Friday, 17 July 2026

 இன்றைய (வெள்ளிக்கிழமை, 17, ஜூலை, 2026) புதிய கதை

வசுந்தராவின்.....

 “…மெய்ந்நின்ற ஞானம்…”

பாம்பே ஃபாக்டரியின் புழுக்கத்தில் வசுந்தராவுக்கு இன்னும் வேர்த்து விட்ட து. லேசான பயங்கலந்த த்ரில். மானேஜ்மெண்ட் டிரெய்னிங்கின் கடைசி எட்டு வாரங்கள். கிட்டத்தட்ட ஒரு தனி மானேஜருக்குரிய பொறுப்பு தரப்பட்டு அவளின் திறமை கண்காணிக்கப்படும் நேரம். பாம்பே ஃபாக்டரி ஜெனரல் மானேஜர் தாமோதர் பாஜ்வா தெளிவாகச்சொன்னார்.

“லுக் ஹியர் வசுந்தரா! நம்ம வனஸ்பதி யூனிட்டோட முழு மெஷின் லைனையும் மாத்தப்போறோம். சப்ளையரைத்தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உனக்குத்தான். அஃப் கோர்ஸ், டெக்னிக்கல் இவால்யுவேஷனை நானும் என் டீமும் பார்த்துப்போம். கமர்ஷியலா அண்ட் மத்த எல்லா ஆஸ்பெக்ட்ஸ்லயும் ரிவ்யூ பண்ணி செலக்ட் செய்யும் ரெஸ்பான்ஸிபிலிட்டி உன்னோடது!”

”எஸ் சர்!”

 ”கால் மி தாமோதர் ஆர் டிபி! யூ நோ, இது உனக்கு கடைசி ஸ்டிண்ட். சேர்மன் இண்டர்வ்யூவுக்கு முந்தைய மிகப்பெரிய சவால். ஹோப் யு டு வெல்! இந்தா பேப்பர்ஸ்!”

வசுந்தரா அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு தன் காபினுக்குப்போனாள். எல்லா பேப்பர்களையும் ஊன்றிப்படித்தாள்.  டிராஃப்ட் வெண்டார் அக்ரீமெண்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது. அதைப்படித்துவிட்ட அடையாளமாக கமர்ஷியல் ஹெட், டெக்னிக்கல் ஹெட், லீகல் ஹெட் என எல்லோரும் கையெழுத்திட்டிருந்தார்கள். ரிஸ்க் அஸெஸ்மெண்ட் ஆடிட்டும் செய்யப்பட்டுவிட்டிருந்த அடையாளமாக ஆடிட் டீமின் கையெழுத்தும். வசுந்தரா பார்த்தபோது அதில் அஜய் மன்வானி கையெழுத்திட்டிருந்தான்.

வசுந்தராவுக்கு கோபம் வந்தது,

அஜய் மன்வானி!

வசுந்தராவின் முக்கிய எதிரி, இல்லை போட்டியாளன். இரண்டு பேருமே ஒரே நாளில் யூ அண்ட் டியில் மானேஜ்மெண்ட் டிரெய்னியாகசேர்ந்திருந்தார்கள். கார்ப்பரேட் என்கிற அக்னிப் பிரவேசத்திற்குள் ஒன்றாக நுழைந்த இரண்டு கூர்மையான மூளைகள். ஆனால், வசுந்தராவிடம் உழைப்பும் தகுதியும் மட்டுமே இருந்தன. அஜயிடம் ஒரு கண்ணுக்குத் தெரியாத பலம் இருந்தது. அது, செல்வாக்கு. ஒரு பவர்ஃபுல் அமைச்சரின் தம்பியின் மகன். சில அரசியல் போன் கால்களிலேயே அவனுக்கு யு அண்ட் டியின் கதவுகள் சுலபமாகத் திறந்திருந்தன. 

அப்படியென்றாலும் அஜய் ஒன்றும் வாரிசு அரசியலின் சாதாரண எச்சம் கிடையாது. ஓரளவுக்குப் புத்திசாலி. மீட்டிங்குகளில் கச்சிதமாகப் பேசுவான். ரிசல்ட்டும் காட்டுவான். ஆனால், அவனுடைய அசல் திறமையே வேறு ஒன்றில் தான் இருந்தது — வசுந்தராவை எப்போது, எப்படி முட்டுச்சந்தில் நிறுத்துவது என்பதில் அவன் குறியாக இருந்தான். அவளை ஒடுக்கி தன் முன்னேற்றத்துக்கு வழி செய்ய முனைந்தான்.

