Sunday, 2 August 2026

 வசுந்தரா அழுதபோது…



எங்கள் ராணி மெய்யம்மை ஸ்கூலில் அவ்வளவாக சோக சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை. எட்டாம் கிளாஸ் சுந்தர் அடையார் ஆற்றில் மூழ்கி இறந்து போனதும் சாந்தா அகாலமாக மரணித்ததும், பத்மா டீச்சரின் கான்சர் மரணமும் என சில சம்பவங்கள் தாம். அடுத்து நாள் கிளாசில் டீச்சர்கள் விவரிக்கும் போது பெண்கள் பக்கம் நிச்சயம் அழுகை. கோதாவும் சந்திரிகாவும் விசித்து விசித்து அழுங்கள். உஷாவெல்லாம் கலங்குவதோடு சரி. பாய்ஸ் பக்கம் கண்கள் கலங்கும் சில சொட்டுக்கள் விழுந்தால் தொப்பை தெரிவதையும் பொருட்படுத்தாமல் சட்டையைத்தூக்கி அவசரமாக கண்ணைத்துடைத்துக்கொண்டு சாதாரணமாக இருக்க முயன்று தோற்போம்.

இதற்கெல்லாம் மசியாதவள் வசுந்தரா.

“யேய் வசு! கிளாசே கலங்குது!நீ என்ன கல்லாட்டமா உக்காந்திருக்க?”

ஒரு முறை பிருந்தா டீச்சர் கேட்டே விட்டார்.

“எனக்கும் வருத்தம் தான் டீச்சர். ஆனா அழுகை வரலையே!”

ஒன்றுமே நிகழாதது போல இருப்பாள்.

ஒரு முறை நானே கேட்டேன்.

“அதென்னவோ அப்படியே தான் ஆரம்பத்துலேர்ந்து! ஆனா என் வருத்தம் உங்களோட வருத்தத்தை விட எந்தவிதத்திலும் குறச்சல் இல்லைன்னு உனக்கு புரியுமா?”

யூ அண்ட் டி பாம்பேயில் வசுந்தரா மானேஜ்மெண்ட் டிரெய்னீயாகச்சேர்ந்த பதினாலாவது மாதம் அந்த ரூரல் டிரெயினிங் என்னும் இரண்டு மாத கிராமத்து புரோகிராம் வந்தபோது மிஷ்ரா அவளைக்கூப்பிட்டார்.

“லுக் வசுந்தரா! இது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் உத்தரப்பிரதேச கிராமம். இரண்டு மாதம் அங்கேயே தங்க வேண்டும். நீ பெண் என்பதால் உனக்கு விதி விலக்கு அளிக்க முடியும். பதிலாக அந்த இரண்டு மாதம் இங்கே பாம்பேயிலேயே ஏதவது ஸ்டிண்ட் தரச்சொல்லுகிறேன்!”

“நோ சர்! ஐ வாண்ட் டு கோ! என்னால் முடியும்! அந்த அனுபவத்தை இழக்க நான் தயாரில்லை!”

“குட்! வெரி குட்! பட் பி கேர்ஃபுல்!”

யூ அண்ட் டி கம்பெனி உத்தர பிரதேசத்தின் பின் தங்கிய ஈட்டா மாவட்டத்தில் நூற்றைம்பது கிராமங்களை தத்து எடுத்து இருந்தார்கள். ஒவ்வொரு டிரெயினியும் இரண்டு மாதம் ஒரு கிராமத்தில் தங்கி அதன் முன்னேற்றத்திற்காக எதாவது செய்ய வேண்டியது இந்த டிரெயினிங்கின் முக்கியமான ப்ராஜெக்ட். இதன் மதிப்பெண் பின்னால் வேலை ஸ்திரமாவதற்கு மிக ஆதாரமானது.

டிரெய்னீக்கள் தங்குவதற்கு கிராமத்திலேயே கொஞ்ச வசதியான விவசாயின் வீட்டில் ஏற்பாடு. இரண்டு மாதங்களுக்கு அவர் வீட்டில் தங்கி சாப்பிட்டதற்கு பின் காசு கொடுத்தால் மரியாதைப்படாது என்பதால் அவர் வீட்டிற்கு தேவையான சாமான்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது வழக்கமாக இருந்தது.

