

“யூ லைக் ரசம்?”

அபார எலுமிச்சை ரசம். ஆனால் கொத்தமல்லிக்குப்பதிலாக புதினா வாசம்! சோளத்தில் பண்ணின ரோடியும், சுரைக்காயில் செய்த சப்ஜியும், இரானிய ஸ்வீட்டுமாய் அமர்க்களமான விருந்து. சாப்பிட்டவுடன் ஹாலில் உட்கார வைத்து க்ரேன்பர்ரியில் செய்த ஜூஸில் தேன் விட்டு பாதாம் பொடிகள் தூவின ஒரு அமிர்ததோடு உண்ட மயக்கம்!

”ழகு! நாளைக்கு மாலை நீங்கள் ஃப்ரீயாக இருந்தால் உங்களை ஒரு இடத்துக்கு அழைத்துப்போக ஆசை?”

” ஃப்ரீதான்! எங்கே?”

சரியாக ஏழு மணிக்கு ஓட்டல் வாசலிலிருந்து கால் பண்ணி அழைத்துக்கொண்டு போனார்.

”நேத்து லாலெஹ் சொன்னாளே அதான் இந்த ஃபர்ஸ்ட் ஸ்குயர்! அப்படிப்போய் திரும்பினால் 148 ஆவது ஸ்ட்ரீட்.”

சற்றே குறுகிய பாதை. அமைதியாக இருந்தது. எந்த வீட்டிலும் அதிக வெளிச்சமில்லை. தெருவில் நெறய கார்கள். ஆனால் அதிக நடமாட்டம் இல்லை. அந்தக்கால மர்ஃபி ரேடியோ போல சதுரமும் செவ்வகமும் இல்லாத ஒரு கட்டிடம். அபார்ட்மெண்ட் போல இருந்தது. மூன்று மாடிகள் தான் இருக்கும். உள்ளே நுழைந்து இடது பக்கம் படியேறி ஒரு சிறு லேண்டிங்கில் திரும்பி மறுபடி மேலேறினோம். சட்டென்று விரிந்த காரிடார். எதிர் எதிரே ரெண்டு கதவுகள். வலது பக்கத்தைத்தேர்ந்தெடுத்து தட்டினார்.

உள்ளே மெல்லிசாக பேச்சுக்குரல். எனக்கு அட்ரினாலின் ப்ரவாகம்!

திறக்கப்பட்ட கதவில் நுழைந்தோம். நீண்ட பாதையில் ஷூக்களைக்கழற்றச்சொன்னார். தாண்டினால் மஹா ஹால். முன்னால் ஒரு இருபது பேர் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். ஒரு பக்கமாக ஆண்களும் அந்தப்பக்கம் பெண்களும். எல்லோரும் பர்தாவை தூக்கி கழுத்தில் சுற்றியிருந்தனர். அபார அரேபிய பளபளப்பு முகங்கள். மெல்லிய குரலில் கிசுகிசுப்பான அரபிக் பேச்சு தவிர அமைதிதான். எல்லோருக்கும் முன்னால் எதிரே பெரிய சிம்மாசனம். மலர் அலங்காரம். கால் வைத்துக்கொள்ள ஒரு சின்ன ஸ்டூல். அதிலும் பட்டுத்துணி போர்த்தப்பட்டு ஒரு குழந்தை மலர் காத்திருந்தது. ஊதுவத்தி மணம்.

”பெஹ்ரூஸ்! எப்படி சாத்தியம் இது?”

”எல்லாம் அவர் கருணைதான்! இது வரை எங்களிடம் யாரும் எதுவும் கேட்டதில்லை!”

 அந்த சிம்மாசனத்தில் பரந்த தலை முடியுடன் சிவப்பு அங்கியோடு அபய ஹஸ்தம் காட்டும்…………..

புட்டபர்த்தி சாய் பாபாவின் உருவப்படம்.