அவன் கையெழுத்தைப்பார்த்த வசுந்தரா உஷாரானாள். கண்ணில் விளக்கெண்ணை விட்டு அந்த அக்ரீமெண்ட்டைப்படித்தாள். தவறாக எதுவும் புலப்படவில்லை. நேரமின்மை காரணமாக அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி முடிவெடுத்து தேர்ந்தெடுத்த சப்ளையர்களுக்கு ஃபைனல் அக்ரீமெண்ட் கையெழுத்தாக அனுப்பப்பட்டது. அதே வாரத்தில் வெள்ளிக்கிழமை ஃபைனல் ஆர்டர் ரிலீஸ் செய்ய நாளும் குறிக்கப்பட்டது.

வியாழன்று பூகம்பம்.

சப்ளையரிடமிருந்து கண்ட மேனிக்கு சாடி ஒரு ஈமெயில்.

அஜய், அந்த மெஷினரி தொடர்பான ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் விதிமுறை மாற்றத்தை அவளுக்குத் தெரியாமல் மறைத்து விட்டான். சப்ளையரின் லீகல் டீம் அக்ரீமெண்ட்டை ஆராய்ந்தபோது இந்த விதிமீறல் பிடிபட்டது. யூ அண்ட் டிக்கு ஷோ காஸ் நோட்டிஸே அனுப்பும் அளவுக்கு போயிற்று. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கியதால், மொத்தப் பழியும் வசுந்தரா மேல் விழுந்தது.

ஒரு மாதிரியாக சமாளித்தாலும் தாமோதர் பாஜ்வா “ஐயாம் டிஸப்பாயிண்ட் வசுந்தரா” என்று சொன்னார். சேர்மன் இண்டர்வ்யூவிலும் மிஷ்ரா இதைச்சுட்டிக்காட்டினார்.

“வசு! நீயா இந்த மாதிரி தப்பு பண்ணினே?” என்று கேட்டது அவளை மிகவும் காயப்படுத்தியது. அஜய் மன்வானி தைரியமாக லஞ்ச் ரூமில் வசுந்தராவிடம் தன் வேலைதான், அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி கருவறுத்தான்.

அடுத்து மூன்றாண்டுகள் வசுந்தரா ஹெட் ஆஃபீஸ் கமர்ஷியல் மானேஜராகவும் அஜய் லாஜிஸ்டிக்ஸ் மானேஜராகவும் போஸ்டிங் ஆகி வேலை செய்தார்கள். அவ்வப்போது சின்னச்சின்ன உரசல்களை அஜய் ஏற்படுத்திக்கொண்டே வந்தான். வசுந்தரா சீனியர்களிடம் டோஸ் வாங்கும் நிகழ்வுகளை உண்டாக்கி மட்டம் தட்டினான்.

அந்த மாத போர்டு மீட்டிங்குக்கான தயாரிப்புகளில் வசுந்தரா பிஸி. க்வார்ட்டர்லி பட்ஜெட் எஸ்டிமேட் மாடலை வசுந்தரா தயார் செய்து கொண்டிருந்தாள். அதற்குத் தேவையான லாஜிஸ்டிக்ஸ் செலவு விவரங்களை அஜய் தான் கொடுக்க வேண்டும். அவன் வேண்டும் என்றே, முந்தைய வருடத்தின் ஃப்யூயல் சர்-சார்ஜ் எண்களை  எக்செல் ஷீட்டிங் மேக்ரோக்களுக்குள் ஒளித்து வைத்துக் கொடுத்தான். போர்டு மீட்டிங்கில் வசுந்தரா பிரசென்ட் செய்யும்போது, லாபக் கணக்கில் 7 சதவீத ஓட்டை இருப்பதைச் சேர்மன் கண்டுபிடித்தார். பிரசென்டேஷன் தள்ளி வைக்கப்பட்டது. 'விவரங்களைச் சரியாகச் சரிபார்க்கவில்லை' என்று வசுந்தராவுக்கு டோஸ் விழுந்தது.

ஆனால் வசுந்தராவின் சமயோசிதம் கை கொடுத்தது.

“சர்! பிராப்ளம் சால்வ்ட். போர்ட் மீட்டிங் தொடரலாம்!”

கான்ஃபிடெண்டாக பேசி, அங்கேயே சட்டென தன் எக்ஸெல் கணக்குகளின் ஆதாரத்தை எடுத்துப்போட்டு, அஜய் மறைத்து வைத்த எக்ஸெல் மேக்ரோக்களின் குளறுபடியை எடுத்துக்காட்டி, தவறு லாஜிஸ்டிக் டிபார்ட்மெண்ட் தந்த தப்பான எண்கள் என்பதை அங்கேயே நிலை நிறுத்த, தள்ளி வைக்கப்பட இருந்த போர்டு மீட்டிங் தங்கு தடையின்றி நடந்தது.

