வெள்ளி...இல்லை இல்லை..விலாஸினி...!
நான் நீடாமங்கலத்துக்கு வந்து ரெண்டு நாள்தான் ஆயிருந்தது.
ஒரே போர். இந்த ஊர் சரியான கிராமம். எங்க மாமா வீட்டுக்கு வந்திருக்கிறேன். அம்மாவோட தொணதொணப்பு தாங்காமத்தான் வந்தேன்.
”இதப்பாரு, இதுதான் உனக்கு கடைசி சான்ஸ்! ஆச்சு அடுத்து ஐ ஐ டி எஞ்சினீரிங் அது இதுன்னு நீ வெளி ஊருக்கெல்லாம் போய்ட்டேன்னா, இனிமே மெட்ராஸுக்கே நீ வருவியோ என்னமோ! நம்ம சொந்த ஊருடா நீடாமங்கலம். மாமா பெரிய பண்ணையார். எனக்குமே அங்க நிலமெல்லாம் இருக்கு. மாமாதானே பாத்துக்கறா. ரொம்ப ஆசைப்படறா. உனக்கேத்த வசதியெல்லம் பண்ணித்தருவா. ஆள் படையெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு உண்டு. உனக்கு தொந்திரவே இருக்காது. இப்ப ஒரு ரெண்டு மாசம் போய் இருந்துட்டு வந்துரு.”
அலுத்துக்கொண்டேதான் வந்தேன். மாமா எம்மேல ஆசையாத்தான் இருப்பார். மெட்ராஸ் மருமானுக்குக்காக மாடில தனி ரூம் கொடுத்து, அதுல ஃபேன் எல்லாம் மாட்டி, கட்டில் போட்டு வசதி பண்ணியிருந்தார்.
”நீ மெட்ராசுல சௌகரியமா வளர்ந்த பையன். நீ பாட்டுக்கு சுதந்திரமா மாடியில இரு. வெளில போணும்னா சொல்லு. முனியன வண்டி கட்டச்சொல்றேன். கும்மோணம் போய்ட்டு வா. ராத்திரி டெண்ட்டுல படம் போ. மாமிகிட்ட சொல்லி வேணுங்கறதப்பண்ணித்தரச்சொல்றேன்!”
எனக்கு ஒண்ணுமே பிடிக்கவில்லை. சரியான போரான ஊர். மாடில எனக்குக்கொடுத்திருந்த ரூமின் வலப்பக்கம் இருந்த சாளரத்தின் ஜன்னல் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பேன். நாள் முழுவதும் வேடிக்கைதான்.
வீட்டு வாசலில் ஏழேட்டு மாடுகள் கட்டி, ஒரே சாணி வாசனை. அழுக்கு குப்பை, எனக்கு அருவருப்பாக இருக்க, நான் மாடியிலேயெ ஒடுங்கினேன். சாப்பாடு கூட நேரத்துக்கு மாடிக்கே அத்தை அனுப்பிடுவா. சாப்பிட்டு மறுபடி மாடி ஜன்னல். முதல் இரண்டு நாட்கள் விட்டேத்தியாக சூன்யத்தைப்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மெதுவாக காட்சிகள் கண்ணில் விரிய சுவாரஸ்யம் தட்ட ஆரம்பித்தது.
ஜன்னல் வழியாகத்தெரியும் கிழக்குப்பக்க ஒத்தையடிப்பாதை புழுதி படிந்து இருக்கும். இங்கொன்றும் அங்கொன்றுமாய்க்குடிசைகள். அவற்றில் பறக்கும், நடக்கும் கோழி, குஞ்சுகள். ஒன்றிரண்டு முருங்கை மரங்கள். கூரைமேல் படந்த தர்பூசுக்கொடி. வாசலில் மஞ்சளாகப்பூத்திருக்கும் அரளி.
ஜன்னலுக்கு நேர் எதிரே இந்தப்பக்கம் மொட்டை மாடி. துப்புரவாக பெருக்கியிருக்கும். பகலில் நடக்கவே முடியாத படி சூடு பொரியும். இரவு குளிர்ந்து போயிருக்கும்.
வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய தூங்கு மூஞ்சி மரம். படர்ந்து கிளைகள் கொண்டு ஏதோ மாமா வீட்டை தானே காவல் காப்பது போல நிற்கும். அந்த மரம் எனக்கு ஒரு பெரிய பொழுது போக்கு. காலை வேளைகளில் இரண்டு அணில்கள் ஓடி ஓடி விளையாடும். ஒன்றிரண்டு காக்காய்கள் இங்கும் அங்குமாய்ப்பறக்கும். ஒரு மாதிரி கபம் கட்டின தொண்டையோடு கரையும். ஒரு மைனாவும் பார்த்தேன். விடியற்காலையில் காதைத்துளைக்கும் கூவல். சில கூவல்களுக்குப்பின் அமையாகி விடுகிறதோ இல்லை இரை தேடிப்போய்விடுகிறதோ. அப்புறம் அடுத்த நாள் காலையில்தான் மறுபடி கூவல்.
