இன்றைய (20 ஜூலை, 2018) கதையரங்கத்தில்....
ரஞ்சன்குடி கோட்டை
கி பி 1751
ரஞ்சன்குடி கோட்டை அடுத்து வரப்போகும் களேபரத்திற்கான எந்தவித அடையாளமும் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தது.
கோட்டைமேடு எனப்படும் குன்றின் மேல் புறத்திலிருந்து பீரங்கிக்குண்டு நெருப்புப்பிழம்பாய் ஃப்ரெஞ்சுப்படையினரை நோக்கி வெடிக்கப்படவிருக்கும் சில வினாடிகளுக்கு முன்னர்தான்………….
சற்றுப்பொறுங்கள்.
முக்கியமாக ஏதோ சொல்ல வருகிறேன் என்பது தெரிகிறது. ஆனாலும் இவ்வளவு அவசரம் கூடாது. நாம் இருப்பது 1751இல். இப்போது போல எல்லாவற்றிலும் பதட்டமும் பரபரப்பும் தேவை இல்லை. அவசர, அவசரரமாகக்குளித்துவிட்டு சட்டைபோட்டுக்கொண்டே கெல்லாக்ஸ் சாப்பிட்டு, ஓடிப்போய் ஹ்யூண்டாய் அக்ஸெண்ட்டில் ஏறி நுங்கம்பாக்கம் ஹைரோடில் ஓடவேண்டிய கெடு ஏதும் இல்லை.
சூரியனே சோம்பேறித்தனமாய்ப்புறப்பட்டு மேலேறிக்கொண்டிருந்த காலைகளும், வெப்பத்தின் உச்சியில் கானல் நீராய் ஜொலித்த நெடுஞ்சாலை மதியமும், “அவ்வளவுதான்” என்று முடிந்துவிட்ட மாலைகளுமாய்க்கழிந்த 1751ஆம் ஆண்டின் எப்போதும்போல மற்றொரு தினம்.
எப்போதும்போல என்றா சொன்னேன்?
வேப்பந்தட்டை என்கிற சமீபத்திய கிராமம் அன்றும் சாதாரணமாகத்தான் விழித்துக்கொண்டது. வைகாசி மாதத்தின் வெக்கை இன்னும் தொடங்க வில்லை. கோழிகள் கூவ, மைனாக்கள் இசைக்க காகங்கள் கரைய என்று சம்பிரதாயமான காலை.
முத்துமாணிக்கம் வியர்வை சொட்ட தோட்டத்தில் கொத்திக்கொண்டிருந்தான். நேற்று வைத்திருந்த வாழை வாடும்போல இருக்கவே அதன் சுற்றத்தில் இன்னும் தோண்டி தண்ணீர் பாய்ச்சினான். பரந்திருந்த பாகல் கொடிகளை ஒன்றாக இறுக்கிக்கட்டி மேலே படரவிட்டான். பிஞ்சுகள் ஏகத்துக்கும் காய்த்திருக்க இந்த முறை நல்ல விலைக்குப்போகும் என்று சந்தோஷப்பட்டான்.
“இந்தாங்க! கஞ்சி குடிச்சுட்டு வேலை செய்யுங்க”
“வாடி என் செல்லக்கண்மணி!”
“ஆமா! சும்மா இருங்க, கந்தன் முழிச்சுக்கிட்டான்”
“இவ்வளவு கஞ்சி வேண்டாம் கண்மணி! இது போதும்!
”அதெப்படி போதும்? நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்! வேகம் கொறஞ்சாப்பில இருந்தது, சொகமில்லீங்களா?”
“என்னாடி! என்ன கேக்கறே?”
”அடப்போங்க! எல்லாத்தையுமா சொல்லுவாங்க! சோர்வா இருந்தாப்பில தோணுச்சு, அதான்”
”ஆமாடி, செல சமயம் தல சுத்துது, அயர்ச்சியா இருக்கு”
”அதான் சொல்றேன்! இன்னும் கொஞ்சம் கஞ்சி குடிங்க! காலைல சாப்புட்டதுதான் பொழுதுக்கும் நிக்கும்”
“அடப்போடி! வவுறு மேல தூக்குது! இனிமே அரிசி போடாதடி எனுக்கு. கோழியும் மீனும் சாப்புடறேன் அரிசி கொறச்சுப்பிடுன்னு மாசானம் வைத்தியர் சொன்னாரே!