அஜய் “தெரியாமல் செய்துவிட்டேன்” என்று மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

இத்தனை அடிகள் விழுந்தும் வசுந்தரா அசரவில்லை. யாரிடமும் புகார் சொல்லவில்லை. சிஸ்டத்தை இன்னும் இறுக்கமாக்கினாள். தவறுகளை ரிவர்ஸ்-இன்ஜினியரிங் மூலம்  சரிசெய்தாள்.

யூ அண்ட் டி பவனில் ப்ரொமோஷன் சீசன் வந்துவிட்டால் ஏசி குளிரை விட ஒரு நடுக்கம் எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். வசுந்தராவிற்கு அந்த நடுக்கம் கொஞ்சம் கூடுதல். காரணம்: அஜய் மன்வானி. அந்த வருடம் இருவருக்கும் அடுத்து கிரேடான சீனியர் மானேஜர் போஸ்டுக்கான புரோமோஷன் நேரம்.

மன்வானி குடும்பத்தில் கலகலப்பு.

 “என்னப்பா புரொமோஷன் கெடைச்சுடுமா?”

”ஆமா அஜய் பாபு! உங்க பெரியப்பா மந்திரி. புரொமோஷன் வாங்காம அவரைத் தலை குனிய வைத்துவிடாதே?”

“டாடி! எனக்கு ஒரே ஒரு போட்டிதான். அவளை அப்புறப்படுத்திவிட்டால், நிச்சயம் எனக்குத்தான் புரோமோஷன்!”

“ச்சோடு தோ யார்! மே பாத் கரேன்!”

சேர்மனின் தனிப்பட்ட லைனுக்கு ஒரு அரசியல் போன் கால் வந்தது. அஜய்க்குப் புரோமோஷன் தராவிட்டால் ஃபேக்டரி நில குத்தகை விவகாரங்கள் சிக்கலாகும் என்ற மெல்லிய மிரட்டல்.

சேர்மன் மிஷ்ரா பழைய புலி. அரசியல் மாற்றங்களைப் பார்த்தவர். சற்றும் தயங்காமல் எதிர்கொண்டார்

"யு அண்ட் டி இயங்குவது கியர்களின், தயவுகளினால் அல்ல. மற்றவர்கள் போலவே அஜயும் மதிப்பிடப்படுவான், அவ்வளவுதான். ஆனதைப்பார்த்துக்கொள்ளுங்கள்!

அந்த புரொமோஷன் பதவி வசுந்தராவைத் தேடி வந்தது. தகுதி, அரசியல் புகையை விலக்கி ஜெயித்து காட்டியது. அஜய் பின் தள்ளப்பட்டான்.

மிஷ்ராவுக்கு இன்னொரு ஃபோன் கால் வந்தபோது அவர் அசரவில்லை.

அஜய்க்கும் சம வாய்ப்பு தரப்பட்டது. இனி அவன் மேலே வர வேண்டும் என்றால் தன் சொந்தத் தகுதியால் மட்டுமே வர வேண்டும்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”.

மிஷ்ரா முடித்து வைத்து விட, தான் வெல்ல முடியாதவன் என்ற அஜய்யின் பிம்பம் சுக்குநூறாக உடைந்தது. கார்ப்பரேட் முகமூடி கழன்றதும் அவனுக்குள் இருந்த ஏமாற்றமும் கசப்பும் வெளியே வந்தது. ப்ரொமோஷன் அறிவிப்பு வந்த ஒரு வாரத்தில், அஜய் ஒரு நைட்கிளப்பில் அளவுக்கு அதிகமாகக் குடித்தான். அந்நிலையில் அவன் காரை எடுத்திருக்கக் கூடாது. மழை பெய்திருந்த அந்தப் பை-பாஸ் சாலையில் அவனது செடான் கார் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதியது.

எழுபத்தி நான்கு கிலோ எடையுள்ள அஜய் மன்வானிக்கு, தொண்ணூறு நிமிடங்களில் குடித்த ஸ்காட்ச் விஸ்கி, அவனது இரத்தத்தில் ஆல்கஹால் அளவை 0.14 சதவீதமாக உயர்த்தியிருந்தது. இது மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட ஐந்து மடங்கு அதிகம்.

