Thursday, 10 October 2019

நாளைய கதையரங்கம் 11, அக்டோபர், 2019...

ஹீரோ கிளைமாக்ஸில் மட்டும் வரும் கதை

”என்ன அவினாஷ்! எப்படி இருக்கீங்க?”

நல்லா இருக்கேன் சார்! என்னம்மா! சார் ஒழுங்கா டையட் கண்ட்ரோல்ல இருக்காரா?

”இல்ல டாக்டர்….!”

”நீ சும்மா இர்ரீ! அவள ஏன் கேக்கறே அவினாஷ்? நானெல்லாம் நல்ல கண்ட்ரோல்தான்!”

ரிப்பொர்ட் கொண்டு வந்தீங்களா?”

”இதோ!”

“Fasting 210 இருக்கே! என்ன சாப்டீங்க?”

”ஒண்ணும் இல்ல அவினாஷ்! போன வாரம் மச்சுனியோட பிள்ளைக்கு கல்யாணம். தவிர்க்க முடியல. சாப்டுங்க சாப்டுங்க அத்திம்பேர்னு ஒரே வற்புறுத்தல். அதனால…”

”அதனால..”?

”ஒரே ஒரு டம்ளர் பாயசம் சாப்டேன் டாக்டர்!”.

”என்ன சுந்தரம் இது? நான் எவ்ளவு தரம் சொல்லியிருக்கேன்? நீங்க அக்யூட் ஷுகர் பேஷண்ட். ஆச்சு, இதோ எட்டு வருஷம். இன்னும் கண்ட்ரோல் வரவேயில்ல. இப்படி இருந்தா ரெடினா ப்ராப்ளம் வந்தா கண்ணு போய்டும், பரவாயில்லியா?”

”என்ன டாக்டர் பயமுறுத்தறீங்க?” ஒரே ஒரு டம்ளர்தான் பாயசம்!”

”பொய் சொல்றீங்க! Hb1ac 10க்குமேல இருக்கு. நிச்சயம் 400க்கு மேல எகிறியிருக்கு நடுவுல!”

“நான் ஏன் டாக்டர் பொய் சொல்லப்போறேன்!
சுந்தரம் அவினாஷை கடு கடுவென கோபித்துக்கொண்டார்.

”பின்ன என்ன சார்? வாராவாரம் ஒரு ப்ராப்ளமோட வர்ரீங்க.?”

”என்னை என்ன பண்ணச்சொல்றீங்க? என் நிலமை அப்படி!”

“என்ன மேடம்! நீங்களாவது அவரோட சாப்பாட்டை கண்ட்ரோல் பண்ணக்கூடாதா?”

”நீங்க வேற டாக்டர்! என்னப்பாடு படுத்தறார் தெரியுமா? என்னமோ நாந்தான் இவருக்கு டையபெடிஸ் வரவழைச்சு இவரைக்கொல்ல முயற்சி பண்றேன்னு ரேஞ்சுக்கு பேசுவார்! என்னால முடியவேயில்ல இவரோட!”

”போறுண்டி என்னப்பத்தி டாக்டர்கிட்ட கோழி சொல்லியாரது! தப்பாரு அவினாஷ்! உன்னால என்னை ட்ரீட் பண்ண முடியல! எனக்கு பெரியவர்ட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தா! நா அவர்ட்டயே பேசிக்கறேன்!”

“யாரு பெரியவரா? கிழிகிழின்னு கிழிச்சுடுவார் உங்கள!”

“ அடப்போய்யா! ஜெனரலாஸ்பத்ரின்னா இப்படி அரைகுறையா இருப்பேளா?

”என்ன அரைகுறை எங்க கிட்ட பாத்துட்டீங்க சார்?”

”அவினாஷ்! இதப்பாரு! டைஜெஸ்டில போட்ருக்கான். இன்ஸுலின் 35 யூனிட் தரணுமாம். அமெரிக்காவுல அதுதான் ஆவரேஜாம். நீ எனக்கு பத்து யூனிட்டுதான் போடற. அதான் எனக்கு ஷுகரே குறைய மாட்டேங்கறது!”

அவினாஷுக்கு லேசாகத்தலையில் முணுக் முணுக்கென வலிக்க ஆரம்பித்தது.

“சுந்தரம்! இது நம்ம ஊர். நீங்க பரம சாத்வீகம். வெங்காயம்கூட மாசத்துக்கு ஒரு தரம் சாப்பிடற ஆசாமி. உமக்கு இது போறும்! அவன் Red Meat அப்படியே முழுங்குவான்யா! அவனுக்கு 35 யூனிட் தாங்கும்! உமக்கு ஒரு நாள் போட்டால் உடம்பு சில்லிட்டுப்போய் மயங்கி விழுந்து ரகளை பண்ணிடுவீர்!”