வசுந்தராவினுடைய புரவலர் ராம்பூர் சிங் என்னும் ஒல்லியான மீசை வைத்த பஞ்சகச்சம் கட்டின விவசாயி. அவருக்கு பதினாறில் ஆரம்பித்து இருவத்து நாலு வரை ஆறு பெண்கள்.

அக்டோபர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிர், அதிக வெளிச்சமில்லாத மாலை. வசுந்தராவை அந்த ஜீப் இறக்கிவிட்டு பின்புறம் நீலப்புகையுடன் கிளம்பி மறைந்த பின் திரும்பினால் கிராமமே உட்கார்ந்து அவளை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது.

ராம்பூர் சிங் வரவேற்றார். அவரின் ஆறு பெண்களும் வசுந்தராவை கண் கொட்டாமல் பார்க்க, ராம்பூர் அதட்டினார்.

“லேக்கெ ஜாவோன்னா, அந்தர்!”

சின்னப்பெண் ஓடி வந்து சாமான்களை எடுத்துக்கொண்டு உள்ளே போயிற்று. ராம்பூர் சிங்கின் மனைவி தலையில் கும்ட்டா போட்டுக்கொண்ட பருமனான பெண்.

“ஆப் ஆராம் கரோ! சப் கல் தேக்லேங்கே!”

இரவு கயிற்றுக்கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டு அரைகுறை தூக்கம் தூங்கி காலை கண் விழிக்கும்போது ஏழு ஆகியிருந்தது.

வசுந்தரா ஒரு பெண்ணைக்கூப்பிட்டு அரைகுறை ஹிந்தியில் விஜாரித்தாள்.

“பாத்ரூம் எப்படி?”

அந்தப்பெண்ண்வாயைப்பொத்தி சிரித்துக்கொண்டே “அபி நஹி” என்று ஓடியது.

“என்னது அபி நஹியா? என் காலைக்கடன் பற்றி இவள் முடிவு செய்வதா?”

அம்மா வந்து வசுந்தராவில் காதுகளில் கிசுகிசுத்த சமாச்சாரம்.

“இந்தக்கிராமத்தில் பெண்கள் இரவுதான் அந்தக்கடன்கள் கழிக்க முடியும்!காலை ஆண்களுக்கான நேரம்!”

வசுந்தராவுக்கு திக்கென்றது.

அன்று முழுவது பார்த்து பார்த்து சாப்பிட்டாள்.

நான்கைந்து நாட்களில் ருட்டின் பிடிபட்டுவிட்டது!

முதல் வாரம் கிராம் முழுக்க சுற்றினாள். கூடவே வந்த ராம்பூர் சிங் ஒரிடத்தில் நின்று விட்டார்.

“ஆப் ஜாகே ஆயியே மேம்சாப்! மெ நஹி ஆ சக்தா!”

வசுந்தராவுக்கு புரிந்து அவள் அங்கேயும் போனாள்.

முதலில் அப்பகுதி ஆண்களுக்கு ஆச்சரியம். அந்த இடத்துப்பெரியவர் வரவேற்றார்.

“நீங்க இங்கல்லாம் வருவீங்களா?”

”ஜரூர்!”

சிரித்துக்கொண்டே சொன்ன வசுந்தராவைப்பார்க்க பெண்களும் கூடி விட்டனர்.

ஒரு பெண்ணிடம் வசுந்தரா பேசினாள்.

“எனக்கு டீ தர மாட்டீர்களா?”

மேலும் ஆச்சரியம்.

”இங்கே டீ குடிப்பீர்களா?”

“ஜலேபி கிடைக்குமா?”

அவ்வளவுதான், பல பேண்கள் ஓடிப்போய் தம் வீடுகளிலிருந்து பலவகை படசணங்கள் கொண்டு வந்து தர, அங்கே அமர்க்களம்.

ஒரு வயதான பெண் வசுந்தரா கையில் முறுக்கு போன்ற ஒன்றைத்தர வசுந்தரா அவள் தோளில் கை போட்டு “நீங்கள் என் அம்மா மாதிரி! ஊட்டி விடுங்களேன்” என்று சொல்ல அந்த வயதான மாது கண் கலங்கினதும் ஊர்ப்பெரியவரும் இன்னும் சில ஆண்களூம் சினேகமாக புன்னகை செய்தனர்.