சரியாக அதிகாலை 02:12 மணி. காரை நிறுத்தித் தரும் வாலெட் ஊழியரைத் தவிர்த்துவிட்டு, பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து ஜெர்மன் தயாரிப்பான செடான் காரின் டிரைவர் சீட்டில் ஏறினான் அஜய். அது இருநூற்று ஐம்பது ஹார்ஸ்பவர் கொண்ட, ட்வின்-டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட ரியர்-வீல் டிரைவ் கார். போதையில் மழுங்கிய மனித மூளையின் தவறுகளை ஒருபோதும் மன்னிக்காதது.

இருபது நிமிடங்களுக்கு முன்பே மழை தூறத் தொடங்கியிருந்தது. அது வெறும் மழையல்ல; சாலையை வழுவழுப்பாக்கும் ஒரு மெல்லிய தூறல். புதிய பை-பாஸ் சாலையில், அந்த ஈரப்பதம் டயர்களின் ரப்பர் துகள்கள், கசிந்த என்ஜின் ஆயில் மற்றும் டீசல் கசடுகளோடு கலந்து, சாலையை ஒரு வழுவழுப்பான பனிப்பாறையைப் போல மாற்றியிருந்தது.

வளைவில் அந்த கார் மணிக்கு தொண்ணூற்று எட்டு கிலோமீட்டர் வேகத்தில் சீறியது.

பேரழிவின் இயற்பியல் விதிகள் நொடிப் பொழுதில் வேலை செய்யத் தொடங்கின. அந்த வேகத்தில், காரின் டயர்களால் சாலையிலிருந்த நீரை விலக்க முடியவில்லை. முன்பக்க இடது டயரின் அடியில் தண்ணீர் ஒரு மெல்லிய கத்தி போலப் புகுந்து, டயரை தார்ச் சாலையிலிருந்து மேலே தூக்கியது.

ஹைட்ரோபிளேனிங் !!

அஜய் போதையில்லாமல் இருந்திருந்தால், ஸ்டீயரிங்கை நேராகப் பிடித்து, காரின் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் தானாகச் செயல்பட வழிவிட்டிருக்கலாம். ஆனால், ஆல்கஹாலால் செயலிழந்த அவனது நரம்பு மண்டலம் பதற்றமடைந்தது. ஸ்டீயரிங்கை வலதுபுறமாக வேகமாகத் திருப்பி, பிரேக் பெடலை பலமாக மிதித்தான்.

காரின் எடை முழுவதும் திடீரென முன்பக்கத்திற்கு மாற, பின்பக்க டயர்களின் பிடிமானம் முற்றிலும் நழுவியது. காரின் பின்பகுதி கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரியத் தொடங்கியது. அந்த 1.6 டன் எடையுள்ள இயந்திரம், இருண்ட பை-பாஸ் சாலையில் மூன்று நொடிகள் பக்கவாட்டில் சறுக்கி மரணத்தை நோக்கி ஓடியது.

மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்ற ஒரு காரின் கைனெட்டிக் எனர்ஜி அளவிட முடியாதது. அது கான்கிரீட் தடுப்பில் மோதியபோது, அந்த ஆற்றல் சிதற வழியின்றி காரின் இடதுபுறக் கட்டமைப்பை நொறுக்கியது. இரும்பு உத்திரங்கள் வளைந்தன, பாதுகாப்பு கண்ணாடிகள் துகள்களாயின, ஏர்பேக்குகள் துப்பாக்கிச் சத்தம் போலத் திறந்துகொண்டன.

காரின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களால் கூட அந்த அதிவேக நிறுத்தத்தின் தாக்கத்தை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. காரின் கதவில் அஜய்யின் உடல் பயங்கரமாக மோதியது. அந்த விசை அவனது உடலின் உள் உறுப்புகளைக் கிழித்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தியது. புகைந்து கொண்டிருந்த காரின் இடிபாடுகளுக்குள் அவன் சுயநினைவற்று விழுந்தான்.

அதிகாலை 3 மணி. மருத்துவமனை அவசரச் சிகிச்சை பிரிவு பதற்றத்தில் இருந்தது. அஜய்க்கு உள் ரத்தப்போக்கு அதிகமாகி கவுண்ட் குறைந்து கொண்டே வந்தது. அவனது வகை ரத்தம் அந்த பிளட் பேங்க்கில் இல்லை.

யு அண்ட் டி-யின் எமர்ஜென்சி நெட்வொர்க்கில் மெசேஜ் பறந்தது.