ஒத்தையடிப்பாதையில் நடமாட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.
பொழுது புலருவதற்குள்ளாகவே தலையில் முண்டாசு கட்டின ஆட்கள் வயல் வேலைக்கு கிளம்புவார்கள். அவர்கள் பினனால் வீட்டுப்பெண் பிள்ளைகள் தொடருவார்கள்.
கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன் ஒன்றிரண்டு சின்னப்பையன்கள் நீண்ட குச்சியுடன் ஏழெட்டு ஆடுகளை ஓடிக்கொண்டு போவார்கள்.
அவ்வப்போது டீவிஎஸ் 50 யில் சிலர். ஒரே ஒரு டிராக்டர் தட் தட்டென்ற சத்தத்துடன் போகும்.
பதினோரு மணி வாக்கில் ஒரு தபால்காரர் சைக்கிளில் வருவார். லெட்டர் இருக்கிறதோ இல்லியோ. மாமா வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி அத்தை கொடுக்கும் மோரை வாங்கிக்குடித்துவிட்டுப்போவார். சற்று தூரத்தில் அந்தச்சின்ன வீட்டின் வாசலில் ”போஸ்ட்” என்று அவர் கொடுக்கும் குரல் எனக்கு கேட்கும். தினமுமா லெட்டர் வரும்!
மாமா வீட்டு மாடிக்கு இரண்டு படிகள் உண்டு. ஒன்று வீட்டு வாசல் அறையிலிருந்து நேராக மாடிக்கு போகும். இன்னொன்று கடைசியில் மேற்குப்பக்கமாக இறங்கி அந்த ஒத்தையடிப்பாதையின் திசையில் போய் வீட்டுக்கு வெளியில் முடியும். அதற்குப்படியே கிடையாது. நாம் இப்போது சொல்லும் ராம்ப் ஸ்டைலில் இருக்கும். நெற்க்கதிர்களை அந்த விஸ்தார மாடியில் காயப்போட அப்படியே தள்ளு வண்டியில் ஏற்றி மாடிக்குத்தள்ளிக்கொண்டு வரா மாதிரி தாத்தா கட்டியிருந்தார். வேலயாட்களும் முன்பெல்லாம் அது வழியாகத்தான் ஏறி வருவார்களாம். இப்போதெல்லாம் வேலை செய்பவர்கள் சமையல் வரை புழங்குகிறார்கள் என்று மாமா சொல்லுவார்.
அன்னிக்கு காலையில் எப்போதும்போல டிராக்டர் போனவுடன் ஒரு மாட்டு வண்டி வந்தது. கிணிங் கிணிங் என்று மணிகள் சத்தம். சற்றுத்தள்ளியிருந்த குடிசை வீட்டு வாசலில் நிற்க ஒரு வயதான பெண் இறங்கினாள். அவளைத்தொடர்ந்து அந்த சின்னப்பெண். பன்னிரெண்டு பதிமூணு வயசு இருக்கலாம். ரெட்டைப்பின்னல். உருண்டை முகம். நிச்சயம் மெட்ராஸ் இல்லை.இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தது. நல்ல சிவப்பு. குண்டு கண்கள். ஜன்னலில் என் முகம் தெரிந்திருக்கும். கண்கள் சிரித்தன. நான் கையை ஆட்டினேன். பதில் கை ஆட்டல். பிறகு உள்ளே போய்விட்டது.
நான் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஜன்னலுக்கு வந்தேன். பொட்டை வெயில். ஒத்தையடிப்பாதையில் நடமாட்டம் குறைந்து விட்டிருந்தது. வெயிலின் உக்கிரத்தாலோ, சாப்பிட்ட பருப்புருண்டை மோர்க்குழம்பாலோ கண்ணயர்ந்தது.
சிலுங்கென்ற சத்தம். கொலுசா?
படக்கென்று முழித்துக்கொண்டேன்.
அவள்தான். தயங்கித்தயங்கி வந்தாள்.
வா!”
“ உன் வீடா?
ஆமாம்
நான் வரலாமா?
ஓ நிச்சயமா?
உன் பேர் என்ன?
சொன்னேன்.
உன் பேர்?
வெள்ளி! இல்ல இல்ல, விலாசினி!
வெள்ளி இல்ல இல்ல விலாசினின்னு ஒரு பேரா?
சிரித்தது.
போரடிச்சது! அதான் வந்தேன்!
எனக்கும் போர்தான்.
இப்படியே ஒரு பத்து நிமிஷம் பேசினோம்.
நா போறேன். அம்மா தேடுவாங்க.
ஓடி விட்டாள்.
மாலையில் மறுபடி வந்தாள்.
காரம்போர்டு விளையாடலாமா?
இரண்டு கேம் விளையாடினோம். போய்விட்டாள்.
என்ன படிக்கற?
பத்தாவது?
அடுத்து என்ன?
ப்ளஸ் டூதான்!
காமர்ஸா?
