Thursday, 19 September 2019

நாளைய கதையரங்கம் (20, செப்டம்பர்,2019) கதை இன்றே!!
பரம்பரைச்சங்கிலி
சின்ன ராமிரெட்டிக்கு அவன் பேர் பிடிக்கவேயில்லை. நினைவு தெரிந்த நாட்களிலேயே அம்மாவிடம் சண்டை பிடித்திருக்கிறான்.
“ ஏமிரா! கொள்ளுத்தாத்தாவோட தாத்தா பேரு இதி!
“ இன்னா பேரோ இன்னமோ? பள்ளியூடத்துல பசங்க கேலி பண்றாங்கம்மா”
”அப்படி சொல்லாதடா தொங்கரா கொடுக்கா! உங்க தாத்தா நெல்லூர்லேர்ந்து இங்க வந்தபோது வெறும் கட்டட வேல செய்ய வந்தாரு. இப்பம் உங்கப்பாரு காண்ட்டிராக்ட் பண்ணராரே அதெல்லாம் அவரு சம்பாரிச்சதுப்பா! அதான் அவுரு பேரு உனுக்கு வெச்சிருக்காங்க. நீயும் பெரிய காண்டிராக்டா வரணும், என்னா?”
சின்ன ராமி ரெட்டி ஒருவாறு தன் பெயரின் கேலியை மறந்து பள்ளிப்படிப்பு முடிந்த கையுடன் அப்பாவுடன் காண்டிராக்டுக்குப்போக ஆரம்பித்தான். முதலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், எடுபிடி வேலை செய்ய ஆரம்பித்து மெதுவாக வாராந்திரக்கூலி கொடுத்துப்பைசல் பண்ணும் அளவுக்கு முன்னேறிவிட்டான்.
அப்பாவின் தோளுக்கு உயர்ந்த தோழனாய் வளர 1970களில் அப்பா “ நீயே பாத்துக்கடா” என்று ஒதுங்கி விட்டார்.
தன் மூதாதையரின் சொந்த ஊரான கங்கபட்டினத்தை நினைவு கூறும் வகையில் கங்கா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் திராவிடக்கட்சிகளின் வட்ட, மாவட்டங்களின் தோழமையோடு ராமி ரெட்டி சின்ன சின்ன கவர்மெண்ட் வேலைகளுக்கான காண்ட்ராக்டை கட்சி முக்கியஸ்தர்களின் சின்ன வீட்டு அம்மா பெயரில் பினாமியாக எடுத்து வேலை செய்ய ஆரம்பித்து நிமிரலானான்.
மாசம் தவறாமல் பினாமிதாரருக்கு கப்பம் கட்டுவதில் எந்தக்குறையும் வைக்காததினால் ராமி ரெட்டி கட்சி சம்பாத்ய வட்டாரத்தில் நம்பத்தகுந்தவனாக ஏற்றுக் கொள்ளப் பட்டான். வடக்கு சென்னையில் சின்ன காண்ட்ராக்ட் வந்தால் கங்கா கன்ஸ்ட்ரக்ஷனுக்கு என்று வட்ட, மாவட்டங்கள் சிபாரிசு செய்யும் அளவுக்கு ராமி ரெட்டி ஒத்துழைப்பு அளித்தான்.
ராமி ரெட்டியின் குடும்பம் கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னமேயே அப்போதைய மெட்ராசுக்குக்குடி பெயர்ந்த தெலுங்குக்குடும்பம்.
நெல்லூரில் பெண்ணையாற்றுக்கு தெற்கே உள்ள கங்கபட்டினம் தான் ராமிரெட்டியின் கொள்ளுத்தாத்தனுக்கும் தாத்தனுக்கு சொந்த ஊர். நிலபுலமெல்லாம் இரண்டு போகம் வைத்துப்பயிர் செய்த அந்த சீனியர் கொள்ளுத்தாத்தன் கோதண்டராமி ரெட்டி ஊரில் நல்ல பெயரோடுதான் இருந்தான், சிலக்கம்மாவின் வரவு வரை.
”பொழக்க வந்தோம்” என்று சிலக்கம்மாவும் அவளின் சகோதரன் எனப்பட்ட ஒரு ரெண்டுங்கெட்டான் ஆசாமியும் ஊரின் ”பெத்த மனுஷர்” பேர் பெற்ற கோதண்ட ராமி ரெட்டியின் அரவணைப்பை நாடினர்.