”சாக்கிரதையா இருங்கய்யா! உங்கள நம்பித்தான் நாங்க எல்லாமே!”
”என்ன கண்மணி இதுக்குப்போய் கலங்கறே? ரெண்டு நாள் வவுத்தக்காயப்போட்டேன்னா சரியாய்டும்”
”அப்பா” என்று கத்திக்கொண்டே கந்தவேள் ஓடிவந்தான்.
செவ்வக உடைகற்களாலால் கட்டப்பட்ட ரஞ்சன்குடிக்கோட்டையே முகலாய கட்டிடக்கலையின் ஆரம்பம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கர்நாடிக் நவாபின் ஜாகிர்தார்களில் ஒருவரான ஷெர்கான் லோடி கட்டினார் என்றும் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
மூன்று நிலைகளில் கட்டப்பெற்ற ரஞ்சன்குடி கோட்டை அன்றும் கொஞ்சம் பரபரப்புடனே இருந்தது. கோட்டைமேடு என்னும் மேல்நிலையில் அதீத காவல் நடமாட்டம். அங்கிருந்து சாலையைப்பார்த்த பீரங்கிகள் சுடுவதற்குத்தயாராக இருந்தன.
”என்ன கந்தா! தாத்தா கிட்ட பேசினயா?
“நான் அப்பமே எழுந்திருச்சி, பல் வெளக்கி, கஞ்சி குடிச்சு தாத்தாகிட்ட கதை கேட்டுட்டு இருந்தேன் அப்பா!”
அட! என்ன கதை இன்னிக்கு?
”அபிமன்யு கதைப்பா!”
”எவ்ளோ பெரிய வீரன் இல்ல அந்த அபிமன்யூ?”
”ஆனா பாவம்ப்பா! சின்ன வயுசுல அவன் ஏனப்பா செத்துப்போனான்?”
“காலங்காலைல என்ன சாவப்பத்தி பேச்சு? கந்தா! நீ போய் தாத்தாவுக்கு நேத்து படிச்ச பாட்டுப்பாடிக்காமி!”
”போம்மா! நா அப்பாருக்கு பாடிக்காட்டுவேன்”
”எங்க பாடு பார்ப்போம்?”
”உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு…”
இனிமையான குரலில் கந்தவேள் திருமுகாற்றுப்படை பாடுவதை அர்த்தம் புரியாமல் கேட்டு உவந்தனர் முத்துமாணிக்கமும் கண்மணியும்.
கோட்டையினுள் இருந்த சிவன், அனுமார் கோவிலில் நடமாட்டம் இல்லை. குடியிருப்புக்களில் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கச்சொல்லி உத்தரவாகி இருந்தது.
கீழ்நிலையில் இருந்த பேட்டை என்று சொல்லப்பட்ட சமதளத்தில் சிப்பாய்களும் அவர்களின் தலைவர்களும் வரிசையில் இருந்தனர் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
”முத்து! குழந்த என்னமா பாடறான் பாத்தியா?”
”ஆமப்பா! நம்ம தமிழ் வாத்தியாருக்கு நன்றி சொல்லோணும்”
”இந்த முறை எலுமிச்சம்பழம் ஒரு சேர் அவருக்கு கொடுத்தனுப்புப்பா!”
”சரிங்க அய்யா!”
”தேவையூர் சந்தைக்கு எப்போ போகப்போறே?”
”நாளைக்கு போலாம்னு இருக்கேங்க்ய்யா!”
”சரக்கு எவ்வளவு இருக்கு இப்ப?”’
”தேங்கா ஐந்நூறு, எலுமிச்சை பத்து சேர், முருங்கை இருவது கட்டு, சொரக்காய் பாஞ்சு, அப்புறம் மல்லி, கருவெப்பில..”
”கண்மணி வருதா?”
”ஆமப்பா! அங்க பரப்பி விக்க வேண்டியிருக்கு, காசு வாங்கும்போது ஏச்சுப்புடறாங்க”
”பரங்கி சிப்பாய் இருக்கானுவளாமே! சாக்கிரத”
”அவனுங்க ஒண்ணும் தொல்லையில்லய்யா! நம்மாளுங்கதான்!”
”போன மாசம் நம்ம படையாச்சி பேத்திய கயப்புடிச்சு இழுத்துப்புட்டானாம்ல! யாரு, முருகய்யன் மச்சான்!”
”யாரு, நம்ம குடிக்காடு கருமார் மாப்பிள்ளயா?”
