Monday, 20 July 2026

டாக்டர் வைகுண்டம்

பெங்களூர்…….. .. வழி அரக்கோணம்


பெங்களூர் ஷதாப்தி எப்போதும் போல ஒரு குலுக்கலுடன் கிளம்பினபோது கம்பார்ட்மெண்ட் EC பதினெட்டாம் நம்பர் சீட் ராமசாமி நன்றாகத்தான் இருந்தார்.

மேலே சொன்ன ராமசாமி ஹிந்து எஸ்பிரஸ் டைம்ஸ் என்று வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் எல்லா பேப்பரையும் படித்தார். பக்கத்தில் பாரியான மனைவி, ரமணி சந்திரன் நாவல் மற்றும் குமுதம் சினேகிதியும் படித்துக்கொண்டு வந்தார். காபி குடித்த ராமசாமி கம்பார்ட்மெண்ட் முழுவதும் கேட்கும்படி இரண்டு மூன்று முறை அபான வாயுவை வெளிவிட்டபோது பலர் முகம் சுளிக்க ஒரு எட்டு வயதுப்பெண் குழந்தை மட்டும் சத்தமாகச்சிரித்தது.

 வண்டி அரக்கோணம் தாண்டினவுடன் அது நிகழ்ந்தது.

ராமசாமி ஒருக்களித்து சீட்டில் சாய்ந்தவாறே தூங்கிக்கொண்டிருந்த போசிலிருந்து விலுக்கென்று உதறினார். அந்த திடீர் விலுக்கில் முழித்துக்கொண்டவர் கொஞ்சம் பேந்த பேந்த அலமந்தார். இப்போது அவர் தலை சாய்ந்து மனைவி தோளில் இடித்தது. கண் திறந்த மனைவிக்கு முதலில் தெரிந்தது ராமசாமியின் சொருகின கண்கள். கூடவே சட்டை முழுவதும் நனைந்திருந்த ஈரம்! வாய் லேசாகக்கோணினபடி இழுத்துக்கொண்டிருக்க, கணமே மனைவி அலறினாள்.

 சீட்டிலிருந்து எழுந்தாள். மறுபடி அலறல்.

அரைத்தூக்கத்தில் இருந்தவர்களும் லேப்டாப்பில் சினிமா பார்த்தவர்களும் பின்னாலிலிருந்து இரண்டு சீட்டுக்களின் நடுவில் பார்க்க முடியும் என்னும் விசனம் இல்லாமல் கொஞ்சிக்கொண்டிருந்த இளஞ்சோடியும் சிக்கு நாத்த யூனிஃபார்ம் அணிந்த கேபின் அட்டெண்டரும் பரபரத்து பதினெட்டாம் நம்பர் சீட்டுக்கு ஓடினார்கள்.

 “என்ன ஆச்சு?”

 “வாட் இஸ் த பிராப்ளம்?”

 “க்யா ஹுவா?”

 மனைவியின் அலறல் இப்போது விசும்பலாகிற்று.

 ”யாரானு ஏதாவது பண்ணுங்களேன்! அய்யோ!”

 “இங்க யாராவது டாக்டர் இருக்காங்களா?”

 ஒருவர் சத்தமாக்க்கேட்கும் முன்பே சீட் நம்பர் முப்பத்தாறில் இயர் ஃபோனில் ஜி என் பியின் ”மருகேலரா” கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் இயர் ஃபோனை பிய்த்து எறிந்துவிட்டு, தன் கைப்பையிலிருந்து ஸ்டெத்தை அள்ளிக்கொண்டு வேகமாக நகர, வண்டி இப்போது ஒரு ஜெர்க் விட, சற்றே தடுமாறி முன் சீட்டைப்பிடித்து சமரசம் செய்துகொண்டு, பதினெட்டுக்கு ஓடி வந்தார்.

 ”மூவ்! மூவ்! சீட்டை ரிக்ளைன் பண்ணுங்க!”