சிலக்கம்மா இருபத்திரெண்டு வயசுக்கு மீறின உடல் வாகோடு, பின்னாளில் கோதண்ட ராமி ரெட்டி வெளியே சொல்ல விரும்பாத அனுபவ முதிர்ச்சியோடும் இருந்தது அவருக்கு உவப்பாகவே போயிற்று. சம்பாதித்த சொத்துக்களை சாராயத்திலும், புகையிலையிலும் நெருப்புக்கங்கு உள்ள நுனியை வாய்க்குள் வைத்து சாம்பிராணி அளவுக்குப்புகை விடும் சிலக்கம்மாவின் அணைப்பிலும் கிறக்கத்திலும் அவளின் அபரிமித வளைவுகளிலும், அவளின் அளவில்லாத நகை ஆசையிலும் கோட்டை விட்டார். மசால் வடை கிடைத்த எலி போல அவள் க்ரீச்சீட்டது முழுக்க முழுக்க நடிப்பு என்பதும், அதற்கும் தன் ஆண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்பதும் கோதண்ட ராமி ரெட்டிக்குத்தெரியவே இல்லை.
திப்பு சுல்தான் தன் இரண்டு மகன்களை கும்பினியின் ஆளுமையில் பணயமாக இருக்கப்பணித்து, மைசூர் ராஜஸ்தானத்தின் சில பகுதிகளை லார்ட் கார்ன்வாலிஸுக்கு விட்டுக்கொடுத்து ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தத்தில் கயெழுத்திட்ட 1792 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி அன்றுதான் கோதண்ட ராமி ரெட்டி இருந்த அந்தப்பெரிய வீட்டை சிலக்கம்மா எழுதி வாங்கி அவரைத்துரத்திவிட்டாள்..
தாத்தா கோதண்டராமிரெட்டி கட்டின துணியுடன் கங்கபட்டினத்தைத் துறந்தார்.
அவர் கையில் துணி மூட்டையுடன் மனைவியையும் ஒரே மகனையும் அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறி நடந்த போது ரீரிகார்டிங்கில் போல வாத்திய சத்தமோ ”சோ” வென மழையோ பெய்ததாக விவரம் ஏதுமில்லை.
தெற்கு நோக்கி நகர்ந்து அவரின் சகலை இருந்த, புலிகாட்டு ஏரியின் அருகில் அண்ணாமலைச்சேரிக்கு வந்து சேர்ந்தார். சகலை இன்னொரு ரெட்டி, கோதண்டராமிரெட்டி போல இல்லாமல் மனைவிக்கு விசுவாசி. சமர்த்தாக கட்டிட வேலை பார்த்து சொத்து சேர்த்து வைத்திருந்தான். அவன் மனைவி செட்டாக குடும்பம் நடத்தி தனக்கென்று சில நூறு சவரன் தங்கமாகத்தேக்கிவிட்டிருந்தாள். தன் திருமணத்திற்காக ஜபர்தஸ்துடன் மானாவாரியாகச்செலவழித்த அக்கா, மாமாவுக்கெல்லாம் மசியாமல் நெற்றி நிறைய குங்குமத்துடன் அக்காளை தள்ளியே நிறுத்தி விட்டாள்
“த பாரு! இவுரு கான்டிராக்ட்டுல வேலை தரச்சொல்றேன். கிடைக்கிற சம்பளத்தை வெச்சு வாழக்கத்துக்கோ, விசேஷம் தவிர இங்கல்லாம் வந்து இழையக்கூடாது”.
சகோதரியின் மகனை அறவே வெட்டினாள்.”
” கொடுக்கா! எம்பையனோட வெளையாட, அது இதுன்னு இங்க வந்தே…”
கோதண்டராமி ரெட்டி கட்டிட வேலைக்குப்போனார். கூடவே மகனும் போனான்.
.
கோதண்ட ராமி ரெட்டி ஒன்றிரண்டு வருடங்கள் சகலை காண்டிராக்டில் வேலை செய்து ஒன்று பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை. தானும் காடிராக்ட் எடுத்துச்செய்யப் போவதாச்சொல்ல, தங்கை பிலு பிலு வென பிடித்துக்கொண்டாள்.