”நோ! ஐ வில் கம்ப்ளெயின்!”

“நீங்க எங்க வேணா கம்ப்ளெயின் பண்ணுங்கோ! இந்த மருந்தெல்லாம் என்ன ரெகுலரா சாப்ட்டாலும் டையட் கண்ட்ரோல் இல்லேன்னா ஒண்ணும் சரியாகாது! சொல்லிட்டேன்! நீங்க போகலாம்!”

“என் உடம்பு எனக்குத்தெரியும் நா பாத்துக்கறேன்!”

கடுகடுவென சுந்தரம் வெளியேற அவினாஷ் அலுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் அவினாஷ் ஸ்டான்லியில் 4008 ஏ டையாலிஸிஸ் மெஷின் டெமோ பார்த்துவிட்டுத்திரும்பும்போது வார்டில் ரகளை.
சுந்தரம் படுத்துக்கிடந்தார்.

”என்ன ஆச்சும்மா?”

”தெரியல டாக்டர்! ஆனா இன்னிக்கு வீட்டுல சண்டை!”

”கத்தினாரா? பிரஷரா?”

ஈசிஜி எல்லாம் எடுத்திருந்ததால் அவினாஷ் ரீடிங் பார்த்தான்.. நார்மலாகவே இருந்தது.

“ஒண்ணும் இல்ல டாக்டர்! எப்போதும்போல சின்ன விஷயம்தான். சண்டை வந்துடுத்து! நானும் கத்திட்டேன். இவர் பேசாம போய்ப்படுத்துண்ட்டார்.

நானும் கோபத்துல வந்து படுத்துண்டேன். ஏதோ மொனகற சத்தம் கேட்டுத்தேன்னு திரும்பிப்பாக்கறேன். பேந்த பேந்த முழிச்சார். நாக்கை நீட்டி நீட்டி சப்புக்கொட்டினார். தொப்பென்னு தல சாஞ்சுது. அதான் பயந்து போய் ஆஸ்பத்ரிக்கு ஃபோன் பண்ணினேன். உடனே கொண்டு வாங்கன்னுட்டா. வந்துட்டோம்.!

”சரி, ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஹார்ட் ஃபங்‌ஷனெல்லாம் சரியாத்தான் இருக்கு! என்ன சாப்ட்டார்?”

”ஒண்ணுமே சாப்பிடலை டாகடர்!”

”வாட்? ஒண்ணுமே சாப்பிடலையா?”

“ஆமா டாக்டர், மருந்து சாப்ப்டுட்டு அரை மணிக்கப்புறமா கிச்சனுக்கு சாப்பிட வந்தார். எதோ பேசினோம். சண்டை வந்துடுத்து. சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு போய்ப்படுத்துண்ட்டார்!”

”ஓ! ஹைபொக்ளைசீமியா!”

”என்னம்மா இது? அவர் டையபெடிக் ஆச்சே! மருந்து சாப்பிட்டா ஏதானும் சாப்பிட வேண்டாமா? அதான் ஷுகர் லெவல் 70க்கு கீழே போயிருக்கு!”

ஒரு மாதிரி தேற வைத்து அடுத்த நாளே அவினாஷ் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

அடுத்த நாளும் அவினாஷ் ஸ்டான்லிக்குப்போய் விட்டு லேட்டாக வந்தான்.

வார்டில் இன்னொரு ரகளை. ப்யூலாதான் காத்துக்கொண்டிருந்தாள்.

“அவினாஷ்! எங்க போய்ட்டே?”

”ஸ்டான்லில டையாலிஸிஸ் மெஷின் டெமோ! பெரியவருக்கு தெரியுமே?”

”இன்னாவோ போ! பெரியவர் இப்பத்தான் இந்தக்கேஸை அட்டெண்ட் பண்ணிட்டு ரூமுக்குப்போனார்! அவினாஷ் வந்ததும் என்னைப்பாக்கச்சொல்லுன்னு உறுமிட்டுப்போனார்! உடனே வா!”

“என்ன ஆச்சு ப்யூலா? என்ன அமர்க்களம்?”

”இந்தக்கெய்வி இருக்கே இது குய்யொ முய்யோன்னு கத்திக்கினே வந்துது. புருஷங்காரன் மயக்கம் அட்ச்சி விழுந்துட்ருக்கான்! உம் பேஷண்ட்டாமே?”

