Friday, 24 July 2026

 வசுந்தரா

“…உடுக்கை இழந்த and All that…”


அடையார் காந்தி நகரில் வசுந்தரா ரிலாக்ஸாக உடுத்தியபடி கையில் காஃபியுடன் வாசலுக்கு வந்து நின்றாள்.

“வசு! ராத்திரிக்கு அவியல் பண்ணட்டுமாடீ? அங்க பாம்பேயில கிடைக்குமோ என்னமோ?”

“என்ன வேணா பண்ணும்மா! நீ எது பண்ணினாலும் எனக்கு ஓகேதான்!”

“இன்னும் கால் மணியில சாப்பிடலாம், என்ன?”

“அம்மா! நா பத்மனாப சுவாமி கோவில வரைக்கும் நடந்துட்டு வந்துடறேன்மா!”

“சுருக்க வந்துடு வசு! இருட்டிப்போய்டுத்து பாரு!”

"யூ அண்ட் டியின் ஆஃப்ரிக்கன் கான்ஃபரன்ஸுக்கு போய் டமாஸ்கஸில் அல் மிதான் ஸ்ட்ரீட்டில் திடீர் கலவரத்துக்கிடையே தனியாக ஹோட்டலுக்கு வந்த இரவை நினைத்து சிரித்தபடி வசுந்தரா காந்திநகரின் இரண்டாவது மெயின் ரோடில் நடந்தாள். 

தெருவின் கடைசியில் கோவிலுக்கு எதிராக திரும்பும்போது அந்தப்பெரியவரை கவனித்தாள்.

தோள்கள் நெருங்கி, மார்புக்கூடு குறுகி, உடல் இளைத்து, வயசு ஜீவனைத்தின்று விட்டிருக்க கன்னம் ஒட்டி, சில பற்கள் விழுந்து தலை நரை மற்றும் முக்கால் வழுக்கை..

அவர் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தார்.

ஹெட்மாஸ்டர்! இந்த ஒல்லியான கிழவரா?

வசுந்தராவுக்கு நம்பவே முடியவில்லை.

இவரா? அப்போது ஹெட்மாஸ்டரை நினைத்துப்பார்த்தாள்.

நல்ல உசரமாக வாட்ட சாட்டமாக இருப்பார் சிக்கென்று வெள்ளை சட்டையும் கறுப்பு கலர் பாண்ட்டும் போட்டு ”டக் இன்” பண்ணி கூர்மையான பாயிண்டெட் ஷூ என்பார்களே, அந்த ஷூ போட்டிருப்பார். சில சமயம் ரெகுலர் வாத்தியார் ஒக்காரை என்று எதற்கோ பெயர் பெற்ற ரங்காராவோ, டும்மி சீனிவாசனோ வரவில்லை என்றால் இவர் ஆக்டிங்குக்கு வருவார். ஹெட்மாஸ்டர் என்பதால் பாடம் ஒண்ணும் எடுக்கமாட்டார். ஆனால் க்ளாசில் பேசினால் மண்டகப்படிதான்.

அந்த ஆஜானுபாகு உருவமா இது?

வசுந்தரா அவரை நெருங்கினாள். கண்களை இடுக்கியபடி அவளைப்பார்த்தார்.

“குட் ஈவினிங் சார்!”

அவர் முழித்தார்.

“நாந்தான் வசுந்தரா சார்!”

”யாரு? வசுந்தராவா? ஸ்டேட் செகண்ட் ராங்க் வாங்கின…..?”

“ஆமாம் சார்!”

கைகள் நடுங்கின. எதையோ நினைத்து சில கணங்கள் விழித்தார். வாய் முணுமுணுத்தது.

“ஐ வாஸ் ராங்! வெரி ராங்!”

வசுந்தராவுக்கு ஒரு கணம் புரியவில்லை.

“என்ன சார்? என்ன ராங்?”

“பிரிஸம்! ராங்! வெரி ராங்!”

 

கற்பகம் டீச்சர் எப்போதும் போல சிடுசிடுப்புடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது டேபிள் முன்னால் கலரான ஒரு அழகான பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் Zeiss, Germany என்று அழகான ஸ்டைலில் எழுதியிருந்தது.

அடுத்து வாரம் புதன் கிழமை யாரும் லீவு போட்றாதீங்க! நம்ம ஸ்கூல் ஸி எஸ் ஆர் ஐயில நடக்கற இண்டர்நேஷனல் சயன்ஸ் ஃபேரில ஸ்டால் போடப்போறோம்!’