” என்னை நம்பி வந்தபோது இவுருதானே கை கொடுத்தாரு? இப்ப இவருக்கு எதிரவே போட்டியா தொழில் பண்ணப்போறீங்களா?
கோதண்டராமி ரெட்டி தகரறு வேண்டாமே என இன்னும் தெற்குக்கு நகர்ந்து மெட்ராசுக்கு வந்து சேர்ந்தார்.
அவர் வந்த 1792 ஆம் வருட நேரம், ஃபர்ஸ்ட் லைன் பீச் ரோடில் கொஞ்ச்ம் கொஞ்சமாகக்கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. துபாஷி ஒருத்தனை ஸ்னேகம் பிடித்த கோதண்ட ராமி ரெட்டி அவன் எடுத்த காண்டிராக்டை அதைவிட குறைவான விலைக்குத்தாமே கட்டித்தருவதாக்கூற, அந்த சாமர்த்திய துபாஷி உட்கார்ந்த இடத்தில் லாபம் பார்க்கலாமே என் அந்த முழு காண்டிராக்டையுமே தாத்தா ராமி ரெட்டியிடம் தந்து விட்டான்.
நான் அறிந்த வரையில் சரித்திரத்தில் எழுதப்படாத முதல் அவுட்ஸோர்ஸிங் இதுதான் என்பேன்.
அது முதல் தாத்தா ராமிரெட்டி சப்காண்டிராக்டர் ஆனார்.
துபாஷி தன் செல்வாக்கையும் தன் ஆசை நாயகியின் ஸ்பரிச ஸுகந்த மிதுன சாமர்த்தியத்தில் கும்பினிக்காண்டிராக்டுகளை எடுத்து ராமிரெட்டியிடம் தந்து அந்த ”டாப் அப்” மார்ஜினில் கொழிக்க, கோதண்டராமி ரெட்டியும் ஏதோ கைக்கும் வாய்க்கும் எட்டிய அளவில் சம்பாதித்து வந்தார்.
அதே வருடத்தில்தான் ஃபர்ஸ்ட் லைன் பீச் ரோடில் வியாபாரிகளில் சௌகரியத்துக்காக கட்டப்படப்போகிற (Bentinck”s Building) பெண்டிங்க்ஸ் பில்டிங்குக்கான அஸ்திவாரம் போடப்பட்டது.
இன்று ராஜாஜி சாலை என்றும் அந்த நாளில் ஃபர்ஸ்ட் லைன் பீச் ரோடு என்றூம் அழைக்கப்பட்ட அந்த கம்பீர ராஸ்தா 1750களில் படு முக்கியமான ராஜபாட்டை. ஆனாலும் இப்போது போலல்லாமல் கடல் அலைகள் அவ்வப்போது வந்து தழுவும் அளவுக்கு கடல் பகுதி முன்னேறி இருந்தது. கிழக்கே துறைமுகம் உருவாகிக்கொண்டிருக்க, ராஸ்தாவின் அந்தப்பக்கம் ஒன்றன் பின் ஒன்றாக பல வியாபாரக்கட்டிடங்கள் தோன்றின. வியாபாரம் பெருகப்பெருக துறைமுகமும் விரிந்து ராஸ்தாவும் அகலமாகிப்போய், கடலும் சிணுங்கியவாறே பின்னால் நகர, அந்த இடமே ஒரு முக்கிய ஸ்தலமாக ஆயிற்று. அங்கு வியாபாரம் வைத்திருப்பது ஒரு அந்தஸ்து என்கிற அளவில் உயர்ந்த இடமாயிற்று.
1798 ஆம் ஆண்டு ராபர்ட் க்ளைவின் மகனும் அன்றைய கவர்னருமான எட்வார்ட் இரண்டாம் க்ளைவ், ” எல்லாம் கிளம்புங்க! கோட்டை இனிமே ஆட்சிக்கு மட்டும் தான்” என்று வியாபார விசாரங்களை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பினார். அதனால் வியாபாரிகளுக்கு துறைமுகம் அருகே இருந்து வியாபார வேலைகளைக்கவனிக்க இடம் அவசியமானதாக இருந்தது. இதை உணர்ந்த கவர்னர், ஃபைர்ஸ்ட் லைன் பீச் ரோடில் இருந்த மரீன் யார்டை சமனப்படுத்தி கட்டிடம் கட்ட அனுமதி அளித்தார். கட்டுவதற்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்கப்பட்ட போதே தாத்தா ராமி ரெட்டிக்கு மூக்கில் வியர்த்துவிட்டது.