”தினக் தினக்” என்று ஒரு சின்ன மேள சப்தத்துடன் இரான் தலை நகரில் ஆப்பிள் செண்டருக்கு அருகேயுள்ள 148ஆவது ஸ்ட்ரீட்டில் வியாழக்கிழமை பஜன் ஆரமித்தது.

(நான் எழுதிய ”செர்ரிபிளாஸமும் இன்னும் சில பூக்களும்” புத்தகத்திலிருந்து ஒரு கதை இல்லை நிஜம் இல்லை கற்பனை இல்லை கற்பனை கலந்த நிஜக்கதை!). 

புத்தகம் வாங்க (அ) ஆன்லைனில் வாசிக்க: 

https://www.pustaka.co.in/home/author/jayaraman-raghunathan

 

பேர் வந்த கதை


என்ன இப்படி சொல்றீங்க?”

ஆமாம்! உங்க எல்லோருக்குமே தெரியுமே! நீங்க வாங்கியிருக்கற எடத்துக்கு வடக்குப்பக்கம் வய வெளிதான், கப்பி ரோடுமாதிரி ஒரு பாதைதான் இருக்கு. அது போய் எல் பி ரோடுல சேர்ரதுக்கே வழியில்லாம வெறகுத்தொட்டி அடச்சிக்கெடக்கே!”

அந்த வெறகுத்தொட்டி ரொம்ப நாளா இருக்காமே சார்?”

சரிங்க! ஆனா நம்ம கார்ப்பரேஷன் ரூல்படி அப்ரூவல் தரமுடியாதே! நா என்ன பண்ணட்டும்?”

சார்! நீங்க சீஃப் எஞ்சினீயர்! நீங்கதான் ஏதாவது பாத்து பண்ணனும்! நாங்கள்ளாம் ஆயிரம் ரெண்டாயிரம் குடுத்து ப்ளாட் வாங்கிட்டோம்!”

இதப்பாருங்க எனக்கு ரூல் படிதான் எதுவுமே செய்யமுடியும்! ஒரு திசையில அப்ரோச்சே இல்லாம சாங்க்ஷன் பண்ணுங்கன்னா நா எப்படிங்க பண்றது?”

ஜெயராமனும் வைத்தியநாதனும் ராகவாச்சாரியும் ஆண்டனியும் டாக்டர் சங்கரியும் சோகத்துடன் வெளியே வந்தார்கள்.

நா அப்பவெ சொன்னேன், இந்த சதர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்கிட்டல்லாம் ப்ளாட் வாங்க வாண்டாம்னு! ஜெயராமன் தான் பிடிவாதமா வாங்கணும்னான். இப்ப பாரு காசபோட்டுட்டு கையைப்பிசைஞ்சுண்டு நிக்கறோம்!”

வைத்தியநாதன் முணுமுணுத்தார்.

ஆரானு மலையாளி யுண்டோ இங்க? ஜாரிக்கட்டும்! ஞான் பேசும் அவண்ட்ட!”

இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் ஆண்டனி குரல் கொடுத்தார்.

அட போய்யா! இப்ப போய் மலையாளியைத்தேடணூமா?”

இதில் கலக்காமல் ஜெயராமன் மெல்ல அந்தப்யூனை அணுகினார்.

இன்னா சாங்கஷன் கெடிக்காதுன்னுட்டாரா எஞ்சினீயரு?”

சீஃப் எஞ்சினியர் அறை வாசல் ப்யூன் கேட்டார்.

ஆமாம்பா!”

அங்க என்னா சங்கடம்னு சொல்லேன்?”

ஜேராமா! வா அவனோட என்ன பேச்சு? காண்டீனுக்குப்போலாம்!பசிக்கறது!”

ராகவாச்சாரி குரல் கொடுத்தார்.

பாரு! உன் சகா கூப்பிடறாரு! நீ போ! எனக்கென்ன?”

