பேர் வந்த கதை
”என்ன இப்படி சொல்றீங்க?”
”ஆமாம்! உங்க எல்லோருக்குமே தெரியுமே! நீங்க வாங்கியிருக்கற எடத்துக்கு வடக்குப்பக்கம் வய வெளிதான், கப்பி ரோடுமாதிரி ஒரு பாதைதான் இருக்கு. அது போய் எல் பி ரோடுல சேர்ரதுக்கே வழியில்லாம வெறகுத்தொட்டி அடச்சிக்கெடக்கே!”
“அந்த வெறகுத்தொட்டி ரொம்ப நாளா இருக்காமே சார்?”
“சரிங்க! ஆனா நம்ம கார்ப்பரேஷன் ரூல்படி அப்ரூவல் தரமுடியாதே! நா என்ன பண்ணட்டும்?”
”சார்! நீங்க சீஃப் எஞ்சினீயர்! நீங்கதான் ஏதாவது பாத்து பண்ணனும்! நாங்கள்ளாம் ஆயிரம் ரெண்டாயிரம் குடுத்து ப்ளாட் வாங்கிட்டோம்!”
“இதப்பாருங்க எனக்கு ரூல் படிதான் எதுவுமே செய்யமுடியும்! ஒரு திசையில அப்ரோச்சே இல்லாம சாங்க்ஷன் பண்ணுங்கன்னா நா எப்படிங்க பண்றது?”
ஜெயராமனும் வைத்தியநாதனும் ராகவாச்சாரியும் ஆண்டனியும் டாக்டர் சங்கரியும் சோகத்துடன் வெளியே வந்தார்கள்.
“நா அப்பவெ சொன்னேன், இந்த சதர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்கிட்டல்லாம் ப்ளாட் வாங்க வாண்டாம்னு! ஜெயராமன் தான் பிடிவாதமா வாங்கணும்னான். இப்ப பாரு காசபோட்டுட்டு கையைப்பிசைஞ்சுண்டு நிக்கறோம்!”
வைத்தியநாதன் முணுமுணுத்தார்.
” ஆரானு மலையாளி யுண்டோ இங்க? ஜாரிக்கட்டும்! ஞான் பேசும் அவண்ட்ட!”
இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் ஆண்டனி குரல் கொடுத்தார்.
“அட போய்யா! இப்ப போய் மலையாளியைத்தேடணூமா?”
இதில் கலக்காமல் ஜெயராமன் மெல்ல அந்தப்யூனை அணுகினார்.
“இன்னா சாங்கஷன் கெடிக்காதுன்னுட்டாரா எஞ்சினீயரு?”
சீஃப் எஞ்சினியர் அறை வாசல் ப்யூன் கேட்டார்.
“ஆமாம்பா!”
“அங்க என்னா சங்கடம்னு சொல்லேன்?”
“ஜேராமா! வா அவனோட என்ன பேச்சு? காண்டீனுக்குப்போலாம்!பசிக்கறது!”
ராகவாச்சாரி குரல் கொடுத்தார்.
“த பாரு! உன் சகா கூப்பிடறாரு! நீ போ! எனக்கென்ன?”
“ராகவாச்சாரி! நீங்கள்ளாம் போங்கோ! நா அப்புறமா சாப்பிட்டுக்கறேன்!”
“ஏன் உனுக்கு வவுறு இல்லியா?”
“நீயும் வாயேன்ப்பா! இப்ப சாப்பாட்டு டைம்தானே!ஆமா உம்பேர் என்ன?”
“எம் பேர் முனிசாமி! சரி வா! காண்டீனுக்குப்போலாம்!”
முனிசாமிக்கு ஏதாவது வாங்கித்தந்து அவன் மூலம் ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்க்க ஜெயராமன் அவனுடன் காண்டீனுக்குப்புறப்பட்டார்.
”ஓ வா போலாம்!”
“இப்ப சொல்லு! என்ன அங்க சங்கடம்?”
“நாங்க ஏழெட்டு பேர் அடையாறுல ப்ளாட் வாங்கிட்டோம்! வடக்கு பக்கம் வய வெளிதான். ஆனா அதுக்கு நடுவுல ஒரு வெறகு தொட்டிக்கட போட்டிருக்கு! ரொம்ப வருஷமா இருக்கானாம்! அத்த தாண்டிப்போனாத்தான் எல் பி ரோடுக்கு வழி! இப்படி ஒரு பக்கம் அடச்சிட்டா சாங்க்ஷன் கிடைக்காதுங்கறாரு உங்க எஞ்சினீயரு!”
