(நவீன விருட்சம் நூறாவது இதழில் வெளிவந்த என் சிறுகதை.....).
”அந்த ஃபோட்டோவில்.....!”
அது இருக்கும் நாப்பது வருஷத்துக்கு முன்னாடி.
ஒலக்கூர் தெரியுமோ, அதான் திண்டிவனத்துக்கு ரெண்டு ஸ்டேஷன் முன்னாடி வருமே, அதான்.
அங்குதான் பாட்டி தாத்தா வீடு இருந்தது. ஸ்டேஷனுக்கு கொஞ்ச
தூரத்திலேயே பெரிய வீடு. ஊரில் பண்ணை வீடு என்பார்கள். அப்பவே பண்ணையெல்லாம்
காலியான பெருங்காய டப்பாவாகிவிட்டது. ஆனால் வீடு மட்டும் இருந்தது. இரண்டு
மாமாக்கள் குடும்பங்கள் மற்றும் பாட்டி.
எனக்கு நேரடிப்பாட்டி கூட இல்லை. என் அம்மாவின் பெரியம்மாதான்.
ஆனால் ரொம்ப ஆசையான பாட்டி. லீவுக்குப்போனால் வித விதமான பட்சணங்கள் தருவாள்.
மிளகா, புளியெல்லாம் போட்டு ஒரு மாதிரி
துகையல் மாதிரி உருட்டி உருட்டி தயிருஞ்சாதத்தோடு மத்தியானம் கையில் வைத்து
சாப்பிடக்கொடுப்பாள்.
“ரெண்டாந்தரம் சாப்டாதான் உடம்புக்கு நல்லதுடா!
ம், சாப்பிடு!”
மத்தியானங்களில்தான் எனக்கு பாட்டியோடு பேசும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அகலவாட்டு மித்தத்தின் இடது பக்கம் தூணின் மீது சாய்ந்துகொண்டு பெரிய முறத்தில் எதையோ வைத்துக்கொண்டு புடைத்துக்கொண்டிருப்பாள். சில நாட்களில் பெரிய பெரிய கொத்துக்கொத்தாய் கருவேப்பிலை ஆய்வாள். இன்னும் சில நாட்களில் சின்னச்சின்ன நெல்லிக்காய்கள் கொட்டி வைத்திருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாய் எடுத்து நறுக்கி, கொட்டை விலக்கி என் சைஸுக்கு இருக்கும் ஜாடியில் போட்டு வைப்பாள்.
சாப்பிட்ட கையோடு கொஞ்ச
நாழி பாட்டியோடு பேசுவேன். சுவாரஸ்யமாக ஏதானும் சொல்லுவாள். நானும் விடாமல் கேள்வி
கேட்டுக்கொண்டிருப்பேன். இந்த சுவாரஸ்யம் குறைய ஆரம்பிக்கும்போது பாட்டி
எழுந்துவிடுவாள்.
“போடா! தூரம்னாள் மாதிரி என்னோட என்ன பேச்சு!
போ, மாடில ஊஞ்சல் ஆடேன்!”
விரட்டிவிடுவாள்.
அன்று அப்படித்தான் விரட்டி விட, மாடிக்குப்போனேன்.
தாத்தாவின் பழைய அலமாரி எனக்கு எப்பவுமே ஆதர்சம். ஆதர்சம்
என்றால் அலமாரியில்லை. அதில் இருக்கும் புத்தகங்கள். மணிக்கொடி ஏன் விநோத ரஸ மஞ்சரி கூட
இருக்கும், பார்த்திருக்கிறேன். பழைய கலைமகள்,
கலைக்கதிர், மஞ்சரியெல்லாம் பைண்டு செய்து
வைத்திருக்கும். ஒன்றிரண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர், கு
பா ராவின் கதை, அப்புறம் ஒரு சிகப்பு கலரில் காலிகோ பைண்டிங்
செய்யப்பட்ட அட்லாஸ், ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரி, அதில் முதல் சில பக்கங்கள் கிழிந்து Dயிலிருந்துதான்
ஆரம்பிக்கும்.
ஒரு கலைமகள் பைண்டிங் பார்த்ததும் உருவினேன்.
புரட்டிக்கொண்டே வரும்போது பொத்தென்று காலில் ஏதோ விழுந்தது.
“தாத்தா அலமாரியில் புஸ்தகம் எடுக்கும்போது
ஜாக்கிரதையா எடு! பூச்சி பொட்டு இருக்கும். பாத்து! தேள் கூட இருக்கும்!”
பயந்து போய் நகர்ந்தேன்.
விழுந்தது ஒரு பழைய ஃபோட்டொ. குப்புற விழுந்திருந்தது.
எடுத்துப்பார்த்தேன். அந்தக்கால கறுப்பு வெள்ளை ஃபோட்டொ. பின்னால் ஏதோ மரம்.
ஒட்டினபடி சுவர். அதற்கு முன் ஒரு சின்னப்பெண் நின்றபடி ஃபோட்டொ. தெரிஞ்ச சாயல்
முகம். ரெட்டைப்பின்னல். தொளதொளவென பாவாடை. கையில் பஃப் வைத்த சட்டை. சிரிப்போ
சிரிப்பு, வாய்கொள்ளாமல்.