துபாஷியிடம் வேப்பிலை அடிக்க ஆரம்பித்தார்.
“ பெர்ஸா காட்ராக்க்டு வருமுங்க”
அடப்போடா! இம்மாம் பெரிய வேலைக்கெல்லாம் துரைங்களே முன்ன வந்துருவாங்க. நமக்கெல்லாம் ஒண்ணும் பேராது”
இல்லீங்க, கடக்கால் எடுக்கறது, உள்ள சின்ன சின்ன கட்டு வேல, பூசு வேல இதெல்லாம் நாம வாங்கிக்கலாமுங்க. நீங்க வாங்குங்க நா செய்து தாரன். லாபம் பாக்கலாமில்லீங்க
அப்படீன்ற? சரி சுப்பராம அய்யரண்ட கேட்டுப்பாக்கறன்! அய்யரு பலே ஆளு!
யாரு சுப்பு அய்யருங்களா? மைலாப்பூர்லேந்து வர்ராரே அவுரா?
தெரியுமா ஒனுக்கு?
அந்த ஆர்பரு கூற போட்டமில்லை, அப்பவே அவுரு வீட்டுக்கு வேணும்னு எங்கிட்ட சொல்லி ரெண்டு மூணூ ரீப்பர் கட்ட எடுத்துக்கிட்டு போனாரு
டேய்! ரீப்பரா? அது பர்மா தேக்காச்சே! என்னாண்ட சொல்லவே இல்லியே நீயி? நானும் கொஞ்சம் எட்த்திருப்பேன் இல்ல?
நம்ம வூடுதான் நல்லா இருக்கே தொர?
நம்ம வூடு இல்லய்யா! சிந்தாதிரிப்பேட்ட வூட்டுக்கு!
சின்னம்மா வூட்டுக்கா? இந்த தபா நானே போட்டுர்ரேனே! நீங்க இந்த காண்டிராக்ட வாங்குங்க ஆண்டே!
ஒரே மாதத்தில் துபாஷி முப்பதாயிரம் ரூபாய்க்கான காண்டிராக்டை எடுத்து விட்டார்.
த பாரு ரெட்டி! இருபதாயிரம்தான் உனுக்கு! பேசாம முடிச்சுக்குட்த்துட்டு பணத்த வாங்க்கினு போ! என்னா நாஞ்சொல்றது?
கை கடிக்குங்க! ஒரு நாலாயிரம் போட்டு இருபத்து நாலாயிரமாக்கொடுங்க. நம்ம சிந்தாதிரிப்பேட்ட வூட்டுக்கு வேற ரீப்பர் போடணும்
நல்லா சமயம் பாத்து கேப்பய்யா! சரி இருபத்து ரெண்டாயிரத்துக்கு முடி! மேல பேசாத! அப்புரம் பாரு, பெரிய காண்ட்ராக்ட்! தொரைங்கள்லாம் இனிஸ்பெக்சனுக்கு வருவாங்க. உன் ஆளுங்க கிட்ட சொல்லி வை, இது என்னோட காண்ட்ராக்டுன்னு”
அதெல்லாம் நா பாத்துக்கறங்க
பெரிய தொரைங்கள்ளாம் வந்து பாத்துட்டு போனப்புறம் நீ உள்ள நுழ, சரியா?
என்ன இன்னிக்குதான் ஆரம்பமா ராமி ரெட்டி?
ஆமாமுங்க
என்ன எதுக்கய்யா கூப்ட? அங்க தொர என்னத்தேடிக்கினு இருப்பாரு
அய்யா! முத முத பெரிய கட்டிட வேல. காலங்காலமா நிக்க வாணாமா?
அதுக்கு நா என்ன பண்ணனும்
இந்த ஈசானிய மூலையில் முதல்ல ஒரு கடக்கால் எடுத்து சின்னதா மேடை கட்டி கல்லு பூஜ ஒண்ணு போட்டுர்லாமுங்க!
என்னது கல்லு பூஜையா? இன்னாய்யா புதுசா இருக்கு?
