Wednesday, 2 September 2026

 வசுந்தரா

இயற்கை
“ஏன்னா! கொழந்த வர்ரதே லீவுக்கு ரெண்டு வாரந்தான். அதுலயும் ரெண்டு மூணு நாள் மணச்சநல்லூர் அழச்சிண்டு போறேங்கறேளே? கோமளிக்காதான் இங்கயே வர்ரேன்னிருக்காளே?”
“இருக்கட்டும்மா! வசுவுக்கும் திருவெள்ளரை பெருமாளப்பாக்க வாண்டாமா? அப்படியே ரெண்டு நாள் கிராமத்து வாழ்கையும் அனுபவிக்கட்டுமே! அங்கெ மெட்ராஸ்ல மன்னி போன தரமே சொன்னா! நம்ம ஊரைச்சுத்தி நாலு கோவிலை வசுவுக்கு காமியேண்டான்னு! நீயும் வாயேன்!”
“இல்லேன்னா! நீங்க போய்ட்டு வாங்கோ! மன்னிக்கு அனுப்ப கருடாமெல்லாம் போடணூம்!”
வசுவின் மாமா அரவாமுதனுடன் மணச்சநல்லூருக்கு பஸ் ஏறினாள் வசுந்தரா.
“மாமா! அத்திம்பேர் என்னதான் வேல பண்றார்? வெறுமன மிராஸுதார்தானா?”
“இல்ல வசு! அவர் அதைத்தவிர கோஆப்பரேட்டில காரியஸ்தராவும் இருக்கார்.!”
“கோஆப்பரேட்டின்னா என்ன மாமா?
சொஸையிட்டியா”
”அதாம்மா எல்லா வெவசாயிகளும் சேர்ந்து ஒரு அஸோஸியேஷன் மாதிரி! அரசாங்கத்தோட இன்னும் மத்த வெளியாட்களோட பேசி வியாபாரம் பண்ண ஒரு குரூப்புன்னு வெச்சுக்கோயேன்!”
”ஊருக்கு நல்லது பண்றாருங்கறேள்?”
”ஆமாமா! நல்ல மனுஷன்! ஊருக்குன்னா உசுர விடுவார் அத்திம்பேர்! அக்காவையும், அதான் உன் அத்தையையும் என்னமா பாத்துக்கறார் தெரியுமோ?”
”ஏன் தெரியாம? அத்தை கிழங்கு கிழங்கா மூக்கிலயும் காதுலயும் வைரத்தோடு மூக்குத்தின்னு மின்னறாளே!”
“அடி வசுக்குட்டி! வந்தியா வா வா!”
அத்தை கட்டிக்கொண்டாள்.
”வாடா அராமுது! ஆனந்தவல்லி சௌக்கியமா?”
இருக்கா அக்கா! அப்பப்ப முட்டி வலி வந்துப்பிடறது!”
”ஆராமுது! இந்த தரம் நான் மஞ்சட்டி நன்னாரி கஷாயம் சேத்து அரச்ச பிண்ட தைலம் தர்ரேன் கொண்டு போ! சூடு பண்ணி முழங்கால்ல தேச்சு குளிக்கச்சொல்லு! வந்தேனான்னு வலி ஓடிப்பிடும், என்ன?”
மதியம் அத்திம்பேர் வந்து குளித்து சாப்பிட்டார்.
“என்ன அத்திம்பேர் கவலையா இருக்காப்ல தோணறதே!”
”ஆமா அரவாமுது! இங்க மணச்சநல்லூர்ல யாரோ தென்காசி பாயாம் பெரிய சூப்பர் மார்க்கெட் தொறக்கறார்!”
அடி சக்கை! மணச்சநல்லூருக்கு சூப்பர் மார்கெட்டா?”
”பாய் எல்லா பொருளும் தென்காசி தின்னவேலின்னு இறக்கப்போறாராம். அங்க அவருக்கு பெரிய ஓல்சேல் யாவாரமாம்!”
“ஆதுல என்ன சிக்கல் அத்திம்பேர்?”
”வீட்டு சாமானெல்லாம் பரவாயில்ல. அவர் காய்கறி பழங்கூட வெக்கப்போறாராம்! அதுவுமே தினோம் குத்தாலம் ஆரல்வாய் மொழின்னு அங்கேர்ந்து வருமாம். அவரோட தோட்டமே இருக்காம்.!”
”இந்த ஊர் விளைச்சல் வீணாப்போகுமே!”