ஆமாம். எனக்கு கணக்கே வராது.
ரொம்ப ஈஸியாச்சே!
ம்ஹும் எனக்கு வாணாம்.
அன்று மாலை ஏனோ மழை பெய்தது. நனைந்துகொண்டே ஓடி வந்தாள். காரம் விளையாடினோம். ஜன்னல் வழியாக மழை பார்த்தோம். சட்டென்று மொட்டை மாடிக்குப்போய் நனைந்தாள்.
வா வா ஈரமாய்டும்
பரவாயில்ல. நனைந்துவிட்டு பாவாடையைப்பிழிந்து விட்டு மறுபடி காரம்.
தூரத்தில் “வெள்ளீ” குரல் கேட்க ஓடிவிட்டாள்.
ஒரு வாரம் எனக்கு மலர்ந்த நாட்கள். அவள் எப்போது வருவாள் என்று எதிர்பார்க்கவே ஆரம்பித்துவிட்டேன். மெட்ராஸ், எண்ட்ரன்ஸ் பரிட்சை, எல்லாம் மறந்துவிட்டேன். வெள்ளியுடனான் நேரங்கள் பறந்த வண்ணம் இருக்க, அவள் இல்லாத போது முன்னைவிட சூன்யமாக இருந்தது.
அன்று காலை மறுபடி வந்தாள்.
நா போறேன்.
இப்பவேவா?
இல்ல இன்னிக்கு சாயங்காலம் போறேன்
எங்க?
ஊருக்கு!
மாட்டு வண்டி வந்தது. ஏறும்போது என் ஜன்னலைப்பார்த்தாள். நான் கையை ஆட்டினேன். அவளும் கையை ஆட்டினாள். வண்டிக்குள் ஏறினாள். ஜல் ஜல் என்ற சத்தத்தோடு அந்த வண்டி அசைந்து அசைந்து போயிற்று.
அடுத்த நாலு நாளும் நான் ஜன்னலைத்திறக்கவே இல்லை. நாலாம் நாள் மெட்ராசிலிருந்து அம்மா வந்துவிட்டாள். அன்று இரவே நாங்களும் மெட்ராசுக்குப்புறப்பட்டு விட்டோம்.
ராகவ்! சாரி ஐயாம் லேட்! இன்னிக்கு ஜூடி கழுத்தறுத்துட்டா! அவளோட ப்ராஜக்ட் முடிக்காம, கஸ்டமர் கால் வேற. நானே அவ வேலயையும் முடிச்சு கஸ்டமர்ட்ட பேசி..வுஃப்! சாரி! நீ சாப்டியா?”
இல்ல இன்னும் இல்ல.
நாளைக்கு சான்ஃப்ரான்ஸிஸ்கோ போணும்! கார்த்தால ஆறு மணி ஃப்ளைட்! பார்பராவ எட்டு மணிக்கு வரச்சொல்லியிருக்கேன். அவ குக் பண்ணி வெச்சிடுவா! நா சாயங்காலம் வந்துடறேன்! சமாளிச்சிப்பியா?”
நோ ப்ராப்ளம்! நீ போய்ட்டு வா!
என்னதான் பண்ணிண்டு இருந்தே பால்கனில உட்கார்ந்துண்டு?
இல்ல சும்மாதான்..அப்படியே யோசிச்சுண்டு…....
என்ன நீடாமங்கலாமா? ம்..? அதென்ன அவ்வளவு அப்செஷன் நீடாமங்கலம் நாட்கள் மேல!”
ஒண்டர்ஃபுல் நாட்கள் ஆச்சே!
எனக்கு அந்த மாதிரி அந்த நாட்கள் மேல ஒரு பிரமிப்பே இல்லியே! பட் ஐ லவ் யூ ஸோ மச்! அதானே முக்கியம்!
எஸ் மை டியர் வெள்ளி இல்ல இல்ல விலாசினி!
அடச்சே! இன்னும் எத்தனை நாளுக்கு நீ அதச்சொல்லியே என்னை கலட்டா பண்ணப்போறே! ஓகே இட்ஸ் வெரி கோல்ட்! உள்ள போலாம்
ராகவனின் வீல் சேரைத்தள்ளிக்கொண்டே உள்ளே போனாள் விலாசினி இல்ல இல்ல வெள்ளி.
ப்ரமாதம் ஜெ ஆர்.
ReplyDeletenice one JR sir
ReplyDeleteவர்ணனை அட்டகாசன்! மின்னல் கீற்றாய் வெள்ளீ...இல்லையில்லை விலாஸினி மனதில் பதிந்துவிட்டாள்
ReplyDeleteசுதாகர்- சென்னை
கார்த்திக் சென்னை
ReplyDeleteநினைவில் நிற்கும் இனிமையான தருணங்கள் வாழ்க்கையை கடத்த உதவுகிறது.
புனரபி ஜனனம்…
அந்த படம் அபாரம். தூக்கி நிற்கும் அந்த தலைமுடி
Wow.that end...super.
ReplyDelete