புதுசெல்லாம் இல்லீங்க! எங்க பக்கம் சின்ன வீடு கட்டறதா இருந்தாக்கூட கல்லு பூஜ பண்ணுவோமுங்க. முதல்ல உனக்கு பூஜ பண்றேன். நீதான் இங்க எல்லாத்துக்குமே அஸ்திவாரமா நிக்கப்போற. எந்தவித வில்லங்கமும் இல்லாம முழுக்கட்டடம் வருஷத்துக்கும் ஸ்திரமா நிக்கணும்னு வேண்டுதலை”
சரி சரி சீக்கிரமாப்பண்ணு ரெட்டி, எனக்கு போகணூம்.
கோதண்டராமிரெட்டி ஏற்கனவே நான்குக்கு இரண்டடி ஆழம் தோண்டச்செய்திருந்தார். சட்டென்று கல்லையும் சுண்ணாம்பையும் சிமிண்ட்டையும் வைத்து மளமளவென மேடை எழுப்பினார். கொல்லுறு வைத்து தளத்தை சமனப்படுத்தினார். சிமிட்டிப்பாலை ஊற்றினார். அதன் நாலு புறமும் குங்குமம் சந்தனம் இட்டார். விளக்கேற்றினார்.
வாங்க அய்யா! முத வேண்டுதல் நீங்கதான். நல்லா வேண்டிக்கிங்க! கட்டடம் நூறு வருஷம் இருக்கவேணும்னு.
இருந்தது.
நூறு வருஷம் மட்டுமில்லை, 193 வருஷங்கள்!
கட்டு வேலை முடியும் வரை அந்த முதல் மேடை பல விதங்களில் உதவியாகியது.
“சிமிட்டி மூட்டைங்கள்லாம் எடுத்து வை.எண்ணி மேடைமேல வெய். அப்புறமா நா வந்து கணக்கு பாக்கறேன்”
” எல்லாம் அந்த மேடை கிட்ட போய் நில்லுங்க. கூலி குடுக்க இதோ நா வர்ரேன்”
“ வெள்ளிக்கிழம படையலா? அதோ அந்த மேட மேல போடு”
“ வாங்க துபாஷி! டேய்! மெடையத்துடச்சு வய்யி. அய்யா உக்காரணுமில்ல”
” அய்யா! தபாருங்க! நாலு ரீப்பர் கட்டைங்க மேட மேல வெச்சிருக்கன். வழுவழுப்பும், மரத்துல கண்ணும் பாத்தீங்க இல்ல? சும்மா ஸல்லான தேக்குங்க! தபால் வண்டி வரும்போது இதயும் எட்த்து உள்ள வெச்சி சிந்தாதிரிப்பேட்டைல எறக்கிடச் சொல்லிடுங்க”
“ டேய்! என்ன வேல முடிஞ்சுதா? மேடயக்கழுவினியா? அதச்செய்யிடா முதல்ல! பறக்கறியே வீட்டுக்குப்போக”
மேடையும் கடக்காலும் வெளி சுவர்களும் சிமிண்ட்டுப்பூச்சு வேலயும் செய்து கோதண்ட ராமி ரெட்டி காசு பார்த்தார். துபாஷிக்கும் ஆனந்தம். சுளையாக எட்டாயிரம் ரூபாய் உட்கார்ந்த இடத்தில் லாபமாகியது.
“துபாஷி! உன்னுடைய ஆட்கள் நல்லா வேலை செய்தார்கள்”
துரையே பாராட்டின செய்தி கோதண்ட ராமி ரெட்டிக்கும் சொல்லப்பட்டது.
அபாரமாகக்கட்டிமுடிக்கப்பட்ட அந்தக்கட்டிடத்துக்கு, 1803இலிருந்து 1807 வரை மெட்ராஸில் கவர்னராக இருந்து பின்னார் கல்கத்தாவில் கவனர் ஜெனெரலாகப் பதவி ஏற்ற, லார்ட் வில்லியம் பெண்டிங்கின் பெயர் கோலாகலமாகச்சூட்டப்பட்டது. (Bentinck’s Building). இந்த லார்ட் பெண்டிங்குதான் சதி ஒழிப்பை சட்டமாக்கியவர். அதோடு மெக்காலே முறை கல்வியையும் நீதி வழக்கையும் நடைமுறைப்படுத்தியவர்.
