Friday, 13 September 2019

இன்றைய (14, செப்டம்பர், 2019) கதையரங்கம்.....
பெருமாள் கடை சக்கரை
----------------------------------------
“மணி எட்டாச்சு! இன்னுமா கடை திறக்கல?”
”தெர்லங்க! உன்னும் காணம்!”
டல்லாஸ் டீ கடையின் சமோசா போடும் ஆசாமி அலட்சியமாகப்பதில் சொன்னார்.
இப்பவே இரண்டு முறை போய்ப்பார்த்துவிட்டேன். எந்த நேரமும் சாஸ்திரிகள் வந்துவிடலாம். நேத்து சாயங்காலம் ஒட்டன்சத்திரம் கடையில் எல்லாத்தையும் வாங்கினேன் ஆனால் வெத்தலையை மறந்துவிட்டேன். சரி, காலை நம்ம பெருமாள் கடையில வாங்கிக்கலாம்னா இப்படி படுத்தறான் இன்னிக்கு.
எங்க தெருவுக்கு கடைசியில் , அதான் கார்ப்பரேஷன் ஸ்கூல் கேட் வருமே, அதன் எதிரே சற்றுத்தள்ளி, அந்த ஆயுர்வேத டாக்டர் செண்பகம் வீட்டுக்கு அடுத்த முக்குக்கடைதான் பெருமாள் கடை. அதை ஒட்டி காமராஜ் அவின்யூவின் செகண்ட் ஸ்ட்ரீட் ஆரமித்துவிடும். பெருமாள் கடையை ஒட்டி வலது புறம் செகண்ட் ஸ்ட்ரீட்டில் வரிசையாக கடைகள். ஆனால் ஒன்றிலும் வெத்தலை இருக்காது.
பெருமாள் கடை பழமையானது. அறுபத்திரெண்டில் நாங்கள் இந்த வீட்டிற்கு வந்தபோதே இருந்தது. நான் ரெண்டாம் க்ளாஸ்!
பெருமாள் அப்போது இளைஞர். நல்ல உயரமாக இருப்பார். நடுவில் லுங்கி போல குறுக்குவிட்டத்தில் தைத்த வேஷ்டி கட்டி வலை முண்டா பனியனுடன் இருப்பார். சில சமயம் காலையில் மணி சலூனுக்குப்போகும்போது தன் கடை திறக்க வருவார். அகல காரியர் வைத்த சைக்கிளில் வந்து முன் பக்கமாக காலை எடுத்து இறங்கும் கலையை கசடறக்கற்றிருந்தார். அவர் போட்டிருக்கும் சந்தனக்கலர் சட்டை அப்போதுதான் இஸ்திரி பண்ணினது போல முறுகலாக இருக்கும். அதை ஜாக்கிரதையாகக்கழட்டி வைத்துவிட்டு வேஷ்டி பனியனுடன் கடையில் உட்காருவார்.
வாழைப்பழம், வெத்தலை, பாக்கு, சிகரெட், கடலை பர்பி, உருண்டையான புளிப்பு மிட்டாய், தேங்காயில் செய்த ரோஸ் கலர் பர்பி, ஒல்லியான முறுக்கு, பொறை, ஏன் பீடி கூட கிடைக்கும். இந்த ரோஸ் நிற பர்பி மட்டும் ஏனோ அம்மா வாங்கித்தரவே மாட்டாள்.
முன்பெல்லாம் எங்க தெருவுக்கு பெருமாளே சாமான்களை வீட்டுக்கு கொண்டுவந்து போடுவார். அப்போதே கூட அவர் பையன் கூட வருவான். சின்னதாக சொப்பு மாதிரி இருப்பான். எதற்கோ அவனை சக்கரை என்று கூப்பிடுவார்கள். உண்மைப்பெயர் இன்று வரை தெரியவில்லை. இவன் ஸ்கூலுக்கே போக மாட்டான் போல எப்போதும் கடையிலேயே இருப்பான்.
“ சக்கர! ஆயாவுக்கு உப்பு கொடு!”
படு லாவகமாக பொட்டலம் கட்டுவான்.
“சக்கர! எல்பி ரோடாண்ட சரக்கு வந்திருக்குதாம். போய் எட்த்தா!”
சரேலென்று அப்படியே அரை டிராயர் பனியனுடன் அந்த அகல காரியர் வைத்த சைக்கிளில் ஓடினவாறே ஏறிப்போய் மின்னலாகத்திரும்பிவிடுவான்.
“சக்கர! அரிசிப்பைக்கெனமா இருக்கு பார்! கூடத்தூக்கிக்கினு போய் சாரோட வீட்ல குடுத்துட்டு வா!”