அஜய்யின் குடும்பத்தினர் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வேறு மருத்துவமனைகளில் ரத்தம் தேடுவதற்குள், அவசரப் பிரிவின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

வசுந்தரா இறங்கினாள். முகம் வெளுத்திருந்தாலும் நிதானமாக இருந்தாள். காரிடோரில் நின்றிருந்த அஜய்யின் உறவினர்களின் சங்கடமான பார்வைகளைக் கடந்து நேராகச் சென்றாள்.

"நான் அஜய்க்கு ரத்தம் தர வந்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் ஒரே பிளட் குரூப் தான். எவ்வளவு தேவையோ எடுத்துக் கொள்ளுங்கள்!"

அஜய் அடுத்து இரண்டு வாரங்களில் தேறினான். ஜெனரல் வார்டுக்கு வந்தான். மாலை வசுந்தரா அவனைப்பார்க்க வந்தாள். அஜய் சங்கடத்திலும் முகம் முழுக்க நன்றியோடு பார்த்தான்.

வசு! ஐயாம் சாரி! ஐயாம் டெர்ரிப்ளி சாரி! நான் உனக்கு எத்தனையோ கெடுதல்……..!”

வசுந்தரா பக்கென சிரித்தாள்.

“அஜய்! இது உனக்கு பொருந்தவே இல்லை. யுவர் ஃபேஸ் ஈஸ் ஃபன்னி! நீ எப்போதும் போல என் எதிரியாகவே இரு. அதுதான் உன் பர்சனாலிட்டிக்கு ஒத்து வரும்!”

அஜய் சிரித்தான்.

“எலியும் பூனையும் எங்காவது நட்பாக இருக்க முடியுமா?”

கேட்டபடி வசுந்தரா எழுந்து போய் கதவருகில் நின்றபடி “அண்ட் அஜய்! கெட் இட் க்ளியர்! நான்தான் பூனை!”

அவளின் சோழி குலுங்கின கலகல சிரிப்பையும் மீறி காரிடாரில் வசுந்தராவின் நிமிர்ந்த பார்வையுடன் நேர்கொண்ட நடை டாக் டாக்கென துல்லியமாக ஒலித்தது.

17 comments:

  1. கார்த்திக் சென்னை
    Excel macro ல இருந்த த்ரில் கடைசி வரை வரல. முடிவு எதிர்பாத்த மாதிரி இருந்ததோ?

    ReplyDelete
  2. நீளம் கொஞ்சம் அதிகமோ! நேரடி மோதல் ரொம்ப கம்மியாக இருப்பது, விறுவிறுப்பு போதவில்லை போல் தோன்றுகிறது. மே be because, it is her initial years! முடிவு சினிமாடிக் !

    -- R. Jagannathan.

    ReplyDelete
  3. Outstanding as always! But predicted this end !

    ReplyDelete
    Replies
    1. Please mention your name in the comments

      Delete
  4. Vasudevan Sethuraman17 July 2026 at 05:18

    Detailing is sometimes strength and sometimes not. / Vasu

    ReplyDelete
  5. வசுந்தராவின் 'கேரக்டர் பில்டிங்' வரிசையில் another feather in her cap !! கதை விவரிக்கப்பட்ட விதம் நல்ல சுவாரசியம்.

    ReplyDelete
  6. As usual great. Verygood story teller.
    Maali prabhu.
    .

    ReplyDelete
  7. Correct. Konjam cinimatic than.... Thozhilil vasu tactics kaati veli vanthu irukalamo nnu bakshi solrathu...

    ReplyDelete
  8. Usha Subramanian.well written but ended as expected.

    ReplyDelete
  9. Corporate bloody feud neutralised by blood. Self declaration by Vasundara she is Catty. More than story part, I enjoy narratives of Corporate vocabulary. Great one JR

    ReplyDelete
  10. Nice story Raghu. எழுத்தில் ஏகமாய் பரவியிருக்கும் "சஜாதாத்தன"த்தை மிகவும் ரசிக்கிறேன் . 🧡 ராம்கி

    ReplyDelete
    Replies
    1. Thank you very much! வாத்யார் impactஇல்லாம எப்படி!!

      Delete
  11. படு சுவாரசியமான கதை. இப்போதெல்லாம் நீங்கள் “feel good” அதிகமாக எழுதுகிறீர்களோ?
    கதை முடிவுல் அஜய் “அயம் சாரி,” என்று வசுந்தராவிடம் கூறுவது நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  12. Is there an edit facility after comment is posted?

    R. J.

    ReplyDelete
  13. Your descriptive skill creates a vivid visual picture in the readers mind.kudos.carry on.
    Usha sivaswamy

    ReplyDelete