”அதான் சிக்கல்! இங்க எல்லாம் சின்ன சின்ன வெவசாயிங்க! அரை செண்ட் முக்கால் செண்ட்டுனு கோமண சைஸ் நெலத்த வெச்சிண்டு நாள ஓட்டிண்டு இருக்கானுங்க! அவங்க பொழப்பு போயிடுமேங்கறது தான். இன்னி காலம்பர கோவாப்பரேட்டி ஆஃபிஸ்ல அதப்பத்தித்தான் பேசி மாஞ்சுட்டு வர்ரேன்! அத்த விடு! வசுந்தரா! படிப்பெல்லாம் எப்படி இருக்கு? இந்த வருஷம் ஸ்கூல் கடைசி வருஷமாச்சே?”
“நன்னா இருக்கு அத்திம்பேர்! காமர்ஸ் எடுத்துண்டு பிகாம் படிக்கலாம்னு அப்பாட்ட சொல்லியிருக்கேன்!”
“குட்! அப்புறமா ஆடிட்டருக்கு படியேன்! இங்க வந்து ஆஃபீஸத்தொறந்தேன்னா நூறு ஃபைல் தேறும்! என்ன அரவாமூது சொல்றே?”
“இல்லியா பின்னே? அண்ணாவும் ஊரோட வந்துறலாம்!”
“இல்ல அத்திம்பேர்! நா எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன். அஹமதாபாதுல!”
”ட்டேயப்பா! பெரிய படிப்புன்னா அது! அப்புறம் பாம்பே டெல்லின்னு வடக்குலதான் வேல பாக்கணூம், இல்லியா?”
”நாள் இருக்கு பாக்கலாம் அத்திம்பேர்! சொல்லுங்கோ என்ன சிக்கல் வரும்னு எதிர்பாக்கறேள்?”
அத்தை உள்ளே வந்துகொண்டே கேட்டாள்.
”உனக்கேண்டி அந்த விசாரம்? அவாள்ளாம் ஆம்பளைகள் பார்த்துப்பா! நீ வா தலயப்பின்னி விடறேன். திருவெள்ளரை தோட்டத்துலேர்ந்து நல்ல ஜாதி ரெண்டு படி கொண்டு வரச்சொல்லியிருக்கேன். தொடுத்து வெச்சு விடறேன்!”
“இருங்கோ அத்தை! நீங்க சொல்லுங்கோ!”
”த பாரு வசு! நம்ம கிராமத்துல மட்டுமே எம்ப்ளத்தி சொச்சம் பேர் தோட்டம் போட்டு காய்கறி பழம்னு உற்பத்தி பண்றா! அவாளோட வியாபாரமெல்லாம் இங்க சுத்து வட்டாரத்துல மட்டுந்தான்! இவாளுக்கு அதெயெல்லாம் வண்டில வெச்சு எடுத்துண்டு போய் இன்னொரு ஊர்ல விக்கற அளவுக்கு விளைச்சலும் இல்ல. ஐவேஜியும் கிடையாது! இப்ப சூப்பர் ஸ்டோர்னு பாய் சல்லீசா வித்தான்னு வெச்சுக்கோ, இவாளோட விளைச்சல் வீணான்னா போய்டும்! எல்லா காய்கறியும் பழமும். ரெண்டாம் நாளே அழுகி நாறிடாதா?”
“என்ன பண்ணப்போறதா இருக்கேள் அத்திம்பேர்?”
“எல்லாரும் கோவமா இருக்கா! கடையை வெக்க விடப்படாதுன்னு மறிக்கறா? பாய்க்கு நல்ல செல்வாக்கு இருக்கு! கவர்னமெண்ட்ல இந்தப்பக்கம் பெரிய ஆளெல்லாம் இவா மனுஷாளாம்! ஆனதப் பாத்துக்குங்கன்னு சொல்லிப்ட்டான்!”
அரவாமுது குறுக்கிட்டார்.
“கெடக்கறது கெடக்க, கிழவியத்தூக்கி மணையில வைடாங்கறா மாதிரி அதென்ன பாய்க்கு மணச்சநல்லூர் மேல ஒரு பிடிப்பு? இதென்ன மெட்ராசா மதுரையா?”
“பாயோட சம்மந்தி ஊராம் இது! சனமங்கலம் பக்கத்துல மசூதி இருக்கில்ல அதுங்கூட பாயோட சம்மந்தி கட்டினதுதானாம்! பொண்ணு கொடுத்த ஊராச்சே! அதான் இங்க மாப்பிள்ளைக்கு பெரிய கடை போட்டுத்தராராம்!”