ஃபோட்டோ நன்றாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பழைய
புரோமைட் டெக்னாலஜியினால் மங்கிப்போயிருந்தது. மேல் பக்கம் ஒரு வித சோகையில் அந்த
பாசிடிவ் பிரிண்ட் நைந்தும் ஓரங்களில் அரித்தும் காணப்பட்டது.
இன்னும் உற்றுப்பார்த்தேன்.
சுவரோரமாக அந்தப்பெண் நின்றுகொண்டிருந்தாள். பின்னால்
அந்தச்சுவற்றின் மேல் புரத்தில், பெண்ணின்
தோள் பட்டைக்கு வலது பக்கத்தில் இரண்டு கைகள் தெரிந்தன. சுவற்றுக்கு அந்தப்பக்கம்
நின்றபடி, ஒளிந்துகொண்டு, ஆனால்
சுவரில் ஏற முற்படுவது போன்ற பிடியுடன். இல்லை, அவசர
அவசரமாக கு்தித்த மிச்சத்தில் இன்னும் கைகள் பற்றியிருந்ததோ?
கைகளை மட்டும் வைத்துக்கொண்டு பின்புறம் உள்ள ஆசாமியின்
உருவத்தையோ இல்லை வேறு குணாதிசயங்களையோ நிர்ணயிக்க முடியவில்லை.
அது சரி, யார்
இந்தப்பெண்?
எடுத்துக்கொண்டு கீழே ஓடினேன். பாட்டி இப்போது சம்பிரமமாக
உட்கார்ந்துகொண்டு மாகாளியில் தோல் உரித்துக்கொண்டிருந்தாள். இந்தப்பக்கம் பெரிய
பெரிய இரண்டு பக்கெட்டில் தண்ணீருக்குள் மாகாளிக்கிழங்குகள். இந்தப்பக்கம் உரித்த
மாகாளிகளை ஒரு மாபெரும் உருளியில் போட்டுக்கொண்டிருந்தாள். அருகில் போய்
உட்கார்ந்தேன்.
“பாட்டி, இதப்பாரு!”
“என்னடா இது?”
”ஃபோட்டொ கெடச்சுத்து? யாரு
இது? நம்ம வீட்டுலயா?”
“எங்க காமி, பாக்கலாம்!”
பார்த்தபோது ஒரு சின்ன அதிர்ச்சியோ?
”இதெங்கடா எடுத்தே?”
”ஏதோ ஒரு புஸ்தகத்துக்கு நடுவுல
இருந்திருக்கு பாட்டி! ரொம்ப முக்கியமானதா?”
”அதெல்லாம் ஒண்ணுமில்ல!”
கொஞ்சம் அவசரமாகச்சொன்ன மாதிரி பட்டது. அதையே
பார்த்துக்கொண்டிருந்தாள். உற்றுப்பார்த்தாள். பெருமூச்சு.
“யாரு பாட்டி அது?”
”தெரியலடா! நம்ம ஒறவுக்காரா யாரானு
இருக்கும். தாத்தாதான் வரவா போறவா எல்லாரையும் ஃபோட்டொ எடுப்பாளே!”
”இல்ல பாட்டி, முகம்
ரொம்ப தெரிஞ்சா மாதிரி இருக்கு!”
”ஆமாண்டா நீ ரொம்ப கெழவன்! தெரியும் ஒனக்கு!”
பாட்டி முகத்தில் இது வரை காணாத ஒரு வெட்கமா, இல்லை, கூச்சமா?
“பாட்டி, நெஜத்த சொல்லு,
இது நீதானே?”
”சே சே நானா? என்னை
யாரு ஃபோட்டொ எடுத்தா? எம்மூஞ்சிக்கு ஃபோட்டொ வேற கேட்கறதா?”
”இல்ல இல்ல! பாட்டி இது நீதான், இப்ப தெரியறது! இதப்பார், கண்ணு மூக்கு அப்படியே
இருக்கு!”
பாட்டி பேசவில்லை. கைகள் ஃபோட்டோவை அனிச்சையாக என்னிடம்
கொடுத்தது. மறுபடி ஸ்பூனால் மாகாளி எடுத்து உரிக்க ஆரம்பித்தாள். கண்கள் வெறிக்க
வேறெங்கோ பார்த்தன.
பாட்டிக்கு அருகில் போய் நின்றேன்.
“இங்க பாரு பாட்டி, ரெண்டு
கை தெரியறது பாரு! இது யாரோட கை?”
“போடா போய் வெளையாடு! அதான் தெரியலைங்கறேனோ?
சும்மா சும்மா வேல செய்யவிடாம தொந்தரவு பண்ணிண்டு! போடா!”
எப்பவும் இல்லாத ஒரு ஆக்ரோஷமாக ஒலித்தது அவள் குரல்.
சட்டென்று நகர்ந்தேன். அதற்குள் ஃபோட்டொ வைத்திருந்த என் கையில் ஒரு துளி தண்ணீர்
சொட்டு தெறித்தது.