“நா வேணா பாப்கார்ன் ஸ்டாலைப்பாத்துக்கறேன்!”

ஈயம் முன் வந்தான்.

“தீவிட்டி! சயன்ஸ் எக்ஸிபிஷன்ல பாப்கார்னா? உக்கார்ரா சாப்பாட்டு ராமா! இதப்பாருங்க!

கற்பகம் டீச்சர் அந்தப்பெட்டியைத்திறந்து அதனுள்ளிலிருந்து சர்வ ஜாக்கிரதையாக ஒரு பொருளை எடுத்தார். கிராஃப்ட் பேப்பர் சுற்றியிருந்ததை விலக்கினபோது கிளாசே ”உச்” ”உச்” கொட்டியது. அது பளிச்சிடும் உயர்தர ஜெர்மன் கண்ணாடியில் செய்யப்பட்டிருத ஒரு பிரிஸம். முக்காலடி உயரமும் அரையடி அகலுமுமாய் ஜொலித்த து.

“இதுதான் ஆப்டிக்கல் பிரிஸம். இதோட ஸ்பெஷாலிட்டி என்ன படிச்சோம்?”

சூரிய ஒளியை பாஸ் பண்ணினால், அது வெறும் ஏழு கலர் மட்டுமில்ல; இந்த கிளாஸ் ரூம்ல ஒரு வானவில்லையே டிஸ்ப்ளே பண்ணிடும்!”

வசுந்தரா பட்டென பதில் சொன்னாள்.

“வெரி குட்! இதத்தான் நாம அந்த எக்ஸிபிஷன் ஸ்டால்ல வெச்சு இதோட ஸ்பெஷல் ப்ராப்பர்ட்டீஸெல்லாம் விஸிட்டர்களுக்கு டெமான்ஸ்ட்ரேட் பண்ணப்போறோம்! வசு அண்ட் விமலா! நீங்க ரெண்டு பேரும் தான் லீடிங் இன் தி ஸ்டால்!”

“டீச்சார்! அப்ப நானு?”

கோண்டு எழுந்து கேட்டான்.

“நீ அப்பப்ப ஸ்டாலைப்பெருக்கணூம்! போடா உக்காரு! அங்க வந்து மானத்த வாங்காம இரு அது போறும்! இன்னும் ரெண்டு மூணு ஸ்டால் வெக்கறோம், அங்க மத்த ஸ்டூடெண்ட்ஸ் எல்லாரும் ஹெல்ப் பண்ணணும், ஓகே?”

கற்பகம் டீச்சர் சொல்லிவிட்டு “ஓகே! நா ஸ்டாஃப் ரூம் வரைக்கும் போய்ட்டு வரேன். வசு அண்ட் விமலா! நீங்க ரெண்டு பேரும் பிரிஸமை ஜாக்கிரதையா பாக் பண்ணி ஹெட்மாஸ்டர் ரூம்ல கொண்டு வெச்சிருங்க! குட்டிகளா! ஜாக்கிரதை இதோட விலை ரொம்ப அதிகம்!”

டீச்சர் போய்விட்ட விடுதலையில் நாங்கள் கூடிப்பேச, பாத்ரூமுக்கு என்றெல்லாம் சிலர் விலக, சில பெண்கள் ஜோடி போட்டுக்கொண்டு கிளம்ப, வசுந்தராவும் விமலாவும் அந்த பிரிஸமை மெல்ல எடுத்து கிராஃப்ட் பேப்பரை சுற்ற….

கிளாசின் அத்தனை கலகலப்புகளுக்கிடையேயும் அந்த ”டங்” என்னும் சப்தம் துல்லியமாக ஒலிக்க, அடுத்து வினாடி அந்த பிரிசம் ஏதோ சினிமாவில் வரும் ஸ்லோ மோஷன் போல டேபிளிலிருந்து நழுவி…

ஆம்! ஆம்! ஆம்!

ஜெர்மன் பிரிசமோ என்னமோ, அது சுக்கு நூறாக உடையாமல் பளீரென்றூ வீரல் விட்டு நுனி உடைந்து சாக்லேட் மறுக்கப்பட்ட குழந்தை போல அனாதையாய்க்கிடக்க, முகம் முழுக்க அதிர்ச்சியுடன் வசுந்தராவும் விமலாவும்….