 ஸ்டெத் மார்பில் அங்கும் இங்கும் நகர அவர் காதில் இடியாய் ஒலித்திருக்க வேண்டும். சட்டென்று கை பிடித்து பல்ஸ் பார்த்தார். சுற்றி இருந்த ஆசாமிகள் இவர் வாயையே பார்த்துக்கொண்டிருக்க மனைவி இன்னும் விசும்பலில் விடுபடாமல் குலுங்க, பின் முன் சீட்டு ஆசாமிகளும் ஒரு மாமியும், ஒரு இளைஞனும் கண்களில் ஆவலோடு பார்க்க, அந்த தலை கலைந்த சுடிதார் பெண் மட்டும் இன்னும் தன் மொபைலையே நோண்டிக்கொண்டிருந்தாள்.

 “புல் த செயின்! க்விக்! ஹி ஈஸ் சிங்கிங்!”

அட்டெண்டர் ஓடி செயினை இழுக்க, எங்கோ நாராச விசில் சத்தம் ஒலிக்க  வண்டி குலுங்கியது, வேகம் குறைந்தது, நழுவியது. எல்லா உபரி நட்டும் போல்டும் கூட்டம் கூடி முனகியவாறே வண்டியின் வேகம் குறைக்க உதவின அஞ்சாம் நிமிஷம் வண்டி நின்றது.

 “போச்சு! இன்னி மீட்டிங்கும் கோவிந்தாவா?”

 “சார்! லேட்டாவுமா? எனக்கு பன்னண்டு மணிக்கு ஹூப்ளிக்கு பஸ்ஸு சார்!”

 ”யோவ்! உயிர் போற விஷயமய்யா! பேசாம இரு!”

 சள சள வென்று பேச்சுக்குரல்கள்

 “இது எந்த ஊர்?”

 “சித்தேரிக்கும் அனவர்திகான் பெட்டைக்கும் நடுவு சார்!”

 ”பக்கத்துல பெரிய ஊர் எது? அரக்கோணம் இப்பத்தானே போச்சு?”

 ”ஆமாம் டாக்டர்!”

 ”ஜஸ்ட் கால் எனர்ஜென்சி! ஆம்ப்யுலன்ஸ்! உடனே!”

 ”சார்! மசூதி தெருவுல வேலு ஹாஸ்பிடல் இருக்கு! திருமலாச்சாரி தெருவுல ஏ ஜி ஹாஸ்பிடல்! ரெண்டுமே நல்ல ஹாஸ்பிடல் சார்!”

 “உடனே! உடனே! கோல்டன் ஹவர்ஸ்!

டாக்டர் பல்ஸ் பார்த்துக்கொண்டே மார்பைத்தடவி விட்டுக்கொண்டு இருந்தார். மனைவியிடம் பேச்சுக்கொடுத்தார்.

“இதுக்கு முன்ன ஹார்ட் பிராப்ளம் இருக்காம்மா இவருக்கு?”

 “இல்லை சார்! இதுதான் முதல்ல இப்படி!”

 வேறு எதுனா பிராப்ளம் உண்டா? மருந்து எடுத்துப்பாரா?”

 “கேஸ் பிராப்ளம் தானுங்க! அப்பப்ப சத்தமா விடுவாரு!

 சிரிப்பு.

“ஷட் அப்! மருந்து ஏதாவது?”

 பிரஷர் மருந்து சாப்பிடுவாருங்க! த பாருங்க!”

”எங்க காமிங்க!”

 ரீபேஸ் ஹெச்! அவருக்கு என்ன பிரஷர்மா?

 ”தெரியாதுங்க எனுக்கு!”

 இப்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆசாமி கேட்டார்.

 “ஹார்ட் அட்டாக்கா டாக்டர்?”

 “தெரியல! ஐயாம் நாட் ஷ்யூர்! ஆனா சிம்ப்டம்ஸ் பார்த்தா அரித்மியாஸ் மாதிரிதான் இருக்கு. வெண்ட்ரிக்யுலர் ஃபிப்ரிலேஷன்!”

ஆம்புலன்ஸின் சைரன் ஒலித்தது.

”கூட யார்னா வரணுமுங்க!”

”யாராவது ஒதவிக்கு வாங்களேன். எனக்கு ஒண்ணுமே தெரியாது. இங்லீஷு கூட தெரியாதுங்க! இவுரு எழுந்ததும் நானே காசு கொடுத்து உங்கள கார்ல பெங்களூர் அனுப்பிச்சேர்ருனுங்க!”