”ஆமா சர்த்தானே! இவுரு சாங்க்ஷன் குடுத்து நீ பாட்டுக்கு வூட்ட கட்டிப்பே! ஒரே வருஷத்துல நீயே வந்து புகார் பண்ணுவே! இந்த மாதிரி வடக்கு பக்கம் ரோடு வேணும்! பொண்டுக புள்ளீங்கள்ளாம் சுத்திப்போவ வேண்டியிருக்குது. ரொம்ப சிரமமா இருக்குன்னுவ! சொல்வியா மாட்டியா? அதான் ரூல் போட்ருக்காங்க!”
” அது சரிதான்ப்பா! ஆனா ரெண்டாயிரம் ரூவா போட்டு ப்ளாட் வாங்கிட்டமே! இப்ப சாங்க்ஷன் குடுக்கல்லீன்னா எங்க நெலமய யோசிக்க வாணாமா?”
“அதாரு அவன் அங்க போய் வெறகு தொட்டி போட்ருக்கான்?”
“யாரோ கோவிந்த சாமி நாடாராம்! பல வருஷமா அங்கவே இருக்காராம்! நல்ல மனுஷன் தான். ஆனா கடைய எடுக்கச்சொல்ல முடியுமா?”
“நாடாருங்களா? நாயத்த சொன்னா கேப்பாருங்களே அவுங்க! நீ பேசிப்பாத்தியா?”
“ஒரு மாதிரி ஜாடை மாடையா கேட்டுப்பாத்துட்டோம்! ஒண்ணும் முடியாது போலத்தெரியுதுப்பா!”
”இந்தா எங்கணக்கு எட்டணா!”
”அடேடே! அதெல்லாம் வாணாம்! நான் வாங்கித்தர்ரதா இருக்கட்டுமே!”
”இன்னாத்துக்கு? நீ என்ன எனக்கு மாமனா மச்சானா? எஞ்சாப்பாட்டுக்கு நா துட்டு தரேன்! நீயும் கஷ்டப்பட்டுதானே சம்பாரிக்கற? தோ ரெண்டயிரத்த நெலத்துல போட்டுட்டு அல்லாடறியே!”
இதற்குள் வைத்தியநாதன் ராகவாச்சாரி குழு சாப்பிட்டுவிட்டு வாசலில் நின்றார்கள்.
“உன் ஆளுங்கள்லாம் போறாங்க பாரு!”
”சரி நா வரேன்! அடுத்து என்ன்னு புரியல!குழப்பமா இருக்கு!”
”நா ஒண்ணு சொல்றேன் கேப்பியா?
”சொல்லு முனிசாமி!”
”ந்ந்தாண்ட என்னோட கொஞ்சம் வா!”
ஜெயராமன் அந்தப்யூன் பின்னாடிப்போனார்.
சோகையான படிகள் கொண்ட அந்த மாடியில் ஏறி, நீண்ட வெராண்டாவில் நடந்து அழுக்குப்பச்சை பெயிண்ட் மங்கின கதவுக்குப்பின்னால் பேப்பர் குப்பைகள் குவிந்திருந்த பல மேஜைகளைத்தாண்டி ஒரு வித உலோகச்சத்தத்துடன் மெதுவாகச்சுற்றிக்கொண்டிருக்கும் ஃபேனுக்கு அடியில் மேஜையின் மேல் டிஃபன் பாக்ஸ் வைத்து தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அணுகினான் முனிசாமி. ஜெயராமனும் குழப்பத்துடன் அவன் பின்னால் நின்றார்.
மேஜை ஆசாமி இவர்களைக்கவனிக்காமல் நிதானமாக தோசையை விள்ளல் விள்ளலாகச்சாப்பிட்டார். ஒரு விள்ளலில் மிளகாய்ப்பொடி அதிகம் போலும், லொக்கென்று இருமி அருகிலிருந்த அலுமினிய டம்ளரில் தண்ணீர் குடித்தார். அடுத்த பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து, டிஃபன் டப்பாவை மூடி துணியில் சுற்றி பைக்குள் வைத்தார். எழுந்து போய் கை கழுவிக்கொண்டு வந்து வேஷ்டி நுனியில் வாய் துடைத்துகொண்டார். ”த்ர” என்று ஏப்பம் விட்ட பின் முனிசாமியை முதன் முதலில் பார்ப்பது போல பார்த்தார்.
“என்ன முனிசாமி! இவ்ளோ தூரம்?”