மேஜைக்கு அருகே விமலா உறைந்து போய் நின்றிருந்தாள். அவளது கைகள் காற்றில் ஏதோ ஒன்றைப் பிடிக்க முயன்று தோற்றுப்போன நிலையிலேயே உறைந்திருந்தன. அவளது காலடியில், அந்த ஜெர்மன் பிரிசம் சேதப்பட்டுக் கிடந்தது. அதன் உடைந்த முனைகளில் மாலை வெயில் பட்டு ஒரு கணத்தில் ரத்தச்சிவப்பாய் ஒளிர்ந்தது.

கிளாசில் பல பேர் இருந்தும் உடைத்தது யார் என்று எவரும் பார்க்கவில்லை. வசுந்தராவின் முகத்தில் அதிர்ச்சி ஆனால் விமலாவோ முகம் வெளுத்து பயப்பீதியில் கண்கள் முழி பிதுங்கி….

உங்களுக்கு விமலாவைப்பற்றி சொல்ல வேண்டும்.

இந்த விமலா வெகு சாதாரணள். அமைதியாக வந்துவிட்டு போய்க்கொண்டிருக்கும். உயரமாக ரெட்டைப்பின்னலுடன் விசுக் விசுக் என்று நடந்து வரும். அதிகம் பையன்களின் பார்வையில் பட்ட மாதிரி இல்லை. வருஷத்துக்கு ஒரு முறை நடக்கும் ஸ்போர்ட்ஸ் தினத்தில் த்ரோ பால் நன்றாக விளையாடும். கொஞ்சம் கிராக்கியாக நடந்து கொள்ளும், மற்றபடி சாது தான். படிப்பிலும் சுட்டிதான், ஆனால் வசுந்தரா எப்போதும் முதல் ராங்க் என்றால் விமலா நாலாவது ஐந்தாவதுதான் வரும். ஆனால் வசுந்தராவுடன் மிக நெருக்கம். கொஞ்சம் சாதாரண குடும்பம்தான். வசுந்தரா அவளுக்கு பல வகையிலும் உதவி செய்வதாக அப்போதே பேச்சு ஓடியது.

கிளாசில் மிச்ச மீதியிருந்த நாங்களும் பயத்தில் உறைந்து போய் நின்றுவிட்டோம்.

விமலா பயத்தில் அழத்தொடங்க, வசுந்தரா அதிர்ச்சியானாலும் அழவில்லை. நாங்கள் அவர்கள் இருவரையுமே பார்த்து ஒரு வித ஆச்சரிய அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“யாரு உடைச்சது? விமலா நீயா?”

“அய்யோ! இது என்ன வெலை இருக்குண்டா!”

“லட்ச ரூவாயா?”

“சீச்சி! ஏழாயிரம் எட்டாயிரம் இருக்கும், அவ்வளவுதான்!”

வசு... வசுந்தரா..."

விமலாவின் குரல் தொண்டைக்குள்ளேயே அடைத்தது. அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்துக் கன்னங்களில் பாய்ந்தது.

"நான்... நான் வேணும்னே பண்ணலடி. க்ராஃப்டை மடிக்கும்போது கை பட்டுடுச்சு... அய்யோ! எங்க அப்பா என்னைக் கொன்னுடுவாருடி... என்னோட படிப்பே முடிஞ்சு போச்சு வசு..."

விமலா தரையில் அமர்ந்து கதறும் நிலைக்குப்போய்விட்டாள்.

 விஷயத்தின் தீவிரம் புரிபட எங்களூக்கும் பீதி. விஷயம் பரவி ஹெட்மாஸ்ட்ருக்கும் போய்விட்டது. அவர் ரூமுக்குள் நடந்த விசாரணை பற்றி யாருக்கும் முழுசாகத்தெரியவில்லை. பராபரியாக காதில் விழுந்தவைதான்.

“யாரோட கைங்கர்யம் இது?

கோபம் முற்றிப்போய் ஹெட்மாஸ்டர் வரவழைத்துக்கொண்ட ஆபத்தான அமைதியுடன் கேட்டாராம்.

விமலா வாயைத்திறக்க முடியாமல் பயத்தில் குழறியபடி தடுமாறினபோது வசுந்தரா தயக்கமின்றி ”நான்தான் சார், பைக்குள் வைக்கும்போது கை தவறி கீழே விழுந்துடுத்து!" என்று சொன்னாளாம்.