“பாய்! இப்ப இந்த ஊருக்கு வந்துருக்காரா?”
“ஆமா சம்மந்தி வீட்லதான் இருக்காரு. கடை வேலையெல்லாம் மாப்பிள்ளையோட சேர்ந்து மேப்பார்வை!”
”அத்திம்பேர்! இன்னிக்கு சாயங்காலம் சனமங்கலம் பாயப்பார்க்க போலாமா?”
அத்தை கிறீச்சிட்டாள்.
“கிரகசாரம்! ஏண்டி உனக்கு இந்த வேல! இதெல்லாம் வம்பு தும்புல முடியும், ஆமா சொல்லிப்ட்டேன்!”
“வசு! வாண்டாம்டி! அண்ணாக்கு ஆரு பதில் சொல்றது!”
“ப்ளீஸ் அத்திம்பேர்! நா எந்த குழப்பமும் பண்ண மாட்டேன்!”
“நா வரேன்னா என்னை பாக்க மாட்டான் அந்த பாய்! அவனுக்கு தெரியும் நாந்தான் கோஆப்பரேட்டி காரியஸ்த்ர்னு! நா எப்போதுமே வெவசாயிங்க பக்கமச்சே!”
“அப்ப என்னை அழச்சிண்டு போங்கோ. நா போய் பாயைப்பாக்கறேன்!”
“என்னதான் பேசப்போறே? நாங்களாம் பேசி அலுத்துப்போயாச்சு! பாய் கடை யோசனையை விடறதா இல்ல!”
“அத்திம்பேர் ப்ளீஸ்!”
இருவரும் சனமங்கலம் போனபோது மணி நாலு ஆகிவிட்டிருந்தது. திருப்பத்திலிருந்த மசூதியை அடுத்து எதற்கோ காலியாக இருந்த மனையைத்தாண்டி பெரிய பங்களா. சுற்றிலும் ஆளுயர காம்பவுண்டுச்சுவர். பச்சைபெயிண்ட் அடித்து ஆங்காங்கே ரோஸ் கலரில் டிசைன். வாசலில் சவுக்கு கம்பம் நட்டு பெரிய ஷாமியானா. அடியில் தாறுமாறாக சில பிளாஸ்டிக் நாற்காலிகள்.
வாசலில் ஆள் நடமாட்டம் இல்லை. உள்ளே நுழைந்தபோது வெராண்டா இருட்டிலிருந்து “ஆரது?” என்ற கட்டைக்குரல். இப்போது பின் பக்கத்துலேர்ந்து லுங்கியும் பனியனுமாய் ஆள் ஓடி வந்தான்.
“பாய் இருக்காரா? பாக்கணும்?”
“எந்த பாய்? பெரியவரா?”
”தென்காசி பாய்!”
ஆள் உள்ளே ஓடினான்.
மே” என்று எங்கோ பின்பக்கம் கட்டின ஆட்டின் குரல்.
ஆஜானுபாகுவாய் பாய் வெளியில் வந்தார். அத்திம்பேரைப்பார்த்துவிட்டு முகத்தில் கடுப்புடன் கேள்விக்குறி. அடுத்து இருந்த சின்னப்பெண்ணை ஆச்சரியப்பார்ர்வை.
“வணக்கம்! என்ன, மறுபடி சூப்பர் ஸ்டோர் விவகாரமா?”
“என் மருமவ உங்களைப்பாக்கணும்னு சொன்னா?”
பாயின் குரல் கனிவானது.
“என்னையா? இந்தப்பொண்ணா?”
வசுந்தரா புன்னகைத்தாள்.
“உள்ள வரலாமா அங்கிள்?”
“அடேடே! வாம்மா! நீங்களூம் வாங்க!”
“இல்லை பரவாயில்ல. நான் இங்கயே உக்காந்துக்கறேன்!”
“வாம்மா உள்ற! எங்க வீட்லல்லாம் சாப்பிடுவியா?”
“ஏன் சாப்பிடாம?”
”யேய் ஆரு உன்ள? டீ கொண்டா பாப்பாக்கு!”
இரட்டைநாடியான பெண்மணி டிரேயியில் வைத்து டீ கொண்டு வந்தாள்.
“பாப்பா! காரியஸ்தரோட மருமவளாம்! என்னாண்ட பேச வந்திருக்கு!”