”அவனேதான்! கெரகம்!”
”கவனமா போய்வாங்க!காசு பத்திரம்!”
ஆங்கிலேயர்களின் துணையோடு கோபத்துடனும் வெறியுடனும் உலாத்திக்கொண்டிருந்தார் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜன்.
சந்தா சாஹிப் அவர் வழியில் அடிக்கடி வந்து தொல்லைப்படுத்துவது அவருக்கு கடுங்கோபம்.
கோட்டைமேட்டிலிருந்து பார்த்தால் தெளிவாகத்தெரியும் ட்ரிச்சினாப்பள்ளி செல்லும் 43 மைல் ராஸ்தா. அதையடுத்த வயல்களிலும் பொட்டல் காட்டிலும் புழுதி பறந்தாலும் சட்டென்று புலப்படாத ஃப்ரென்ச் படை ஆக்கிரமித்திருந்தது. அவற்றை தம் மதியூகத்தால் இயக்கிக்கொண்டிருந்தவன் பிறப்பில் ஹுசாயன் தோஸ்த் கான் என்று அழைப்பட்டு, தோஸ்த் அலி கான் என்னும் கர்னாடிக் நவாபின் மாப்பிளையும் திவானுமான சந்தா சாஹிப்.
அன்று இரவு தோட்டத்தில் முத்துமாணிக்கம், கண்மணி, பெரியவர், முத்துவின் அம்மா எல்லோரும் சாப்பிட்டபின் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
” அம்மா! காலு குடச்சல்னு சொன்னீங்க. மரக்குடி எண்ண வாங்கி வரவா?”
“வாங்கியாப்பா!”
“முத்து! நம்ம கந்தவேள நல்லா படிக்க வெக்கோணும். கடுமையான தமிழ்ப்பாட்டெல்லாம் சட்டுனு பாடிப்புடறான். கும்பினி பாஷ கத்துக்குடுக்கணும்ப்பா!”
”நமக்கெதுக்குப்பா கும்பினி பாஷ? நம்ம வீடு, தோட்டம், யாவாரம்னு இருக்கட்டுமே நிம்மதியா?”
”இல்ல முத்து! போற போக்கெல்லாம் பாத்தா நாடு நகரமெல்லாம் கும்பின்னிக்காரவுக எட்த்துக்குவாங்கன்னுதான் பேசிக்கிறாங்க. அப்ப அந்த பாஷ தெரிஞ்சா பொழச்சுப்பான்”
”சரிங்கப்பா! நான் வாத்தியார் அய்யாட்ட பேசறேன்”
கண்மணியின் மடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கந்தவேலை தாத்தன் தடவிக்கொடுத்தான்.
“நானும் வருவேன் ஒரே பிடிவாதம் பிடிச்சிட்டு இப்பம் தான் தூங்கினான்!”
”கூட்டுப்போறதுதான முத்து?”
”இல்லப்பா! அங்க சந்தைய்ல ஒரே கூட்டம், பரபரப்பு. நா யாவாரத்த கவனிப்பனா இல்ல இவம்பின்னாடி ஓடுவனா?”
”சூட்டிகையான புள்ள! அந்த முருகந்தான் இவனக்காப்பாத்தணும் நல்ல படியா!”
“முத்து!கேக்கணும்னு நெனச்சேன், அனுக்கூர் ஏரியாண்ட தோட்டம் வெலைக்கு வருதாமே, சாரிச்சியா?”
”ஆங்! நம்ம கும்பினி துபாஷி ஜலகண்டப்ரபு அய்யாவோட தோட்டமாம் அது! அவுரு பட்டணத்துல ஏதோ இனிப்பு யாவாரத்துக்குப்போறாராம், அதுக்காக வேண்டி காசு புரட்ட இத்த விக்கிறாரு.”
”நம்மால வாங்க முடியுமா முத்து?”
இல்லப்பா! குடிக்காடு ஜமீந்தார் கேட்டிருக்காராம். நமக்கு எப்படிப்பா தருவாரு?
“ஏங்க! நமக்கு இந்த தோட்டமே போதுங்க! அதெதுக்கு அம்மாம் தூரத்துல?”
”சரிதான் கண்மணி! ஒண்ணா இப்படியே நல்லா இருந்தாப்போறாதா?”