அடுத்து ஒரு மணி நேரம் புயல் அடித்தது. வசுந்தராவின் அப்பா வந்து ஹெட்மாஸ்டருடன் பேசினார். உடைந்து போனதற்கான நஷ்ட ஈடு தந்துவிடுவதாக எழுதிக்கொடுத்துவிட்டார். ஆனாலும் ஹெட்மாஸ்டரின் கோபம் தணியவில்லை.

“வசுந்தரா! நீ பண்ணினது பெரிய தவறு. கேர்லெஸ்னஸ் என்பதை மன்னிக்கவே முடியாது. சயன்ஸ் ஃபேர்ல நம ஸ்கூலோட பேர் கெடப்போகறது. இது அக்கறை இல்லாமை! வசுந்தரா! உங்கிட்டேர்ந்து நான் இதை எதிர்பாக்கல. ஐயாம் வெரி டிஸப்பாயிண்ட்டட். ஸோ, இந்த சயன்ஸ் எக்ஸிபிஷனுக்கு நீ வரக்கூடாது. உனக்கு பதிலாக விமலாவுடன் ரகு போகட்டும். அதோடு அடுத்து ஒரு வாரம் உன்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறேன்.!”

வசுந்தரா தலை குனிந்தபடி வந்துவிட்டாளாம்.

அன்று இரவு வசுந்தரா வீட்டின் மாடியில் தனியாக நடந்து கொண்டிருந்தாள். மனது பாரமாய்க்கனத்தது.

சஸ்பென்ஷன்! சயன்ஸ் ஃபேருக்கு போக முடியாது! தன் மேல் கறுப்பு புள்ளி!

"போர்ன்வீடா சாப்பிடறியா வசு?"

பின்னால் அப்பாவின் குரல். தன் கையில் இருந்த இரண்டு டம்ளர்களில் ஒன்றைக் மகளிடம் நீட்டினார். வசுந்தரா அமைதியாக வாங்கி ஒரு சிப் உறிஞ்சினாள். சூடான திரவம் அவளது தொண்டைக்குள் இறங்கியது.

"நீ தப்பு பண்ணினேங்கறத என்னால் நம்பவே முடியலை. எனக்கு உன் கவனம் தெரியும். என்னதான் நடந்தது?"

வசுந்தரா எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லி முடித்ததும் வசுந்தராவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

நான் பண்ணது தப்பாப்பா? என்னால உங்களுக்கு நஷ்டம் அதோட அவமானம் ! சாரிப்பா!”

அப்பா கப்பைக் கீழே வைத்தார். மகளின் தோள்களைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினார். அவளது கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்துவிட்டார். அவளது முகத்தில் எந்தக் கோபமும் இல்லை; மாறாக, ஒரு பெரிய பெருமிதம்.

வசு! நீ செஞ்சது ஒரு பொண்ணோட படிப்பைக்காப்பாத்தியிருக்கு. அவளுக்கு அவ குடும்பத்துல என்னென்ன கஷ்டம் உண்டாயிருக்குமோ! அதெல்லாத்தையும் நீ தடுத்திருக்கியே! ”அபராத சஹத்வம்”னு நம்ம பாசுரத்திலேயே சொல்லியிருக்கேம்மா! “தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்…… நீதான் படிச்சிருக்கியே வசு! உன் அடியார்கள் தப்பு செஞ்சுட்டாங்கன்னு லட்சுமி தேவியே சொன்னாலும் பெருமாள் அதை ஏத்துக்காம அப்படி செய்திருந்தா அதுவும் நல்லதுக்குதான்னு சொல்லிடலியா? ஸோ, லீவ் இட்! ஐயாம் ப்ரவுட் ஆஃப் யூ! போ போய்த்தூங்கு!”

வசுந்தரா அந்தக்கிழவரின் கைகளைப்பிடித்துகொண்டு அப்படியே நின்றாள்.

“அயாம் சாரி வசுந்தரா!”

ஹெட்மாஸ்டர் அத்தனை வருடங்களுக்குப்பிறகு வசுந்தராவிடம் மன்னிப்புக்கேட்ட து வசுந்தராவுக்கு நெகிழ்ந்தது.

“இதை நெனச்சா நீங்க வருத்தப்பட்டுட்டு இருந்தீங்க! இட் ஈஸ் ஓகே சார்!”