வசுந்தரா ஊரின் தேவைகளைக்கணக்கிட்டாள். மதியம் சில இளைஞர்களை அழைத்துக்கொண்டு காஸ்கஞ்ச் டவுனுக்குப்போனாள். பிளாக் டெவலப்மெண்ட் ஆஃபீசரைப்பார்த்து பேசி இரண்டு போர்வெல் பம்புகளூக்கு உத்தரவு வாங்கினாள். பாதிப்பணம் அரசாங்கம் கொடுக்க வசுந்தரா மீதிப்பணத்தை தானே கொடுத்தாள்.

இன்னொரு நாள் சிதிலமடைந்து இருந்த ஸ்கூல் கிரவுண்டில் சில இளைஞர்கள் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து அவர்களுடன் பேசினாள்.

“என்ன விளையாட்டு விளையாடுவீர்கள்?”

“ஃபுட் பால், வாலி பால் கிரிக்கெட்!”

இந்த இடத்தில் ஒரு வாலிபால் மைதானம் அமைக்கலாமா?”

“மேம்சாப்! வாலிபால் நெட்டுக்கெல்லாம் காசு வேணூம்!”

”அது என் கவலை!”

அன்று முழுவதும் பத்துப்பன்னிரெண்டு இளைஞர்களூடன் வசுந்தராவும் வேலை செய்து வாலிபால் கோர்ட் அமைத்தார்கள்.

அன்று மறுபடியும் எல்லோருடனும் ஒரு டிராக்டரில் உட்கார்ந்து காஸ்கஞ்ச் போனாள். அங்கிருந்து யூ அண்ட் டி ஃபாக்டரிக்கு ஃபோன் பேசினாள்.

”வாங்க பாய்ஸ்! ஏதாவது சாப்பிடலாம்!”

ஒரு ஆள் படுக்கலாம் போல சைஸ் கடாயில் மஞ்சளும் வெண்மையுமாய் பால் கொதித்துக்கொண்டிருக்க, அருகில் இன்னொரு கடாயில் பெரிய ஜாரணியால் பொன்னிற ஜிலேபிகளை எடுத்துபோட்டுக்கொண்டிருந்தான். பக்கத்திலேயே கச்சோரி பொரிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் ஜிலேபி கச்சோரி வாங்கிக்கொடுத்தாள். சாப்பிட்டு முடிந்து கை கழுவு முன்னரே ஒரு மோட்டார் சைக்கிளில் யூ அண்ட் டி ஃபாக்டரியிலிருந்து ஆசாமி வாலி பால் நெட்டும் இரண்டு வாலி பால்களும் கொண்டு வந்துவிட்டார்.

ஒரே ஆரவாரத்துடன் அந்த டிராக்டர் மீண்டும் கடியா நமேனிக்குப்போய் அன்றே முதல் கேம் வாலி பால் ஆடப்பட்டது.

அன்றிரவு ராம்பூர் சிங்கின் மனைவி வசுந்தராவிடம் வந்து பேசினாள்.

“மேம்சாப்! ஆப் கே பாஸ் சுந்தர் ஷரீர் ஹைன்! ஆப் கேந்த் மத் கேல்னா!”

வசுந்தரா வெட்கப்பட்டாலும் அந்தப்பெண்ணின் அன்பில் நெகிழ்ந்தாள்.

அடுத்து நாள் மதியம் வசுந்தரா உட்கார்ந்து சில பெண்களூடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“உங்களுடைய தினப்படி ருட்டீன் என்ன?”

“காலை எழுந்து அடுப்பு மூட்டி வெளியே செல்லும் ஆண்களுக்கான நாஷ்டா மதிய உணவு தயாரித்துவிடுவோம். எட்டு மணிக்கு அவர்கள் நாஷ்டா உண்டு கிளம்பினதும் வீட்டை சுத்தம் செய்வோம். அடுத்து நாளுக்கு வேண்டிய விறகு உடைப்போம். சாமான்கள் தேவையென்றால் கடைக்கு போய் வாங்கி வருவோம்.அதிலேயெ நாள் முடிந்து சந்தியா நேரம் வந்துவிடும்!”

“கடையா? அது எங்கே இருக்கிறது?