அவினாஷுக்கு மறக்கவில்லை. போன வாரம் இருவரும் வந்திருந்தார்கள்.

”மூணு மாசமா ஒல்லியாக்கினே வர்ராருங்க. ஒயுங்கா சாப்பிடறதில்ல! அத்தோட மைனரு தண்ணி வேற அடிக்கிறாரு!”

“ என்னய்யா,?” – அவினாஷ் மிரட்டினான்.

”அதொண்ணுமில்லீங்க. அன்னிக்கு ஒரு தபா ஒடம்புல ஒரே வலி. ரிக்‌ஷா இஸ்க்க முடியல. அதான் ஒரே ஒரு க்வார்ட்டர். இந்தா கெய்வி! சொம்மா இருக்க மாட்டே? ஐய்யாவாண்ட இதெல்லாம் சொல்லிக்கினு!”

டெஸ்டெல்லாம் பண்ணிப்பார்த்ததில் டையபெடிஸ் 400க்கு மேல இருந்தது.

கிளைசிபேஜும் ஜி பியும் கொடுத்தான்.

“இந்தப்பா இந்த மருந்த விடாம சாப்பிடணும், சாப்பிடறதுக்கு அரை மணி நேரம் முன்னால இத சாப்பிடணூம், என்ன? க்வார்ட்டரெல்லாம் கண்ணுலயே காட்டக்கூடாது, தெரிஞ்சுதா?”

”அய்யே! கையால தொடுவேனா இனிமேல!”

”ஆமாம் ப்யூலா! இன்னிக்கு என்ன ஆச்சு?”

”சத்தங்கேட்டு அந்தப்பக்கமா போன பெரியவரே வண்ட்டாரு! டெஸ்ட் பண்ணிட்டு கெய்வி கூட பேசினாரு. இன்னிக்கு சவாரியே கெடக்கலியாம். அதனால ஒண்ணுமே சாப்புடாம இருந்திருக்காரு! ஆனா நீ குடுத்த ரெண்டு மருந்தையும் சாப்ட்டிருக்காரு! ஷுகர் லெவல் எறங்கி ஆசாமி மயக்கம் அட்ச்சிட்டாரு!”

அதே ஹைபோக்ளைசீமியா!

“பெரியவர் க்ளுககான் இஞ்செக்‌ஷன் போட்டு பாஞ்சு நிமிஷத்துக்கப்றமா சாப்பாடு குடுக்கச்சொல்லிட்டு போனாரு! சரி வா! லேட்டானா என்னைக்குதறிடுவாரு!”

ப்யூலாவின் பின் பலி ஆடு மாதிரி அவினாஷ் போனான். உள்ளே பார்த்தால் சுந்தரம் உட்கார்ந்து பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவினாஷுக்கே பி பி எகிறியது.

“வா அவினாஷ்! இப்பத்தான் சுந்தரம் உன்னைப்பத்தி பேசிட்டு இருந்தார்!”

சுந்தரம் இப்போது பெருமிதத்துடன் அவினாஷைப்பார்த்து சிரித்தார். இரண்டாம் புலிகேசி ஹர்ஷ்வர்த்தனரை ஜெயித்தபோது இப்படித்தான் சிரித்திருக்க வெண்டும் என்பது போல வெற்றிக்களிப்புச்சிரிப்பு. என்ன சுந்தரம் கொஞ்சம் கேனத்தனத்துடன், சிரித்தார். கொஞ்சம் தோளைகுலுக்கிக்கொண்டு பேசினார்.

“வெல் டாக்டர் வைகுண்டம்! உங்க எக்ஸ்பீரியன்ஸ் மத்தவாளுக்கு வந்துருமா! அவினாஷ் இன்னும் ஜூனியர்தானே?”

“இருங்க சுந்தரம்! நான் விஜாரிக்கறேன்! அவினாஷ்?”

”எஸ் புரொஃபசர்?”

”என்ன மருந்துகொடுத்திருக்கே?”
“மிக்ஸ்டார்டு ட்வைஸ் ய டே 10 யூனிட்ஸ்!”

ம்!”

“கிளைஸிஃபேஜ் 1ஜி. ஹாஃப் யன் அவர் பிஃபோர் ஃபுட்!”

ம்!

”அண்ட் வெரி ஸ்டிரிக்ட் நான் ஸ்டார்ச்சி டையட்! அண்ட் புரொஃபஸர்..?”

”சொல்லு அவினாஷ்?”

“இவருக்கு ந்யூட்ரிஷன் தெராபி தேவை! வெரி இண்டிஸிப்ளிண்ட் டையட்ரி ஹாபிட்ஸ்!”