வென்னீர் மாதிரி சூடாக இருந்தது.
ஓட்டிப்போய்விட்டேன்.
அடுத்த லீவு வருவதற்குள் பாட்டி செத்துப்போய்விட்டாள்.
OLD MEMORIES NEVER FADE SIR. FANTASTIC CLIMAX . Congratulations Sir. GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER. WITH REGARDS RANGRAJAN SRIDHAR 👏🏿 👏🏿 👏🏿 👏🏿 👏🏿 👏🏿 👏🏿 👏🏿
ReplyDelete.
Thank you
Deleteதந்த போது "சின்ன அதிர்ச்சியோ?"விலேயே கதை புரிந்து விடுகிறது; அது இருக்கட்டும், மாகாளிக்கிழங்கு ரசிகர்களில். நீங்க எந்த ரகம்?
ReplyDelete" அய்யே,மரவட்டை நாத்தம்" க்ரூப்பா/ மாகாளிக்காக, "இன்னொரு கரண்டி தயிர்சாதம்" குரூப்பா?
"இன்னொரு கரண்டி தயிர்சாதம் குரூப்புதான்! ஆமா, பேரை எழுதிடக்கூடாதா? யாருன்னே தெரியலியே!!
ReplyDeleteஅடியேன் சுதாகர்; சுவாமி, ஒலக்கூர் பாட்டி வந்து நடுங்கிய, நரம்போடிய கைகளால், 'டப்னு' ,publish செய்துவிட்டாள்
Deleteசுவருக்குப் பின் இருந்த அந்த கைகளுக்கு சொந்தக்காரர், பாட்டியின் எக்ஸ்?
ReplyDelete👌
Deleteஅனுபவம் தான் கதை! கொஞ்சம் கற்பனை ! இரண்டும் உங்களுக்கு நிறையவே இருப்பது தெரியும். ஒரு சுவாரசியத்துடன் வாசகரின் ஊகத்தை , கற்பனையைத் தூண்டும் முடிவு. அற்புதம்.! எனக்கு, தாத்தாக்கள், பாட்டி,கள், வாழ்க்கை எல்லாம் அந்த வயதில் வாய்த்ததில்லை. ஆனாலும் நிறைய படித்து உணர்ந்திருக்கிறேன்.. சைதாப்பேட்டை பெரியப்பா பையன் அதில் பெரிய மரப் பெட்டி. நிறைய,பைண்ட் செய்த புத்தங்கள் படித்திருக்கிறேன் லீவின் போது.!
ReplyDeleteR. Jagannathan.
அருமை!
Deleteபெரிய குத்துப்போணியில் கெட்டித்தயிர் விட்டுப் பழயதைப் பிசைந்து வட்டமாய் உட்கார்ந்த குழந்தைகளின் கைகளில் கட்டை விரலால் குழிக்கச் சொல்லி அதில் கீரைங்குழம்பைக் குத்தி ஆசையாய் சாப்பிட வைக்கும் என் (நம்) பாட்டியை நினைவில் கொணரும் அருமைக் கதை 🧡 ராம்கி
ReplyDelete👍
Deleteபோட்டோ ஆத்துக்குள் இருந்து எடுத்தது யார் என்று தெரிந்தால், பின்பக்க வீட்டு இளைஞன் யார் என்று சொல்கிறேன்!!!
ReplyDelete- R. Jagannathan.
கதையிலேயே வருதே..தாத்தா எடுத்த ஃபோட்டோதான்!
DeleteGuess பண்ணிட்டேன். மனம் கணத்துப்போச்சு
ReplyDeleteSeethapathy Sridhar
😒
DeleteKrish கதை interesting. கை?
Deleteதாத்தா தான் யாரானும் பார்த்திட போறான்னு சுவர் ஏறி குதிச்சிருப்பார்.
ReplyDeleteஅந்த காலத்தில் காதல் கத்திரிக்காய்ன்னு விவகாரங்கள் எல்லாம் கிடையாது. பின்நாட்களில்
வாசல் வழியாக வந்து பொண் பார்க்கும் சம்பிரதாயம் எல்லாம் நடந்திருக்கும்.
இந்த மாதிரி எதிர்பார்க்காத
சந்தர்ப்பங்கள் தான் உங்களுடைய கதை சொல்லும் பாங்கிற்க்கு விதை விதைச்சு இருக்கும்.
சிறிதாக இருந்தாலும் விறுவிறுப்பும் ஆவலும் நிறைந்த கதை.
ஃபோட்டோ எடுத்ததே க்தாத்தாதானே! அப்ப சுவர்ல ஏறிக்குதிச்சது....??
Deleteஓ. அப்ப யாரோ வாத்தியார் ஆத்து இல்ல அக்கம் பக்கத்து பையனோட சிநேகிதம் இருந்து, தாத்தா பெருந்தன்மையாகவாழ்க்கை நடத்திருக்கிறார்.
Deleteஅப்படித்தான் இருக்கும்
ReplyDeleteI have read your stories so many. ஆனால் இப்போது ஏனோ லாசாரா ஞாபகம் வருகிறார்.. Not Sujatha.
ReplyDelete