“யஹான் ஸே சாத் கிலோமீட்டர்!”

”அத்தனை தூரம் நடந்தா போவீர்கள்?

”வேறு வழி?”

”ஆண்களை வாங்கி வரச்சொல்லலாமே?”

“அவர்களுக்கே ஏகப்பட்ட வேலை, கவலைகள்! மேலும் நேரம் ஒத்து வருவதில்லை.

அன்று மாலை முழுவதும் வசுந்தரா யோசித்தபடி நடந்தாள். அடுத்து நாள் கிராமத்துப்பெண்களைக்கூட்டினாள்.

”இந்த ஊரிலேயே கடை வைத்தால் என்ன?”

“இந்த ஊரிலா? யார் வைப்பார்கள்?

”ஏன் நீங்களே நடத்துங்களேன்!”

“என்னது நாங்களா? பெண்களா?”

”ஏன் கூடாது?”

வசுந்தரா விவரிக்க விவரிக்க, பல பெண்களின் ஆர்வம் கூடியது. சில வயது முதிர்ந்த பெண்கள் “ஹம் கைஸே கரேன்! யே கியா பாத் கர்தி ஹைன்” என்று முணுமுணுத்தார்கள்.

வசுந்தரா கிராமத்தைச்சுற்றி வந்தபோது கிழக்குப்பகுதியில் ஒரு பாழடைந்த சின்ன கட்டிடம் பார்த்தாள். விசாரித்தபோது அது எப்போதோ அரசாங்கம் பால் சேகரிக்க கட்டின கட்டிடம். இப்போது பால் கோவாப்பரேட்டி அடுத்து கிராமத்துக்கு வந்துவிட இது கேட்பாரற்று கிடக்கிறது.

யூ அண்ட் டி ஈட்டா ஃபாக்டரியில் பேசி அவர்களின் கிராம முன்னேற்ற பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை கொடுக்கச்செய்தாள்.நாலு இளைஞர்களை அழைத்து அந்த இடத்தை சுத்தம் செய்தாள். பல வீடுகளில் போய்ப்பார்த்து பேசி உடைபட்ட அலமாரிகள் சில டேபிள்கள் வாங்கி மரமாத்து செய்ய வைத்தாள். 

தயக்கமின்றி வந்த பெண்களை வைத்து குழு ஒன்று அமைத்தாள். பெண்கள் ஐந்து கிலோமீட்டர் நடந்து போய் வாங்கி வரும் அவசர பொருட்கள் பத்து மட்டும் லிஸ்ட் போட்டு காஸ்கஞ்சுக்குப்போனாள். எல்லாவற்றிலும் இரண்டு கிலோ மட்டும் வாங்கி கடை பரப்பினாள். இரண்டு பெண்களை கடை நிர்வாகத்தில் அமர்த்தினாள்.

“இதோ பாருங்க! இரண்டிரண்டு பேராய் கடை நடத்தணூம். காலை ஒன்பது மணிக்கு ஆண்கள் வேலைக்கு போனபின் இரண்டு பேர் வரவேண்டும் பதினொரு மணிக்கு இன்னொரு இரண்டு பேர். மறு படி மூணு மணிக்கு இரண்டு பேர். ஐந்து மணிக்கு கடை மூடிடலாம், என்ன?”

முதல் சில நாட்கள் நொண்டினாலும் ஒரே வாரத்தில் சீராகியது. பணம் வாங்குவது, கணக்கு வைத்துக்கொள்வது சாமான்கள் குறையும் போது காஸ்கஞ்சுக்குப்போய் கொள் முதல் செய்வது எல்லாவற்றையும் கூட இருந்து சொல்லித்தந்தாள்.

அடுத்து வாரம் காஸ்கஞ்சுக்கு போய் ஒரு போர்டு எழுதுபவனிடம்
கடியா நமேனி மஹிளா ஸ்டோர் என்று எழுதி வாங்கி அதை கடை முன் வைக்க ஆரவாரம்.

ஓரிரு வாரங்களிலேயே வியாபாரம் சூடு பிடிக்க, ஆண்கள் தேவைக்கான பீடி, புகையிலை, பாக்கு பான் என்று பல பொருள்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒரு பெண் தயங்கி தயங்கி நான் இங்கே பக்கத்தில் டீ போட்டு விற்பனை செய்யலாமா என்று கேட்க முதலில் டீ பிறகு பட்சண விற்பனையும் தொடங்கிவிட்டது.