சுந்தரம் கொதித்தார்.

“அவினாஷ்! என்ன என்னைப்பத்தி என்னென்னவோ சொல்றீங்க? வைகுண்டம் சார்! அதெல்லாம்….!”

“ஷட் அப் சுந்தரம்! என்ன எலிமெண்டரி ஸ்கூல்னு நெனச்சீங்களா? அவினாஷ் ஈஸ் ஒன் ஆஃப் தி பெஸ்ட் டாக்டர்ஸ் ஹியர்! உங்க ட்ரீட்மெண்ட் ரொம்ப கரெக்ட்!”
“டைஜெஸ்டுல் இன்சுலின் 35 யூனிட்டுன்னு சொன்னேனே?”

“அப்ப இங்க வராதீங்க! டைஜெஸ்டைப்பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க!”

“இல்ல..?”

“என்ன இல்ல? சுந்தரம்! உங்க Hb1ac 10க்குமேல இருக்கு! டாம்மிட்! வெளையாடறீங்களா? என்னம்மா! உங்க புருஷனுக்கு பால் பாயசமா? கண் போய்டும், பரவாயில்லையா? தப்பாருங்க சுந்தரம்! அவினாஷ் குடுக்கற மருந்த சாப்ட்டு, டையட் கண்ட்ரோல்ல இருந்து ஷுகரக்குறைங்க! இன்னும் மூணு மாசத்துல Hb1ac ஏழுக்கு வரலைன்னா இன்னமே இந்த ஆஸ்பத்ரி பக்கமே வரக்கூடாது! கெட் அவுட்!”

சுந்தரம் குப்பையாக எழுந்து போக, மாமி லேசாகச்சிரித்தது போல இருந்தது அவினாஷுக்கு.

அவன் நகர முற்படுவதற்குள் பெரியவர் வெடித்தார்.

“அவினாஷ்! என்ன டாக்டர் நீ? ஒரு ஷுகர் பேஷண்ட்ட ஒழுங்கா கவனிக்கத்தெரியல! டு ஐ நீட் டு செண்ட் யூ ஃபார் ய ரெஃப்ரெஷர் கோர்ஸ்?”

“என்ன புரொஃபஸர்?”

“அந்த ரிக்‌ஷக்கார கிழவருக்கு என்ன குடுத்திருக்க?”

“அவருக்கு ஷுகர் 300 க்கு மேல போஸ்ட் பராண்டியல்.!”

“சோ?”

“அதான் கிளைஸிஃபேஜும் ஜி பியும் குடுத்தேன்.”

” என்ன சொல்லிக்குடுத்தே?”

“சாப்பிடறதுக்கு அரை மணி முன்னால மாத்திரை எடுத்துக்கணும்னு..?”

“மை ஃபுட்! அந்தக்கிழவர் ரிக்‌ஷாக்காரன்யா! தினமும் கூலி கெடச்சாத்தான் சாப்பிட முடியும்! அவ்ர்ட்ட ப்ரீ டையட் மெடிகேஷன் குடுத்தா, பாவம் ஆசாமி இன்னிக்கு சம்பாத்தியம் இல்ல.அதனால சாப்பிடல. ஆனா கரெக்டா மாத்திரைய முழுங்கிட்டாரு. என்ன ஆச்சு?”

“ஓ சாரி வெரி சாரி புரொஃபசர்!

ஹைபொக்ளைசீமியா!”

”எஸ்! அவினாஷ்! மெடிக்கல் அறிவு மட்டும் போறாது! நாம இருக்கறது ஜெனரல் ஆஸ்பத்ரி! பிரைவேட் கிளினிக் இல்ல. இங்க வரவங்க எல்லாரும் மூணு வேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதமில்லாதவங்க! பேஷண்ட்ட பார்த்து பிரிஸ்கிரைப் பண்ணனும்! முதல்ல அந்தக்கிழவருக்கு டோஸேஜை மாத்து. சாப்பிட்டப்றம் எடுத்துக்கற டிரக்ஸ் பிரிஸ்கிரைப் பண்ணி அனுப்பு!”

“ஓகே புரொஃபசர்!”

”கெட் கோயிங்! டோண்ட் வேஸ்ட் மை டைம்! ப்யூலா! அங்க என்ன மந்தமா நிக்கறே? அந்த மையோகார்டியல் ரிஸர்ச் ரிப்போர்ட் எடுத்துண்டு நிர்மலாவ வரச்சொன்னெனே! க்விக்!”

டாக்டர் வைகுண்டத்தின் இன்னொரு சாதாரண நாள்.

No comments:

Post a Comment