ராகவாச்சாரி! நீங்கள்ளாம் போங்கோ! நா அப்புறமா சாப்பிட்டுக்கறேன்!”

ஏன் உனுக்கு வவுறு இல்லியா?”

நீயும் வாயேன்ப்பா! இப்ப சாப்பாட்டு டைம்தானே!ஆமா உம்பேர் என்ன?”

எம் பேர் முனிசாமி! சரி வா! காண்டீனுக்குப்போலாம்!”

முனிசாமிக்கு ஏதாவது வாங்கித்தந்து அவன் மூலம் ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்க்க ஜெயராமன் அவனுடன் காண்டீனுக்குப்புறப்பட்டார்.

வா போலாம்!”

இப்ப சொல்லு! என்ன அங்க சங்கடம்?”

நாங்க ஏழெட்டு பேர் அடையாறுல ப்ளாட் வாங்கிட்டோம்! வடக்கு பக்கம் வய வெளிதான். ஆனா அதுக்கு நடுவுல ஒரு வெறகு தொட்டிக்கட போட்டிருக்கு! ரொம்ப வருஷமா இருக்கானாம்! அத்தாண்டிப்போனாத்தான் எல் பி ரோடுக்கு வழி! இப்படி ஒரு பக்கம் அடச்சிட்டா சாங்க்ஷன் கிடைக்காதுங்கறாரு உங்க எஞ்சினீயரு!”

ஆமா சர்த்தானே! இவுரு சாங்க்ஷன் குடுத்து நீ பாட்டுக்கு வூட்ட கட்டிப்பே! ஒரே வருஷத்துல நீயே வந்து புகார் பண்ணுவே! இந்த மாதிரி வடக்கு பக்கம் ரோடு வேணும்! பொண்டுக புள்ளீங்கள்ளாம் சுத்திப்போவ வேண்டியிருக்குது. ரொம்ப சிரமமா இருக்குன்னுவ! சொல்வியா மாட்டியா? அதான் ரூல் போட்ருக்காங்க!”

அது சரிதான்ப்பா! ஆனா ரெண்டாயிரம் ரூவா போட்டு ப்ளாட் வாங்கிட்டமே!  இப்ப சாங்க்ஷன் குடுக்கல்லீன்னா எங்க நெலமய யோசிக்க வாணாமா?”

அதாரு அவன் அங்க போய் வெறகு தொட்டி போட்ருக்கான்?”

யாரோ கோவிந்த சாமி நாடாராம்! பல வருஷமா அங்கவே இருக்காராம்! நல்ல மனுஷன் தான். ஆனா கடைய எடுக்கச்சொல்ல முடியுமா?”

நாடாருங்களா? நாயத்த சொன்னா கேப்பாருங்களே அவுங்க! நீ பேசிப்பாத்தியா?”

ஒரு மாதிரி ஜாடை மாடையா கேட்டுப்பாத்துட்டோம்! ஒண்ணும் முடியாது போலத்தெரியுதுப்பா!”

இந்தா எங்கணக்கு எட்டணா!”

அடேடே! அதெல்லாம் வாணாம்! நான் வாங்கித்தர்ரதா இருக்கட்டுமே!”

இன்னாத்துக்கு? நீ என்ன எனக்கு மாமனா மச்சானா? எஞ்சாப்பாட்டுக்கு நா துட்டு தரேன்! நீயும் கஷ்டப்பட்டுதானே சம்பாரிக்கற? தோ ரெண்டயிரத்த நெலத்துல போட்டுட்டு அல்லாடறியே!”

இதற்குள் வைத்தியநாதன் ராகவாச்சாரி குழு சாப்பிட்டுவிட்டு வாசலில் நின்றார்கள்.

உன் ஆளுங்கள்லாம் போறாங்க பாரு!”

சரி நா வரேன்! அடுத்து என்ன்னு புரியல!குழப்பமா இருக்கு!”

 நா ஒண்ணு சொல்றேன் கேப்பியா?