பாயின் மனைவி ஆச்சரியத்துடன் வசுந்தராவைப்பார்த்தாள். டீயைக்குடித்த வசுந்தரா
“பிரமாதம் ஆண்ட்டி! ஏலக்கா இஞ்சியெல்லாம் போட்டு ரொம்ப நல்லா போட்ருக்கீங்க!”
பீவிக்கு வெட்கங்கலந்த புன்னகை. ஆச்சரியத்தில் காலி கப்புடன் அங்கயே நின்றாள்.
“சொல்லும்மா!”
“அங்கிள்! நீங்க தெறக்கப்போற சூப்பர் ஸ்டோர்ல காய்கறி பழமெல்லாங்கூட விப்பீங்க தானே?”
“ஆமாம்மா!”
“எங்கேர்ந்து கொள்முதல் பண்ணுவீங்க?”
“என்ன கொள்முதல்மா! உங்க மாமா சொல்லியிருப்பாரே! தென்காசி ஆரல்வாய்மொழியில எங்க தோட்டமே பெருசா இருக்கு. அங்கனேர்ந்து வர வெப்போம்!”
“வண்டி சார்ஜு ஆகிடாதா?”
“ஆவாதும்மா! தெனிக்கும் கொண்டு வந்தா ரயில்வேல சார்ஜு கம்மியாச்சே! அத்தோட இங்க அல்லாரும் வாங்கற வெலைக்கு விக்கணுமில்ல? பெரிய முதல் போட்ட தொழிலாச்சே!”
“அங்கிள்! நீங்க ஏன் இந்தூர் வெவசாயிங்க கிட்டவே கொள்முதல் பண்ணக்கூடாது?”
பாய் ஒரு கணம் ஆடிப்போனார்.
“என்னம்மா சொல்றே?”
”ஆமாம் அங்கிள்! இவங்க வெளைவிக்கற காய்கறி பழத்த நீங்களே கொள்முதல் பண்ணிடுங்களேன்! அவங்களுக்கும் வித்தா மாதிரி ஆச்சு. உங்களுக்கும் சரக்கு ஃப்ரெஷா கிடைக்குதே!”
“அவங்கதான் என்னைக்கண்டாலே எதிர்க்கறாங்களே! அடிப்பேன் உடைப்பேன் மறியல் பண்ணுவேன்னு! உங்க மாமா….!”
“அத்திம்பேர்!”
“ஆங் அவருதான், அவரே முன்ன நிக்கறாரே!”
“இல்ல அங்கிள்! இந்த மாதிரி செஞ்சா ரெண்டு பேருக்குமே நல்லதுதானே!”
“சரிம்மா! நா செய்ய தயாரா இருக்கேன்! அவங்க ஒப்புக்கணூமே!”
”நா பேசறேன் அங்கிள்!”
“பார்ய்யா இத! இதனூண்டு இருந்துகிட்டு எம்மாம் பெரிய பேச்செல்லாம் பேசுது!”
“என்ன அங்கிள்! செய்வீங்களா? என்ன விலைக்கு விக்கப்போறீங்களோ அதுக்கு பத்து பர்சண்ட் கம்மி பண்ணி வெல போட்டுக்கொடுத்து கொள்முதல் பண்ணிக்குங்க! போதலைன்னா இருக்கவே இருக்கு உங்க தோட்டம்!”
வெளியே ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அத்திம்பேர் “எனக்கு சம்மதந்தான் பாய்!” என்று குரல் கொடுத்தார்.
மலர்ந்த முகத்துடன் வெளியே வந்த பாய்! கையைப் பிடித்துக்கொண்டு வசுந்தரா!
“அய்யா! நா எதுனா கோவமா பேசியிருந்தா மனசுல வெச்சிக்க வாண்டாம்! நீங்க கோஆப்பரேட்டில பேசிட்டு சொல்லுங்க! எனக்கும் நஷ்டம் வராத படி வெவசாயிங்களுக்கும் சேதாரம் இல்லாத வெலைக்கி கொள்முதல் பண்ணிக்கறேன்!”
உள்ளிருந்து “என்ன! கொஞ்சம் உள்ள வரட்டும்” என சன்னக்குரல் கேட்டது.
“வாம்மா! உன்னைத்தாம்மா பீவி கூப்பிடுது! அய்யா! நீங்களும் வாங்களேன்!”
பீவியின் கையில் திருவனந்தபுரம் சில்க் துணி.