முனிசாமி அவருக்கு அருகில் போய் மெல்லிய குரலில் பேசினான். ஜெயராமன் கொஞ்சம் அசௌகரியமாக நின்றார். முனிசாமி ஜெயராமனை கை காட்டி அழைத்தான். அந்தப்பெரியவர் பேசினார். குரலில் ஜலதோஷமோ மூக்குப்பொடியோ தெரிந்தது.
“அங்க போய் ப்ளாட் வாங்கினீங்களா?”
ஜெயராமன் மையமாக புன்னகை.
“ரோடு அப்ரோச் இல்லேன்னா சாங்க்ஷன் ஆவாதே!”
மறுபடி அதே மையப்புன்னகை.
“வெறகுத்தொட்டி கடைக்காரர் பேரு என்ன?”
“கோவிந்தசாமி நாடார்!”
“விருதுநகரா இல்ல நார்கோவிலா?”
“தெரியலையே!”
“விருதுநகராத்தான் இருக்கும்! வெறகு தொட்டியில்ல?”
:உங்க ப்ளாட் மேப் இருக்குதா? இல்லேன்னா லொகேஷன் குடுத்துட்டு போங்க! அடுத்த வாரம் புதன், இல்ல வாணாம், வ்யாழன் அன்னிக்கு முடிஞ்சா அந்த நாடாரையும் இட்டுக்கினு வந்து என்னப்பாருங்க!”
ரிப்பன் பில்டிங் வாசலில் முனிசாமி ஜெயராமனை வழி அனுப்பினான்.
“போய்ப்பேசு அந்த நாடாரண்ட! அன்னிக்கு ஒரு பேபி டாக்ஸி வெச்சு அவர இட்டுக்கினு வா! மேல பார்த்தமே அவரு எதுனா செஞ்சு தருவாரு!”
“சீஃப் எஞ்சினீயரே முடியாதுன்னுட்டாரே! இவர் எப்படி முனிசாமி..?”
“இவுரும் நாடார்தாம்ப்பா! எதுனா செய்வாரு? சொன்னதச்செய்! போ போ!”
”ஜேராமா! நீயே போய்ப்பார்த்துட்டு வந்துடு! எங்களால இன்னமே ஆஃபிசுக்கு லீவு போட முடியாது!”
“ஹேய்! எனக்கும் அன்னைக்கு ஃப்ளைட் உண்டேட்டியா?”
ஆண்டனியும் ஒதுங்கிவிட, ஜெயராமன் தனியாகப்போய் கோவிந்தசாமி நாடாரிடம் விஷயத்தை விளக்க, ஒரு வழியாக அவர் வியாழக்கிழமை ரிப்பன் பில்டிங்குக்கு வரச்சம்மதித்தார்.
வியாழக்கிழமை கோவிந்த சாமி நாடாருடன் ஒரு பேபி டாக்ஸி பிடித்து ரிப்பன் பில்டிங்குக்குப்போனார் ஜெயராமன்.
“உக்காருங்க நாடாரே! முனிசாமி! சார வெளில காத்துருக்கச்சொல்லு!”
“வா! அதான் சொல்ட்டாரே! வாசல்ல காத்தாட நிப்போம்!”
“என்ன முனிசாமி! தனியா என்ன பேசுவாரு நாடரோட?”
”உனுக்கேன் அதெல்லாம்? காரியம் பழமானா போறாதா?”
அரைமணி கழிந்த பின் கோவிந்த சாமி நாடார் வெளியே வந்தார். முகத்தில் சந்தோஷக்களை. முனிசாமி ஜெயராமனைக்கூப்பிட்டுக்கொண்டு உள்ளே போனான்.
“த பாருங்க! நாடார் கடையக்காலி பண்ண ஒப்புக்கிட்டார். அவருக்கு வடக்கால திருவாமூர் டெப்போ இருக்குது பாருங்க அங்க இத மாதிரி ஒண்ணரை மடங்கு பெரிய எடம் புறம்போக்குலேர்ந்து தரப்போறோம். அவரு கையெழுத்து போட்டுக்குடுத்துட்டாரு. நீங்க ஒரு லெட்டர் எழுதி, அதான் இன்னது இன்னதுன்னு என்னாண்ட குடுத்துட்டு போங்க! சாங்கஷன் வந்துரும்!”
ஜெயராமனுக்கு ஆனந்த அதிர்ச்சி!
“ரொம்ப நன்றிங்க! எங்களுக்கு பெரிய ஒதவி! உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு…!”
“அதெல்லாம் ஒண்ணூம் வாணாம்! உங்க தெருவுக்கு என்ன பேரு வெக்கப்போறீங்க?”
“இன்னம் முடிவு பண்ணலியே? மத்தவங்கள கேக்கணுமே!”