சொல்லு முனிசாமி!”

ந்ந்தாண்ட என்னோட கொஞ்சம் வா!”

ஜெயராமன் அந்தப்யூன் பின்னாடிப்போனார்.

சோகையான படிகள் கொண்ட அந்த மாடியில் ஏறி, நீண்ட வெராண்டாவில் நடந்து அழுக்குப்பச்சை பெயிண்ட் மங்கின கதவுக்குப்பின்னால் பேப்பர் குப்பைகள் குவிந்திருந்த பல மேஜைகளைத்தாண்டி ஒரு வித உலோகச்சத்தத்துடன் மெதுவாகச்சுற்றிக்கொண்டிருக்கும் ஃபேனுக்கு அடியில் மேஜையின் மேல் டிஃபன் பாக்ஸ் வைத்து தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அணுகினான் முனிசாமி. ஜெயராமனும் குழப்பத்துடன் அவன் பின்னால் நின்றார்.

மேஜை ஆசாமி இவர்களைக்கவனிக்காமல் நிதானமாக தோசையை விள்ளல் விள்ளலாகச்சாப்பிட்டார். ஒரு விள்ளலில் மிளகாய்ப்பொடி அதிகம் போலும், லொக்கென்று இருமி அருகிலிருந்த அலுமினிய டம்ளரில் தண்ணீர் குடித்தார். அடுத்த பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து, டிஃபன் டப்பாவை மூடி துணியில் சுற்றி பைக்குள் வைத்தார். எழுந்து போய் கை கழுவிக்கொண்டு வந்து வேஷ்டி நுனியில் வாய் துடைத்துகொண்டார்.  த்ரஎன்று ஏப்பம் விட்ட பின் முனிசாமியை முதன் முதலில் பார்ப்பது போல பார்த்தார்.

என்ன முனிசாமி! இவ்ளோ தூரம்?”

முனிசாமி அவருக்கு அருகில் போய் மெல்லிய குரலில் பேசினான். ஜெயராமன் கொஞ்சம் அசௌகரியமாக நின்றார். முனிசாமி ஜெயராமனை கை காட்டி அழைத்தான். அந்தப்பெரியவர் பேசினார். குரலில் ஜலதோஷமோ மூக்குப்பொடியோ தெரிந்தது.

அங்க போய் ப்ளாட் வாங்கினீங்களா?”

ஜெயராமன் மையமாக புன்னகை.

ரோடு அப்ரோச் இல்லேன்னா சாங்க்ஷன் ஆவாதே!”

மறுபடி அதே மையப்புன்னகை.

வெறகுத்தொட்டி கடைக்காரர் பேரு என்ன?”

கோவிந்தசாமி நாடார்!”

விருதுநகரா இல்ல நார்கோவிலா?”

தெரியலையே!”

விருதுநகராத்தான் இருக்கும்! வெறகு தொட்டியில்ல?”

:உங்க ப்ளாட் மேப் இருக்குதா? இல்லேன்னா லொகேஷன் குடுத்துட்டு போங்க! அடுத்த வாரம் புதன், இல்ல வாணாம், வ்யாழன் அன்னிக்கு முடிஞ்சா அந்த நாடாரையும் இட்டுக்கினு வந்து என்னப்பாருங்க!”

ரிப்பன் பில்டிங் வாசலில் முனிசாமி ஜெயராமனை வழி அனுப்பினான்.

போய்ப்பேசு அந்த நாடாரண்ட! அன்னிக்கு ஒரு பேபி டாக்ஸி வெச்சு அவர இட்டுக்கினு வா! மேல பார்த்தமே அவரு எதுனா செஞ்சு தருவாரு!”

சீஃப் எஞ்சினீயரே முடியாதுன்னுட்டாரே! இவர் எப்படி முனிசாமி..?”

இவுரும் நாடார்தாம்ப்பா! எதுனா செய்வாரு? சொன்னதச்செய்! போ போ!”