மதுரை சிம்மாசனச்சண்டையில் முதலில் முப்பதாயிரம் தங்கக்காசுகள் வாங்கிக்கொண்டு வங்காரு திருமைலைக்கு சாதகமாகவும் பிறகு மீனாக்ஷியிடம் ஒரு லட்சம் பொற்காசுகள் வாங்கிக்கொண்டு குரான் மேல் சத்தியம் வைத்து இடம் மாறிய சந்தா சாஹிபின் மேல் முகமது அலி கானுக்கு வெறுப்பே மிஞ்சி இருந்தது. அவன் செய்த அட்டுழியங்கள் அவர் காதுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தன. அவன் ஃப்ரெஞ்சுப்படைகளோடு குலாவுவது அவருக்கு ஒரு சின்ன பயத்தை ஏற்படுத்திவிட, அவர் தயங்காமல் கும்பினியாரிடம் உதவிகேட்டுப்பெற்றார். எதற்கும் தயாராய் ஒரு சின்ன படாலியன் ரஞ்சன்குடி கோட்டைக்குள் வந்துவிட்டது முகமது அலி கானுக்கு தெம்பாக இருந்தது. .
”முத்து! அயற்ச்சியா இருக்குன்னியே? தேவையூர்ல வைத்தியர் கிட்ட போய்ப்பாரேன்?”
”இல்லப்பா! ரெண்டு நாளுல சரியாய்டும்! நாளைக்கு சந்தைய்ல எல்லாத்தையும் வித்தோம்னா கைல காசு வரும். வீட்ட மராமத்து பண்ணிடணும். இந்த கந்தவேள் உக்கார்ந்து பாட்டு பாட ஆச்சாரியாண்ட சொல்லி ஒரு மரப்பெட்டி செய்யணும். அம்மாக்கு இலவம் பஞ்சாமே, அதுல தலைக்கு வெச்சு படுத்தா சொகம்மா தூக்கம் வருதாம். அதொண்ணு வாங்கணும்”
அம்மா சொன்னாள்
”எனக்கெதுக்கப்பா பஞ்சும் அதும்? இப்ப என்ன வைகாசியா, இத்தோட மாசில குழந்த பொறக்குமா? அதுக்காக கொஞ்சம் சேத்து வயிங்க”
“என்னாடி சொல்றே?”
”பின்ன! என்னா சத்தம் நேத்து ராவு?”
கண்மணி வெட்கத்துடன் உள்ளே ஒட, முத்து அசடு வழியச்சிரிக்க, கந்தவேள் தூக்கத்தில் ”எனுக்கு எனுக்கு” என்று பிதற்ற, மேலே வானத்து நிலா எப்போதும் போல அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு அங்கே விரவியிருந்த சொற்ப மேகத்துக்குள் நுழைந்தது.
ரஞ்சன்குடி கோட்டையில் ஒரு விளக்கும் எரியவில்லை. இருளோவென்றிருந்தது. சந்தா சாஹிப்பின் படைகளுக்கு எந்த ஒரு திட்டமும் புரிபடவில்லை. இரவில் தாக்குவதா அல்லது பகல் வெளிச்சத்தில் புகுவதா?
ஆங்கிலேயக்கும்பினிக்காரன் உள்ளே இருக்கிறானா இல்லையா, என்பது பற்றி சந்தா சாஹிப்பின் ஒற்றர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.கோட்டைக்கு வெளியே எந்த வித பந்தோபஸ்தும் இல்லாமல் காணப்பட்டது. பகல் நேரத்தில் சில வியாபாரிகளும், பணியாளர்களும் உள்ளேயும் வெளியேவும் போய் வந்து கொண்டிருப்பதைப்பார்க்க முடிந்தது. முகமது அலி கானுக்கு இந்தத்தாக்குதல் பற்றிய விவரம் போய்விட்டதா? அவன் எப்படிப்பட்ட தயார் நிலையில் இருக்கின்றான்? ஃப்ரெஞ்ச்சுப்படைகளுடன் சந்தா சாஹிப் ஆலோசனையில் இரவைக்கழித்தான்.
கந்தவேள் எழுவதற்க்கு முன்னமே முத்துமாணிக்கமும் கண்மணியும் மாட்டு வண்டியில் புறப்பட்டார்கள். காய்கறிச்சாமான்கள் பின்னால் மூட்டையில் குலுங்க, முன்னால் முத்துவின் மேல் இடித்தவாறு கண்மணி ராயசத்துடன் உட்கார ரெட்டை மாட்டு வண்டி வேப்பந்தட்டியிலிருந்து கிழக்கு நோக்கி நகர, மெதுவாக வெளிச்சம் வர ஆரம்பித்தது.