 சட்டென்று கூட்டம் கலைந்தது!

டாக்டர் நிமிர்ந்தார்.

”நான் வரேன்! சீட் முப்பத்தாறுலேர்ந்து என்னோட பிரவுன் பெட்டிய எடுத்துக்கொடுங்களேன்!”

ஆஸ்பத்திரி சின்னதுதான். பெரிய வசதிகள் அதிகமில்லை. இருந்தாலும் டாக்டர் கூடவே இருந்தார்.

“ஆஞ்சியோ இருக்கா உங்க ஹாஸ்பிடல்ல?”

“இல்ல டாக்டர்! பட் ஈ சி ஜி எடுத்துர்ரேன்!”

“போறாது! பிளட் டெஸ்ட்! புரோட்டீன் லீக் இன் டு த பிளட் செக் பண்ணனும்! எக்ஸ் ரேவும் ! ஹார்ட் சைஸ் பாக்கணும்!”

“ஓகே டாக்டர்!”

“யெஸ்! கெட் கோயிங்! க்விக்!”

“லுக் அட் தி அபெர்ரேஷன்! ஹார்ட் மஸில் இஞ்சுரி போல இருக்கே!”

“மெட்ராசுக்கு மூவ் பண்ணிடலாமா?”

”வாட் ஆர் யூ சேயிங்? ஹீ ஈஸ் நாட் ஃபிட்! போற வழியிலேயே போய்டுவாருய்யா?”

“அப்ப..?”

“செடேட் ஹிம்! ஆல்டெப்ளேஸ் குடுக்கணும்! கூடவே குளோபிடோக்ரெல் அண்ட் ஹெபாரின்! ப்ளட் கிளாட் இருந்தா டிஸால்வ் ஆகணூம்! பீட்டா ப்ளாக்கர்ஸ் ஏதானும் ஹாஸ்பிடல்ல இருக்கா?

” செக் பண்றேன் டாக்டர்!”

”க்விக்! ப்ராண்டோ!”

”கார்வெடிலால், ப்ரொப்ரனோலால் டாக்டர்!”

”குட்! கார்வெடிலால் பெட்டர். உடனே அட்மினிஸ்டர் பண்ணுங்க!”

“எஸ் டாக்டர்!”

”மானிட்டர் ஹிஸ் பீட்ஸ்!”

“ஆனா நா ஒருத்தந்தான் இங்க கார்டியாக் தெரிஞ்சவன் டாக்டர்! எனக்கு வேற பேஷண்ட் இருக்காங்களே!”

”நான் இருக்கேன்! ஐ வில் ஸ்டே வித் ஹிம்! இந்தாம்மா! நீங்க பண்ண ஒண்ணும் இல்ல. அங்க போய் உக்காருங்க! அமைதியா இருங்க! அவரு நெலம மோசம் தான். ஆனா பாத்துருவோம்! நம்மள மீறி என்ன ஆகும்!”

”அய்யா ரொம்ப நன்றிங்க! உங்க வேல கெடுதுன்னு பாக்காம எனக்கு ஒதவி..!”

”அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! டாக்டர்! கவலைப்படாதீங்க, உங்க ஹாஸ்பிடல் பேமெண்ட் நானே பண்றேன்!”

“அக்கா! மணி என்ன ஆச்சு? ஷதாப்தி பதினோரு மணிக்கு வந்தாச்சு! சார்ட்டுல இவர் பேரு இருக்கு. ஆனா ஆசாமி எறங்கல!”

“ஏதாவது எமர்ஜென்ஸியா இருக்குண்டா! மெஸேஜ் பண்ணுவாரு!”

“என்ன எமர்ஜென்ஸியோ? நான் உனக்கு ஒரே தம்பி! என் ஒரே பொண்ணோட கல்யாணம். மூணு நாள் முன்னமே வரணும். இவருதான் கல்யாணத்தன்னிக்கு வரேன்னுட்டு அதுவும் அம்பேல்!ஏங்க்கா! இவர் இல்லேன்னா உலகமே வியாதிலேர்ந்து விடு படாதா?”

“தெரியலையேடா! எனக்கும் ஒண்ணும் மெசேஜ் இல்லியே?”