பெண்டிங் மாளிகை மூன்று மாடிகள், ஒவ்வொன்றும் 27000 சதுர அடி பரப்பு. மிகக்கனமான இரும்பு ஜன்னல்கள், தேக்கு மர இழைப்பு, கல் தூண்கள். அந்தக்காலத்தில் ரூபாய் 3, 60,000 ஆயிற்று என்கிறது சரித்திரக்குறிப்பு. இந்தக்கட்டிடத்தின் தூண்கள் ஒவ்வொன்றும் இடிக்கப்பத்து நாளுக்கு மேலாயிற்றாம் என்பதை நீங்கள் பின்னால் படிக்கப்போகிறீர்கள்..
அந்த ஆண்டு வரை மெட்ராசுக்கு கப்பலில் வரும் வெளி நாட்டு சரக்குகள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன் தான் இறக்கிவைக்கப்படும். ஏனென்றால் கஸ்டம்ஸ் என்னும் சுங்க இலாகா அப்போது கோட்டைக்குள் இருந்து இயங்கி வந்தது. கவர்னர் க்ளைவ் மற்ற வியாபாரங்களுடன் கஸ்டம்ஸையும் வெளியே போய் இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கோட்டைக் கதவைச் சாத்திவிட்டதை மேலே சொன்னோம். ஆக கஸ்டம்ஸும் இந்த பெண்டிங் மாளிகைக்கு குடி பெயர்ந்த்து.
இங்கே இருந்த வியாபாரக்கம்பெனிகள் நன்றாகக்கொழித்த நிலையில் தத்தம் சொந்த இடத்துக்குக்குடி பெயர ஆரம்பித்தனர். அன்றைய மெட்ராஸ் மாகாண சுப்ரீம் கோர்ட், ஆம், சுப்ரீம் கோர்ட் தான், 1817இல் பெண்டிங் மாளிகைக்குள் நுழைந்தது. 1861இல் மெட்ராஸ் ஹை கோர்ட் உருவானபின், பெண்டிங் மாளிகை மெட்ராஸ் கலெக்டரேட்டாக மாறியது
அங்கிருந்து வேறு இடங்களுக்கு குடியேறின வியாபாரக்கம்பெனிகளில் முக்கியமானது பாரி கம்பெனி. 1803 ஆம் ஆண்டே ஃபர்ஸ்ட் லைன் பீச் ரோடில் கார்னர் ப்ளாட்டைப்பிடித்த பாரி கம்பெனி அங்கு ஒரு அபாரமான அலுவலகத்தைக் கட்டிகொண்டது. கட்டிட அமைப்பு Indo-saracenic edifice style கட்டிடக்கலையைச்சார்ந்தது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். அப்போதே அந்த இடத்துக்கு பாரி முனை என்றபெயர் ஏற்பட்டதாக சரித்திரம் சொல்கிறது!
ஆரம்பகாலத்தில் பௌர்ணமி தினங்களில் கட்டிட வாசல் சுவற்றில் அலை வந்து மோதியதாகத்தெரிகிறது! தாமஸ் பாரிக்கு அடுத்து கம்பெனியின் தலைவரான சர் ஜெ.டபிள்யு டேரின் (J W Dare) பெயரால் டேர் ஹௌஸ் என்றழைக்கப்பட்டது அந்த கட்டிடம்.
ஆனால் இப்போது இருக்கும் டேர் ஹௌஸ் அதுவல்ல. 1940ஆம் வருடம் அந்தக்கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு இப்போது நாம் பார்க்கும் டேர் ஹௌஸ் கட்டப்பட்டது.
என்னா ரெட்டி! கங்கா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எப்படி போய்க்கினு இருக்கு?
அதுக்கென்னங்க நல்லாவே போகுது! நம்ம மாவட்டச்செயலர் இருக்கும்போது எனக்கென்ன்ங்க கவலை?
எங்கல்லாம் இப்ப வேல செய்யற?
வள்ளுவர் கோட்டத்துல கொஞ்சம் காண்ட்ராக்ட் பண்ணினேன். அப்புறம் நம்ம ரிப்பன் பில்டிங்கில மராமத்து, கோட்டைய்ல கூட பின்னாடி அன்க்சீன்னு ஒரு பத்து மாடிக்கட்டடம் கட்டினபோது நாந்தான் முத முத டிமோலிஷன் காண்ட்ராக்ட் செஞ்சேனுங்க!”
அடி சக்கை! டிமோலிஷன் வேலயும் செய்யறியா?