“காமராஜ நாடார் பேரு வெப்பீங்களா? உங்க ஆளுங்க ஒப்புக்குவாங்களா?”
“ஆஹா நிச்சயமா ஒப்புக்குவாங்க! நானே அவங்க கிட்ட பேசறேன்!”
“சரி போய்ட்டு வாங்க! நாளைக்கு வரும்போது ஒரு லெட்டர்ல இந்த மாதிரி எங்க தெருவுக்கு பேரு வெக்கறதா நாங்க எல்லாரும் முடிவு பண்ணியிருக்கோம்னு எழுதி அல்லார் கையெழுத்தும் போட்டு கொண்டு வர்ரீங்களா?”
“நிச்சயமா வரேங்க!”
எங்கள் தெருவுக்கு காமராஜ் அவென்யூ என்று பேர் வந்த கதையை, லேசான ஜுரம் வந்து க்ரோஸின் சாப்பிட்டு ஓரளவுக்கு தேவலையான ஜெயராமன், ஐ மீன், என் அப்பா, இன்று காலை தான் என்னிடம் சொன்னார். (ஜூலை 27, 2018).
ஜூலை 27 - அப்பாவின் நினைவு நாள்
Excellent JR Sir. Pranams to your father🙏
ReplyDeleteதாங்க் யூ! உங்க பேரைப்போடப்படாதா?
DeleteWhat a sweet incident to remember your father by. On a different note, is this entirely true or...as Vaadhyaar says part trye and part imagination?
ReplyDeleteகொஞ்சூண்டு..........உடான்ஸ்!
ReplyDeleteகொஞ்சம் தாமிரத்தை கலந்தால் தான் தங்கம் ஆபரணமாகும்.
Deleteஉடான்ஸ்னாலும் எப்படி எங்கே என்று கண்டுபிடிக்க முடியாத படியான டான்ஸ்.
So every Road has got a history behind its name.
DeleteIs there Raguram Boulevard in Munich?
"புதுசா வந்த நகர்களில் உள்ள ஐயமார் வீடுகளில் அடுப்பெரிக்க வெறகு வேணுமேன்னு, திரு. கோவிந்தசாமி அண்ணாச்சி முஞோசனையாத்தொட்டி வச்சிருந்தாரோ என்னவோ?
ReplyDelete( 'லீக்கோ'லேசுல க்டைச்சிருக்காதே)
சுதாகர், சென்னை 91
As always great story and a great tribute sir...
ReplyDeleteAt the start when I read the character's name and location "Adyar", I understood that this is going to be a personal story..
Warm regards.
S. Jothilakshmi
ReplyDeleteகாமராஜ் அவென்யூ பெயர் காரணம் சூப்பர் …அப்பா கிரேட் 🙏
ONCE AGAIN YOU SIMPLY ROCKS SIR. CONGRATULATIONS 👏🏿🎉🎉🎉🎉🎉🎉
ReplyDeleteWith BEST WISHES AND REGARDS RANGRAJAN SRIDHAR 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
ReplyDeleteExcellent Sir.. ஒரு மாசமா தவிச்சு போய்ட்டேன். இன்னிக்குதான் Arkay சார் மூலமா இந்த blog லிங்க் கிடைச்சுது! 🙏 Have to catch up with the previous posts!
ReplyDeleteOh yes! My Facebook account has been hacked! Welcome! I shall inform you of my blog writing hereafter! I miss your travel posts!
Deleteவந்துட்டேனே! லிங்க் கிடைச்சு வந்துட்டேனே!
ReplyDeleteEven if you go to the other end of the world கண்டுபிடிச்சி வந்துடுவோம். என்ன WIFI
மத்தபடி கதை கொஞ்சம் எமோஷனல்.
வாங்க வாங்க! மிக்க மகிழ்ச்சி! ரெகுலரா படிச்சு கமெண்ட் போட்டுடுங்க!
Deleteஅந்தக்காலம் ஹூம் . ,,! இனி அது போல் தீர்வு காண்பவர்களையும், தனிப்பட்ட எதிர்பார்ப்பு இல்லாதவர்களையும் திரையிலும் காண முடியாது. முடியாது என்று சோர்ந்து போகாமல், எல்லோர் சார்பிலும் முயன்ற உங்கள் அப்பாவுக்கு நமஸ்காரம். உதவ நினைக்கும் பியூன் இனி எங்கே இருக்கிறார்!
ReplyDeleteR. Jagannathan.
Karanapper - oru kaariyam nalla vidhamaaga aanatgarkku antha peru ! /Vasu
ReplyDeleteFind remembrance worth repetition
ReplyDelete