“இந்தா வாங்கிக்க கண்ணு!”
வசுந்தரா சட்டென்று பிவியின் கையைப்பிடித்துக் கொண்டு “வாங்க ஆண்ட்டி!அங்கிள் பக்கத்துல நில்லுங்க!”
யாருமே எதிர்பாராமல் அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பாய் பதறிவிட்டார்.
“என்னம்மா என்னம்மா இது..!”
”நீங்க பெரியவங்க அங்கிள்!ஆசிர்வாதம் பண்ணுங்க!”
“நெனச்சதெல்லாம் கிடைக்க அல்லாவின் அருள் உனக்கு உண்டும்மா! நல்லா இரு!”
”சோமேஷ்! ஐ லைக் யுவர் புரோபோஸல். ரிடர்ன்ஸ் பத்திதான் எனக்கு சந்தேகம்!”
“என்ன டவுட் வசுந்தரா? நாந்தான் சப்ளை செயின் காஸ்டிங் முழுக்க கணக்குல எடுத்திருக்கேனே!”
“அதுதான் எனக்கு சம்மதமில்லை சோமேஷ்!”
“பட் ஒய் வசுந்தரா?”
“சோமேஷ்! நாம கெச்சப் ஜாம் ஃபாக்டரி போடப்போறது கர்நூல் காகனூர்ல! நீ சோர்ஸ் பண்றது ரங்காரெட்டி டிஸ்ட்ரிக்ட்லேர்ந்து! என்ன லாஜிக்?”
“நம்தாரி வரைட்டி தக்காளி ரங்கரெட்டியிலதான் பெஸ்ட்!”
“அப்படியெல்லாம் இல்ல சோமேஷ்! நாம டொமேட்டோவை கர்நூல்லேர்ந்து சோர்ஸ் பண்றதுதான் லாஜிக். நம்ம சப்ளை செயின் சஸ்டெயினபிளா இருக்கணூம்னா, அதுவும் நீண்ட கால சஸ்டெயினபிலிடி வேணூம்னா லோக்கல் சப்ளையர்ஸ் தான் சரி. அதத்தான் நாம டெவலப் பண்ணூம். இன்க்ளூஸிவ் டெவலப்மெண்ட்டுன்னு கேள்விப் பட்டதில்லையா சோமேஷ்? அண்ட் பை திவே, அதுதான் எதிக்ஸ் கூட!
”வசுந்தரா! ஆனா….”
”ப்ளீஸ் சோமேஷ்! நீ பிராஜக்ட் ரிப்பொர்ட்ட மாத்தி லோக்கல் சப்ளை செயின் காஸ்டிங் போட்டு கொண்டுவா. ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் 25%க்கு மேல வந்தாலே எனக்கு போறும்!, ஐ வில் அப்ரூவ் தி பிராஜக்ட்! காட் இட்?”
“வசு! நீங்க ஃபுட் டிவிஷனுக்கு வந்தே ரெண்டு மாசம் தான் ஆகுது. இதுக்கு மிந்தி சோப்ஸ் அண்ட் டிட்டர்ஜெண்ட் டிவிஷன்ல இருந்திருக்கீங்க! ஃபுட் பிஸினஸ்ல உங்களுக்கு அனுபவமே கிடையாது. எப்படி இவ்வளவு ஷார்ப்பா அனலைஸ் பண்றீங்க!”
“எனக்கு ஃபுட் பிஸினஸ்ல அனுபவமே கிடையாதுன்னு யாரு சொன்னாங்க சோமேஷ்?”
பாம்பேயின் நாரிமன் பாயிண்ட்டில் யு அண்ட் டியின் எட்டு மாடிக்கட்டிடத்தில் கூட வசுந்தராவுக்கு இஞ்சி ஏலக்காய் போட்ட மணச்சநல்லூர் டீயும் சரசரக்கும் திருவனந்தபுரம் சில்கின் வாசமும் நிரடின.

3 comments:

  1. Ñice story, விளையும் பயிர் முளையிலே.. I think I have read it before.

    ReplyDelete
  2. மேன்மக்கள் மேன்மக்களே!அத்திம்பேரோ/ தென்காசி பாயோ)
    சுதாகர்,சென்னை91

    ReplyDelete
  3. Strategy is the same. Only produce and location is different.
    If the manufacturing facility is set up where the prime rate material is available it is a wise decision of vertical integration. Very interesting story.

    ReplyDelete