ஆமாமுங்க! அதுக்கே நான் நாலு கல் தச்சருங்க வெச்சிருக்கேனுங்க! கடப்பா ஆசாமிங்க. தளுக்கா செய்வானுங்க! ஒரு கீறல் ஒரு தப்பான அடி வுழுவாது!
கவர்மெண்ட்டுல பெரியவரு மனசுல சில ஐடியா வெச்சிருக்கறதா பேசிக்கறய்ங்க! பழைய பில்டிங்கை இடிச்சி புதுசாக்கட்டணும்னு நம்ம தலைவரே போன மந்திரிங்க மீட்டிங்கில பேசினாராமே”
அப்படீங்களா?
வட சென்னை மாவட்டத்தைக்கைக்குள்ள வெச்சிருக்கியா?
கைக்குள்ளல்லாம் இல்லீங்க! அவுரு நம்ம தோஸ்துங்க! நெறயா சகாயம் பண்றாரு!
யாரு, நம்ம …….தானே?
அவுரேதானுங்க!
பொதுப்பணித்துறைக்கு வேண்டியவராச்சேப்பா! அவர விட்டுடாத! நெறய வேல வருது!
சரிங்க! இந்தாங்க!
என்னப்பா இது?
அகாய் வீடியோ டெக்குங்க! ஜப்பான்லேர்ந்து வந்துது, உங்களுக்காக எட்த்து வெச்சிருந்தேனுங்க!
அட! கலை இதப்பத்தித்தான் நேத்து சொல்லிக்கிட்டிருந்தது, இன்னிக்கு ஏதோ இட்சிணி மாறி கொண்ட்ட்டு வந்துட்டியே! அதெல்லாம் சரி, நம்ம வூட்ல சொல்லிடாத, இது கலைக்கு மட்டுந்தான்! ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுந்தான் போவ முடியுது. அதுக்கு ஒரே கோவம். இத வெச்சு ரெண்டு மூணு வெள்ளிக்கிழமை ஓட்டிடலாம்.
நா ஏங்க வாயத்தொறக்கறன்! செல்வியக்கா வூட்ல கூட பாத்ரூம் டைல்ஸ் போடணும்னுட்டு..
அதெல்லாம் நீ பாத்துக்க ரெட்டி! அவ கேக்கற வேலயச்செஞ்சு கொடு! உன்னய நா கவனிச்சுக்கறன்!
சொல்லணுமுங்களா? நா பாத்துக்கறேனுங்க!
ஒரு வழியாக அந்த கட்டிடத்தை இடித்து புதுசாகக்கட்ட வேண்டும் என்கிற தீர்மானம் போட்டாகிவிட்டது. அங்கங்கே கொஞ்சம் எதிர்ப்பு வந்தாலும் தலைவர் தன் பேச்சால் அதையெல்லாம் ஒதுக்கி ஓரம் கட்டிவிட்டார்,
மாவட்டம் கொஞ்சம் அதிகமே சிரமப்பட வேண்டியதாகிவிட்டது.
“ த பாரு, ஏதோ நீ சொல்றியேன்னு வர்ர சின்ன சின்ன வெலைங்கள்லாம் உன் ஆளுக்கு கொடுத்தேன். இது பெரிய வேலைய்யா! எல் டி கம்பெனி மாதிரி ஆளுங்களுக்கு கொடுக்கலைன்னா பொது ஜனமே கேள்வி கேட்கும்! கட்சி உருப்படுணுமா வேண்டாமா?
அதில்ல தலைவரே, நம்ம ஆளு நல்லாச்செய்வான். கட்சிக்கு நெறய கொடுக்கறான்
அதெல்லாம் சரிய்யா, அதுக்காக பெரிய இடத்துல கை வைக்கணும்னு ஆசைப்படலாமா?
இல்ல தலைவரே, சரி பாத்து எதுனா செய்யுங்க! நகரசபைத்தேர்தல் வருது! செலவழிக்கணும்.
இப்ப சொல்லு இதெல்லாம்1 இதுவரைக்கும் சம்பாரிச்சியே, அதுலேர்ந்து கொடுக்கறது?