ஒரே வீச்சில் மூடையை எடுத்து தோளில் வைத்துக்கொண்டு அந்த சாருக்கு முன்னால் நடக்க ஆரமித்துவிடுவான்.
அம்மா போன வருஷமோ அல்லது அடுத்த வருஷமோ, அப்போதிலிருந்தே சக்கரை கடை மானேஜ்மெண்ட்டுக்கு வந்துவிட்டான். தினமும் சில மணி நேரம் பெருமாள் கடைக்கு வந்துவிட்டுப்போவார். மர ஸ்டூலில் நேர்த்தியாக முதுகு வளைக்காமல் உட்கார்ந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.. பழைய கஸ்டமர்களுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார்.
எப்போதும் ஒரு அரைச்சிரிப்புடந்தான் இருப்பான். அதிகம் வாயெல்லாம் பல்லாகச்சிரித்துப் பார்த்ததில்லை. ஆனால் முகத்தில் கண்ணில் ஒரு சிரிப்பு இருக்கும். கண்கள் இடுங்கி ஒருவித டிஆர் ராமச்சந்திரத்தனம் தெரியும். அதில் ஒளிந்திருக்கும் ஒரு அமைதியைக்கண்டிருக்கிறேன்.
நான் இன்னும் காத்திருந்தேன். வெத்தலையோடுதான் வீட்டுக்குப்போக வேண்டும். இன்னும் ஏழெட்டு பெண்கள் வந்து விஜாரிக்க ஆரமித்துவிட்டனர்.
”என்ன லேட்டாவுதே, இன்னிக்கு பெருமாள் கடை திறக்கலியா?”
” பால் பாக்கேட் வேணூம்! இவன் இப்படி வரலேன்னா என்னா பண்றது?”
ரொம்ப நாழி ஆகிவிட்டதே என்றூ டிரைவர் என்னைத்தேடிக்கொண்டு கடைக்கு வந்துவிட்டார்.
“அய்யருங்க வண்ட்டாங்க சார்! இன்னுமா வெத்தல வாங்கல?”
”கடையே திறக்கல வர்கீஸ்!”
”நீங்க போங்க! நா இருந்து வாங்கிக்கு……”
வர்கீஸ் முடிக்கவில்லை, நல்ல வேளை, அந்த நேரம் சக்கரை மோட்டார் சைக்கிளில் வந்து விட்டான். ஒரு படபடப்பில் இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு சாவிக்கொத்தை எடுத்து கடை திறக்க முற்பட்டான்.
காத்திருந்தவர்கள் எல்லோரும் ஆளாளுக்கு பேசினர்.
“ அப்பாடா வந்தியா? என்ன இவ்ளோ லேட்டு?”
“உன்ன நம்பி பால் சொல்லிருக்கேன்! நீ இப்படி லேட் பண்ணினா எப்படி? வேலைக்கி போ வாணாவா?”
சக்கர! அல்லாரும் காத்துக்கினு இருக்காய்ங்க ப்பா! சீக்கிரமா குட்த்தனுப்பு!
பக்கத்து டல்லாஸ் கடை சமோசா ஆசாமி சத்தமாகச்சொன்னார்.
சக்கரை ஒன்றும் பேசவில்லை. மௌனமாக கடை திறந்து முதலில் பால் கொடுத்தனுப்பினான். கடைசியில் நானும் வெத்தலை வாங்கினேன். சக்கரை மறுபடி கடையை மூட ஆரமித்தான்.
“என்ன! இன்னிக்கி அவ்வளவுதானா?”
“ஆமா சார்! இன்னி விடியக்காலம் அப்பா போய்ட்டாரு! பால் கஸ்டமருங்க காத்திருப்பாங்களேன்னு தான் வந்தேன். இன்னமே போய்த்தான் ஆக வேண்டிய காரியம் பாக்கணும்.”
கஸ்டமர் சர்வீஸுக்கு உதாரணமாய் அமெரிக்காவில் ஜெனெரல் மோட்டார்ஸ், ஃபெடெக்ஸ் என்று என்னென்னமோ கம்பெனிகள்ச்சொல்கிறார்கள். நாமளும் இங்கே அதே கம்பெனிகளின் பேரைச்சொல்லி ஜல்லி அடிக்கிறோம்.
பெருமாள் கடை பேரைச்சொல்ல வாண்டாமோ?

No comments:

Post a Comment