வசுந்தரா பூச்சி மருந்துக்கான மெஷின், கிணற்று உருளைகள், கோதுமை போரடிக்கும் சக்கரம் வைத்த வண்டிகளின் மரமாத்து என்று பல சின்னச்சின்ன முன்னேற்றங்களுக்கு ஏற்பாடு செய்தாள்.

வசுந்தரா டிரெய்னிங் முடிந்து கிளம்பவேண்டிய நாள்.

புறப்படும் அன்று ராம்பூர் சிங்கும் அவர் மனைவியும் பெண்களும் கண்ணீர் விட்டபோது வசுந்தரா நெகிழ்ந்தாலும் அழவில்லை. மண் வாசனையும் வேர்க்கடலை வறுபடும் நெடியும் கொஞ்சம் அழுக்கும் வியர்வையும் கலந்த அந்த ராம்பூர் சிங் மனைவியின் ஆலிங்கனம் வசுந்தராவுக்கு அடையார் காந்தி நகரில் அம்மாவின் அணைப்பாகவே இருந்தது.

யு அண்ட் டியில் ரூரல் ஸ்டிண்ட்டில் வசுந்தராவுக்கு முதல் இடம் கிடைக்க மிஷ்ரா வாழ்த்தினார்.

 அப்புறம் என்ன, கம்பெனியின் ஓட்டத்தில் வசுந்தரா ஓடினாள். சண்டிகர், கல்கத்தா, ஜம்மு என்று இடம் இடமாக மாற்றம். நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு சீனியர் மானேஜராக பதவி உயர்ந்து வசுந்தராவுக்கு ஈட்டா ஃபாக்டரியின் ரிவ்யுக்கு போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

அந்த சனிக்கிழமையே ஜீப் எடுத்துக்கொண்டு கடியா நமேனிக்கு விரைந்தாள்.

என்னமோ ன் பிறந்த ஊருக்கு வந்தாற்போல வாழ்த்தும் விஜாரிப்புமாய் இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பாலும், ஜிலேபியும் அடைத்தார்கள். வசுந்தரா வந்து போன பிறகு கிராமத்துக்கு வந்த மருமகள்களிடம்  "இங்கதான் குளிப்பாங்க, இங்கதான் வாலி பால் போட்டுத்தாந்தாங்க, இந்த பம்ப் மேம்சாப் அரசாங்கத்தில் சொல்லி போட்டதுதான்” என்றெல்லாம் சுற்றுலா வேலை செய்தார்கள்.

ராம்பூர் சிங்கின் மனைவி வசுந்தராவை அணைத்து வரவேற்றாள்.

“மாஜி! ஆப்லோக் கைஸே ஹோ?”

“சப் டீக் ஹைன் பேட்டி! நீ இங்கு பார்க்க வேண்டியது ஒன்று இருக்கிறது! வா என்னுடன்!”

அந்தப்பெண் வசுந்தரா கைகளைப்பிடித்து அழைத்துக்கொண்டு போக பெண்கள் கூட்டம் பின் தொடர்ந்தது.

நல்லாவைத்தாண்டி நெருஞ்சி முள் பாதையைக்கடந்து கிணற்றைச்சுற்றி நடந்து வாலிபால் கோர்ட்டையும் தாண்டி திருப்பத்தில் கிழக்குப்பக்கத்தில் போய் “அதோ பார்” என்றாள்.

அங்கு ஒரு காலத்தில் சிதிலமாக இருந்த கட்டிடம் இப்போது சீர் திருத்தப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்டு ஷட்டர் எல்லாம் போட்டு…………

வசுந்தராவின் கண்கள் தன்னிச்சையாக போர்டைக்கவனித்தன.

வசுந்தரா மேம்சாப் ஸ்டோர்

வெள்ளை பின் புலத்தில் காவி நிறத்தில் அழகான கையெழுத்தில் அந்த போர்டு பளபளக்க….

வசுந்தரா மூக்கைத்துருத்தி கண்களைக்கசக்கி ”மூசு மூசு”  வென……….

ஆம், அழுதாள்.