அனுக்கூர் ஏரியின் அருகில் நிறுத்தி மாடுகளுக்கு தண்ணி காண்பித்தான். கண்மணி கொண்டுவந்திருந்த கஞ்சியை ஊற்றிக்கொடுக்க மிள்காய் கடித்து சாப்பிட்டு ஏரித்தண்ணீரை அருந்தினார்கள். முத்து அற்பசங்க்யை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பினார்கள். குடிக்காடு தாண்டும்போது சூரியன் வெப்பமாகிவிட நிறுத்தி தண்ணீர் குடித்தார்கள். வலிகொண்டான் ராஸ்தாவில் வடக்காகத்திரும்பினபோது தூரத்தில் ரஞ்சன்குடிக்கோட்டை கண்ணில் பட்ட்து.
”கோட்டைக்குள்ள போகமுடியுங்களா?”
”அதெல்லாம் வாணாம் கண்மணி!”
”ஏங்க?”
”இப்பம் நெலம சரியில்லைன்றாங்க. அதோட அது முசல்மானுங்க இருக்கற இடம். நம்மள உள்ள விடமாட்டாங்க!”
”கோட்டைக்குள்ள சிவன் அனுமார் கோவில் இருக்குதாமே?”
”அங்கெல்லாம் நாம போக முடியாது! அது சிப்பாய்ங்களுக்கு கட்டினது?”
”இல்லீங்க! உள்ள போனோம்னா காய்கறிய அங்கயே விக்கலாமே?”
”கோட்டைக்குள்ள நாம விக்கிறதா?”
”ஏனுங்க, வித்துட்டொம்னா தேவையூர் வரைக்கும் போக வாணாம்ல. மதியத்துக்கே ஊர் போய்ச்சேர்ந்துடலாமே. கந்தனுக்கும் சந்தோஷமாயிடும்!”
”எனக்கென்னமோ சரியாப்படல கண்மணி”
”பயப்படாதீங்க, நாம போவோம். உள்ள சிப்பாய்ங்க விட்டா சரி. இல்லேன்னா திரும்பி தேவையூர் போய்க்கிட்டே இருப்போம், என்னான்றீங்க?”
சந்தா சாஹிப் மெதுவாக படைகளை முன்னேற்றினான். தெற்க்குத்தேவையூர் ஏரி தாண்டி, மெதுவாக ட்ரிச்சினாப்ளி சாலையை நோக்கி படைகள் முன்னேறின.
1751இல் முகமது அலிகான் வாலஜனுக்கும் சந்தா சாஹிப்புக்கும் ஊடாடிக்கொண்டிருந்த பகை முற்ற ஆரம்பித்திருந்தது. ட்யூப்ளே சந்தா சாஹிப்புக்குத்துணை நிற்க, ஆங்கிலேயர்கள் முகமது அலி கானுக்குத்துணை போனார்கள். முதலில் நடந்த சண்டையில் முகமது அலி கான் பின் வாங்கி ட்ரிச்சினாப்ளி மலைக்கோட்டையில் தஞ்சம் புகுந்தான். சந்தா சாஹிப் ட்யூப்ளே துணையுடம் முற்றுகையிட்டான். முகமது அலி கான் நிலமை மோசமாகியது. ஆனால் 300 சிப்பாய்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு ஆங்கிலேயப்படை சந்தா சாஹிப்பை ஆர்காட்டில் தாக்கி அவனை திசை திருப்பிவிட, முகமது அலி கான் சுதாரித்துக்கொண்டு ரஞ்சன்குடி கோட்டையை தனது இருப்பிடமாகி சந்தா சாஹிப்பை எதிர்க்கத்தயாரானான்.
“இன்று மதியத்துக்குள் ரஞ்சன்குடிக்கோட்டை நம் வசமாக வேண்டும்”
சந்தா சாஹிப்பின் கட்டளையை.நிறைவேற்றும் முதல் பீரங்கி வேட்டு ரஞ்சன்குடிக்கோட்டைக்குள் சென்று கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியின் மேலான தாக்குதலில் ஆரம்பிக்க Battle of Valikondan என்று பிற்கால சரித்திரத்தில் அழைக்கப்பெற்ற அந்த சண்டை தொடங்கியது.
No comments:
Post a Comment