“இன்னும் எத்தனை வருஷம் இப்படி அவரோட நீ சகிச்சுக்கப்போறே? நம்ம வீட்டு ஃபங்க்‌ஷன் ஒண்ணுத்துக்குக்கூட அவர் ஒழுங்கா வந்ததில்ல!”

”இந்த தாரம் வரட்டும்! நான் விடப்போறதில்ல! மனுஷன நிக்க வெச்சு கேள்வி கேட்கறேன்!”

செய்க்கா! செய்! அவர அப்படி கேட்டாதான் உறைக்கும்! நா போறேன்! சம்மந்தி வீட்டுல கூப்டாளாம்!”

”போ போ! அவா மனசு சுணக்கம் ஆப்படாது!”

அவனை அனுப்பி விட்டு மொபைலை எடுத்து நம்பர் அழுத்தினாள்.

“என்ன ஆசாமி பொழச்சுப்பானா? பொண்டாட்டி வெகுளியா இருக்கான்னீங்களே! நீங்க கூடவே இருந்துடுங்கோ!   எந்தம்பிய நான் சமாளிச்சுக்கறேன்!”

”ஹி ஈஸ் இம்ப்ரூவிங்! தாங்க் யூ அண்ட் வேதவல்லி?”

 “சொல்லுங்கோ?”

 “ஐ லவ் யூ!”

 “போறுமே!”

 அரக்கோணம் ஹாஸ்பிடலில் எமர்ஜென்ஸி படுக்கைக்கு அருகில் சாய்ந்த நாற்காலியில் இன்னும் சாய்ந்தவாறே நிம்மதியுடன் ஃபோனை வைத்தார் டாக்டர் வைகுண்டம்!

16 comments:

  1. புவனா முரளி21 July 2026 at 00:03

    Dr வைகுண்டமும் வேதவல்லியும்

    ஆஹா என்ன பொருத்தம்!

    ReplyDelete
  2. S. Jothilakshmi

    ஐ லவ் யூ ….போதுமே - JR touch 👌😍

    ReplyDelete
  3. Beautiful
    #Lakshmi Stiram

    ReplyDelete
  4. Wonderful read. Great ending...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அன்ட் வேதவல்லி...
    சொல்லுங்கோ
    ஐ லவ் யூ
    போறுமே....
    Nice finishing touch.
    வை & வே are Wills Filter
    Made for each other

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட்டை நான் தொடுவேனா!?

      Delete
  7. எனக்கு ரொம்ப பிடிச்சது போறுமே.... ஆனா மனசுக்குள்ளே இப்படி நிறைய வேணுமே😜☺️
    Cute வைகுந்....sweet வேதா....♥️

    ReplyDelete
  8. வைகுண்டம் என்கிற பெயருக்கு ஏற்றாற் போல ஆபத்பாந்தவர் தான்.... அறிவுஜீவி சுஜாதா குழுவிலும் (வழக்கம் போல) பகிர்ந்தாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. Super!Thanks

      Delete
    2. ஏற்கனவே FB யில் எல்லோரும் படித்திருப்பார்களே! அதனால் என்ன என்கிறீர்களா, அதுவும் சரிதான்! என்னை மாதிரி 2,3 ஆம் தடவை ரசித்து படிக்க மாட்டார்களா என்ன!

      R. Jagannathan.

      Delete
  9. "மீள்" எனினும் சுகம்; வண்டிக்குள் இருந்த 'அவுட் ஆஃப் ஃபோகஸ்'ஆசாமிகள் பற்றிய வர்ணனை(எட்டு வயசு சிறுமி/ லேப்டாப்சினிமா,பார்த்தவர்கள்/,அரைத்தூக்க ஆசாமிகள்/ ஹூப்ளிக்கு பஸ்ஸில் போக வேண்டிய ஆசாமி) படு சுவாரஸ்யம்
    சுதாகர், சென்னை

    ReplyDelete
  10. படித்திருக்கிறேன்.‌ஆனால் அவர்கள் வாழ்க்கையில் வேதவல்லி எவ்வளவு தரம் ஒருநாளைக்கு போறுமே சொல்லியிருப்பார் என்று மலைப்பு.

    ReplyDelete