 

 

28 comments:

  1. கார்த்திக் சென்னை
    /ஒரு முறை நானே கேட்டேன்./

    பூனைக்குட்டி வெளியே

    ReplyDelete
  2. WOOOOOOW SUPPPPPPPPPPER,. VASUNDHARA SIMPLY ROCKS. CONGRATULATIONS SIR. GOD BLESS YOU AND YOUR FAMILY FOREVER 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿♾️♾️♾️♾️♾️🙏🏿

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே படித்திருந்தாலும் நெகிழ வைத்தது

      ஆர் ஆர் லஷ்மிநரசிம்மன்

      Delete
  3. WITH REGARDS RANGRAJAN SRIDHAR 👏🏿👏🏿👏🏿👏🏿

    ReplyDelete
  4. Excellent JR. You brought out the essence of leadership trait combined with Women empowerment along with CSR very nicely. Kudos.

    ReplyDelete
  5. நானும்தான், என் கம்பெனியின் CSR Chief ஆக இந்தியாவின் பல இடங்களில் பல மேம்பாட்டுப்பணிகள் செய்திருந்தும், ஒரு கிராமத்திலும் "ராம்கி பாய்சாப் துகான்" என போர்டு போடவே இல்லை .... மிக அருமையான மனம் வருடும் கதை ....வசுந்தரா வாசகர்களுக்கு ஒரு ரோல் மாடலாகிறாள் !!

    ReplyDelete
    Replies
    1. தூகான் போர்டு இல்லா விட்டால் என்ன, அவர்கள் மனதில் உங்கள் பெயர் போர்டு எழுதியிருப்பதை மறக்க முடியுமா, ராம்கி!

      Delete
  6. Ooh what a sweet Vasu... ❤️💥😍

    ReplyDelete
  7. ஈட்டா ராம்பூர்சிங், மனைவி, குழந்தைகள் எல்லாம் ஈட்டா வில், இன்னமும் நலமுடன் இருக்கிறார்களா? 'வசுந்தரா மேம் ஸ்டோர்' இப்போ "யு& டி யின் மெயின்ப் டிஸ்ட்ரிப்யூட்டர்" ஆயிடுச்சா?
    - சுதாகர்- சென்னை91

    ReplyDelete
  8. பிரமாதம்.

    ReplyDelete
  9. எப்போது புதிய கதை?
    வசுந்தரா முதல் நாளில் உணர்ந்த கஷ்டத்திற்கு ஒரு ஏற்பாடும் செய்யவில்லையா? இதற்கெல்லாம் மோடி வரவேண்டி இருக்கிறது!

    ReplyDelete
  10. Publish button அமுக்கியவுடன் , என் கமெண்ட் காக்கா ஓஷ் ஆகிவிட்டது, ஏன் ?

    ReplyDelete
  11. இதோ உங்க கமெண்ட் இருக்கே சுவாமி!!

    ReplyDelete
  12. Vasudevan Sethuraman3 August 2026 at 21:41

    Rocks also do have moisture. Vasundhara is a rock , who rocks !! / Vasu

    ReplyDelete
  13. Welcome Sir, visiting your blog for the first time,I request you to keep writing in fb

    ReplyDelete
  14. Naish! 👏👏

    ReplyDelete
  15. அவர் கூட்டிச் சென்று காட்டியது பெண்களுக்கான ஒரு community rest room ஆக இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்!

    ReplyDelete
  16. அருமை..,ஆனால் இங்கு போஸ்ட் பண்ணுவதை அங்கு (face book)சொல்ல மறந்துடாதீங்க

    ReplyDelete
  17. Nagarajan Lingam4 August 2026 at 21:54

    நன்றாக உள்ளது 👏👏👏👏,வசுந்தரா அந்த கிராம பெண்களுக்கு ஒரு கழிப்பிடமும் கட்டி கொடுத்திருக்கலாம்

    ReplyDelete
  18. அருமை.

    ReplyDelete
  19. அருமை. வசுந்தரா உணர்ச்சி வசப்பட்டு அழுதாலும் உங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலைத்தரும்.

    ReplyDelete
  20. சூப்பர் முடிவு! எதிர்பார்க்கவில்லை.
    படித்தவுடன் எனக்கே கண்களில் நீர்! சபாஷ்!!!

    ReplyDelete