ஜேராமா! நீயே போய்ப்பார்த்துட்டு வந்துடு! எங்களால இன்னமே ஆஃபிசுக்கு லீவு போட முடியாது!”

ஹேய்! எனக்கும் அன்னைக்கு ஃப்ளைட் உண்டேட்டியா?”

ஆண்டனியும் ஒதுங்கிவிட, ஜெயராமன் தனியாகப்போய் கோவிந்தசாமி நாடாரிடம் விஷயத்தை விளக்க, ஒரு வழியாக அவர் வியாழக்கிழமை ரிப்பன் பில்டிங்குக்கு வரச்சம்மதித்தார்.

வியாழக்கிழமை கோவிந்த சாமி நாடாருடன் ஒரு பேபி டாக்ஸி பிடித்து ரிப்பன் பில்டிங்குக்குப்போனார் ஜெயராமன்.

உக்காருங்க நாடாரே! முனிசாமி! சார வெளில காத்துருக்கச்சொல்லு!”

வா! அதான் சொல்ட்டாரே! வாசல்ல காத்தாட நிப்போம்!”

என்ன முனிசாமி! தனியா என்ன பேசுவாரு நாடரோட?”

உனுக்கேன் அதெல்லாம்? காரியம் பழமானா போறாதா?”

 அரைமணி கழிந்த பின் கோவிந்த சாமி நாடார் வெளியே வந்தார். முகத்தில் சந்தோஷக்களை. முனிசாமி ஜெயராமனைக்கூப்பிட்டுக்கொண்டு உள்ளே போனான்.

பாருங்க! நாடார் கடையக்காலி பண்ண ஒப்புக்கிட்டார். அவருக்கு வடக்கால திருவாமூர் டெப்போ இருக்குது பாருங்க அங்க இத மாதிரி ஒண்ணரை மடங்கு பெரிய எடம் புறம்போக்குலேர்ந்து தரப்போறோம். அவரு கையெழுத்து போட்டுக்குடுத்துட்டாரு. நீங்க ஒரு லெட்டர் எழுதி, அதான் இன்னது இன்னதுன்னு என்னாண்ட குடுத்துட்டு போங்க! சாங்கஷன் வந்துரும்!”

ஜெயராமனுக்கு ஆனந்த அதிர்ச்சி!

ரொம்ப நன்றிங்க! எங்களுக்கு பெரிய ஒதவி! உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு…!”

அதெல்லாம் ஒண்ணூம் வாணாம்! உங்க தெருவுக்கு என்ன பேரு வெக்கப்போறீங்க?”

இன்னம் முடிவு பண்ணலியே? மத்தவங்கள கேக்கணுமே!”

காமராஜ நாடார் பேரு வெப்பீங்களா? உங்க ஆளுங்க ஒப்புக்குவாங்களா?”

ஆஹா நிச்சயமா ஒப்புக்குவாங்க! நானே அவங்க கிட்ட பேசறேன்!”

சரி போய்ட்டு வாங்க! நாளைக்கு வரும்போது ஒரு லெட்டர்ல இந்த மாதிரி எங்க தெருவுக்கு பேரு வெக்கறதா நாங்க எல்லாரும் முடிவு பண்ணியிருக்கோம்னு எழுதி அல்லார் கையெழுத்தும் போட்டு கொண்டு வர்ரீங்களா?”

நிச்சயமா வரேங்க!”

எங்கள் தெருவுக்கு காமராஜ் அவென்யூ என்று பேர் வந்த கதையை, லேசான ஜுரம் வந்து க்ரோஸின் சாப்பிட்டு ஓரளவுக்கு தேவலையான ஜெயராமன், ஐ மீன், என் அப்பா, இன்று காலை தான் என்னிடம் சொன்னார். (ஜூலை 27, 2018).

ஜூலை 27 - அப்பாவின் நினைவு நாள்