ஒண்ணு விடாம கொடுத்துர்ரேன் தலைவரே, நீங்க வேணா பொருளாளரக்கேளுங்க! என்னாண்ட ஒரு வில்லங்கமும் கிடையாது
சரி அந்த பொதுப்பணித்துறை எஞ்சினீயரு இருக்காரே, அவரக்கூப்பிடு
“ சார்! இது பப்ளிக் காண்ட்ராக்ட்! அதுவும் சரித்திரப்ப்ரசித்தி பெற்ற பெண்டிங் மாளிகை. ஒரு தப்பு இல்லாம கட்டி முடிக்கணும். அதுக்கு ப்ரொஃபஷனல் கம்பெனிகள் தான் சரி. ஏதாவது தப்பு நடந்து போச்சுன்னா, அதிகாரிங்க மட்டுமில்ல, கட்சியும் பேரக்கெடுத்துக்கும். ஹெரிட்டேஜ் அது இதுன்னு ஒரு கூட்டம் போட்டிருக்காங்க. பாஞ்சுருவாங்க சார்!
என்ன பண்ணலாம்?
டிமோலிஷன் காண்ட்ரக்ட் வேணா கட்சி ஆளுங்களுக்கு கொடுத்துரலாம் சார்! தப்பு வந்தாலும் கட்டுமானக்கம்பெனி சமாளிச்சுடுவாங்க.
என்னயா, டெமோலிஷன் எடுத்துக்கச்சொல்லு உம் ஆளை!
சரிங்க!
சின்ன ராமி ரெட்டிக்கு ஒரே சந்தோஷம்!
பதினாறுங்க! பேசினபடி மூண கலையக்கா கிட்ட கொடுத்துர்ரேன்.
பகல் கொள்ளைக்காரன்யா நீ! பதினாறுல மூணேமூணா எனக்கு?
சத்தாய்க்காதீங்க! எனக்கு ஒண்ணோ ஒண்ணரையோகூட நிக்காதுங்க! எம்மாம் ஷ்டிராங் கட்டுமானம் தெரியுமா? ஒவ்வொரு தூணுமே பத்து நாள் பிடிக்குமே இடிக்க?
செய் செய்! நகரசபை எலக்க்ஷனுக்கு என்ன தருவே?
எப்பம் போல அந்த நாலு வார்டுக்கும் நா செலவப்பாத்துக்கரேங்க!
ரெட்டி! நீ பொழக்கத்தெரிஞ்சவன்யா!
எல்லாம் உங்க தயவுங்க!
நாள் திதி எல்லாம் பார்த்து அய்யரைக்கூப்பிட்டு சின்ன பூஜை செய்தார்கள். மாவட்டம், ராமி ரெட்டி மற்று சில்லரைத்துண்டுகள் வந்திருந்து ஜால்ரா கோஷம் போட்டபின், அய்யர் பரபரத்தார்.
”ம் நல்ல நேரம் ஆரம்பிக்கலாமே”!
” சக்கையா! வா நீதான் சீனியர்! முதல்ல நீ இடிக்க ஆரம்பி!
“ ரெட்டிகாரு! முதல் அடி உங்களுதுதான்! நீங்கதான் எங்களுக்கு முதலாளி! இந்தாங்க கடப்பாற, பிடிங்க!
அய்யரே! எங்க ஆரம்பிச்சா நல்லதுன்னு பாத்து சொல்லுங்க
என்னன்னா கேள்வி! ஈசானிய மூலதான்! அதப்பாருங்க அந்த மேடைதான் சரியான எடத்துல இருக்கே. முதல்ல அதுலேர்ந்து இடிக்க ஆரம்பிங்க”
மூன்று தலைமுறைக்கு முன்னால் அவனுடைய கொள்ளுத் தாத்தாவின் தாத்தா கட்டின அதே மேடையை தன் கையாலேயே இடிக்கத்தொடங்கி ஆரம்பித்துவைத்தான் ராமிரெட்டி.
ராஜாஜி சாலையில் பெண்டிங் மாளிகை இருந்த இடத்தில் இன்று உயர்ந்து நிற்கும் சிங்காரவேலர் மாளிகை, மீனவர்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும் பாடுபட்ட சிங்காரவேலரின் சரித்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.
இப்படிப் பழைய சரித்திரத்தை மறைத்து சமீபத்திய சரித்திரத்தை கொண்டுவருவது சரியா, தவறா என்பதைத்தேர்ந்த சரித்திர வல்லுனர்களிடம் விட்டு விடுவோம்.
முற்றும்

No comments:

Post a Comment