”இல்லை வசு! நான் தப்பு பண்ணிட்டேன்! பெரிய தப்பு பண்ணிட்டேன்!”

”ஓ நோ! சார்! அப்படியெல்லாம் சொல்லாதீங்க! ஆமா, இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?”

”லெட்டர் வந்துது. மணி ஆர்டர் கூட!”

“என்ன லெட்டர் சார்?”

“பல வருஷத்துக்கப்றம் லெட்டர் எழுதினா?”

“யாரு?”

“விமலா! பிரிஸமை உடைச்சது தான் தான்னு! கூடவே மணி ஆர்டர்ல பணம்!

“வாட்? விமலாவா?”

“ஆமா! எல்லா பாரத்தையும் என் மேல இறக்கி வெச்சுட்டு அவ தன் கான்ஷியன்ஸ காப்பாத்திக்கிட்டா! நாந்தான் மறுகிப்போய்ட்டேன்! அந்த சமயத்துலதான் நம்ம ஊட்டி ஸ்கூலுக்கு எனக்கு டிரான்ஸ்ஃபர், நானும் அந்தப்புது வேலையில மூழ்கி என்னோட செல்ஃபிஷ்னஸ்ல மறந்தே போனேன். அவ்வளவுதான். உன்னை மீட் பண்ண சந்தர்ப்பமே வரல!”

”புரியுது சார்! அண்ட் இட் ஈஸ் ஆல்ரைட்!”

 ”இல்லை வசுந்தரா! அப்ப எனக்கு அவ்வளவா புரியல. ஆனா ரிடயர் ஆகி இந்த காந்தி நகருக்கு மறுபடி வந்தப்றம் உன்னோட நினைவும் நான் உனக்கு பண்ணின தவறும் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணித்து! வசு! ஐயாம் கிளாட்! வெரி கிளாட்.! இன்னமே நான் நிம்மதியா தூங்குவேன்! நிம்மதியா செத்துப்போவேன்!”

அந்தக்கிழவர் வசுந்தராவின் கைகளை இறுக்க பற்றிக்கொண்டு சிந்திய கண்ணீரில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது.


12 comments:

  1. ப்ரமாதம் ஜெ ஆர். நீங்க நேரில் காணுவது போல த்தரூபமா அந்த ப்ரிஸம் சம்பவத்தையும் அதை கையாண்ட விதத்தையும் விளக்கினது சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. Thanks! ஆராக்கும் இது!!

      Delete
  2. WOOOOOOW SUPPPPPPPPPPER SIR. VERY GOOD HUMANE GESTURE BY ALL THREE. CONGRATULATIONS. GOD BLESS YOU AND YOUR ENTIRE FAMILY FOREVER. WITH REGARDS RANGRAJAN SRIDHAR 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

    ReplyDelete
  3. கண்ணாடி ப்ரிஸத்தை விளக்கிய விதம் அருமை என்றால், விமலாவின் பழியை வசுந்தரா ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்பதை யூகிக்க முடிந்தாலும், பழைய தலைமை ஆசிரியரை அவள் கையாண்ட விதம் superb என்றே சொல்ல வேண்டும்.


    வசுந்தரா பாத்திரத்தை நீங்கள் glorify செய்யும் விதம் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  4. Vasundra is Gold. However way one bends, beats, twists, mangles still it is Gold only. You can only expand even a small incident to an interesting story.

    ReplyDelete
  5. கார்த்திக் சென்னை

    /இன்னமே நான் நிம்மதியா தூங்குவேன்! நிம்மதியா செத்துப்போவேன்!/

    ஆஹா! மெல்லிய உணர்வுகளை அழகாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் சென்னை

      /எல்லா பாரத்தையும் என் மேல இறக்கி வெச்சுட்டு அவ தன் கான்ஷியன்ஸ காப்பாத்திக்கிட்டா!/

      வாழ்க்கையில் நடப்பதை சொல்லி விட்டீர்கள்

      Delete
  6. என்னைக் கவர்ந்த வரிகள் "நான் இனிமே நிம்மதியா செத்துப் போவேன்."

    நிம்மதிகள் கதைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன. Like, Vasundhara meeting Headmaster on the road

    ReplyDelete
    Replies
    1. கதை நம்ம கையில இருக்கே! ஆதனால சுலபமா சந்தோஷங்களை உண்டாக்கிடலாம், இல்லியா?

      Delete